யாத்திரை அனுபவங்கள்~16 நிமிட வாசிப்பு19 ஆண்டுகளுக்கு முன் எழுதியது

திடீர்க் குறவஞ்சி

முத்தமிழ் மன்றத்தில் எழுதியது · 24 ஜனவரி 2007 – 16 ஏப்ரல் 2007

சென்ற வாரம் சனிக்கிழமை (20-01-2007). வீட்டில் வெகுநாட்களாகத் தொடர்ந்த முணுமுணுப்பு அன்று வெடித்தே விட்டது! எப்போது பார்த்தாலும் நண்பர்கள், கோவில்கள், யாத்திரைகள் என்று சுற்றிச் சுற்றி வீட்டில் ஆள் இருப்பதையே மறந்து விடுகின்றீர்கள் என்று! எங்களையெல்லாம் பார்த்தால் ஆளாய்த் தெரியவில்லையா? இல்லை எங்களைக் கூப்பிட்டால் வரமாட்டோமா என்று அங்கலாய்ப்பு வேறு. போதாக்குறைக்கு நான் எப்போதும் சமாளிக்கும் குழந்தைக்குப் பள்ளி இருக்குமே என்பது அன்று எடுபடவில்லை. காரணம் அன்று பள்ளிக்கு விடுமுறை! எங்கு சொல்வோம் என்று நினைக்கையில் ஒருநாள் சுற்றுலா என்றால் எங்கள் நினைவுக்குத் தப்பாமல் வரும் குற்றாலம் செல்வோம் என்று முடிவெடுத்தோம். முடிவெடுத்த அரைமணிநேரத்தில் கிளம்பியும் விட்டோம். படங்கள், சுவாரசியமான அனுபவங்கள், புதிய கோவில்கள் என்று நான் கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி! இதோ உங்கள் முன் திடீர்க் குறவஞ்சி.

3 பிப்ரவரி 2007

காலை ஏழு மணி போல் வீட்டில் இருந்து கிளம்பினோம் எங்கள் மகிழ்வுந்தில். வழக்கம் போல் ஓட்டுநர் இருக்கையில் நான்! காலை உணவை எப்போது குற்றாலம் சென்றாலும் வழக்கமாக உணவருந்தும் ராஜபாளையம் ஆனந்தா உணவகத்தில் முடித்துக் கொண்டோம். காலை 9.30 மணியளவில் குற்றாலம் சென்றடைந்தோம். முதலில் சென்ற அருவி பேரருவி (மெயின் பால்ஸ்) தான். அங்கே நீர் குறைவாக விழுந்ததாலும், கூட்டம் அதிகமாக இருந்ததாலும் ஐந்தருவி செல்வதென்று முடிவு செய்து, நேராக ஐந்தருவிக்குச் சென்றோம். குற்றாலத்திலிருந்து ஐந்தருவி மேற்கே 4 கி.மீ. செல்ல வேண்டும். ஐந்து பிரிவாக நீர் விழுவதால் ஐந்தருவி என்றழைக்கப்படுகின்றது. நாங்கள் சென்ற அன்று மூன்று அருவிகளில் மட்டுமே நீர் விழுந்தது. கூட்டம் மிகக் குறைவாக இருந்தது. அதிக பட்சம் 10 பேர் இருந்திருப்பார்கள். எனவே கொஞ்சமும் தாமதமின்றி நீரில் ஆட்டம் போடத் துவங்கினோம். மூத்த மகள் வித்யா மிகவும் ரசித்துக் குளித்தாள். இளையவளுக்கோ பயம்! எனவே அழ ஆரம்பித்து விட்டாள். அவளுக்கு இது தான் முதல் முறை அருவியில் குளிப்பது. ஒன்றரை வயது தானே? இருந்தாலும் விடவில்லை.

குற்றாலம் என்றாலே நம் நினைவுக்கு வரும் மற்றொரு விஷயம் மந்திகள் தானே! அதிகமாக ஆடும் குழந்தைகளை குற்றாலத்துக் குரங்கு என்று சொல்வதும் வழக்கம் தான்.

