வலைப்பூ

நூற்பாதை - 1

நூற்பாதை

இறை வணக்கம்:

    இயற்கை விரிக்கும் இப்பரந்து பட்ட உலகினூடே, எண்ணக் கடலில் முகிழ்ந்து, ஒலியெனும் மேகமாய்க் குவிந்து, கேட்கும் செவியெலாம் குளிர்விக்கும் அருமழையாகவும், எழுத்தெனும் மலராய் மலர்ந்து இயலிசை நாடகமெனும் நார் தொடுத்து வாசிக்கும் வாசகரின் மனத்திலெல்லாம் மணம் பரப்பும் ஆரமாகவும், தொன்று தொட்டு விளங்கும், ஈடிணையற்ற, தேனினும் இனிய தமிழ் மொழியில், என்றுமுள்ள இறையின் திருவடியினை இறைஞ்சுகின்றேன்.

குரு வணக்கம்:

    இற்றைக்கு தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு (கி.பி. 12ம் நூற்றாண்டு) முந்தையதாயினும் இக்கணமும் புதியதாய் இலங்கும் இலக்கண நூலாம் நன்னூலை ஆக்கித் தருமாறு சீயகங்கன் (மூன்றாம் குலோத்துங்க சோழனின் கீழ் தொண்டை நாட்டுச் சனகாபுரியை ஆண்ட சிற்றரசன்) வேண்ட, அதை யாவரும் பயன்பெறும் வண்ணம் உருவாக்கித் தந்த சன்மதி முனிவரின் சீடர் சமண மதத்தைச் சார்ந்த பவணந்தி முனிவர் தம் பாதந் தொழுகின்றேன்.

நூல் வியப்பு:

    நமது நன்னூல் ஆசிரியரின் பாணி இருக்கின்றதே, அதை நினைக்கும் போதெல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. அத்தனை ஆண்டுகளுக்கு முன்பே “இது இவ்வளவு தானப்பா!” என்று ஒரு சிறு குழந்தையின் கைப்பிடித்து அழைத்துச் செல்வது போல் நம்மை அழைத்துச் சென்று எழுதுகலையின் எல்லையில் நம்மை உலவ வைக்கின்றார்.

    ஒரு இலக்கண நூலில், தேவையான இடங்களில் சுருக்கமாவும், தேவையான இடங்களில் விரித்தும், எண்ணற்ற பொருத்தமான உவமைகளுடனும்,  சற்றே நகைச்சுவை தூக்கலாகவும் கூட இவ்வாறெல்லாம் சுவாரசியமாகவும் சுவைபடவும் எழுத முடியுமா என்று தெரியவில்லை! 

    ஏதோ மற்றவர்களுக்கு எல்லாம் சட்டாம் பிள்ளை போல் இலக்கணத்தைக் காட்டி விட்டு “ஊருக்குத் தான் அந்த உபதேசம்” என்றில்லாமல், தாம் எழுதிய இலக்கணத்தின் வழி முதலில் தானே நின்று பவணந்தியார்  உதாரண புருடராகத் திகழ்ந்திருக்கின்றார். 

முகப்பு:

          ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான தொல்காப்பியரின் தமிழ் இலக்கணத்தைப் பின்பற்றியும்,  அதே சமயத்தில்

          பழையன கழிதலும் புதியன புகுதலும் 

          வழுவல காலவகையினானே! 

          என்று காலத்திற்கேற்ப வழக்கில்லாப் பழையன கழித்தும் புதுமையை வரவேற்றும் அன்று நன்னூல் ஆசிரியர் பவணந்தி முனிவர் உரைத்த நூலில் இருந்து, நமது தற்கால மாணவர்களுக்கும், ஏனைய கல்வியிலும் எழுத்திலும் ஆர்வம் உள்ளவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இத்தொடரை உருவாக்கினால் எப்படி இருக்கும் என்ற விருப்பத்தின் செயல்வடிவமே இத்தொடராகும்.

