அலுவலகம் திறப்போம் வாரீகளா?
முத்தமிழ் மன்றத்தில் எழுதியது · 11 அக்டோபர் 2008 – 5 டிசம்பர் 2008
என்ன தான் IBM நிறுவனம் பிசினஸ் மெஷின்ஸ் என்று பெயர் வைத்திருந்தாலும், பெரு வர்த்தகத்துக்கு மட்டுமே கணினிகள் உபயோகிக்க முடியும் என்றொரு காலம் இருந்தது. மிகப்பெரிய இடமும், அதற்கென்று மென்பொருள் இயந்திரக் குறியீடுகளிலேயே எழுதும் வல்லுநர்களும், மிகப்பெரிய முதலீடும் கணினிகளுக்குத் தேவைப்பட்டது. கணினிகளைப் பாமரரும் உபயோகிக்கும் வண்ணம் சமத்துவம் பெற்றது தனிக்கணினிகள் எனப்படும் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் அறிமுகப்படுத்தப் பட்டதால் மட்டுமே என்றால் அதை அனைவருமே ஒப்புக் கொள்வோம். ஒரு பக்கம் வன்பொருட்களில் அத்தகைய புரட்சி வந்ததென்றால், இன்னொரு புறம் மென்பொருட்களிலும் அத்தகைய புரட்சி வந்தது. பொது பயன்பாட்டு மென்பொருட்கள் (General Purpose Application Software) அறிமுகம் செய்யப்பட்ட பின்னரே கணினிகளின் உபயோகமும் பயன்பாடும் பல்கிப் பெருக ஆரம்பித்தது. அதுவே கணினிகளின் சமத்துவப் புரட்சி எனலாம். அத்தகைய புரட்சியை நிகழ்த்தியதில் அலுவலகப் பயன்பாட்டு மென்பொருட்கள் மிக அதிக அளவில் முக்கியத்துவம் பெற்றன. ஆரம்ப கால டாஸ் இயங்கு தளத்தில் வேர்டு ஸ்டார், லோட்டஸ் 123 மற்றும் டேட்டாபேஸ் III ப்ளஸ் போன்ற மென்பொருட்கள் பொதுவான அலுவலகப் பணிகளைத் தானியங்க வைப்பதற்கு மிகவும் உபயோகமாய் இருந்தன. எனக்கு நன்றாக நினைவிருக்கின்றது. அது 1989-90ம் ஆண்டு. அப்போது தான் கணினி பற்றிய ஒரு டிப்ளமோ படிப்பு படிக்க ஆரம்பித்தேன். அப்போதைய பச்சை நிற மோனோக்ரோம் கணினிகளில் பேசிக், சி, பேஸ்கல், கோபால், க்ளிப்பர் போன்ற மொழிகளை உபயோகப்படுத்தி மென்பொருட்களை உருவாக்கவும், அலுவலக மென்பொருட்கள் உபயோகிக்கும் முறை குறித்தும் பயின்றோம். அதற்கு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கணினிகளின் பொது உபயோகம் காட்டுத்தீயாய்ப் பரவ ஆரம்பித்திருந்தது. இந்தியாவையும் அத்தீ ஆட்கொண்டதில் வியப்பில்லை தான். மூளை உழைப்பை வீணடித்துக் கொண்டு ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்யும் பல அலுவலக ஆசாமிகளை விட சில கணினிகளை மட்டும் வைத்து மொத்த அலுவலகத்தையும் தானியங்கியாய்ச் செயல்பட வைக்க முடியும் என்று நிரூபணம் ஆனது. அலுவலக மென்பொருட்கள் என்றாலே அது வேர்ட் ஸ்டார், லோட்டஸ் 123, கோபால்/டிபேஸ் மொழியில் எழுதப்பட்ட மென்பொருட்கள் என்று மிகவும் பிரபலமாக இருந்தது. வேர்ட் ஸ்டார் - கடிதங்கள், ஆவணங்களைச் சேமிக்கவும், மீண்டும் மீண்டும் நகலெடுக்கவும் உபயோகமாக இருந்தது. லோட்டஸ் 123 - இது ஒரு மின்விரிதாள் மென்பொருள். அதன் பெயரில் உள்ளது போலவே, 1 2 3 என்பதற்குள் அத்தனை கணக்குகளையும் முடித்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கேட்கும் ஒரு ஜீபூம்பா பூதம் எனலாம். டிபேஸ்/கோபால் - அலுவலகத்தில் பில் போடுவது, கணக்கு நிர்வகிப்பது, சரக்கு இருப்பைச் சரிபார்க்க என்று இந்த மென்பொருட்களின் எல்லைகள் விரிவடைந்து கொண்டே சென்றன. இவற்றை அசைக்கவே முடியாது என்ற எண்ணத்துக்கு ஆப்பு 90களின் ஆரம்பத்தில் வைக்கப்பட்டது.
