நீலச் சுடர் முகமும், முப்பெருந்தேவியரும்
முத்தமிழ் மன்றத்தில் எழுதியது · 13 பிப்ரவரி 2007 – 21 மார்ச் 2007
25-01-2007 வியாழனன்று சிவகாசியிலிருந்து புறப்பட்ட 7 பேர் கொண்ட குழுவில் (நால்வர் பட்டயக் கணக்காளர்கள், ஒரு குடும்பத்தலைவி, இரு கல்லூரிப் பேராசிரியர்கள் ஆகியோர்) வயது குறைந்தவன் நான் தான்!
திரு. செண்பகமூர்த்தி,
திருமதி ரேவதி செண்பகமூர்த்தி,
திரு. கிரிதர் (ஏற்கனவே அமர்நாத் யாத்திரைக்கு வந்தவர்),
திருமதி அனுராதா கிரிதர்,
திரு. மோகன் குமார் (திரு. கிரிதர் அவர்களின் மைத்துனர்)
திருமதி. ராஜேஸ்வரி மோகன்குமார் (திரு. கிரிதர் அவர்களின் சகோதரி) மற்றும் அடியேன். பொதிகை அதிவேக விரைவு வண்டியில் சென்னை பயணமானோம். மறுநாள் காலை அதாவது 26-01-2007 அன்று இந்தியக் குடியரசு தினத்தன்று தலைநகர் செல்வதற்கு Go Air விமானம் மூலம் சென்னையிலிருந்து பயணம் மேற்கொண்டோம். அவ்விமானம் ஹைதராபாத் வழியாய்ச் செல்வதால் 4 மணி நேரப் பயணம். தலைநகருக்குச் சென்று சேரும் போது மாலை மணி 2.30 ஆகியிருந்தது. தலைநகர் மொத்தமும் பாதுகாப்பில் இருந்தது என்றே சொல்லலாம்! ஆனால் எங்கள் ஊர்க்காரர் (திரு. கிரிதரின் நண்பர்) அங்கே காவல் துறை எஸ்.பி. ஆக இருந்ததால் அவரது வாகனத்தை எங்களுக்கு அனுப்பி உதவினார். அவரது ஓட்டுநரும் எங்களுக்கு மிகவும் பேருதவியாய் இருந்தார் என்றால் அது மிகையாகாது. அவர்களின் அன்பிற்கு எங்ஙனம் நன்றி சொல்லப் போகின்றோம் என்று தெரியவில்லை. சிவப்பு விளக்கு மாட்டப்பட்ட குவாலிஸ் காரில் சென்ற அனுபவம் வித்தியாசமாகத் தான் இருந்தது! காரில் ஏறியதும் முதலில் சென்றது உணவு விடுதிக்குத் தான். அதுவும் தமிழ் உணவகத்திற்கு! நன்றாக மூக்குப் பிடிக்க சாப்பிட்டோம். பின்னர் அங்கிருந்து தலைநகரில் இருக்கும் உத்தர சுவாமி மலை (மலை மந்திர் என்று அழைக்கப்படுகின்றது) சென்று முருகனைத் தரிசனம் செய்தோம். அங்கே அனைத்தும் தமிழிலேயே இருக்கக் கண்டு வியந்தோம். இதோ உத்தர சுவாமி மலை
படம் கிடைக்கவில்லை
இது மலை மேலிருந்து
படம் கிடைக்கவில்லை
இது முருகனின் கருவறைக் கோபுரம்
படம் கிடைக்கவில்லை
மாலை 4.30 மணிக்கெல்லாம் அஸ்தமனமாகும் நிலையைப் போல் காட்சியளிக்கும் சூரியன். (எல்லாம் குளிர் தான் காரணம்)
படம் கிடைக்கவில்லை
தலைநகர் டில்லியில் மாலையே படரும் பனி!
படம் கிடைக்கவில்லை
எங்களுக்கு இரவு 8 மணிக்கு அமிர்தசரசுக்கு ரயில் அது வரை தலைநகரைச் சுற்றிப் பார்க்கலாம் என்று நினைத்தோம். அதற்கு மிகவும் உறுதுணையாய் இருந்தவர் எங்கள் வாகன ஓட்டுநர். அவர் கேரளத்துக்காரர். டில்லி வந்து 15 ஆண்டுகள் ஆகின்றதாம். இரு குழந்தைகள் என்று அவரைப் பற்றி விசாரித்ததில் அவருக்கு மிகவும் மகிழ்ச்சி! நேரம் மிகக் குறைவாக இருந்தமையால் வாகனச் சவாரி மட்டும் செய்வோம் என்றே முதலில் நினைத்தோம்!
நேராக மொத்த இந்தியாவையும் ஆட்டிப் படைக்கும் சௌத் சர்க்கிள் என்று அழைக்கப்படும் ராஜ பாட்டைக்குச் சென்றோம்!
படம் கிடைக்கவில்லை
மத்திய மந்திரிகளின் அலுவலகங்கள் இங்கே தான் இருக்கின்றது!
படம் கிடைக்கவில்லை
அதற்குக் கொஞ்சம் அருகிலே தான் நம் ஜனாதிபதி இல்லமான ராஜ்பவன் இருக்கின்றது. நாங்கள் சென்ற போது மணி 5.30 இருக்கும். சரி சில படங்கள் எடுப்போம் என்று காரை விட்டுக் கீழே இறங்கியது தான் தாமதம், அந்த இடமே விளக்குகளால் ஜொலித்தது! அன்று குடியரசு தினமல்லவா? அதனால் இடமே சொர்க்கபுரியாக பரிமளித்தது. இதோ தூரத்தில் ராஜ்பவன்.
படம் கிடைக்கவில்லை
இன்னும் சில அழகிய படங்கள்
3 படங்கள் கிடைக்கவில்லை
தூரத்தில் பாராளுமன்றமும் விளக்கு வெள்ளத்தில்! (காரில் செல்லும் போது எடுத்தது)
படம் கிடைக்கவில்லை
அடுத்ததாக ரயிலைப் பிடிக்கும் முன் புகழ் பெற்ற இந்தியா கேட்டையும் காட்டி விட வேண்டுமென்று அந்த ஓட்டுநருக்குப் பேரவா! அங்கேயும் விளக்கு வெள்ளத்தில் மூவர்ணத்தில் ஒளிர்ந்த வண்ணம், உச்சியில் தீபத்துடன் காட்சியளித்தது இந்தியா கேட். இதோ உங்கள் பார்வைக்கு.
படம் கிடைக்கவில்லை
அங்கிருந்து நேராக புதுடில்லி ரயில் நிலையத்திற்குச் சென்றோம். இரவு சரியான நேரத்திற்கு வந்த அமிர்தசரஸ் செல்லும் ரயில் வண்டியைப் பிடித்தோம். அந்த ரயிலில் நிஜமாகவே பிரயாணச் சீட்டு இன்றி பயணம் புரிந்தேன் நான். என்னிடம் இரண்டாவது வகுப்பு சீட்டே இருந்தது. மற்றவர்கள் அனைவருக்கும் ஏர் கண்டிசன் பெட்டியில் சீட்டு இருந்தது. எனக்கும் எடுத்திருந்தார்கள். ஆனால் கடைசி வரை அது கன்பர்ம் ஆகாததால் அதை கேன்சல் செய்து விட்டிருந்தோம்! எனவே நான் மட்டும் இரண்டாவது வகுப்பிலும் மற்ற அனைவரும் ஏர்கண்டிசனிலும் பயணம் செய்ய ஆரம்பித்தனர். வண்டி கிளம்பியதும் என்னைத் தங்களுடன் பயணிக்குமாறு அழைத்த பெருமை மூர்த்தி சாரையே சாரும்! மொத்தம் இருந்தது 6 டிக்கெட். சென்றதோ 7 பேர்! கரகாட்டக்காரன் கதை தான்! என் டிக்கெட் கேன்சல் கடைசியாய் செய்ததால் என் பெயர் சார்ட்டில் இருந்தது. அதனால் தப்பித்து விட்டோம்! மறுநாள் 27-01-2007 அதிகாலை 4 மணிக்கு அமிர்தசரசில் வந்து இறங்கினோம். ஒருவர் முகம் மற்றவர்க்குத் தெரியாத வண்ணம் பனி!
