இன்றைய சிந்தனை - பாத்திரமா? நீரா?
முத்தமிழ் மன்றத்தில் எழுதியது · 6 நவம்பர் 2008 – 21 டிசம்பர் 2008
அன்பு நண்பர்களே, எல்லாம் வல்ல இறையாசியுடன் இன்றைய சிந்தனை என்னும் தலைப்பில் தினந்தோறும் ஏதேனும் மனதில் தோன்றும் சிந்தனை விதைகளை விதைக்கலாம் என்றிருக்கின்றேன். வாருங்கள் தொடர்வோம்.
- இன்று என்னும் சிந்தனை
நமது வாழ்க்கை என்பது ஒரு நீண்ட, நெடிய பயணம். பயணத்தின் ஆரம்பத்தில் இருக்கும் மகிழ்ச்சி, போகப் போக அலுப்பாக மாறி, நிரந்தர ஓய்வாக மரணம் ஏற்படுகின்றது. இடையில் எத்தனையோ நிகழ்வுகள், காட்சிகள், சந்திக்கும் ந(ண்)பர்கள், உடன் வரும் உறவுகள் என நம் வாழ்க்கைப் பயணம் ஒரே வேகத்தில் செல்கின்றது. பலரைப் பார்த்திருப்போம். நேற்றை நினைத்து வருந்திய வண்ணம் இருப்பார்கள். அல்லது நேற்றைய சாதனைகளை நினைத்து மகிழ்ந்திருப்பார்கள். இன்னும் சிலரோ நாளையை நினைத்து ஏங்கி இருப்பார்கள். சிலர் நாளையை நினைத்து நம்பிக்கையுடன் இருப்பார்கள். இருந்த போதிலும் "இன்று" என்னும் சிந்தனையுடன் வாழ்பவர் சிலரே மிஞ்சி இருப்பார்கள். அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் பாக்கியவான்கள். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். நேற்று என்பதை நாளை கூட சிந்தித்துக் கொள்ளலாம்! நாளை என்பதை இன்னும் பத்து நிமிடங்கள் கழித்துக் கூட சிந்தித்துக் கொள்ளலாம்! ஆனால், இன்று, இப்பொழுது என்பதை இதோ, இதோ, இதோ இந்த விநாடியில் மட்டுமே உணர முடியும்! அதை விட்டு விட்டால் கடந்து விடும். அது நேற்றாகி விடும்! நாளை, நேற்றாகும் தருணமே இன்று! நமது ஏக்கங்களும், நம்பிக்கைகளும் சோதனைகளாகவோ, சாதனைகளாகவோ மாற்றப்படும் தருணம் இன்று. சரி. இந்த இன்று எனும் இனிய தருணத்தில் வாழ்வது எப்படி? ஏன் வாழ வேண்டும்? என்ற கேள்விகள் நமக்குள் எழலாம். இன்று என்னும் இத்தருணத்தில் வாழ்வதன் பயன் உயிர்ப்பு. ஆம். நாம் வாழும் ஒவ்வொரு தருணமும் உயிர்ப்புடன் திகழ வேண்டுமா? இன்று என்னும் தருணத்தில் வாழ்ந்து பார்க்க வேண்டும். எவ்வாறு இன்று அல்லது இப்பொழுதில் வாழ்வது? அது பயிற்சி செய்தால் மிகவும் எளிதாகும். நமது மனத்தை நாம் செய்யும் செயலில் ஏற்றிச் செய்வதே இப்போழுது வாழ்வது என்னும் அர்த்தமாகும். எந்தச் செயலைச் செய்தாலும் (அது நேற்றைப் பற்றிய சிந்தனை என்றாலும் சரி, நாளையைப் பற்றிய திட்டம் என்றாலும் சரி), நம் மனத்தை அதனோடு ஒன்றிச் செய்ய வேண்டும். முதலில் கொஞ்சம் சிரமமான காரியம் தான். ஆனால், முயன்றால் வாழ்க்கையின் பயனையே