12 அக்டோபர் 2008
ஆம். பில் கேட்ஸின் மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் என்னும் வரைகலைப் பயனர் இடைமுகத்தை இயங்குதளத்தில் அறிமுகப்படுத்தியது. அதற்கு முன்னமே ஆப்பிள் நிறுவனம் இதைச் செயல்படுத்தி இருந்தாலும் கூட, அது வரைகலை உபயோகம்/பயன்பாட்டுக்கு மட்டுமே உதவிகரமாய் இருந்தது. ஆனால், விண்டோஸை அறிமுகப்படுத்தியதோடு நில்லாமல், மைக்ரோசாப்ட் நிறுவனமோ விசுவல் மொழிகளையும், அலுவலகப் பயன்பாட்டு மென்பொருட்களையும் வெளியிட ஆரம்பித்தது. விண்டோஸ் 95 போன்ற இயங்கு தளத்தைக் காட்டிலும், அதில் அனைவரும் உபயோகிக்கும் மென்பொருட்கள் வந்த ஒரே காரணத்தினால் மட்டுமே விண்டோஸுக்கு வெற்றி மகுடம் சூட்டப்பட்டது என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை ஆகும். இந்த விநாடி வரை அந்த மகுடம் கழற்றப் படாமல் இருப்பதற்கும் அதுவே காரணமாக இருக்கக் கூடும். மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்புகள் ஒவ்வொன்றாய் வெளி வர ஆரம்பித்தன. முதன்முதலில் அவற்றால் லோட்டஸ் 123, வேர்ட்ஸ்டார் போன்ற அப்போதைய சந்தையில் முன்னால் ஓடிக் கொண்டிருந்த குதிரைகளுடன் போட்டி போட முடியவில்லை என்பது தான் உண்மை. எனவே தான் மைக்ரோசாப்ட் வேர்டு மற்றும் எக்செல் தொகுப்புகளில் கோப்புகளை ஓபன் செய்யும் போது வேர்டு ஸ்டார்/வேர்டு பெர்பக்ட் போன்ற கோப்புக்களையும் திறக்கவும், எக்செல்லில் wk1 போன்ற லோட்டஸ் கோப்புக்களைத் திறக்கவும் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. அதே சமயத்தில் கோப்புக்களை மீளவும் சேமிக்கையில் மைக்ரோசாப்டின் சொந்த முறையான doc மற்றும் xls போன்ற கோப்பு முறைகளில் சேமிக்கப்பட்டன. விண்டோஸ் 3.1, 95, 98, 2000 என்று விண்டோஸ் இயங்குதளம் வளர்ச்சியடைந்தது போலவே அலுவலக மென்பொருட்களையும் சிறந்த முறையில் உருவாக்கி நிர்வகித்தது மைக்ரோசாப்ட் நிறுவனம். இன்றைக்கும் மைக்ரோசாப்டின் அலுவலக மென்பொருட்களின் சந்தை பிரமிக்கத் தக்கது தான். இந்தக் கால கட்டத்தில் லோட்டஸ்/ வேர்ட்ஸ்டாரின் நிலை என்னவாயிற்று? கவலைக்கிடமாயிற்று. லோட்டஸும் தன் பங்குக்கு ஸ்மார்ட்ஷூட் என்ற பெயரில் எம்.எஸ். ஆபீஸுடன் மோதிப் பார்த்தது. டிபேஸின் இன்னொரு மென்பொருள் வடிவான ஃபாக்ஸ் ப்ரோ பின் விசுவல் ஃபாக்ஸ்ப்ரோவாக மைக்ரோசாப்ட்டால் அரவணைத்துக் கொள்ளப் பட்டது. வேர்ட்ஸ்டார் இருந்த இடம் கூடத் தெரியவில்லை. சரி. அப்போது லோட்டஸ் தவிர வேறு மென்பொருட்கள் இல்லையா என்றால் இருந்தன. க்வாட்டர் ப்ரோ போன்ற மென்பொருட்கள் புகழுடன் இருந்தன. இவ்வளவு ஏன் As Easy As என்ற இலவச மென்பொருள் கூட இருந்தது. விண்டோஸ் இயங்கு தளத்திலும் சில காலம் ClarisWorks (இப்போது AppleWorks) என்னும் மென்பொருள் பாப் மற்றும் ஸ்காட் (Bob and Scott) ஆகியோரால் உருவாக்கப்பட்டது.
