எடுத்துச் செல்ல எதுவுமில்லை. கொடுத்துச் செல்வோம் கண்களை!
முத்தமிழ் மன்றத்தில் எழுதியது · 19 ஆகஸ்ட் 2007 – 23 ஆகஸ்ட் 2007
இனி சில படங்களும் விளக்கங்களும்: கண் தானம் என்பது என்ன?
2 படங்கள் கிடைக்கவில்லை
மேலே இருக்கும் படத்தைப் பாருங்கள். நம் கண்களில் இருக்கும் கருவிழி (கார்னியா - Cornea) செய்யும் வேலை என்னவென்றால், எப்படி ஒரு கடிகாரத்தின் கண்ணாடி ஒளியை ஊடுருவிச் செல்ல அனுமதிப்பதுடன் அதைப் பாதுகாக்கவும் செய்கின்றதோ அதே பணி தான். கருவிழியின் ஒளி ஊடுருவும் தன்மையில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் மேகம் போல் மறைத்து விட்டால் அவர்களால் பார்க்க முடிவதில்லை. இதற்கு ஒரே தீர்வு, நல்ல நிலையில் இருக்கும் இறந்தவரின் ஒளி ஊடுருவும் தன்மையுள்ள கருவிழி மாற்று சிகிச்சை மட்டுமே.
இந்தப் படத்தில் கடிகாரத்தை மறைப்பது போல் போர்வை மறைத்து விடும் கருவிழியில்!
படம் கிடைக்கவில்லை
அப்படி மறைக்கப்பட்ட கண் இது!
2 படங்கள் கிடைக்கவில்லை
இதோ கருவிழி மாற்று அறுவை சிகிச்சை நடக்கின்றது.
படம் கிடைக்கவில்லை
சிகிச்சை முடிவுற்றதும் கருவிழி!
படம் கிடைக்கவில்லை
இதோ இறந்தவரின் கண்களில் இருந்து கண்கள் பெறப் படுகின்றன.
படம் கிடைக்கவில்லை
இதோ அவ்வாறு எடுக்கப்பட்ட கண் ஒன்று.
படம் கிடைக்கவில்லை
கண் எடுக்கப்பட்ட தடயம் தெரியாத சடலம்.
படம் கிடைக்கவில்லை
யார் கண் தானம் செய்யக் கூடாது?
- எயிட்ஸ், மஞ்சள் காமாலை, காலரா, ரண ஜன்னி, விஷக் காய்ச்சல், மூளைக் காய்ச்சல் மற்றும் வெறிநாய்க்கடி இவற்றால் இறந்தவர்கள் (நன்றாகக் கவனிக்கவும். மஞ்சள் காமாலை முன்பு வந்திருந்தால் கவலை இல்லை. ஆனால் இறப்பின் காரணம் இதுவாய் இருக்கக் கூடாது) கண்கள் தானமாக அளிக்க முடியாது.
கீழ்க்கண்ட 22 காரணங்கள் கொண்ட இறப்புடையவர்கள் கண் தானம் செய்ய இயலாது.
படம் கிடைக்கவில்லை
கண் தானம் - கவனிக்க வேண்டியவை:
- ஒருவரின் கண் தானத்தினால் கருவிழிப் பிரச்னையால் பார்வை இழந்த இருவர் இந்த உலகைக் காண்கின்றார்கள்.
- நீங்கள் கண் தானம் செய்ய விரும்பினால் அதற்கு ஒரே வழி, நீங்களும் உங்கள் குடும்பத்தாருடன் மனப்பூர்வமாக கண்தான விழிப்புணர்ச்சி பெற்று அதற்கான உறுதி மொழி எடுத்துக் கொள்வதே ஆகும்.
- கண் தானம் செய்ய ஆவல் என்று எங்கு பதிந்து வைத்திருந்த போதிலும், இறந்த உடன் கண்களைத் தானம் தர வேண்டியது உறவினர்களே அன்றி இறந்தவர் அல்ல. எனவே குடும்பத்தினரிடையே இருக்கும் விழிப்புணர்ச்சி மட்டுமே கண் தானம் செய்யத் தூண்டுவதாகும்.
- உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்களிடம் பேசும் போது இது பற்றி அவ்வப்போது பேச வேண்டும். அப்போது தான் இந்த எண்ணம் மறவாது மனதில் பதியும்.
- இறப்பு என்னும் சோக தருணத்தில் கண் தானம் பற்றிய நினைவு வந்து, அதைச் செய்வதை விட வேறு புண்ணியம் இல்லை தானே.
மேலதிகத் தகவல்கள்:
- ஒருவர் இறந்த பின் தான் தன் கண்களைத் தானமாகத் தரமுடியும்.
- இறந்த 6 மணி நேரத்திற்குள் கண்கள் தானமாகப் பெறப்பட்டு அதற்கென இருக்கும் பெட்டியில் கண் வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
- பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மட்டுமே கண்களை எடுக்க வேண்டும்.
- இறந்தவர் இருக்கும் இடத்திற்குத் தேடி வந்து கண்கள் தானமாகப் பெறப்படும்.
- 10 ல் இருந்து 15 நிமிடத்தில் மொத்த கண் தான நிகழ்ச்சியும் நடைபெற்று விடும்.
- கண்களை எடுத்த தடயம் கூட உடலில் தென்படாது.
- மதச் சடங்குகளுக்கு எவ்விதத் தடங்கலும் ஏற்படாது.
- திசு ஒற்றுமை பரிசோதனைக்காக இறந்தவர் உடலில் இருந்து சிறிதளவு ரத்தமும் பெறப்படும்.
- இறந்தவரின் கண்கள் யாருக்குத் தரப்பட்டது என்ற விஷயங்கள் தெரிவிக்கப் பட மாட்டாது.
இப்படித் தான் கண்கள் எடுக்கப் படுகின்றன.
படம் கிடைக்கவில்லை
இதோ கருவிழி மட்டும் எடுக்கப் படுகின்றது.
படம் கிடைக்கவில்லை
இது கருவிழி மாற்று அறுவை சிகிச்சை நிறைவு பெற்ற பின். (Corneal Grafting)
படம் கிடைக்கவில்லை
கண் தானம் செய்வது எப்படி? ஒருவர் இறந்தவுடன் அவரது கண்களைத் தானமாகத் தர விரும்பினால், அவரது நெருங்கிய உறவினர்கள் கீழ்க்கண்டவற்றைச் செய்ய வேண்டும்.
- மிக அருகில் உள்ள கண் வங்கி, அல்லது கண் தான ஆர்வலர்களைத் தொடர்பு கொண்டு தகவல் அறிவிக்க வேண்டும்.
- இறந்தவர் கண்களின் இமையை மூடி வைக்க வேண்டும்.
- மின் விசிறியை நிறுத்தி விட வேண்டும் (கண் உலர்ந்து போகாதிருக்க)
- குளிர் சாதன வசதி இயங்கலாம். (ஏ.சி.)
- தலையணை வைத்து தலையைச் சற்று உயர்த்தி வைத்தல் வேண்டும்.
- நெருங்கிய உறவினர்கள் இருவர் தமது சம்மதத்தை எழுத்து பூர்வமாக வரும் மருத்துவரிடம் அளிக்க வேண்டும்.
