மின்விரிதாள் (Spreadsheet) விரிப்போம் வாரீகளா?
முத்தமிழ் மன்றத்தில் எழுதியது · 12 ஆகஸ்ட் 2009 – 19 மார்ச் 2010
ஏற்கனவே இங்கே (http://muthamilmantram.com/viewtopic.php?f=172&t=20215) குறிப்பிட்ட பட்டியலில் மூன்றில் இரண்டு ஏற்கனவே ஆரம்பித்துத் தொங்கலாடிக் கொண்டிருக்கும் வேளையில், இன்னொன்றையும் அப்படியே விட்டிருந்தால் சரியாக இருக்குமா? எனவே, அதையும் ஆரம்பித்து விடலாம் என்று இதோ... கணினிப் பயன்பாட்டில் அலுவலக மென்பொருள் தொகுப்பின் முக்கியத்துவத்தை நாம் அனைவருமே அறிந்திருப்போம். உணர்ந்திருப்போம். அலுவலக மென்பொருள் தொகுப்பு என்னும் போது அதில் இருக்கும் முக்கிய மென்பொருட்கள்:
- கடிதம்/கட்டுரை/புத்தகம் போன்றவற்றை உருவாக்க வகை செய்யும் எழுத்து தொடர்பானது. (எடுத்துக்காட்டு: Word, Writer...)
- நாம் ஒரு கூட்டத்தில் பேச நினைப்பதை எளிய முறையில் படங்கள், எழுத்துக்கள், அசைபடங்கள், இசைக்கோப்புகள் எனக் காண்போர் ஆர்வம் கொள்ளத் தக்க வகையில் வரிசையாகத் தொகுக்க உபயோகிக்கும் மென்பொருள். (எடுத்துக்காட்டு: Powerpoint, Impress...)
- தகவல்களைத் தொகுக்க, சேமிக்க, நிர்வகிக்க, அறிக்கைகளைப் பெற உதவும் மென்பொருள். (எடுத்துக்காட்டு: Access, Base...)
- இவையனைத்திற்கும் கிரீடம் வைத்தாற் போல் சிறிய கூட்டல் கழித்தல் முதல் திட்டக்குறிப்பு வரையும் வரையான பலவித கணக்குகளுக்கு உபயோகமாகும் மின்விரிதாள் மென்பொருள். (எடுத்துக்காட்டு: Excel, Calc...)
இன்னும் உபயோகத்துக்குத் தகுந்தாற் போல் சிறிய மென்பொருட்கள் இருந்தாலும், மேற்கூறிய நான்கு மென்பொருட்களுமே அலுவலக மென்பொருள் தொகுப்புக்களின் நான்கு தூண்கள் என்று கூறினால் அது மிகையாகாது. மின்விரிதாள் பற்றிய அடிப்படையைக் கற்றுத் தருவது இந்தத் தொடரின் நோக்கமல்ல. அடிப்படை சற்றே குறைத்துக் கொண்டு, அனுபவ பூர்வமாக இம்மென்பொருளில் இருக்கும் பல கருவிகள் குறித்தும், அவை எங்கெல்லாம் பயன்படுத்த இயலும் என்றும் விளக்க முனைகின்றேன். ஒரு அறையிலிருந்து (Cell) ஆரம்பித்து, வரிகள் (rows), நிரல்கள் (columns), வரைபடங்கள் (graphs), தகவல் உழவு (data pivots, pilots), தேவையே தேவை (goal seeking), காட்சியமைப்பு (Scenarios), தீர்வன் (Solver) போன்ற கருவிகள்/வசதிகள் அனைத்தையும் பற்றி ஒவ்வொன்றாய் எடுத்துக்காட்டுகளுடன் காணலாம். நீங்கள் பயன்படுத்திய கருவிகள், பயன்பாடுகள் குறித்தும் பதிவுகள் இட்டால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. என்ன? தொடரலாமா?
நன்றி நண்பர்களே. என்னிடம் Excel மென்பொருள் இல்லாததால் இலவச அலுவலக மென்பொருள் தொகுப்பான Openoffice.org (http://openoffice.org/) உபயோகிக்கின்றேன். அதிலிருக்கும் Calc மென்பொருள் Excel மென்பொருளின் பொதுவான அதிகபட்ச பயன்பாடுகள் அனைத்தையும் கொண்டிருப்பதால், Calc மென்பொருள் எடுத்துக்காட்டுகள் மூலம் நமது கட்டுரையைத் தொடர்கின்றேன். Excel/Calc இரண்டுக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை என்பதையும், பயனர் இடைமுகத்தில் தான் வித்தியாசங்கள் இருக்கின்றன என்பதையும் நீங்களே போகப் போக உணர்ந்து கொள்வீர்கள். இனி, Calc மென்பொருளின் சமீபத்திய பதிப்பை (தற்போது 3.01) மேலே குறிப்பிட்ட தளத்திலிருந்து தரவிறக்கி நிறுவிக் கொள்ளவும். உங்கள் திரை கீழ்க்கண்ட படத்தில் போல இருக்கக் காணலாம்.
படம் கிடைக்கவில்லை
இனி சிறிது அடிப்படை:
- மேற்கண்ட படத்தில் இருக்கும் ஒவ்வொரு சிறிய கட்டமும் ஒரு அறை (Cell) என்றழைக்கப்படுகின்றது.
- செங்குத்து வசமாக இருக்கும் நிரல்கள் (Columns) அனைத்தும் A,B,C,D ... என்று வரிசையாகப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. Calc மென்பொருளைப் பொருத்தவரை A,B,C,D என்று தொடர்ந்து Z க்குப் பின்னால் AA, AB, .... AZ, BA, BB, .... BZ என்று தொடர்ந்து, அதன் பின்னர் ZZ க்குப் பின்னால் AAA, AAB, AAC,... என்று தொடர்ந்து AMJ வரை என மொத்தம் 1024 நிரல்கள் இருக்கின்றன.
- படுக்கை வசமாக இருக்கும் வரிகள் (Rows) அனைத்தும் 1,2,3,4,... என்று வரிசையாக எண்ணிட்டு அழைக்கப்படுகின்றன. இவ்வாறு மொத்தம் 65536 வரிகள் இருக்கின்றன.
நிரல்களின் பெயர்கள் மேலே இடமிருந்து வலமாகவும், வரிகளின் பெயர்கள் இடது புறம் மேலிருந்து கீழாகவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இவ்வெண்கள் மற்றும் எழுத்துக்களால் நிரல்கள் மற்றும் வரிகள் குறிக்கப்படுகின்றன அல்லவா? இந்த நிரல்களும் வரிகளும் சந்திக்கும் இடங்களே அறைகள் என்று அழைக்கப்படுகின்றன (இதைத் தான் எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்று அப்போதே ஔவையார் தீர்க்கதரிசனத்துடன் கூறியிருப்பாரோ!?). ஆக, இந்த மென்பொருளில் மொத்தம் 1024 X 65536 = 6,71,08,864 அறைகள் இருக்கின்றன. இவ்வறைகள் ஒவ்வொன்றும் அவற்றின் நிரல் எண் மற்றும் வரி எண்களால் குறிப்பிடப்படுகின்றன. எடுத்துக்காட்டாக இடது மேல் மூலை அறை A1 எனவும், வலது மேல் மூலை அறை AMJ1 எனவும், இடது கீழ் மூலை அறை A65536 எனவும், வலது கீழ் மூலை அறை AMJ65536 என்றும் குறிப்பிடப்படுகின்றன. இதன் மூலம், ஒவ்வொரு அறைக்கும் தனிப்பட்ட குறியீடு வழங்கப்படுகின்றது. இது அனைத்தும் சேர்ந்தது ஒரு தாள் (Sheet) எனப்படும். அவையும் Sheet1, Sheet2, Sheet3 என்று பெயரிடப்பட்டிருக்கும். மென்பொருளை ஆரம்பிக்கும் போது மூன்று தாட்கள் மட்டும் விரித்து வைக்கப்படும். இதே போன்று மொத்தம் 256 தாட்கள் வரை தேவைக்கேற்ப நாம் இணைத்துக் கொள்ளவியலும். ஆக, தனிப்பட்ட அறைகள் என்று எடுத்துப் பார்த்தால், 256 தாட்கள், 1024 நிரல்கள், 65536 வரிகள் என 1,717,98,69,184 இத்தனை அறைகள் வரை ஒரு கோப்பில் ஒதுக்கி வைக்க இயலும். இது வரை கூறப்பட்டவைகளில் ஏதும் சந்தேகம் இருப்பின் கேளுங்கள். இனி இந்த அறைகள் எதற்காக இப்படி ஒதுக்கப்பட்டிருக்கின்றன என்றும் அவற்றை எப்படி எல்லாம் உபயோகப்படுத்துவது என்றும் காணலாம்.
