கவிதைகள்~26 நிமிட வாசிப்பு20 ஆண்டுகளுக்கு முன் எழுதியது

படக் கவிதைகள்

முத்தமிழ் மன்றத்தில் எழுதியது · 1 அக்டோபர் 2006 – 15 ஜூன் 2008

இது, தாங்கும் கரமா?
இல்லை தவிர்க்கும் கரமா?
இங்கே, கீழிருப்பவரை மேலே தூக்குகிறார்களா?
இல்லை மேலிருப்பவரை கீழே இழுக்கிறார்களா?
இது, வாழும் வரை நீடிக்குமா?
இல்லை இப்போதே பிரிந்திடுமா?
இங்கே காதல் பரிமாறப்படுமா?
இல்லை சாதலுக்கு வழிகாட்டுமா?
இது ஆதரவுக்கா?
இல்லை நிராதரவுக்கா?

3 அக்டோபர் 2006

கடல் தான் பெரிதோ ஆதவனை விட?
கண்ணுக்குத் தோன்றும் காட்சியே சாட்சி!
கண்ணால் காண்பதும் பொய்!
துன்பக் கடலிலும் இது போலே
இன்பச் சூரியன் விழித்தெழுவான்!
கடலா பெரிது ஆதவனை விட?

7 அக்டோபர் 2006

இறைவன் படைப்பிலே
இயல்பிலே கதவு வைத்த
ஒரே வீடு இந்த விழி!
திறக்கவும் மூடவும் வசதியாய் இமை!
பிறந்ததில் இருந்து இறக்கும் வரை
சிறப்பாக உலகைக் காட்டும் கருவி!
வாயால் சொல்ல முடியாததை
பார்வையால் சொல்லும் பாணி!
இதுவே இதன் பணி.
காதலின் முதல் படி.
மனிதன் இறந்த பின்னும்
இறக்காத சிறப்பு நீ!
ஆம்! விழி கொடுத்தால்
வழி கிடைக்கும் இருவர்க்கு!

14 அக்டோபர் 2006

தண்டவாளத்தில் ஓடிச் செல்லும் இளங்குருவிகளே
வண்டுகள் துரத்துவதால் மலர்கள் ஓடுதோ?
கண்கொண்டு பாருங்கள்ரயில் வந்தால் பிரச்னை
வீண்வம்பு வேண்டாமே தளத்தில்தான் ஏறிடுங்கள்!

15 அக்டோபர் 2006

கை கொட்டிச் சிரிக்கிறேன்
கிறுக்கு மனிதா!
நீயா இறைவனைக் காண்பாய்?
நீயா உலகைக் காப்பாய்?
நீயா மனிதம் வளர்ப்பாய்?
நீயா உலகின் முதலாளி?
பரிணாமத்தின் எச்சமே
சுயநலத்தின் உச்சமே
சகஉயிருனக்கு துச்சமே
ஆயுதம் தொலை
அன்பை விதை
ஆசை சுருக்கு
பொறுமை பெருக்கு
கைகொட்டிச் சிரிக்காமல்
கைதட்டிச் சிரிக்கிறேன்.

16 அக்டோபர் 2006

காலில் செருப்புமில்லை
வாழ்வில் வெளிச்சமில்லை
குடத்தில் நீருமில்லை
தூரம் அதிகமுண்டு
வாழ்வில் வெறுப்பில்லை
சோகம் சுமையுமில்லை
உழைப்பில் களைக்கவில்லை
தியாகத்தில் உயர்ந்து நிற்போம்
கர்மத்தில் திளைத்திருப்போம்.
மோட்சத்தை அடைந்திருப்போம்.

ஆம் சகோதரிகளே, இந்தப் படத்தைப் பார்த்ததுமே வார்த்தைகள் எதுவும் எனக்கு வரவில்லை, திரையே கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு நீர் திரையிட்டது. இந்தப் படத்தின் சோகம் அந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பாவம்!

என்ன சோகமோ?
என்ன வேதனையோ?
பிள்ளைகள் கைவிட்டு இருப்பார்களோ?
அன்பு மனைவி பிரிந்திருப்பாரோ?
உயர் ஜாதியிலிருப்பதால் வந்த கொடுமையோ?

வெங்காயம் விற்றும் படிக்கும் மகன்
மங்காத பெருமிதம் தாய்க்கு; கஷ்டத்தில்
பங்கு கொடுக்குமிதுவா குழந்தைத் தொழில்?
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!

17 அக்டோபர் 2006

அறிவைக் கூட ஆறாய்ப் பிரித்திருக்கும் மானுடா!
நான் மலர்தாவுவது ஆண்களுக்கு உவமையா?
நான் இறைவன் எனக்கிட்ட கடமை செய்கிறேன்.
நீ என்றாவது உன்கடமை செய்திருக்கிறாயா?

25 அக்டோபர் 2006

கடவுளுக்கு
என்னை மட்டும்
கொடுத்தால் பத்தாது
உன்னையும் சேர்த்துக்
கொடு!

26 அக்டோபர் 2006

அன்பு மகளே!
ஆர்ப்பரிக்கும்
அலைகளை விட
அமைதி ததும்பும்
ஆழ்கடல்
அழகாக இல்லை?

27 அக்டோபர் 2006

அழகு மறையை
ஆழ்ந்த சிந்தனையில்
இல்லறம் செழிக்க
ஈதல் மலர
உலகம் முழுமைக்கும்
ஊக்கமாய் எழுதிய
எந்நாளும் சிறக்கும்
ஏற்றம் கொள்ளும்
ஐயன் வள்ளுவன்
ஒழுகும் சிலையை
ஓங்கு புகழ்வளர்
ஔவையும் வணங்குவாள்
அஃதே உண்மை.

30 அக்டோபர் 2006

1+1 = 1 இது தான்
இவர்களின் கணக்கோ?
இருமனம் கூடி ஒருமுகம்
இது தான் இவர்கள் மொழியோ?
கனவு காணும் கண்கள்
நான்கில் காணும் காட்சி ஒன்றோ?
வாழ்வின் இறுதி வரை நீடிக்கும்
தொடர்பின் உறுதி இது தானோ?

31 அக்டோபர் 2006

எதற்கோ இந்த விரல் தவம்?
முயற்சியும் பயிற்சியுமே வெற்றி
என்னும் தத்துவம் உணர்ந்தீரோ?
ஒவ்வொரு முகமும்
ஒவ்வொரு பாவம்
ஒருமுகம் மகிழ்ச்சி
ஒருமுகம் எதிர்பார்ப்பு
ஒருமுகம் எளிமை
இருமுகம் தெளிவில்லை!
இருந்தும் உங்களிடமும்
ஒழுங்கு ஒருங்கே
இருப்பது கண்டேன்.
ஆட்டுவித்தால் யாரொருவர்
ஆடாதாரே இங்கே?

