கணினி~32 நிமிட வாசிப்பு20 ஆண்டுகளுக்கு முன் எழுதியது

கணக்குப் பதிவியல் படிக்க வாரீகளா?

முத்தமிழ் மன்றத்தில் எழுதியது · 19 மே 2006 – 5 டிசம்பர் 2006

மணி அவர்கள், கணக்குப் பதிவியல் (Book Keeping) பற்றி படிக்க ஆசைப்பட்டதால் வந்தது வினை. கணக்கு பதிவியல் பற்றி எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். உலகில் பண்ட மாற்று முறை காலத்திலிருந்து பணம் புழங்கும் காலமான இன்று வரை கணக்குப் பதிவியலும் பல முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறது. ஒரு தொழிலின் பணத்தால் அளக்க முடிகிற அனைத்து நிகழ்வுகளையும் பதிந்து ஒரு காலம் முடிவுற்ற உடன் நமக்கு மிஞ்சுவது என்ன என்று கண்டு கொள்தல் கணக்குப் பதிவியல் முறையாகும். "எழுதாத கணக்கு அழுதாலும் தீராது" என்பது பழமொழி. கணக்கு எதற்காகப் பதிய வேண்டும்?

  1. முதல் போட்டு தொழில் நடத்தும் ஒருவர், தனது முதலுக்கு வருமானம் எவ்வளவு ஈட்டி இருக்கிறோம் என்று கண்டு கொள்ள.
  2. நாம் கொடுக்க வேண்டிய தொகையோ, நமக்கு வர வேண்டிய தொகையோ எவ்வளவு என்று கண்டு கொள்ள.
  3. நமக்கு எந்தெந்த வழிகளில் வருமானம் வருகிறது, அது எந்த வழிகளில் செலவாகிறது என்று கண்டு கொள்ள.
  4. அரசாங்கம் விதிக்கும் வரிகளைச் சரியாகக் கட்டுகிறோமா என்று கண்டு கொள்ள.
  5. நாம் பார்க்கும் தொழிலையே பார்க்கும் இன்னொரு வியாபாரி கணக்கையும் நமது கணக்கையும் சீர் தூக்கி அந்தத் துறைக்கென (Industry) ஒரு நிலைப்பாட்டை (Standard) உருவாக்க.
  6. பெரிய அளவில் பங்குகள் வெளியிட்டு நிறுவனமாகச் செயல்படுபவர்கள் பொதுமக்களின் பணத்தை முறையாகச் செலவிடுகிறார்களா என்று கண்டு கொள்ள.
  7. முந்தைய ஆண்டின் தவறுகளை நீக்கி இருக்கிறோமா என்று அறிந்து கொள்ள.
  8. இனி வரும் ஆண்டுகளில் இத்தவறுகளை நிவர்த்தி செய்ய என்ன செய்ய முடியும் என்று அறிந்து கொள்ள.
  9. நிதி நிலை அறிக்கை (Budget) தயார் செய்ய.
  10. வங்கிகள் கடன் வழங்கத் தேவையான அடிப்படைத் தகவல்களை வழங்க.
  11. என்று ஒரு முடிவில்லா நீளும் காரணங்களுக்காக நாம் கணக்கைப் பதிய வேண்டி இருக்கிறது. இனி முதல் அடியை வலது காலைத் தூக்கி வைத்து கணக்குப் பதிவியலுக்குள் நிழைவோமா?

இரவு-பகல், இன்பம்-துன்பம், பள்ளம்-மேடு, நன்மை-தீமை என்று எல்லாமே இரண்டிரண்டாய் இருப்பது போல் கணக்கிலும் எல்லாமே இரண்டு தான். அந்த இரண்டும் எது தெரியுமா? பற்று மற்றும் வரவு. ஆங்கிலத்தில் Debit & Credit. கணக்குப் பதிவியலை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவையாவன:

  1. ஒற்றைப் பதிவியல் (Singe Entry System)
  2. இரட்டைப் பதிவியல் (Double Entry System)
  3. கலப்புப் பதிவியல் (Hybrid System)
  4. கூர்ந்து கவனித்தால் அனைத்துமே இரட்டைப் பதிவியலில் இருந்து பிறந்தது தான். எனவே நாம் இரட்டைப் பதிவியலைப் பற்றித் தான் பார்க்க இருக்கிறோம். எந்த ஒரு தொழில் நிகழ்வுக்கும் (Business Transaction) பற்று மற்றும் வரவு இருக்கும். அதை முறையாகப் பதிய வேண்டும். இந்தப் பதியும் முறையை, பதியப்படும் கணக்குகளை வைத்து மூன்றாகப் பிரிக்கலாம். அதாவது நாம் பதிய இருக்கும் கணக்குகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவை,

  5. பெயர்க் கணக்குகள் (Personal Accounts)
  6. சொத்துக் கணக்குகள் (Real Accounts)
  7. வருமான/செலவினக் கணக்குகள் (Nominal Accounts)
  8. எனவே எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் அதை இந்த மூன்று வகையான கணக்குகளில், பற்றும், வரவும் வைத்து குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டு இருக்கிறோம்.