20 ஆகஸ்ட் 2007
இனி எங்கள் கண் தான அனுபவங்கள் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்கின்றேன்: 5 ஆண்டுகளுக்கு முன், எங்கள் சிவகாசி தொழில்நகர் அரிமா சங்கத்தின் சார்பில் கூட்டுச் சங்கக் கூட்டம் ஒன்றிற்காக கும்பகோணம் அரிமா சங்கத்திற்குச் சென்றிருந்தோம். ரொம்ப மகிழ்ச்சியாக ஆட்டம் போடவும் பொழுது போக்கவும் தான் சென்றிருந்தோம். எங்கள் தலைவரும் செயலாளரும் நாங்கள் என்னவெல்லாம் சேவைத் திட்டங்கள் செய்து கொண்டிருக்கின்றோம் என்று பேசி முடித்திருந்தோம். திடீரென கூட்டம் நடத்திக் கொண்டிருந்த தலைவர் கிளம்பிச் சென்று விட்டார். எங்களுக்கோ திகைப்பு. என்ன இது? நம்மை விருந்தினர்களாக வரவேற்று விட்டு, சொல்லாமல் கொள்ளாமல் சென்று விட்டாரே. இது நன்றாகவா இருக்கின்றது? என்று நினைத்துக் கொண்டோம். அடுத்ததாக வந்த அந்த சங்கத்தின் செயலாளர் எடுத்ததுமே தலைவர் கிளம்பிச் சென்றதற்கு வருத்தம் தெரிவித்தார். தலைவர் ஒரு கண்தானத்திற்காகச் சென்றிருப்பதாகவும், அதனால் தான் அவசரமாகக் கிளம்பிச் சென்றதாகவும் அறிவித்தார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அதுவரை அப்படி ஒன்றை நாங்கள் கேள்விப்பட்டிருக்க வில்லை. அவர்களின் பிரதான சேவையாக கண்தானத் திட்டம் செயல்படுத்துவதாகவும் தன் பேச்சில் குறிப்பிட்டார். கூட்டம் முடிவடைந்ததும், நாங்கள் கண் தானம் பற்றி அவரிடம் கேட்டறிந்தோம். தமிழ்நாட்டிலேயே கும்பகோணத்தில் தான் ஆயிரக் கணக்கான மக்கள் இது வரை கண்தானம் செய்திருப்பதாக அவர் சொன்ன போது எங்கள் காதுகளை எங்களாலேயே நம்ப முடியவில்லை. மேலும் ஒரு தகவலும் சொன்னார். இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் இருந்தே நிறைய கண்தானம் கிடைப்பதாகவும் சொன்னார். கண்தானம் பற்றிய முழுவிவரங்களையும் பிரமிப்புடன் கேட்டுக் கொண்டு சிவகாசி வந்து சேர்ந்தோம். கிட்டத்தட்ட 100 உறுப்பினர்கள் கொண்ட எங்கள் சங்க உறுப்பினர்களுக்குள் இந்தச் சேவை செய்தாக வேண்டும் என்ற வெறி ஏற்பட்டது என்றே கூற வேண்டும். அதற்கு கும்பகோணம் சங்கத்திற்கு நாங்கள் நன்றிக் கடன் பட்டிருக்கின்றோம். அப்புறம் தான் பார்த்தால் எங்களூருக்கு அருகில் இருக்கும் விருதுநகரிலேயே 300க்கும் மேற்பட்ட கண் ஜோடிகள் தானமாகப் பெற்றிருக்கின்றார்கள் என்ற விவரம் அறிய வந்தது. சேவை தாகம் மேலும் மேலும் அடங்காமல் நெருப்பாய் எரியலாயிற்று. முழுமூச்சாய் செயலில் இறங்கினோம். முதலில் எங்கள் அரிமா சங்க உறுப்பினர்கள் அனைவரும் கண் தான உறுதி மொழி எடுத்துக் கொண்டோம். எல்லாக் கூட்டங்களிலும் இதை அறிவிக்கச் செய்தோம். இறந்த வீடுகளுக்குச் சென்று ஒவ்வொருவராய்க் கெஞ்சிக் கேட்டுக் கொண்டோம். இப்படியே இரண்டாண்டுகள் ஓடின. இந்த இரண்டாண்டுகளில் நாங்கள் பெற்றிருந்த கண்தானங்கள் எத்தனை தெரியுமா? எங்களுக்குக் கிடைத்த பெயர் என்ன தெரியுமா? தொடர்கின்றேன்.