பணங்கொழித்து
குணமொழிந்து
அன்பிழந்து
தன்னலமாகி
அடுத்தவரைத்
தடுத்தவராகி
நயவஞ்சகமாய்
தயவெதுவுமின்றி
வெறிபெருக்கி
நெறிசுருக்கி
அற்பராய்
கற்பிழந்து
நானிலம்வாழ்
மானிடரே!
எங்கள் நிம்மதி
உங்களிடம் உண்டா?
எங்கள் சிரிப்பு
நீங்கள் சிரித்ததுண்டா?
கள்ளத்தனம் நெஞ்சிலில்லை
அள்ளும்சுமை மனத்திலில்லை
குழந்தைமனம் உயிர்
இழக்கும் வரை!
தழைக்கும் வாழ்வென்றும்
உழைக்கும் வரை.

20 நவம்பர் 2006

தூணுக்கு நீ துணையா?
தூண் உனக்குத் துணையா?
கண்களில் ஆயிரம் கனவுகள்
முகத்தில் ஆயிரம் பாவங்கள்
ஏனோ நெஞ்சில் குறுகுறுப்பு
அதன் எச்சமோ சோகமாய்
இன்னும் என்ன இழப்பதற்கு
ஒன்றுமில்லை இனி எனக்கு
என்றிங்கே எண்ண வேண்டாம்
எதிர்காலம் என்று உண்டு
அதன் துவக்கம் இன்றே
இதோ இப்போதே இங்கேயே!

20 டிசம்பர் 2006

தாய்மை உணர்வுடன்
மெச்சும் கவனத்துடன்
பழகும் அனுபவத்துடன்
பொங்கும் முதிர்வுடன்
தலை கோத
நகம் பறிக்க
மடி சாய
உடல் பேண
மனம் வருட
எனக்கும் கிடைத்தால்
சொக்கிக் கிடப்பேன்
இது போலே!

8 ஜனவரி 2007

பெரியவர் கண்களில் கனவு
சிறியவர் கண்களில் நனவு
பெரியவர் நிகழ்கால அடித்தளம்
சிறியவர் எதிர்கால பெருந்தூண்
பெரியவர் பெருமையின் சின்னம்
சிறியவர் உழைப்பது திண்ணம்
பெரியவர் மழலை உள்ளம்
சிறியவரிடம் இல்லை கள்ளம்
பெரியவர் எளிய வழிகாட்டி
சிறியவர் நடப்பார் பின்பற்றி

19 ஜனவரி 2007

ஏந்திய கையில் விளக்காய் பாரதமாதா
சாந்தக் கண்களில் தெரியும் கவனம்
பாந்தம் பண்பாடாய் உடையில் தவழும்
ஆந்தை இரவில் சுதந்திரப் புதல்வனை
ஏந்தியே பெற்றதால் இன்று இங்கே
காந்தி காமராசன் போல் அருமை
மைந்த னவனைத் தேடி வல்லிரவில்
சீந்து வாரில்லாக் காட்டில் வந்தாயோ?
வேந்த னவன் எங்கிருப்பான் காட்டுச்சி
மோந்து காலடியில் வந்து சேர்ப்பேன்.

25 மார்ச் 2007

பாட்டியின் கண்களில் பூரிப்பு.
அட! ஆனந்தக் கண்ணீர்
இப்படித் தான் இனிக்குமோ?
சீராட்டி வளர்த்த நெஞ்சு
பூரிச்சுப் போகுதப்பா!
உரமாக நாங்க நிக்க
விதையாக நீங்க நிக்க
வாழையடி வாழையா
வாழவே வாழ்த்துறேனே!

5 ஏப்ரல் 2007

பாதி தெரிந்தாலும் சிரிப்பு வருகிறதே!
கண்ணின் அலட்சியம் கைகளிலும் வருதே!
விடுமுறை இன்றே கழிக்கும் எதிர்பார்ப்போ?
எட்டிப் பார்க்கும் சிரிப்பும் திருப்தியும்!
முழுதும் மறைத்தாலும் வருதே சிரிப்பு!
அணைப்பின் இறுக்கம் நட்பு விளக்கும்,
நட்பின் அரவணைப்பு உள்ளம் நெகிழ்த்தும்
தனியாய் விட்டதாலே பயமோ கண்ணில்?
ஒவ்வொருவருமே கவிதை என்பதால் ஒவ்வொருவருக்கும் ஒரு வரி!

20 ஏப்ரல் 2007

சீக்கியர்க்கு ஒரு விதி உண்டு
சீக்கிரத்தில் போர் செல்வ தென்று
போக்கிடம் இல் லாமல் இல்லை
காக்கும் கடமை உவந்து செய்யவே!
மகனென்று பிறக்க வில்லை மாதவத்தால்
மகவொன்றே பெற்றெ டுத்தோம் மாவீர
மரபென்ப தழிந்து விடுமெனும் கவலை
தவறென்று காட்டிடவே வந்து தித்தாய்!
போர் முனையின் பரிசு மரணமென்றே
பார் முழுதும் அறிந்தே விலகிடினும்
கார் முகிலாய் உடை யணிந்தே
யார் மனதும் மகிழ நகைத்தாயே!
பத்திரண்டு ஆண்டாய் உன்னைப் பாங்குடனே
பத்திரமாய் இல்லத் துள்ளும் மனதுள்ளும்
பொத்தித் தான் வைத்திருந்தோம் சேவை
வித்தகமாய் செய்ய ஈந்தோம் பாருக்கே!
வீரத்தின் நிலமாய் திகழ்ந்திடு நீயே!
தீரத்தால் உலகை வெல்வாய் நீயே!
ஓரத்திலும் பயமது இல்லாம லேயே!
ஈரத்தின் கண்களால் ஆசிதந் தோமே!

23 ஏப்ரல் 2007

பாழ் கிணறாம் எந்தன் வாழ்வென்ற
ஊழ் தீர்க்க என்வயிறு வாய்த்து
சூழ்ந்த உலகின் சத்த மதிலே
ஆழந்த உறக்கம் கண் கொண்டாய்!
கள்ளம் கபடம் நெஞ்சில் இல்லை
பள்ளம் இனிநம் வாழ்வில் இல்லை
துள்ளித் திரியும் நாளிலும் அன்பை
அள்ளித் தந்தேன் தூங்கு கொஞ்சம்!
எந்தன் நெஞ்சக் குறையை நீக்க
நொந்த மனதின் சோகம் போக்க
முந்தி உன்னைச் சபையில் நிறுத்த
தந்தை வருவார் துயரம் தீர்ப்பாரென
கண்கொண்டு பார்த்தேன் வழியெங்கும் அவரை
புண்கொள்ளப் பாய்ச்சினார் புல்லாய் மதித்தே
மண்கொண்டு வீழவே சக்களத்தி நாடினார்
பண்கொண்டு அவரும் வாழவே பாடினேன்!
தூங்கும் காலமிது நன்றாய்த் தூங்கிஎழு
ஓங்கும் உன் வளர்ச்சியாம் முயற்சியில்
ஏங்கும் காலமினி இல்லை தாயெனைத்
தாங்கும் காலம் சீக்கிரம் வரட்டும்.
கூடையது எலுமிச்சை தாங்கும்
வாழையது வம்சம் வளர்விக்கும்
பாவமது நாமேதும் செயவில்லை
காலமது நம்பக்கம் திரும்பவரும்.
செய்யும் தொழிலே நமக்குத் தெய்வம்
கொய்யும் எலுமிச்சை கருணை மழை
பெய்யும் என்று பணிந்து வணங்கியே
உய்யும் வழியே தொடர்ந்து செல்வோம்!