20 மே 2006

இனி இந்த மூன்று கணக்குகளையும் சற்று விரிவாகப் பார்ப்போம். அதற்கு முன் ஒரு சிறு சோம்பேறித் தனம். நாங்கள் கணக்கு என்று முழுமையாக எழுதுவதில்லை. க/கு அல்லது a/c என்று தான் எழுதுவது வழக்கம். எனவே இனி க/கு என்றால் அது கணக்கு. சரியா? பெயர் கணக்குகள்: (Personal Accounts): இந்தக் கணக்குகள் நமது தொழிலுக்குத் தேவையான மனிதர்கள், நிறுவனங்கள் பற்றியதாகும். எடுத்துக்காட்டாக, நம்மிடம் ராமசாமி சரக்கு வாங்கினால், "ராமசாமி க/கு" என்று ஆரம்பிக்க வேண்டும். நாம் குப்புசாமியிடம் சரக்கு வாங்கினால் "குப்புசாமி க/கு" என்று ஆரம்பிக்க வேண்டும். சில சமயங்களில் நிறுவனங்களிடம் தொடர்பு வைத்தால் அதுவும் பெயர்க் கணக்கே ஆகும். உ.ம்: ஹிந்துஸ்தான் லிவர் லிமிடெட் க/கு. இந்த வகைக் கணக்குகளைப் பற்று என்று எழுதினால் அவர்களிடம் இருந்து அத் தொகையை வாங்க வேண்டும் எனவும், வரவு என்று எழுதினால் அவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டும் என்றும் அர்த்தம். முதலாளியின் முதல் கணக்கும் ஒரு பெயர்க்கணக்கே! சொத்துக் கணக்குகள்: (Real Accounts): சொத்து ஏதாவது வாங்கினால் (உ.ம்.: வாகனக் க/கு) அந்த சொத்தின் பெயரில் ஒரு கணக்கினை நமது பதிவேட்டில் ஆரம்பிப்போம். இந்தக் கணக்குகளில் பற்று என்று எழுதினால் அந்தச் சொத்தின் மதிப்பு அதிகரிப்பதற்காகச் செலவழித்திருக்கிறோம் என்றும், வரவு என்று எழுதினால் அதை விற்றிருக்கிறோம் என்றும் பொருள். சொத்துக்களில், அசையாச் சொத்து, அசையும் சொத்து, கண்ணுக்குத் தெரியா மாயச் சொத்து, கற்பனைச் சொத்து என்று பலவகை உண்டு. ரொக்கமும், வங்கி இருப்பும் சொத்துக் கணக்குகள் தாம். வருவாய்/செலவினக் கணக்குகள்: (Nominal Accounts) நிறுவனத்துக்கு வரவோ, செலவோ ஏற்பட்டால் அதை இந்த வகைக் கணக்குகளில் எழுதலாம். உதாரணமாக, சம்பள க/கு, விற்பனைக் க/கு ஆகியவை. இந்தக் கணக்குகளில் பற்று என்று எழுதினால் அது செலவு எனவும், வரவு என்று எழுதினால் அது வருவாய் எனவும் கொள்ளப்படும். இந்தக் கணக்குகளின் வித்தியாசமே நிறுவனத்தின் லாபமா, நட்டமா என்பதை முடிவு செய்யும். தொடர்வோமா?

மேற்சொன்ன விதிகள் அனைத்தையும் சுருக்கி கணக்குப் பதிவியலின் முப்பொன் விதிகள் (Golden Rules of Book Keeping) என்று அழைப்பார்கள். அதாவது, Personal Accounts - Debit the Receiver, Credit the Giver Real Accounts - Debit what comes in, Credit what goes out Nominal Accounts - Debit all Expenses, Credit all Incomes பெயர்க் கணக்குகள் - பெறுபவரைப் பற்று வை, கொடுப்பவரை வரவு வை சொத்துக் கணக்குகள் - உள்ளே வந்தால் பற்று வை, வெளியே சென்றால் வரவு வை வருவாய் கணக்குகள் - செலவுகளைப் பற்று வை, வருமானங்களை வரவு வை. இதை உருப் போட்டுக் கொள்ளுங்கள். அடுத்து தொழில் நிகழ்வுகள் ஒவ்வொன்றாக, அதை எவ்வாறு பதிவது என்று பார்ப்போம்.

