யாத்திரை அனுபவங்கள்~15 நிமிட வாசிப்பு20 ஆண்டுகளுக்கு முன் எழுதியது

கிரியின் கைமாறு - இந்தியக் கோடி

முத்தமிழ் மன்றத்தில் எழுதியது · 29 மே 2006 – 21 ஜூன் 2006

இந்த மாதம் என்னைப் பொருத்த வரை சுற்றுலா மாதம் என்று நினைக்கிறேன். பல குடும்பங்களுக்கும் இது தான் சுற்றுலா மாதமாக இருக்கும் என்பதும் உண்மை தான். ஏனென்றால் கோடை விடுமுறை விட்டு பள்ளிக் குழந்தைகள் குதூகலிக்கும் மாதம் இது. வார வாரம் ஏதேனும் ஊருக்கு நான் நினைக்காமலேயே, எந்த வித திட்டங்களும் வகுக்காமலேயே கிட்டத் தட்ட இழுத்துச் செல்லப் படுகிறேன். அது தென் கைலாசமாகட்டும், காட்டழகராகட்டும், இந்தியக் கோடியாகட்டும், திடீர் முடிவு தான். இந்த வாரம் எனது பயண அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். இந்தப் பதிவுக்கு கைமாறு (!) என்று பெயர் வைப்பதில் ஒரு பிண்ணணி இருக்கிறது. எங்கள் குடும்பத் தொழிலான பட்டாசுத் தொழில் விநியோகஸ்தர்கள் நாடு முழுதும் இருக்கிறார்கள். அதில் எனக்குப் பிடித்த மாநிலம் பஞ்சாப்! அது ஏன் என்பதை முதல் முறை சென்று வந்ததும் ஒரு கவிதையாய் எழுதினேன். அதோடு கவிதை எழுத வேண்டும் என்ற ஆசையை விட்டேன்! இப்போது படித்துப் பார்த்தாலும் சிரிப்பு வருகிறது. எனது முதல் மற்றும் கடைசி கவிதை. அந்த பஞ்சாப் மாநிலத்தில் இரு வி.கள் இருக்கிறார்கள். எனக்கு மிகவும் பழக்கமானவர்கள். ஒருவர் அம்பாலாவிலும் - (இது ஹரியானாவில் இருக்கிறது), இன்னொருவர் பஞ்ச்குலாவிலும் - (இது சண்டிகர் நகரின் ஒரு பகுதி) இருப்பவர்கள். ஒரு தொழில் நடத்துபவர்களுக்கு பல வாடிக்கையாளர்கள் இருப்பார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள். ஒரு சிலர் மட்டுமே தெளிவாக திட்டமிட்டு, நீண்ட கால உறவை வைத்திருப்பவர்களாக இருப்பார்கள். அந்த வகையில் இந்த இருவரும் அளவு சிறிதாகவே வாங்கினாலும், நீண்ட காலமாக எங்களிடம் சரக்கு வாங்கிக் கொண்டிருப்பவர்கள். குடும்ப நண்பர்கள் என்றும் கொள்ளலாம். அந்த அளவு நான் அங்கு சென்றால் என்னை விருந்தோம்பலில் திக்கு முக்காடச் செய்வார்கள். அங்கிருக்கும் கோவில்கள், குருத்துவாரங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் பார்த்து விடுவேன். அவர்கள் இந்த வாரம் சிவகாசி வந்திருந்தார்கள். நாமும் விருந்தோம்பலில் மட்டமா என்ன? போன ஆண்டு அவர்கள் வந்திருந்த போது குற்றாலம், ஆரியங்காவு என்று அழைத்துச் சென்றிருந்தேன். இந்த ஆண்டு அவர்களை எங்கு அழைத்துச் செல்வது என்று பார்க்கும் போது தான் அவர்களாகவே இந்தியக் கோடியைப் பார்க்க ஆசைப் பட்டார்கள். சரி விடுவானேன் என்று ஒருநாள் பயணமாக உமாதேவி நித்திய கன்னியாக, நித்தம் தவம் செய்யும் குமரி முனைக்குச் சென்று வந்தோம். அதைத் தான் கைமாறு என்று கூறினேன்!

