கணினி~12 நிமிட வாசிப்பு18 ஆண்டுகளுக்கு முன் எழுதியது

நீள் படம் (பனோரமா) தயாரிக்கலாம் வாங்க!

முத்தமிழ் மன்றத்தில் எழுதியது · 28 ஆகஸ்ட் 2008 – 23 மே 2009

திரைப்படம் வந்த புதிதில் 16 mm படங்கள் பிரபலமாக இருந்தது. பின் 35 mm படங்கள் வந்தன. படங்கள் பெரிதாகப் பெரிதாகக் காட்டப்படும் காட்சி மக்களின் மனதை வசீகரிக்கின்றது என்றால் அது மிகையாகாது. பின்னர் 70 mm படங்கள் வந்து அசத்தின. இப்போது 35 mm படங்கள் எடுக்கப்படுகின்றனவா என்று கூடத் தெரியவில்லை. கண்கள் கூர்ந்து கவனிக்கையில் கதாநாயகனோ, நாயகியோ அல்லது கவனிக்குமாறு தெரிவு செய்து காட்டப்படும் (focus) எந்தப் பொருளைக் கண்டாலும், அதைச் சுற்றியுள்ள இடத்தினால் தான் அக்காட்சிக்கு மெருகு கூடுகின்றது. கண்களை அகல விரித்துப் பார்த்தார் என்று கேள்விப்பட்டிருப்போம். அது ஏன் நீளமாக விரித்துப் பார்த்தார் என்று சொல்வதில்லை?! :) ஏனென்றால் ஏற்கனவே நீளமாகப் பார்ப்பது போல் தான் கடவுள் நமக்குக் கண்களைப் படைத்துள்ளார்! ஒரு கண்ணால் பார்க்கும் போது சதுரமாகத் தெரியும் காட்சி, இரண்டு கண்களால் பார்க்கும் போது நீளவாட்டில் விரிந்து காணப்படுகின்றது. அது தான் இயற்கை. இவ்வளவு ஏன்? முன்பு 4:3 என்ற விகிதத்தில் இருந்த கணினித் திரைகளின் நீள அகல விகிதம் இப்போது 16:9 என்ற வீதத்தில் இருக்கின்றது. இதில் திரைப்படங்களைப் பார்க்கும் போது ஏற்படும் பிரமிப்பும் நேர்த்தியும் மற்ற திரைகளில் காணக் கிடைப்பதில்லை. கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் 4:3 ம் 16:9ம் ஒரே விகிதம் அல்ல என்பது புலப்படும்! 16:9 ல் நீளம் மிக அதிகம். இத்தனை கதைகள் எதற்கு என்று தானே நினைக்கின்றீர்கள்?! புகைப்படங்கள் மட்டும் இப்பிரமிப்புக்கு விதிவிலக்கா என்ன? இல்லை அல்லவா? எனவே, எல்லோரையும் அசத்துமாறு எவ்வாறு நீளமான பனோரமா புகைப்படங்கள் தயாரிப்பது என்று சேர்ந்து கற்றுக் கொள்வோம். வாருங்கள். கத்துக் குட்டித் தனமாக உருவாக்கிய ஒரு பனோரமா படத்தை எடுத்துக் காட்டாய்க் கொண்டு ஆரம்பிப்போம்.

படம் கிடைக்கவில்லை

மேலே நாம் எடுத்துக்காட்டாய் எடுத்துக் கொண்ட படம் மூன்று படங்களை ஒன்றுடன் ஒன்று தைத்ததனால் கிடைத்த படமாகும். இப்போது நமது முதல் படம் தயாரிக்க மூன்று படங்களைத் தொடர்ச்சியாக இடமிருந்து வலமாக எடுத்துள்ளோம். முதலில் இடப்பக்கமாகப் படம் எடுத்துப் பின்னர் சிறிது வலப்புறம் திரும்பிப் பின் சிறிது வலப்புறம் திரும்பி என, ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவும், ஒரு படத்தில் இருப்பதில் கிட்டத்தட்ட பாதி (1/3 க்கு மேல் இருந்தால் நல்லது) அடுத்த படத்திலும் இருப்பது போன்றும் (அப்போது தான் மென்பொருளால் எந்தப் படத்துடன் எதைத் தைப்பது என்று கண்டறிய முடியும்!) எடுத்துள்ளேன்.