நாம் அறியக் கூடும். இதுவும் ஒரு வகையில் தியானமே! நமது முழுக் கவனமும் செய்யப்படும் செயலில் ஒன்றி இருப்பது தியானம் அன்றி வேறென்ன? கணினித் துறையில் ஒரே நேரத்தில் பல கட்டளைகளைச் செயல்படுத்தும் கணினிகள் பற்றிப் படித்திருப்போம். என்ன தான் முயன்றாலும், ஒரு சிப்பத்தின் மூலம், ஒரு நேரத்தில் ஒரே ஒரு பணி மட்டுமே செய்ய முடியும்! இன்னொரு பணி இணையாகச் செய்ய வேண்டுமெனின், இன்னொரு சிப்பம் நிறுவியாக வேண்டும். மனித மனமும் அதே போல் தான். என்ன தான் முயன்றாலும், நம்மால் ஒரு தருணத்தில் ஒரு வேலை மட்டுமே பார்க்க இயலும். தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே சாப்பிடுவது என்பது கூர்ந்து கவனித்தால், நம் மூளையே நம் நேரத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்து தொலைக்காட்சி பார்க்க, சாப்பிட என்று பிரித்து (கணினியில் சொல்வது போல time sharing) செயல்படுகின்றது. தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே சாப்பிடும் போது ருசித்து உண்ணாமையால் உமிழ்நீர் சுரப்பி சரியாகப் பணி புரியாமல் செரிமானக் கோளாறுகள் நிகழ்கின்றன என்று விஞ்ஞானம் சொல்கின்றது. இதைத் தான் நம்மவர்கள் "நொறுங்கத் தின்றால் நூறு வயது" என்று எளிமையாய்ச் சொல்லி வைத்தார்கள். நாம், பல செயல்களை முதலில் செய்யும் போது கவனத்துடன் செய்கின்றோம். அவ்வாறு தொடர்ந்து செய்யச் செய்ய அது அநிச்சைச் செயலாகி விடுகின்றது. உதாரணம் மிதிவண்டி ஓட்டக் கற்றுக் கொள்ளும் போது மிகவும் கவனமாகச் செல்வோம். ஐந்து வருடங்கள் மிதி வண்டி ஓட்டுபவர் மிதி வண்டி ஓட்டும் போது மிதி வண்டி ஓட்டுவதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் சிந்திக்கின்றார். எனவே பழகப் பழக ஒரு செயல் அநிச்சைச் செயலாகின்றது. ஒரு செயல் எப்போது அநிச்சைச் செயலாகின்றதோ அப்போது மனம் அச்செயலின் கட்டுப்பாட்டை இழக்கின்றது. அநிச்சைச் செயல்களால் வெறும் அலுப்பும், மனச்சோர்வும் மட்டுமே கிடைக்கும். மனம் ஒன்றிச் செய்யும் இச்சைச் செயல்களால் உற்சாகமும், முன்னேற்றமும் ஏற்படும். அதே சூரியன் தான், அதே பூமி தான். ஆனால் தினந்தோறும் சூரியோதயம் புதுமையாய் இருக்கின்றதே எப்படி? காரணம் இன்று நாம் புதிதாய்க் காண்கின்றோம். நேற்றும் நாளையும் எங்கேயும் போய்விடுவதில்லை. இன்றை விட்டு விட்டால் நமக்கு நேற்றும், நாளையும் இல்லாமல் போய் விடும். எனவே, நண்பர்களே, இன்று என்னும் சிந்தனை கொள்வோம். கனவுகளைச் சரித்திரமாக்கும் இன்றில் நிற்போம். என்றும் சிறப்போம்.