திரிகூடராசப்பர் சொல்வது போல்,
(1) வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
(2) கானவர்கள் விழியெறிந்து வானவரை யழைப்பார்
கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்.
(3) தேனருவித் திரையெழும்பி வானின்வழி யொழுகும்
செங்கதிரோன் பரிக்காலுந் தேர்க்காலும் வழுகும்.
(4) கூனலிளம் பிறைமுடித்த வேணியலங் காரர்
குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே.
(5) முழங்குதிரைப் புனலருவி கழங்கெனமுத் தாடும்
முற்றமெங்கும் பரந்துபெண்கள் சிற்றிலைக்கொண் டோடும்.
(6) கிழங்குகிள்ளித் தேனெடுத்து வளம்பாடி நடப்போம்
கிம்புரியின் கொம்பொடித்து வெம்புதினை இடிப்போம்
(7) செழுங்குரங்கு தேமாவின் பழங்களைப்பந் தடிக்கும்
தேனலர்சண் பகவாசம் வானுலகில் வெடிக்கும்
(8) வழங்குகொடை மகராசர் குறும்பலவி லீசர்
வளம்பெருகுந் திரிகூட மலையெங்கள் மலையே
(9) ஆடுமர வீனுமணி கோடிவெயி லெறிக்கும்
அம்புலியைக் கவளமென்று தும்பிவழி மறிக்கும்
(10) வேடுவர்கள் தினைவிதைக்கச் சாடுபுனந் தோறும்
விந்தையகில் குங்குமமுஞ் சந்தனமும் நாறும்
(11) காடுதொறும் ஓடிவரை யாடுகுதி பாயுங்
காகமணு காமலையில் மேகநிரை சாயும்
(12) நீடுபல வீசர்கயி லாசகிரி வாசர்
நிலைதங்குந் திரிகூட மலையெங்கள் மலையே
(13) கயிலையெனும் வடமலைக்குத் தெற்குமலை யம்மே
கனகமகா மேருவென நிற்குமலை யம்மே
(14) சயிலமலை தென்மலைக்கு வடக்குமலை யம்மே
சகலமலை யுந்தனக்கு ளடக்குமலை யம்மே
(15) வயிரமுடன் மாணிக்கம் விளையுமலை யம்மே
வானிரவி முழைகள்தொறு நுழையுமலை யம்மே
(16) துயிலுமவர் விழிப்பாகி யகிலமெங்கும் தேடுந்
துங்கர் திரிகூடமலை யெங்கள் மலை யம்மே
(17) கொல்லிமலை யெனக்கிளைய செல்லிமலை யம்மே
கொழுநனுக்குக் காணிமலை பழனிமலை யம்மே
(18) எல்லுலவும் விந்தைமலை யெந்தைமலை யம்மே
இமயமலை யென்னுடைய தமயன்மலை யம்மே
(19) சொல்லரிய சாமிமலை மாமிமலை யம்மே
தோழிமலை நாஞ்சிநாட்டு வேள்விமலை யம்மே
(20) செல்லினங்கள் முழவுகொட்ட மயிலினங்க ளாடும்
திரிகூட மலையெங்கள் செல்வமலை யம்மே
(21) ஒருகுலத்திற் பெண்கள்கொடோம் ஒருகுலத்திற் கொள்ளோம்
உறவுபிடித் தாலுவிடோங் குறவர்குலம் நாங்கள்
(22) வெருவிவருந் தினைப்புனத்திற் பெருமிருகம் விலக்கி
வேங்கையாய் வெயில்மறைத்த பாங்குதனைக் குறித்தே
(23) அருளிலஞ்சி வேலர்தமக் கொருபெண்ணைக் கொடுத்தோம்
ஆதினத்து மலைகளெல்லாஞ் சீதனமாக் கொடுத்தோம்
(24) பரிதிமதி சூழ்மலையைத் துருவனுக்குக் கொடுத்தோம்
பரமர்திரி கூடமலை பழையமலை யம்மே
என்னவொரு அழகிய நயம் இந்தப் பாடலில்! மெய்சிலிர்க்கின்றது!

இதோ ஐந்தருவியில் நாங்கள் தான் புத்திசாலி என்று சூளுரைக்கும் குரங்குக் குடும்பமும், ஒரு அழகிய மலை விளை பழக் கடையும்!

