பல்லேலக்கா பல்லேலக்கா சேலத்துக்கும் மதுரைக்கும்!
முத்தமிழ் மன்றத்தில் எழுதியது · 9 ஜூலை 2007
நேற்று ஞாயிற்றுக் கிழமை சேலத்தில் தமிழ் மென்பொருள் கண்காட்சியைப் பார்க்கும் ஆர்வத்திலும், நம் மன்ற உறுப்பினர் செல்வ முரளியைச் சந்திக்கும் ஆவலிலும், மன்ற ஆண்டுமலரின் வடிவமைப்பு குறித்து ஆலோசனை செய்து கொள்ளவும் நேற்று சேலத்திற்குச் சென்றேன். சனிக்கிழமை இரவு வேலையெல்லாம் முடித்து விட்டு இரவு 10.30 மணிக்கு பேருந்தில் ஏறி அமர்ந்தேன். மதுரைக்கு 12.30 மணிக்கு அந்தப் பேருந்து வந்து சேர்ந்தது. ரமணா படம் ஓடிக் கொண்டிருந்தது. அதிலிருக்கும் லாஜிக் ஓட்டைகளை நினைத்துச் சிரித்துக் கொண்டே நன்றாகப் பொழுது ஓடியது. மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திற்கே நேரடியாய் கொண்டு விட்டதால் சேலம் செல்ல வசதியாய்ப் போயிற்று. அதிகாலை 1 மணிக்கு சேலம் பேருந்தில் ஏறியமர்ந்தேன். மொத்தம் 5.30 மணி நேரப் பயணம். ஏதோ படம் ஓடிக் கொண்டிருந்தது. இது சரிப்பட்டு வராது என்று என் செல்பேசியில் எம்.பி.3 பாடல்களைப் பாட விட்டு பேசாமல் தூங்கி விட்டேன். காலை 6 மணிக்கு வண்டி நாமக்கல் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. 6.30 மணியளவில் சேலம் சென்று சேர்ந்தேன். பேருந்து நிலையத்திற்கெதிரிலேயே ஒரு விடுதியில் முரளி ஏற்கனவே அறை சொல்லி வைத்திருந்தார். போனதும் அலுப்புக்கு நன்றாகத் தூங்கிவிட்டேன் காலை 9 மணி வரை. அப்புறம் தடாலடியாக எழுந்து கிளம்ப ஆரம்பித்தேன். வெளியே கிளம்பத் தயாராகி நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த போது முரளி என் அறைக்குத் தேடி வந்தார். செல்வ முரளியைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். கடின உழைப்பாளி என்பதைப் பார்த்ததும் தெரிந்து கொள்ளலாம். சுறுசுறுப்பு, விடா முயற்சி, எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம், செய்யும் வேலையில் நேர்த்தி ஆகியன அவரை உயரே கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை. மிக வயது குறைந்த இளைஞர். +2 முடித்து விட்டு உடனே செய்தித் துறையில் சேர்ந்து தன் சொந்த பயிற்சியால் கற்ற கணினி வரைகலை மற்றும் வடிவமைப்பு மென்பொருட்களின் உபயோகம் மூலம் சேலத்தில் ஒரு முதல்நிலைச் செய்திப் பத்திரிகையில் பணி புரிந்து கொண்டிருக்கின்றார். சரியென்று கண்காட்சிக்குக் கிளம்பினோம். மிகப் பெரிய கண்காட்சி என்று சொல்லிவிட முடியாவிட்டாலும், தமிழ் மென்பொருள், புத்தகங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி என சேர்த்து வைத்திருந்தது சேலத்துக்காரர்களுக்கு உபயோகமாகவே இருந்திருக்கும். அங்கு தான் நம் பேனர் ஒன்றை வைக்க விரும்பினோம். ஆனால் அதற்கு 3000 ரூபாய் கேட்டதாலும், உடனடியாகக் கால அவகாசம் இன்றிச் செய்ய வேண்டியிருந்ததாலும் அது வெற்றி பெற வில்லை. தமிழ் மென்பொருட்களைப் பொருத்தவரை எழுத்துரு, தட்டச்சு, விளையாட்டுகள், குழந்தைகளுக்கான குறுந்தகடுகள், அச்சு வடிவமைப்பு மென்பொருட்கள் போன்றவையே ஆக்கிரமித்திருந்தன. இன்னும் பல பயன்பாடுகள் தமிழில் வரவேண்டும் என்பது தான் இன்றைய நிலையில் தேவையாகும். அதற்கு இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். மேலும் ஏதேனும் ஒரு தகுதரத்திற்குள் தமிழைக் கொண்டு வரவேண்டும். அடுத்ததாக நம் மன்ற