    வரலாற்றில் யாரும் இதுவரை செய்யாத ஒன்றை இப்போது செய்ய முனைந்திருக்கின்றேன். நூலுக்கு விரிவுரை எழுதுவது தான் முறை மற்றும் மரபு. எங்கேனும் முன்னுரைக்கு விரிவுரை எழுதிக் கண்டிருக்கின்றீர்களா? 

          தமிழ் மொழியே பெருங்கடலெனும் போது அதன் இலக்கணம் என்பது எவ்வளவு விரிவாக இருக்கும்? நன்னூலின் மொத்தப் பகுதிக்கும் உரையெழுதும் அளவுக்கு அடியேனுக்கு வயதுமில்லை, படித்ததுமில்லை. அஃது இக்கட்டுரைத் தொடரின் நோக்கமும் இல்லை. 

          நன்னூலின் முன்னுரைப் பகுதியான பாயிரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அதிலும் அனைத்துப் பாடல்களுக்கும் வரிக்கு வரி உரையெழுதாமல் என்னால் முடிந்த அளவிலும் தொடருக்குத் தேவையான அளவிலும் சில பாடல் வரிகளை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொண்டு அவற்றை விளக்க முற்படுகின்றேன். சுருக்கமாகச் சொன்னால் இது நூலின் அறிமுகத்துக்கே அறிமுகம் செய்வது ஆகும். 

       ஆறுமுகநாவலர், மயிலை நாதர், சங்கர நமச்சிவாயர் முதல் பல்வேறு தமிழறிஞர்களும், தமிழ் ஆசிரியர்களும், சான்றோர்களும் எழுதிய பேருரைகளின் ஊடே இச்சிறுவனின் பாயிர உரையையும் பொருத்திப் பார்க்கலாம் என நினைக்கக்கூட இயலாது என்பதை முதற்கண் தெரிவித்துக் கொண்டு இத்தொடரில் குற்றமிருப்பின் தவறாது சுட்டிக் காட்டித் திருத்த வேண்டுமாய்ப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். 

காரணம்:

          இன்றைய போட்டிகள் நிறைந்த காலகட்டத்தில் ஒரு பாடத்தை எவ்வாறு கற்க வேண்டும், நாம் நினைத்ததையும் கற்றதையும் தேர்வில் எவ்வாறு எழுத வேண்டும் என்பதெல்லாம் அறியாமலேயே மாணவர்கள் கற்கின்றார்கள். தேர்வும் எழுதுகின்றார்கள். ஒரு குறிப்பிட்ட காலம் மற்றும் தளம் வரைக்கும் தேறியும் வருகின்றார்கள். 

          கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிப் போட்டி வலுப்பெறும் போது சமர்த்தாகக் (Smart) கற்கும் மற்றும் எழுதும் சூக்குமம் அறிந்தவர்கள் வெற்றி பெறுகின்றார்கள். ஏனையோர் மிகவும் அல்லல்படுவதைக் காண்கின்றோம். எனது அனுபவம் இதற்குச் சற்றும் மாறுபட்டதல்ல!

          இலக்கணம் அறிந்து, எழுதுகலையின் நுணுக்கங்கள் அறிந்து, எழுத ஆரம்பித்து விட்டால் எத்தகைய சூழ்நிலையையும் கைகொள்ளும் பக்குவமும் துணிச்சலும் வந்து விடுவதை அனைவரும் அனுபவப் பூர்வமாக உணரலாம்.  

          நாம் பெற்ற பேறு இவ்வையகமும் பெற வேண்டும் என்ற எண்ணமும்,  குழந்தைப் பருவத்திலேயே அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அரிய எழுத்துக் கலையின் இலக்கணத்தைப் பலரும் இன்னும் அறியும் வண்ணம் எளிய பழகு தமிழில் எழுதலாம் என்ற ஆர்வமும்  இத்தொடர் உருவாகக் காரணங்களாகும்.


          இத்தொடரைப் பின்பற்றி ஒருவரேனும் எழுத்துக் கலையில் ஆர்வமுற்று நன்னூல் இலக்கணப் பாதையில் நடப்பாரேயின் அதுவே நூற்பாதை எனும் இத்தொடரின் வெற்றியாம்.

<< Go back to the previous page