ஆனால் எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டு ஏப்பம் விட்டு தன்னிகரில்லாப் பெருமை பெற்றது மைக்ரோசாப்ட் ஆபீஸ்.
இதே கால கட்டத்தில் லினக்ஸ் என்னும் திறப்பு மூல இயங்கு தளமும், GNU அமைப்பும் மிகவும் பிரபலமடைய ஆரம்பித்தன. ஆரம்பத்தில் இவை இயங்குதளம் மற்றும் மொழி உருவாக்கம் போன்ற பணிகளிலேயே ஈடுபட்டிருந்ததால் அவைகளால் பொது அலுவலகப் பயன்பாட்டு மென்பொருட்கள் உடனடியாக வெளியிட முடியாத நிலை இருந்தது. இதுவே இம்மென்பொருட்கள் விரைவில் பொதுமக்களைச் சென்றடையவும் பிரபலமாகவும் ஒரு தடையாக இருந்தது எனலாம். இன்றைய ஆபீஸ் 2007 தொகுப்பில் கீழ்க்கண்ட மென்பொருட்களை வழங்குகின்றது மைக்ரோசாப்ட்
* » Access
* » Accounting
* » Communicator
* » Excel
* » FrontPage
* » Groove
* » InfoPath
* » OneNote
* » Outlook
* » Outlook with Business Contact Manager
* » PowerPoint
* » Project
* » Publisher
* » SharePoint Designer
* » Visio
* » Word
விண்டோஸ் விஸ்டா அல்டிமேட்டின் இன்றைய விலை ரூபாய் 7,300 முதல் ரூ. 13,275/-. அதே சமயத்தில் ஆபீஸ் அல்டிமேட் 2007ன் விலையோ ரூபாய் 14,500/- முதல் 26,800/-. கணினி வன்பொருளின் விலை ரூபாய் 20,000/-. இவ்வளவு விலை இருந்தாலும் கூட மென்பொருளின் தரத்தாலும், உபயோகத்தாலும் முன்னணியில் நிற்கின்றது மைக்ரோசாப்ட் ஆபீஸ்.