படம் கிடைக்கவில்லை

இந்தப் படத்தைக் காணுங்கள். நாம் தயாரிக்கப் போகும் நீள் படம் இதுவென்றால், நமது மூன்று படங்களும் இது போன்று தைப்பது போல் இருக்க வேண்டும். 1,1 என்பது முதல் படம். 2,2 என்பது 2ம் படம். 3,3 என்பது மூன்றாம் படம். இதோ மூன்று படங்களும். ஏதேனும் சந்தேகமிருப்பின் கேளுங்கள். தொடர்வோம்.

3 படங்கள் கிடைக்கவில்லை

31 ஆகஸ்ட் 2008

இப்போது hugin மென்பொருளை ஓட விட்டதும் கீழ்க்கண்டவாறு தோன்றும். அதில்

படம் கிடைக்கவில்லை

  1. Assistant (துணைவன்)
  2. Images (படங்கள்)
  3. Camera & Lens (புகைப்படக் கருவி மற்றும் ஆடி)
  4. Crop (வெட்டு)
  5. Control Points (கட்டுப்பாட்டுப் புள்ளிகள்)
  6. Optimizer (சீர்படுத்தி)
  7. Exposure (ஒளி திறப்பி)
  8. Stitcher (ஒட்டி)
  9. என்னும் வசதிகள் இருப்பதைக் காணலாம். இப்போதைக்கு கட்டுப்பாட்டுப் புள்ளிகள் பற்றிச் சிறிது காண்போம். கட்டுப்பாட்டுப் புள்ளிகள்: நாம் எடுக்கும் எண்ணியல் படங்கள் (Digital Photos) எல்லாமே புள்ளிகளால் ஆனவை என்று அறிந்திருப்போம். உதாரணமாக 800 x 600 படங்கள் என்றால் 800 நிரல்களும், 600 வரிகளும் கொண்ட படம் என்றும், மொத்தம் 480000 புள்ளிகள் கொண்டது என்றும் அறிவோம். நாம் எடுக்கும் படத்தில் தனித்துத் தெரியும் எந்த ஒரு பொருளையும் உருவாக்கும் புள்ளிகள் கொண்ட குழுவே கட்டுப்பாட்டுப் புள்ளிகள் எனப்படுகின்றது. உதாரணமாக ஒரு வீடு என்று எடுத்துக் கொண்டால், கதவு, ஜன்னல், பாதை போன்றவை கட்டுப்பாட்டுப் புள்ளிகளாக இருக்கலாம். இதே போன்று இன்னொரு படத்திலும் இதே வீடு (சற்றுத் தள்ளி, நமது நீள் படத்துக்காக) இருக்கின்றது என்றால், அதிலும் அதே கதவு, ஜன்னல் ஆகியவை கட்டுப்பாட்டுப் புள்ளிகளாக்கலாம். இப்போது இரு படங்களிலும் இருக்கும் கட்டுப்பாட்டுப் புள்ளிகளைக் கொண்டு இரு படங்களையும் இணைத்து ஒட்டலாம். நீள் படமாக்கலாம். இரண்டு படங்களிலும் தலா, இரண்டு கட்டுப்பாட்டுப் புள்ளிகள் இருந்தால் போதும்! இரண்டு படங்களையும் இணைக்க இயலும். ஆனால், கட்டுப்பாட்டுப் புள்ளிகள் அதிகரிக்க அதிகரிக்க ஒட்டும் படத்தின் தரம் அதிகமாகும். இனி, படங்களைச் சேர்க்கும் போது இந்தக் கட்டுப்பாட்டுப் புள்ளிகள் பற்றி அதிகம் காண்போம். இப்போது மேற்கண்ட படத்தில் கண்டது போல், Load Images என்னும் பொத்தானைத் தட்டி நமது ஒட்ட வேண்டிய படங்களை வரிசையாகத் தேர்ந்தெடுக்கவும். எந்த வரிசையில் வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். :)

இப்போது படங்களைக் கீழ்க்கண்டவாறு தேர்ந்தெடுங்கள். மூன்று படங்கள் என்று இல்லை. எத்தனை படங்கள் வேண்டுமானாலும் சேர்க்கலாம். ஒவ்வொன்றாகவும் தேர்ந்தெடுக்கலாம். உங்களுக்கு எது வசதியோ அவ்வாறு செய்து கொள்ளுங்கள்.

