சிந்தனைகள்~6 நிமிட வாசிப்பு19 ஆண்டுகளுக்கு முன் எழுதியது

என்னுடைய ஆசிரியர்கள்

முத்தமிழ் மன்றத்தில் எழுதியது · 29 ஆகஸ்ட் 2007

இதோ பார்த்து விட்டேன். தொடங்குகின்றேன். நான் பிறந்தது 1974 ஆகஸ்டு. ஆனால் 1977 ஆரம்பத்திலேயே அதாவது 3 ஆண்டுகள் நிறைவிலேயே என்னைப் பள்ளியில் சேர்த்தார்கள் பெற்றோர்கள். அதுவும் பிறந்த நாளை 21-05-1973 என்று கொடுத்து! ஆக எனக்கு இரண்டு பிறந்த நாட்கள். பல முறை குழம்பிப் போயிருக்கின்றேன். முன்பெல்லாம் பிறந்த நாள் சான்றிதழ் என்று இல்லை. இப்போது அது கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என்று வந்து விட்டது. நான் படித்தது எங்கள் இல்லத்துக்கு அருகிலேயே இருந்த நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகும். தமிழ் முறைப் பாடம் சொல்லித் தரப்பட்டது. இப்போது இருக்கும் UKG ஐ அப்போது அரைக் கிளாஸ் என்பார்கள். அந்த அரைக்கிளாஸில் 1977 அதாவது 3 வயதில் பள்ளிக்கு அனுப்பும் போது தலைமை ஆசிரியர் என்னைச் சேர்க்க மறுத்தாராம். அப்போதே அ,ஆ எழுதச் சொல்லி எழுதினால் சேர்த்துக் கொள்வேன் என்றாராம். அப்போது வைத்த தேர்வில் தேறியதாலேயே அந்த வகுப்பில் சேர்த்துக் கொண்டார்கள். எனது தாயார் திருமதி. தேனம்மாள் தான் என் முதல் ஆசான். பள்ளிக்குச் செல்வதற்கு முன்னமே எழுத்துக்களை எழுத வைத்து விட்டார். இத்தனைக்கும் அவர் படித்தது 2ம் வகுப்பு வரையே! அரைக்கிளாஸ் ஆசிரியை திருமதி ரமா அவர்களை எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கின்றது. கண்ணாடி டீச்சர் என்று அழைப்போம் அவரை. அடுத்ததாக திருமதி பிரேமா அவர்கள். இவர்கள் இருவரும் என் மேல் அவ்வளவு பாசமாய் இருந்தார்கள். பிரேமா டீச்சர் சமீபத்தில் இறந்து போனார். ரமா டீச்சர் இப்போது பார்த்தாலும் அடையாளம் கண்டு மகிழ்வார். அடுத்ததாக 1ம் வகுப்பு. அந்த ஆசிரியையின் பெயரும் என் அம்மாவின் பெயரான தேனம்மாள். மிகுந்த பொறுமைசாலி. பாடல்களைக் கூடவே பாடி ஆடி மகிழ்ந்து அனைவருக்கும் கல்வியை ஊட்டினார் என்றே சொல்லவேண்டும். என்னுடன் படித்தவர்கள் அனைவருமே சேரி ஏழை மாணவர்கள். எங்கள் இல்லத்திலிருந்து 1 நிமிட நடை தான் பள்ளிக்கு. என் தாயார் அந்தப் பள்ளிக்கு பொருளுதவி நிறையச் செய்திருக்கின்றார். எனவே என்னை அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இதோ 1ம் வகுப்பில். எங்கே இருக்கின்றேன் என்று தேடிப்பாருங்கள்!

அடுத்ததாக 2ம் வகுப்பு. அதையும் தேனம்மாள் ஆசிரியையே நடத்தினார். ப்ரோமோசன் வந்து விட்டது என்று நினைக்கிறேன். நாட்கள் வேகமாக உருண்டோடின! இது 2ம் வகுப்பில். தேனம்மாள் ஆசிரியையும் பாங்காய் அமர்ந்திருப்பதைக் காணுங்கள்! அவர்கள் போட்ட விதை தான் இப்போது வேரூன்றி இதோ உங்கள் முன் இருக்கின்றது.