16 பிப்ரவரி 2007
அமிர்தசரசில் நடந்த கூத்துக்களுக்கு முன், உங்களுக்கு ஒன்று சொல்ல வேண்டும். நான் வருடந் தோறும் தொழில் முறைப் பயணமாக பஞ்சாப் செல்வதுண்டு. அப்போது என்னுடன் பழகிய எங்கள் வாடிக்கையாளர்களிடம் மற்றவர்களைப் போலன்றி நான் எப்போதும் கோவில்கள் அங்கே எங்கெல்லாம் இருக்கின்றன என்றே கேட்டு நச்சரிப்பதுண்டு. அதனால் என்னிடம் தனிப் பிரியம் வைத்திருக்கின்றனர் என்றால் அது மெய்யாகும். அப்படி என்னுடன் பழகுபவரில் ஒருவர் லூதியானாவில் இருக்கின்றார். அவருக்கு நான் வருவது தெரிந்ததுமே அமிர்தசரசிலிருந்து மீண்டும் அடுத்த ரயில் ஜலந்தரில் ஏறுவது வரை தாமே வண்டி ஏற்பாடு செய்வதாகக் கூறி விட்டார். ஸ்கார்ப்பியோ வண்டி, ஓட்டுநர் பெயர், வண்டி எண் முதற்கொண்டு குறிப்பிட்டு குறுந்தகவல் அனுப்பினார். அவர் அன்பைக் கண்டு வியந்தேன். ஆனால், நாங்கள் காலை அமிர்தசரசில் வந்து இறங்கியதும் தான் தெரிந்தது நண்பரின் ஸ்கார்ப்பியோவின் அருமை! அதிகாலைக் குளிரில் வெட வெடத்த படி வண்டி எண்ணை வைத்து வண்டியைக் கண்டு பிடித்து விட்டோம்! சரி ஓட்டுநர் நம்மைத் தேடி ரயில் நிலையத்திற்குள் சென்றிருப்பார் என்று செல்பேசியில் அழைத்தேன். உடன் வருவதாகச் சொன்னார். சரியென்று காத்திருக்க ஆரம்பித்தோம். திடுமென வண்டிக் கதவு திறந்து வண்டியிலிருந்து வெளியே வந்தார் ஓட்டுநர்! சிறிது நேரத்திலேயே ஒரு இளம் பெண்மணியும் காரிலிருந்து இறங்கினார்! எங்களுக்கோ பேரதிர்ச்சி! என் மனைவி என்று அறிமுகப் படுத்தினார் ஓட்டுநர். காரைப் பார்த்தால் டாக்சி போன்றும் தெரியவில்லை. அவரைப் பார்த்தால் டாக்சி ஓட்டுநர் போன்றும் தெரியவில்லை. காரின் மேலே கேரியர் கூட இல்லை. தன் மனைவியும் கோவில்களைப் பார்க்க வருவதாகச் சொன்னார்! நாங்கள் அப்போதிருந்த நிலையில் அதைத் தட்ட முடியவில்லை. எனவே ஓட்டுநரையும் சேர்த்து 9 பேர். எங்கள் 7 பேரின் சுமை மொத்தமும் சேர்ந்து அதுவே மிகவும் இடத்தை அடைக்க, ஒருவர் மீது ஒருவராகவும், சுமைகளை மடியில் வைத்துக் கொண்டும் விடுதிக்குச் சென்றோம். விடுதி சரித்திரப் புகழ் பெற்ற ஜாலியன் வாலா பாக் கட்டிடத்திற்கும், பொற்கோவிலுக்கும் நடுவில் அமைந்திருந்தது! சிறிது நேரத்தில் குளித்து முடித்துக் கிளம்பினோம். முதலில் ஜாலியன் வாலா பாக் இடத்தை அடைந்தோம். குறுகிய வாசலே கொண்ட ஒரு மிகப் பெரிய மைதானத்திற்குள் ஜெனரல் டயர் என்பவர் இந்திய மக்களைக் கொன்று குவித்த சம்பவம் நிகழ்ந்த இடம் இது. பார்த்தாலே இன்றும் ரத்தக் கண்ணீர் வரவழைக்கும் இடம். அருமையாகப் பராமரித்து வருகின்றார்கள். இதோ காலைப் பனியினூடே ஜாலியன் வாலாபாக் ஸ்தூபி.
படம் கிடைக்கவில்லை
நினைவுத் தூண்
படம் கிடைக்கவில்லை
இன்றும் துப்பாக்கிக் குண்டுகளின் கதையையும் ரத்தத்தின் சுவையையும் சொல்லும் சுவர்கள்.
படம் கிடைக்கவில்லை
அப்பாவிப் பொதுமக்கள் ஓட முயன்று முடியாமல் கிணற்றின் உள்ளே விழுந்து இறந்து போகக் காரணமாயிருந்த கிணறு.
படம் கிடைக்கவில்லை
19 பிப்ரவரி 2007
ஜாலியன் வாலா பாக் தோட்டத்தில் இன்றும் எரிந்து கொண்டிருக்கும் அமர தீபத்தை வணங்கி விட்டு மேலும் செல்வோம்.
படம் கிடைக்கவில்லை
அருகிலேயே இருப்பது உலகப் பிரசித்தி பெற்ற அமிர்தசரஸ் பொற்கோவில் ஆகும். இதன் சிறப்புக்களாக நான் கருதுவது:
சுத்தமான நீரைக் கொண்டிருக்கும் மிகப் பெரிய குளம்
தற்போதும் கூரை வேயப்பட்டுக் கொண்டிருக்கும் கோவில்
சீக்கியப் பெருமக்களின் பயபக்தி
என்றென்றும் நடந்து கொண்டே இருக்கும் அன்ன தானம்
கோவிலின் பரிசுத்தம் (அகமும் புறமும்!)
எம்மதத்தினரும் வந்து போக அனுமதித்தல்
புகைப்படம் எடுக்கவும் அனுமதி
இருந்தும் புனிதத்தன்மை மாறாத நிலை
என்று சொல்லிக் கொண்டே போகலாம். தாஜ்மகாலைப் போலவே தான்! தூரத்தில் பார்க்கும் போது ஒரு விதம், நெருங்க நெருங்க குதூகலமும் அமைதியும் மனதில் பொங்கியது. ஆண்கள் அனைவரும் தலை முடி தெரியாத வண்ணம் துணியைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்பதால் அதற்கென்று கொடுக்கப்படும் துணியைக் கட்டிக் கொண்டோம். இதோ அமிர்தசரஸ் புனிதப் பொற்கோவில். தூரத்தில்
படம் கிடைக்கவில்லை
அருகில்
படம் கிடைக்கவில்லை
தெளிந்த நீரும் அதில் நீந்தி விளையாடும் மீனினமும்.
படம் கிடைக்கவில்லை
பொற்கோவில், பல்வேறு கோணங்களில் உங்கள் பார்வைக்கு!
3 படங்கள் கிடைக்கவில்லை
காலை உணவை பொற்கோவிலில் அன்னதானமாக் இடும் ரொட்டியையும் சப்ஜியையும் வயிறார சாப்பிட்டு அவர்களின் அன்ன தான முறையைக் கண்டு வியந்தோம். கோவிலுக்கு வரும் பக்தர்களே தங்களால் இயன்ற உடலுழைப்பை நல்கியது ஆச்சரியப் படத்தக்கது. முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கூட தண்டனையாக இங்கே வந்த அனைவரின் மிதியடிகளைச் சுத்தம் செய்தார் என்பது குறிப்பிடத் தக்கது. சீக்கியர்களின் புனித நூலான கிரந்த சாகிப் தான் கர்ப்பக் கிருஹத்தில் வைக்கப்பட்டு வழிபடப் படுகின்றது. சீக்கியத்தைப் பற்றியும் அதன் மேன்மை பற்றியும் காண்போமா? சீக்கியம் என்னும் மதத்தை உருவாக்கியவர் குருநானக் ஆவார். குருநானக் முதல் குரு கோவிந்த் சிங் வரை மொத்தம் பத்து குருக்கள் ஆவர். அவர்களின் புனித வடிவம் கீழே கொடுக்கப்பட்ட கண்டா (Khanda) என்றழைக்கப்படும் குரு கோவிந்த் சிங்கால் வடிவமைக்கப் பட்ட வடிவம் ஆகும். இதில் நான்கு ஆயுதங்கள் இருக்கின்றன.
படம் கிடைக்கவில்லை
- நடுவில் இருபுறமும் கூர்மையாய் இருக்கும் வாள்/கத்தியே கண்டா என்றழைக்கப்படுகின்றது. இது கடவுளைப் பற்றிய அறிவைக் குறிக்கும்.
- நடுவில் இருக்கும் சக்கரம் மற்றுமொரு ஆயுதம் ஆகும். சக்கரம் ஒரே கடவுள் என்பதைக் குறிக்கும்.
- இரண்டு கத்திகள் (கிர்பான் (Kirpan)) ஒன்றன் பக்கம் ஒன்றாக அடுக்கப் பட்டு இருக்கின்றன. இரண்டு கத்திகளில் ஒன்று சமுதாய ஒழுக்கத்தையும் (மிரி) மற்றொன்று ஆன்மீக ஒழுக்கத்தையும் (பிரி) குறிக்கும்.
- ஒரே கடவுள்
- பத்து குருக்கள். (குருநானக் (1469) முதல் குரு கோவிந்த் சிங் (1630))
- புனித நூலான குரு கிரந்த சாகிப்
- குருக்களின் ஒவ்வொரு வார்த்தையும் புனிதமானவையே.
- நேர்மையான வாழ்வு வாழ்தல், கீழே இருப்பவர்களைக் கை தூக்கி விடுதல், நல்லவர்களை பண்புடன் மதித்தல்.
- கேசம் (Kesh) (முடி)
- கங்கா (Kanga) (மரத்தால் ஆன சீப்பு)
- கச்சா (Kaccha) சிறப்பாக வடிவமைக்கப்பட்ட உள்ளாடை
- காரா (Kara) கையில் இரும்புக் காப்பு
- கிர்பான் (Kirpan) நாம் முன்பே பார்த்த வாள்.
சீக்கியர்களின் நம்பிக்கைகள் எளிமையானவை. அவை யாவன.
சீக்கியர் என்றால் மொத்தம் 5 'க' இருக்க வேண்டும்!