1 மே 2007

வாழ்ந்து முடித்த நிறை காவியமே!
வாழ்த்த முடிந்த அழ கோவியமே!
இல்லறமே இறை சேரும்
நல்லறமே என விளக்க
புடவைக்குப் பின்னே தான்
கடக்குமென் வேட்டி எனக்
கலையா மடிப்போடும்
அலையா மனத்தோடும்
கலாச்சார உடையில்
உலாப்போகும் நடையில்
செருப்பில்லாக் காலொடும்
கருப்பில்லா குணத்தோடும்
மங்களமாய் அன்னையும்
திங்களதாய் எந்தையும்
அன்பின் மாட்சியையும்
அன்பின் ஆட்சியையும்
அன்பின் சாட்சியையும்
இன்பமாய் ரசிக்கவே
மாறு கொண்டு செல்லாமல்
வீறு கொண்டு சென்றீரோ?

4 மே 2007

கண்களில் காண்பது தெளிவு தானே? கலக்கம் இல்லையே?
உடைகளில் காண்பது எளிமை தானே? ஏழ்மை இல்லையே?
முகத்தில் காண்பது புன்னகை தானே? வருத்தம் இல்லையே?
தோற்றத்தில் காண்பது உண்மை தானே? நிழலுக்காய் இல்லையே?
உவப்பின் பார்வையாலே
கவர்ந்து ஒருநிமிடம்
எவரையும் யோசிக்க
தவறாது வைத்தனையே
நவயுக மோனலிசாவோ?
பௌர்ணமி நிலவோ?
மௌனமே பாஷையோ?
ரௌத்திரமும் காரணமோ?
சௌபாக்கியவதியாய் வாழ்க!

7 மே 2007

முகமறியாக் குழந்தைகள் இரண்டு
அகமகிழ்ந்து கடற்கரையில் நின்று
யுகயுகமாய்க் கொணர்ந்த காதலை
இகத்திலே கரைத்திட நினைத்ததோ?
எண்ணவியலா மணல் துளிபோலும்
கண்ணெட்டும் கடல் நீர்போலும்
வண்ணமயக் கூரை வான்போலும்
எண்ணத்தில் விரிந்தது நும்காதல்.
வானைத் தாங்கும் கூரையோ?
பேரலை காக்கும் பேரணையோ?
அன்புச் சங்கிலியின் கண்ணியோ?
பார்வைப் பரிமாணப் பரிணாமமோ?
இயற்கை சக்தி கண்டேன்
கோபுரப் புனிதம் கண்டேன்
குழந்தை மனம் கண்டேன்
காதலர் கூடக் கண்டேன்.
கார் மேகம் நீர்சொரியக் கண்டதுண்டு
நீர் மேகம் பூச்சொரியக் கண்டதுண்டா?
நீர் மோகம் கொண்டதைக் கண்டவுடன்
சீர் கொண்டு வண்ணமலர்த் தூவுதே!
காதலர் புதுமை ஆட்டம் கண்டே
பாதத்தில் பூமியும் ஆழியும் குலாவ
ஆதவனும் மறைந்து நிலவுடன் மருவ
மாதவத்தின் மகிமை வந்து சேர்ந்ததே!

17 மே 2007

2 வயதில் செய்வதை 1 வயதில் செய்தும்
5 வயதில் செய்வதை 3 வயதில் செய்தும்
10 வயதில் செய்வதை 5 வயதில் செய்தும்
18 வயதில் செய்வதை 8 வயதில் செய்தும்
காட்டும் போதெல்லாம் மகிழ்ந்தீரே!
பாட்டும் கேளிக்கையும் வாழ்வென
மாட்டும் நற்காதலில் விழும்போதும்
வாட்டம் ஏதுமின்றி மகிழ்வீரா?!

19 மே 2007

அலங்காரக் கரகத்தின் அழகைக் கண்டீரே
பலகண்ணை இழுக்கும் கவர்ச்சி் கண்டீரே
குலங்கள் தொடர்ந்தாடும் பயிற்சி கண்டீரே
கலங்கிய கண்ணின் சோகம் கண்டீரா?

31 மே 2007

துள்ளி இன்று தோளில் பையுடன்
பள்ளி கிளம்பிய சின்னச் சிறுமியே
சுள்ளி பொறுக்கி அனுப்பிய தாய்க்கு
வெள்ளிப் பதக்கங் கல்வியால் காட்டு
உன்னிலை உயர்த்தும் வழி யறிந்தே
தன்னிலை சிறக்குஞ் செயல் கொள்
புன்னகை கொஞ்சும் பல் வரிசை
சென்னியில் தருமே நல் பரிசை
வண்ணக் குழி விழும் கன்னமோ
எண்ணக் குழி பறித்து இழுக்கும்!
கண்களின் குழி தூங்கா உழைப்போ
மண்ணின் வழி மாந்த ரென்னுமே!
ரெட்டைச் சடைப் பின்னலின் நேர்த்தி!
வட்ட வட்டப் பொட்டும் சேர்த்தி!
கட்டத் துக்குள்ளே உன்னைப் போர்த்தி
கட்டிட முடியுமோ உந்தன் கீர்த்தி?
கனவுகளின் எல்லையில் உந்தன் கண்கள்
நனவுகளின் களிப்பில் உந்தன் புன்னகை
மனமதும் மயங்குது உந்தன் வடிவில்
தனம்பதி னாறும் உந்தன் காலடியில்!

1 ஜூன் 2007

நெருக்கம் உங்கள் அன்பைக் காட்டும்
சுருங்கிய பாதை பயத்தைக் கூட்டும்
உருக்கம் கொண்ட தாய்மை நெஞ்சம்
கருக்கலில் வீட்டில் காத்துக் கிடக்கும்
வயப்படும் காதல் கடலாய் இன்ப
மயமாய் தோன்று மிருந்தும் நிற்கும்
உயரம் அறியாது தடம் மாறினால்
துயரம் அலையாய் கடல் பரப்புமே!
மாமன் மகன் என்ற உரிமையோ
காமன் மகன் என்ற போர்வையோ?
ஓமப் புகை கொண்டு சேருமுன்னே
சாமப் போரு மக்கு வேண்டாமே!
கல்லதின் மேலே தொடரும் காதல்
சொல்லில் சொல்ல முடியா காதல்
அல்லல் எதுவும் இடையே வராமல்
பல்லாண்டு நலமாய் வாழ வேண்டுமே!