இந்த இரண்டாண்டுகளில் நாங்கள் பிட் நோட்டீஸ் அடித்து விநியோகித்தோம். எங்கள் செல்பேசி எண்களை விளம்பரப் படுத்தினோம். கண்தான விழிப்புணர்ச்சி செல்லும் இடமெல்லாம் பரப்பினோம். அதன் பலனால அந்த இரண்டாண்டுகளில் எங்களுக்குக் கிடைத்த கண்தானங்களின் எண்ணிக்கை சொன்னால் அதிசயப்படுவீர்கள். பூஜ்ஜியம்! ஆம் ஒன்று கூட பெற முடியவில்லை! எங்களுக்குக் கிடைத்த பெயரோ கண் பிடுங்கிகள் வர்றாங்க என்று! இரண்டாண்டுகள் இப்படியே சென்றன. எங்களுக்கு ஒரே வருத்தங் கலந்த ஆச்சரியம் தான் மிஞ்சியது. நாம் எங்கே கோட்டை விடுகின்றோம் என்று யோசனையில் இருந்தோம். ஆபத்பாந்தவனாக எங்கள் உறுப்பினர்களில் ஒருவரே முன்வந்தார். அவரது சித்தி என்று நினைக்கின்றேன். அவர் இறந்ததும் உறவினர்களிடம் கேட்டு கண் தானம் பெறச் சம்மதம் வாங்கி விட்டார். அது ஒரு மாலை நேரம். 6 மணி என்று நினைக்கிறேன். எங்களுக்கோ முதல் கண்தானம், 6 மணி நேரத்திற்குள் எடுக்க வேண்டுமே என்ற அவசரம். அப்போது தான் ஒரு விஷயம் உணர்ந்தோம். அதாவது கண் தானம் பெறுவது என்பது தனிநபர் முயற்சியோ அல்லது கண் தானம் பெற விரும்புவருடைய முயற்சியோ அல்ல. அது ஒரு கூட்டு முயற்சி. பின்புலத்தில் அசுர வேகத்தில் சேவை மனப்பான்மையுடன் இயங்க வேண்டும் என்று. முதலில் சிவகாசியில் ஒரு கண் டாக்டரிடம் சென்றோம். பெயர் சொல்ல விரும்பவில்லை. அவருக்கு எங்களுக்குத் தெரிந்த விஷயம் கூடத் தெரியவில்லை. உயிரோட இருக்குறவங்க தான் தரமுடியும். அப்படீன்னு ஒரு குண்டு போட்டாரு பாருங்க! அடுத்து ஒருவரிடம் சென்றோம். பாடியை நாளைக் காலை இங்கே கொண்டுவாங்க. எடுத்துத் தர்றேன். என்றார். 6 மணி நேரத்திற்குள் எடுக்க வேண்டும் என்று கூடத் தெரியவில்லை. தவிர இதற்கென பயிற்சி பெற்ற மருத்துவர் மட்டுமே கண்களை எடுக்க முடியும். எங்கள் முதல் கண்தானம் நிறைவுறாமல் போய் விடுமோ என்று அஞ்சினோம். கடைசி வழியாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் சரணடைந்தோம். அவர்கள் ஒரு மருத்துவரைப் போய்ப் பார்க்கச் சொன்னார்கள். சரியாக 10 நிமிடங்களே இருக்கும் வேளையில் அந்த மருத்துவர் மனமுவந்து வந்து சிவகாசியின் முதல் கண் தானத்தைப் பெற்றுத் தந்தார். அவரால் 2 பார்வையற்றவர்கள் மறு நாளே விழி பெற்றனர். அப்புறம் நடந்தவை...
அதன் பிறகு எங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொண்டோம். கண்தானம் கொடுத்தவர்கள் பற்றி அதிக பட்சமாக விளம்பரம் செய்ய ஆரம்பித்தோம். அதனால் கிடைக்கும் பலன் பற்றி விளம்பரம் செய்ய ஆரம்பித்தோம். உதாரணத்துக்கு இது பாருங்கள்! ஒவ்வொரு பள்ளி,கல்லூரி போன்ற தர்மஸ்தாபனங்களுக்குச் சென்று அவர்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினோம். எப்படி என்றால், நீங்கள் கண் தானம் தரவேண்டும் என்றோ அல்லது உறுதி மொழி தாருங்கள் என்றோ அல்ல. உங்கள் வீட்டில் அல்லது அக்கம்பக்கத்தில் இறக்கும் தருவாயில் இருப்பவர்களிடம் கண் தான மகிமை பற்றி விளக்கி அவர்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்துமாறு கேட்டுக் கொண்டோம். ஊர்வலமாகச் செல்லச் செய்தோம்.
2 படங்கள் கிடைக்கவில்லை
இது ஒரு கிராமம். இங்கே சென்று N.S.S. மாணவிகளை அழைத்துச் சென்று ஊர்வலமாய் வந்தது மிகுந்த பயனைத் தந்தது. அடுத்ததாக...