இத்தகைய வலுவான பின்புலத்துடன் இருக்கும் மைக்ரோசாப்ட் ஆபீஸுக்குப் போட்டியாக எது வர முடியும் என்றொரு எண்ணமும் இருந்தது. ஏன்? இருக்கின்றது இப்போதும். ஆனால், அத்தகைய எண்ணங்களுக்கு ஆப்பு ஒரு வழியாக வந்து சேர்ந்தது. அது ஆபீஸ் தொகுப்பின் விலை. இவ்வளவு விலை கொடுத்து வாங்குவதற்குப் பதிலாக, அதைக் கள்ளத் தனமாக நகலெடுத்து உபயோகப் படுத்தினர் பலர். சில நாடுகளில் விலை கொடுத்து வாங்கியதே இல்லை என்னும் அளவுக்கு கள்ளத் தனமாகச் சந்தையில் இன்றும் உலா வருகின்றது ஆபீஸ் தொகுப்பு. மீண்டும் அதே பழைய கதை தான். வன்பொருளுக்கு ஈடான மிகப்பெரிய முதலீடு செய்ய முடிபவர்களே இம்மென்பொருட்களை வாங்க முடியும் என்ற நிலை. விளைவு? ஆகஸ்டு 1999ல் பலர் கூடித் தேரிழுத்து அலுவலகத்தைத் திறந்தார்கள். ஆம் ஓபன் ஆபீஸ் என்னும் அலுவலக மென்பொருள் தொகுப்பு மைக்ரோ சாப்டின் போட்டியாளர்கள் என்று தன்னைக் கருதிக் கொள்ளும் (?!) சன் மைக்ரோ சிஸ்டம் நிறுவனத்தின் ஆதரவுடன் வெளிவந்தது. முதன் முதலில் எம். எஸ். ஆபீஸ் வெளிவருகையில் லோட்டஸ் போன்ற மென்பொருட்கள் இருந்த இடத்தில், இப்போது எம். எஸ். ஆபீஸும், எம். எஸ். ஆபீஸ் இருந்த இடத்தில் ஓபன் ஆபீஸும் இருந்தது. ஆம் காலச் சக்கரம் மீண்டும் அதே போல் தான் சுழன்றது. ஓபன் ஆபீஸும் doc, xls கோப்புக்களைத் திறக்கவும், பின்னர் சேமிக்கையில் தனது சொந்த முறையான stw, sdc (ஸ்டார் ரைட்டர், ஸ்டார் கால்க்) போன்ற சன் மைக்ரோ சிஸ்டத்தின் ஸ்டார் ஆபீஸ் தொகுப்பில் சேமிக்க ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை நிலைப்படுத்த ஆரம்பித்தது ஓபன் ஆபீஸ். அதற்கு முக்கியக் காரணம் அதன் மூல நிரல் அனைவருக்கும் தெரியும் வண்ணம் திறப்பு மூலமாக இருந்ததும், பலர் வந்து உழைத்ததும் ஆகும். ஜூலை 2000ல் வெளியிடப்பட்ட திறப்பு மூலம் இன்றளவும் செம்மைப் படுத்தப்பட்டும் பல புதுமைகள் புகுத்தப்பட்டும் மேம்படுத்தப்பட்டும் சிறந்த ஒரு அலுவலக மென்பொருளாக உருவாக்கப்பட்டிருக்கின்றது.
அக்டோபர் 2001 வாக்கில் வெளியிடப்பட்ட ஓபன் ஆபீஸ் Build 638C என்னும் தொகுப்பே பேசப்படும் அளவில் வெளியிடப்பட்ட முதல் வெளியீடு ஆகும். மே 2002 ல் 1.0 பதிப்பு வெளியானது. இந்தப் பதிப்பு ஜூலை 4, 2006 வரை மேம்படுத்தப்பட்டு 1.1.5 வரை வெளிவந்தது. அப்போதே பல புதிய வசதிகளுடன் அக்டோபர் 2005 வாக்கில் 2.0 பதிப்பு வெளியானது. ஜூன் 10, 2008 வாக்கில் வெளியான 2.4.1 பதிப்பே கடைசியாய் வெளியான நிலை பதிப்பாகும். இந்தக் கால கட்டத்தில் ஓபன் ஆபீஸின் பயன்பாடு சிறுதுளி பெருவெள்ளமாய்ப் பரவ ஆரம்பித்தது. தகவல் தொழில்நுட்பத்தில் ஒரு கொள்கை உண்டு. அதன் பெயர் மென்பொருள் - தரவு சுதந்திரம் ஆகும். (Program - Data Independence) அதாவது நீங்கள் எந்த மொழியிலும் எந்த இயங்குதளத்தில் இயங்குவதாக இருந்தாலும், உங்களின் தரவு தனிப்பட்ட சுதந்திரம் கொண்டிருக்க வேண்டும் என்பதே அது. உதாரணத்துக்கு பேசிக் மொழியில் எழுதப்பட்ட