8 நவம்பர் 2008
இன்றைய சிந்தனை: சிந்தனை செய் மனமே! இனிய தமிழ் மொழி மட்டுமில்லாது பல மொழிகளிலும் இலக்கணத்தில் வினைப்பெயர் என்பது இருக்கின்றது. அதாவது வினையின் காரணமாக ஏற்பட்ட பெயர் என்று அர்த்தமாகும். உதாரணமாக சாப்பிடுவதால் சாப்பாடு, உண்பதால் உணவு, தின்பதால் தீனி, காண்பதால் காட்சி, எண்ணுவதால் எண்ணம், யோசிப்பதால் யோசனை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இப்போது சிந்தனை என்ற சொல் எவ்வாறு வந்தது? சிந்தித்தல் என்னும் வினையின் காரணமாக விளைந்தது சிந்தனை. எண்ணம், யோசனை போன்ற சொற்கள் இருந்தாலும் சிந்தனை என்ற சொல்லுக்கு ஒரு தனித்துவம் இருக்கின்றது! சிந்தனை என்ற சொல்லில், சிந்தித்தல் என்னும் வினையை எடுத்துக் கொள்வோம். சிந்துதல் என்பதில் இருந்து சிந்தித்தல் வந்திருக்கும் என்பது எனது சிந்தனையாகும்! ஒரு பாத்திரத்தில் இருந்து நீரைக் கீழே ஊற்றுகின்றோம். அது எப்போது சிந்தும்? கொட்டும் என்பதற்கும் சிந்தும் என்பதற்கும் ஒரு சிறிய வித்தியாசம் இருக்கின்றது. நாம் சொல்லாராய்ச்சி செய்யவில்லை என்பது மட்டும் உண்மை! பாத்திரத்திற்கும் தரைக்கும் நடுவே வேறு பாத்திரம் ஏதுமில்லை என்றால் அதைக் கொட்டுகின்றது என்று சொல்கின்றோம். நடுவே ஒரு பாத்திரம் இருந்து, அந்தப் பாத்திரம் நிரம்பி விட்டால், வெளியே விழுவதை வழிகின்றது என்று சொல்கின்றோம்! சரி, எப்போது சிந்துகின்றது என்று சொல்கின்றோம்?! தற்செயலாகவோ, வேண்டுமென்றோ இடையில் இருக்கும் பாத்திரத்தைக் கவிழ்த்தால் அப்போது வரும் வார்த்தை தான் சிந்துதல்! சிந்துதலில் இரண்டு வகை உண்டு! பாத்திரத்தை ஒரேயடியாகத் தலைகீழாகக் கவிழ்த்து விட்டால், அப்போதும் சிந்துதல் தான்! சரி. இப்போது விஷயத்துக்கு வருவோம். மேலிருக்கும் பாத்திரத்தில் இருந்து கொட்டுவது மற்றவர்களின் சிந்தனை என்று வைத்துக் கொள்வோம்! இடையில் இருக்கும் பாத்திரம் நமது மனம் என்று வைத்துக் கொள்வோம். நமது மனத்தில் இது போன்ற பலரது சிந்தனைகளைக் கலக்கி, நம் மனதில் தோன்றும் எண்ணங்களையும் சேர்த்து நம் மனதில் இருந்து வெளியே சிந்துவதை நாம் சிந்தும் சிந்தனை என்று கொள்ளலாம் தானே? இடையில் நமது மனம் இல்லாவிட்டாலோ, அல்லது பாத்திரத்தைக் கவிழ்த்து விட்டாலோ அது நமது சிந்தனை ஆகாது! நமது மனத்துக்கும் சாதாரண பாத்திரத்துக்கும் வித்தியாசம் உண்டு. நமது மனம் ஒரு அட்சய பாத்திரம். தானே ஊறும் தன்மையுடைத்து. எனவே அதிலிருந்து தானே நிரம்பிச் சிந்துவதையும் சிந்தனை என்று கொள்ளலாம்! மேலும், அந்தப் பாத்திரத்திலிருந்து அதுவாகச் சிந்தினால் ஒழிய