21 மே 2006

எவ்வாறு ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருக்கிறதோ அதே போல் எந்த ஒரு தொழில் நிகழ்விலும் இரண்டு விஷயங்கள் கண்டிப்பாக நடந்தேறியிருக்கும். உதாரணமாக, ஒரு பொருளை விற்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பக்கம் ரொக்கம் நிறுவனத்துக்குள் வந்திருக்கும், இன்னொரு பக்கம் விற்பனை அதிகரித்திருக்கும். எனவே நமது வேலை எந்த ஒரு தொழில் நிகழ்வுக்கும் சம்பந்தப்பட்ட இரண்டு பக்கங்கள் எவை என்று கண்டறிவதும் அதைப் பதிவதும் ஆகும். இப்போது சில உதாரணங்கள் பார்ப்போம்:

  1. முதலாளி நிறுவனத்திற்குள் பணம் போடுகிறார் - இங்கு ரொக்கமும் (உள்ளே வருவதால்), முதலாளியின் முதல் க/கு இரண்டும் பதிய வேண்டும்.
  2. தொழிலாளர்களுக்குச் சம்பளம் கொடுக்க வேண்டும் - இங்கு சம்பளச் செலவு க/கு ஒரு புறமும், ரொக்கக் க/கு (வெளியே செல்வதால்) மறுபுறமும் பதிய வேண்டும்.
  3. பொருளைக் கொள்முதல் செய்கிறோம் - இங்கு சரக்கு கொள்முதல் க/கும், ரொக்கமும் (வெளியே செல்வதால்) பதியப் பட வேண்டும்.
  4. இவ்வாறு எந்த ஒரு நிகழ்வுக்கும் இரண்டு இடங்களில் பதிவதால் இது இரட்டைப்பதிவு முறையாகும். இனி இக்பால் அண்ணா சொன்னது போல் சில கேள்விகள் உங்களுக்கு. கீழ்க்கண்ட நிகழ்வுகளின் இரண்டு புறங்களையும் பட்டியல் போடுங்கள் பார்ப்போம்.

  5. நிலம் ஒன்று நிறுவனத்துக்காக வாங்கி இருக்கிறோம்.
  6. நிறுவனத்தின் தொலைபேசிக் கட்டணம் செலுத்தி இருக்கிறோம்.
  7. குமரப்பனுக்குக் கொடுக்க வேண்டிய தொகையைக் கொடுத்து இருக்கிறோம்.
  8. நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் வட்டி வரவு வைத்து இருக்கிறார்கள்.
  9. ராமசாமிக்கு ரொக்கத்தில் விற்பனை செய்து இருக்கிறோம்.

23 மே 2006

அப்பாடி! வந்து விட்டாரய்யா அரவிந்தன். நீங்கள் இதுவரை கணக்குப் பதிவியல் படித்ததில்லை என்றால் எனது காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள வேண்டியது தான்! இதில் 4வது கேள்வியில் கேட்டுள்ளதில் ஒரு பக்கம் வட்டி க/கு என்பதில் ஐயமில்லை. மற்றொரு பக்கம் வங்கிக் க/கு தான். (வங்கிக் கணக்கும் ரொக்கம் போலவே ஒரு சொத்து/பொறுப்புக் கணக்குத் தான். பெயர்க்கணக்கு என்று சொல்வோரும் உளர். எப்படியாயினும் ஒன்று தான்.) 5 வது கேள்வியில் மூன்று க/கு கள் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளன (உங்களைக் குழப்புவதற்கு!). ராமசாமி க/கு, விற்பனை க/கு, ரொக்க க/கு. ஆகியவையே அந்த மூன்று க/குகள். ராமசாமி கொடுத்திருந்தாலும், அது ரொக்க விற்பனையாய் இருக்கும் பட்சத்தில் இங்கு ரொக்கமும், விற்பனையும் மட்டுமே கூடும். இதுவே கடன் விற்பனையாய் இருந்தால், ராமசாமி க/கும், விற்பனைக் க/கும் எடுத்துக் கொள்ள வேண்டும். யாருக்காவது சந்தேகம் இருந்தால் கேட்டுக் கொள்ளுங்கள், அடுத்த பாடத்திற்குச் செல்ல இருக்கிறோம்.

24 மே 2006

நிகழ்வுகளைப் பற்றித் தெரிந்து கொண்ட பின்னர் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது புத்தகங்களைப் பற்றி. பதிவியலில் கீழ்க்கண்ட புத்தகங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

  1. பதிவேடு (Journal)
  2. பேரேடு. (Ledger) - பெயரேடு என்பது தான் பேரேடு என்று ஆயிருக்குமா என்பது தெரியவில்லை.
  3. என்ன? அவ்வளவு தானா என்று கேட்கிறீர்களா? சிறிய நிறுவனங்களுக்கு இது போதும். அப்போ மிகப் பெரிய நிறுவனங்களுக்கு?