அடுத்து மூன்றாம் வகுப்பிலிருந்து தொடர்கின்றேன்!

மூன்றாம் வகுப்பில் தான் ஆங்கிலம் a,b,c,d என்று படிக்க ஆரம்பித்தோம். அப்போது எங்களுக்கு நடத்திய ஆசிரியரின் பெயர் மறந்து விட்டது. :( ஆனால் வெள்ளை வேட்டி வெள்ளை முழுக்கைச் சட்டை போட்டிருப்பார். எப்போதும் மூக்குப் பொடி போட்டுக் கொண்டே இருப்பார். அதனால் அவருக்கு மூக்குப் பொடி வாத்தியார் என்ற பெயருண்டு. கையில் பிரம்பு வைத்திருப்பார். ஆனால் யாரையும் அடிக்க மாட்டார். தரையில் அடிப்பார். அதிலேயே பயந்து விடுவோம். நான்காம் வகுப்பில் திருமதி. ராஜம்மாள் ஆசிரியை. எங்களுக்கு எட்டாம் வகுப்பு வரை எல்லாப் பாடங்களுக்கும் ஒரே ஆசிரியர் தான். எனவே ஒரு ஆண்டில் ஒரு ஆசிரியரின் கீழ் அனைத்துப் பாடங்களும் பயில்வோம். பள்ளியில் லேப் வசதி எல்லாம் கிடையாது. இருக்கும் வசதிகளைக் கொண்டே மிக அருமையாகச் சொல்லித் தந்தார்கள் அனைத்து ஆசிரியர்களும். ஐந்தாம் வகுப்பில் திருமதி. சந்திரா என்னும் ஆசிரியை. ஒவ்வொரு மாணவனையும் தன் சொந்தப் பிள்ளை போல் பார்த்துக் கொண்டார். யாரையும் அடிப்பதெல்லாம் இல்லை. ஒரு முறைப்பிலேயே கோபத்தை வெளிப்படுத்தி விடுவார். ஆறாம் வகுப்பு. திரு. ஸ்டீபன்சன் சார். இவர் ஒன்றாம்/இரண்டாம் வகுப்பு ஆசிரியை தேனம்மாள் அவர்களின் கணவர். என் மேல் அவரைப் போலவே மிகுந்த பாசம் கொண்டவர். இவர்கள் இல்லத்துக்கு எல்லாம் நான் சென்று இருக்கின்றேன். கொஞ்சம் கண்டிப்பானவர். ஆனால் அனைத்துப் பாடங்களையும் ஆர்வத்துடன் பயில்விப்பார். ஏழாம் வகுப்பில் திருமதி. தனலட்சுமி ஆசிரியை. ஒரு வகுப்பில் குறைந்தது 60 இலிருந்து 70 பேர் வரை இருப்போம். இந்த ஆண்டில் அனைவரும் ராமேஸ்வரம் சுற்றுலா சென்றது எனக்கு அப்படியே ஞாபகம் இருக்கின்றது. எங்கள் பள்ளி நகராட்சி நிர்வகிக்கும் பள்ளி ஆகும். சம்பளம் அரசாங்கம் வழங்கி விடும். பள்ளி வளர்ச்சி தான் யாருமே கண்டு கொள்ளவே மாட்டார்கள். நாற்காலி, மேசை, வகுப்பறைகளைப் பராமரித்தல் ஆகியவற்றிற்கு ஆசிரியர்களே சுற்றிலும் உள்ள பணக்காரர்களிடம் சென்று பேசி நன்கொடையாகப் பெற்று நடத்தினார்கள். நான் படித்த போது அந்தப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே இருந்தது. இப்போது உயர்நிலைப் பள்ளியாக மாறி 12 வரை இருக்கின்றது. எட்டாம் வகுப்பு என்னால் மறக்க முடியாத வகுப்பாகும். தமிழுக்கு திருமதி. லட்சுமி அம்மாள். மிகச் சிறந்த பக்திமான். எனக்கு விநாயகர் அகவல் அறிமுகப்படுத்தியவர். "நீ ஒரு கஷ்டமும் படாம க்ஷேமமா இருப்பேடா" என்று மனமார வாழ்த்தியவர். கோபம் வந்தால் அவர் வாயிலிருந்து "மூடம்" என்று வார்த்தை தான் வரும்! வகுப்பு ஆரம்பிக்கும் முன் சில