மிக எளிய, அரிய தத்துவங்கள் கொண்ட மதம் இது. அக்காலத்தில் இந்து முஸ்லீம் கலவரங்கள் பலவற்றைத் தடுத்தது என்றே கொள்ளலாம். வீரத்தில் சிறந்தவர்கள் இவர்கள். இவர்களின் போர்ப்பாசறை தான் பொற்கோவில் என்னும் இந்தப் புனிதத் தலம். ஒவ்வொரு அறையும் ஒவ்வொரு வீரனின் கதை சொல்லும். இவ்வளவு ஏன், கீழே நடந்து செல்லும் ஒவ்வொரு கல்லும் வீரத்தைச் சொல்லும். அப்புனிதமான கொள்கை கொண்ட மாபெரும் குரு நானக் மறையும் தருவாயில் நடந்த ஒரு சம்பவம். தாங்கள் மறைந்ததும் இந்து முறைப்படி எரிக்க வேண்டும் என்று இந்துக்களும், புதைக்கவேண்டும் என்று இஸ்லாம் மக்களும் கேட்டுக் கொண்டனர். குருஜி சிரித்துக் கொண்டே, இரு மலர்களை எடுத்து தனக்கு இருபுறமும் வைத்து விட்டு, நாளைக் காலை எந்த மலர் வாடாமல் இருக்கின்றதோ, அதன் படி செய்து கொள்ளுங்கள் என்று கட்டளையிட்டார். மறுநாள் காலை வந்து பார்க்கும் போது மூடப்பட்டிருந்த துணியினடியில் குருஜியின் உடலைக் காணவில்லை. மாறாக இரு மலர்களும் அன்றலர்ந்த மலர்களாய் சிரித்துக் கொண்டிருந்தன. அந்த மலர்களையே குருவாகக் கருதி இரு பாலரும் தம் தம் முறைப்படி அந்த மலருக்கே அனைத்தும் செய்தார்கள். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் ஒரு அழகிய அனைவரும் காணவேண்டிய கோவில் அமிர்தசரஸ் பொற்கோவில்.
படம் கிடைக்கவில்லை
அடுத்ததாக அருகிலேயே மிகச் சிறப்புடன் விளங்கும் துர்கா கோவிலையும், கிருஷ்ணன் கோவிலையும் தரிசித்தோம். அங்கும் பொன்னால் கூரையமைத்து சிறப்புறச் செய்திருக்கின்றார்கள். சுற்றிலும் இங்கும் குளம் உண்டு. குளத்தினூடே சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோரின் சிலைகளும் அலங்கரிக்கின்றன. இதோ துர்கா கோவிலும், குளத்தினுள் சிலையும்.
2 படங்கள் கிடைக்கவில்லை
ஜாலியன் வாலாபாக் தோட்டத்தில் அழகிய புறாக்கள் பல இருந்தன. அவற்றைப் படம் எடுக்க நெருங்கிச் செல்கையில் அனைத்தும் ஒரு சேரப் பறக்கும் போது எடுத்த படம்.
படம் கிடைக்கவில்லை
பொற்கோவில் மற்றும் துர்கா கோவிலைத் தரிசித்த பின், அறைக்கு வந்து சிறிது நேரம் களைப்பாறினோம். மதியம் 3 மணியளவில் உலகப்புகழ் பெற்ற இந்திய - பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லைக்குக் கிளம்பினோம். வாகா எல்லை: அமிர்தசரஸில் இருந்து 25 கி.மீ. தூரத்தில் இருக்கும் ஒரு சிறு கிராமம். அங்கு தான் இந்திய - பாகிஸ்தான் எல்லை இருக்கின்றது. இரண்டு கதவுகள். ஒரு புறம் இந்தியக் கொடி, மறு புறம் பாகிஸ்தான் கொடி. இரண்டு கொடிகளையும் அவிழ்த்து கதவைச் சாற்றுவதைப் பார்ப்பது தனி அனுபவம் தான். பார்க்கும் யார்க்கும் (இரு நாட்டினருக்குமே) தேசப் பற்று வளரும் என்பது நிச்சயம் மறுக்க முடியாத உண்மை! இதோ எல்லையில் சில படங்கள்: எல்லையைப் பார்ப்பதற்காக இந்தியப் பகுதியில் குழுமி நிற்கும் மக்களின் ஒரு அங்கம்.
படம் கிடைக்கவில்லை
எல்லைக் கதவைப் பூட்டும் முன் பாகிஸ்தானுக்குக் கிளம்ப இருக்கும் பாகிஸ்தான் பேருந்து
படம் கிடைக்கவில்லை
நீளமாய்ப் பிரித்திருக்கும் இந்திய பாகிஸ்தான் எல்லை.
படம் கிடைக்கவில்லை
ராணுவ வீரருடன் அடியேன்
படம் கிடைக்கவில்லை
இந்தியக் கதவு:
படம் கிடைக்கவில்லை
பாகிஸ்தானுக்குக் கிளம்பிய பேருந்து.
படம் கிடைக்கவில்லை
வீரர்களின் அணிவகுப்பு
2 படங்கள் கிடைக்கவில்லை
வேகமாய் நடந்து செல்லும் வீரர்கள்!
படம் கிடைக்கவில்லை
ராணுவ வீரர்கள் கொடிக்குத் தரும் மரியாதையும், வேகமும், விறைப்பும், அவகளின் உத்வேகமும் நாட்டின் பெருமையை நமக்கு அறிவித்து ஊக்கமளிக்கின்றது என்றால் அது மிகையாகாது.
20 பிப்ரவரி 2007
வாகா எல்லை நிகழ்வுகள் முடியும் போது மணி 5.30 இருக்கும். குளிர்காலமாதலால் அப்போதே இருட்ட ஆரம்பித்து இருந்தது. அதன் பின் அறைக்குத் திரும்பினோம் அமிர்தசரசில். உடனே அனைத்தையும் மூட்டை கட்டிக் கொண்டு காரில் கிளம்பினோம். இரவு நேரப் பயணம். கிட்டத்தட்ட 150 கி.மீ. இருக்கும். எங்களுக்கு மறுநாள் காலை மணி 11.00 க்கு ஜலந்தரில் இருந்து ரயில் ஜம்முவுக்கு. எங்கள் கார் ஓட்டுநருக்கு அது தான் தேநிலவு என்பது போல் இருவரும் சிரித்துக் கொண்டும் அரட்டை அடித்துக் கொண்டும் வந்து கொண்டிருந்தனர். எங்கள் எழுவருக்கும் அந்தப் பயணம் மாபெரும் அசௌகரியத்தைக் கொடுத்தது! கிட்டத் தட்ட ஒருவர் மடி மேல் ஒருவர் அமர்ந்திருந்தோம். என் பெட்டியை வைக்க இடமே இல்லாததால் அதை என் மடியில் வேறு வைத்திருந்தேன். ஒரு பஞ்சாபி டாபாவில் (ரோட்டோர ஓட்டல்) இரவு உணவு அருந்தினோம். நன்றாக இருந்தது! அதன் பின் வண்டி ஓட ஆரம்பித்ததும் களைப்பு தெரியாமல் இருக்க பாட்டுக்குப் பாட்டு போட்டி நடத்தினோம். (மன்றம் நிறைய பாடல்களை எடுத்துக் கொடுக்க உதவி செய்தது என்று சொல்லவும் வேண்டுமோ?). நாங்கள் பாடுவதோடு நிற்காமல், ஓட்டுநருக்கும் அவர் மனைவிக்கும் ஹிந்தியில் அந்தாக்ஷரி நடத்தினோம்! சிறிது நேரத்தில் ஓட்டுநர், அடியேன், மூர்த்தி தவிர அனைவரும் கண்ணயர்ந்து விட்டனர். இரவு 1 மணியளவில் நீலச்சுடர் முகத்தைக் காணும் ஆவலில் அந்த ஊருக்கு வந்தடைந்தோம்! இரவு அங்கிருந்த ஒரு விடுதியில் அறைகளை எடுத்துத் தங்கினோம். அதிகாலை 6 மணிக்குள் கிளம்பினால் தான் மறுநாள் ரயிலை நேரத்திற்குப் பிடிக்க முடியும் என்ற நிலை. அங்கிருந்து 90 கி.மீ. பயணிக்க வேண்டும் ரயிலைப் பிடிக்க. 1985ல் அகில இந்திய யாத்திரை (9ம் வகுப்பு விடுமுறையின் போது!) வரும் போதே இந்த ஸ்தலத்திற்கு வந்திருக்கின்றேன் நான். அன்று பார்த்தது இன்றும் ஞாபகம் இருக்கின்றது. ஆம். அந்தத் தலம் ஜுவாலாமுகி என்று அழைக்கப்படும் அழகிய திருத்தலம். அன்னை ஒளி வடிவத்தில் நீலச் சுடர் வடிவத்தில் காட்சியளிக்கும் அற்புதத் தலம். ஒரே கர்ப்பக் கிரகத்திற்குள் பல இடங்களில் பாறையில் என்றும் அணையா ஒளியாய் நீல நிறத்தில் (அறிவியல் பூர்வமாய் பார்த்தால் இயற்கையாய் எரிவாயு அங்கே இருக்கின்றது என்று கொள்ளலாம். ஆனால் ஏன் அந்த இடத்தில் மட்டும்?!) காட்சியளிக்கின்றாள் ஜுவாலாமுகி. அவளது பெயர்க்காரணம் சொல்லத்தான் வேண்டுமோ? ஜுவாலையாய் முகத்தைக் கொண்டிருப்பதால் ஜுவாலாமுகி. சக்தி தலங்களில் ஒன்று. அங்கிருந்த ஒரு மன்னன் சிங்க வாஹினி அன்னையை மனமார வேண்டிக் கொண்டு தவம் இருந்தான். அன்னையை நேரில் காண வேண்டும் என்பது அவனது அவா. நீண்ட காலம் தவமிருந்தும் அன்னை நேரில் வரவில்லை. பலப்பல யாகங்கள் செய்து பார்த்தான். எதற்கும் பலன் இல்லை. ஒரு நாள் தன் தலையையே வெட்டி அன்னைக்கு அர்ப்பணம் செய்தான். அன்னை நேரில் வந்து அவனுக்கு உயிரூட்டி ஏன் இப்படிச் செய்தாய் என்று கேட்டதற்கு, அன்னையே உன்னை நேரில் காணத்தான் என்றான். சரி என்ன தான் வேண்டும் உனக்கு? என்று கேட்ட அன்னைக்கு பதிலாய் நமக்கும் சேர்த்துக் கேட்டான் அந்த புண்ணியவான். எப்போதும் இப்போது போலவே நேரில் அனைவருக்கும் காட்சியளிக்க வேண்டும் என்று! அன்று அவனுக்கு வரமளித்த அன்னை, இன்றும் நேரில் காட்சியளிக்கின்றாள் ஒளிரூபமாய். அன்னையை நாமே நேரில் தொட்டு வணங்கலாம். நீலச்சுடர் முகத்தைத் தொடும் போது மேனியில் ஒரு சிலிர்ப்பு. அனைவரும் காண வேண்டிய அரிய தலம். கோவிலுக்குச் செல்லும் படிக்கட்டுகள்.