உறுப்பினர் இன்னொருவரையும் அங்கே சந்தித்தோம் நானும் முரளியும். அவர் aimofisdn (http://www.muthamilmantram.com/profile.php?mode=viewprofile&u=10905) என்ற பெயரில் நமக்கு ஏற்கனவே பரிச்சயமான திரு. இப்ரஹிம் அவர்கள். அவர் அங்கே தமது விருப்பப்படி என்னும் மென்பொருளைச் சந்தைப்படுத்த வந்திருந்தார். அவரது மென்பொருளாக்கத்தையும் அவரது லட்சியத்தையும் பார்க்கும் போது ஒரு சாதனையாளரைச் சந்தித்த பெருமையும் திருப்தியும் எனக்கு ஏற்பட்டது. நான் ஏற்கனவே சொன்னது போல் தமிழுக்கென ஒரு தகுதரம் வேண்டும் என்று சொன்னதை அவர் வித்தியாசமான முறையில் பூர்த்தி செய்திருந்தார். ஆம் இதுவரை தமிழில் 116 வகையான எழுத்துருக்கள் (tam,tab,tscii,unicode...) என்று. இதில் எந்த ஒரு எழுத்துருவில் இருந்தாலும் அதை எந்த எழுத்துருவுக்கும் மாற்றும் வசதி கொண்ட மென்பொருள் மிக அருமை! இதற்கு அந்த எழுத்துரு எது என்று தெரிந்திருக்க வேண்டிய அவசியமோ, அது நம் கணினியில் நிறுவப்பட்டு இருக்க வேண்டிய அவசியமோ இல்லை என்றதும் என் வியப்பு பன்மடங்காயிற்று. அது மட்டுமின்றி பல்வேறு உபகருவிகளையும் அவரது மென்பொருள் கொண்டிருந்தது. உதாரணமாக 60000 வார்த்தைகள் கொண்ட ஆங்கிலம் - தமிழ் (மற்றும் 9 இந்திய மொழிகளில்) அகராதி, தானியங்கி வார்த்தை முற்றுப் பெறுதல், தானியங்கி உள்ளீடு, 9 இந்திய மொழிகளுக்கும் டிரான்ஸ்லிட்டரேஷன் என்று பட்டியல் நீண்டு கொண்டே இருந்தது. அடுத்து தான் தயார் செய்து கொண்டிருப்பது தமிழ் இலக்கண மற்றும் எழுத்துப் பிழை திருத்தி பற்றி அவர் சொன்ன போது மெய் சிலிர்த்தது. இது போன்ற இளஞ்சாதனையாளர்கள் இனம் காணப் பட வேண்டும். ஊக்குவிக்கப் படவேண்டும். இத்தனை பெரிய மென்பொருளை வெறும் 1000 ரூபாய்க்கு அவர் விற்றுக் கொண்டிருந்ததை நினைத்து ஒர் புறம் வருத்தமே மேலிட்டது. அச்சுத்துறை நிறுவனங்களுக்கு மிகவும் அவசியமான ஒரு மென்பொருள் விருப்பப்படி. அப்புறம் கண்காட்சியை ஓரிரு சுற்றுக்கள் சுற்றி வந்தேன். குழந்தைகளுக்கான குறுந்தகடுகள் சில வாங்கினேன். மதிய விருந்து அனைவரும் சேர்ந்து அருந்தினோம். நேரம் எப்படி ஓடியது என்றே தெரியவில்லை. மாலை 4 மணிக்கு மன்ற நண்பர்களிடம் பிரியாவிடை பெற்றுக் கிளம்பினேன். மீண்டும் சிவகாசி வந்து சேர்கையில் மணி நள்ளிரவு 12. நம் மன்ற ஆண்டுவிழா தாமதமாக வந்தாலும் தரணியில் புகழ் பெறும் வண்ணம் தயாரிக்கப்பட்டு வருவதில் மிகுந்த மகிழ்ச்சியும், அது எப்படித் தயாராகின்றது என்று காண்பதில் பெருமையும் கொள்கின்றேன். சில படங்கள் உங்கள் பார்வைக்கு. இப்ரஹிம் தன் முகத்தைக் காட்ட மறுத்து விட்டார். :) சாதனையாளர்கள் அப்படித் தான் போலும். இருந்தாலும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பாஷா இந்தியா இணைய தளத்தில் இவரது புகழ் பாடியிருப்பதிலேயே தெரிய வரும் இவர் பெருமை. இங்கே (http://www.bhashaindia.com/Patrons/SuccessStories/Ibrahim.aspx) அவரைப் பற்றிக் காணலாம். படத்துடன்! இது விடுதியில் இருந்து பார்வையில்!
3 படங்கள் கிடைக்கவில்லை
கண்காட்சி முகப்பு. இது போல் ஒரு பேனர் தான் மாட்ட வேண்டும் என்று நினைத்தோம்!
படம் கிடைக்கவில்லை
கண்காட்சியில் இருக்கும் கடைகள்!
படம் கிடைக்கவில்லை
நவீன வீட்டு உபயோகப் பொருட்கள்
படம் கிடைக்கவில்லை
இப்ரஹிமும் முரளியும் விருந்தின் போது.
படம் கிடைக்கவில்லை