இந்த அறைகளிடையே சுட்டியை நகர்த்துவதற்குப் பல வழிகள் இருக்கின்றன. எந்த ஒரு அறையையும் சுட்டெலி மூலம் சுட்ட இயலும். இது மட்டுமின்றி Navigation Keys எனப்படும் நகர்வு பொத்தான்கள் மூலமும் அடுத்தடுத்த அறைக்குச் செல்லலாம். மேலும் Ctrl உடன் இணைந்து இந்த நகர்வுப் பொத்தான்களை அழுத்திக் குறுக்கு வழிகளில் சில அறைகளுக்குச் செல்ல இயலும். இவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மின்விரிதாள் மென்பொருளை உபயோகிக்க ஆரம்பித்தால் கைகூடும். சரி, ஒவ்வொரு அறையிலும் (கட்டத்திலும்) அப்படி என்ன தான் இருக்கின்றது?
இடம் இருக்கின்றது.
தகவல்களைச் சேமிக்க இடம் இருக்கின்றது.
பல்வேறு வகையான தகவல்களைச் சேமிக்க இடம் இருக்கின்றது.
ஒன்றுக்கொன்று தொடர்புடைய பல்வேறு வகையான தகவல்களைச் சேமிக்க இடம் இருக்கின்றது. ஒன்றுக்கொன்று கணித ரீதியாகவோ, தர்க்க ரீதியாகவோ தொடர்புடைய பல்வேறு வகையான தகவல்களைச் சேமிக்க இடம் இருக்கின்றது. உயிர்ப்புடன் கூடிய ஒன்றுக்கொன்று கணித ரீதியாகவோ தர்க்க ரீதியாகவோ தொடர்புடைய பல்வேறு வகையான தகவல்களைச் சேமிக்க இடம் இருக்கின்றது. அப்பாடா! ஒரு வழியாக மின்விரிதாளின் அறை பற்றிய சிறு குறிப்பை எழுதியாகி விட்டது. :) தகவல்கள் நமக்குத் தெரியும். அதென்ன பல்வேறு வகையான தகவல்கள் என்ற கேள்வி எழுகின்றது தானே? தகவல்கள் என்று பொத்தாம் பொதுவாகச் சொன்னாலும், அதில் ஒரு ஒழுங்கமைவு இருப்பதைக் காண இயலும். எடுத்துக்காட்டாக, ஒரு தேதி என்றால் முதலில் நாள், பின்னர் மாதம், பின்னர் வருடம் என்று எழுதுவது என்ற ஒழுங்கமைவு இருக்கின்றது. ஒரு மாணவரின் மதிப்பெண் என்றால் நூற்றுக்கு இத்தனை என்ற சதவீதம் என்ற ஒழுங்கமைவு இருக்கின்றது. இவ்வாறு எந்த ஒரு தகவலையும் சில வகைகளில் அடக்கி விடலாம். அவையாவன:
- எழுத்து (Character/text) - இது தான் அடிப்படை - எந்த ஒரு தகவலையும் இந்த வகையில் அடக்கி விட முடியும். இதில் a-z, A-Z, 1-9 போன்று மட்டுமல்லாது தமிழ் எழுத்துக்கள், சிறப்பு எழுத்துக்கள் என எல்லாவற்றையும் உள்ளடக்கியது இந்த வகை.
- எண்கள் (Numeric) - இதுவும் ஒரு அடிப்படை தகவல் வகை எனலாம். 0-9, தசமத் தானம் (.), '-' ஆகிய குறியீடுகள் இதில் அடக்கம்.
- தேதி (Date) & நேரம் (Time) - இது ஒரு சிறப்புத் தகவல் வகை. இந்தத் தகவல் வகையின் மூலம் தேதிகளுக்குடையேயான கணக்கீடுகளைச் செய்ய முடியும். எடுத்துக்காட்டாக, இன்றிலிருந்து 100 நாட்கள் கழித்து என்ன நாள் என்று கண்டறியலாம். அது மட்டுமின்றி, தவறான தேதியை இட முடியாமலும் சரி செய்யப்படும். எடுத்துக்காட்டாக 29-02-2009 என்று இட்டாலும் கணினி ஏற்றுக் கொள்ளாது.
- முறைமை (Logical) - உண்மை அல்லது பொய், சரி அல்லது தவறு, ஆம் அல்லது இல்லை என்பன போன்ற இரண்டே தகவல்கள் மட்டும் அடங்கியிருக்கும் எனலாம்.
இந்நான்கு அடிப்படைத் தகவல் வகைகளில் எந்த வகையான தகவல் வேண்டுமானாலும் விரிதாளின் ஒவ்வொரு அறையிலும் இட இயலும். கீழ்க்கண்ட படத்தினைக் காணுங்கள்:
படம் கிடைக்கவில்லை
அதில் மேற்குறிப்பிட்ட எல்லா வகையான தகவல் வகைகளையும் ஒவ்வொரு அறையிலும் இட்டிருக்கின்றேன். நீங்களும் அவ்வாறே இட்டுப் பாருங்கள். தகவல்களை இடும் போதே எழுத்துக்கள் இடது புறமாகவும், எண்கள் வலது புறமாகவும் சீராக ஒதுங்குவதைக் காணலாம். இனி, ஒன்றுக்கொன்று தொடர்புடைய பல்வேறு வகையான தகவல்கள் என்று எதைக் குறிப்பிடுகின்றோம் என்று காண்போம். எடுத்துக்காட்டாக இந்தப் படத்தைக் காணுங்கள். இதில் இடப்பட்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன தானே?
படம் கிடைக்கவில்லை
இனி, ஒன்றுக்கொன்று கணித/தர்க்க ரீதியான தொடர்பு என்னவென்று காணலாம். இந்த எடுத்துக்காட்டில் சில மாணவர்களின், சில பாடங்களின் மதிப்பெண்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இனி, ஒவ்வொரு மாணவரும் எடுத்த மொத்த மதிப்பெண்கள் காண வேண்டியிருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். இப்போது நாம் கணக்கிட வேண்டியிருக்கின்றது. அதற்கு என்று சில குறியீடுகள் இருக்கின்றன. இது போன்ற கணக்குகளை இடுவதைச் சூத்திரம் (Formula) என்கின்றனர். நாம் இட்டிருக்கும் ஒவ்வொரு அறைக்கும் ஒரு தனிப்பட்ட குறியீடு இருக்கின்றது. எடுத்துக்காட்டாக, ராமன் என்னும் மாணவரின் பெயர் B3 என்ற அறையில் இடப்பட்டிருக்கின்றது. அவரது தமிழ் மதிப்பெண், C3 என்ற அறையில் இடப்பட்டிருக்கின்றது. இப்போது நமக்குத் தேவை அவரது மொத்த மதிப்பெண்கள். இதற்கு நாம் மூன்று எண்களைக் கூட்ட வேண்டும். அதாவது தமிழ் + ஆங்கிலம் + கணிதம் ஆகிய மதிப்பெண்களைக் கூட்டினால் நமக்குத் தேவையான மொத்த மதிப்பெண் கிடைத்து விடும். C3+D3+E3 என்ற சமன்பாட்டை F3 என்ற அறையில் இட்டால் போதும். அதற்கு F3 அறைக்குச் சுட்டியைக் கொண்டு சென்று =C3+D3+E3 என்று இட்டால் போதுமானதாகும். கீழ்க்கண்ட படத்தில் மூன்று வட்டங்கள் இடப்பட்டிருக்கின்றன. ஒன்று நாம் எந்த அறையில் சூத்திரத்தை இடுகின்றோம் என்பதைக் காட்டுகின்றது. மற்றொன்று நாம் இட்டிருக்கும் சூத்திரத்தைக் காட்டுகின்றது. F3 அறையிலோ நாம் இட்ட சூத்திரத்தின் மதிப்பு காணக் கிடைக்கின்றது. இதைத் தான் கணித ரீதியான தொடர்புடைய தகவல்கள் என்கின்றோம். இதே போன்று மற்ற மாணவர்களின் மொத்த மதிப்பெண்களையும் காணுங்கள்.
படம் கிடைக்கவில்லை
அடுத்து உயிர்ப்புடன் கூடிய என்று ஏன் குறிப்பிட்டோம்?! ஒவ்வொரு அறையும் பயனர் என்ன இடப்போகின்றார் என்று கண்காணித்துக் கொண்டே இருக்கின்றது. நாம் ஒவ்வொரு முறை Enter தட்டும் போதோ அல்லது அடுத்த அறைக்குச் சுட்டியை நகர்த்தும் போதோ உடனுக்குடன் தொடர்புடைய சூத்திரங்கள் மீளவும் கணக்கிடப் படுகின்றன (Recalculation). எடுத்துக்காட்டாக ராமனின் ஆங்கில மதிப்பெண்ணை 60 என்று இட்டவுடன் உடனே அவரது மொத்த மதிப்பெண்ணும் 178 என்று மாறுவதைக் காணலாம்.