படம் கிடைக்கவில்லை
கோவில் கர்ப்பக் கிரகம். உள்ளே தான் பாறையில் ஒளிரூபக் காட்சி.
படம் கிடைக்கவில்லை
கோவிலின் முன்னே நான்.
படம் கிடைக்கவில்லை
அன்னையின் பள்ளியறைக் கோவில் இது.
படம் கிடைக்கவில்லை
14 மார்ச் 2007
நீலச்சுடர் முகத்தைத் தரிசித்த திருப்தியில் ஜுவாலாமுகியிலிருந்து கிளம்பினோம். கிளம்பும் போது காலை 7.30 மணி இருக்கும். காலை 11 மணிக்கு எங்களுக்கு ஜலந்தர் கன்டோன்மென்ட்டிலிருந்து ஜம்முவுக்கு ரயில். எல்லைப் பகுதியில் ஒவ்வொரு நகரத்துக்கும் ஒரு ராணுவ கன்டோன்மென்ட் இருக்கும். அதற்கு ஜலந்தர் என்ற பெரிய நகரமும் விதிவிலக்கல்ல. ஜலந்தர் சிட்டிக்கு என்று ஒரு ரயில் நிலையம் உண்டு. ராணுவ கன்டோன்மென்ட்டுக்கு என்று ஒரு ரயில் நிலையம் இருக்கின்றது. வெறும் 90 கி.மீ..தானே! மிஞ்சிப் போனால் 2 மணி நேரத்திற்கு மேல் ஆகாது என்று தப்புக் கணக்கு போட்டு விட்டோம். பாதை மலைப் பாதையாக இருந்ததோடு ஆங்காங்கே நிலச் சரிவினாலும், பெய்த மழையில் பழுதாகவும் இருந்ததால் ரயிலை நேரத்திற்குப் பிடிக்க முடியுமோ என்ற சந்தேகம் வந்து விட்டது. இதில் புரிந்து கொள்ளாமல் எங்கள் ஓட்டுநர் ஜலந்தர் சிட்டி ரயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். பின், அவருக்கு நிலையை விளக்கி, கன்டோன்மென்டுக்கு வண்டியைத் திருப்பு ஏக களேபரம். இதற்குள் ஓட்டுநரின் மனைவி சுனிதா எங்களுடன் இயல்பாகப் பழகி இருந்தார். இதோ ரயில் நிலையத்தின் முன் வண்டி வந்து நிற்கின்றது. உள்ளே செல்கின்றோம். வண்டி 4 மணி நேரம் தாமதம் என்ற தகவல்! அட! வேக வேகமாக ஓடி வந்தால் இன்னும் 4 மணி நேரம் காத்திருக்க வேண்டுமா என்று நினைக்கும் போதே, ஜம்மு செல்லும் அடுத்த வண்டி வந்தது. அதுவும் ஒரு அதிவேக ரயில் வண்டி தான். எனவே 6 மணி நேர ரயில் பயணத்தில் இரண்டு அல்லது மூன்று இடங்களில் மட்டுமே நிற்கும். பார்த்தோம், வண்டியில் கூட்டம் இல்லாதிருக்கவே நாங்கள் சீட்டு எடுக்காத அந்த வண்டியில் ஏறி, எங்கள் சீட்டில் எந்த எண் அச்சிடப் பட்டிருந்ததோ அதிலேயே சென்று அமர்ந்தோம்! (ராஜாவின் பாட்டியைப் பற்றி அவர் எழுதியதைப் படிக்கும் போது அது தான் ஞாபகம் வந்தது!) ஆனால், ஜம்மு வரை எங்கள் சீட்டை யாரும் பரிசோதிக்கக் கூட இல்லை. காரணம் அது வெகு தூரத்தில் இருந்து வரும் ரயில் (ராஜஸ்தானிலிருந்து). மேலும் எங்களிடம் இருக்கும் சுமைகளும் நாங்கள் வெகு தூரத்திற்குச் செல்வது போல் இருந்ததாலும், என் கள்ளம் கபடமற்ற முகத்தை பரிசோதகர் அவ்வப்போது பார்த்ததாலும் அவருக்கு கேட்கத் தோன்றவில்லை போலும்! இனி, செழிப்பான பஞ்சாப் பொன்மகளின் அழகை ரசித்துக் கொண்டே காஷ்மீரத்திற்குள் நாம் நுழைவதற்குள் நாம் பார்க்கவிருக்கும் முப்பெருந்தேவியரின் பெருமையப் பார்த்து விடுவோமா? பஞ்சாப் கோதுமை விளையும் பொன்னான பூமி:
படம் கிடைக்கவில்லை
ரயிலில் செல்லும் போது நீரோடும் பாலத்தில் எடுத்தது:
படம் கிடைக்கவில்லை
சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர், காஷ்மீரத்திலே ஹன்சாலி என்று ஒரு கிராமம் இருந்தது. இயற்கை எழிலால் சூழப்பட்டு இருந்தது. பச்சைப் பட்டுடுத்தி மலைத் தொடரால் சூழப்பட்டு குளுமையுடன் இருந்தது. அந்தத் திரிகூட மலைத் தொடரிலே ஒரு குரல் ஒலித்துக் கொண்டிருந்தது. "எனக்கு வேதங்கள் தெரியாது. எனக்கு உன்னை எப்படி வழிபடுவது என்று தெரியாது. எனக்கு உன் வடிவம் கூட தெரியாது. எனக்கு தியானம் பற்றியும் அதை எவ்வாறு செய்வது என்றும் தெரியாது. என்னைப் போல் பாவி இங்கே யாரும் கிடையாது. நானோ கொடும் பாவி. நீயோ பாவ சம்ஹாரினி. எனவே என் பாவங்களை எரித்து என்னைக் கரையேற்று, தேவி பவானி" என்று அழுது அன்பால் கசிந்து உருகி அரற்றிக் கொண்டிருந்தார் பண்டிதர் ஸ்ரீதர். எனக்கேன் குழந்தைகளே இல்லை? என் இனம் இப்படியே அழிந்து போக வேண்டியது தானா? என்று அன்னையைத் தொழுது வேண்டிக் கொண்டிருந்தார். அப்போது காற்றில் சலங்கை ஓசை கேட்டது. சத்தம் வந்த திசையைத் திரும்பிப் பார்க்க விழைந்த ஸ்ரீதர் கண்களுக்கு சட்டென்று காணவியலா ஒளிவெள்ளம் தோன்றி மறைந்தது. ஸ்ரீதர் அங்கும் இங்கும் தேடிப் பார்த்தார். யாரையும் காணவில்லை. தன் இல்லத்திற்குச் சென்று குழந்தையர் விழா நடத்த வேண்டியிருந்ததால் திரும்ப ஆரம்பித்தார். ஆறு பெண்குழந்தைகள் வரிசையாக சம்மணமிட்டு அமர்ந்திருந்தனர். அவர்களை வழிபடுவதே குழந்தையர் விழா ஆகும். அப்போது பண்டிதரின் கண்ணையே நம்பமுடியா அழகுடனும், அன்பொழுகும் முகத்துடனும், மலராய் விரிந்த கண்களுடனும், சிரிப்பே இயல்பாய்க் கொண்ட இதழ்களுடனும், மந்தகாசத்துடன் நூறு சூரியர்கள் முகத்தில் தெரிய அந்தக் கிராமத்தில் அவர் இதுகாறும் பார்த்திராத ஒரு பெண்குழந்தை வந்து அந்த ஆறு பேருடன் வந்து அமர்ந்தாள். அவள் உடுத்தியிருந்த ஆடையோ செம்பட்டு. காலில் கொலுசு. வந்தவள் விறுவிறுவென்று அவர் அருகில் நின்றாள். காலைக் காட்டினாள். பண்டிதர் ஸ்ரீதர் மிகுந்த மகிழ்ச்சியுடனும், திருப்தியுடனும், பக்தியுடனும் கர்ம சிரத்தையுடன் அவளது பாதத்திற்குப் பூஜை செய்தார். ஏழு பேரையும் வணங்கி வழிபட்டார் ஸ்ரீதர். அவர்களுக்கு பணிவன்புடன் உணவையும் தட்சிணையாகப் பணமும் கொடுத்தார் அவர். வாங்கிக் கொண்டனர் அனைவரும். செம்பட்டாளைத் தவிர மற்றவர்கள் கிளம்பிச் சென்றனர். ஸ்ரீதர் ஏதோ கேட்பதற்காக விழைந்தார் அவளிடம். அதற்குள் அவளே திருவாய் மலர்ந்து, "நான் ஒரு முக்கிய வேலையாக இங்கே வந்தேன்" என்றாள். "நாளைக் காலை இந்தக் கிராமத்தில் இருக்கும் அனைவருக்கும் விருந்து என்று அறிவி. அனைவரும் இங்கே இருக்க வேண்டும்" என்றாள். சொல்லிவிட்டு வந்த வண்ணமே சென்று விட்டாள் அவள். பண்டிதருக்கோ என்ன செய்வதென்றே தெரியாத நிலை. மக்களை அழைப்பது பெரிதில்லை. ஆனால் விருந்துக்கு எங்கே போவார் அவர்? கடைசியில் மனதைத் தேற்றிக் கொண்டு, அவள் சொன்னபடி செய்ய முடிவெடுத்தார். கிராமத்தில் ஒருவர் பாக்கி இல்லாமல் அனைவரிடமும் விருந்து உண்ண வருமாறு அழைத்தார். அனைவரும் ஒப்புக் கொண்டனர். ஆச்சரியமும் அடைந்தனர். அனைவருக்கும் இவர் எவ்வாறு உணவளிக்கப் போகின்றார் என்று. மலையில் தவமியற்றும் கோரக்க நாதரிடம் சென்று இதை அறிவித்து அவரையும் விருந்துக்கு அழைக்கச் சென்றிருந்தார் பண்டிதர். அவ்வமயம் அவரும், அவரின் சீடரான பைரவ நாத்தும் இருந்தனர். இருவரிடமும் விஷயத்தைச் சொன்ன பண்டிதர் இருவரையும் வருமாறு அழைத்தார். "என்ன? ஒரு குழந்தை ஊருக்கே விருந்து படைக்கின்றதா? நாங்களும் வருகின்றோம்" என்றனர் இருவரும்.
