தென் கைலாசம்
முத்தமிழ் மன்றத்தில் எழுதியது · 2 மே 2006 – 12 நவம்பர் 2007
அன்பு மன்ற நண்பர்களே, கிரிவலம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். கிரிவலம் செய்வது என்பது திருவண்ணாமலையில் பௌர்ணமி தோறும் லட்சக்கணக்கான மக்கள் அண்ணாமலையாரை தரிசித்து, 14 கி.மீ. சுற்றளவுள்ள அண்ணாமலையை வலம் செய்து வழிபட்டு வருவதற்கு உண்டான பெயர் ஆகும். பௌர்ணமி கிரிவலம் பொருள் வளத்துக்கு எனவும், அமாவாசை கிரிவலம் அருளுக்கு எனவும் அங்கே பெரியவர்கள் பேசக் கேட்டிருக்கிறேன். ரமண மகரிஷி தினமும் கிரிவலம் வருவாராம். எல்லாம் சரி. இப்போ எதுக்கு அண்ணாமலை புராணம் என்கிறீர்களா? ஒரு கிரியை வலம் செய்வதன் பெருமையே இவ்வாறென்றால் நான்கு கிரிகளுக்கு நடுவில் சுயம்புவாய் இருக்கும் மூன்று லிங்கங்களை நோக்கி அனைத்து சித்தர்களும் வந்து தவம் செய்ததில் எந்த வியப்பும் இல்லை அல்லவா? அத்தகைய தென் கைலாசத்திற்கு அடியேனும் சென்ற வாரம் அமாவாசையன்று குடும்பத்துடன் சென்று வரும் பாக்கியம் இருந்தது. அதைப் பற்றி சொல்லலாம் என்று நினைத்தேன். புலியைப் பார்த்து பூனையும் சூடு போட்டுக் கொண்ட கதையாய், ராகவன் அவர்களின் பயணக்கட்டுரையைப் படித்து விட்டு இந்த யாத்திரை அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
சென்ற வாரம் 24-04-2006, திங்கட்கிழமை அன்று அக்கடா என்று வங்கி ஆண்டிறுதித் தணிக்கையை முடித்து விட்டு அலுவலகத்தில் வந்து அமர்ந்தேன். தணிக்கை நாகர்கோவிலைச் சுற்றியுள்ள வங்கிகளாய் அமைந்ததால், நாகர்கோவிலில் டேரா அடித்து கன்னியாகுமரி, சுசீந்திரம், தக்கலை, மண்டைக்காடு பகவதி அம்மன், தொட்டிப் பாலம் என்று ஆட்டையும் மேய்த்து விட்டு அண்ணனுக்கும் பொண்ணு பாத்தது வேறு கதை! வந்து அமர்ந்ததும், எனது இரு அண்ணன்களும் நம்ம தென்கைலாசத்துக்கு அமாவாசையை முன்னிட்டு செல்வதாகவும், என்னையும் வரலாமே என்று இழுத்தனர். என் மனைவியும் நானும் வருகிறேன் என்றாள். மூத்த மகள் (வித்யஸ்வரூபிணி சுருக்கமாக வித்யா) எனக்கும் விடுமுறை தானே. நானும் வருவேன் என்றாள். அலுவலக நண்பர்கள் சிலரும் நானும் வருகிறேன் என்றார்கள். மொத்தம் 9 பேர் கொண்ட குழுவாக 26-04-2006 புதன்று அதிகாலை 5 மணிக்கெல்லாம் கிளம்பி விட வேண்டுமென்று முடிவு செய்து கொண்டோம்.
இது கிராமத்து கைலாசம்.
இது இன்னும் வாகனங்கள் வர முடியாத கைலாசம்.
இன்னும் மின்சாரம் வராத மலையுச்சி.
இந்தக் கைலாசம் எங்கள் சிவகாசியிலிருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன் கோவில், வற்றிராயிருப்பு தாண்டி இருக்கும் சதுரகிரியே நான் சொல்லும் அந்த பூலோக தென் கைலாசம் ஆகும். நான் பல முறை அங்கு சென்றதுண்டு. ஏற்கனவே என் மனைவி ஒரு முறை மட்டும் வந்திருக்கிறாள். முன்னர் வந்த அனுபவமோ என்னவோ, மிகக் குறைந்த சுமையுடன் வந்திருந்தாள். என் தமையனார் ஒருவர் ஒவ்வொரு அமாவாசைக்கும் கடந்த மூன்றாண்டுகளாகச் சென்று வருகிறார். மலையடிவாரத்திலிருந்து ஏறக்குறைய 7 மைல்கள் /12 கி.மீ. தூரம் நடந்தே செல்ல வேண்டும். காலை சொல்லி வைத்தது போலவே சரியாக 5 மணிக்கெல்லாம் கிளம்பி விட்டோம். எங்கள் க்வாலிஸில் தான் சென்றோம். வற்றிராயிருப்புக்கு 5.30 மணியளவில் சென்றடைந்தோம். அங்கு சுடச் சுட வடை, மற்றும் டீ, காபி சாப்பிட்டு விட்டு அங்கிருந்து சதுரகிரியை நோக்கிப் பயணமானோம். மலையடிவாரத்தில் வாகனங்களை நிறுத்துமிடத்துக்குப் பெயர் தாணிப்பாறை ஆகும். அங்கிருந்து 1 கி.மீ. நடந்தோமேயானால் இங்கு ஒரு கோவில் உள்ளது. கருப்பசாமி மற்றும் பேச்சியம்மனுக்கு. மலை மேல் ஏற முடியாதவர்கள் இங்கு வந்து வணங்கிச் செல்வார்கள்.