படம் கிடைக்கவில்லை
தொடர்வோமா?
13 ஆகஸ்ட் 2009
நன்றி நண்பர்களே. சென்ற பகுதியில் சூத்திரங்கள் இடும் போது ஆரம்பத்தில் '=' என்ற குறியுடன் ஆரம்பிக்க வேண்டும் என்பதைக் கண்டோம். இப்போது மென்பொருளில் இருக்கும் சில அடிப்படையான வசதிகளின் மூலம் எவ்வாறு நமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று காண்போம்.
- அறையின் அகலத்தைக் காட்டிலும் பெரிய அளவில் வார்த்தைகள் இட்டால், அது அடுத்த அறையில் ஏதுமில்லை என்றால் காட்டப்படும். அவ்வாறில்லாமல், அடுத்த அறையிலும் தகவல் இருந்தால் அது காட்டப்படாது. எடுத்துக்காட்டாக 'ராஜமாணிக்கம்' என்ற நீளமான பெயர் இட்ட போது கீழ்க்கண்டவாறு காட்டப்பட்டது.
படம் கிடைக்கவில்லை
முழுப்பெயரும் தெரியவைக்க, 2 வழிகள் இருக்கின்றன. அவையாவன: அ. B மற்றும் C நிரல்களுக்கிடையேயான இடத்தில் (அம்புக்குறியிட்டுக் காட்டப்பட்டிருக்கின்றது) சுட்டெலியின் இடது பொத்தானைச் சொடுக்கி அப்படியே படத்தில் காட்டியுள்ளவாறு வலது/இடது புறம் நகர்த்தி நமக்குத் தேவையான அகலத்தில் வைத்துக் கொள்ளலாம்.
2 படங்கள் கிடைக்கவில்லை
ஆ. B மற்றும் C நிரல்களுக்கிடையேயான இடத்தில் (அம்புக்குறியிட்டுக் காட்டப்பட்டிருக்கின்றது) சுட்டெலியின் இடது பொத்தானைக் கொண்டு இரட்டைச் சொடுக்கு (Double Click) செய்தால், அந்த நிரலில் இருக்கும் நீளமான வார்த்தைக்கேற்ப நிரலின் அளவு தாமாகவே பெரிதாகிக் கொள்ளும். இந்த வசதி மிக நல்ல வசதி தான். ஆனால், மிகப் பெரிய பத்தியை ஒரு அறையில் இட்டு வைத்திருந்தால் அதன் நீளத்துக்குப் பெரியதாகித் தொல்லை கொடுத்து விடும்! இதன் மூலம் அறையின் அகலம் மட்டுமின்றி வரிகளுக்கிடையேயான கோடுகளைச் சொடுக்கி அறையின் உயரத்தையும் மாற்றிக் கொள்ள முடியும். கீழே கண்ட படத்தைக் காணுங்கள்:
படம் கிடைக்கவில்லை
ஒரு அறையின் அகலம் மற்றும் உயரத்தை மாற்றினால், அந்த நிரலின் அகலம் மற்றும் வரியின் உயரமும் ஒரே போன்று மாறிவிடும். ஒரே ஒரு அறையின் அகலம் மற்றும் உயரம் மட்டும் மாற்ற இயலுமா? என்பது இப்போது உங்களுக்கான கேள்வி! அறிந்தவர்கள் பதிலளியுங்கள். அடுத்துத் தொடர்வோம்...
- சாதாரணமாக நாம் ஒவ்வொரு அறைக்குச் செல்லும் போதும் அந்த அறை மட்டும் தேர்ந்தெடுக்கப்படுகின்றது. சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட அறைகளும் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. அவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட அறைகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?
இதற்கு 3 வழிகள் இருக்கின்றன. அவையாவன: அ. ஆரம்ப அறையிலிருந்து சுட்டெலியின் இடது பொத்தானைச் சொடுக்கித் தேர்ந்தெடுக்க வேண்டிய முடிவு அறை வரை இழுக்க வேண்டும். கீழ்க்கண்ட அசைபடத்தைப் பாருங்கள்
படம் கிடைக்கவில்லை
ஆ. ஆரம்ப அறையிலிருந்து shift பொத்தானை அழுத்திக் கொண்டு நகர்வு பொத்தான்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படவேண்டிய முடிவு அறை வரை சுட்டியைக் கொண்டு செல்ல வேண்டும். இ. அங்கொன்றும் இங்கொன்றுமாக அறையைத் தேர்ந்தெடுக்க Ctrl பொத்தானை அழுத்திக் கொண்டு சுட்டெலியைத் தேவையான அறைகளுக்குக் கொண்டு சென்று இடது பொத்தானைச் சொடுக்க வேண்டும். அதே நேரத்தில் மொத்த நிரலையோ அல்லது மொத்த வரியையோ தேர்ந்தெடுக்க மேற்புறத்திலிருக்கும் அந்த நிரலின் பெயரையோ அல்லது இடது புறத்தில் இருக்கும் அந்த வரியின் பெயரையோ சுட்டெலியின் இடது பொத்தான் மூலமாகச் சொடுக்க வேண்டும். இதிலும் ஒன்றுக்கு மேற்பட்ட வரிகள் அல்லது நிரல்களைத் தேர்ந்தெடுக்க அடுத்தடுத்த நிரல்கள்/வரிகள் என்றால் shift அழுத்தியும், அங்கொன்றும் இங்கொன்றும் என்றால் ctrl அழுத்தியும் தேர்ந்தெடுக்கலாம். கீழ்க்கண்ட படத்தில் காட்டியுள்ளவாறு வரிகள், நிரல்கள், வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளது போல் அங்கொன்றும் இங்கொன்றுமான அறைகள் என்று ctrl, shift, சுட்டெலி ஆகியவற்றைப் பயன்படுத்தித் தேர்ந்தெடுத்துப் பாருங்கள்.
படம் கிடைக்கவில்லை
இனி, இவ்வாறு தேர்ந்தெடுப்பதன் நோக்கம் என்ன என்பதைக் காணலாம். சாதாரணமாக எழுது மென்பொருளில் குறிப்பிட்ட ஒரு பகுதியையோ, பத்தியையோ, வார்த்தையையோ, எழுத்தையோ தேர்ந்தெடுப்பது எதற்காக?
- அதை வேறொரு இடத்துக்கு நகலெடுக்க, அல்லது நகர்த்த அல்லது அழித்து விட.
- அதை அழகு படுத்த
இன்னும் சில சிறப்பு வசதிகளுக்காக அவ்வாறு தேர்ந்தெடுக்கின்றோம். அப்படித் தானே? அதே போன்று இங்கேயும் தேர்ந்தெடுத்த அறைகளை நகலெடுக்க, நகர்த்த, அழிக்க, அழகுபடுத்த, சிறப்பு வசதிகள் பயன்படுத்த இயலும். அதற்குத் தான் மென்பொருளின் மேற்புறத்தில் பல கருவிப்பட்டைகள் (toolbars) காணக் கிடைக்கின்றன. அவற்றிலிருக்கும் பொத்தான்கள் அவற்றின் இயல்புகளுக்கேற்ப வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. சில அறைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு மேலே இருக்கும் கருவிப்பட்டைகளின் பொத்தான்களை அழுத்திப் பார்த்து என்ன நிகழ்கின்றது என்று பாருங்கள்! ஏதேனும் எதிர்பாராதது நிகழ்ந்தால் இருக்கவே இருக்கின்றது Ctrl+z. நான் 'B' என்றிருக்கும் பொத்தானை அழுத்தியதும் தேர்ந்தெடுக்கப்பட்டவை தடிமனாகத் தெரிவதைக் காணலாம். இதையே Ctrl+B என்ற குறுக்கு விசையையும் அழுத்திப் பெறலாம்.
படம் கிடைக்கவில்லை
தொடர்வோமா?