மறுநாள் காலை. ஸ்ரீதர் நிம்மதியற்று தவித்திருந்தார். மக்கள் வர ஆரம்பித்து விட்டனர். அதோ கோரக்க நாதர் தன் பிரதான சீடனான பைரவநாத்துடனும், மேலும் 360 சீடர்களுடனும் வரும் பவனி ஓசையும் கேட்க ஆரம்பித்து விட்டது. விருந்து வைக்கின்றேன் என்று சொன்னவளைக் காணவில்லை. சரி தான் இன்று முனிவரின் சாபத்திற்கு ஆளாகப் போகின்றோம் என்று நடுங்கினார் ஸ்ரீதர். அவர் வீட்டை நோக்கி வந்த அனைவரும் அவர் எப்படி விருந்து தரப் போகின்றார் என்ற வியப்பில் இருந்தனர். பலர் முணுமுணுக்கவும் ஆரம்பித்து விட்டனர். அப்போது மேகம் இருட்டியது. திடீரென்று ஒரு பேரொளி மின்னலாய் அவர் குடிசைக்கு முன்னர் தோன்றியது. அப்போது செம்பட்டு உடுத்தி கையில் திரிசூலத்துடன் வந்து சேர்ந்தாள் அவள். "எதற்கும் வருத்தம் வேண்டாம். விருந்துக்கு அனைத்தும் தயார். உன் இல்லத்துக்குள் முனிபுங்கவர்களையும் மற்றவர்களையும் அழைக்கலாம்" என்றாள். முனிவருக்கோ சந்தேகம். எங்கள் அனைவருக்கும் இல்லத்தில் இடம் இருக்கின்றதா என்றார். நாங்கள் வெளியே இருக்கின்றோம். விருந்து இங்கே வரட்டும் என்றார். நீங்கள் உள்ளே தான் வரவேண்டும் என்றார் பண்டிதர். முனிவரும் சீடர்களும் உள்ளே வந்தனர். மக்கள் வெளியே காத்திருந்தனர். முனிவரும் சீடர்களும் அமர்ந்தது போக இடம் வேறு இருந்தது அங்கே. உலகுக்கே படியளக்கும் தாய் அங்கே அனைவருக்கும் விருந்து படைத்தாள். ஒவ்வொருவருக்கும் அவரவர் விரும்பிய உணவினைத் தன் கையிலிருந்த ஒரு பாத்திரத்தில் தன் கைப்பட எடுத்து வழங்கினாள். கோரக்க நாதரும், பைரவ நாதரும் அவளுக்கு ஏதோ அதீத சக்தி இருப்பதாகப் பேசிக் கொண்டனர். அவளின் பூர்வீகம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டனர். இதோ அவள் பைரவநாத்தின் அருகில் வந்து விட்டாள். "எல்லோருக்கும் அவரவர்க்குப் பிடித்த உணவைப் படைத்தது போல் எனக்கும் படைப்பாயா?" என்றார் பைரவநாத். "தங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள் ஐயா" என்றாள் குழந்தை. "எனக்கு இறைச்சியும் மதுவும் வேண்டும்" என்றார் அவர். ஐயா நீங்கள் ஒரு பண்டிதரின் குடிசையில் அமர்ந்திருக்கின்றீர்கள் என்றாள் அவள். அவர் கேட்க, அவள் சைவ உணவு கேளுங்கள் என்று சொல்ல அப்படியே வாக்குவாதம் முற்றிற்று. ஒரு கட்டத்தில் அவள் கையைப் பற்றத் துணிந்தார் பைரவ நாத். அந்த நொடியில் அவள் மறைந்தாள். பைரவரும் சாதாரண மனிதர் அல்லர். உடனே சமாதி நிலைக்குச் சென்று, தன் ஞான திருஷ்டியால் அவள் திரிகூட மலைப்பகுதியிலே சென்று கொண்டிருப்பதை அறிந்ததும் அவரது வேட்கை அதிகரித்தது. அவள் யார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் குருவின் அனுமதியுடன் அவளைத் தேட ஆரம்பித்தார்.
இதற்குள் ஸ்ரீதர் தண்ணீரில் இருந்து எடுத்து வெளியே போட்ட மீன் போலத் துடித்துப் போய்விட்டார். மூன்று நாட்களாக ஒன்றும் சாப்பிடவில்லை. அங்கும் இங்கும் குடிசைக்குள்ளாகவே நிம்மதியின்றித் தவித்தார் அவர். அப்படியே அசதியில் தூங்கியும் போனார். அப்போது அவர் கனவில் யாரோ அவரைத் தொட்டு எழுப்புவது போல் இருந்தது. திடுக்கிட்டு எழுந்த அவர் எதிரே மாதா துர்கா தேவி சிம்ம வாகனத்துடனும், திரிசூலத்துடனும் ஜொலிக்கும் வடிவுடனும் காட்சியளித்தாள். "ஏன் சாப்பிடாமல் இருக்கின்றாய்? சாப்பிடாவிட்டால் என்னை எப்படி உன்னால் வழிபட முடியும்?" என்று கேட்ட அன்னை அவரை ஒரு குகைக்குள் அழைத்துச் சென்றாள். அங்கு அவள் சுயம்புவாய் இருந்ததைக் காட்டியருளினாள் அன்னை. வணங்கி மகிழ்ந்த பண்டிதர் குகையை விட்டு வெளியேறினார். வெளியேறியது தான் தாமதம் ஒரு ஒளி வந்து மறைந்தது. அவர் தூக்கமும் களைந்தது. விடிந்தும் போயிருந்தது. அவருக்கு அன்னை அழைத்துச் சென்ற பாதை அனைத்தும் ஞாபகம் இருந்தது. அந்தக் குகையை அவர் வாழ்நாளில் மறப்பாரா என்ன? இதோ கிளம்பி விட்டார் மீண்டும் அன்னையைக் காண! பைரவ நாத் ஞானக் கண்ணால் தேடித் தேடி அவள் இங்கே தான் எங்கோ இருக்க வேண்டும் என்று அறிந்து கொண்டார். எப்படியும் அவளைக் காணாது விடப் போவதில்லை என்ற உறுதியில் இருந்தார் அவர். போன முறை அவளைக் ஞான திருஷ்டியில் கண்ட போது அவளுடன் சிவப்புக் கொடியுடன் ஒரு கருங்குரங்கு இருந்ததைக் கண்டிருந்தார். அப்போது அவள் தன் கையிலிருந்த திரிசூலத்தால் பாறையில் குத்த அங்கிருந்து தண்ணீர் பீறிட்டுக் கிளம்பியதையும் கண்டார். இதோ அந்த இடத்தை நெருங்கி விட்டார். மீண்டும் அங்கிருந்து திருஷ்டியில் பார்த்தார். அவள் மலையின் உச்சியில் இருந்தது தெரிய வந்தது. அங்கேயும் சென்றார் அவர். அங்கே அவளின் காலடி இருந்தது. இப்படியெ ஒன்பது மாதங்கள் ஆகியிருந்தது, பைரவநாத் தேட ஆரம்பித்து! கிட்டத் தட்ட வெறி பிடிக்கும் நிலைக்கு ஆளானார் அவர். ஒரு நாள் ஒரு குகைக்கு வெளியே ஒருவர் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து அவரிடம் விசாரித்தார் பைரவர். இங்கே யார் வசிக்கின்றார்கள்? இந்தப் பக்கமாய் பெண்குழந்தை யாரும் சென்றார்களா? என்றார். அதற்கு அவரோ, இந்தக் குகையில் வசிப்பவள் மகாதேவி. அவளைத் தவிர யார் இருப்பார்கள்? என்றார் அவர். "என்ன? ஒன்பது மாதமாக நான் தேடுபவள் இங்கே தான் இருக்கின்றாளா?" என்று கேட்டவண்ணம் குகைக்குள்ளே நுழைய எத்தனித்தார் பைரவர். இப்போது வெளியே இருந்தவர் அவர் தான் காவலாளி போல் அவரை உள்ளே விட மறுத்தார். "ஏய் முட்டாளே, சொல்கின்றேன் அல்லவா? உள்ளே இருப்பவள் சாதாரணமானவள் இல்லை. அவளே ஆதிகுமாரி. நீ திரும்புவதே நல்லது" என்றார். கெட்ட நேரம் வரும் போது அறிவு வேலை செய்யாது அல்லவா? எவ்வளவுக்கெவ்வளவு அவர் தடுக்கப்பட்டாரோ அவ்வளவுக்கவ்வளவு