  4. விற்பனைப் பதிவேடு (Sales Journal)
  5. கொள்முதல் பதிவேடு (Purchase Journal)
  6. ரொக்க/வங்கிப் பதிவேடு (Cash/Bank Book)
  7. மாற்றுப் பதிவேடு (Transfer Journal)
  8. சில்லறை ரொக்கப் பதிவேடு (Petty Cash Book)
  9. பற்றாளர்/வாடிக்கையாளர் பேரேடு (Debtors' Ledger)
  10. வரவாளர்/சரக்கு அனுப்புவோர் பேரேடு (Creditors' Ledger) இவ்விரண்டும் சேர்ந்து Personal Ledger என்றும் சொல்லப்படுவதுண்டு.
  11. 8. பொது பேரேடு (General Ledger) இதிலிருந்து நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, அவற்றிற்கென்று ஒரு புத்தகம் போட்டுக் கொள்கிறோம் என்பது தெரியவரும். ஆனால் அடிப்படையில் நான் மேலே சொன்ன இரண்டே புத்தகங்கள் மட்டும் தான். இந்தப் புத்தகங்களை மட்டும் எழுதிக் கொண்டிருக்க முடியாது, அதை எழுதுவதற்கு முன் சில அடிப்படை ஆவணங்கள் தேவைப்படும். அவை யாவன:

  12. வரிசை எண்ணுடன் கூடிய ரசீது (Serially Numbered Receipt)
  13. பற்றுச் சீட்டு (Voucher)
  14. பட்டி (Sales Invoice/Bill)
  15. கொள்முதல் சீட்டு/ஆவணம் (Purchase Bill/Invoice)
  16. மாற்றுப் பதிவேட்டுச் சீட்டு (Transfer Journcal Voucher)
  17. இவை யனைத்தையும் தயாராக வைத்துக் கொண்டீர்களா? கணக்குப் பதிவை ஆரம்பிக்கலாமா?

சரி அரவிந்தன் தொடங்கி விடுவோம். நிகழ்வுகளைத் தேதிவாரியாகப் பதிய வேண்டிய முதல் புத்தகம் பதிவேடு. பின்னர் இந்தப் பதிவேட்டிலிருந்து பேரேடுக்கு பதிவுகள் பதியப்படும். எனவே முதலில் செய்ய வேண்டியது பதிவேட்டில் பதிவது. இதில் தவறாகப் பதிந்தால் அந்த நிகழ்வு சம்பந்தப்பட்ட இரு க/குகளும் தவறாகப் போய்விடுவதுடன், வேறு க/குகளையும் பாதிக்க நேரிடும். இதில் கவனம் தேவை. இனி பதிவேடு எவ்வாறு இருக்கும் என்று பார்ப்போம்.

படம் கிடைக்கவில்லை

தொடர்வோமா?

25 மே 2006

இனி நமது பதிவைத் தொடங்கலாமா? இப்போ நமது நிறுவனத்துக்கு ஒரு பெயர் வைப்போம். சரியா? "மணி & கோ". பெயர் நன்றாக இருக்கிறதா? நமது முதலாளி திருவாளர் மணி அவர்கள். (அவர் தானே கணக்குப் பதிவைக் கேட்டது!) கணக்கு ஆரம்பிப்பதிலும் சில சம்பிரதாயங்கள் இருக்கின்றன. எப்போதுமே ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்கையில் முதலில் கடவுள் கணக்கை வரவு வைப்பார்கள். பின்னர் உப்புக் கொள்முதல் க/கு ஆரம்பிப்பார்கள், பின்னர் அந்த உப்பை விற்ற உப்பு விற்பனைக் க/கு ஆரம்பிப்பார்கள். பின்னரே முதலாளியின் முதல் க/கு வரவு வைப்பார்கள். அதிலிருந்து தொடங்குவோம். சரியா? இப்போது மணி அவர்கள் ரூ. 1,00,000/- முதலாக இடுகிறார் என்பது ஒரு நிகழ்வு. அதை எவ்வாறு பதிவது என்று பார்ப்போம்.

படம் கிடைக்கவில்லை

இனி அடுத்த நிகழ்வுகளைப் பார்ப்போமா?

எப்போதுமே வரவு க/கு முதலில் எழுதுபவர்களும் உண்டு. (ராசிக்காக!) பற்றோ, வரவோ அந்தப் பத்திக்கு நேராக இருப்பதைக் கவனியுங்கள். தேதி மிகவும் முக்கியம். எங்கள் கணக்கு வாத்தியார் ஆங்கிலத்தில் "You must be careful with dates and figures." என்று இரட்டை அர்த்தம் தொனிக்க பேசிவிட்டு கண்ணடிப்பார்! அது போல் தேதியிலும், எண்களிலும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். பூஜ்ஜியத்திற்கு இங்கு அதிக மதிப்பு உண்டு அது எந்தப் பக்கம் இடப்படுகிறது என்பதை வைத்து. ஒவ்வொரு நாளும் பதிவேட்டைக் கூட்டினால் பற்றும் வரவும் சமமாக இருக்க வேண்டும். அன்றைய தினத்தின் மொத்த நிகழ்வுகள் பற்றித் தெரிய வரும்.