வேறு யாராலும் பாத்திரத்துக்குள் இருப்பதை அபகரித்து விட முடியாது! சாதாரணப் பாத்திரத்திலிருந்து வெளியே சிந்துவதால் உபயோகம் இல்லாமல் போகக் கூடும். ஆனால், நம் மனமென்னும் பாத்திரத்தில் சிந்தும் சிந்தனைக்கோ பல உபயோகங்கள் உண்டு. பல்வேறு விஷயங்களை அலசி ஆராய்ந்து கடைந்து எடுக்கப்படும் அமுதமன்றோ சிந்தனை? இப்போது ஏன் சிந்துதல் என்பதில் இருந்து சிந்தனை வந்திருக்கும் என்று கருதுகின்றேன் என்று சொல்லி விடுகின்றேன். எப்போதுமே குறைவாகச் சிந்த வேண்டும் என்பது தான் நோக்கம் அல்லவா? அது போன்றே மனம் என்னும் பாத்திரத்தில் வெளியே சிந்தும் அளவு குறைவாக இருத்தல் வேண்டும். ஆனால், அதன் பயனோ அளப்பரியதாக இருக்க வேண்டும். எப்போது குறைவாகச் சிந்தும்? பாத்திரம் எத்தனை மிகப் பெரியதாக இருக்கின்றதோ அத்தனை குறைவாகச் சிந்தும். அது போல் நம் மனப் பாத்திரத்தையும் மிகப் பெரியதாக ஆக்கிக் கொள்தல் வேண்டும். அப்போது ஆராயக் கிடைக்கும் விஷயங்களும் அதிகமாக இருக்கும். வெளியே சிந்தும் சிந்தனையும் குறைவாக இருக்கும். ஆனால், நிறைவாகவும் இருக்கும். எனவே நண்பர்களே, மனமெனும் பாத்திரத்தின் மூலம் நிறைவான சிந்தனை செய்வோம். அடுத்தவரின் பாத்திரத்தை நிரப்பும் முயற்சியாக அது அமையட்டும்.
21 டிசம்பர் 2008
- பாத்திரமா? நீரா?
மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் பாத்திரமும் நீரும் எத்தனை முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கின்றன என்று கொஞ்சம் சிந்தனை செய்து பார்ப்போம். பாத்திரத்தின் சில பண்புகளாவன. 1. குறிப்பிட்ட வடிவம் கொண்டிருத்தல். 2. எப்பொருளையும் விடாது கொள்ளும் கலனாக இருத்தல். 3. உறுதியாக இருத்தல். 4. எங்கும் எடுத்துச் செல்ல வசதியாக இருத்தல். 5. நிரப்பப்படும் பொருளுக்கு தன் வடிவத்தைக் கொடுத்தல். நீரின் சில பண்புகளாவன: 1. குறிப்பிட்ட வடிவம் கொள்ளாதிருத்தல் 2. கொள்கலனில் கொள்ளப் படும் பொருளாக இருத்தல். 3. இலகுவாக இருத்தல். 4. அனைவருக்கும் தேவையான அத்தியாவசியப் பொருளாக இருத்தல் 5. நிரப்பப்படும் பாத்திரத்தின் வடிவத்தைப் பெற்றுக் கொள்தல். மாந்தர்களையும் இப்பாத்திரத்தையும் நீரையும் ஒப்பிட்டு நோக்குவோம். மக்களின் வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்விலும் அவர்கள் பல சமயங்களில் பாத்திரமாக இருந்திருப்பார்கள். பல சமயங்களில் நீராக இருந்திருப்பார்கள். பல சமயங்களில் பெற்றிருப்பார்கள். பல சமயங்களில் கொடுத்திருப்பார்கள். உண்மையில் கூர்ந்து கவனித்தோமேயானால், பாத்திரமின்றி