3 படங்கள் கிடைக்கவில்லை

4 பிப்ரவரி 2007

ஐந்தருவியில் குளித்து முடிக்கும் போது மணி 11 ஆகியிருந்தது. என் மனைவி சரி திரும்புவோம் என்றார்! என்ன? ஒரு அருவியில் தான் குளித்திருக்கின்றோம்? அவ்வளவு தானா? இதற்கா 120 கி.மீ. தாண்டி வந்தோம் என்று கேட்டேன். 12 மணிக்குள் கடையநல்லூரில் இருக்கும் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று வருவோமே என்றதும் எனக்கு ஞாபகம் வந்தவர் கனியன். ஒரு மாதத்திற்கு முன் தான் கனியனின் திருமணத்தில் கலந்து கொண்டோம் நானும் சுதாகரும். அப்போதும் இப்படித் தான் ஒரு அருவியில் வந்து குளித்து விட்டு கடையநல்லூர் சென்றோம். இப்போதும் அது போலவே அமைந்தது! நானும் இதுவரை அந்தக் கோவிலுக்குச் சென்றதில்லை. ஆதலால் ஆர்வத்துடன் மீண்டும் வந்த பாதையிலேயே 20 கி.மீ. திரும்பி வந்தோம் கடையநல்லூருக்கு. ஆஹா! அந்தக் கோவிலின் அழகை வர்ணிக்க வார்த்தையே இல்லை! நின்ற சீர் அழகுடன் அனுமந்தன், ஆஞ்சநேயன் கூப்பிய கரங்களுடன், ராம பக்தராய் காட்சியளிக்கும் அழகைக் காண கோடிக் கண்கள் வேண்டும். அங்கு மிகவும் பிரபலமானது வெற்றிலை மாலை! அன்று சனிக்கிழமை என்றதால் மிகவும் விசேசத்துடன் நிறைய பக்தர்கள் சூழ ஆனந்தமாய் தரிசித்தோம் சுந்தர புருசனை. கோவில் இருக்கும் இடமே ஒரு அழகு தான். எங்கும் இல்லா வித்தியாசமாக கோவில் வயலுக்கு நடுவே இருக்கின்றது. தெப்பக் குளம் கூட இருக்கின்றது. பச்சைப் பசேலென்ற வயலுக்கு நடுவே, கண்ணுக்கும் மண்ணுக்கும், மனதுக்கும் குளிர்ச்சியூட்டிக் கொண்டு மிக அழகாக அமைந்திருக்கின்றது கோவில். அனைவரும் தரிசிக்கவேண்டிய ஒரு தலம். வயல் வெளியினூடே சிமிண்ட் பாதை போட்டு கோவிலுக்குச் செல்லும் வழி அமைத்திருக்கின்றார்கள். முடிந்த வரை அதன் அழகை இதோ உங்களுக்குக் காட்டுகின்றேன். கண்டு ரசியுங்கள். இது வயல்:

படம் கிடைக்கவில்லை

வயலுக்கு நடுவே அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவில்

படம் கிடைக்கவில்லை

கோவிலுக்குச் செல்லும் பாதை!

படம் கிடைக்கவில்லை

கோவிலின் நடுவே (வயலுக்கு நடுவேயும்) தெப்பக் குளம்!

படம் கிடைக்கவில்லை

இதோ இன்னொரு புறத்தில் வயல்!

படம் கிடைக்கவில்லை

கோவிலின் மற்றொரு படம்

படம் கிடைக்கவில்லை

மதியம் இரண்டு மணி வரை அங்கே காத்திருந்தோம். மாலை எல்லாம் வாங்கி வைத்திருந்தோம். ஆனால் சிரஞ்சீவியார் எங்களுக்குக் காட்சி தர மறுத்துவிட்டார். ஆம். சிறப்பு தரிசனத்திற்காக இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அலங்காரம் செய்து கொண்டிருந்தார்கள் ஆலயத்தில். சரி, இனியும் காக்க இயலாது என்று, மீண்டும் குற்றாலம் திரும்பினோம். இந்த முறை சென்றது பழைய குற்றாலத்திற்கு. பழைய குற்றாலம் நகரத்திலிருந்து 10 கி.மீ. தூரத்தில் இருப்பதால் பருவமில்லாக் காலங்களில் கூட்டமே இன்றி இருக்கும். அன்றும் அப்படித் தான் இருந்தது. நாங்கள் மட்டும் தான், குளிப்பதற்கு. ஆனந்தக் குளியல் குளித்தோம்! இரு மகள்களும் எதிரே இருந்த தொட்டியில் இறங்கி ஆட ஆரம்பித்து விட்டனர். ஒரு மணி நேரம் வரை அருவியில் குளித்தோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதோ பழைய குற்றாலம்.