4 ஜூன் 2007

குமியில தான் நெல்லெடுத்து
உமி தனியாப் பிரிச்செடுத்து
உறிஞ்சி எங்க உழைப்பையே
அரிசியாத் தான் கொடுத்தோமே
சல்லடையில் சலிச்சாலும் கல்மிஞ்சி மேலநிக்கும்
நெல்பெடைச்சு பார்த்தாலும் கல்மிஞ்சி மேல்நிக்கும்
கல்லுடைச்சு பார்த்தாலும் நாங்கமேல வாரதெப்போ?
கல்படைச்ச கடவுளே வந்துஇங்கே சொல்லுமையா!
என்னோட பேத்தி இவ
சின்ன முத்துப் பேச்சி
கன்னப் பொட்டு வைச்சு
என்னப் பெத்த ஆச்சி
கும்மிட்ட சாமியத்தான்
நம்பாமப் பாக்குறாளோ
பிம்பமா கண்ணாடியில
தம்போலத் தெரியுதுன்னு?

6 ஜூன் 2007

அந்தரத்தில் ஆடை யின்றிப் பறந்தேனே
முந்திவந்து தண்ணீ தொட்டு வென்றேனே
அந்தக்கரை சீக்கிரமா தொட்டுப் புட்டு
உந்திக்கரை மொத ஆளாச் சேரணுமே
தலைகீழாப் பொறந்தோமே தாய் வயித்திலே
தலைகீழா விழுந்தோமே தண்ணீ குளத்திலே
தலைக்குள்ளே மூளை அதிகமாத் திணிச்சி
மலைக கனமாய் ஆண்டவன் படைச்சதாலே!
வலியத்தான் பாக்காம
சலிக்காம நீச்சலிட்டா
ஒலிம்பிக்குக் கனவு
பலிக்காமப் போவுமோ?
அருமையான சுனைத் தண்ணி இதாம்
எருமைகூட வந்து குளிக்க ஆவாதாம்
கருவி கொண்டு உறிஞ்சி விக்கவுடாம
பொருமி வந்து கலக்கிப் புட்டோமே!
பயிர் விளைய மழையில் நிறைஞ்சது
வெயில் வந்து ஒரேநாளில் உறிஞ்சது
மயில் வந்து ஆடிமழை பெய்யுமட்டும்
ஒயிலாக நாங்க விளையாட இருப்பியா?

10 ஜூன் 2007

சக்தியைப் பெறுவது அல்ல முடியா
முக்தியைப் பெறுவது மல்ல எங்கள்
பக்தியின் நோக்கம் மாறாத அன்பால்
விக்கித்துக் கள்ளன் மயங்கி விடவே!
இயக்கம் அவனென் றறிந்தே
மயக்கும் மாயவன் புகழ்பாடி
மயக்கந் தெளிந்து விட்டோம்
தயக்கமி னித்தே வையில்லை
அன்பு
எளிமை
தூய்மை
சேவை
இவையாவும் ஆயுதமே!
துருப்பிடித்ததாய் உதறியது உலகம்.
உருப்படியாய் எடுத்தோம் கையில்.
இருப்பெதுவோ கண்டு கொண்டோம்!
கள்ளன வஞ்சிறைப் பட்டதில்
உள்ளத்தில் முகிழ்ந்த மகிழ்ச்சி
கள்ளமில் லாமுக மலர்ச்சி
தெள்ளிய பார்வையில் தோன்றும்!
ஏவலுக்கு நானுண்டு என்றானி டையன்
காவலுக்கு மவனுண்டு என்றேநி ன்றான்
பாவமிலை புண்ணியமு மிலை என்றான்
ஆவலாய்க் கேட்டோம் சிரித்து மழுப்பினான்.
ஒன்றாம் பொருளை
ஒன்றியே பக்தியால்
ஒன்றாய் அடைந்தோம்
ஒன்றாய் மகிழ்வோம்!

17 ஜூன் 2007

ஆசை யோடு புதிய அடுப்பில்
ஓசை யோடு சுட்டுத் தரும்
தோசை யோடு சட்னி உண்டே!
காசைக் கொடுக் கலாமே பின்னே!
கூழைக் குடிக்கும் அன்பான மக்களாம்
கோழைத் தனமில் லாதுழைத் திடும்
ஏழைகளின் ஐந்து நட்சத்திர விடுதியாம்
வாழை இலைத் தட்டுபுத்தம் புதியதாம்
தூர வயக்காரங்க நாங்க ரொம்ப
நேர மாகும் வீடு போய்ச் சேர!
வாரக் கடைசி வரும் கூலியிலா
காரஞ் சாப்பிட்டு சடுதி போகனும்.
அரைக்கும் போதே ஊறிய அன்பையும்
திரையிட்டே மறை யாது சேர்த்ததனைக்
கரைத்த மாவிது என்பதாலே நிறமது
வரைந்த வெள்ளை யெனக் காட்டுதோ?
கொடுக்குங் காசங் கேகுறைவ தில்ல
அடுக்கு மாடிநானுங் கட்டப் போறதில்ல
அடுப்புக்குங் கட்டிலுண் டானால் நான்
படுக்கக் கட்டிலிரவில் தேவை யில்ல!
அழுக்கு வெளியே சுத்திக் கிடக்குதப்
பழுக்கு இல்லாமன முள்ளே யிருக்குது
கழுத்து முட்டினாலுஞ் சுருக்குப் பைக்கு
இழுக்கு வராதுன்னு சொல்லிப் புட்டேன்!
தீ வளர்த்து அடுப்பினிலே
தீ அணைத்தேனுன் வயிற்றினிலே
நீ வாழ்ந்து எனைவாழ்த்தி
தீ அணைப்பாயென் வயிற்றினிலே!

2 ஜூலை 2007

தள்ளு வண்டி யெந்தன் காலத்தைத்
தள்ளும் வண்டி யெனையு முள்ளே
கொள்ளும் வண்டி யிதுவோ
பள்ளங் கண்டு தங்கும் வண்டியே!
ஓடாத சக்கரத்தில் காற்றும் இல்லை
ஆடாது நிற்குமதில் பயமும் இல்லை
தேடாது கண்டெடுத்த தேரிதே
ஈடாகப் பார்த்துவிடவு மேதுமிங் கிலையே!
கந்து வட்டிக் கடன்காரன் வருவான்
முந்தித் தந்த பணமெங்கே கேட்பான்
வெந்து நாம்போ முன்னே
நொந்து படும்பா டதுவுந் தீந்திடுமோ?
முதல் போட்டு சம்மணமா யமர்ந்தேன்
முதல் வாடிக் கைவருவழி தேடினேன்
பதமா யவரைக் கவரவே
விதமா னவழி தனையார் மொழிவரே?

9 செப்டம்பர் 2007

அருவியில் குளிக்கும் குருவியே
மடையில் களிக்குநற் படையே
ஈரத்தில் காட்டிய வீரமே
பேரிடி தாங்கும் வேரடியே!
குறும்புத் தனத்தின் எல்லை நின்று
நறுக்குத் தெறிக்கும் நீர்க் குண்டுகளை
முறுக்கும் உடலில் பாரந் தாங்கி
உறுதியாய் நிற்கும் பாதம் கண்டேன்
பிரவாக நீராய் மேலிருந்து வீழ
பிரயத்தனம் செய் பகீரதன் மகிழ
சிரமதில் தாங்கி பூமியும் செழிக்க
அரனின் மகுடங் கங்கை அன்றே.
அங்கம் முழுதும் மகிழ்வும் துடிப்பும்
பொங்க நீரதைத் துணிவுடன் போர்த்தி
தங்கச் சிலையென ஜொலிக்கும் இந்தச்
சிங்கங் கவசங் கொண்டது இன்றே!