படம் கிடைக்கவில்லை

தேர்ந்தெடுத்ததும் கீழ்க்கண்டவாறு உரையாடல் பெட்டி தோன்றும். அதில் புகைப்படக் கருவி மற்றும் ஆடி குறித்த தகவல்கள் கேட்கப்படும். புகைப்படக் கருவிகளும் ஆடிகளும் (lens) பல வகையுண்டு. சாதாரணமாக நாம் உபயோகிக்கும் கருவிகளின் நோக்குக் கோணம் (Angle of View) 50 டிகிரிகளே இருக்கும். மீன் கண் ஆடி (fisheye lens) என்று ஒன்று உண்டு. மேலும் 360 டிகிரி பார்க்கக் கூடிய Equirectangular ஆடிகளும் உண்டு. நாம் சாதாரண புகைப்படக் கருவி கொண்டு இப்படங்களை எடுத்திருப்பதால் Normal rectilinear (சாதாரண, நேர் செவ்வக புகைப்படக்கருவி) என்று தேர்ந்தெடுங்கள். ஏற்கனவே அது தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். இப்போது மற்ற விவரங்கள் எதுவும் நமக்குத் தேவையில்லை. நாம் மென்பொருள் மூலமாகவே ஒட்டப் போவதால் இப்போதைக்கு Cancel கொடுத்து வெளியேறுங்கள்.

படம் கிடைக்கவில்லை

படங்களைத் தேர்ந்தெடுத்த பின்னர் கீழ்க்கண்ட ஒழுங்காக்கும் Align பொத்தானை அழுத்துங்கள்.

படம் கிடைக்கவில்லை

இப்போது மென்பொருள் தாமாகவே கட்டுப்பாட்டுப் புள்ளிகளைத் தேர்ந்தெடுக்கும். அதற்கு முன் ஒவ்வொரு படத்திலும் தனித்துத் தெரியும் புள்ளிகளாகத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பட்டியலிட்டு சேமித்துக் கொள்ளும். அப்புள்ளிகளைக் குறிப் புள்ளிகள் (Key Points) என்று பெயரிட்டு அழைக்கின்றார்கள். எனவே ஒவ்வொரு படங்களிலும் பல குறிப் புள்ளிகள் இருக்கும். இதே போன்ற குறிப்புள்ளிகள் அடுத்த படங்களில் எங்கே இருக்கின்றன என்பதைப் பொருத்து படங்கள் ஒட்டப்படும். இவ்வாறு இரு குறிப்புள்ளிகள் ஒரே போல் தன்மையுடையதாய் இருந்தால் அவை அவ்விரண்டு படங்களுக்கிடையேயான கட்டுப்பாட்டுப் புள்ளிகள் ஆகிவிடும். உதாரணமாக நமது ஒரு படத்தில் மட்டும் தனிப்பட்ட 1021 குறிப்புள்ளிகள் :) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றது பாருங்கள். நாமாக இப்படித் தேர்ந்தெடுக்க முடியும் என்று நினைத்துக் கூடப் பார்க்க இயலவில்லை. கணினி கணினி தான். :)

படம் கிடைக்கவில்லை

அவ்வளவு தான்! நமது நீள்படம் உருவாக்கும் பணி 90% நிறைவுற்றது. அட! அவ்வளவு தானா? என்கின்றீர்கள் தானே? ஆமாம், அவ்வளவு தான். மென்பொருளின் மகத்துவம் அப்படி! அது எப்படி என்றும், மீதி 10% எப்படி என்றும் இப்போது காண்போம்! இப்போது படங்களை align கொண்டு ஒழுங்காக்கியதும், மென்பொருளாகவே கட்டுப்பாட்டுப் புள்ளிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை ஒட்டி கீழ்க்கண்டவாறு முன்பார்வை (preview) வழங்கும்.