படம் கிடைக்கவில்லை

மணி மூன்றரை ஆகியிருந்தது. காலையில் ராஜபாளையத்தில் சாப்பிட்டது! எனவே பசி வயிற்றைக் கிள்ளியது. பேரருவிக்குத் திரும்பினோம். அங்கே தான் உணவு விடுதிகளும் கடைகளும் இருக்கின்றன. அங்கே குறைந்த அளவு நீர் விழுந்தது. கூட்டமும் அதிகமாக இருந்தது. சரியென்று அங்கேயே ஒரு உணவு விடுதியில் சாப்பிட்டோம். பின்னர் குற்றாலத்தில் தற்போது பிரபலமாகி வரும் நேந்திரங்காய் சிப்ஸ் வாங்கிக் கொண்டோம்! மணி நான்கு ஆகியிருந்தது. அடுத்து எங்கே செல்வது என்று நினைக்கும் போது, பாலருவி செல்வோம் என்று கூறினேன்! பாலருவி - கேரளாவில் இருக்கின்றது. குற்றாலத்திலிருந்து 7 கி.மீ. தூரம் மேற்கில் இருக்கின்றது செங்கோட்டை. செங்கோட்டையிலிருந்து கொல்லம் செல்லும் வழியில் இருக்கின்றது பாலருவி. தமிழக அரசின் மெத்தனத்தையும், கேரளாவின் இயற்கையை பராமரிக்கும் பாங்கையும் இங்கு பார்த்தால் உணர்ந்து கொள்ளலாம். குற்றாலம் தற்போது டாஸ்மாக் போதையில் தள்ளாடுகின்றது! பாலருவி ஆனந்தமாக இருக்கின்றது. எனவே குற்றாலத்திலிருந்து சுமார் 40 கி.மீ. தூரத்தில் இருக்கும் பாலருவிக்குச் சென்றோம். பால்வியாபாரி யாராவது பாலருவிக்குச் சென்றால், அவ்வளவையும் விற்றால் என்ன காசு தேறும் என்று கணக்குப் பார்க்க ஆரம்பித்து விடுவார்! அத்தனை வெள்ளையாக அருவியிலிருந்து தண்ணீர் விழுவதால் பாலருவி என்றே அதற்குப் பெயர். அங்கும் கூட்டமே கிடையாது, நாங்கள் மட்டும் தான்! இதோ பாலருவி!

படம் கிடைக்கவில்லை

பாலருவி என்றதும் எங்கோ இருக்கின்றது என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். சபரிமலை செல்பவர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் ஆரியங்காவு தலம். ஆம், தர்மசாஸ்தாவின் முக்கிய தலங்களில் ஒன்று ஆரியங்காவு. அருள்தரும் ஐயப்பன் திருத்தலங்கள் மனித வாழ்க்கையை ஐந்து பருவங்களாக நம் சாஸ்திரங்கள் பிரித்துச் சொல்கின்றன. இந்த ஐந்து பருவங்களையும் விளக்கும் வகையில் ஐயப்பனின் அவதாரங்கள் இருந்திருக்கின்றன.