15 செப்டம்பர் 2007

தேனைச் சொரிந்து மாபலா வாழையுடன்
பானை வயிற்றுக்குப் பாங்குடன் படைத்தோம்
ஆனை முகத்தானே அருள்தந்து காப்பாயே
ஊனை உருக்கியுன் பாதம் தொழுதோமே
ஓங்கார வடிவில் விளங்கும் ஔடதமே
ஐங்கரங் கொண்டே ஐந்தொழில் புரிவோனே
கைங்கரியஞ் செய்வகை சிறிதும றியாப்பிழை
தாங்கும் படியுன் பாதம் பணிந்தோமே
தம்பிக்கை காட்டிப் பழனி நிற்கச்செய்
தும்பிக்கை யானுந்த னாடல் கண்டோமே
நம்பிக்கைத் துணை கொண்டு அழகு
நம்பிக்கை அருள் வேண்டி நின்றோமே
செழுமை யழகினி லுயிர்கள் யாவையும்
இழுத்து அவர்தம் வினைவே ரறுத்திடு்
முழுமுதற் கடவுளுஞ் செந்தாமரைப் பாதந்
தொழு தேற்றினோம் கடைக்கண் பாருமைய்யா.

17 அக்டோபர் 2007

ஏனக்கா சொல்லேன்
கடலுவந்து பொங்கிப்போயி
சீமையெல்லாம் சேர்த்துக்
கொண்டுபோன மாயமென்ன?
நமக்கு - வேலவந்து வாய்ச்சதென்ன?
மடியில வச்சிருந்த
மீனை மனுசந்
தின்னகோபந் தெரிஞ்சதென்ன?
நமக்கு - வேல வந்து வாய்ச்சதென்ன?
பொறுமைக்குக் காட்சியா
பூமியத்தாஞ் சொல்றாங்கன்னு
போறாமை வந்ததென்ன?
நமக்கு - வேல வந்து வாய்ச்சதென்ன?
உப்பிட்ட என்னை
எள்ளளவும் நினைக்கலைன்னு
எரிச்சல் வந்ததென்ன?
நமக்கு - வேல வந்து வாய்ச்சதென்ன?
பதுக்கிவச்ச முத்தெல்லாம்
பறிபோன துக்கத்துல
பதறிப் போனதென்ன
நமக்கு - வேல வந்து வாய்ச்சதென்ன?
கல்லக்கூட தூக்கயேலாம
நாமநிக்கையில மொத்தமாவே
வீடுகூடப் போனதென்ன
நமக்கு - வேல வந்து வாய்ச்சதென்ன?
மடியில கஷ்டப்பட்டு
ஏழைங்க இருக்காங்கனு
பாசத்துல இழுத்ததென்ன
நமக்கு - வேல வந்து வாய்ச்சதென்ன?
ஏழைங்க வயித்திலடிச்சு
நாமளுஞ் சாப்பிட
நாமென்ன கடலாக்கா?
நமக்கு - இந்த வேல தேவையாக்கா?

20 டிசம்பர் 2007

நட்டு வச்ச கற்சிலை போல
சுட்டு வச்ச செங்கல் போல
எட்டு வைக்க முடியாம நிக்கிறேனே
பட்டுன்னு எம்பேரு நல்லாருக்கா?
நிழல்கூட என்மேனி தீண்ட மறுக்குது
சுழல்போல விதிவந்து சுத்தி வளைக்குது
தழல்வந்து செங்கல்லாச் சுட்டு வறுக்குது
இழக்கயெது இருக்குதுன்னு மனசு மருகுது
ஓடிப்போன அப்பனையும் மறக்க முடியாம
தேடித்தாங் காணலனு சோகப்பட்டா - எங்கம்மா
மூடிப்போயி நாலுதெச பாத்தும் விடியாம
நாடிநரம்பு ஓய்ஞ்சு போயிசேந்து புட்டா.
கசக்கிக் கட்ட வேற கந்தலுமில்ல
வசக்கும் வெயில் தவிர பந்தலுமில்ல
இசக்கி அம்மன் மட்டும் மனசுவச்சா
பிசக்கு எல்லாம் ஓடிப் போவுமாமே?
கங்காக மண்ணை வாட்டும் வெயிலால
செங்கல் லுங்காணப் போவுது மாடிவீடு
மங்காம முதலாளி் தான்வாழ்ந்து எனக்குத்
திங்கச் சோறுதெனந் தாராரு பொழைப்புக்கு.
மூளைமட்டும் இருந்து என்ன ஆகுமய்யா?
ஊளைபோக்க நாள் முழுசுந் தானலைஞ்சு
காளைமாடா வேலை பாத்து நோகுதய்யா
வேளை எனக்கும் வருமான்னு கூறுங்கய்யா.

21 டிசம்பர் 2007

கள்ளமில்லாச் சிரிப்பினிலே உவகை யூறும்
வெள்ளை கருப்பு வித்தியாசந் தூரவோடும்
உள்ளமெலாம் நட்புமணங் கமழ்ந்து வீசும்
வெள்ளமாக அன்பு மழைத் தாரையோடும்.
கல்லில் சிலை செஞ்சதாரோ அறியவில்லை
மல்லில் வென்ற வீரமெலாம் மறக்கவில்லை
நல்லமனஞ் செய்த கலையென்றும் வாழும்
பல்லவர்கள் புகழ்பாரில் சிறக்கும் நாளும்.
விருந்தோம்பல் தமிழர் எங்கள் குணமாகும்
இருந்தோம்பிப் பலநாளும் மகிழ்ந்து பாரும்
அருந்தருந்தத் தெவிட்டாதத் தமிழ்ப் பாவும்
மருந்தாகும் வாழ்வுக் கினியகலை யாவும்
வெயில்மறைச்சு நின்னுங் கூடவரக் காணும்
உயில்சொத்தக் கரைச்சுங் கூடத்தேறக் காணும்
மயில்மயங்குஞ் செவப்பு நிறஞ்சேரக் காணும்
குயில்செவப்பா இருப்பதெப்படி சொல்ல வேணும்!
அக்கம்பக்கங் குப்பையி்லாச் சாலை இல்ல
சக்கரமா ஓடுறாங்க எந்தவிதியும் இல்ல
விக்காமக் குடிக்கயிங்க தண்ணி் இல்ல
மக்களுங்க சகிப்புக்குமே எல்லை இல்ல
வரும்போது நெறயப் பணம் கொண்டுவந்தோம்
தரும்போது கண்ட அன்பைக் கொண்டுபோறோம்
கரும்பான பாரதத்தை நினைததால் போதும்
திருநாளாய் மனசு துள்ளும் வாழ்க்கையாவும்.
விக்காமல் - விலைக்கு விற்காமல், தொண்டை விக்காமல். :)