21 ஆகஸ்ட் 2009
மற்ற மென்பொருட்களில் பிரதியெடுப்பதற்கும், வெட்டி ஒட்டுவதற்கும் மின்விரிதாளில் பிரதியெடுப்பதற்கும், வெட்டி ஒட்டுவதற்கும் சில வேறுபாடுகள் உண்டு. அவைகளே மின்விரிதாளின் சிறப்புக்கள் என்றும் கூறலாம். அவைகளைப் பற்றிக் காணலாம். எடுத்துக்காட்டாக, மின்விரிதாளில் ஓரிடத்திலிருந்து ஓன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறையிலுள்ள தகவலைப் பிரதி எடுக்கும் போது, அதை எங்கே ஒட்டுகின்றோம் என்பதைப் பொருத்து ஒட்டும் தன்மை மாறுபடும். ஒரே ஒரு அறையிலுள்ள தகவலைப் பிரதி எடுத்துக் கொண்டு, பத்து அறைகளைத் தேர்ந்தெடுத்து அங்கே ஒட்டினால், பத்து அறைகளிலும் ஒரே அறையின் தகவல் ஒட்டப்படும். படத்தில் காணுங்கள்:
படம் கிடைக்கவில்லை
ஒன்றுக்கு மேற்பட்ட அறைகளிலுள்ள தகவல்களைப் பிரதியெடுத்து அதற்கு மேற்பட்ட பல அறைகளைத் தேர்ந்தெடுத்து அங்கே ஒட்டினால், அனைத்து அறைகளிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்கள் சீரான அளவில் ஒட்டப்படும். படத்தில் காணுங்கள்:
படம் கிடைக்கவில்லை
பார்க்க நன்றாகத் தான் இருக்கின்றது. ஆனால் இதனால் என்ன உபயோகம் இருக்கின்றது என்று நீங்கள் கேட்கக்கூடும். இதனால் பல உபயோகங்கள் இருக்கின்றன. அவைகளைக் காணும் முன்பு மின்விரிதாளில் சூத்திரங்கள் எவ்வாறு சேமிக்கப்படுகின்றன என்று தெரிந்து கொள்ள வேண்டும். மின்விரிதாள் சூத்திரங்கள் (Formula) என்பவை மின்விரிதாளில் இருக்கும் பல்வேறு அறைகளை ஒன்றுக்கொன்று கணித/தர்க்க ரீதியாகத் தொடர்பு ஏற்படுத்துவதன் மூலம் நமக்குத் தேவையான கணக்கீடுகளையும் சமன்பாடுகளையும் நிறைவேற்றித் தருகின்றன என்று முன்பே கண்டோம். எடுத்துகாட்டாக C11 அறையில் 300 என்ற எண்ணை இட்டு, C12 அறையில் = C11 + 500 என்று இட்டோமானால், C12 அறைக்கும் C11 அறைக்கும் கணித ரீதியாக ஒரு தொடர்பை ஏற்படுத்தி இருக்கின்றோம் என்பது புலனாகும். இதன் மூலம், C11 அறையில் இருக்கும் எண் மதிப்புடன் 500 கூட்டப்பட்டு சமன்பாட்டின் முடிவு மதிப்பு 800 என C12 அறையில் காட்டப்படும். இங்கு 'C11 + 500' என்பது சூத்திரம் என்று குறிக்கப்படுகின்றது. மின்விரிதாளில் இரண்டு விதமாக இச்சூத்திரம் காட்டப்பட்டாலும் அடிப்படையில் வேறுவிதமாகவே சூத்திரங்கள் சேமி(இய)க்கப்படுகின்றன. மேலே சொன்ன எடுத்துக்காட்டில்
- C12 அறையில் 800 என்று காட்டப்படுவது சமன்பாட்டு மதிப்பாகும். (படத்தில் பச்சை வண்ணமிட்டுக் காட்டப்பட்டிருக்கின்றது)
- ஆனால் உண்மையில் C12 அறையில் இருப்பது '=C11 + 500' என்னும் சூத்திரம் என்பதை மேலே இருக்கும் (சிவப்பு வண்ணமிட்டுக் காட்டப்பட்டிருக்கின்றது) சூத்திரப் பட்டையிலிருந்து காணலாம்.
படம் கிடைக்கவில்லை
ஆயினும், மின்விரிதாள் மென்பொருள் இதனை C11, C12 என்று குறித்துக் கொள்வதில்லை! என்ன ஆச்சரியமாக இருக்கின்றதா? உண்மை அது தான். அதற்குப் பதிலாக, குறிப்பிட்ட அறையிலிருந்து திசையையும் தூரத்தையும் மட்டுமே குறித்துக் கொள்கின்றது. எடுத்துக்காட்டாக, மேற்கண்ட சூத்திரத்தில், C12 என்பது சூத்திரம் இருக்கும் அறை. அதற்குத் தொடர்புடைய அறையோ C11. இதனைத் திசை மற்றும் தூரம் கொண்டு எப்படிக் குறிப்பது? C11 என்பது சூத்திர அறையிலிருந்து மேலே 1 அறை நகர்ந்திருக்கும் அறை என்று குறித்து வைக்கலாம் தானே? அதாவது கீழே, மேலே, இடது, வலது ஆகியவை திசைகளாகவும், 1, 2, 3,... ஆகியன தூரங்களாகவும் கொண்டு ஒவ்வொரு அறையின் தொடர்புகளும் குறிக்கப்படுகின்றன. இதைத் தான் தொடர்பு அறைச் சுட்டுதல் (Relative Cell Reference) என்று கூறுகின்றனர். முதலில் புரிந்து கொள்ள மிகவும் குழப்பமாக இருக்கின்றது தானே? ஆயினும், புரிந்து கொண்டால், மின்விரிதாளின் சூக்குமத்தைப் புரிந்து கொண்டவர்களாகி விடுவோம்! மேலே குறிப்பிட்டதை ஒரு படத்துடனும் எடுத்துக்காட்டுடனும் விளக்கினால் எளிதில் புரிந்து கொள்ள இயலும்!
படம் கிடைக்கவில்லை
நாம் ஏற்கனவே எடுத்துக்கொண்ட மாணவர்களின் பட்டியலில் இன்னும் பல மாணவர்களின் மதிப்பெண்களும் சேர்ந்திருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். இப்போது முதல் மாணவரின் மதிப்பெண்கள் C6,D6,E6 ஆகிய அறைகளில் இருக்கின்றது. மொத்த மதிப்பெண்களை F6 என்ற அறையில் சேமிக்கப் போகின்றோம். எனவே முதல் கட்டமாக, F6 அறையில் = C6+D6+E6 என்று இட்டதும் முதல் மாணவரின் மதிப்பெண்ணான, 60,58,65 ஆகியன கூட்டப்பட்டு 183 என்ற மொத்த மதிப்பு F6 அறையில் காட்டப்படுகின்றது. அதன் சூத்திரப்பட்டையில் நமது சூத்திரமான = C6+D6+E6 என்பதுவும் காட்டப்படுகின்றது. இப்போது, இந்த F6 அறையைப் பிரதி எடுத்துக் கொண்டு, மற்ற மாணவர்களின் மொத்த மதிப்பெண்கள் இட வேண்டிய அறைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு ஒட்டினால், என்ன நிகழ்கின்றது என்று காண்போம். ஆஹா! அனைத்து மாணவர்களின் மொத்த மதிப்பெண்களும் நொடியில் கணக்கிடப்பட்டு விட்டது தானே? இதற்குக் காரணம் தொடர்பு அறைச் சுட்டுதல் ஆகும். அதாவது F6 அறையில் சேமிக்கப்பட்டிருப்பது," = இடது 3 + இடது 2 + இடது 1" ஆகிய திசை மற்றும் தூரங்களே ஆகும். எனவே இந்தத் திசை மற்றும் தூரத்தினை நாம் நகலெடுத்து மற்ற இடங்களில் ஒட்டும் போதும், இதே " = இடது 3 + இடது 2 + இடது 1" ஆகிய திசை மற்றும் தூர அமைப்புகள் மாறுவதில்லை. அதே தொடர்பு அறைச் சுட்டுதல் சேமிக்கப்பட்டு, அத்தனை அறைகளிலும் சீராக நிரப்பப்படுகின்றது. அறையின் சூத்திரங்கள் சூத்திரப் பட்டையில் காட்டப்படும் போது பயனருக்குப் புரிந்து கொள்ள ஏதுவாக, அறையின் பெயரே காட்டப்படுகின்றது. எடுத்துகாட்டாக F13 அறைக்குச் சென்றால், அதன் சூத்திரப் பட்டையில் = C13+D13+E13 என்று சூத்திரம் இடப்பட்டிருப்பதைக் காணலாம். தொடர்பு அறைச் சுட்டல் குறித்து இப்போது புரிகின்றதா நண்பர்களே? ஒரு அறையிலிருந்து நகலெடுத்துப் பல அறைகளில் ஒட்டுவதன் உபயோகத்தையும், மின்விரிதாளின் சிறப்பையும் அறிந்து கொண்டோம் தானே? ஒரே ஒரு சூத்திரத்தை மட்டும் இட்டு, அதே போல் பல ஆயிரக்கணக்கான கணக்குகளையும் (எடுத்துக்காட்டாக ஆயிரம் மாணவர்கள் மதிப்பெண்களையும் கூட்டல்) நொடியில் செய்து விட இயலும். தொடர்வோமா?