  1. பிறந்தது முதல் பதினெட்டு வயது வரை ‘பால்ய பருவம்’. இந்தப் பருவத்தை விளக்கும் அவதாரத் தலம் - குழத்துப்புழா.
  2. பத்தொன்பது முதல் முப்பத்தைந்து வயதுவரை உள்ளது ‘யெளவன (யவ்வனம்) பருவம்’. இதை விளக்கும் தலம் - ஆரியங்காவு.
  3. முப்பத்தாறு முதல் ஐம்பத்தைந்து வயது வரை ‘கிரஹஸ்த பருவம்’ - இதுதான் அச்சன்கோவில்.
  4. ஐம்பத்தாறு முதல் எண்பத்தைந்து வயது வரை ‘வானப்பிரஸ்தம்’ - சபரிமலை.
  5. எண்பத்தாறு வயது முதல் ‘ஏகாந்த’ நிலை _ காந்தமலை.
  6. இப்படி மனித வாழ்வோடு தொடர்புடைய நிலைகளில் ஸ்வாமி ஐயப்பன் எழுந்தருளினார். சிரஞ்சீவியான பரசுராமர், ஐயப்பனுக்காக நான்கு முக்கிய கோயில்களை உருவாக்கினார் என்று புராணங்கள் சொல்கின்றன. குழத்துப்புழா, ஆரியங்காவு, அச்சன் கோவில் மற்றும் சபரிமலை. இந்த நான்குமே கேரள மாநிலத்தில் அதுவும், ஒரே மலைத்தொடரில் அமைந்துள்ளது சிறப்பான ஒரு விஷயமாகும். பிரம்மச்சாரியான ஐயப்பனுக்கு திருக்கல்யாணம் நடக்கும் ஒரே திருத்தலம் ஆரியங்காவுதான். இதற்குக் காரணம் உண்டு. இந்தக் கோயிலில் ஐயப்பன் கிரஹஸ்தாஸ்ரமம் என்ற நிலையில் வீற்றிருக்கிறார். ஐயப்பன் மணம் புரிந்த புஷ்கலாதேவி, செளராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது. இதன்படி கர்ப்பக்கிரகத்தில் ஐயப்பன் மதகஜவாகன ரூபனாக அம்பாளுடன் காட்சிதருகிறார். மதம் பிடித்த யானையை அடக்கி அதன்மீது வேடன் ரூபத்தில் மாப்பிள்ளை மாதிரி காட்சி தருகிறார். அது சரி, கட்டைப் பிரம்மச்சாரியான ஐயப்பனுக்கு எப்போது திருமணம் நடந்தது என்ற கேள்வி எழுகிறதல்லவா? யோக நிலை மேற்கொண்ட மணிகண்ட அவதாரத்தில் அவருக்குத் திருமணம் நடக்கவில்லை.வேறொரு அவதாரத்தில் சாஸ்தாவுக்குத் திருமணம் நடந்ததாகப் புராணங்களில் குறிப்பு உள்ளது. செளராஷ்டிர சமூகத்தினரின் முக்கியத் தொழில் _ நெசவு! கேரளாவை ஆண்ட திருவிதாங்கூர் மன்னருக்குப் பட்டு ஆடைகளை அவர்கள்தான் தயாரித்து அளித்து வந்தனர். அந்தக் காலத்தில் பட்டு ஆடைகள் அணிவதே புனிதமானது என்று கருதப்பட்டு வந்தது. அத்தகைய சூழ்நிலையில் மதுரையைச் சேர்ந்த செளராஷ்டிர வணிகர் ஒருவர் திருவிதாங்கூர் மன்னருக்காகப் பட்டு ஆடைகளைத் தயாரித்து அதை அவரிடம் கொடுக்கப்பதற்காக திருவனந்தபுரம் சென்று கொண்டிருந் தார். உடன், தன் மகள் புஷ்கலாவையும் அழைத்துச் சென்றிருந்தார். அச்சன்கோயில் செல்லும் வழியில் ஆரியங்காவு வந்தபோது இருட்டி விட்டது. அதனால் அங்கே உள்ள கோயிலிலேயே தங்கிவிட்டனர். மறுநாள் புறப்படும்போது புஷ்கலாதன் தந்தையிடம், ‘அப்பா, நான் வரவில்லை. எனக்கு இங்கே உள்ள ஸ்வாமியைத் தரிசனம் செய்துகொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது. எனவே, நான் இங்கேயே இருக்கிறேன். நீங்கள் மன்னரைச் சந்தித்து உங்கள் வணிகத்தை முடித்துக்கொண்டு வரும்போது உங்களுடன் ஊருக்கு வருகிறேன்’ என்று சொன்னாள். வணிகருக்கோ பயம் கலந்த வியப்பு. எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மகள் கேட்பதாக இல்லை. எனவே, கோயிலின் மேல்சாந்தி (அர்ச்சகர்) யிடம் மகளை ஒப்படைத்துவிட்டு திருவனந்தபுரம் நோக்கிப் புறப் பட்டார். செல்லும் வழியில் அடர்ந்த காட்டில் ஒரு யானையிடம் அவர் மாட்டிக் கொண்டார். அப்போது ஐயப்பனிடம் மனமுருக வேண்டினார். சிறிது நேரத்தில் அங்கு வாலிப வேடன் ஒருவன் வந்து, அந்த யானையை சைகை மூலமே அடக்கி அனுப்பிவிட்டான். தன் உயிரைக் காத்த அந்த இளைஞனுக்குத் தன் கையில் இருந்த பட்டாடையைக் கொடுத்தார் வணிகர். ஆடையை அணிந்துகொண்ட இளைஞன், ‘பெரியவரே... இந்த ஆடையில் நான் எப்படி இருக்கிறேன், சொல்லுங்க!’ என்று கேட்க, பட்டாடையில் கம்பீரமாகச் ஜொலித்த அந்த இளைஞனைக் கண்டு வியந்த வணிகர், ‘மாப்பிள்ளை மாதிரி இருக்கிறாய். உனக்கு என்ன வேண்டுமோ கேள்’ என்று சொன்னார். ‘என்ன கேட்டாலும் தருவீர்களா?’ என்று இளைஞன் திரும்பவும் கேட்க, வணிகரோ, ‘என் உயிரை, எங்கள் குலத்தைக் காப்பாற்றிய உமக்கு எது கேட்டாலும் தருவேன்’ என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். சபரிமலை - அக்னி குண்டம் ‘உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும்!’ என்று அந்த இளைஞன் கேட்டான். ‘எனக்கு ஒரு மகள் இருப்பது இந்த இளைஞனுக்கு எப்படித் தெரியும்?’ என்ற வியப்பு வணிகருக்கு இருந்தாலும், ‘சரி, அப்படியே செய்கிறேன்’ என்று உறுதியளித்தார். ‘நாளை ஆரியங்காவு கோயிலில் என்னைச் சந்திக்கலாம்’ என்று சொல்லிவிட்டு அந்த இளைஞன் சென்றுவிட்டான். மறுநாள் கோயிலுக்கு வந்த வணிகர் அங்கு தன் மகளைச் சந்திக்க முயன்றபோது அவள் எங்கும் இல்லை. இரவு முழுக்கத் தேடியும் அவள் கிடைக்கவில்லை. இரவில்கோயில் நம்பூதிரியின் கனவில் வந்த ஐயப்பன், தன் மீது புஷ்கலா கொண்ட பக்தியின் காரண மாக அவளைத் தன்னோடு ஐக்கியப்படுத்திக் கொண்டதாகத் தெரிவித்தார். உடனடியாக நம்பூதிரி, வணிகரிடம் கனவு விஷயத்தைச் சொன்னார். மறுநாள் கோயில் நடைதிறந்தபோது, வணிகர் கொடுத்த அதே பட்டாடையுடன் ஐயப்பன் காட்சி கொடுக்க... அதைக் கண்டு அனைவரும் மெய்சிலிர்த்துப் போயினர். பின்னர் தன்னோடு ஐக்கியமான புஷ்கலாதேவிக்கு முக்தியும் கொடுத்தார் ஐயப்பன். தேங்காய் உருட்டுதல்... ஆண்டுதோறும் மார்கழி மாதம் 9ஆம் தேதியிலிருந்து 15ஆம் தேதிக்குள் இந்த வைபவத்தைத் திருக்கல்யாண உற்சவமாகக் கொண் டாடுகிறார்கள். கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும் இந்த வைபவம் நிஜ திருமணம் போல, எல்லா சம்பிரதாயங்களுடனும் நடந்து வருகிறது. இதன்படி மாப்பிள்ளை வீட்டார் சார்பாக திருவிதாங்கூர் தேவஸம் போர்டு (கேரள மாநில அறநிலையத்துறை) அழைப்பின்பேரில் மதுரையில் உள்ள ஆரியங்காவு தேவஸ்தான செளராஷ்டிரா மகாஜன சங்கத்தினர் (பெண்வீட்டார்) திருக்கல்யாண உற்சவத்துக்கு சீர்வரிசையுடன் புறப்பட்டு ஆரியங்காவு வந்துவிடுகிறார்கள். முதலில் நிச்சயதார்த்த வைபவம் நடக்கும். ஸ்வாமி சார்பாகப் பெண் கேட்டு தேவஸம் போர்டு அதிகாரிகள் மூன்று பணமுடிப்புகளுடன் வருவார்கள். அதேபோல் பெண் வீட்டாரான செளராஷ்டிர சமூகப் பிரமுகர்கள் பாண்டியன் முடிப்பு என்ற நிச்சயதார்த்த தட்டுடன் வருவர். இந்த நிச்சயதார்த்த வைபவம் அலங்கரிக்கப்பட்ட திருவிதாங்கூர் மன்னரின் திருவுருவப்படத்தின் முன் நடக்கும். மறுநாள் காலை ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் சுவாமி, அம்பாள் ஆகியோர் திருமணக் கோலத்தில் காட்சி தருவார்கள். அன்று மாலை ஸ்வாமி சப்பரத்தை, அம்பாள் சப்பரம் மூன்று முறை வலம் வரும். அவர்கள் எதிர் எதிரே நின்று மாலை மாற்றிக் கொள்வர். பின்னர் கோயிலில் உள்ள திருமண மண்டபத்தில் சாஸ்திர சம்பிரதாயங்களின்படி சடங்குகள் நடக்கும். இந்த வைபவங்களை தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவாச்சாரியர்கள் நடத்தி வைப்பதுண்டு. விருந்து வைபவமும் உண்டு. (நன்றி: சக்தி விகடன்) அத்தகைய சிறப்பு மிக்க ஆரியங்காவிலேயே அமைந்துள்ளது இந்தப் பாலருவி! இவ்வளவு தூரம் வந்து விட்டு ஆரியங்காவு ஐயனைத் தரிசிக்காமல் செல்ல முடியுமா? இந்நொடி வரை கண்ணுக்குள்ளேயே இருக்கின்றாரே! ஆரியங்காவு ஆலய முகப்பு:

படம் கிடைக்கவில்லை

கோவில் சுற்றுப் பிரகாரம்:

படம் கிடைக்கவில்லை

கோவிலின் ஒரு பகுதி:

படம் கிடைக்கவில்லை

ஆரியங்காவு ஐயப்பன்:

படம் கிடைக்கவில்லை

ஆலயத்தின் முன்பகுதி! (நன்றி: சக்தி விகடன் (http://www.vikatan.com/sakthi/2004/dec/26122004/sakthi0103.asp))

படம் கிடைக்கவில்லை

ஆரியங்காவிலில் ஐயனைத் தரிசித்து விட்டு மாலை 5.30 மணியளவில் வெளியேறினோம். மீண்டும் குற்றாலம் வந்து சேரும் போது 6 மணியாகியிருந்தது. இருள் கவியத் தொடங்கிற்று. ஆனாலும் திருவிலஞ்சிக் குமரன் அன்புடன் அழைத்ததால் அங்கே சென்றோம்! நெஞ்சம் நிறைந்த தரிசனம்! நீயும் நானுமாய் ஏக போகமாய் என்று அருணகிரியார் சொன்னதைப் போல உறவு கொண்டாடிப் பேசிக் கொண்டோம்! பள்ளி நாட்களில் குற்றாலம் வந்தால் குறைந்தது மூன்று நாட்களாவது குற்றலத்தில் தங்கியதையும் குளிக்க, கோவிலுக்குச் செல்ல, உணவருந்த மீதி நேரங்களில் சீட்டு விளையாட என்று மகிழ்ச்சிகரமாக பொழுதைப் போக்கியது அனைத்தும் நினைவுக்கு வந்து சென்றது. பேரருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, பழைய குற்றாலம், புதிய குற்றாலம், புலியருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, ராதா குண்டம், அம்பிகா குண்டம், தேனருவி என்று அருவி அருவியாகத் தேடிக் குளித்ததும் ஞாபகம் வந்தது. அது மட்டுமா நடைப் பயணமாகவே இலஞ்சி நாதரைத் தரிசிக்கச் செல்வதும் போகும் வழியில் கை முறுக்கைச் சுடச் சுடக் கைகளில் ஏந்தி ருசித்த படிச் சென்றதும் இன்னும் அழியா நினைவாகப் பதிந்து விட்டதே! இதோ திருவிலஞ்சிக் குமரன் கோவில்:

2 படங்கள் கிடைக்கவில்லை

இலஞ்சிக் குமரனைக் கும்பிட்டு வருவதற்கும் வெளியே இருட்டுவதற்கும் சரியாக இருந்தது. ஊருக்குத் திரும்பத் துவங்கினோம். வரும் வழியில் கடையநல்லூர் வருகையில் காரிலேயே ஆஞ்சநேயருக்கு என்று வாங்கிய மாலை இருந்தது. ஐயன் எங்களை மீண்டும் கோவிலுக்கு அழைத்தான்! இப்போது கூட்டமே இன்றி, ஆனந்த அலங்காரத்துடன் எங்கள் மாலைக்காகக் காத்திருந்தான் போலும்! கண்ணில் நீர் மல்க தரிசித்தோம். மாலையைச் சாத்தினோம். மீண்டும் ஊருக்குக் கிளம்பினோம்! வரும் வழியில் புளியங்குடி அருகில் சங்கரன்கோவில் 13 கி.மீ. என்னும் அறிவிப்பைப் பார்த்ததும் கார் தானாகவே அந்தப் பாதையில் திரும்பியது! ஆம், இரவு 8 மணிக்கு சங்கரன் கோவில் சென்று சங்கரரை, கோமதி அம்மையை, பெருமாளைக் கண்டு தரிசித்துப் புண்ணியம் தேடிக் கொண்டோம்! இரவு மணி 9 இருக்கும். மீண்டும் ராஜபாளையம் வந்து ஆனந்தாஸில் இரவு உணவருந்தி விட்டு 10.30 மணிக்கு மீளவும் இல்லம் வந்து சேர்ந்தோம். ஒரே நாளில் நிறைய சுற்றுலாத் தலங்களையும், கோவில்களையும் தரிசித்த நிம்மதி இந்தத் திடீர்க் குறவஞ்சியில் கிடைத்ததென்னவோ உண்மை! திட்டமிடாமல் செல்லும் யாத்திரையும் சிறப்பாகவே அமைந்தது இறைவன் சித்தம்.

16 ஏப்ரல் 2007

நேற்றும் குற்றாலம் என்னை நண்பர்களுடன் அழைத்தமையால் சென்று வந்தேன்! செல்பேசியில் எடுத்த படங்கள் உங்கள் பார்வைக்கு! சூரியன் மறையும் அந்திப் பொழுது

இதோ பழைய குற்றாலம் அருகே மிக மகிழ்ச்சியுடன் குதூகலிக்கும் குற்றால நிரந்தர வாசிகள்.

படம் கிடைக்கவில்லை

இது சூரியனும் வானமும் நிகழ்த்திய செல்ல வானவில் வண்ணக் கோலம்!

படம் கிடைக்கவில்லை

மேலும் வாசிக்க

யாத்திரை அனுபவங்கள்

யாத்திரை அனுபவங்கள்

காஞ்சி உலாவும், நினைவுகள் உலாவும்.

17-02-2008. ஞாயிற்றுக்கிழமை. சென்னை. எப்போதும் போலன்றி அதிகாலை 5.30 மணிக்கெல்லாம் விழித்து அலைபேசி எழுப்புவதற்குள் அதன் வாயை அடக்கினேன். எழுந்து 6 மணி…

யாத்திரை அனுபவங்கள்

பல்லேலக்கா பல்லேலக்கா சேலத்துக்கும் மதுரைக்கும்!

நேற்று ஞாயிற்றுக் கிழமை சேலத்தில் தமிழ் மென்பொருள் கண்காட்சியைப் பார்க்கும் ஆர்வத்திலும், நம் மன்ற உறுப்பினர் செல்வ முரளியைச் சந்திக்கும் ஆவலிலும், மன…