சதுரகிரி மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருக்கிறது. மலையுச்சியில் மேலும் நாற்புறமும் மலைகளால் சூழப்பட்டு நடுவில் அதிசயமாக சமவெளியாய் கொஞ்ச பகுதி இருக்க அதில் சுயம்புவாய் உருவாகி அந்தப் பகுதியே சிவலிங்கமாய் காட்சியளிப்பது சதுரகிரியின் மகத்துவம் ஆகும். மிகவும் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாகும். நாங்கள் தாணிப்பாறை பேச்சியம்மனையும், கருப்பசாமியையும் அடைந்த போது 6.15 மணி ஆகி விட்டிருந்தது. அங்கு முதலில் ஒரு விநாயகர் கோவிலும், ஒரு அம்மன் கோவிலும் கூட உண்டு. விநாயகரைத் தரிசித்து விட்டு அவரை வலம் போதே இயற்கை எழில் எங்களைச் சாப்பிட ஆரம்பித்தது!
படம் கிடைக்கவில்லை
தாணிப்பாறை விநாயகர் கோவில் அருகில் காணப்பட்ட எழில் மிகு இயற்கைக் காட்சி தான் நீங்கள் மேலே பார்த்தது. இது தாணிப்பாறைக்கு வரும் பாதை. அனைத்துமே மண், கல் பாதை தான். பாதி இயற்கையாய் அமைந்தது. மீதி மனிதர்கள் சென்று வருவதற்காக சற்றே செப்பனிடப்பட்டது.
படம் கிடைக்கவில்லை
தாணிப்பாறை தாண்டியவுடனேயே மலை ஏற்றம் ஆரம்பித்து விடும். அடர்ந்த கானகத்துக்குள் சென்று விடுவோம் நாம். குயிலினங்களும் சில் வண்டுகளும் நம்மை வரவேற்கும். இந்தக் கோடை காலத்தில் கூட நீரோடை சிற்றருவியாய் ஓடியது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நாம் நடந்து செல்லும் இந்தப் பாதையே குறுக்குப் (!) பாதையாகும். மொத்தமே 12 கி.மீ. தான் நடை. இன்னொரு பாதையும் உண்டு. தேனி, கம்பம் வழியாக இங்கு வரும் வருசநாட்டுப் பாதை. இந்தக் கோவில் வருச நாட்டு ஜமீனுக்குச் சொந்தமானது தான். இன்னும் கூட வருச நாட்டுப் பாதையில் ஆடி அமாவாசை அன்று மட்டும் மக்கள் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு அமாவாசையும் இங்கு சிறப்பு வாய்ந்தது என்றாலும், ஆடி அமாவாசை தான் மிகவும் கோலாகலமாக லட்சக் கணக்கான மக்கள் வந்து வணங்கிச் செல்லும் விசேசமான நாளாக இருக்கிறது. மற்றபடி, மகாசிவராத்திரி, தை அமாவாசை ஆகிய நாட்களுக்கும் நிறையக் கூட்டம் வரும். இது சிறிது தூரம் கடந்து சென்ற பின் மேலேயிருந்து நடந்து வந்த பாதையை எடுத்த படம்.
படம் கிடைக்கவில்லை
இந்தக் கோடையிலும் பள்ளத்தாக்கில் நீர் அருவியாக ஓடி வருவதைப் பாருங்கள்.
படம் கிடைக்கவில்லை
ஒரு மலையை ஏறி முடித்தவுடன் வருவது அத்திரி ஊற்றாகும். இங்கு அத்திரி முனிவர் குகையும் உண்டு. அத்திரி முனிவர் இங்கு தங்கியிருந்து பல காலம் தவம் செய்ததால் இந்தப் பெயர் வந்தது. இப்போது மருவி அத்தியூத்து என்று ஆகி விட்டது. இது மலை ஏற்றத்தில் 4வது கி.மீ. ஆரம்பத்தில் வரும். அடேங்கப்பா, இந்த அத்தியூத்து இருக்கிறதே, எப்பேர்ப்பட்ட மலை ஏற்றக்காரரையும் ஒரு நிமிடம் மூச்சு வாங்க வைத்து விடும். அப்படி ஒரு செங்குத்தான மலை ஏற்றம். நமது இதயத்துடிப்பை நாமே கேட்கலாம். எந்த வெயிலுக்குப் பயந்து காலை 5 மணிக்கெல்லாம் ஏற ஆரம்பித்தோமோ, அந்த வெயில் அன்று மதியம் நாங்கள் ஏறி முடிக்கும் வரை வரவே இல்லை. மாறாக குளிர்ந்த காற்று வீசியது. இறைவனின் அருளை எண்ணி வியந்தோம். என் மனைவி பாதி அத்தியூத்து