29 மே 2006

இனி "ரொக்க நாள்வழித்திட்டக் குறிப்பு" அல்லது சுருக்கமாக "நாள்வழித் திட்டக் குறிப்பு" புத்தகத்தைப் பற்றிப் பார்ப்போம். (Cash Daybook or Daybook) முன்பெல்லாம் கடன் கொடுப்பது மிக அரியதாகவே இருந்து வந்தது வியாபாரத்தில். கையில காசு, வாயில தோசை. லட்டுக்கேத்த துட்டு போன்றவை பழமொழிகள். எனவே, தினமும் வியாபாரிகள் கணக்கு முடித்து (இதைத் "திட்டம் பார்த்தல்" என்பர்.) அன்றைய தினம் ஆரம்பத்தில் ரொக்கம் எவ்வளவு இருந்தது, இப்போது அனைத்து நிகழ்வுகளும் பதிந்த பின் சரியாக இருக்கிறதா என்று பைசா சுத்தமாக எண்ணி இரும்புப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டி விட்டே வீட்டுக்கு செல்வார்கள். எனக்குத் தெரிய என் தகப்பனார் ரூ.3/- கணக்கில் உதைத்ததற்காக இரவு 12 மணிக்கு வீட்டிற்கு வந்தது ஞாபகம் இருக்கிறது. ஏனென்று கேட்டதற்கு, "இன்று 3 ரூபாயாக இருக்கும் நாளை 3000 ரூபாயாக ஆகிவிடும். எவ்வளவு என்பது முக்கியமில்லை. ஏன் என்பது தான் முக்கியம்." என்றார்! இப்போது திட்டக் குறிப்புக்கு வருவோம். அனைத்து ரொக்க வரவு செலவும் இதில் (இதுவும் பதிவேடு போலவே தான்!) பதிவார்கள். இப்போது ஒரு தினத்தின் நிகழ்வுகளையும், அதற்குத் தொடர்பான திட்டக்குறிப்புப் பதிவுகளையும் பார்ப்போம்.

29-05-2006
ஆரம்ப இருப்பு ரூ.10250/-
சரக்குக் கொள்முதல் ரூ.5000/-
டீ செலவு ரூ.15/-
விற்று வரவு ரூ. 2500/-
வங்கியில் போட்டது ரூ. 1000/-

கடனுக்கு விற்ற செல்வம் என்பவரிடம் இருந்து வசூல் செய்தது ரூ. 1000/- இனி இன்றைய தினத்தின் திட்டக்குறிப்பு பதிவுகளைப் பார்ப்போம்.

படம் — வெளித் தளத்தில் ↗

இந்த தொகை சரியாக கல்லாவுக்குள் இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்ள வேண்டும்! என்ன இது? பற்று மட்டும் இருக்கிறது? அல்லது வரவு மட்டும் இருக்கிறது? என்கிறீர்களா? இது தான் திட்டக் குறிப்பு. கூர்ந்து கவனித்தால் ரொக்கக் க/கும் சேர்ந்தே பதியப்படுவது தெரிய வரும். பேரேடு பற்றிப் படிக்கும் போது இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம். போகலாமா?

30 மே 2006

தினம் தினம் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் பதிவேட்டில் பதிவது தான் முதல் பணி. இப்போது சிறு நினைவூட்டல்.

  1. ஓவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு வரவு க/கும், ஒரு பற்று க/கும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
  2. கணக்குகள் பெயர்க்கணக்கு, சொத்துக் கணக்கு, வரவு/செலவு க/கு என்று பிரிக்கப்படுகின்றன.
  3. இதை மனதில் கொண்டு, இப்போது பேரேடு பற்றிப் பார்ப்போம். பதிவேட்டில் பதிவு செய்த அனைத்தையும் மீண்டும் ஒருமுறை கணக்கு வாரியாகப் பதிதலே பேரேடு எனப்படும். அதாவது பதிவேடு, நாள்வாரியாகப் (Datewise - Choronological Order) பதிவு செய்யப்படுகிறது. மாறாக, பேரேடோ கணக்குவாரியாகப் பதியப் படுகிறது. பேரேடு என்பது இரு பக்கங்களைக் கொண்டதாகவும் இருக்கலாம் (பற்று & வரவு) அல்லது பதிவேடு போலவே இரண்டு பத்திகளைக் (Columns - பற்று & வரவு) கொண்டும் இருக்கலாம். இரு பக்கங்களைக் கொண்டதாக இருந்தால் இடது பக்கத்தை பற்று பக்கம் எனவும், வலது பக்கத்தை வரவு பக்கம் எனவும் கொள்ளலாம். ஆங்கில T வடிவில் இருக்கும். கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.

படம் — வெளித் தளத்தில் ↗

எனவே பேரேட்டில் நாம் பதிவேட்டில் பதியும் ஒவ்வொரு கணக்குக்கும் ஒரு பக்கத்தை ஒதுக்கி, பதிவேட்டிலிருந்து பதிந்த அத்தனை நிகழ்வுகளையும், அந்தந்த கணக்குகளில் பதிய வேண்டும். பதிவேட்டில் பற்று என்று இருந்தால் பற்று பக்கத்திலும், வரவு என்று இருந்தால் வரவு பக்கத்திலும் பதிய வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருப்பவர்கள் கேட்டுக் கொள்ளலாம். கேள்விக் கணைகள் தொடுக்கப் போகிறேன்.

2 ஜூன் 2006

இனி சில கேள்விகள்: தெரிந்தால் சொல்லுங்கள். தெரியாவிட்டால், இதிலிருந்து தான் அடுத்த பாடம்!