25 டிசம்பர் 2007

பரிணாமச் சிகரமதில்
புரியாமல் நிற்பவனே
விரிந்த இவ்வுலகில்
உரித்தெனது வாரிசே.
அவதாரமாய்க் கும்பிடுவாய்
அவமானமுஞ் செய்திடுவாய்
நவயுகமாய்த் திரிந்திடுவாய்
சவமாயுஞ் சென்றிடுவாய்.
முதியோர் இல்லத்திலே முடியாமல் இருப்பவனே
கதியேதும் இல்லாமல் கவலையில் கிடப்பவனே
நிதியேதும் இல்லாமல் நிம்மதியைத் தொலைத்தவனே
மதிகொண்டு நீகாணும் வழியொன்று சொல்லிடுவேன்.
கொண்டுவந்த தொன்னுமில்லை நீயும் எண்ணிப்பாரு
கொண்டுபோக ஒன்னுமில்லை கொஞ்சம் புரிஞ்சுதேரு
கண்டுங் காணாமநீயும் போய்விடாம சொந்தமுன்னு
கண்டுஎந்தன் அருகேவந் தன்பாயமர்ந்து பாரு.
மண்ணில் வந்த உயிரெல்லாம்
பண்பாய்த் தந்த மூத்தோரென்று
கண்ணாய் எல்லாம் பார்த்திருந்தா
புண்ணாய்ச் சோகம் வந்திருக்குமா?
தட்டி மனதைத் தேற்றிக் கொள்;
சட்டிச் சோறுதான் கரண்டி வரும்.
எட்டி உதைப்பதால் ஏணிக்கு வலியில்லை;
முட்டி மோதினால் யாருக்கும் பயனில்லை
என் சோகம்
உன் சோகம்
முன் சோகம்
பின் சோகம்
விளைந்திடக் காரணம் அன்பின்மை
களைந்திடக் கூடலா மினியுமதை
களைத்திடா தன்பெங்கு மூன்றிட
முளைத்திடு மதிலேய கிம்சைவிதை

30 டிசம்பர் 2007

நெஞ்சில் கிஞ்சளவு நஞ்சுயிலாப் பஞ்சு
மஞ்சொடு கொஞ்சிட வஞ்சமிலாப் பிஞ்சு
கொஞ்சம் கஞ்சியொடு் பஞ்சமிலாது மிஞ்சு
கெஞ்சாது துஞ்சாது அஞ்சுகமே விஞ்சு
கல்வியின் கரையைக் கண்டவர் அரிது
கல்லாய்க் கிடக்கும் பாதையிலும் பெரிது
கல்லாது பலருங் குப்பையைச் சேர்த்தார்
கல்லாய் அல்லது நீக்கிச்சிலையுங் காணார்!
சேர்ப்பதில்லை எதையும் கல்வியென அறி
வேர்வந்து தனைவெளிக் காட்டுமா தெளி
வேர்த்திடக் கல்வியால் மனநிலம் உழு
ஆர்த்திடும் ஞானமதை உள்ளே விதை!
தூங்காது தினம்பள்ளி சென்றிடும் வித்து
ஏங்கிடும் பெற்றோர் உவந்திடும் முத்து
ஓங்கிடும் நாட்டின் அளப்பரிய சொத்து
தாங்கும் உலகைத் தாங்கவருஞ் சித்து!

6 ஜனவரி 2008

சுதிகொண்டு அழுதிடும் தன்மழலை வாய்க்கு
உதிரத்தைப் பாலாக்கித் தந்தனள் அன்னை;
மதிநிறைந்து கண்காணாச் சொந்தம் நொந்த
கதியினைத் தூளாக்கப் படுத்தனர் இளைஞர்.
அகமதில் கிறித்து கொள்பவர் ரத்தமும்
முகமது மகிழும் முகம்மது செந்நீரும்
யுகமது தொடரும் சனாதன உதிரமும்
உகந்திடப் பிரிவில் அடங்காது இணையும்
இறைக்க ஊறும் கிணற்று நந்நீரும்
தேக்கச் சிறக்கு மணைநீர் வெள்ளமும்
படிக்கத் தேறும் கற்போர் நல்லறிவும்
கொடுக்க ஊறும் புத்தம்புது ரத்தமும்
சுயநலம் பலகொண்டு் நாட்டைச் சுரண்டிடும்
கயவர் தெறித்தோடப் பொதுநலப் புறாவாய்ப்
பயந்தரு யுத்தமின்றி ரத்தஞ் சிந்திடுமும்
புயத்தினி லமரவே நானிலம் ஏங்கிடும்!
சாவியாய் அன்பையும் அறிவையும் கொள்வோம்
காவியம் படைப்போம் கொடுத்தே சிறப்போம்
ஆவிகொண் டுடலிருப்பின் ரத்தமுந் தருவோம்
தாவியுயிர் செல்கையில் கண்களுந் தருவோம்

7 ஜனவரி 2008

சிறுமை மடமை இளமை வெறுமை
வறுமை முதுமை தனிமை கொடுமை
மறுமை புதுமை அருமை வளமை
பொறுமை பெருமை எளிமை இனிமை

சிறுமையும் மடமையும் கொண்டு வெறுமையாய் இருக்கும் இளமை; அதனால் தாய்க்கு நேர்ந்தது வறுமையுடன் முதுமையும், தனிமையாம் கொடுமையும். அதையே மறுபுறத்தில் புதுமையான அருமையான வளமையாய் ஆக்கியது, தாயின் பெருமை கொள்ளும் பொறுமை. அதனால் நேர்ந்தது இனிமையான எளிமை!

பயில்கலை மகளவள் புடைவை யுடுத்தி
ஒயிலாய்க் கரத்தைத் தலையணை யாக்கி
வெயிலில் கருத்தும் உள்ளம் வெளுத்தும்
துயிலது சாய்ந்ததும் நொடியில் கொள்தாயே!
நியாயமாய் வாழ்க்கையில் நடந்து தொலைந்தாயோ?
வியாபாரப் பிள்ளைக்குத் தந்தெலாங் கெட்டாயோ?
தியாகத்தின் எல்லையைத் தொட்டு விட்டாயோ?
மயானத்தின் எல்லையைத் தொட மறந்தாயோ?
மனத்தினி லுறுதியும் நெஞ்சினி லீரமும்
சினத்தினைச் சுட்டிடுங் குறைவிலா அன்பும்
இனத்தினைக் காத்திடு் முடிவிலா அருளும்
தனமெனத் தந்திடுந் தெய்வங் கண்டேன்.
இழக்கவும் இனியேது மிலாத அன்னையே
முழக்கமாய் செய்கையால் பாருக் குரைப்பது
பழக்கமாய் உழைக்கு மெளிமை வாழ்க்கையில்
புழக்கடைத் தரையும் மெத்தைச் சுகமெனவே!