4 செப்டம்பர் 2009
மிக எளிதான கேள்வி கேட்டிருக்கும் சிவஹரிக்குப் பதிலளித்து விட்டு நாம் மேலே தொடரலாம். இவ்வாறு நிரல் வரிசையில் இருப்பதை நிரை (வரி)யிலும், நிரையில் இருப்பதை நிரலிலும் கொண்டு வருவதற்குப் பெயர் தலைமாற்றுதல் (Transpose) எனலாம். அதற்கு மாற்ற வேண்டிய பட்டியலைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு (Copy) நமக்குத் தேவையான இடத்தில் வலது சொடுக்கிட்டு சிறப்பு ஒட்டியைத் தேர்ந்தெடுத்து (Paste Special) அதில் இருக்கும் Transpose என்ற வசதியைச் சொடுக்கினால் போதும். பின்னர் Ok எனத் தேர்ந்தெடுங்கள். கீழே கண்ட அசைபடத்தில், வழக்கமாக நாம் ஒட்டுவதற்கும், தலைமாற்றி சிறப்பு ஒட்டுதலுக்கும் உள்ள வித்தியாசத்தைக் காணலாம்.
படம் கிடைக்கவில்லை
முந்தைய பாடத்தில் தொடர்பு அறைச் சுட்டுதல் (Relative Cell Addressing) குறித்துக் கண்டோம். இனி அறுதி அறைச் சுட்டுதல் (Absolute Cell Addressing) பற்றி அறிந்து கொள்ளலாம். அதற்கு முன் சூத்திரங்கள் இருக்கும் அறைகளைத் தேர்ந்தெடுத்து நகலெடுத்து ஒட்டுவதற்கும் (Copy... Paste), வெட்டி ஒட்டுவதற்கும் (Cut... Paste) இருக்கும் வித்தியாசத்தை நாம் அறிந்து கொள்தல் வேண்டும். நகலெடுத்து வேறிடத்தில் ஒட்டும் போது அது தொடர்பு அறைச் சுட்டுதலாகி சூத்திரத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் அறைகளின் தொடர்பை மட்டுமே ஒட்டப்படுகின்றது. இதனால் ஒட்டப்பட்ட ஒவ்வொரு அறையிலும் வித்தியாசமான மதிப்புக்கள் காணக் கிடைக்கும். அதே சமயத்தில் வெட்டி வேறிடத்தில் ஒட்டும் போது தொடர்பு அறைச் சுட்டுதலாக மாறாமல், அந்தச் சூத்திரமே மீண்டும் ஒட்டப்படுகின்றது. அதாவது மொத்தத் தேர்ந்தெடுத்தலும் நகர்த்தப்படுகின்றது. (Move) எனவே தான், நகலெடுப்பதும், வெட்டுவதும் மின்விரிதாள் சூத்திரங்களைப் பொருத்தவரை வித்தியாசமான செயல்பாடுகளாகும். சரி, இப்போது அறுதி அறைச் சுட்டுதலுக்கு வருவோம். நாம் மேலே கண்ட தொடர்பு அறைச் சுட்டுதல் அனைத்து தருணங்களிலுமே தேவைப்படாது. சில சமயங்களில் நாம் நகலெடுத்து ஒட்டினாலும் கூட, அறைச் சுட்டுதல் மாறக் கூடாது என்ற நிலை ஏற்படலாம். அவ்வாறு இருக்குமாயின், அப்போது உபயோகப்படுத்துவதற்கு என்று அறுதி அறைச் சுட்டுதல் பயன்படுத்தப்படுகின்றது. அறுதி அறைச் சுட்டுதல் மின்விரிதாள் மென்பொருட்களில் இரு வழிகளில் உபயோகப்படுத்த இயலும். முதலாவதாக, அறை முகவரியில் $ உபயோகிப்பதன் மூலம், அந்தச் சுட்டுதல் அறுதி அறைச் சுட்டுதல் என்று மென்பொருளுக்கு உணர்த்தலாம். எடுத்துக்காட்டாக, A5 என்னும் அறையை ஒரு சூத்திரத்தில் பயன்படுத்துகின்றோம். அதே அறை தான் எல்லாச் சூத்திரங்களிலும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். அதைச் சூத்திரத்தில் எழுதும் போது = $A$5 என்று குறிப்பிடல் வேண்டும். ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குவோம்:
படம் கிடைக்கவில்லை
மேற்கண்ட பட்டியலில் வட்டி வீதம் 5% என்றும், வரிசையாக அசல் மற்றும் காலங்களின் மதிப்புக்களும் இடப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அசல் மற்றும் கால அளவுக்கும் வட்டியைக் கணக்கிட வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். இதற்கான சூத்திரம் அசல் x காலம் x வட்டி வீதம் ஆகும். இதில் B1 என்னும் அறையில் வட்டி வீதம் இடப்பட்டிருக்கின்றது. இந்த வட்டி வீதம் மற்ற அசல் மற்றும் கால மதிப்புக்களைப் பொருத்தவரை மாறிலியாகும். அசல் மற்றும் காலங்கள் ஒவ்வொரு வரியிலும் மாறுபவையாகும்.
முதல் வரிக்கான சூத்திரம் =A4 * B4 * B1 ஆகும்.
இரண்டாம் வரிக்கான சூத்திரம் = A5 * B5 * B1ஆகும்.
மூன்றாம் வரிக்கான சூத்திரம் = A6 * B6 * B1ஆகும்.
இப்படியே வரிசையாக எத்தனை வரிகள் வேண்டுமானாலும் கணக்கிடலாம். இச்சூத்திரங்களைக் கவனித்துப் பார்த்தால், ஒவ்வொரு வரியிலும் B1 என்பது மாறாமல் இருக்கக் காணலாம். இப்போது C4 ல் இருக்கும் முதல் சூத்திரத்தை நகலெடுத்துக் கீழே தேர்ந்தெடுத்து ஒட்டினால், நமக்குத் தேவையான பதில் வருவதில்லை. காரணம் எவ்வாறு A4 என்பது A5 ஆகின்றதோ அதே போன்று B1 என்பதும் B2 ஆகி விடும்! கணினிக்கு எது மாற்ற வேண்டிய மதிப்பு, எது மாறாத மதிப்பு என்று தெரியாதல்லவா? ஆனால், நாம் இட்டிருக்கும் வட்டி வீதமோ ஒரே ஒரு அறையில் தான். இதனால் நமது கணக்கு பிழையாகி விடும். இப்போது தான் நமக்கு அறுதி அறைச் சுட்டுதலின் தேவை எழுகின்றது. நமக்குத் தேவை ஒவ்வொரு சூத்திரத்திலும் B1 என்பது மாறிலியாக, நிலையாக இருத்தல் வேண்டும். அதற்கு $B$1 என்று இட்டால், அது அறுதி அறைச் சுட்டுதலாக மாறி, அந்தச் சூத்திரத்தை நகலெடுத்து எங்கே ஒட்டினாலும் அது மாறாமல் $B$1 என்று ஒரே அறையைச் சுட்டிக் கொண்டிருக்கும். ஆக, நமது தேவைக்கேற்ப தொடர்பு அறைச் சுட்டுதல் மற்றும் அறுதி அறைச் சுட்டுதல் ஆகியவற்றைப் பயன்படுத்துதல் வேண்டும். இவற்றின் தேவைகள் பல முறை நடைமுறையில் பயிற்சி செய்தால் எளிதாய்க் கைவரும்.
20 செப்டம்பர் 2009
தொடர்பு அறைச் சுட்டுதல், அறுதி அறைச்சுட்டுதல் என்று இரண்டு முறைகளில் ஒரு அறையைப் பற்றி நமது சூத்திரங்களில் குறிப்பிடலாம் என்று கண்டோம். இவ்விரண்டும் இணைந்த கலப்பின அறைச்சுட்டுதலும் (Hybrid) தேவைப்பட்டால் உபயோகப்படுத்தலாம்! அதாவது ஒரு அறையின் முகவரியை (எடுத்துக்காட்டாக C4) அப்படியே சூத்திரத்தில் உபயோகித்தால் அது தொடர்பு அறைச்சுட்டுதல் என்று கண்டோம். அதையே $C$4 என்று பயன்படுத்தினால் அது அறுதி அறைச்சுட்டுதல் என்றும் கண்டோம். இனி $C4 என்றோ அல்லது C$4 என்றோ அறையின் முகவரியைச் சூத்திரங்களில் பயன்படுத்தினால் அது கலப்பினச் சுட்டுதல் ஆகும். அதாவது பாதி தொடர்பு அறைச்சுட்டுதலும் பாதி அறுதி அறைச்சுட்டுதலும் பயன்படுத்தப்படுகின்றது. இது எதற்காகப் பயன்படுகின்றது என்று நீங்கள் கேட்கலாம். இவற்றின் தேவை சற்றே அரிது என்றாலும் கூட, தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. நாம் நகலெடுக்கும் போது வரியின் பெயர் மட்டும் மாற வேண்டும் என்றோ அல்லது நிரலின் பெயர் மட்டும் மாற வேண்டும் என்றோ தேவைப்பட்டால் கலப்பின அறைச்சுட்டுதலை உபயோகப்படுத்தலாம். எடுத்துக்காட்டாகக் கீழ்க்கண்ட அசைபடத்தைக் கண்ணுறுங்கள். அதில் வேறுபட்ட வட்டி வீதத்தில், வேறுபட்ட கால அளவில் குறிப்பிட்ட தொகைக்குக் கிடைக்கும் வட்டி என்ன என்று கணிக்க வேண்டியிருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம்.