  1. ஒரு பர்னிச்சர் விற்கும் நிறுவனம் பர்னிச்சர் வாங்கினால் அது கொள்முதலா? சொத்தா? செலவுக்கும், சொத்துக்கும் என்ன வேறுபாடு?
  2. அடுத்த ஆண்டுக்கான செலவை இப்போதே செய்தால் (உதாரணம் - காப்பீடு) அதை எவ்வாறு பதிவது?
  3. ஒரு கட்டிடத்தைக் கட்டுவது சொத்தா? அல்லது செலவா?
  4. அதே கட்டிடத்திற்கு 5 ஆண்டுகள் கழித்து வர்ணம் பூசினால் அது செலவா? சொத்தா?
  5. ரொக்க விற்பனையை எந்தப் புத்தகத்தில் பதிவது? ரொக்க நாள்வழித் திட்டக் குறிப்பிலா? அல்லது விற்பனைப் பதிவேட்டிலா?
  6. இதுவரைக்கும் ஏதோ கொஞ்சம் புரிந்தது. கேள்வியைப் பார்த்ததும் பயங்கரக் குழப்பமா இருக்கே என்கிறீர்களா?

3 ஜூன் 2006

பரவாயில்லையே பதில்கள் சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள். பதில்களைப் பார்ப்போம்.

  1. ஒரு பர்னிச்சர் விற்கும் நிறுவனம் பர்னிச்சர் வாங்கினால் அது கொள்முதலா? சொத்தா? செலவுக்கும், சொத்துக்கும் என்ன வேறுபாடு?
  2. ஆம். பர்னிச்சரை விற்க வாங்கினால் அது கொள்முதலாகும். அதே பர்னிச்சரை அலுவலகத்துக்கு உபயோகிப்பதற்காக வாங்கினால் அது சொத்தாகி விடும்.

  3. அடுத்த ஆண்டுக்கான செலவை இப்போதே செய்தால் (உதாரணம் - காப்பீடு) அதை எவ்வாறு பதிவது?
  4. 4 வது கேள்விக்கான பதில் தான் இதற்கும்!

  5. ஒரு கட்டிடத்தைக் கட்டுவது சொத்தா? அல்லது செலவா?
  6. கட்டிடத்தைக் கட்டுவது செலவு தான்! L & T போன்ற கட்டுமான நிறுவனங்களுக்கு. இதிலிருந்து உபயோகத்தை வைத்து தான் அதை சொத்தா செலவா என்பதை முடிவு செய்ய முடியும் என்று அறிந்து கொள்ளலாம்.

  7. அதே கட்டிடத்திற்கு 5 ஆண்டுகள் கழித்து வர்ணம் பூசினால் அது செலவா? சொத்தா?
  8. சொந்த அலுவலக/தொழிற்சாலைக் கட்டிடங்களுக்கு வர்ணம் பூசினால் அது சாதாரணமாக செலவாகவே எடுத்துக் கொள்ளப்படும். அதே சமயம் அந்தத் தொகை மிக அதிகமாக இருந்து, 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை வர்ணம் பூசினால், அத்தொகையை 5 அல்லது 10 ஆண்டுகளுக்குச் செலவாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதைப் பற்றித் தான் இனி படிக்கப் போகிறோம்.

  9. ரொக்க விற்பனையை எந்தப் புத்தகத்தில் பதிவது? ரொக்க நாள்வழித் திட்டக் குறிப்பிலா? அல்லது விற்பனைப் பதிவேட்டிலா?
  10. நிச்சயம் ரொக்க நாள்வழித் திட்டக் குறிப்பில் தான். ஒரு பதிவை பற்று & வரவு என்னும் இரண்டாகத் தான் பதியவேண்டுமேயன்றி இரண்டு புத்தகத்தில் அல்ல. ஏதேனும் ஒரு புத்தகத்தில் தான் பதிய வேண்டும். இந்த இடத்தில் ரொக்கம் தான் முதலிடம் வகிக்கிறது (அன்றைய நாள் முடிவில் ரொக்க இருப்பைப் பார்க்க வேண்டும்.) விளக்கம் போதுமா?

