யாத்திரை அனுபவங்கள்~7 நிமிட வாசிப்பு18 ஆண்டுகளுக்கு முன் எழுதியது

காஞ்சி உலாவும், நினைவுகள் உலாவும்.

முத்தமிழ் மன்றத்தில் எழுதியது · 21 பிப்ரவரி 2008 – 1 மார்ச் 2008

17-02-2008. ஞாயிற்றுக்கிழமை. சென்னை. எப்போதும் போலன்றி அதிகாலை 5.30 மணிக்கெல்லாம் விழித்து அலைபேசி எழுப்புவதற்குள் அதன் வாயை அடக்கினேன். எழுந்து 6 மணிக்குள் கிளம்பி வள்ளுவர்கோட்டத்திலிருக்கும் எங்கள் அலுவலகத்திலிருந்து கிண்டி ரயில் நிலையம் கொண்டு வந்து விட்ட ஊழியர் சதீஷிற்கு நன்றி சொல்லி இறங்கும் போது நேரம் சரியாக 6.30. அப்போது தான் கதிரவன் பூமியின் மீது தன் பொன்னொளிகளைப் பரப்ப ஆரம்பித்திருந்தான். கிண்டி ரயில் நிலையத்துக்கு எதிரே இருக்கும் திரு.வி.க. தொழிற்பேட்டை அலுவலகத்துக்கு முன் நின்று கொண்டு சுதாகரைத் தொலைபேசியில் அழைத்தேன். வேன் ஓட்டுநருக்காகக் காத்திருப்பதாகவும், சரியான நேரத்துக்கு வந்து விடுவதாகவும் கூறினார். சிறிது நேரத்தில் சங்கரும் (நம் மன்றத்தில் மேகம்), அவரது தாயார் இசாம்மாவும் வந்தார்கள். அப்போது மணி 6.45 இருக்கும். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, திடீரென தொழிற்பேட்டையிலிருந்த வேப்ப மரங்கள் வேகமாக ஆட ஆரம்பித்தன. யாரையோ வரவேற்பது போல் தோன்றியது! பார்த்தால் வேப்பிலைக்காரி சூரியகாந்தி! நான் பளிச் நிறத்தில் போட்டிருந்த சட்டையைப் பார்த்ததும் அத்தனை கூட்டத்திலும் என்னைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டு வந்து சேர்ந்தார்! ஆன்லைனில் மட்டுமே சந்தித்திருந்த அன்பின் சூரியகாந்தியை நினைத்ததைக் காட்டிலும் எளிமையாய் புன்னகை தவழும் முகத்துடன் நேரில் கண்ட மகிழ்ச்சி. தலை கால் புரியவில்லை. ஷீ-நிசி வந்து சேர்ந்தார் சிறிது நேரத்தில். அனைவரும் குசலம் விசாரித்துக் கொண்டோம். "அங்கிருந்து கொஞ்ச தூரம் நடந்து வாருங்கள் எல்லோரும் காத்திருக்கின்றோம்" என்று சுதாகர் அழைக்கவும் நாங்கள் அங்கே சென்று சேரவும் சரியாக இருந்தது. அங்கு விவேக், சசிக்குமார், செல்வமுரளி, அவரது நண்பர் சக்திவேல் மற்றும் சுதாகரை பத்திரமாகக் கொண்டு வந்து விட்ட அவரது இல்லத்தரசி அனைவரும் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்! எல்லோரும் ஒருவரை ஒருவர் கண்ட மகிழ்ச்சியில் என்ன பேசுகின்றோம் என்றே தெரியாமல் பேசிக் கொண்டிருந்தோம். வாகனம் சரியான நேரத்தில் வந்து சேர்ந்தது! நாம் ஒரு விஷயத்தினை மிகவும் ஆழமாக நம்பியிருப்போம். அப்படித்தான் நானும் சுதாகரை நம்பியிருந்தேன். ஆனால், என் நம்பிக்கை அவர் விஷயத்தில் பொய்த்துப் போனது. அது என்ன? (தொடர்கின்றேன்)