அடுத்ததாக நகரின் பிரதான இடங்களில் இது போன்ற டிஜிட்டலில் தட்டி போர்டு வைத்தோம். இதில் கீழே விளம்பரங்களும் வாங்கினோம். இதனால் பல நன்மைகள். முதலில் உடனே தொலைபேசி எண்ணை மறக்க மாட்டார்கள். மறந்தாலும் சாலைக்கு வந்தாலே தெரியவரும். நிறுவனங்களுக்கும் விளம்பரம். அந்த நிறுவனத்தாரின் குடும்பத்தாருக்கும் கண் தான விழிப்புணர்ச்சி என்று பல பயன்கள் கிடைத்தன. பெறும் வரவேற்பை தற்போதும் பெற்றுத் தருகின்றது இந்த மாதிரி விளம்பரங்கள். ஆனால் ஒன்று. ஏனோ தானோவென்றோ, அல்லது என் எண் வரவேண்டும் என்பதற்காகவோ அங்கே எண்ணைத் தரக் கூடாது. அழைத்த 10 நிமிடங்களில் எந்த இடத்தில் இருந்தாலும் விட்டு ஓட வேண்டும்! உதாரணத்துக்கு ஒரு நிகழ்ச்சி: இப்படித்தான் ஒருவர் அழைத்தார் கண் தானம் செய்ய வேண்டும் என்று. ஓடிப் போய் அங்கிருந்து அவர் எண்ணுக்கு அழைத்தால், நீங்கள் வருவீர்களா என்று பார்ப்பதற்காகச் செய்தேன் என்றாரே பார்க்கலாம். இப்படியும் மனிதர்கள் இருப்பார்கள்.
2 படங்கள் கிடைக்கவில்லை
அடுத்து...
21 ஆகஸ்ட் 2007
யார் கண்தானம் செய்தார்கள் என்பதைப் பற்றிய விளம்பரங்கள் அஞ்சலியுடன் தொடர்வது ஒரு நல்ல விஷயமாகும். எங்கள் சங்கத்தில் ஒரு உறுப்பினர் இந்தச் சேவையைப் பரந்த மனதுடன் அவர் ஒருவரே செய்து வருகின்றார். கீழே கண்ட படத்தைப் பாருங்கள். இது போன்ற சுவரொட்டிகள் கண் தானம் செய்த 2 மணி நேரத்திற்குள் ஊர் முழுதும் ஒட்டப்படும். இதனாலும் விழிப்புணர்ச்சி அதிகரித்தது.
படம் கிடைக்கவில்லை
ஒரு கண் தானத்திற்கு என்றால் சரி தான். ஆயிரம் ரூபாய் ஆகின்றது. இது போன்ற சுவரொட்டிக்கு. ஆனால் 175க்கு மேல் கண்தானம் என்னும் போது அது ஒரு மாபெரும் சேவை தான். லட்ச ரூபாய்க்கு மேல் ஒருவர் இதற்காகச் செலவளிக்கின்றார். முதல் கண்தானம் செய்யும் போது மருத்துவர் நிறைய செவிலியருடன் வருவார். அரை மணி நேரத்திற்கு மேல் நேரம் எடுக்கும். அந்த இல்லத்தவர்களோ ரொம்பப் பரிதவிப்பார்கள். இறந்த வீடு அல்லவா? அடுத்தடுத்த சடங்குகள் செய்ய வேண்டுமே. அதனால் அவசரப்படுத்துவார்கள். அதிலும் நெருங்கிய உறவினர்களைக் கூடச் சரிக்கட்டி விடலாம். யாராவது பெரிய மனுசன் தோரணையில் அங்கே ராஜாங்கம் நடத்துவாங்க பாருங்க, அவங்களைத் தான் சரிக்கட்ட முடியாது. இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் சமாளிக்கக் கற்றுக் கொண்டோம். இறப்பு நடந்த இடத்தை இரண்டு விதமாய்ப் பிரிப்போம். எங்கள் உறுப்பினர்களுக்குத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று. தெரிந்தவர்கள் என்றால் அவரே முக்கியமானவர்களிடம் பேசி சம்மதம் வாங்குவார். தெரியாதவர்கள் எனின் யாரேனும் தெரிந்தவர்கள் இருக்கின்றார்களா