30 மே 2006

இனி கன்னியாகுமரி பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இந்தியாவின் தென் எல்லை. வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல், அரபிக் கடல் ஆகிய மூன்று கடல்களும் சங்கமிக்கும் சங்கமம். உமாதேவி, நித்தம் கன்னியாக (பகவதியாக) தவம் இருக்கும் குமரி முனை. விவேகானந்தர் பல்சமய மாநாட்டில் கலந்து கொள்ள சிகாகோ செல்வதற்கு முன் தனியே வந்து மூன்று நாட்கள் தியானம் செய்து சென்ற தலம். நம் நாட்டில் சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் இரண்டையும் கடலிலேயே பார்க்க முடிகிற ஒரே இடம். இப்படி பல சிறப்புக்களைக் கொண்டிருப்பதால் எப்போதும் இங்கு சுற்றுலா பயணிகள் நாடு முழுவதுமிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வந்த வண்ணம் இருக்கிறார்கள். மதுரையிலிருந்து 250 கி.மீ. தூரத்தில் தெற்கே அமைந்திருக்கிறது கன்னியாகுமரி. எங்கள் ஊரிலிருந்து 190 கி.மீ. 26-05-2006 அன்று வெள்ளிக்கிழமை மாலை 2 மணியளவில் சிவகாசியிலிருந்து கிளம்பினோம் நானும் அவ்விரு நண்பர்களும். அன்று மாலையில் சூரிய அஸ்தமனம் பார்த்து விட்டு, அங்கேயே தங்கி பின்னர் மறுநாள் காலை சூரிய உதயம் பார்த்துவிட்டு, கோவில் தரிசனம் செய்துவிட்டு, பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்துவிட்டு மறுநாளே திரும்புவதாகத் திட்டமிட்டுக் கொண்டு சென்றோம். ஆனால், நடந்தது என்ன?

31 மே 2006

முதல் கவிதை என்று சொன்னேனல்லவா! ஒரு வழியாக அதைத் தேடி எடுத்து விட்டேன்! இன்னும் இரண்டு பகுதி இருக்கிறது. இது கவிதையா? நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

படம் — வெளித் தளத்தில் ↗

படம் — வெளித் தளத்தில் ↗

படம் — வெளித் தளத்தில் ↗

அட! சொல்ல வந்ததை விட்டு விட்டு வேறேதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறேன். மாலை 2.30க்குக் கிளம்பிய நாங்கள் 4.30 மணியளவில் திருநெல்வேலி விலக்குப் பாதையில் நாகர்கோவில் நோக்கிச் சென்றோம். பணகுடி அருகில் வருகையில் கூட வந்த நண்பர்களில் ஒருவர், "உடனே வண்டியை நிறுத்து!" என்றார். என்னவோ ஏதோ என்று பயந்து தான் போனேன். அப்புறம் தான் தெரிந்தது அவர் இது வரை காற்றாலை (Windmill) பார்த்ததில்லை என்று! திருநெல்வேலி தாண்டியதில் இருந்து, குறிப்பாக பணகுடியிலிருந்து, ஆரல்வாய்மொழி வரை ஒரே காற்றாலைகள் தான். கிட்டத்தட்ட ஆயிரக் கணக்கில் இருக்கும். அவற்றின் புண்ணியத்தாலும், தமிழகத்தில் தற்போது மின்சார நிறுத்தம் ஏற்படுவதில்லை என்பது ஒரு மறுக்க முடியாத உண்மை. இந்தக் காற்றாலை நிறுவும் பணியில் எனக்கும் சிறிது பங்கு உண்டென்கின்ற முறையில் (திட்ட மதிப்பீடு, அறிக்கை வழங்கல், வங்கிக் கடனுதவி பெற்றுத்தருதல் - Project Feasibility, Project Report) நானும் அவர்களுக்கு சிறிது காற்றாலைகள் பற்றி விளக்கினேன். முக்கியமாக, ஒரு காற்றாலையின் முதலீடு ரூ.75 லட்சம். காற்றாலை கைகளின் நீள, அகல, உயரங்கள். தேவைப்படும் நில அளவு. வருமான வரிச் சட்டத்தில் அளித்த வரிவிலக்கினாலேயே இத்தனை காற்றாலைகள் குவிந்த கதை அனைத்தையும் சொல்லியே கன்னியாகுமரி வந்து விட்டது.