ஏறியவுடனேயே பல்லவியை ஆரம்பித்து விட்டாள். இந்த ஏற்றம் இன்னும் எவ்வளவு தூரம் என்று! ஆனால் இந்தப் பாதையிலேயே இந்த அத்தியூத்து தான் மிகவும் கடினமான, செங்குத்தான ஏற்றம். இதை ஏறி விட்டால் பின்னர் கடுமை கொஞ்சம் குறைவு தான். எனவே அத்தியூத்தை ஒரு வழியாக 8.00 மணியளவில் ஏறி முடித்து அங்கே ஒரு 10 நிமிடம் ஓய்வு எடுத்தோம். கையில் கொண்டு வந்த திராட்சைப் பழத்தைத் தின்றவுடன் இதயத் துடிப்பு பழைய நிலைக்கு வந்தது. பின்னர் நடையை மீண்டும் ஆரம்பித்தோம். அடுத்ததாக நாங்கள் சென்றடைந்தது கோரக்கர் குகை எனப்படும் கோரக்க நாதர் கோவில். இங்கு தான் கோரக்கச் சித்தர் தவம் இருந்த குகை இருக்கிறது. மிகவும் அழகிய, ஒரே ஆள் மட்டுமே இருக்கக் கூடிய குகை. அருகில் மெல்லிய சத்தமிட்டு ஓடும் நீரோடை. ஹும். கோரக்க நாதர் கொடுத்து வைத்தவர் தான்.
5 மே 2006
கோரக்கச் சித்தர் இங்கு வந்து தவமியற்றியதாக வரலாறு. மேலும் அவர் "கோரக்கர் மலை வாகடம்" என்னும் நூலில் சதுரகிரியில் கிடைக்கும் மூலிகைகளைப் பற்றி சிலாகித்துச் சொல்லி இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே கோரக்கர் இங்கு இருந்தார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இதற்கான ஆதாரங்களை உங்களுக்குக் கடைசியில் தருகிறேன். இந்த மலையே ஒரு மூலிகை மலை எனலாம். பல மலைகள் முடிச்சு போல் இங்கு வந்து இணைவதால், நாம் நடக்கும் பாதையிலேயே பல வண்ணப் பாறைகள், பல வகைச் செடிகள், மண் வகைகள், பிராணிகள் என்று பார்க்க இயலும். மான்கள், யானைகள் மற்றும் கரடிகளும் அதிகம் உண்டு. போகும் பாதையில் சுடச்சுட யானைச் சாணத்தை நாமே பார்க்கலாம். கோரக்கர் கோவில் வருவதற்குள் என்னையும், என் மனைவியையும், என் அலுவலக நண்பர் ஒருவரையும் தவிர அனைவரும் சென்று விட்டனர். நானும் என் மனைவியும் மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்தோம். கோரக்கர் குன்று தாண்டியவுடன் தான் கவனித்தோம். ஒரு நாய் எங்களை மட்டுமே பின் தொடர்ந்து வந்தது. நாங்கள் அமரும் இடத்தில் அதுவும் அமர்ந்து கொள்ளும். நாங்கள் எழுந்தால் அதுவும் எழுந்து கொள்ளும். இத்தனைக்கும் எங்களிடம் சாப்பிடுவதற்கு என்று எதுவும் இல்லை. குடிப்பதற்கு மட்டும் தண்ணீர் ஒரு பாட்டில் வைத்திருந்தோம். அவ்வளவே. நானும் கேள்விப்பட்டதுண்டு, இங்கு நாய்கள் இவ்வாறு ஏதோ ஒரு கூட்டத்துடன் மெதுவாக மலை ஏறுவதுண்டு என்று. இன்று தான் நேரில் பார்த்தேன். சரி, பைரவர் நமக்குத் துணை வருகிறார் என்று நினைத்துக் கொண்டேன். இதோ அந்தப் பைரவர். (பைரவி!)
படம் கிடைக்கவில்லை
கோரக்க நாதர் குன்றுக்கு அடுத்ததாகச் சரியாக மலைப்பாதையின் பாதியில் (6வது கி.மீ.) முதல் சுயம்பு லிங்கத்தைப் பார்க்கலாம். அடடா! லிங்கம் என்றா சொன்னேன்? இல்லை. லிங்கங்கள். ஆம், இரட்டை லிங்கங்கள். இரண்டுமே சுயம்பு தான். இரண்டும் அருகருகில் வளர்ந்திருப்பதால் இதற்கு இரட்டை லிங்கம் என்று பெயர். இரட்டை லிங்கங்களுக்கு இரண்டு நந்திகளும் உண்டு. இது பாதையில் சரியாக பாதி என்பதால் இந்த கோவில் வந்தவுடனேயே சதுரகிரியை நெருங்கிய உணர்வு ஏற்படும். இதோ அந்த இரட்டை லிங்கங்களின் படம்.
படம் கிடைக்கவில்லை
இரட்டை லிங்கத்தை பக்தியுடன் தரிசித்து விட்டு சிறிது நேரம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு, அங்கிருந்த ஒரே கடையில் எலுமிச்சை, குளிர் நீர், உப்பு கலந்த பானத்தை அருந்தி விட்டு (தேவாமிர்தமாய் அப்போது இருந்தது அது) மெல்ல மேலே செல்ல ஆரம்பித்தோம்.