அவருக்கு குகைக்கு உள்ளே செல்லும் ஆவல் அதிகரித்தது. எப்படியாவது உள்ளே நுழைந்து விடுவது என்று நுழைய ஆரம்பித்தார் பைரவர். அன்னை அவருடன் இன்னும் சிறிது விளையாடத் தீர்மானித்தாள். எல்லாம் அவள் திருவிளையாடல்! பைரவர் உள்ளே நுழைந்ததும் தன் சூலத்தால் ஒரு பாதை உருவாக்கிய அன்னை வெளியேறிவிட்டாள். வெளியேறிய அன்னை மற்றொரு குகையை நோக்கி செல்ல ஆரம்பித்தாள். பைரவரும் பின் தொடர்ந்தார். தேவி அவரைப் பார்த்துத் தன்னைப் பின் தொடரவேண்டாம் என்று பணித்தாள். பைரவர் செவி சாய்க்கவில்லை. அன்னை ஒரு குகைக்குள் ஒரு குரங்கைக் காவல் வைத்து விட்டு உள்ளே நுழைந்து விட்டாள். அவளைப் பின் தொடர நினைத்த பைரவரை மறித்த குரங்கு "மஹாமாயா யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று கட்டளை யிட்டிருக்கின்றாள்." அதனால் வெளியேறி விடுமாறு சொன்னது. நான் பைரவபாலி என்னால் எங்கும் செல்லமுடியும். நீ யார் என்னை மறிக்க என்றார் அவர். என்று சொன்னவண்ணம் குரங்கின் கையிலிருந்த கதையைப் பிடுங்கி அதனுடன் சண்டை போட ஆரம்பித்தார் பைரவர். கடைசியில் குரங்கை வென்ற பைரவர் உள்ளே நுழைந்தார். உள்ளே நுழைந்ததுமே தன் வாளால் சண்டி ரூபத்தில் பைரவரை வெட்டி வீழ்த்தினாள் பைரவரை. ஒரு குழந்தையாக மாறி தன் விளையாட்டுச் சாமானுடன் விளையாடுவது போல் விளையாடிக் கொண்டிருந்தாள் அன்னை. அன்னையின் வெட்டில் உடல் அங்கே கிடந்தது. தலையோ மலை உச்சியில் சென்று விழுந்தது. அப்போது பைரவர் தன் தவறை உணர்ந்து மனமுருகி வேண்டினார். எனக்கு அன்னையின் கையாலேயே அழிவு வந்ததால் நான் புண்ணியம் பெற்றேன். என்னைப் போல் புண்ணியவான் யாருமில்லை என்றார். நான் உன்னை குழந்தை ரூபத்தில் அறியாமல் போனேன். என்னை மன்னியுங்கள் என்றார். நீ மோக்ஷமடைவாய். என்னை வணங்குவோர் உன்னையும் வணங்குவார். என்று அருளினாள். சிறிது நாட்களிலேயே பண்டிதரும் தான் கனவில் வந்த வழியைக் கண்டறிந்து குகைக்கு வந்து சேர்ந்தார். அன்னையை பிண்ட ரூபத்தில் கண்டு அகமகிழ்ந்தார். அவருக்கு நான்கு குழந்தைகளை வழங்குவதாக ஆசியளித்த அன்னை அவரது சந்ததியினரே தன்னைப் பூசை செய்வார்கள் என்று வரம் அருளினாள். அதன் படி அவரின் வம்சாவளியினரே அன்னைக்குப் பூசை செய்யும் அருகதை பெற்றனர். இன்றும் அவர்களே அன்னைக்கு ஆராதனை செய்விக்கின்றனர். இனி அவளைத் தரிசிக்கச் செல்வோமா?
18 மார்ச் 2007
வள்ளி - பொங்கி - வைஷ்ணவி என்னும் இந்தத் (http://www.muthamilmantram.com/viewtopic.php?t=19492)திரியில் மேலும் பல விவரங்களையும், தென்னாட்டுக்கும் வைஷ்ணவி தேவிக்கும் உள்ள தொடர்பையும் விவரித்து மலேசிய மருத்துவர் ஐயா ஜெயபாரதி அவர்கள் எழுதிய கட்டுரையை இட்டிருக்கின்றேன். இனி அடிப்பாகத்தில் ஒரே அடிவாரத்துடனும், மேலே மூன்று முகங்களுடனும் கூடிய திரிசூல அமைப்பிலான திரிகூட மலைத் தொடரில், ஒரு திருக் குகைக்குள்ளே, இயற்கையாகவே, சுயம்பாக அடிபாகத்தில் ஒரே திருக்கல்லாகவும் மேற்புறத்தில் மூன்று நிறங்களையுடைய மூன்று முகங்களாகவும் காட்சியளிக்கும் வைஷ்ணவி தேவியைக் காணச் செல்வோம். ஜம்மு ரயில் நிலையத்தை மாலை 4 மணியளவில் சென்றடைந்தோம். வெளியிலேயே அங்கிருந்து வைஷ்ணவி கோவில் அடிவாரமான காட்ரா (Katra) வுக்கு பேருந்துகள், கார்கள் என்று அனைத்தும் சகாய விலையில் வாடகைக்குக் கிடைக்கின்றன. எங்களுக்கென்று ஒரு காரை அமர்த்திக் கொண்டு கிளம்பினோம். ஜம்முவில் இருந்து காட்ரா செல்லும் வழியனைத்தும் இயற்கை எழில் கொஞ்சும். பல மலைத் தொடர்களைக் கடந்து செல்ல வேண்டும். இத்தனைக்கும் 40 கி.மீ. தான். ஆனால் இரண்டு மணி நேரம் ஆகின்றது பயணம். இடையில் தேநீர் அருந்தினோம். வழியெங்கும் மந்திகள். செல்லும் வழியெங்கும் ஒரு மலையிலிருந்து இன்னொரு மலைக்கு மின்சாரம் கடத்தும் பிரம்மாண்ட கம்பிகளைப் பார்த்து பிரமித்தோம்.
படம் கிடைக்கவில்லை
இதோ காட்ரா வந்து சேரும் போது இரவு 7 ஆகி விட்டிருந்தது. கண்களின் முன் ஜெகஜ் ஜோதியாய் வைஷ்ணவி தேவி மலையெங்கும் விளக்கு வெளிச்சத்தில் பிரகாசமாய் மின்னியது காணக் கண் கொள்ளாக் காட்சியாகும்.
படம் கிடைக்கவில்லை
அன்று இரவு ஒரு விடுதியில் அறையெடுத்து தங்கினோம். மறுநாள் அதிகாலை 5 மணிக்கெல்லாம் கிளம்பினோம் வைஷ்ணவி தரிசனத்திற்கு. கீழே தேவஸ்தான அலுவலகத்தில் இருந்து பெயரைப் பதிவு செய்து கொண்டோம். இது முக்கியமானதாகும். மொத்த கோவிலும் ராணுவத்தினரின் எல்லைப் பாதுகாப்புப் படைவீரர்களின் கண்காணிப்பில் இருக்கின்றது. காட்ராவில் இருந்து பானுகங்கா எனப்படும் மலையடிவாரத்திற்கு ஆட்டோவில் ஒரு ஆளுக்கு 5 ரூபாய் வீதம் கொடுத்து சென்று சேர்ந்தோம். பானுகங்காவில் இருந்து 11 கி.மீ. உயரம் மலை ஏற வேண்டும் அம்மனைத் தரிசிக்க. இதோ ஏற ஆரம்பிக்கின்றோம். வைஷ்ணவி தேவி தரிசனத்திப் பொருத்தவரை மொத்த மலைப் பாதைக்கும் சிமெண்டினால் பாதை போட்டிருக்கின்றார்கள். நடந்தோ, குதிரையின் மேலோ, நான்கு பேர் சுமந்து செல்லும் டோலியிலோ, அல்லது ஹெலிகாப்டரிலோ செல்லலாம். பாதி வழியில் இருந்து பேட்டரி காரிலும் செல்லும் வசதி இருக்கின்றது. நாங்கள் நடந்தே சென்றோம். பாதை முழுதும் கடைகள் இருக்கின்றன. சிற்றுண்டிச் சாலைகள் இருக்கின்றன. முதல் தடவையாக ஏறுபவர்களுக்குப் பார்க்க பிரமிப்பாகவும் கொஞ்சம் மூச்சு வாங்கவும் செய்யும். நான் செல்வது ஐந்தாவது முறையாக. அதனால் வித்தியாசம் ஏதும் தெரியவில்லை. முதலில் வெகு அருகில் தெரியும் காட்ரா போகப் போக மிக தூரத்தில் சிறியதாகத் தெரியும் போது தான் நாம் எவ்வளவு உயரம் ஏறி இருக்கின்றோம் என்பதே தெரியவரும்! இதோ பாதையில் எடுத்த சில படங்கள்.