மென்பொருள் மூலம் உங்கள் அலுவலகக் கணினியில் பில் போட்டீர்கள் என்றால், அதே தரவை, உங்களின் இல்லத்தில் கோபால் மொழியில் எழுதப்பட்ட இன்னொரு மென்பொருள் மூலம் படிக்க முடிய வேண்டும். அப்போது தான் மொழியிலிருந்து தரவு விடுதலை அடைந்து இருக்கின்றது என்று பொருள். இதனாலேயே ODBC, JDBC போன்ற தரவு இணைப்பு முறைகள் பிரபலமாகி சக்கை போடு போட்டுக் கொண்டு இருக்கின்றன. விண்டோஸ் உபயோகத்தாலும், லினக்ஸ் உபயோகித்தாலும் நம் மன்றம் ஒன்றே போல் காணப்படுவதற்கு இத்தகைய சுதந்திரம் இருப்பதே காரணமாகும். சரி, இத்தகைய சுதந்திரம் மைக்ரோசாப்ட் ஆபீஸ் மென்பொருட்கள் மூலம் தயாரிக்கப்படும் கோப்புகளுக்கு இருந்ததா என்றால் இல்லை எனலாம். XLS கோப்புக்களை உருவாக்கவும், திறக்கவும், சேமிக்கவும் எக்செல் தொகுப்பு இருந்தால் மட்டுமே முடியும். ஆனால், அதிலிருக்கும் தரவோ நீங்கள் தயாரித்தது. அதை வேறு வழியில் பார்க்க இயலாவிட்டால் தரவு சுதந்திரம் பறி போகின்றது. இந்தச் சுதந்திரம் இல்லாவிட்டால், அரசு ஆவணங்களை எவ்வாறு ஒரு தனியார் நிறுவனத்தின் மென்பொருளை மட்டுமே நம்பி வைத்திருக்க இயலும் என்ற கேள்வி அரசாங்கத்தில் எழுப்பப்பட்டது. தரவுச் சுதந்திரம் வேண்டும் என்று கொடி பிடிக்க ஆரம்பித்தனர் பலர். அப்போது பிறந்தது தான் ODF எனப்படும் ஓபன் டாக்குமெண்ட் பார்மட். இதை உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்தது ஓபன் ஆபீஸ். XML டேக்குகளின் மூலம் தரவைச் சேமிக்கும் வழிமுறையையும் தரக் கோட்பாடுகளையும் உருவாக்கித் தந்தது ஓபன் ஆபீஸ். Organization for the Advancement of Structured Information Standards (OASIS) என்னும் நிறுவனம் ISO/IEC International Standard, ISO/IEC 26300:2006 Open Document Format for Office Applications (OpenDocument) v1.0.[2] என்ற பெயரில் சர்வதேச திறப்பு அலுவலக ஆவண முறையை அறிமுகப்படுத்தி அதற்குத் தரச் சான்றிதழும் பெற்றது. அதாவது அலுவலகக் கோப்புக்களில் உருவாக்கப்படும் தரவை எந்த அடிப்படையில் எவ்வாறு சேமித்தால் மொழி-தரவுச் சுதந்திரம் கிடைக்கும் என்று தெள்ளத் தெளிவான வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு உருவமைப்பே இந்த ODF. இதனால் பல அரசாங்கங்களும், நிறுவனங்களும் இந்த வழிமுறை பற்றி யோசிக்க ஆரம்பித்தன. இதனை வெளியிட்டதே ஓபன் ஆபீஸ் என்றதால், ஓபன் ஆபீஸ் மென்பொருட்கள் இத்தர வடிவமைப்பில் கோப்புக்களைச் சேமிப்பதில் உடனே செயல்படுத்த ஆரம்பித்தன. இதுவே ஓபன் ஆபீஸ் மென்பொருட்களின் வளர்ச்சிக்கு ஏற்பட்ட மிக முக்கியமான மைல்கல் எனலாம். ஒரு கட்டத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனமே முன் வந்து தானும் தனது சொந்தமான முறையில் தயாரிக்கப்பட்ட XML முறையில் சேமிக்கப்படும் Office Open XML (OOXML) என்ற வழிமுறையின் கீழ் சேமிப்பதாகவும், இதிலும் தரவுச் சுதந்திரம் தரப்பட்டுள்ளது என்றும் தரவேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டது.