6 மே 2006
இரட்டை லிங்கத்தைத் தாண்டிய உடன் சரேலென ஏற ஆரம்பித்து விடும் சிறு மலையுச்சி. ஆனால் மலையுச்சிக்கு செல்கிறோம் என்ற நினைவு கூட இல்லாமல் கோடை வெயில் கூட உள்ளே வர விடாத அடர்ந்த கானகம். இந்த இடம் தான் எனக்கு மிகவும் பிடித்தமான இடம். சிறிது நேரம் இயற்கை ஏ.சி.யையும், குயில்களின் கச்சேரியையும் ரசித்த பின்னர் மீண்டும் ஏற ஆரம்பித்தோம். இந்த மலையுச்சியில் ஏறியவுடன் ஒரு சம தளப்பகுதி. அதன் பெயர் பசுக்கிடை. பசுக்கள் கிடையாக (மந்தையாக) ஓய்வெடுக்க வசதியான சமவெளிப் பகுதி என்பதால் இதற்கு இந்தப் பெயர் வந்ததாகச் சொல்லுவார்கள். பசுக்கிடை ஒரு மலையுச்சி என்பதால் நிறைய இயற்கைக் காட்சிகளை இங்கிருந்து ரசிக்க முடியும். இதோ அங்கிருந்து அடுத்த மலையை எடுத்த படம்.
படம் கிடைக்கவில்லை
பசுக்கிடையிலிருந்து சிறிது தூரம் (1/2 கி.மீ.) நடந்தவுடன் வருசநாட்டுப் பாதை வந்து இணைந்து கொள்ளும். வருச நாட்டுப் பாதை என்பது நாம் மேற்கண்ட படத்தில் காணப்படும் மலையிலிருந்து இறங்கி வருவதாகும். இது மிகவும் கடினமான பாதை. இருந்த போதும் ஆடி அமாவாசை அன்று, இந்த வழியில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று லட்சக்கணக்கில் மக்கள் வருவார்கள். ஆச்சரியம் தான். பசுக்கிடையிலிருந்து சிறிது தூரம் நடந்ததுமே அடுத்த மலையில் நாம் கால் வைக்கிறோம் என்பதை நாமே உணர்வோம். அது தான் சதுரகிரி மலை என்பதாலோ என்னவோ, ஒரே வண்டுகளின் ஆர்ப்பாட்டமான ரீங்காரமும், அந்த மலைப் பிரதேசமான பாதையில் ஆயிரக்கணக்கான மலர்களின் வாசனையும், கண்கவர் வண்ணங்களும், வண்ணத்துப் பூச்சிகளின் சிறகடிப்பும், மந்திகளின் விளையாட்டும் அடேங்கப்பா! அதை அனுபவிக்க வேண்டும். வாகனப்புகைகளில் தள்ளாடும் நாம் இது போன்ற மலைப் பிரதேசங்களுக்கு மாதத்துக்கு ஒரு முறையேனும் வர வேண்டும் என்று தான் அமாவாசையன்று மலையேற வேண்டும் என்று சொன்னார்களோ என்னவா? இது வழியில் இருந்த ஒரு மலர்.
படம் கிடைக்கவில்லை
நன்றி அரவிந்தன் அவர்களே. அனைத்தும் மகாலிங்கத்தின் அருள். இதோ சதுரகிரியை நெருங்கி விட்டதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கின்றன. முதல் அறிகுறி நீரோடை அருகில் ஓடும் சல சல சத்தம் தான். கோவிலுக்குச் செல்லும் முன் நாம் மலையேறிய அலுப்பு நீங்க வேண்டுமென்று முதலில் அருவி வருகிறது. இந்தக் கோடையிலும் நீரோடும் அந்த அருமையான சிற்றருவியில் குளித்தோம். 3 1/2 மணி நேரம் மலையேறிய அலுப்பு நீங்கியது. கால் வலியே தெரியவில்லை. நாங்கள் வருவதற்காக, எங்கள் குழு அங்கேயே குளித்து விட்டுக் காத்திருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் இணைந்து கொண்டோம்.
அங்கிருந்து 100 அடி தொலைவிற்குள் ஒரு அதிசயம்.
ஆம் கருப்பசாமி காவலிருக்கிறார்.
அவர் பெயர் பலாடிக் கருப்பசாமி.
வேறொன்றுமில்லை அவர் பலா மரத்தின் அடியில் இருந்து அருள் பாலிப்பதால் அவருக்கு அந்தப் பெயர். அவர் இருக்கும் இடத்தைப் பார்த்தால் யாருக்கும் மேனி சிலிர்க்கும். அருகில் பலாப் பழங்களைக் காணுங்கள். இயற்கையும் இணைந்து தெய்வமாய்க் காட்சியளிக்கும் காட்சியைப் பாருங்கள்.
படம் கிடைக்கவில்லை
அவர் கோவிலுக்குள் காணப்படும் இன்னும் சில பலாப்பழங்கள்!
படம் கிடைக்கவில்லை
8 மே 2006