21 ஜனவரி 2008

தங்கப் பேரனிடம் நினைவெலாம் கூட்டி
பொங்குஞ் சிரிப்பினில் திருப்தியைக் காட்டி
அங்கத்திற் குறைவிலா காதினைத் தீட்டி
எங்குஞ் செல்லாது லகஞ்சுற்றும் பாட்டி
விளக்கில்லா இரவின் பழங்கதை பேசும்
அளப்பில்லா அனுபவ முத்துக்கள் வீ்சும்
களத்தினில் உழைத்த மூதரசியை நேசி
வளம்பலக் கண்டிடப் பெற்றிடு ஆசி
அன்பைத் தோலாய் போர்த்திய உடலும்
என்பைக் காட்டிடும் வயதின் முதிர்வும்
சின்னமாய் எளிமை புனைந்து சொல்லுமே
இன்பமா யியைந்து வாழ்தல் நெறியென.
முப்பது வருசமாக் காணாத மாற்றமெல்லாம்
முப்பதே நாளில் கண்டுவிட்ட மாயமென்ன?
நாப்பது வருசமாச் சேர்க்காத சொத்தெல்லாம்
நாப்பதே நிமிசத்தில் வந்துசேர்ந்த மாயமென்ன?
சீவன் மரிச்சுப் போகும் பாதையெதுவோ?
தேவன் சொர்க்கமோ பாழும் நரகமோ?
செல்பேசி கொண்டுபோக வழியுண்டோ கூறு?
சொல்பேசி மகிழவும் முடியுமா கூறு?

பக்கத்து நாடென்று பாதுகாப்பாய் நினைத்தால்
கக்கத்தில் சுருட்டிய பகைகொண்ட சீனமே
திக்கெட்டுக் கண்டமெலாம் ஆடவே வருகையில்
திக்கற்றுப் போன திபெத்தியரைப் பாருமைய்யா!
பரந்திடும் விரிந்திடும் நிலத்தில் பெரியோரே
சுரந்திடும் நிறைந்திடும் வளத்தில் பெரியோரே
இரங்கிடும் கலங்கிடும் மனத்தில் சிறியோரே!
அரங்கத்தில் சுதந்திரமாய் நாங்களும் வரலாமோ?
புத்தனவன் களையச் சொன்ன ஆசையை
எத்தனாகக் கட்டிக் கொண்டு அழுதீரே
உத்தமராய்ப் பாருக்குக் காட்டிக் கொண்டு
சித்தத்தில் அடக்குமுறை நஞ்சைக் கொண்டீரே!
தளைகொண்டு எங்களை அடைத்து விட்டு
முளைகொள் விதையெம்மை நசுக்கி விட்டு
களையாய் வன்முறையில் சூழ்ந்து விட்டு
விளையாட்டில் எப்படிச் செல்லுதோ மனம்?
களையான சிற்றுளியும் தகர்த்துவிடும் பெருமலையை
வளையாத மரமெல்லாம் ஒடிந்துவிடும் வெள்ளமதில்
விளையாட்டாய் எங்கள் வாழ்க்கையைப் பார்க்கின்றீர்
விளையாட்டும் எங்கள் வாழ்க்கையாய்ப் பார்க்கின்றோம்
கலகமாய் இதையாரும் எண்ண வேண்டாம்
கலக்கமின்றி வாழ்ந்திடவே நயந்து வேண்டுவோம்
உலகமே ஒலிம்பிக்கில் விளையாட வருகையில்
திலகமாய் திபெத்தும் விளையாட வரவேண்டும்!

24 ஜனவரி 2008

டாடா பிர்லா மட்டுமின்றி
டாடா நாமும் காட்டவே
டாடா காரு வருகுது!
டாடா நேனோ வருகுது!
ஏசி கூட இருக்குதாம்
தூசி வர முடியாதாம்
காசி போய் வரவுமே
ராசி வண்டி இதுவாமே!
மச்சக் காரர் நமக்கெல்லாம்; ஒரேயொரு
லச்சத் துக்கே கிடைக்குதாம்; அள்ளும்
இச்சை கொண்டு மயங்கியே; அடகு
வச்சுங்கூட வாங்கவே உள்ளமது ஏங்குதாம்
நேனோ வந்து சேர்ந்ததும்
தேனாப் பாயுது நெஞ்சுக்குளே!
கானா பாடுது இளசெல்லாம்
மானா ஆடுது பழசெல்லாம்!
சாலையிலே குண்டுகுழிதான் சரிக் கட்டலாம்
காலையிலே பெட்ரோலுக்கோ கடன் வாங்கலாம்
மாலையிலே குளிர்காய கோடிப்பேர்க் கிங்கே
ஓலையிலே குடிசையில்லை என்ன பண்ணலாம்?

4 பிப்ரவரி 2008

இலவம் பஞ்சாய்
இலவசப் பிஞ்சுகள்.
கள்ள நிறத்தில்
வெள்ளை உள்ளங்கள்.
விசால மனமே
விலாச முகங்கள்.
தொற்றிடும் அன்பால்
ஒற்றிடும் இத(ய)ங்கள்.
கந்தலை ஒதுக்கா
சொந்த பந்தங்கள்.
தேடிவந்து கேட்கும்
மூடிய காதுகள்.
நேர்வந்து பிறண்டா
கூர்மை நகங்கள்.
மோதிப் பார்க்கா
சாதி பேதங்கள்.
நினைத்தது கிடைத்ததும்
பிரியா உறவுகள்.
தாலாட்டும் குழந்தையாய்
வாலாட்டும் நன்றிகள்.

20 பிப்ரவரி 2008

நிறமில் நீரில் கதிரவக் காதலால்
திறமாய்க் கருக்கொள் வெள்ளை மேகம்
அறத்தைக் காக்க நயந்து யரக்கூடி
நிறங்கருத் துத்தந்த வெள்ளைப் பரிசே!
அண்மை களிக்க வந்திடும் மாந்தர்க்கு
மண்மெய் சேரும் உயிராய்க் கலந்து
கண்ணுயிர் மெய்யாய் உலகம் சுழல
தண்மை தெளித்த ழைத்திடும் மாண்பே!
மலைமகள் வகிடெனப் பிரித்த முகமாய்
நிலையிலாது தத்தித் தாவி யன்பொடு
அலையாய்ச் சாலப் பரிந்து தாயாய்க்
கலைவளர் நதியாய் விளைந்திடு பொருளே!
கோடித் துளிகள் சேர்ந்திங்கே மகிழ்ந்தெங்கு
மோடிடும் பாதையில் பாதியின்றிப் போயினும்
வாடிடாது வீழ்கையி லருவியாய் வீழென
நாடிவந்த யாவர்க்கு மோதிடும் களஞ்சியமே!
ஈரக் காற்றில் வானவில் வளைத்து
சாரல் வானோக்கி அம்பாய்க் கிளம்ப
ஆரத் தழுவிடும் சிலிர்ப்பில் மயங்கிச்
சோரம் போனது எந்தன் மனமே!