22 பிப்ரவரி 2008

நம் மன்றத்தில் சுதாகர் தான் கொஞ்சம் வயதானாலும் (40+லாம் ஒரு வயதா என்று அவர் கேட்பது காதில் விழுகின்றது!. அவர் கோவித்துக் கொண்டாலும் பரவாயில்லை! பொறாமை தான்!) இளமையாகத் தெரிகின்றார் என்று நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் எங்கள் எல்லோர் முன்னும் வந்து நின்று மன்றத்தவர்கள் நீங்கள் தானே என்று கேட்டவரைப் பார்த்ததும் அந்த நம்பிக்கை சுக்கு நூறாகி பொய்த்துப் போனது! ஆம். சுப்பு ஐயா அத்தனை இளவட்டமாக வந்திருந்தார்! ஆரத்தழுவிக் கொண்டார்! ஆக, நான், சூரியா, சுதாகர், சங்கர், இசாம்மா, சக்திவேல், விவேக், சசி, ஷீ-நிசி, செல்வமுரளி, சுப்பு ஐயா ஆகியோர் வேனில் கிளம்பினோம். மன்னை ஐயாவும், ஜலசயனரும் பூந்தமல்லியில் காத்திருந்தார்கள். அவர்களை அங்கே இருந்து அழைத்துச் செல்வதென்று முடிவு செய்தோம். மணிப்பாண்டியின் அலைபேசி எண்ணை யாருமே வாங்காதது குறித்துக் கவலையுற்றோம். வேனில் ஏறிக் கிளம்பிய சிறிது நேரத்திலேயே காகிதனின் அலைபேசியிலிருந்து அந்த அதிர்ச்சிச் செய்தி என்னை வந்து சேர்நதது. அவரது அம்மாவை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும், மன்றத்தில் வழிபாடு செய்யுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார். அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு, சுற்றி முற்றியும் பார்த்தேன். அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக ஆட்டமும் பாட்டுமாக இருந்தனர். சரி முதல் கோவிலுக்குச் செல்லும் போது விஷயத்தை அனைவரிடமும் சொல்லி பிரார்த்தனை செய்வோம் என்று அப்போதைக்கு விட்டு விட்டேன். சென்னைக்குக் கிளம்பும் அவசரத்தில் கேமராவை எடுத்து வரவில்லை என்று ரயில் சிவகாசி தாண்டியதும் தான் எனக்கு உறைத்தது. ஆனால், அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்று எண்ணும் வண்ணம் அனைவரும் புகைப்படக் கருவி கொண்டு வந்து பல படங்களை எடுத்தனர். நான் கேமிரா கொண்டு வராததால் சூரியாவின் கேமிராவைத் தற்காலிகமாகக் கையகப்படுத்திக் கொண்டேன்! சசி தன் புதிய கேமிரா கொண்டு பல கோணங்களில் படங்களைச் சுட்டார்! வேனில் இசைக்கருவியின் பாடல்களுக்கு எதிர்ப்பாட்டு பாடியும், சோக கீதங்களை சுக கீதங்களாய் மாற்றியும் பின்னால் சங்கப்பலகையிலிருந்து விவேக், சசி, நிசி, முரளி கோஷ்டியினர் எடுத்து விட்டுக் கொண்டிருந்ததில் பூந்த மல்லி வந்ததே தெரியவில்லை! பூந்தமல்லியில் சயனரும், அவரது துணைவியார் மற்றும் அவர்களின் தவப்புதல்வியும் வேனில் ஏறினர். அவர்களுடன் காத்திருந்த மன்னையார் தம்முடன் வந்திருந்த அடியார் கூட்டத்திற்கும் சேர்த்து வேனில் இடமிருக்குமா என்ற சந்தேகத்தில் பேருந்தில் வருவதாய்ச் சொல்லி விட, வேன் புறப்பட்டது.