4 ஜூன் 2006

கன்னியாகுமரிக்கு வந்து சேரும் போது சரியாக மணி மாலை 5.30 ஆகி இருந்தது. நேரடியாக சூரிய அஸ்தமனம் பார்ப்பதற்காகவே அழகாக கட்டப்பட்டுள்ள கடற்கரைப் பூங்கா மற்றும் கடற்கரை (அரபிக் கடல்)க்குச் சென்றோம். நாங்கள் சென்று சேர்வதற்கும் மழை ஆரம்பிப்பதற்கும் சரியாக இருந்தது! :( மழை ஆரம்பித்த பின் எப்படி சூரிய அஸ்தமனம் பார்க்க இயலும்? சிறிது நேரம் காத்திருந்தோம். 10 நிமிடங்களில் மழை விட்டது. ஆனாலும் மேக மூட்டமாய் இருந்த காரணத்தால் அஸ்தமனத்தைப் பார்க்க முடியவில்லை. கடலையே அடிக்கடி பார்த்திராத பஞ்சாப்காரர்களுக்கு இதுவே போதுமானதாக இருந்தது! நன்றாக இருட்டும் வரை கடற்கரையிலேயே பொழுதைப் போக்கினோம். கோடை விடுமுறையாதலால் வந்திருந்த நிறைய சுற்றுலாப் பயணிகளும் சென்ற பின், நாங்கள் மட்டுமே தனித்திருந்தோம். அன்று அமாவசைக்கு மறுநாள். இருட்டு, அலை ஓசை, காற்றின் வேகம், மண் வாசனை, தனிமை அனைத்தையும் வெகுவாக ரசித்தோம். :) பின்னர் 7.30 மணியளவில் கடற்கரை தெரியுமாறு உள்ள ஒரு விடுதியில் அறையை வாடகைக்கு எடுத்தோம். கொண்டு வந்த சாமான்களை அறையில் வைத்து விட்டு காலாற நடந்து வரலாம் என்று மீண்டும் கடற்கரையோரம் (வங்காள விரிகுடா & இந்து மகா சமுத்திரம்) சென்றோம். குமரி அன்னையின் கோவிலைத் தாண்டித் தான் செல்ல வேண்டியிருப்பதால் கூட்டம் எவ்வாறு இருக்கிறது என்று நோட்டம் விட்டோம். கூட்டமே இல்லை. உடனே உள்ளே சென்றோம். எங்கள் அதிர்ஷ்டம், நாங்கள் தான் கடைசி. எங்களுக்குப் பிறகு யாரையும் உள்ளே விட வில்லை. சாவதானமாக கோவிலைச் சுற்றி வந்தோம். நித்தம் தவம் செய்யும் குமரியை கண் குளிர தரிசித்தோம். காலை கூட்டம் 4 மணிக்கெல்லாம் அதிகமாக இருக்கும் என்றும், கூட்டத்தின் காரணமாக அம்மனைத் தரிசிக்க 4 மணி நேரம் வரை ஆகும் என்றும் வெளியே வரும் போது பேசிக் கொண்டார்கள். அம்மனின் அருளை நினைத்து வியந்த வண்ணம் கடற்கரையோரம் நடக்கச் சென்றோம். சுற்றிலும் விளக்கு வெளிச்சத்தில் சுனாமியையும் தாண்டி வள்ளுவர் வானுயர கம்பீரமாக நின்றிருந்தார். யார் அது என்று கேட்ட நண்பர்களிடம் விளக்கிக் கொண்டிருந்தேன். கோவிலின் அருகிலேயே சுனாமியின் நினைவாக ஒரு நினைவிடம் அமைத்திருந்தார்கள். பார்க்கும் போது மிகவும் வருத்தமாக இருந்தது. அதிகாலை சூரிய உதயம் பார்க்க வேண்டுமானால் சரியாக 5 மணிக்கெல்லாம் எழ வேண்டும் அல்லவா. அதனால் சீக்கிரமே படுக்கைக்குச் சென்றோம். மறு நாள் காலை -

5 ஜூன் 2006

ஈசலாய் பெருகி இருக்கும் காற்றாலைகள்.