என்று பார்ப்போம். அப்படி இருந்தால் அவர்கள் மூலம் தூது விடுவோம். யாருமே இல்லையெனின் தடாலடியாக மகனோ, மகளோ யார் முடிவெடுக்கின்றார்கள் என்று சமய சந்தர்ப்பம் பார்த்து அவர்களிடமே பேசிவிடுவோம். இதற்கு ஒவ்வொரு விதமான பணிக்கும் எங்கள் உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் தயாராய் இருப்பார். மருத்துவர்களின் சேவை தான் இன்றியமையாதது. கண் தானம் என்பது விளக்கானால், அதன் திரி மருத்துவர்கள், ஜோதி இறந்தவரின் கண், எண்ணெய் நெருங்கிய உறவினர்கள். எங்கள் பணியோ தூண்டுகை மட்டுமே. ஆரம்பத்தில் மருத்துவர்களுக்காக மிகச் சிரமப்பட்டோம். விருதுநகரிலிருந்து கூட வரவழைத்திருக்கின்றோம். அப்போது தான் ஆபத்பாந்தவனாக மருத்துவர் வெங்கடேஷ் வந்து சேர்ந்தார் எங்களுடன். இளைஞர். அப்போது தான் படிப்பை முடித்து வந்திருந்தார். மிகுந்த ஆர்வத்துடன் கண்களை அகற்றுவது குறித்து கற்றுக் கொண்டார். தொலைபேசியில் எந்த நேரத்தில் அழைத்தாலும் உடனே ஓடிவரும் பண்பாளர். அவர் மனைவியும் மருத்துவர் தான். முகஞ் சுழிக்காமல் நமக்கு முன் வந்து நிற்பார். அவர் மட்டும் தான் வருவார். முதலில் கால்மணி நேரம் என்று ஆரம்பித்தது இப்போது 5 நிமிடம் தான் அவருக்கு. கண்களை வாங்கி உள்ளே வைப்பதெல்லாம் நாங்களே செய்து விடுவோம். எனவே யாருக்கும் பிரச்னையே கிடையாது. என் கைகளாலேயே நிறைய கண்களை வாங்கி பெட்டிக்குள் வைத்திருக்கின்றேன்! அப்படி வாங்கும் போது தோன்றும் நினைவுகள்...
23 ஆகஸ்ட் 2007
என் கைகளில் கண்களை வாங்கும் போதெல்லாம், 'இறைவா என் இறப்பின் போதும் இதே போல் என் கண்களும் எடுக்கப்பட்டு உபயோகப்படவேண்டும்" என்ற பிரார்த்தனை தான் என் மனதில் ஓடும். ஒரு விபத்தில் இறந்த 13 வயது சிறுவனின் கண்களை மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து தானம் கொடுத்த தகப்பனார் சிவகாசியில் பெற்ற விழிப்புணர்ச்சியால் இந்தக் கண்களைத் தானம் செய்ததாகக் கூறி அதற்கான பாராட்டு எங்களை வந்தடைந்த போது தான் உண்மையில் நாங்கள் விழித்தெழுந்தோம். சிவகாசி அருகே வடமலாபுரம் என்னும் ஊரில் ஒரு கண் தெரியாத முதியவர் எங்கள் சேவை பற்றிக் கேள்விப்பட்டு அந்தக் கிராமத்தில் நடக்கும் ஒவ்வொரு துக்க நிகழ்ச்சியின் போதும் அங்கே சென்று, என்னைப் போல் இருப்பவர்களுக்கு கண்ணைத் தானம் செய்யுங்கள் என்று கேட்டு இது வரை அந்தக் கிராமத்தில் இருந்து மட்டும் நிறைய கண் தானங்களை இன்னும் பெற்றுத் தருவது நெகிழ்ச்சியான சம்பவம் ஆகும். நாங்கள் கண்களை என்றும் தானமாகப் பெற்றுத் தான் வழக்கம். ஆனால் ஒரு முறை அதை விலைக்கு வாங்கும் சம்பவமும் நிகழ்ந்தது. அது...