இதோ ஓபன் ஆபீஸின் மென்பொருட்கள்:
5 படங்கள் கிடைக்கவில்லை
இது மட்டும் இருந்தால் போதுமா? மக்கள் ஓபன் ஆபீஸுக்கு மாறி விடுவார்களா? என்றால் இல்லை என்றே பதில் வரும். மைக்ரோசாப்ட் என்னும் மிகப்பெரிய சக்தி இருந்தும் ஓபன் ஆபீஸ் தொகுப்பு எதனால் வெற்றி பெற முடிந்தது? அப்படி ஓபன் ஆபீஸ் மென்பொருள் தொகுப்பு பெற்ற வெற்றி தான் என்ன? என்னும் கேள்விகள் எழுவது சகஜம். இதோ சில பதில்கள்:
- OOo (OpenOffice.org) என்று ஓ ஓ ஓ என்று ஓ போட வைக்கும் இந்த மென்பொருள் விண்டோஸ், ஆப்பிள் மேக், லினக்ஸ், ஸோலாரிஸ், BSD, OpenVMS, OS/2 மற்றும் IRIX போன்ற இயங்கு தளங்களில் இயங்கக் கூடியது.
- திறப்பு ஆவண முறையைச் செம்மையாக உருவாக்கியது மற்றும் நடைமுறைப்படுத்தியது.
- முற்றிலும் இலவசமானது.
- இன்றைய தேதியில் மிகப் பெரிய திறப்பு மூல நிரலியாகவும் இருக்கின்றது.
- 2008ம் ஆண்டின் சிறந்த திறப்பு மூல நிரலி (https://sourceforge.net/community/cca08)யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இவ்விருதின் முக்கியப் புரவலர் மைக்ரோசாப்ட் என்பது குறிப்பிடத் தக்கது.
- மைக்ரோசாப்ட் அலுவலகத் தொகுப்பின் அனைத்துக் கோப்புக்களையும் திறக்கவல்லது.
- வடிவமைப்பில் எளிமையும், செயல்பாட்டில் வலிமையும் கொண்டது.
- மிகக் குறைந்த வட்டிடத்தைப் பிடிக்கக் கூடியது. (மொத்தமே 150 எம்பி தான்)
- ஏற்கனவே சொன்னது போல் தரவுச் சுதந்திரம் உடையது.
- மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பில் உருவாக்கிய மேக்ரோக்களையும் செயல்படுத்தவல்லது.
- வரைவதற்கென்று Draw என்ற பெயரில் ஒரு மென்பொருள் உண்டு. இது மைக்ரோசாப்ட் அலுவலக மென்பொருள் தொகுப்பில் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது!
- மென்பொருள் தொகுப்பு மட்டுமின்றி அதனுடன் இணைந்து செயல்பட பல செருகிகளையும் (Plug-ins), விரிவாக்கங்களையும் (Extensions) (http://extensions.services.openoffice.org/most_pop_ext?intcmp=1548) கொண்டிருப்பது. இவ்வளவு ஏன்? இந்திய முறைப்படி எண்களுக்கு , போடும் எளிமையான விரிவாக்கத்தை அடியேன் (http://www.rathinagiri.in/2008-03-01-12-11-34/doc_download/4-be-indian.html) உருவாக்கித் தருமளவுக்கு எளிமையான மொழி வடிவம் இருக்கின்றது.
- கோப்புக்களை இயல்பான PDF ஆவணங்களாகச் சேமிக்கும் வசதி.
- மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 கோப்புக்களை, ஆபீஸ் 2007 இல்லாமலேயே திறக்க முடிகின்ற ஒரே மென்பொருள்.
- பன்மொழிகளில் வெளியிடப்பட்ட ஒரு மென்பொருள் தொகுப்பு (தமிழிலும் திறப்பு அலுவலகம் இருக்கின்றது. இந்திய அரசு வெளியிட்ட குறுந்தகட்டில் இருக்கும்.)