படம் கிடைக்கவில்லை
இதோ தூரத்தில் காட்ரா!
படம் கிடைக்கவில்லை
கீழே தெரியும் ஏறி வந்த பாதைகள்!
படம் கிடைக்கவில்லை
இன்னும் தூரத்தில் காட்ரா!
படம் கிடைக்கவில்லை
இதோ பாதையில் களைப்பு தெரியாமல் இருக்கவும் களித்து மேலே செல்லவும் தாளமிசைக்கும் கலைஞர். வட இந்தியர்கள் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் ஜய் மாதா தீ என்று கோஷமிட்டவாறு செல்வதைப் பார்ப்பதே கொள்ளை அழகு!
படம் கிடைக்கவில்லை
இன்னும் தூரத்தில் காட்ரா!
படம் கிடைக்கவில்லை
சரியாக 5.5 கி.மீ. அதாவது பாதி தூரத்தில் அத்குவாரி அல்லது அத்குமாரியை அடைகின்றோம். அதன் முக்கியத்துவம் சொல்லும் ஒரு பலகை.
படம் கிடைக்கவில்லை
பாதையில் கண்ட வானம்! (ஹெலிகாப்டர் தெரிகின்றதா?)
படம் கிடைக்கவில்லை
இதோ நடந்து நடந்து திரிகூட மலையை நோக்கிச் செல்கின்றோம். காஷ்மீரத்தில் இருப்பது அனைத்தும் மடிப்புப் பாறை வகையைச் சார்ந்ததாகும். நாங்கள் சென்ற சமயம் பிப்ரவரி முதல் வாரமாக ஆனாலும் குளிர் அவ்வளவாக இல்லாதது எங்கள் அதிர்ஷ்டமே! நிழலில் குளிரும், வெளியே இதமான வெயிலும் கொண்டு எங்களை வரவேற்றது மலைத்தொடர்.
படம் கிடைக்கவில்லை
இதோ, போகப் போக அடுத்தடுத்த மலைகளில் தெரியும் செல்ல வேண்டிய பாதை நீண்டு கொண்டே செல்வதை!
2 படங்கள் கிடைக்கவில்லை
அப்படியே சென்று கொண்டிருக்கையில் ஒரு திருப்பத்தில் வைஷ்ணவி தேவி ஆட்சி செய்யும் தர்பார் நம் கண்களுக்குத் தெரிய ஆரம்பிக்கின்றது.
படம் கிடைக்கவில்லை
இதோ அந்த பரவச அனுபவத்துடன் அடியேன்.
படம் கிடைக்கவில்லை
இதோ செல்லும் வழியில் தரிசனம்.
படம் கிடைக்கவில்லை
இதோ கோவில் இருக்கும் குகைக்கு அருகில் தேவஸ்தானத்தினரால் கட்டப் பட்டிருக்கும் விடுதிகளும் கட்டிடங்களும்.
படம் கிடைக்கவில்லை
இது வரையே நமக்குப் புகைப்படம் எடுக்க அனுமதி! அதன் பிறகு சுருட்டி உள்ளே வைத்து விட வேண்டும். ராணுவத்தினரின் பலமான சோதனைக்குப் பிறகு, கோவிலின் உள்ளே செல்ல ஆரம்பிக்கின்றோம். மூலத் தானத்திற்குச் செல்வதற்கு இரண்டு வழிகள் உண்டு. முதலாவது புனிதக் குகை என்றழைக்கப்படும் ஹோலி கேவ் வழியாகச் செல்வது. மற்றொன்று அந்தக் குகையின் அருகிலேயே மூலத் தானத்திற்குச் சென்று வழிபடும் வகையில் செயற்கையாகக் குடைந்து செய்யப்பட்டிருக்கும் வழி. இதில் முதல் பாதை முற்றிலும் இயற்கையானது. இது வைஷ்ணவி தேவி இணையத் தளத்தில் இருந்து எடுத்தது. முதல் பாதை.
படம் கிடைக்கவில்லை
இது அடுத்த பாதை. செயற்கையாக அமைக்கப் பட்டது.
படம் கிடைக்கவில்லை
ஒரு நாளைக்கு 8000 யாத்ரீகர்களுக்கும் குறைவாக கூட்டம் வந்தால் மட்டுமே முதல் பாதை வழியாக அனுமதிக்கப் படுவர். நாங்கள் சென்றது குளிர் காலம் ஆகையால் கூட்டம் இல்லை. எனவே முதல் பாதை வழியாகச் செல்லும் பாக்கியம் கிடைத்தது. முதல் பாதை வழியாகச் செல்வதானால் தவழ்ந்து குனிந்து உடலை வருத்தியே குகைக்குள் செல்ல வேண்டும். கிட்டத்தட்ட 50 அடி தூரம் அப்படி செல்ல வேண்டும். நுழையும் பகுதி சிறியதாக இருந்தாலும் செல்லச் செல்ல பாதை விரிவடைந்து குனிந்து கொண்டே நடக்கும் அளவுக்கு இடம் இருக்கின்றது. சிறிது தூரம் சென்றதும் காலடியில் சில்லென்று நீர் ஓட ஆரம்பிக்கின்றது! நினைக்க நினைக்கப் பேரானந்தமாய் வடிவில் பிண்டங்களின் முப்பெருந்தேவியரின் ஒன்றிணைந்த வடிவாய் தேவி காட்சியளிக்கின்றாள். மூன்று முகங்களும் மூன்று நிறங்கள்! முதலில் இடது புறமிருப்பவள் மகாசரஸ்வதி. ஆக்கத்துக்கும் கலைக்கும் ஏற்ற வகையில் தூய வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கின்றாள். நடுவில் இருப்பவள் மகாலட்சுமி. மஞ்சள் கலந்த பொன்னிறத்தில் செம்மையாகக் காட்சியளிக்கின்றாள். அடுத்து இருப்பவள் மகா காளி. கருநிறத்தில் காட்சியளிக்கின்றாள். கண்டதோ சில விநாடிகள். மின்னல் உடலுக்குள் ஊடுருவி அந்தப் பக்கம் பாய்வது போல் சிலிர்ப்பு. இன்னமும் கண்ணுக்குள்ளே ஜொலிக்கும் தரிசனக் காட்சி. புளகாங்கித உணர்வுடன் அன்னையைக் கண்ட பரவசத்தில் அமைக்கப் பட்ட பாதை வழியே வெளியேறுகின்றோம். இதோ மாதா வைஷ்ணவி தேவியின் அருங்காட்சி உங்களுக்கும்!
3 படங்கள் கிடைக்கவில்லை
21 மார்ச் 2007
தரிசனம் முடித்ததும் ஒவ்வொரு யாத்ரீகருக்கும் ஆச்சரியம் காத்துக் கொண்டு இருக்கின்றது. ஆம், அங்கே நாம் எந்தப் பணமும் தட்சணையாகச் செலுத்த வேண்டியதில்லை. ஆனால், அன்னை ஒவ்வொருவருக்கும் ஒரு வெள்ளிக் காசு பரிசளிக்கின்றாள். அதைத் திவ்யமாக அனைவரும் பெற்றுக் கொள்ளலாம். ஆசியைப் பெற்றுக் கொண்டு வெளியே வருகின்றோம். காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாதது நினைவுக்கு வருகின்றது. வெளியே மணி மதியம் 1. தேவஸ்தான உணவகத்தில் குறைந்த விலையில் நிறைந்த உணவு அருந்தினோம். தேவாமிர்தமாகச் சுவைத்தது. சிறிது நேரம் இளைப்பாறி விட்டு, அன்னையின் அதிசயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். பின்னர் ஒவ்வொருவராக கீழே இறங்க ஆரம்பித்தோம். இறங்க ஆரம்பிக்கையில் மணி 2. கீழே அடிவாரம் சென்றடைகையில் மணி 5. ஏறும் போது இருக்கும் களைப்பு இப்போது இல்லை. நிம்மதியாக காட்ராவைச் சுற்றி வந்தோம். அங்கிருக்கும் கடைகளில் வாங்க வேண்டியனவற்றை வாங்கிக் கொண்டு இரவு உணவு அருந்தினோம். பின்னர் நித்திரையில் ஆழ்ந்தோம். மறுநாள் காலை 5 மணிக்கெல்லாம் கிளம்பினோம். எங்கே என்று தானே கேட்கின்றீர்கள? காட்ராவில் இருந்து 80 கி.மீ. தொலைவில் இருக்கும் சிவன் குடியிருக்கும் கோவிலுக்குத் தான் அடுத்துச் செல்ல ஆரம்பித்தோம். போகும் வழியில் திரு. மோகன் குமார் அவர்கள் (ஆங்கிலப் பேராசிரியர்) முந்தைய நாள் இரவில் தொலைக்காட்சியில் பார்த்த ஆங்கிலப் படம் பற்றிப் பேசும் போது உலகிலேயே அழகான பெண்கள் பற்றிப் பேச்சு வந்ததைப் பிடித்துக் கொண்டு, ஷேக்ஸ்பியர் அப்புறம் இன்னும் ஒரு ஆங்கில நாடகாசிரியர் பற்றிப் பேச ஆரம்பித்தார். பேசினோம் பேசினோம் கிட்டத் தட்ட நாடகம் முழுதையும் நடித்தே காட்டினார்! ஆஹா! பிரயாண அலுப்பே தெரிய வில்லை. இதோ நாம் செல்ல வேண்டிய தலம் வந்து விட்டது போல் இருக்கின்றதே! காலை விடியலில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வீடுகளும், வயல் பொழில்களும் கண்களுக்கும் மனதிற்கும் விருந்தாய் அமைந்தது என்றால் அது மிகையாகாது.