7 ஜூன் 2006

சரி. இப்போது வரை பதிவேடையும், பேரேடையும் பார்த்து இருக்கின்றோம். இப்போது கணினி பதிவியல் முறை வந்த பின் (உதாரணம் Tally) ஒரு இடத்தில் நமது நடவடிக்கையைப் பதிவு செய்தால் போதுமானதாகும். அதுவே பதிவேட்டிலும் பதிந்து, பேரேட்டிலும் பதிந்து பின்னர் வேண்டிய அனைத்து விவரங்களையும் நமக்குத் தந்து விடும். நீங்கள் கையால் எழுதினாலும் சரி, கணினியால் எழுதினாலும் சரி, அடிப்படை ஒன்று தான். பற்று/வரவு தான். இப்போது பதிவேட்டிலிருந்து பேரேட்டில் அனைத்து பதிவுகளையும் பதிந்த பின்னர், ஒவ்வொரு குறிப்பிட்ட கால அளவுக்கும் கணக்கு முடித்தல் நிகழ்ச்சி நடைபெறும். உதாரணமாக ஒரு ஆண்டுக்கு ஒரு முறை அல்லது ஒரு மாதத்துக்கு ஒரு முறை என்று. இப்போதெல்லாம் தினம் தினம் பார்க்க வேண்டியிருக்கிறது. :) அவ்வாறு கணக்கு முடிக்கும் போது பேரேட்டில் இரண்டு பக்கங்களையும் கூட்டுவார்கள். பற்று பக்கம் அதிகமாக இருந்தால், அதைப் பற்று இருப்பு (Debit Balance) என்றும், வரவு பக்கம் அதிகமாக இருந்தால் வரவு இருப்பு (Credit Balance) என்றும் அழைப்பார்கள். எனவே, எந்த ஒரு குறிப்பிட்ட தேதியிலும் அனைத்து பேரேட்டு கணக்குகளையும் இதே போல் முடித்து பற்று மற்றும் வரவு இருப்பு கண்டுபிடித்து பட்டியலிட்டால், பற்றும் வரவும் சரி சமமாக இருக்க வேண்டும். இந்தப் பட்டியலின் பெயர் ஐந்தொகை (Trial Balance) ஆகும். இந்த ஐந்தொகையைச் சரி (Tally) செய்வதே ஒரு பெரிய வேலை தான். இனிச் சில எளிதான கேள்விகள். கீழ்க்கண்ட கணக்குகள் எப்போதுமே பற்று இருப்போ, அல்லது வரவு இருப்போ தான் கொண்டிருக்கும். இதில் எவை எப்போதும் பற்று இருப்புடன் இருக்கும் எவை எப்போதும் வரவு இருப்புடன் இருக்கும் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

  1. விற்பனைக் கணக்கு
  2. கொள்முதல் கணக்கு
  3. நில முதலீடு கணக்கு
  4. வங்கிக் கடன் கணக்கு
  5. தொலைபேசிச் செலவு கணக்கு

9 ஜூன் 2006

இப்போது ஒரு 20 நடவடிக்கைகளைப் பதிவேட்டில் பதிந்து, பேரேட்டிற்கும் பதிந்து எவ்வாறு ஐந்தொகை எடுப்பது என்று பார்ப்போம். இது அனைத்தும் 01-04-2006 முதல் 30-04-2006 முடிய நடந்த நிகழ்வுகளாக வைத்துக் கொள்வோம்.

  1. 01-04-2006 மணி ரூ. 100000/-ஐ முதலீடு செய்கிறார்.
  2. 02-04-2006 ரூ.25000/-க்கு பஞ்சு கொள்முதல் செய்கிறார்.
  3. 03-04-2006 ரூ.1000/- கிட்டங்கி வாடகை கொடுக்கிறார்.
  4. 03-04-2006 ரூ.10000/-க்கு ரொக்க வியாபாரம் நடக்கிறது.
  5. 03-04-2006 ரூ.15000/-க்கு பஞ்சை ராமசாமிக்குக் கடனுக்கு விற்கிறார்.
  6. 05-04-2006 ரூ.30000/-க்கு பஞ்சு கொள்முதல் செய்கிறார்.
  7. 06-04-2006 ரூ.75000/-க்கு குமரப்பனிடம் இருந்து பஞ்சு கொள்முதல் கடனுக்கு வாங்குகிறார்.
  8. 08-04-2006 ரூ.40000/-க்கு பஞ்சு ரொக்க விற்பனை நடக்கிறது.
  9. 10-04-2006 ரூ.14500/- ராமசாமியிடம் இருந்து கணக்கு முடித்து வசூலாகிறது.
  10. 10.12-04-2006 ரூ. 1000/- மதிப்புள்ள பஞ்சு சரியில்லை என்று திரும்பப் பெறப்பட்டு ரொக்கம் கொடுக்கப்பட்டது. 11.13-04-2006 அந்த திரும்பி வந்த பஞ்சு குமரப்பனிடம் இருந்து வாங்கியது. அதை ரூ.800/-க்கு திருப்பி அளிக்கப்பட்டது. 12.14-04-2006 ரூ.50/- டீச் செலவு

  11. 15-04-2006 ரூ. 50000/- குமரப்பனுக்கு பணம் அனுப்பப் பட்டது. அதற்கு கேட்புவரைவோலை தரகு ரூ.60/- ஆயிற்று.
  12. 17-04-2006 ரூ.3000/- பஞ்சு கிட்டங்கிக்கு காப்பீடு செய்யப்பட்டது.
  13. 18-04-2006 ரூ.5000/-க்கு பஞ்சு ரொக்க விற்பனை
  14. 24-04-2006 ரூ.2000/- மாத சம்பளமாக கணக்கருக்கு வழங்கப்பட்டது.
  15. 26-04-2006 ரூ.5000/- வீட்டுச் செலவுக்காக மணி எடுத்துக் கொண்டார்.
  16. 26-04-2006 ரூ.25000/-க்கு பஞ்சு கொள்முதல் குமரப்பனிடம் இருந்து.
  17. 27-04-2006 ரூ.18000/-க்கு ராமசாமிக்கு பஞ்சு விற்பனை.
  18. 30-04-2006 ரூ.5000/- போட்டு இந்தியன் வங்கியில் ஒரு வங்கிக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டது.