- ஜாவா தொழில்நுட்பத்தின் பயன்பாடு
- பாதுகாப்பு குறித்த முனைவு
- MySQL, ThunderBird போன்ற வேறு சில திறப்பு மூல நிரலிகளின் பயன்பாட்டையும் சேர்த்து அதன் மூலம் பல்வகைப் பயனடைய வழி வகுத்துள்ளது.
இன்னும் இப்பட்டியலில் பல வசதிகளைச் சொல்லாமல் விடப்பட்டிருக்கின்றது. அதற்குக் காரணமும் இருக்கின்றது.
அது என்ன காரணம் என்று நினைக்கின்றீர்களா? அலுவலக மென்பொருள் தொகுப்பின் 3ம் பதிப்பு வெகு விரைவில் வெளியாகப் போகின்றது. இதன் மேம்பட்ட வசதிகள் அனைத்தும் பட்டியலாக இங்கே (http://marketing.openoffice.org/3.0/featurelistbeta.html) இருக்கின்றது. நாளை 13 அக்டோபர், 2008 அன்று மாலை 7.30 முதல் 10 மணி வரை நடைபெறும் ஓபன் ஆபீஸ் ஆண்டு விழாவில் வைத்து ஓபன் ஆபீஸின் மூன்றாம் பதிப்பு வெளியிடப்படுகின்றது. பாரீஸ் நகரில் கோலாகலமான விருந்துடன் இந்த விழா நடைபெறுகின்றது. மென்பொருள் போலவே இந்த விருந்தும் அனைவருக்கும் இலவசமாகும். அது பற்றிய முழு விபரம் இங்கே (http://wiki.services.openoffice.org/wiki/Launchparty_OOo3Paris) இருக்கின்றது. Musée Rodin. Address: Région Ile-de France, 33 rue Barbet de Jouy, 75007 Paris Metro (Subway): Line 13, station Saint François-Xavier, Line 12: Rue du Bac மேலே குறிப்பிட்ட இடத்தில் வைத்து இந்த விருந்து நடைபெறுகின்றது. நாம் உலகின் எந்த மூலையிலிருந்தாலும், உலகின் மிகப்பெரிய திறப்பு மூல மென்பொருளான ஓபன் ஆபீஸை வாழ்த்தி, நாமும் தரவிறக்கி உபயோகித்து மகிழ்வோம். நேரம் குறைவாகத் தான் இருக்கின்றது. வாருங்கள் அலுவலகம் திறப்போம்!
இதே 13 அக்டோபர் 2001ல் வெளியான ஓபன் ஆபீஸுக்கு இன்றைய வயது எட்டு. எட்டு வயதில் பல உயரங்களை எட்டி இருக்கின்றது திறப்பு அலுவலகம். ஓபன் ஆபீஸுடன் எனது அனுபவத்தை இங்கே இடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். அது என்னவோ தெரியவில்லை, பைரேட்டட் சாப்ட்வேர் எனப்படும் கள்ளநகல் மென்பொருட்கள் என்றாலே எனக்கு அலர்ஜி. அதற்காக விலை கொடுத்து வாங்கவும் பிடிக்கவில்லை. வேறு வழியில்லாமல் நானும் கள்ளநகல் மென்பொருட்கள் தான் உள்ளூர உறுத்தலுடன் உபயோகித்துக் கொண்டு இருந்தேன். இது லோட்டஸ் 123 காலத்திலேயே இருந்தது. அப்போதே AsEasyAs போன்ற இலவச மென்பொருட்களைத் தேடி கணினியில் நிறுவி அதை உபயோகித்திருக்கின்றேன். விண்டோஸ் வந்ததும் வேறு வழியில்லாததால் ஆபீஸ் தொகுப்பின் நகலை நிறுவி உபயோகித்துக் கொண்டிருந்தேன். இருந்தாலும் இலவச மென்பொருட்கள் ஏதும் கிடைக்காதா