2 படங்கள் கிடைக்கவில்லை
இதுவும் ஒரு குகைக் கோவிலே! பெயர் சிவக்குரி. சிவக் கோடி என்றும் சொல்வார்கள். Shiv Khori என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் புகழ் பெற்ற ஒரு தலம் இது. அனைவருக்கும் செல்ல வாய்க்காது. என்னையும் ஒருவனாய் அவன் மூன்றாம் முறையாய் அழைத்திருந்தான். என்ன புண்ணியம் செய்தேனோ தெரியவில்லை. பஸ்மாசுரன் என்ற ஒரு அரக்கன் இருந்தான். அவன் சிவபெருமானிடம் ஒரு வரம் வாங்கினான். அதாவது அவன் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் எரிந்து சாம்பலாக வேண்டும் என்று! சிவபெருமானும் வரமளித்தார். அவன் எதிரே வந்த நாரதர் தலையில் கைவைக்கப் போனான். அப்போது அவர் சாமர்த்தியமாக, என் தலையில் கைவைத்து சோதனை செய்ய வேண்டாம். யார் வரம் கொடுத்தார்களோ அந்த சிவன் தலையில் கை வைத்துப் பார் என்று சொல்லி தப்பித்து விட்டார். மீண்டும் சிவனைத் தேடினான் பஸ்மாசுரன். இப்போது சிவன் மாட்டிக் கொண்டார். அவன் தலையில் கை வைத்து இவர் எரியவில்லை என்றால் அப்புறம் வரத்துக்கு மகிமை இல்லை என்றல்லவா அர்த்தம் ஆகிவிடும்? எனவே பஸ்மாசுரன் வர முடியாத படி ஒரு சுதர்சன சக்கரத்தை நிறுவி கீழே அமர்ந்து கொண்டு தவத்தில் ஆழ்ந்து விட்டார். அவர் மட்டுமா? பஸ்மாசுரனுக்குப் பயந்து முப்பத்து முக்கோடி தேவர்களும் மற்றும் அனைவரும் அங்கே அவருடன் கல்லாய்ச் சமைந்து விட்டனர். பஸ்மாசுரனோ பரமனைக் காணவில்லை என்று கொக்கரித்தான். அப்போது விஷ்ணு அவனிடம் சென்று மலைமகளைச் சொந்தமாக்கிக் கொண்டால் தான் நீ சிவனுக்கு நிகர் என்று ஏற்றி விட்டார். அதிலிருந்து அவன் மலைமகள் மேல் மையல் கொண்டான். அதைச் சாக்காகக் கொண்ட விஷ்ணு, சிவனோ அருமையாய் நடனம் ஆடுவான். அது போல் ஆடினால் மட்டுமே மலைமகள் உன் பக்கம் திரும்புவாள் என்று சொல்ல, அவனும் விஷ்ணுவிடமே நடனம் பயில ஆரம்பித்தான். விஷ்ணு நடனம் சொல்லிக் கொடுக்கும் போதே தன் தலையில் கை வைக்க, அது போலவே பஸ்மாசுரனும் செய்ய, சிவனின் வர மகிமையால் அழிந்து பட்டான் என்பது ஐதீகம். இதற்கு மகிழ்ந்து அந்த சுதர்சன சக்கரத்தை சிவன் விஷ்ணுவுக்கு கொடுத்தார் என்றும் ஐதீகம். அந்த இடமே சிவக் கோடி. அது ஒரு மிகக் குறுகிய குகை. கிட்டத்தட்ட 50 மீட்டருக்கும் மேல் குகைக்குள்ளே செல்ல வேண்டும். தடிமனான ஆட்களால் செல்ல முடியாது. நாமே பக்க வாட்டில் உடலைத் திணித்தே செல்ல முடியும். உள்ளே சென்றதும் ஒரு 200 பேர் உட்காரும் படியான ஒரு பரப்பு நம் முன்னே காட்சியளிக்கும். அங்கே அடடா எழுதும் போதே மேனி சிலிர்க்கின்றதே! ஜடாதாரியாய் இறைவன் சுயம்புவாய் காட்சியளிக்க, மேலே சுதர்சன சக்கரம் அந்த அறை முழுதும் பரவித் தாங்கி கொண்டிருக்க, பல இடங்களில் லிங்க ரூபமாய் சிவன் இருக்குமிடத்து மட்டும் மேலிருந்து கங்கை தாரை தாரையாய் பசுவின் மடுவிலிருந்து விழுவது போல் நித்யாபிஷேகம் செய்ய தமிழால் இறைவனைத் துதிக்கின்றோம். முப்பத்து முக்கோடி தேவர்கள், ஆதி சேசன், விநாயகர், முருகன், பார்வதி என்று அனைவரும் சுயம்பாய் காட்சியளிக்கும் அதி அற்புதத்தைக் கண்டுணர்ந்தோம். வாழ்வின் உன்னத தருணமாய் உணர்ந்தோம். இனி அவன் தரிசனத்தை உங்களுக்கும் காட்டுகின்றேன். சில படங்கள் காண்போமா?
மலைப் பாதை 6 கி.மீ. மலை ஏறும் போது நம்மை வரவேற்கும் நீரோடையும் மீனினமும்.
படம் கிடைக்கவில்லை
கணபதியே மலையாய்க் காட்சியளிக்கும் கணபதி மலை.
படம் கிடைக்கவில்லை
செல்லும் பாதைகள்!
2 படங்கள் கிடைக்கவில்லை
குதிரைச் சவாரியும் உண்டு, நடக்க முடியாதவர்களுக்கு!
படம் கிடைக்கவில்லை
இதோ குகையை நெருங்குகின்றோம்!
படம் கிடைக்கவில்லை
இன்னும் அருகில்!
படம் கிடைக்கவில்லை
இன்னும் அருகில்!
படம் கிடைக்கவில்லை
குகை இருக்கும் மலைப் பிராந்தியம்!
படம் கிடைக்கவில்லை
இதோ மலைக் குகைக்குள் உள்ளே நுழையும் வழி! (இணையதளத்தில் எடுத்தது!)
உள்ளே குனிந்து செல்லும் பக்தர்கள்
இது தான் அந்த இடுக்கு!
இதன் வழியே தான் செல்ல வேண்டும். பக்கவாட்டில்!
இதோ இப்படி!
மேலும் இப்படி!
ஓம் நமசிவாய. பம் பம் போலே! ஜெய் போலே நாத்!
இதோ நாமே அபிஷேக ஆராதனை செய்யலாம்!
அருகில்!
மற்றுமொரு அழகிய சுயம்பு லிங்கம்
இதோ அடியேன், சிவக்கோடி குகைக்கு வெளியே!
படம் கிடைக்கவில்லை
சிவக் கோடி தரிசனம் முடிந்ததும் சிறிது நேரம் இளைப்பாறினோம். நான் முதன் முதல் வந்ததற்கும் இப்போது மூன்றாம் முறை வந்ததற்கும் நிறைய முன்னேற்றங்கள் இருந்தன. இன்னும் சில ஆண்டுகளில் வைஷ்ணவி தேவி கோவிலைப் போல், அமர்நாத் போல் சிவக் கோடியும் பலர் வந்து தரிசிக்கும் புண்ணிய தலமாக மாறி விடும் என்று நினைக்கின்றேன். வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு தரிசனம் சிவக் கோடி தரிசனம். இதோ தரிசனம் கண்ட அனைவரும்.
படம் கிடைக்கவில்லை
வெளியேறி மீண்டும் கீழே இறங்க ஆரம்பிக்கின்றோம். வழியில் எந்த வித கவலையும் இன்றி ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு புல்லாங்குழல் இசைத்து மகிழும் சிறார்கள்.
படம் கிடைக்கவில்லை
மீண்டும் வண்டியை அடைந்து திரும்ப ஆரம்பிக்கின்றோம் ஜம்முவை நோக்கி. சாலையெங்கும் மலைச் சரிவுகள் எங்களை வரவேற்கின்றது. மலைப்பாதை மோசமாக இருந்தது. இதோ எத்தனை தூசுகளுக்கிடையில் வண்டி செல்கின்றது என்று பாருங்கள்.
படம் கிடைக்கவில்லை
மாலை ஜம்மு வந்தடைகின்றோம். எங்களுக்கு அரசு விருந்தினர் மாளிகையிலேயே தங்கும் வாய்ப்புக் கிடைத்தது. இரவு மிகப் புகழ்பெற்ற ரகுநாத் மந்திருக்குச் சென்றோம். அங்கே மிகப் பெரிய கிரிஸ்டல் லிங்கம் இருக்கின்றது. அதைத் தரிசித்தோம். மிகப் பழைய பெரிய கோவில். அருமையான தரிசனம். ரகுநாதர் வில்லுடனும், சீதையுடனும், ஆஞ்சநேயருடனும் காட்சியளிக்கின்றார். சிவபெருமானும் அழகாகக் காட்சியளிக்கின்றார். தரிசித்து இரவு விருந்து உண்டு மகிழ்ந்து ஓய்வெடுத்தோம். மறுநாள் காலை மற்ற அனைவருக்கும் ஸ்ரீநகருக்கு விமானம். எனக்கு மட்டும் டில்லிக்கு விமானம். ஆம், பாலா திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நான் மட்டும் அங்கிருந்து திரும்பி விட்டேன். இத்துடன் நீலச் சுடர் முகமும், முப்பெருந்தேவியரும் என்னும் இத் தொடரை நிறைவு செய்கின்றேன்.