நீருக்குப் பயனில்லை. நீரின்றிப் பாத்திரத்துக்குப் பயனில்லை. பாத்திரம் வெற்றிடத்தைக் கொண்டிருப்பதால் தான் அதனால் நீரின் பயன் பெற முடிகின்றது. நீர் நிரப்புவதாலே தான் அதற்குப் பயனிருக்கின்றது. இன்று, இதோ, இப்போது, ஒருவரது வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும், அல்லது நடைபெற்று முடிந்த நிகழ்ச்சியை எடுத்துப் பார்ப்போம். அவர் அந்தச் சமயத்தில் பாத்திரமாக இருந்தாரா? அல்லது நீராக இருந்தாரா? பாத்திரமாக இருந்தால், பாத்திரத்தின் பண்புகளைப் பெற்றிருந்தாரா? நீராக இருந்தால் நீரின் பண்புகளைப் பெற்றிருந்தாரா? எவ்வாறு அவர் இருந்தார் என்று சற்றே சிந்தித்துப் பார்த்தால், பல சமயங்களில் பாத்திரமாக இருந்து கொண்டு, நீரின் பண்புகளைப் பெற்றிருந்ததும், நீராக இருந்து கொண்டு பாத்திரத்தின் பண்புகளைப் பெற்றிருந்ததும் அறிய நேரிடலாம். அதாவது நீராக இருந்தால் மற்றவர்களை நிரப்புவதும், பாத்திரமாக இருந்தால் பத்திரமாக நீரைப் பெற்றிப் பேணிக் காப்பவராகவும் இருந்திருக்க வேண்டும். அது மட்டுமின்றி அந்நீரை மற்றவர்களுக்கு மற்ற சமயங்களில் தருபவராகவும் இருக்க வேண்டும் தானே? அறிவியல் சொல்வது போல, இருக்கும் திட, திரவ, வாயுப் பொருட்களே பல்வேறு வடிவம் பெற்று, சக்தியைப் பெறுபவையாகவோ கொடுப்பவையாகவோ இருக்கின்றன. அதே போன்று அவரவர் எண்ணங்களும் செயல்பாடுகளும் கூட பெறுபவையோ கொடுப்பவையாகவோ தான் இருக்கின்றன. பாத்திரமோ, நீரோ ஒன்றை ஒன்று சார்ந்தே இருப்பதைக் காணலாம். அத்தகைய சார்புத்தன்மை மனிதனுக்கும் இருப்பதால் மனிதனும் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஏதோ ஒன்றை அல்லது மற்றவரைச் சார்ந்தே இருந்தாக வேண்டியிருக்கின்றது. தான் மற்றவரைச் சார்ந்திருப்பேன், ஆனால் மற்றவர்கள் தன்னைச் சார விடமாட்டேன் என்று நினைப்பது எவ்வாறு சரியாக இருக்க இயலும்? மேலும் ஒருவர் தன் வாழ்க்கையில் முழுமையும் பாத்திரமாகவோ, முழுமையும் நீராகவோ இருக்க முடியாது என்பது இயற்கையாகும்! பாத்திரமும் நீராலான உலோகத்தையோ அல்லது களிமண்ணையோ கொண்டு தான் செய்யப் படுகின்றது. ஆக, இறுதியில் கொடுப்பவர் இல்லையேல் பெறுபவர் இல்லை என்னும் நிலை வருகின்றது. பெறுபவர் இல்லையேல் கொடுப்பவராலும் பயனில்லை. எனவே, இவ்வாழ்வில் நடைபெறும் நிகழ்வுக்குத் தகுந்த படியாக நாம் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தில் அவரவர்கள், அவ்வப்போது நீராக இருத்தலும் அல்லது நல்ல பாத்திரமாக இருத்தலும் சிறப்பன்றோ? பாத்திர மாநீரா வென்றுசிந்தி; உள்ளூறு மாத்திர மேனென்று நிந்தி!