1 மார்ச் 2008

காலந் தவறா தனுதின மதிகாலை
ஞாலம் உய்யக் குளித்து வண்ணக்
கோலம் வானில் போட்டு ஒளியின்
மூலம் உயிர் வழங்கும் மூலமே!
சிறகின்றி பறந்து அழகாய் வானில்
விறகின்றி எரியும் தழலாய் மதியமும்
இறகின்றி தடவும் வருடலாய் மாலையும்
உறவாய்த் தழுவும் மண்ணின் இறையே!
காலையில் பிறந்து மாலையில் இறந்து
ஒருநாள் வாழ்வே திருநாள் வாழ்வாய்
தினமும் வாழ்க்கை புதிதெனத் துவங்கும்
கதிரவன் பிறப்பும் இறப்பும் சிறப்பே!
முனிவர் போல் துறவு பூண்டு
புனிதம் காத்து அக்கினிப் பிழம்பாய்
இனிமை வாழ்வில் உண்டெனத் தினமும்
தனிமையில் தேடும் அசட்டுச் சூரியனே!
இணையாய் வாழ்வின் அர்த்தமாய் இணைந்தோம்
இணையாய் உனக்கும் யாருண்டு வானில்?
துணையாம் நிலவைப் பகலில் தேடாது
அணைக்கும் இருளில் வந்து தேடேன்!

15 மார்ச் 2008

ஆசனத்தில் என்ன யோசனையோ?
ஊர்சனத்தின் மேலே கோவந்தானோ?
வளைத்து நலம் வளர்த்தவனே
களைத்து முகம் காண்பதேனோ?
தன்னெஞ்சில் தான் மிதித்தாய்
உள்நெஞ்சில் ஆர் மிதித்தார்?
கன்னத்தில் மனம் வைக்கவில்லை
கன்னத்தில் கையேன் வைத்தாய்?
சிவப்பு நிறம் அணிந்தபின்னும்
உவப்பு எங்கே காணவில்லை?
சிறுவயதில் நட்டுவைத்த சோகவேர்
உறுமுகத்தில் இன்றும் துளிர்விடுதோ?
மரமேறி உடல் இறுகியதால்
உரமேறி மனம் இறுகியதோ?
இச்சை மனந்தனில் ஓடுமெண்ணம்
பிச்சை புகாதுகற்கை பெறவோ?
வானமது சிந்திடுமே கண்ணீரும்
வானவில்லி னோர்நிமிட வாழ்வுக்கும்
கானமயிலுன் மேன்மை வாழ்வுக்கும்
ஞானக்கண்ணீர் சிந்தயிங்கு மாந்தருண்டு
கலங்காதே தம்பி - கல்வியால்
விலங்கறு நம்பி - உழைப்பின்
நலங்களை நம்பி - வாழ்வில்
துலங்கிடு எம்பி.
சோகத்தை விழுங்கிடு
விதையாய் ஆக்கிடு
உன்சக்தி அறிந்திடு
வாழ்வை வென்றிடு.

23 மே 2008

கலைபலவுங் கொண்டு செய்த வீணையுண்டு
தலையிலே முறுக்கி விட்ட தந்தியுண்டு
விலையிலாப் பயிற்சி கண்டு விரல்கொண்டு
அலையென மீட்டுமிசை முன்பு எங்குண்டு?
மீட்டு முன்பு இசை யெங்குமில்லை!
மீட்டிய பின்பு இசை யெங்குமில்லை!
வாட்டும் வாழ்வும் அதுபோல இருக்கும்
நாட்டம் இல்லா ஆனந்தமே நிறைவென
ஓதாது உணர்ந்த அரும்பெரும் மெய்யே
போதாது, மானிடர் ஆசைகள் போகாது!
ஆதாயந் தேடியே மாந்தர்கள் உம்மையே
ஆதாரமாய் வைத்துச் சூதாடு கின்றாரே!
புத்தம் சரணம் கச்சாமி என்றோரே
யுத்தம் சரணம் கச்சாமி என்றாரே
புத்தம் புதுபூமி படைத்திடும் உமதாசை
நித்தம் மடமாந்தரா லாயிற்றே நிராசை!
நீர்கொண்ட ஆசையே அழிவுக்குங் காரணமோ?
சீர்கொண்ட பூமியென ஆகவுங் கூடுமோ?
பார்கொண்ட கோலமதில் மனங் கலங்கி
நேர்கொண்ட மேனியதும் தகிக்கக் கண்டேன்.

2 ஜூன் 2008

மலையெல்லாம்...
சிலைசெஞ்சான்
சிதைஞ்சிருச்சு...
புதைஞ்சிடல
கோவிலிலும் ...
கூவிடலாம்
நெருஞ்சிதான்...
நெருடலாகுது
வசதிதான்...
அசதியில்லை
சந்தோசமாய்ப்...
பந்தாடலாம்
கிரிக்கெட்டு...
வரிஞ்சுகட்டு
கட்டையே...
மட்டையாச்சு
விடுமுறைநம்போல்...
சடுதியிலோடுது
காணாதசாமி...
மூணாம்நடுவர்
எல்லாஞ்சரிதான்...
நல்லபசங்கநாங்க
அடிச்சாடினாலும்...
நடிகரேலமெடுப்பாரோ?

15 ஜூன் 2008

ஒளியைக் கண்டதால் இருளை யுணர்ந்தோரே
ஒளிந்திடும் இருளில் ஒளிந்து நடந்தீரே!
ஒளிர்ந்திடும் உள்ளொளி கொண்டு நாங்கள்
வெளியைக் கண்டதால் இருளு ணர்விலையே!
வண்ணக் கலவை கண்டு மகிழ்ந்தீரே
கண்ணது கண்ணீர் வழிய மட்டுமென
புண்ணாய் ஆயினும் நாற்புலக் கண்ணொடு
எண்ணச் சிலையைக் கொண்டு அறிந்தோமே!
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகுமென
விண்ணும் முழங்க படைத்தோர் சான்றோர்
மண்ணில் அவையே கண்ணெனக் கொண்டு
திண்ணம் கொண்டோம் வாழ்வு சிறந்தோம்
கன்னல் பார்வைக் கதவைப் பூட்டியே
பின்னல் யாவும் செய்தீர் ஏனோ?
மின்னல் போலே இயற்கை எமக்கு
சன்னல் பூட்டிக் கதவைத் திறந்ததே!
கோழை அழுகை வாழ்வில் அவமானம்
ஏழை சிரிப்பு இறையின் அவதாரம்
ஊழை நறுக்கிட மதியெனும் அச்சாரம்
பேழை வாழ்வென மதிக்கச் சன்மானம்
பட்டாம் பூச்சியைப் பார்த்திட ஓராசை
வட்டமுக மாடியில் கண்டிட ஓராசை
அட்டதிக் கழகை அடக்கிட ஓராசை
எட்டாத வான்நீலம் பருகிட ஓராசை
கள்ளமிலாச் சிரிப்பில் மனமது மகிழ்ந்தால்
பள்ளமிலா தெமக்கு வாழ்வுதர நினைத்தால்
அள்ளிக் கொடுக்கும் உயர்வான குணமிருந்தால்
உள்ளமெலாம் உருகிடவே நயந்து கேட்டோம்
ஈனம் கொண்டே பாடையில் போகையில்
ஊனம் நீக்கும் மாகொடைப் பார்வைத்
தானம் தந்தாலே மாளாது வாழ்வீர்!
ஞானம் கொண்டே அதையுணர்ந்து பாரீர்!