வாருங்கள் மருதண்ணா. இனி தொடருவோம். நாம் குளித்த அருவிக்கு செல்லும் நீர் பலாடிக் கருப்பசாமிக்கு முன்னால் தான் ஓடிக் கொண்டிருக்கும். அந்த சிற்றோடைக்கு பாலமெல்லாம் கிடையாது. தண்ணீர் அதிகமாக ஒடினால் நம்மால் இதைத் தாண்டி செல்ல இயலாது. இப்போது தண்ணீர் கொஞ்சமாகவே ஓடியதால் எளிதாக இந்த ஓடையைக் கடந்து சென்றோம். கருப்பசாமி கோவிலில் இருந்து சரியாக 1 கி.மீ.ல் சதுரகிரி சுந்தரமகாலிங்கரின் கோவில் இருக்கிறது. நான்கு புறமும் மலைகளே கோபுரங்களாய், நடுவில் சம தளமாய் இருக்கும் ஒரு இடத்தைக் கற்பனை செய்து பாருங்கள். அது தான் சதுரகிரி. சித்தர்கள் காலத்திலிருந்தே இந்தத் தலம் சிறப்பு பெற்றதாக இருந்திருக்கிறது. இவ்வளவு தூரத்தில் வந்து பல ஊர் பெருமக்கள் தங்கள் ஊர் மக்கள் வந்தால் தங்கிச் செல்ல பல சத்திரங்களை எழுப்பியுள்ளனர். எங்கள் சிவகாசி சத்திரத்தில் ஜெனரேட்டர் கூட உண்டு. சூரியனின் வெளிச்சம் தாராளமாய் கிடைக்கும் என்பதால் சூரிய ஒளி மின்சாரத்தை தற்போது இரவில் வெளிச்சத்துக்கும், உணவு சமைப்பதற்கும் உபயோகித்து வருகிறார்கள். அனைத்து சத்திரங்களிலும் அன்ன தானம் நடைபெறும். நடந்து வந்த களைப்பை நீக்கும் அன்னம் பாலிக்கும் அனைத்து ஊர் மக்களும் அன்புடன் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி அன்னதானம் செய்கிறார்கள். ஆச்சரியம் தான். அமாவாசையன்று தான் அனைத்து மக்களும் வருவார்கள். மீதி நாட்களில் யார் இருக்கிறார்கள்? பல துறவிகள் இன்னும் இங்கேயே தங்கியிருந்து தவம் செய்கிறார்கள். இது போக பளியர்கள் என்னும் மலை சாதியினர் இந்த மலைத் தொடர் முழுதும் குடியிருக்கிறார்கள். இவர்கள் மிகவும் நல்லவர்கள். பண்பானவர்கள். அறிவாளிகள். மலைக்குள் எந்த இடத்தில் கண்ணைக் கட்டி விட்டாலும் மீண்டும் தன் இடத்திற்கு வரும் திறன் படைத்தவர்கள். மிருகங்களுடன் அன்பாகப் பழகுபவர்கள். மூலிகை ஆராய்ச்சி செய்ய வரும் மாணவர்களாக இருக்கட்டும், சித்த மருத்துவர்களாக இருக்கட்டும், அனைவரும் மூலிகையின் தன்மைகளைப் பளியர்கள் வசம் சொன்னால் போதும். இந்தச் செடி இந்த இடத்தில் தான் இருக்கிறது என்று அறிந்து வைத்திருப்பவர்கள். இவர்களைப் பற்றி இன்னும் விளக்கமாக பல சுவாரசியங்களுடன், பளியர்களுடன் மூலிகையைத் தேடி வந்த ஒரு அன்பரின் பயணக்கட்டுரையைக் கடைசியில் உங்களுக்கு வழங்குகிறேன். இது கருப்பசாமி கோவிலில் இருந்து சதுர கிரி செல்லும் பாதை. மின்கம்பங்கள் இருப்பதைப் பாருங்கள். அனைத்தும் ஜெனரேட்டரால் இரவில் சிறிது நேரத்துக்கு ஒளி வழங்க அமைக்கப்பட்டுள்ளது.
படம் கிடைக்கவில்லை
நாங்கள் போய்ச் சேரும் போது மணி சரியாக காலை 10.40 ஆகியிருந்தது. 3 1/2 மணி நேரத்தில் ஏறி வந்ததே ஒரு ஆச்சரியம் தான். நடந்து வந்ததற்கும், குளித்ததற்கும் ஒரு குட்டித் தூக்கம் போட்டால் நன்றாக இருக்கும் போல் தோன்றியது. விருதுநகர் சத்திரத்தில் ஒரு பகுதியை ஆக்கிரமித்தோம். கொண்டு வந்திருந்த போர்வையை விரித்தோம். பட்டப் பகலில் அனைவரும் தூங்கி விட்டோம். பகல் 12.30 மணி இருக்கும். வயிறு நானும் இருக்கிறேன் என்றது. சரி சாப்பிடலாம் என்று சுந்தர மகாலிங்கர் கோவிலுக்கு வெகு அருகில் அமைந்திருக்கும் ஏழூர் சாளியர் மடத்தில் அருமையான அன்ன தானத்தை ஒரு பிடி பிடித்தோம். அடடா! ரசம் என்றால் அது ரசம். அனைவரும் பசித்து ரசித்து ருசித்து உணவருந்தினோம். அப்புறம் தான் கோவிலுக்குப் போக வேண்டும் என்ற எண்ணமே வந்தது! மலை மேல் இதெல்லாம் கிடைக்கிறதா? என்று கேட்கும் அளவுக்கு டீக்கடையில் ஆரம்பித்து பூஜை சாமான்கள் வரை அனைத்தும் அங்கேயே கிடைக்கிறது. எல்லாமே அமாவாசையன்று மட்டும் போடப்படும் தற்காலிக கடைகள். இதோ சுந்தர மகாலிங்கர் கோவிலுக்குச் செல்லும் வழியும், வழியில் இருக்கும் கடைகளும்.