காலை உணவு அருந்த ஒரு உணவகத்தில் வண்டி நின்றது.
அங்கு...
(தொடர்கின்றேன்)

உணவகம் நிறைய பேர் உணவருந்துமாறு பிரமாண்டமானதெல்லாம் இல்லை. இருந்த போதிலும் வெளியே பல வாகனங்கள் நின்றிருந்ததைப் பார்த்ததும், "அடடா, லீ மெரிடியனிலேயே சாப்பிட்டிருக்கலாமே, இங்கே தாமதமாகுமே!" என்று தோன்றியது. மனதைத் தேற்றிக் கொண்டு உள்ளே நுழைந்தோம். நினைத்தது போலவே சரியான கூட்டம். அனைவரும் இணைந்து சாப்பிட முடியாமல் ஆங்காங்கே கிடைத்த இடத்தில் அமர்ந்தோம். அனைவரும் கேமிராவை எடுத்து கிளிக்கியதைப் பார்த்து உணவகமே சற்று ஆடிப் போனது என்று தான் சொல்ல வேண்டும்! பிளாஷ் வெளிச்சத்தில் நிறைந்தது! சும்மா சொல்லக் கூடாது. சிற்றுண்டி மிகவும் சுவையானதாய் இருந்தது. பரிந்துரை செய்த சயனருக்கு நன்றி! அனைவரும் மீண்டும் வண்டியில் ஏறிக் கொள்ள வண்டி கிளம்பியது. சயனரின் சுட்டி அம்ருதோத்பவி அம்மா, அப்பா, இசாம்மா கோண்டு! வேறு யாரிடமும் ஒட்டவில்லை! அடிக்கடி பழகி, கொடுக்கல் வாங்கல் இருந்தால் நம்மிடமும் ஒட்டிக் கொள்வாள் போல. தங்குதடையில்லாப் பாதையில் வண்டி சென்று கொண்டிருந்த நேரத்தில், ஸ்ரீ பெரும்புதூரில் அமரர் ராஜீவ் காந்தி நினைவு மணி மண்டபம், பிரம்மாண்டமான நோக்கியா அலைபேசி தொழிற்சாலை ஆகியவற்றை வண்டியில் இருந்தே பார்த்து மகிழ்ந்தோம். இதற்குள் சுப்பு ஐயா ஒரு குறிப்பேட்டில் ஒவ்வொருவரின் பெயர், புனைபெயர் (அது சூரியாவின் கைவண்ணத்தில் பூனைபெயர் ஆனது தனிக்கதை!) அலைபேசி எண், விலாசம், மின்னஞ்சல் ஆகியனவற்றை அவரவர் கையெழுத்திலேயே சேகரித்துக் கொண்டிருந்தார். நிசி கடைசி வரை கவிதை சொல்கின்றேன் என்று சொல்லிவிட்டு ஏமாற்றிவிட்டார். அதனால் இப்போது கவிதையெல்லாம் அவர் தான் எழுதுகின்றாரா என்ற சந்தேகம் வந்ததென்னவோ உண்மை! :) இவ்வாறு பொழுது மிக விரைவாகக் கரைந்தது. வண்டியும் காஞ்சியை நெருங்கியது. ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் தூரத்தில் கண் முன்னே விரிந்தது. திடீரென வண்டியும் குலுக்கலோடு நின்றது. (தொடர்கின்றேன்)