விநாடிகள் ஆண்டவனைப் பிரார்த்தித்த பின்னரே துவங்குவார். "ஐந்து கரத்தனை" என்று வாய்க்குள்ளே சொல்லிக் கொள்வார். ஆங்கிலத்துக்கு திரு. அற்புதராஜ். உண்மையிலேயே அவர் அற்புதராஜ் தான். அவர் தான் பள்ளியின் தலைமையாசிரியர். மிகுந்த ஒழுங்கு மற்றும் கண்டிப்பும் நிறைந்தவர். அவர் வருகின்றார் என்றால் மொத்தப் பள்ளியும் கிடுகிடுக்கும். அவர் சொல்லிக் கொடுத்த ஆங்கில அறிவினை வைத்துத் தான் இன்னும் கதையோட்டிக் கொண்டிருக்கின்றேன். Verb, Noun, Active Voice, Passive Voice இவ்ளோ தாண்டா ஆங்கிலம் என்று மிக எளிமையாய் இன்றும் நினைவில் இருக்கும் வண்ணம் சொல்லிக் கொடுத்த பெருந்தகை. கணக்கிற்கு திருமதி. ராஜேஸ்வரி ஆசிரியை. மிகுந்த ஆர்வத்துடன் சொல்லிக் கொடுப்பார். எனக்குக் கணிதம் என்றால் மிகவும் இஷ்டமாய் இருப்பேன். எப்போதும் நூற்றுக்கு நூறு தான். எனவெ என் மேல் ரொம்பப் பிரியம் அவருக்கு. அவர் தான் தேர்வுக்கு முன்பு வெறும் விரல்களால் ஒரு மந்திரம் எழுத வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தவர். அந்த மந்திரம் இன்றும் ஏதேனும் தேர்வு எழுதப் போனால் விரல்களால் எழுதி விட்டே ஆரம்பிப்பேன். இது வரை எந்தத் தேர்விலும் தவறியதே இல்லை. அது சி.ஏ. தேர்வாக இருந்தாலும் சரி. அறிவியலுக்கு திருமதி தனலட்சுமி ஆசிரியை தான். ஏழாம் வகுப்பில் வகுப்பாசிரியையாக இருந்தவர் தான். ஒரு ஏழைப் பள்ளியிலும் அறிவியலை ஆர்வமாய்ச் சொல்லித் தர முடியும் என்று நிரூபணம் செய்தவர். வரலாறு பூகோளம் ஆசிரியர் பெயர் மறந்து விட்டது. :( ஆனால் ஒரு பாடத்தை எப்படிப் படிக்க வேண்டும் என்று அவர் சொல்லிக் கொடுத்தது இன்னும் நினைவில் இருக்கின்றது. அந்த ஆண்டு அரசாங்கத் தேர்வு. எட்டாம் வகுப்பு முடிந்தது ஒன்பதாம் வகுப்புக்கு எங்கள் பள்ளியில் இடமில்லை. வேறு பள்ளியில் சேர வேண்டும் அல்லவா? அங்கே தான் ஏற்பட்டது அத்தனை சிக்கல்களும். தொடர்கின்றேன்.

மேலும் வாசிக்க

சிந்தனைகள்

சிந்தனைகள்

இன்றைய சிந்தனை - பாத்திரமா? நீரா?

அன்பு நண்பர்களே, எல்லாம் வல்ல இறையாசியுடன் இன்றைய சிந்தனை என்னும் தலைப்பில் தினந்தோறும் ஏதேனும் மனதில் தோன்றும் சிந்தனை விதைகளை விதைக்கலாம் என்றிருக்க…

சிந்தனைகள்

ஐந்தாவது தூண்

நம் ஜனநாயகத்தைத் தாங்கி நிற்கும் நான்கு தூண்களைப் பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். 1. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பிரதமர் முதல் பஞ்…

சிந்தனைகள்

கண்டதைச் சொல்கிறேன்

நான் நேற்றுக் கண்ட இரு காட்சிகள் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். காட்சி ஒன்று: எங்கள் ஊரில் உள்ள சாலைகள் அனைத்தும் குறுகலானவை. மிக அதி…