படம் கிடைக்கவில்லை
D1 அறையில் தொகை இடப்பட்டிருக்கின்றது. C3 முதல் C7 வரையான நிரலில் வட்டி வீதங்கள் இடப்பட்டிருக்கின்றன. D2 முதல் G2 வரையான 2வது வரியில் கால அளவு வருடங்களில் இடப்பட்டிருக்கின்றது. இப்போது நாம் கணக்கிட வேண்டியது முதல் x வட்டி வீதம் x கால அளவு ஆகும். இதில் முதல் அனைத்துக் கணக்குகளிலும் மாறாது ஒரே அறையில் (D1) இருக்கின்றது. எனவே அதை அனைத்து அறைகளிலும் பயன்படுத்த ஏதுவாக அறுதி அறைச்சுட்டுதலைப் பயன்படுத்தலாம். ஆனால், இந்தக் கணக்கைப் பொருத்தவரை, கால அளவும் வட்டி வீதமும் நிலையாக இல்லாமல் மாறிக் கொண்டே இருக்கின்றன. கொஞ்சம் நிதானமாகப் பார்த்தால் அனைத்து வட்டி வீதங்களும் C3, C4, C5, C6, C7 ஆகிய அறைகளில் இருக்கின்றன. இங்கு C என்னும் நிரலின் பெயர் மாறாதிருக்கின்றது. 3,4,5,6,7 என்று வரிகளின் பெயர் மட்டுமே மாறுகின்றது. கால அளவோ D2, E2, F2, G2 என்று 2வது வரி மாறாமல் D, E, F, G என்று நிரல்களின் பெயர் மட்டுமே மாறுகின்றது. எனவே இவ்விரண்டிற்கும் நாம் இப்போது கண்ட கலப்பின அறைச்சுட்டுதல் தேவைப்படுகின்றது. வட்டிவீதத்திற்கு மாறாதிருக்கும் C க்கு மட்டும் $ இட்டால் போதும். கால அளவிற்கு மாறாதிருக்கும் 2 க்கு மட்டும் $ இட்டால் போதும். இப்போது முதல் அறையிலிருக்கும் சூத்திரத்தைப் பாருங்கள். '=$D$1 * $C3 * D$2' என்று இருக்கின்றது தானே? இதை முதல் அறையில் இட்டு விட்டு, அதை நகலெடுத்து மற்ற எல்லா அறைகளிலும் சென்று ஒட்டிப் பார்த்தால் அனைத்துக் கணக்குகளும் சரியாகக் கணக்கிடப்படுவதைக் காண இயலும்! எத்தனை எளிதாகப் பணிகளை முடிக்க உதவுகின்றன இந்த தொடர்பு, அறுதி மற்றும் கலப்பின அறைச் சுட்டுதல்கள்? உங்களுக்காக ஒரு பயிற்சி: 1 முதல் 16 வரையான பெருக்கல் வாய்பாடு தேவை என்று உங்கள் குழந்தை கேட்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். ஒரே ஒரு சூத்திரத்தை நகலெடுத்து மொத்தப்பட்டியலும் நிரப்பும் வண்ணம் இடுவதற்கு என்ன மாதிரியான சூத்திரத்தை இடவேண்டும்? இனி, அடுத்த பகுதிக்குச் செல்வோமா?
இது என்ன தொடர்பு அறைச்சுட்டுதல், அறுதி அறைச்சுட்டுதல், கலப்பின அறைச்சுட்டுதல் என்று ஒரே குழப்பமாக இருக்கின்றதே என்போர்க்கு மிக எளியதொரு வழியையும் காட்டுகின்றது மின்விரிதாள் மென்பொருள். அது என்னவென்று இப்போது பார்க்கலாம். இதில் தொடர்பு அறைச்சுட்டுதலை அந்தந்த அறைகளின் முகவரியைச் சூத்திரத்தில் இடுவதால் மட்டுமே செய்ய முடியும். (எடுத்துக்காட்டாக C4 என்ற அறையை தொடர்பு அறைச் சுட்டுதலாக இட வேண்டுமாயின் C4 என்று மட்டும் இட வேண்டும்.) மற்ற இருவகை அறைச்சுட்டுதலுக்கும் ஒரு குறுக்கு வழி உண்டு. அது என்ன? அந்தந்த அறைகளுக்குப் பெயர் சூட்டுவது தான் அந்த எளிய வழி. நமது முந்தைய எடுத்துக்காட்டை நினைவு கொள்ளுங்கள். அதில் D1 அறையில் முதல் இடப்பட்டிருந்தது தானே? இப்போது அந்த அறைக்குச் சென்று கொள்ளுங்கள். சூத்திரப் பட்டிக்கு இடது புறத்தில் இருக்கும் பெயர்ப் பெட்டியில் (Name Box) 'principal ' என்று கீழ்க்கண்டவாறு இடுங்கள்.
படம் கிடைக்கவில்லை
அடுத்ததாக வட்டிவீதம் கொண்டிருக்கும் C3 முதல் C7 ஆகிய அறைகளை மொத்தமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அந்தத் தொகுப்பிற்கு 'interestrate' என்று கீழ்க்கண்டவாறு இடுங்கள்.
படம் கிடைக்கவில்லை
பின்னர் கால அளவு கொண்டிருக்கும் D2 முதல் G2 வரையான அறைகளை மொத்தமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அந்தத் தொகுப்பிற்கு 'period' என்று கீழ்க்கண்டவாறு இடுங்கள்.
படம் கிடைக்கவில்லை
இப்போது நாம் கணக்கிட வேண்டிய அறையான D3க்குச் சென்று =principal * period * interestrate என்று நமது சூத்திரத்தை இடுங்கள்.
படம் கிடைக்கவில்லை
ஆஹா! என்ன மாயம்? வட்டி அதுவாகவே கணக்கிடப்பட்டு விட்டதே?! இனி அந்த அறையை நகலெடுத்து அனைத்து அறைகளிலும் ஒட்டுங்கள். அனைத்து அறைகளிலும் நமது கணக்கு சரியாக இடப்பட்டிருப்பதைக் காணலாம்! அது மட்டுமின்றி அனைத்து அறைகளிலும் சூத்திரம் principal * period * interestrate என்றும் இருக்கக் காணலாம்!
படம் கிடைக்கவில்லை
இந்தக் குறுக்கு வழி எளிதாக இருக்கின்றதே? இதை முதலிலேயே சொல்லியிருக்கலாமே என்று தோன்றுகின்றது தானே?! இந்தப் பெயரானது மொத்த மின்விரிதாள் புத்தகத்துக்குமே அதாவது அத்தனை தாட்களுக்குமே பொருந்தும். எடுத்துக்காட்டாக, Sheet2க்குச் சென்று எங்கே வேண்டுமானாலும் =principal என்று இட்டுப் பாருங்கள். 3 முதல் 7 வரையான வரிகளில் =interestrate என்று இட்டுப் பாருங்கள். D முதல் G வரையான நிரல்களில் = period என்று இட்டுப் பாருங்கள். முதல் மாறாமல் இருப்பதையும், அந்தந்த வட்டி வீதம், அந்தந்தக் கால அளவு ஆகியவை காணக் கிடைப்பதையும் அறியலாம்!
படம் கிடைக்கவில்லை
குறிப்பு: எந்த ஒரு அறைக்குப் பெயர் சூட்டி அதை நீங்கள் பயன்படுத்தினாலும் பெயரைக் குறிப்பிட்டால் அறுதி அல்லது கலப்பின அறைச்சுட்டுதலாகவும், முகவரியைக் குறிப்பிட்டால் அது தொடர்பு அறைச்சுட்டுதலாகவும் இருக்கும்.