1 மார்ச் 2008

வண்டி குலுக்கலுடன் நின்றதன் காரணம் ரயில் வண்டி. அதனால் விளைந்த காரியம் சசிக்குமாருக்குச் செலவு. ;) ரயில் வண்டி குறுக்கிட்டதால் வேன் சிறிது நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. முதலில் இறங்கிய சசிக்குமார் குளிர்பானம் வாங்கி வருவதாகச் சென்று அது கிடைக்காமல் தண்ணீரோடு வந்து சேர்ந்தார். பின்னர் வண்டி காஞ்சிபுரம் ரயில் நிலையத்தைக் கடந்து கோவிலுக்குச் சென்றது. அங்கே ஏற்கனவே மன்னையார் முன்கூட்டியே சென்று எங்களுக்காகக் காத்திருந்தார். நாங்கள் சென்ற கோவில்களைப் பற்றி நண்பர்கள் பலரும் சொல்லி விட்டார்கள். ஜுரசுரேஸ்வரர் ஆலயம் பற்றியும் நண்பர்கள் ஏற்கனவே சொல்லியது போல் காகிதரின் அன்னைக்காக வேண்டிக் கொண்டோம். மன்னையாரே அர்ச்சகராய் மாறி ஈஸ்வரனுக்கு அபிஷேக ஆராதனை செய்தது மனதை நெகிழச் செய்தது. கோவிலின் வட்டவடிவக் கருவறை சிறப்பு. மேலும் கோவிலைச் சுற்றிலும் குளிர் நிழல் போர்த்தும் மரங்களின் பசுமை கோவிலை விட்டு வெளியேற மனமின்றி ஈர்த்தது உண்மை. அனைவரும் சிறிது நேரம் அங்கேயே கழி(ளி)த்தோம். அங்கிருந்து கைலாசநாதர் திருக்கோவிலுக்குச் சென்றோம். வெளியிலிருந்தே தரிசித்து பின்னர் சிறிது தூரத்தில் அமைந்திருந்த மதிய உணவு தயாராயிருந்த பூங்காவனம் பள்ளிக்குச் சென்றோம். பூங்காவனம் பள்ளி - ஒருமாதிரிப் பள்ளி அல்ல :) ஒரு மாதிரிப் பள்ளி. ஒரு பள்ளி எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இருந்த பள்ளி. செயல்வழிக் கற்றலில் சிறந்த பள்ளி. மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நேரடி கவனம் முழுதும் பதியும் குருகுலக் கல்வியை நடைமுறைப்படுத்தும் அழகிய பள்ளி. குழந்தைத் தொழிலாளர்களையும், பள்ளியே கண்டிராத கிராமத்துக் குழந்தைகளையும், படிக்காது என்று ஒதுக்கப்பட்ட குழந்தைகளையும் மீட்டு அவர்களை மீண்டும் கல்வியாற்றில் சேர்க்கும் படித்துறைப் பள்ளி பூங்காவனம். அங்கே நாங்கள் செல்லும் போது மருத்துவ முகாம் நடந்து கொண்டிருந்தது. அமைப்பாளர் முகாம் பற்றி விளக்கிக் கூறினார். எவ்வாறு கிராம மக்களுக்கு உடல் நலம் பேண ஊர் ஊராகச் சென்று மருத்துவ வசதி அளிக்கின்றோம் என்றும், நோய் நாடி நோய் முதல் நாடி எவ்வாறு நோய் வரும் முன்னே அதைக் கண்டறிந்து பலரைக் காக்கின்றோம் என்றும் சொன்ன போது உண்மையிலேயே மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது. சுப்பு ஐயாவிலிருந்து நம் மன்ற அன்பர்கள் பலரும் மருத்துவ முகாமில் சேவைப்பணி செய்ததைக் காணும் போது மனதுக்கு நிறைவாய் இருந்தது. அடுத்து நடந்தது தான் எங்கள் பயணத்தின் பயன். (தொடர்கின்றேன்)

மேலும் வாசிக்க

யாத்திரை அனுபவங்கள்

யாத்திரை அனுபவங்கள்

விருதுபட்டி பொங்கல்

அரசியல் மாநாடுகள் இல்லாத அந்தக் காலத்திலேயே மக்கள் சமுதாய ஒற்றுமைக்கு தங்களுக்குத் தாமாகவே நிர்ணயித்துக் கொண்ட சமூக மாநாடுகள் தான் கிராமத்துத் திருவிழ…

யாத்திரை அனுபவங்கள்

நீலச் சுடர் முகமும், முப்பெருந்தேவியரும்

25-01-2007 வியாழனன்று சிவகாசியிலிருந்து புறப்பட்ட 7 பேர் கொண்ட குழுவில் நால்வர் பட்டயக் கணக்காளர்கள், ஒரு குடும்பத்தலைவி, இரு கல்லூரிப் பேராசிரியர்கள்…

யாத்திரை அனுபவங்கள்

திடீர்க் குறவஞ்சி

சென்ற வாரம் சனிக்கிழமை 20-01-2007 . வீட்டில் வெகுநாட்களாகத் தொடர்ந்த முணுமுணுப்பு அன்று வெடித்தே விட்டது! எப்போது பார்த்தாலும் நண்பர்கள், கோவில்கள், ய…