படம் கிடைக்கவில்லை
அனைவரும் கோவிலுக்குள் சென்று சுந்தர மகாலிங்கத்தைத் தரிசித்தோம். சுந்தர மகாலிங்கம். மிக விசேசமானவர். கிழக்கு நோக்கி முகம். வடக்கு நோக்கி சற்றே சாய்ந்த ஜடா மகுடம். சுயம்பாய் இருந்தாலும் 2 அடிக்கு மேல் கம்பீரமாய், சுந்தரமாய் இருப்பதால் இவருக்கு சுந்தர மகாலிங்கம் என்று பெயர் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். சிறப்பு தரிசன டிக்கெட் கிடையாது. அர்ச்சனை டிக்கெட் கிடையாது. தள்ளு தள்ளு என்னும் குரல்கள் கிடையாது. ஆனந்த மயமாக அமர்ந்திருக்கும் லிங்க ரூபனைத் தரிசித்து வெளியே வந்தோம். சுற்றுப் பிரகாரத்தில் (?!) சப்த கன்னியரும், பைரவரும் தரிசனம் தருகின்றனர்.
இதோ இது தான் சுந்தர மகாலிங்கம் திருக்கோவில். பின்புறத்திலிருந்து எடுக்கப்பட்ட படம்.
படம் கிடைக்கவில்லை
கோவிலின் மேற்கூரையில் சோலார் பேனல் இருப்பதைப் பார்க்கலாம். அதன் மூலம் பகலில் சூரிய மின்சாரம் சேமிப்பட்டு இரவில் ஒளிவழங்கப் பயன்படுத்தப் படுகிறது. மகாலிங்கத்துக்கு கொஞ்சம் பின்புறம், ஆனந்த வல்லி அம்மையின் கோவிலும் இருக்கிறது. அங்கும் சென்று அம்மனைத் தரிசித்தோம். மிக்க மகிழ்ச்சியுடன் அடுத்து சந்தன மகாலிங்கத்தைத் தரிசிக்கக் கிளம்பினோம்.
9 மே 2006
சுந்தர மகாலிங்கத்திற்குப் பக்கத்து மலையில் சந்தன மகாலிங்கர் வீற்றிருக்கிறார். செல்லும் வழி படிக்கட்டுகளால் அமைக்கப்பட்டு இருக்கிறது. வழியில் ஒரு சிறு நீரோடையும் உண்டு. செல்லும் வழியில் இலவம் பஞ்சு மரங்களும், பசுக்களும், பல்வகை மலர்களின் நறுமணம் மற்றும் வண்ண மிகு காட்சியும், குயில்களின் இடைவிடாத சத்தமும் ஒரு இன்பலோகத்துக்கு நம்மை இட்டுச் செல்கின்றன. இந்தப்படத்தில் ஏறும் படிகள், பசுக்கள் (கோவிலுக்கென்று தானம் செய்யப்பட்டவை), பின்புறம் அன்னதானம் செய்ய உதவும் அடுப்புக்கான புகை போக்கிகள், வித்யா :) அனைவரையும் காணலாம்.
படம் கிடைக்கவில்லை
சந்தன மகாலிங்கர் திருக்கோவிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கோவிலாகும். இங்கும் சுயம்பாகவே, லிங்கரூபத்தில் காட்சியளிக்கிறார் இறைவன். இக்கோவிலில் விநாயகர், சந்தன மகாலிங்கம், சந்தன மகாதேவி, கார்த்திகேயர், நவக்கிரகங்கள் என்று அனைவருக்கும் கோவில்கள் இருக்கின்றன. 18 சித்தர்களின் சிலைகளும் இங்கு உள்ளது. இங்கு சட்டநாதர் என்று அழைக்கப்படும் சட்ட முனி இருந்த குகையும் இருக்கிறது. எனவே அத்திரிமுனிவர், கோரக்க நாதர், சட்டமுனி போன்ற மூன்று சித்தர்கள் இங்கு இருந்திருக்கிறார்கள். இதோ சந்தனமகாலிங்கக் கோவிலின் எழில்மிகு தோற்றம்.
படம் கிடைக்கவில்லை
கோவில் மணிக்கு முதலில் இருப்பது விநாயகர் சந்நிதானம். அடுத்து சந்தன மகாலிங்கம். எதிர்புறம் மேலே இடது புறம் இருப்பவர் கார்த்திகேயர், வலது புறம் சந்தன மகாதேவி. வலது புறத்தில் கடைசியில் ஒரு பகுதியாய் தெரிவது நவக்கிரகங்கள்.