22 செப்டம்பர் 2009
அடுத்ததாக நாம் காணவிருப்பது சார்புகள் (functions) ஆகும். சார்பு எனப்படுபவது முன்கூட்டியே உருவாக்கப்பட்ட கட்டளைத் தொகுப்பாகும். வரிசையாகப் பல கட்டளைகள் கொடுப்பதற்குப் பதிலாக ஒரே ஒரு சார்பை உபயோகப்படுத்தி நமக்குத் தேவையான கணக்குகளைச் செய்ய இயலும். சார்புகள் கணக்குகளை எளிதாக்குவது மட்டுமின்றி ஒப்பீடுகளுக்கும், முடிவுகளைத் தேர்ந்தெடுப்பதற்கும் கூடப் பயன்படுகின்றன. f(x) என்ற குறியீடுகளில் சார்புகள் குறிக்கப்படுகின்றன. சார்பின் பண்புகளாவன:
- சார்புகள் ஏதேனும் ஒரு மதிப்பை திருப்பி அளிக்கின்றன.
- சார்புகளுக்கு நாம் ஏதேனும் ஒரு மதிப்பு அல்லது பல மதிப்புகளின் தொகுப்பை அனுப்ப நேரிடலாம்.
- ஒவ்வொரு சார்புக்கும் ஒரு இலக்கணம் (Syntax) உண்டு. அதன்படி நாம் மதிப்புகள் அனுப்பவில்லையாயின் நாம் எதிர்பார்க்கும் முடிவுகள் வராமல் போகக் கூடும்.
- சில சார்புகளுக்கு கணக்கிடுவதற்கான மதிப்புக்களில் விருப்பப்படி அனுப்பாமலும் இருக்கவியலும்.
- பயனரே தமக்குத் தேவையான சார்பைத் தாமே உருவாக்கிக் கொள்ளவும் வசதியுண்டு.
- மின்விரிதாள் மென்பொருள் சார்புகள் அனைத்தும் பயனரின் வசதிக்குத் தகுந்தாற் போல் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
- சார்புகளின் முடிவில் மதிப்புக்களை அனுப்புவதற்கு அடைப்புக் குறியீட்டிற்குள் இடல் வேண்டும்.
எடுத்துக்காட்டு:
=sqrt(C3) - C3 அறையிலுள்ள மதிப்பின் வர்க்க மூலம் காட்டும்.
=date() - குறிப்பிட்ட அறையில் அன்றைய தேதியை இடும்.
=sum(c3:g30) - C3 முதல் G30 வரை குறிப்பிட்ட அறைத் தொகுப்பிலுள்ள மதிப்புக்கள் கூட்டப்பட்டு முடிவு காட்டப்படும். =irr(a1:b10,10%) (ஓபன் ஆபீஸ் தொகுப்பில் வரும் மின்விரிதாள் மென்பொருளில் ',' க்குப் பதிலாக மதிப்புக்களைப் பிரிப்பதற்கு ';' உபயோகப்படுத்தப்படுகின்றது. எனவே அதில் =irr(a1:b10;10%) என்று இடல் வேண்டும்). மேற்கண்ட ஒவ்வொரு சார்பும் ஒவ்வொரு வகையான மதிப்பைத் திரும்ப அளிக்கும் என்று கூறியிருக்கின்றேன். ஏற்கனவே கூறியது போல் மதிப்புக்களை ஒப்பீடு செய்யவும் சார்புகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. அவை, if(),and(),or(),not()ஆகும். இவை இதுவா அதுவா, இதுவும் அதுவும், இது அல்லது அது, இது அல்லாதது போன்ற முடிவுகளைச் செய்ய உதவுகின்றன. எடுத்துக்காட்டாக =if(a3>50,"ஆம்","இல்லை") என்று இட்டால், a3 அறையில் இருக்கும் மதிப்பைப் பொருத்து ஆம், அல்லது இல்லை என்பது பதிலாகக் கிடைக்கும்! தொடர்ந்து சார்புகளைக் காண்போம்.
5 அக்டோபர் 2009
மின்விரிதாள் மென்பொருட்களில் சார்புகள் நுணுக்கமான நீண்ட கணக்குகளைப் போடுவதற்கும், தகவலளிப்பதற்கும், முடிவு செய்வதற்கும் உதவுகின்றன என்று பார்த்தோம். இவை பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன: அவையாவன:
- தரவுத்தளம் (Database)
- நாள் மற்றும் நேரம் (Date & Time)
- நிதியியல் (Financial)
- தகவல் (Information)
- முறைமை (Logical)
- கணக்கியல் (Mathematical)
- அணி (Array/Set)
- புள்ளியியல் (Statistical)
- மின்விரிதாள் தகவல் (Spreadsheet)
- எழுத்து (Text)
- sum() - உள்ளீடு செய்யப்பட்ட எண்கள், அறைத் தொகுப்பின் மொத்தத் தொகையைக் கணக்கிட உதவுகின்றது. எ.கா. = sum(10,20,40) அல்லது sum(a1:b3)
- if() உள்ளீடு செய்யப்பட்ட நிபந்தனையைச் சரி பார்த்து, ஆம் எனில் என்ன செய்யவேண்டும், இல்லை எனில் என்ன செய்ய வேண்டும் என்று கணக்கிட உதவுகின்றது. எ.கா. = if(a1>b1,100,120)
- irr() ஒரு திட்டத்தில் செலவிடும் பணத்தையும், அதிலிருந்து வரும் வருமானத்தையும் தற்கால மதிப்புக்கு மாற்றி அத்திட்டத்தின் மூலமாக நமக்குக் கிடைக்கும் வட்டி வீதம் என்னவென்று அறிய உதவும் சார்பு இது. எ.கா. = irr(a1:a12,1%)
- and() இரண்டு நிபந்தனைகளை உள்ளீடு செய்து, இரண்டும் சரியாக இருக்கின்றதா என்று சேர்த்துப் பார்க்கும் முறைமைச் சார்பு இது. எ.கா. = if(and(a1>b1,a2>b2),"ஆம்","இல்லை")
- concatenate() இரண்டு அல்லது மேற்பட்ட எழுத்துத் தொகுப்பைச் சேர்த்து ஒரே வார்த்தையாகச் சேர்க்க உதவும் சார்பு. எ.கா. = concatenate("இந்த"," ","மென்பொருள்"," ","நன்றாக"," ","இருக்கின்றது.")
- sin/cos/tan() - இவையனைத்தும் sin/cos/tan போன்ற முக்கோணவியல் கணக்குகளைக் காண உதவுகின்றது.
- count() மொத்தம் எத்தனை அறைகளில் மதிப்புக்கள் இடப்பட்டுள்ளன என்று அறியலாம். எ.கா. =count(a1:a3) மூன்று என்று காணக் கிடைக்கும்.
- average() சராசரி காண உதவும் சார்பு.
- date() - வருடம், மாதம், நாள் உள்ளீடு செய்தால் மென்பொருளுக்கேற்ற தேதியாக மாற்றித் தரும் சார்பு. எ.கா. =date(2009,10,5)
- days() - இரு தேதிகளுக்கிடையே எத்தனை நாட்கள் உள்ளன என்று காண உதவும் சார்பு. எ.கா. = days(date(2009,10,5),date(2010,10,5))
- int() - உள்ளீடு செய்யப்படும் எண்ணை முழு எண்ணாக மாற்றும் சார்பு. எ.கா. = int(5.3) விடை 5 =int(5.6) விடை 5
- round() - உள்ளீடு செய்யப்படும் எண்ணை முழு எண்ணாக மாற்றும் சார்பு. எ.கா. = round(5.3,0) விடை 5 =round(5.6,0) விடை 6
- now() - தற்போதைய நேரத்தைத் தரும் சார்பு
- randbetween() - இரண்டு எண்களுக்கிடையே ஏதேனும் ஒரு எண்ணைத் தேர்ந்தெடுக்க உதவும் சார்பு. எ.கா. =randbetween(0,100)
- vlookup() - தரவில் ஒரு பத்தியில் செங்குத்தாக மதிப்பைத் தேடி இன்னொரு பத்தியில் அதற்குச் சமமான தகவலைக் கண்டறியும் சார்பு.
- sumif() - குறிப்பிட்ட நிபந்தனைக்குட்பட்ட மதிப்புக்களை மட்டும் கூட்ட உதவும் சார்பு.
மேற்கண்ட பிரிவு ஒவ்வொன்றிலும் நிறைய சார்புகள் இருக்கின்றன. பிரபலமான சில சார்புகளை மட்டும் காணலாம்.
கீழ்க்காணும் சார்புகள் பற்றிப் பின்னர் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
தொடர்வோம்...
17 டிசம்பர் 2009
இதுவரை மின்விரிதாள் மென்பொருளின் அடிப்படை விஷயங்களைக் கண்டோம். இனி சற்றே முன்னேறி எந்த வகையிலெல்லாம் நிர்வாக முடிவெடுக்க மின்விரிதாளைப் பயன்படுத்தலாம் என்று காண்போம்.