படம் கிடைக்கவில்லை

மேகமும் கடலும் முத்தமிட்டதால் அஸ்தமனத்தைப் பார்க்க முடியவில்லை :) :(

படம் கிடைக்கவில்லை

சிறிது நேரத்தில் விலகிய மேகம்!

படம் கிடைக்கவில்லை

சுனாமி நினைவுச் சின்னம்.

படம் கிடைக்கவில்லை

6 ஜூன் 2006

மறுநாள் அதிகாலை சரியாக ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து உப்பரிகையில் (அட! பால்கனி தாங்க) நின்று கடலைப் பார்த்தால் நட்சத்திரங்கள் வானத்தில் இருந்து இறங்கி கடலில் நீந்துவது போல் தோற்றமளித்தது கடல். கூர்ந்து கவனித்ததில் அவை அனைத்தும் மீன்பிடி படகுகள் என்று தெரிந்தது. தினமும் அதிகாலையிலேயே மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களின் வாழ்க்கையையும், உழைப்பையும் எண்ணி எண்ணி வியந்தோம். தினமும் அதே சூரியன் தானே உதிக்கிறது. என்றாவது வீட்டில் அதிகாலை எழுந்து சூரியோதயத்தைப் பார்ப்பதில்லை. ஆனால் அதில் உள்ள அழகு மெய்மறக்க வைக்கும். இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதற்கு சாட்சி இதெல்லாம். அடடா! அடிவானம் எங்கே என்பதே தெரியாமல் வானமும், கடலும் ஒரே கருமை நிறத்தில் காட்சியளிக்க, இது தான் கடல், இது தான் வானம் என்று பிரித்துக் காட்டும் செம்பந்து, வானத்தையும், கடலையும் நீல நிறமாக்கி, மெல்ல மெல்ல தோன்றியது. ஒவ்வொரு விநாடியும் அதை ஆசை தீரக் கண்களால் பருகினோம். மேகம் சிறிது மறைத்தாலும், சிறிது நேரத்திலேயே கண்களைக் கூசச் செய்யும் ஒளியுடன் பகலவன் தரிசனம் தந்தான். அதற்குள் மணி 6.20 ஆகி விட்டிருந்தது. விவேகானந்தர் பாறையும், திருவள்ளுவர் சிலையும் மிகத் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தன. அனைத்தும் சிறிது நேரம் தான். காலை 7 மணிக்கெல்லாம் தூறல் விழ ஆரம்பித்து விட்டது. கேரளாவில் மழைப் பருவம் ஆரம்பித்து விட்டதால் கருமேகங்கள் வானத்தை அப்பின. சூரியனே தெரியாத அளவுக்கு மேகம் மூடியது. இருந்த போதும் காலை விவேகானந்தர் பாறைக்குச் செல்ல முடிவெடுத்து படகுத் துறைக்கு 7.45 மணியளவில் சென்றோம். அங்கே பெரும் வரிசை நின்று கொண்டிருந்தது. காத்திருந்து 9 மணியளவில் பாறைக்குச் செல்லும் படகில் ஏறி அமர்ந்தோம். 5 நிமிடம் கூட பயணம் செய்யாவிட்டால் கூட கடல் பயணம் வித்தியாசமானது. மழை வேறு தூறிக் கொண்டே இருந்தது. விவேகானந்தர் பாறையில் கால் வைத்தது தான் தாமதம். மழை கொட்ட ஆரம்பித்து விட்டது. அப்போது பிடித்த மழை தான். மீண்டும் நாகர்கோவில் வரும் வரை பெய்து கொண்டே இருந்தது.