சந்தன மகாலிங்கத்தைத் தரிசனம் செய்ததும் நமக்கு அருமையான முதல் தரமான நறுமணமுள்ள் சந்தனத்தை பிரசாதமாக அளித்தார்கள். மாலை 6 மணியளவில் மீண்டும் சுந்தர மகாலிங்கத்திற்கே திரும்பினோம். மாலை 6.30 மணிக்கே இருள் கவியத் தொடங்கியது. அப்போதே இரவு உணவை (அன்னதானம்) மீண்டும் ஏழூர் சாளியர் மடத்திலேயே மூக்குப்பிடிக்க சாப்பிட்டோம். மலைப் பிரதேசத்திற்கேற்ற வகையில், கோடையிலும் குளிர் நடுங்கத் தொடங்கியது. 7 மணிக்கே அனைவரும் ஆனந்தவல்லி அம்மையின் கோவிலுக்குள் ஆளுக்கொரு இடத்தைத் தேடி உறங்கினோம். வழக்கமாக இரவு 11.30 வரை சன் டிவியின் அனைத்து மெகா தொடர்களையும் பார்த்து விட்டே தூங்கும் என் மனைவி கூட அலுப்பில் உடனே தூங்கிவிட, அனைவரும் அதிகாலை 4 மணிக்கே எழுந்தோம். ஏனென்றால் இப்போது இறங்க ஆரம்பித்தால் தான் மீண்டும் சூரியன் சுட்டெரிப்பதற்குள் மலையை இறங்கி விடலாம் என்பதற்காக. மலை ஏற்றம் எவ்வளவு கடினமோ அவ்வளவு கடினம் மலை இறக்கமும். மலை ஏற்றத்தின் போது மூச்சைப் பிடித்து ஏறுவதால் மூச்சிரைக்கும் அவ்வளவே. சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டால் மேற்கொண்டு ஏற முடியும். ஆனால் இறக்கத்தின் போது மூச்சிரைக்காது, நம் உடலின் மொத்த எடையையும் நம் ஒரு காலில் தாங்கிக் கீழே செல்வதால், முழங்கால் வலி ரொம்ப இருக்கும். ஆனால் அனைத்து வலியும் வீட்டுக்கு வந்த உடன் தான் ஆரம்பிக்கும். 4 மணிக்கு ஆரம்பித்த நாங்கள் மீண்டும் வந்த வழியே இறங்கினோம். அன்று மாலை வரை அமாவாசை இருந்ததால் வழியில் பல அன்பர்கள் ஏறிக் கொண்டிருந்தனர். மீண்டும் அத்தியூத்தை நெருங்கையில் மணி 8.30 ஆகிற்று. ஏறும் போது 3 1/2 மணி நேரத்தில் ஏறினோம் ஆனால் இறங்கும் போது 5 மணி நேரம் ஆகிற்று. சரியாக 9 மணி அளவில் எங்கள் காரை வந்தடைந்தோம். கீழே அடிவாரத்திலும் அன்ன தானம் அளித்தார்கள். அங்கு காலை உணவை (சாம்பார் சாதம்!) முடித்துக் கொண்டு காலை 10 மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம். இவ்வளவில் இந்தப் பயணக்கட்டுரையை நிறைவு செய்கிறேன். இந்தப் பதிவில் என்னுடைய அனுபவத்தை மீண்டும் ஒரு முறை நினைவு கூர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி. சுந்தர மகாலிங்கத்துக்கு அரோஹரா!
இதோ சுந்தர மகாலிங்கர். புகைப்படத்தை உங்களுக்காக புகைப்படம் எடுத்ததால் தெளிவாக இல்லை. இப்போது புகைப்படம் எடுக்க அனுமதிப்பதில்லை.
படம் கிடைக்கவில்லை
10 மே 2006
அமாவாசை அன்று மட்டும் தான் மலை ஏறலாம் ராகவன் அவர்களே. மீதி நாட்களில் மூலிகை ஆராய்ச்சி செய்ய வேண்டுமானால் செல்லலாம். அதுவும் ஆடி அமாவாசை அன்று அதிக கூட்டம் இருக்கும். எனவே அன்று ஏறுவது கடினம். என்னைக் கேட்டால் தை அல்லது மாசி அமாவாசையன்று சென்றால் மழை பொழிந்து அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழும். காணக் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். சாப்பாடு வசதி, தங்கும் வசதிக்குப் பஞ்சமே இல்லை. மொத்த மலையே நம்முடையது தானே! என்னை எப்போது வேண்டுமானாலும் கூப்பிடுங்கள். ஒன்றாய்ப் போவோம்.
12 நவம்பர் 2007
இந்த ஆண்டு தீபாவளி முடிந்த மறுநாள் அமாவசை இன்னும் மிச்சம் இருக்க, குடும்பத்தோடு அனைவரையும் தென் கைலாசமாம் சதுரகிரி சுந்தரமஹாலிங்கம் அருள் மனம் வைக்க இனிதே கிளம்பினோம். இதோ ஒரு படத் தொகுப்பு: சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் - வத்திராயிருப்பு செல்லும் வழியில் சமீபத்தில் பெய்த மழையால் செழித்திருக்கும் வயல்வளம்.