என்ற தேடலும் தாகமும் குறையாது இருந்தது. அப்படித் தேடுகையில் 2001ல் கிடைத்தது முதன் முதலில் வெளியான ஓபன் ஆபீஸ் Build 638C. அப்போதே தரவிறக்கி பரீட்சார்த்த முறையில் அதைப் பயன்படுத்தி இருக்கின்றேன். இதெல்லாம் எங்கே தேறப் போகின்றது என்று தான் இருந்தது அன்றைய ஓபன் ஆபீஸ் தொகுப்பு. அதன் முதல் பதிப்பையும் தற்போதைய பதிப்பையும் பார்ப்பவர்கள் எட்டே ஆண்டுகளில் இத்தனை அசுர வளர்ச்சியா என்று மூக்கின் மேல் விரலை வைக்கும் வண்ணம் வளர்ந்திருக்கின்றது ஓபன் ஆபீஸ். ஓபன் ஆபீஸ் 1.0 வந்த பின், அது சற்று நிலையான பதிப்பாக இருந்தது. சின்னச் சின்ன அலுவலக வேலைகளுக்கு அதை உபயோகித்துக் கொண்டிருந்தேன். 2.0 வும் ODF முறையில் கோப்பு சேமிப்பும் வந்த உடன் முழுக்க முழுக்க ஓபன் ஆபீஸ் மட்டுமே உபயோகிக்க ஆரம்பித்து விட்டேன். ஓபன் ஆபீஸ் தொகுப்பு எடுத்துச் செல்லும் வகையில் (Portable Software) கிடைப்பதால் அதை USB நினைவக அட்டையில் பதிவு செய்து எந்தக் கணினியில் வேண்டுமானாலும் அமர்ந்து நமது கோப்புக்களைத் திருத்த முடிந்தது. மேலும் ஒருங்குறியில் தமிழில் தட்டச்ச இயல்பான வசதி ஓபன் ஆபீஸ் 2.0 விலிருந்து இருக்கின்றது. அதை அப்படியே PDF ஆக மாற்ற முடியும் என்னும் வசதியும் இருந்ததால் ஓபன் ஆபீஸ் உபயோகிப்பவர், அதற்கு ஆலோசனை சொல்பவர் என்ற வகையில் அதன் பெரும் வளர்ச்சிக்கு நானும் அணிலாக உதவியிருக்கின்றேன். ஓபன் ஆபீஸின் இன்றைய பதிப்பு மைக்ரோசாப்ட் அலுவலக மென்பொருட்களில் இருக்கும் வசதிகளில் 50%க்கும் மேல் தருகின்றது எனலாம். சாதாரணமாக நாம் உபயோகிக்கும் அனைத்தும் சில வசதிகள் அதற்கு மேலும் ஓபன் ஆபீஸில் இருக்கின்றன. நீங்களும் உபயோகித்துப் பார்த்தால் உணர்ந்து கொள்ளலாம். மைக்ரோசாப்ட் ஆபீஸுக்கு மாற்று என்று சொல்வதைக் காட்டிலும், இப்படி ஒரு போட்டியாளர் இருந்தால் தான் எந்த ஒரு சந்தையும் ஆரோக்கியமாக திகழும். புதுப்புது வசதிகளுடன் பொருட்கள் அறிமுகமாகும். வளர்ச்சி என்பதும் ஏற்படும். அந்த வகையில், ஓபன் ஆபீஸின் போட்டி, மைக்ரோசாப்ட் அலுவலக மென்பொருட்கள் மேம்பாட்டுக்கும் உதவுவதுடன், மக்களுக்கும் அதிக அளவில் அதிக வசதிகள் கிடைக்க ஒரு வாய்ப்பாக இருக்கின்றது என்பது மிகையாகாது. ஏனுங்க? அலுவலகம் திறப்போம் வாரீகளா?
5 டிசம்பர் 2008
இன்றைய தகவலின் படி ஒரு கோடியே எழுபத்தைந்து லட்சம் பிரதிகளுக்கு மேல் உலகெங்கும் தரவிறக்கப்பட்டு விரைவில் 2 கோடி தரவிறக்கங்களை முடித்து சாதனை படைக்க இருக்கின்றது திறப்பு அலுவலகம்.