9 ஜூன் 2006

விவேகானந்தர் பாறையில் மழை நன்கு பிடித்துக் கொண்டது. அனைவரும் மண்டபத்துள் தஞ்சம் புகுந்தோம். அங்கே விவேகானந்தரின் கம்பீரமான வெண்கலச் சிலை ஒன்றும், அவரது குரு ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் சாரதா தேவியார் புகைப்படங்களும் வைக்கப்பட்டிருந்தது. சிகாகோ சர்வ சமய மாநாட்டிற்குச் செல்வதற்கு முன், விவேகானந்தர் கன்னியாகுமரிக்கு வந்து இந்தப் பாறையில் அமர்ந்து மூன்று நாட்கள் 25,26,27 டிசம்பர் (ஆண்டு நினைவுக்கு வரவில்லை :() தியானம் செய்திருக்கிறார். அங்கு சென்றதும் கடல் ஆர்ப்பரித்தாலும் மனம் அமைதியாவது உண்மை. மழை விடாது பெய்ததால் வெகு நேரம் அங்கு நிற்காமல் உடனே திரும்பி விட்டோம். வரும் வழியில் மீனவர்கள் எல்லாரும் திரும்பி வந்து சந்தை நடந்து கொண்டிருந்தது. கூட்டம் என்றால் அப்படி ஒரு கூட்டம். நல்ல வியாபாரம் தான். மீனவர்களின் வாழ்வு செழிக்கட்டும். பின்னர் அங்கேயே காலைச் சிற்றுண்டி அருந்தி விட்டு, கன்னியாகுமரியை விட்டு புறப்பட்டோம். சிறிது தூரத்திலேயே இருக்கும் மிகப் புகழ் பெற்ற சுசீந்திரம் சென்றோம்.

சூரிய உதயத்துக்கு முன் எடுத்த படம்.

படம் — வெளித் தளத்தில் ↗

சூரிய உதயத்தின் போது.

படம் — வெளித் தளத்தில் ↗

சூரியன் சிறிது மேலே வந்தவுடன். சூரியனைப் பார்க்கக் கூட முடியவில்லை.

படம் — வெளித் தளத்தில் ↗

அலைகளின் நாட்டியம்

படம் — வெளித் தளத்தில் ↗

மீனவர்களின் சந்தை. சுடச்சுட மீன் வியாபாரம்.

படம் — வெளித் தளத்தில் ↗

கம்பீரமாய் நிற்கும் திருவள்ளுவர் சிலை.

படம் — வெளித் தளத்தில் ↗

சுனாமியையும் தாங்கி நிற்கும் விவேகானந்தர் பாறை மற்றும் மண்டபம்.

படம் — வெளித் தளத்தில் ↗

12 ஜூன் 2006

சுசீந்திரம். அருமையான தலம். தாணுமாலயன் என்பது இறைவன் பெயர். சிவனுக்குள் விஷ்ணுவும், பிரமனும் அடக்கம் என்பதை உணர்த்தும் தலம். தாணு - மால் - அயன். தலத்தைச் சுற்றி தெருக்கள். மிகப் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய தெப்பக்குளம். முழுதும் நீரால் நிறைந்து காணக் கண் கோடி வேண்டும் காண்பதற்கு. சிறிய ஊர் தான். இங்கு தான் அநுமனுக்கு என்று மிகப் பெரிய சிலை இருக்கிறது (விஸ்வரூபக் கோலம்). நவக்கிரகங்களும் விதானத்தில் பதிக்கப்பட்டிருக்கிற சிறப்பு மிக்க தலம். தட்டினால் ஏழு சுரங்களும் கேட்கும் கல் தூண்கள் கொண்ட சிறப்பு மிக்க சிற்பக் கலைக்கு சாட்சியாக விளங்கும் தலம். உள்ளே சென்றதும் மனம் அமைதியில் மூழ்குகிறது. பார்க்க வேண்டிய தலம்.

இதோ சுசீந்திரம் கோபுர தரிசனம்.