பின்புலத்தில் மேகங்கள் தவழ காணக் கிடைக்கும் மேற்கு மலைத் தொடர். இங்கு தான் நான்கு மலைகளுக்கு நடுவே சதுரகிரி ஆட்சி.

வத்திராயிருப்பில் வயலும் வாழையும்.

வழுக்கும் அருவியில் ஆனந்தக் குளியல்


மலையை ஆச்சரியத்துடன் ரசிக்கும் மஹா!

பார்த்த இடமெல்லாம் அருவியும் நீச்சல் குளமும் தான்! :)


எழில் கொஞ்சிடும் பசுமை

தாலாட்டும் மேகம்

குரங்கார் தெரிகின்றாரா?

நடந்து செல்லும் பாதையின் குளிர்ச்சியும் பசுமையும்.

நாவல் மரத்தைப் பதம் பார்க்கும் வாண்டுகள்!

மாலையில் சுந்தர மஹாலிங்கத் தரிசனம். சுயம்பானவர், ஈசான்யம் நோக்கிச் சாய்ந்த தோற்றம், கிழக்கு நோக்கிய முகம், தென்கைலாசம் மட்டுமின்றி நம் மனத்திலும் இருப்பிடம், பார்த்தவுடன் கரங்கள் கூப்பி, நெஞ்சம் உருகி, கண்ணில் நீர் பெருக்கி, ஹர ஹர சொல்ல வைக்கும் இறைமை.

காலைப் பனிப் போர்வை.

இதென்ன பட்டப்பகலில் சந்திரன்? ஓ. சூரியன் தானா?

மேக முத்தம்.


மஞ்சள் மலர்களின் குதூகலமும் மேகத்தின் விளையாட்டும்

தெளிந்த நீரோடையும் குளிர்ச்சியும்


பகல் 12 மணி தான் ஆகின்றது!

சந்தன மகாலிங்க தோரண வளைவு.

சந்தன மஹாலிங்கம் கோவில்


உண்மையிலேயே ஆகாய கங்கை தான்!

சந்தன மஹாலிங்கமும் 18 சித்தர்களும்

பக்திப்பழமாய் மஹா!

சப்த கன்னியர் தரிசனம்

சதுர கிரி தல புராணம்


எதிரே மலையில் தெரிவது தவசிப்பாறை. அதுபற்றிப் பின்னர் விளக்கமாய்.

(ம)வனங்காக்கும் வனதுர்க்கை அம்மன்.

எழில் கொஞ்சும் பாதை

சுயம்பு இரட்டை லிங்கமும் நந்தியம்பெருமாளும்

மலை மேல் சில்லருவி

தெளிந்து ஓடும் நீர். குளிக்கவும் பருகவும் பேரானந்தம்



கோரக்கச் சித்தர் தவமியற்றிய குகை.


சுபமாய் மீள்கையில் சதுரகிரி தரிசனம்.