படம் கிடைக்கவில்லை

இந்த உரையாடல் பெட்டியில் பல வசதிகள் இருக்கின்றன. ஒவ்வொன்றாய்ப் பார்க்கலாம். தொடுவானம்: (Horizon) எந்த ஒரு நீள் படத்திலும் மிக முக்கியமானது தொடுவானம் ஆகும். வழக்கமாக இயற்கைக் காட்சிகளோ அல்லது பெரிய கட்டிடங்களையோ தூரத்தில் இருந்து நீள்படங்கள் எடுப்பதால், எப்படியும் தொடுவானம் தெரிவதாலும் புகைப்படக் கருவியை குறுக்கு வாட்டில் நாம் அசைத்து ஒவ்வொரு படத்தையும் எடுப்பதால் தொடுவானம் ஒரு மிக முக்கியமான தொடர்பு மற்றும் இணைப்புப் பணியைச் செய்கின்றது. தொடுவானத்தை அடிப்படையாகக் கொண்டு எல்லாப் படத்தையும் தொகுக்கின்றனர். தொடுவானமே நீள்படத்தின் முதுகுத்தண்டாய் இருக்கின்றது என்று சொல்லலாம். எனவே படத்தில் இருக்கும் உண்மையான தொடுவானத்தையோ அல்லது மனதுக்குள் கற்பனையான தொடுவானத்தையோ படத்தில் உருவாக்கிக் கொண்டு அத் தொடுவானத்தை குறுக்குவசமாக படத்துக்கு நடுவில் கொண்டு வந்து விட்டால் உருவாகும் நீள்படம் அசத்தலாக இருக்கும்.

இப்பொழுது அந்த முன்பார்வை உரையாடல் பெட்டியில் கீழே கண்டவாறு சுட்டிக் காட்டியிருக்கும் விஷயங்களை ஒவ்வொன்றாக மாற்றிப் பார்ப்பதால் படம் எப்படி மெருகேறுகின்றது என்று காண்போம்.

படம் கிடைக்கவில்லை

முதலில் படத்தில் கீழே அம்புக்குறி இட்டுக் காட்டியிருக்கும் "Left click to define new center point, right click to move point to horizon என்றிருப்பதைக் கவனியுங்கள். படத்தின் குறுக்கு மையம் (தொடுவானம்) (Horizontal & vertical) எது என்று உத்தேசமாகக் கண்டறிந்து அந்த இடத்தில் இடது சொடுக்கும், பின்னர் படத்தைச் சுழற்ற வேண்டுமென்றால் அத்தொடுவானத்தில் வரவேண்டிய ஏதேனும் ஒரு பகுதியில் வலது சொடுக்கும் செய்தால் போதுமானதாகும். படத்தில் நகர்தல் மற்றும் சுழல்தல் தவிர ஏதும் மாற்றம் ஏற்படாது என்பதால் சோதனையாக இடது சொடுக்கும் வலது சொடுக்கும் செய்து பாருங்கள். மேலே இருக்கும் 0 1 2 ஆகிய எண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை வட்டமிட்டுக் காட்டியிருக்கின்றேன் தானே? அவற்றில் ஒவ்வொன்றாய் நீக்கி விட்டும், சேர்த்து விட்டும் பாருங்கள். 0 என்னும் எண்ணை நீக்கி விட்டால் கீழே நமது படத்தில் இடது ஓரப் படம் நீங்கி விடுவதைக் காணலாம். இவ்வாறு ஏதேனும் ஒரு படம் நமக்குத் தேவையில்லை என்றாலும் கூட நீக்கி விடலாம். :) இதன் மூலம் மென்பொருள் எத்தனை நேர்த்தியாகப் படத்தினை ஒட்டியிருக்கின்றது என்றும் அறிந்து கொள்ளக் கூடும். அடுத்ததாக இரண்டு புறங்களிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டிருக்கும் நகர்த்திகள் பற்றிக் காண்போம். இவை நோக்கப் பரப்பு (Field of View) என்று அழைக்கப்படுகின்றன. குறுக்கு மற்றும் நெடுக்கு நோக்கப்பரப்புகளைச் சீரமைக்கவே இந்நகர்த்திகள் உதவுகின்றன. நோக்கப்பரப்பு (FoV) என்பது படத்தில் காட்டப்படும் பொருளின் அகலத்தையும், அப்பொருள் நம் கண்களிலிருந்து இருக்கும் தூரத்தின் அளவையும் வகுத்து வரும் விகிதமாகும். அதாவது 2 மீட்டர் அகலமுள்ள பொருளை ஒரு மீட்டர் தூரத்தில் இருந்து கண்டால் நோக்கப்பரப்பின் விகிதம் 2 ஆகும். இப்பரப்பை சுருக்கவோ அதிகரிக்கவோ செய்வதன் மூலம், படத்தினை முன்னும் பின்னும் நகர்த்த இயலும். அவ்வாறு நகர்த்தித் தான் பாருங்களேன். :) இப்போது நமது முதல் நீள்படம் தயாராகிவிட்டது. இன்னும் சில விசயங்கள் பற்றி அடுத்துக் காண்போம்.