படம் — வெளித் தளத்தில் ↗

இது புகழ் பெற்ற சுசீந்திரம் தெப்பக் குளம். இதைச் சுற்றித் தான் மிருதங்கச் சக்ரவர்த்தி படம் எடுத்தார்கள். நடிகர் திலகம் நடித்த படம். மன்ற நண்பர்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

படம் — வெளித் தளத்தில் ↗

21 ஜூன் 2006

சுசீந்திரத்தில் இருந்து நாகர்கோவில் 10 கி.மீ. பின் அங்கிருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில் இருக்கிறது தக்கலை. தக்கலை அருகில் மண்டைக்காடு என்னும் பகவதி அம்மன் கோவில் மிகப் பிரசித்தி பெற்றது. கேரள நாட்டின் ஆஸ்தான தேவதை பகவதி அம்மன் எனலாம். கன்னியாகுமரி, மண்டைக்காடு, கொடுங்காலூர், சோட்டாணிக்கரை என்று பல சக்தி தலங்களில் அருள் பாலிப்பவள் பகவதி அம்மன். தக்கலையிலிருந்து பிரியும் சாலையில் 5 கி.மீ. தொலைவில் இருக்கிறது பத்மநாபபுரம். 1500-1700 வாக்கில் கேரளத்தை ஆண்ட ராஜா (பெயர் தெரியவில்லை. :() இங்கு அரண்மனை எழுப்பி இங்கு அரசாட்சி நடத்தி இருக்கிறார். இந்த அரண்மனைக்கு வந்து சேரும் போது மணி 12 ஆகி விட்டது. அப்போதே திரும்பச் செல்லும் அவசரம் தொற்றிக் கொண்டதாலும், கூட வந்த நண்பர்களுக்கு புராதன சின்னங்களில் அத்தனை ஆர்வம் இல்லாத காரணத்தினாலும் சீக்கிரமே சுற்றி விட்டுத் திரும்பி விட்டோம். மற்றபடி இந்த அரண்மனையில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கின்றன. விசாலமான 3 மாடிக் கட்டிடம். 40 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட அரண்மனை. மரவேலைப்பாடு மிக்க தூண்கள், விதானங்கள். சுண்ணாம்பு, சர்க்கரை, கருப்பட்டிச் சாறு போன்றவை கலந்து உருவாக்கப்பட்டு இன்றும் பளபளவென்று இருக்கும் தரைகள். அந்தக் காலத்து பூட்டுக்கள். சுரங்கப்பாதைகள். நீச்சல் குளங்கள். மாபெரும் கஜானா. அந்தக் கால நகைகள். போர்க்கருவிகள். சிற்பங்கள். பாத்திரங்கள். அரசருக்கு பல நாடுகளில் இருந்து தரப்பட்ட பரிசுகள். முக்கியமாக மூலிகைக் கட்டில். இன்னும் பல விட்டுப் போன விஷயங்களுடன் கம்பீரமாக நின்று சாட்சியாகிறது பத்மநாபபுரம் அரண்மனை. இதோ ஒரு மரவேலைப்பாடு மிக்க தூண்.

படம் — வெளித் தளத்தில் ↗

இப்படிச் சொன்னால் பல பேருக்குத் தெரிவதில்லை. வருசம் 16 படத்தின் கதைக் களம் இந்த அரண்மனை தான் என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும். நாம் சுற்றிப் பார்க்கும் போதே பல பேர், "இங்கு தான் கார்த்திக் நிற்பார், குஷ்பு ஆடுவார்" என்றெல்லாம் சொன்னதைக் கேட்கும் போது சிரிப்புத் தான் வந்தது. மேலும் இந்த அரண்மனைக்கு அருகிலேயே தான் திற்பரப்பு அருவியும் (ஆண்பாவம் மற்றும் பல படங்கள் எடுத்துள்ளனராம்), ஆசியாவிலேயே உயரமானதும், நீளமானதும், ஒரு மலையிலிருந்து இன்னொரு மலைக்கு பாலத்தின் மூலம் நீரைக் கடத்தும் தொட்டிப் பாலமும் இருப்பது குறிப்பிடத் தகுந்ததாகும். அனைத்தையும் சுற்றிப் பார்த்ததில் மணி 2.45 ஆகி விட்டது. அவ்வைப்பாட்டி நல்வழியில் கீழ்க்கண்டவாறு சொன்னது போல் பசி வந்ததில் கிறங்கி விட்டோம்.

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்.

