புகைப்படக் கவிதை - 61

 

கந்தகக் கனமழை கொட்டிக் குலைக்க
வெந்து விதிர்த்து விழுதலே விதியோ?
பிஞ்சுப் பூங்கரம் பிடியின்றிப் பதறி
அஞ்சி அதற்றி அழுதலே அழகோ?
தனமெலாந் தொலைத்துத் தரணியில் தவித்து
இனமிலா(து) இடர்ப்படா(து) இறப்பதே இதமோ?
மொழியது முகிழ்ந்த மலரின் முள்ளெனப்
பழிகொண்டு பிடுங்கிப் பொசுக்குதல் பலமோ?
கஞ்சிக் கலையினும் கொஞ்சிடக் கருப்பையில்
மிஞ்சிய முதல்வனும் மறிப்பதே முடிவோ?

வீரத்தின் விளைநிலமாய் வேகத்தில் வேங்கையெனத்
தீரத்தின் தழைதருவாய் தாகத்திற் தீவிழுங்கு!
அழுதால் அமரராக்கி அமைதி அளித்திடுவர்
விழுதாய் வேரூன்றி வேழமாய் விழித்தெழு!
தாய்நாடு தாய்மொழி தாய்மை தொலைத்து
ஓய்ந்தோடி ஓரகதி ஒடுங்குதல் ஒழித்திடு!
கள்ளக் கயவர் கலங்கிக் குலைநடுங்க
துள்ளித் திறத்துடன் தலைமை தாங்கிடு!
களம்புகு கனவொடு களித்துக் கண்ணுறங்கி
வளநாடு வெஞ்சமர் வாகைசூடி வென்றெடு!