- முதலில் விடை அப்புறம் கேள்வி! (Goal Seek)
இப்போதைய சூழலில் விடை நமக்குத் தெரியும், அதற்கான கேள்வி என்ன என்று தான் தெரியவேண்டி இருக்கின்றது. என்ன இது? புரியவில்லையே என்கின்றீர்களா? ஒரு உதாரணத்துடன் விளக்குகின்றேன். இப்போது நாம் விற்கும் விலையில் 15 சதவீதம் லாபம் கிடைக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். நமது இந்த மாத மொத்த விற்பனை ரூபாய் 1,00,000 என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் நமது இந்த மாத லாபம் என்ன என்று கேட்டால் 1,00,000 * 15% என்று கண்டறிந்து 15000 என்று எளிதில் சொல்லிவிடலாம். ஆனால் நாம் அறிந்து கொள்ள நினைப்பது இது இல்லை. மாறாக, ரூபாய் 36000 லாபம் கிடைக்க, நாம் எவ்வளவு விற்பனை செய்ய வேண்டும்? என்றால் எப்படி மின்விரிதாள் மூலம் காண்பது? இது தான் விடையிலிருந்து கேள்விக்குச் செல்வது என்பது. நமக்கு விடை ரூபாய் 36000 என்று முன்னமே தெரிகின்றது. கேள்வி என்ன? அதைக் கண்டறிய உதவுவது தான் Goal Seek எனப்படும் வசதியாகும். இது பின்னிருந்து முன்னோக்கிச் செல்ல உதவுகின்றது. இதற்காக சூத்திரங்களை மாற்ற வேண்டியதில்லை என்பது தான் இந்த அமைப்பின் முக்கியமான வசதியாகும். முதலில் கீழ்க்கண்டவாறு விற்பனை, லாப வீதங்களை மின்விரிதாளில் வழக்கம் போல் இடவும். அதாவது c2 ல் 100000, c3 ல் 15%, c4 ல் "=c2 * c3" என்றும் இடுகின்றோம். c4 ல் 15,000 ரூபாய் லாபம் என்று கணக்கிடப்படுகின்றது. இப்போது c4 ல் இருந்து கொண்டு tools->goal seek என்பதைத் தேர்ந்தெடுங்கள். அப்போது வரும் பெட்டியில் கீழ்க்கண்ட அசைபடத்தில் உள்ளவாறு மதிப்புக்களை இடுங்கள். உடனே கிடைத்த விடைக்கான கேள்வி கண் முன் நிற்பதைக் காணலாம். :)
படம் கிடைக்கவில்லை
இது ஒரு மிக எளிய உதாரணமாகும். மிகப்பெரிய சூத்திரங்களையும் இட்டு, முடிவை மாற்றுவதன் மூலம் தொடக்கத்தையே மாற்ற இயலும்! இன்னும் கொஞ்சம் முன்னேறுவோமா?...
19 மார்ச் 2010
அடுத்து நாம் காணவிருப்பது,
- காட்சியமைப்பு (Scenario): (இப்படி இருந்தால் எப்படி இருக்கும்?)
- விற்கும் பொருட்களின் எண்ணிக்கை - 5000
- பொருளை வாங்கும் விலை - ரூ. 7
- பொருளை விற்கும் விலை - ரூ. 10
- பொருளை விற்க கொடுக்க வேண்டிய தரகு - 5%
- ஒரு மாதத்தின் சம்பளச் செலவு - ரூ. 1500
- விற்பனை வரி விகிதம் - 4%
- விற்பனை விலை ரூ.11 ஆனால் நம் லாபம் என்னவாக இருக்கும்?
- விற்பனை விலை ரூ. 9 ஆகக் குறைந்தால் நம் லாபம் என்னவாக இருக்கும்?
- விற்பனை விலை ரூ. 9, வாங்கும் விலை ரூ. 6, தரகு 4% என்றால் லாபம் என்னவாகும்?
- தரகு 4% ஆக மாற்றினால் லாபம் என்னவாகும்?
- நம்மால் 6000 பொருட்கள் விற்பனை செய்ய முடிந்தால் லாபம் என்னவாகும்?
- பொருளின் விலையை ரூ 11 ஆகக் கூட்டி பொருட்களின் விற்பனை எண்ணிக்கையை 4000 ஆகக் குறைத்தால் லாபம் என்னவாகும்?
- மொத்த அறிக்கையையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
- Tools->Scenarios என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
- காட்சிக்குப் பெயரிடுங்கள்.
- தேவையான மாறிகளின் மதிப்புக்களை மாற்றிக் கொள்ளுங்கள்.
- மேலாளரிடம் பல்வேறு காட்சியமைப்புக்களையும் ஓடவிட்டுக் காட்டி நற்பெயரை ஈட்டிக் கொள்ளுங்கள்.
இந்த வசதியின் மூலம் நிர்வாகத்தின் மிக முக்கியமான கேள்வியான "இப்படி இருந்தால் எப்படி இருக்கும்?" என்றழைக்கப்படும் "What if?" என்ற கேள்விக்கான பதில்களைத் தருவதாகும். மிக மிக உபயோகமான இந்த வசதியைப் பயன்படுத்தி எளிதாக மேலதிகாரிகளைக் கவரலாம்! இனி இவ்வசதி எவ்வாறு இயங்குகின்றது என்று கண்டால் நீங்களும் நான் சொல்வது உண்மை என்று ஒப்புக் கொள்வீர்கள். திறந்த அலுவலகத்துக்கும், மைக்ரோசாப்ட் எக்செல் மென்பொருளுக்கும் இந்த வசதியை நிறுவுவதில் சற்றே மாறுபாடு உண்டு. திறந்த அலுவலகத்தில் இது மிக எளிதானதாகும். எக்செல் மென்பொருளில் எவ்வாறு இவ்வசதியை நிறுவுவது என்றும் அடுத்துக் காணலாம். முதலில் ஓபன் ஆபீஸ் விரிதாள் மென்பொருளில் காண்போம். ஒரு குறிப்பிட்ட அறிக்கையில் பல மாறிகளையும் (variables) மாறிலிகளையும் (constants) நாம் உபயோகித்திருக்கலாம். இதில் சில மாறிகள் மாறினால் (அதாவது காட்சி மாறினால்) என்ன நடக்கும் என்று ஒரு மேலாளர் கேட்டால் உடனே நாம் பதிலளிக்கக் கூடியவர்களாக இருத்தல் வேண்டும். தவிர, நாமே சில காட்சிகளையும் கற்பனையில் உருவாக்கிக் காட்டலாம். இதனாலேயே இவ்வசதிக்குக் காட்சியமைப்பு என்ற பெயர் வந்திருக்கின்றது. இப்போது ஒரு எடுத்துக்காட்டுடன் காணலாம். நமக்கு ஏப்ரல் 2010 மாதத்துக்கான விற்பனைத் திட்டத்தினைப் பற்றிய ஒரு அறிக்கை தயாரிக்குமாறு பணித்திருக்கின்றார்கள் என்று கொள்வோம். கீழ்க்கண்ட மாறிகளை/தகவல்களை நாம் உபயோகப்படுத்துகின்றோம்.
இத்திட்டத்தின் படி லாபம் என்னவாக இருக்கும் என்று மின்விரிதாளின் மூலம் ஒரு அறிக்கையை உருவாக்கிச் சமர்ப்பிக்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இப்போது மேலாளர் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்கின்றார்:
இது போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கும் எந்த வித காட்சியமைப்பு வசதியும் இல்லாமலேயே உடனுக்குடன் தகவல்களை மாற்றி லாபத்தைக் கண்டறிய இயலும் தான். ஆனால் அதற்காகும் காலமும் முயற்சியும் எத்தனை கடினமாகும் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். ஆறு மாறிகளைக் கொண்ட ஒரு அறிக்கைக்கே இத்தனை கேள்விகள்/மாற்றங்கள் என்றால் இன்னும் பல மாறிகளைக் கொண்டு ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தால் எத்தனை விதவிதமான கேள்விகள் எழும்? நிர்வாகத்தில் கேள்விகள் எழுவது சகஜம். உடனுக்குடன் (ஏன் கேள்வி எழும் முன்னரே!)அதற்கான பதில்களைத் தருவது தான் நமது சாமர்த்தியம். சரி, காட்சியமைப்பை எப்படி உருவாக்குவது என்று காண்போம்.
கீழ்க்கண்ட அசைபடத்தில் ஒரு காட்சியை எப்படி உருவாக்குவது என்றும், ஒவ்வொரு காட்சியமைப்பையும் எப்படி மாற்றி லாபத்தின் அளவைக் காண்கின்றோம் என்றும் காணலாம். (அசைபடம் 3 எம்பி அளவாகும். முழுதும் தரவிறங்கும் வரை பொறுமை காக்கவும்.)
படம் கிடைக்கவில்லை
அடுத்ததாக இதே வசதியை மைக்ரோசாப்ட் எக்செல்லில் எவ்வாறு செய்வது என்று காணலாம்.