நாகர்கோவிலில் மாலை 3 மணிக்கு மதிய உணவருந்தி விட்டு சிவகாசிக்குக் கிளம்பினோம். மாலை 5.30 மணிக்கெல்லாம் சிவகாசி வந்து சேர்ந்தோம். கூட வந்த நண்பர்களுக்கு மிக்க மகிழ்ச்சி என்பது அவர்கள் பேச்சிலிருந்து தெரியவந்தது. கடந்த இரண்டு நாட்களாக எனக்குத் தெரிந்த அரை குறை இந்தியில் மட்டுமே பேசிக் கொண்டிருந்ததை விட்டு மீண்டும் தமிழுக்கு மாறினேன். :) சுபம்.

தொட்டிப்பாலத்தை முப்பரிமாணத்தில் முன்பே இட்டிருக்கிறேன். பத்மநாபபுரத்தின் குளுமையை உணர கீழ்க்கண்ட படத்தைப் பாருங்கள். அதற்கும் கீழே இருக்கும் படம் சாப்பாடு பரிமாறும் போது உபயோகப்படுத்தப்பட்ட ஆளுயர தாழி. இதில் ஊறுகாய் போட்டு வைத்திருப்பார்களாம். :)

படம் — வெளித் தளத்தில் ↗

படம் — வெளித் தளத்தில் ↗

இதோ இது தான் திற்பரப்பு நீர் வீழ்ச்சி. திண்மையான பரப்பில் நீர் தேங்கி வீழ்வதால் இந்தப் பெயர் ஏற்பட்டிருக்கக் கூடும். இது ஒரு இயற்கை அணையாகும்.

படம் — வெளித் தளத்தில் ↗

இதோ அருவி. மிக அருகில். :)

படம் — வெளித் தளத்தில் ↗

இது தொட்டிப் பாலத்தின் மேலிருந்து எடுத்தது. ஆசியாவிலேயே மிக உயரத்தில் கட்டப்பட்ட பாலமாகும் இது. இதில் என்ன விசேசம் என்றால், நமது காலுக்குக் கீழ் தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது ஒரு மலையிலிருந்து இன்னொரு மலைக்கு. இந்தப் பாலமே பார்க்கப் போனால் மிகப் பெரிய தொட்டியாகும். எனவே இதைத் தொட்டிப் பாலம் என்கிறார்கள்.

படம் — வெளித் தளத்தில் ↗

தொட்டிப் பாலத்தில் அடியேன்.

படம் — வெளித் தளத்தில் ↗

தொட்டிப் பாலத்திலிருந்து பார்க்கும்போது கண்முன் விரியும் அற்புத இயற்கைக் காட்சி.

படம் — வெளித் தளத்தில் ↗

தொட்டிப் பாலத்தின் கீழிருந்து எடுக்கப்பட்ட படம் இது. தொட்டிப்பாலத்தின் ஒரு பகுதியை இதில் காணலாம். கூர்ந்து கவனித்தால் மிகப்பெரிய தொட்டியின் மேல் நாம் நடப்பதற்குப் பாலம் கட்டியிருப்பது தெரியவரும். பொறியாளரின் அறிவுத் திறன் பாராட்டுதலுக்குரியது.

படம் — வெளித் தளத்தில் ↗

மேலும் வாசிக்க

யாத்திரை அனுபவங்கள்

யாத்திரை அனுபவங்கள்

காஞ்சி உலாவும், நினைவுகள் உலாவும்.

17-02-2008. ஞாயிற்றுக்கிழமை. சென்னை. எப்போதும் போலன்றி அதிகாலை 5.30 மணிக்கெல்லாம் விழித்து அலைபேசி எழுப்புவதற்குள் அதன் வாயை அடக்கினேன். எழுந்து 6 மணி…

யாத்திரை அனுபவங்கள்

பல்லேலக்கா பல்லேலக்கா சேலத்துக்கும் மதுரைக்கும்!

நேற்று ஞாயிற்றுக் கிழமை சேலத்தில் தமிழ் மென்பொருள் கண்காட்சியைப் பார்க்கும் ஆர்வத்திலும், நம் மன்ற உறுப்பினர் செல்வ முரளியைச் சந்திக்கும் ஆவலிலும், மன…