இப்போது முன்பார்வை உரையாடல் பெட்டியைத் தவிர்த்து நமது மூல நிரலுக்கு வாருங்கள். அதில் மற்ற அனைத்து வசதிகளும் எவ்வாறு நிரப்பப்பட்டிருக்கின்றன என்று காண்போம். இவையனைத்தையுமே மென்பொருள் இல்லாமல், நாமாகவே செய்யவும் இயலும். ஆனால், அது மிகவும் கடினமாகும். கட்டுப்பாட்டுப் புள்ளிகளைக் கண்டறிவதற்குள்ளாகவே கட்டுப்பாடு இழந்து விடுவோம். :)

படம் கிடைக்கவில்லை

இப்போது Images என்னும் படங்கள் பகுதிக்கு வருவோம். அதில் நாம் எந்த வரிசையில் படங்களைத் தேர்ந்தெடுத்தாலும், மென்பொருளாகவே 0,1,2 என்று வரிசைப்படுத்தி இருக்கின்றது பாருங்கள். இது இடமிருந்து வலமாகும். வலமிருந்து இடமாகவும் படங்களை எடுக்கலாம். அப்போதும் மென்பொருள் அதுவாகவே வரிசைப்படுத்திக் கொள்ளும். சரி இப்படங்களில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் மூன்று Yaw, Pitch and Roll. இவற்றைப் பற்றி விளக்கமாகப் பின்னர் காண்போம். இம்மூன்று காரணிகளால் தான் நீள்படங்கள் ஒழுங்கமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு படத்திற்கும் வெவ்வேறு மதிப்பு இருப்பதைக் காணுங்கள். இவையனைத்தும், நமது கை படங்களை எடுக்கும் போது தெரியாமல் மேலும் கீழும் அசைந்ததாலும் மற்றும் சிறிது கோணம் மாறியதாலும் ஏற்பட்ட கோளாறுகளை நீக்குவதற்காக இம்மூன்று காரணிகளும் உபயோகப்படுகின்றன. இம்மூன்று படங்களில் ஒரு படத்தை நிலையாகக் கொண்டு (நங்கூரப் படம் - Anchor) மற்ற படங்கள் அதனுடன் ஒட்டப்படுகின்றன. மேலும் ஒவ்வொரு படத்துக்கும் மற்றொரு படத்துக்கும் இருக்கும் கட்டுப்பாட்டுப் புள்ளிகள் பற்றியும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்ததாகக் கட்டுப்பாட்டுப் புள்ளிகள் பகுதிக்கு வருவோம். இப்பகுதியில் இரண்டு படங்கள் காட்டப்படுகின்றன. அடுத்தடுத்த இரண்டு படங்களைத் தேர்ந்தெடுத்தால் அவ்விரண்டு படங்களுக்கிடையேயான பொதுவான கட்டுப்பாட்டுப் புள்ளிகள் காணக் கிடைக்கும். கீழே இருக்கும் படத்தில் 0 cloud1.jpg மற்றும் 1 cloud2.jpg ஆகிய இரண்டு படங்களுக்கிடையே இருக்கும் கட்டுப்பாட்டுப் புள்ளிகள் காட்டப்படுகின்றன. மென்பொருள் தானாகவே இப்புள்ளிகளைக் கண்டறிந்து பொதுவான புள்ளிகளைத் தேர்ந்தெடுத்து அதன்படி படங்களை ஒழுங்காக்கியிருக்கின்றது.

படம் கிடைக்கவில்லை

இப்போது நமது படத்தை சேமிப்பது எப்படி என்று காண்போம். இதுவரை என்ன செய்யலாம் எப்படிச் செய்யலாம் என்று மென்பொருள் முடிவு செய்து பின் நாம் அதை நமக்குத் தேவைக்கேற்றவாறு திருத்தி இருக்கின்றோம். இப்போது ஒட்டி (Stitcher) எனும் பகுதிக்கு வாருங்கள். கீழ்க்காணும் படத்தில் காண்பது போல் உரையாடல் பெட்டி தோன்றும். அதில் உருவாக்கப்படப்போகும் நீள்படத்தின் தன்மைகள் அனைத்தும் (உதாரணம் நீளம், அகலம் ஆகியவை) அப்படம் எவ்வகைக் கோப்பாக (tiff/jpg...) சேமிக்க வேண்டும் போன்ற வசதிகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு பின் இறுதியாக Stitch Now! என்னும் பொத்தானைச் சொடுக்கவும். வரும் உரையாடல் பெட்டியில் சேமிக்கும் அடைவினைத் தேர்ந்தெடுத்து கோப்பின் பெயரை இட்டால் நீள் படம் இதோ தயார்!

படம் கிடைக்கவில்லை

மென்பொருள் கீழ்க்கண்டவாறு பல பட்டியல்களைக் கொண்டு படங்களை ஒட்டுகின்றது.

படம் கிடைக்கவில்லை

சரி, நமது நீள்படம் முடிவுற்றதா என்றால் ஒரே ஒரு வேலை மட்டும் பாக்கி உள்ளது. சேமிக்கப் பட்ட படம் கீழே காட்டப்பட்டது போன்று காணப்படும்.

படம் கிடைக்கவில்லை

அப்படத்தில் தேவையற்ற பகுதிகளை ஏதேனும் புகைப்படம் திருத்தும் மென்பொருள் கொண்டு (உதாரணம் Gimp, Photoshop, Irfanview...) நீக்கினால் (crop) நமது நீள்படம் தயாரிக்கும் பணி முடிவுற்றது. :)

படம் கிடைக்கவில்லை

சரி, இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி, மேற்கண்ட நீள் படத்தில் இருக்கும் ஒரு மிகப்பெரிய தவறு என்ன? அதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

14 செப்டம்பர் 2008

இந்த நீள் படம் நான்கு படங்களை ஒட்டி தயாரிக்கப்பட்டது என்று நம்ப இயல்கின்றதா? :) முழு அளவில் படத்தைப் பெரியதாக்கிக் கண்டறியுங்கள். யாரேனும் முயற்சித்தீர்களா?

படம் கிடைக்கவில்லை

23 மே 2009

இரு நீள் படங்களைக் காண்போம். இந்தப் படம் மேலே 12, கீழே 12 என்று 24 படங்களை ஒட்டி எடுக்கப்பட்டது. (முழுமையான படத்தின் 1/2 பகுதியாகச் சுருக்கித் தரவேற்றி இருக்கின்றேன்!)

படம் கிடைக்கவில்லை

இந்தப் படம் மேலே 21 கீழே 21 என்று 42 படங்களை ஒட்டி எடுக்கப்பட்டது. (முழுமையான படத்தின் 1/5 பகுதியாகச் சுருக்கித் தரவேற்றி இருக்கின்றேன்!)

படம் கிடைக்கவில்லை

மேலும் வாசிக்க

கணினி

கணினி

வன்தட்டின் எமன் - SSD

கணினியை உபயோகிக்கும் நம்மெல்லோர்க்கும் வன் தட்டின் முக்கியத்துவம் பற்றித் தெரியும். இப்போது வன் தட்டைக் காணாமல் செய்வதற்கு ஒரு எமன் வந்திருக்கின்றான்…

கணினி

எக்செல்லில் நிபந்தனை வடிவமைப்பு (Conditional Formatting)

உண்டே அருள்! தேதியை வைத்துத் தான் என்றால் மிக எளிதாகச் செய்யலாம்! Conditional Formatting என்று ஒரு வசதி இருக்கின்றது மின்விரிதாளில். அது பற்றி விரைவில…