இதோ பதிவேடு.

படம் கிடைக்கவில்லை

இது தான் பேரேடு

படம் கிடைக்கவில்லை

ஐந்தொகை இது தான்

படம் கிடைக்கவில்லை

12 ஜூன் 2006

Personal Accounts - Debit the Receiver, Credit the Giver
Real Accounts - Debit what comes in, Credit what goes out
Nominal Accounts - Debit all Expenses, Credit all Incomes
பெயர்க் கணக்குகள் - பெறுபவரைப் பற்று வை, கொடுப்பவரை வரவு வை

சொத்துக் கணக்குகள் - உள்ளே வந்தால் பற்று வை, வெளியே சென்றால் வரவு வை வருவாய் கணக்குகள் - செலவுகளைப் பற்று வை, வருமானங்களை வரவு வை. நமது முப்பொன்விதிகள் இதைத் தான் சொல்கின்றன அரவிந்தன் அவர்களே. ரொக்கம் என்பது ஒரு சொத்து. எனவே அதை உள்ளே வந்தால் பற்றும், வெளியே சென்றால் வரவும் வைக்க வேண்டும். கொள்முதல் என்பது ஒரு செலவு. எனவே கொள்முதல் செய்யும் போது பற்றும், அதை விற்கும் போது வரவும் வைக்க வேண்டும்.

இனி சில கேள்விகள் பார்ப்போம்.

  1. வீட்டுச் செலவுக்காக எடுத்துச் சென்றதை செலவு கணக்கில் பற்று வைக்காமல் முதல் கணக்கில் ஏன் பற்று வைக்க வேண்டும்?
  2. பதிவேட்டில் மொத்த நடவடிக்கைகளின் மதிப்பு ரூ. 4,25,910/-. ஆனால் அது எப்படி ஐந்தொகையின் மொத்தம் ரூ.2,08,000/- ஆனது?
  3. மேற்கண்ட ஐந்தொகையில் உள்ள கணக்குகளை பெயர்கணக்குகள் எவை, சொத்துக் கணக்குகள் எவை, செலவுக் கணக்குகள் எவை என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.
  4. மேற்கண்ட ஐந்தொகையில் உள்ள கணக்குகளில் எவை எப்போதுமே பற்றாகவே இருக்கும், எவை எப்போதுமே வரவாகவே இருக்கும், எவை இரண்டில் எது வேண்டுமானாலும் இருக்க வாய்ப்புள்ளது என்று பிரியுங்களேன்.
  5. இந்த ஒரு மாதத்தில் மணி & கோ லாபம் சம்பாதித்துள்ளதா? நஷ்டம் சம்பாதித்துள்ளதா? மேற்கண்ட ஐந்தொகையை மட்டுமே வைத்து லாபமோ/நஷ்டமோ எவ்வளவு என்று நம்மால் கண்டுபிடிக்க இயலுமா? அப்படி இயலும் என்றால் எவ்வளவு? இயலாது என்றால் வேறு என்ன விபரம் வேண்டும்?

16 ஜூன் 2006

பதில்களைப் பார்ப்போமா?

  1. வீட்டுச் செலவுக்காக எடுத்துச் சென்றதை செலவு கணக்கில் பற்று வைக்காமல் முதல் கணக்கில் ஏன் பற்று வைக்க வேண்டும்?
  2. நாம் கணக்குப் பதிவு செய்வதே குறிப்பிட்ட வியாபாரத்தில் லாபம் வருகிறதா? நஷ்டம் வருகிறதா என்று கண்டறிவதற்காகத் தான். எனவே, முதலாளி வீட்டுச் செலவுக்காக எடுத்துச் செல்வது லாபத்தையோ, நட்டத்தையோ பாதிக்குமா என்றால் இல்லை என்றே பதில் கிடைக்கும். இந்த விஷயத்தில் முதலாளியும் ஒரு கடன்காரர் தான் நிறுவனத்தைப் பொருத்தவரை. அவர் எந்த நோக்கத்துக்கு எடுத்துச் சென்ற போதிலும், அது அவருக்குக் கடனைத் திருப்பிக் கொடுத்தது போலவே தான் கருதப் படும். எனவே அவர் செலவுக்காக எடுத்துச் சென்றாலும் அதை அவர் முதல் கணக்கிலேயே பற்று வைக்க வேண்டும். அதே சமயம், அவர் நிறுவனத்துக்காக ஏதேனும் செலவு செய்திருந்தால் அது செலவு கணக்கில் பற்று வைக்கப்படும்.

  1. பதிவேட்டில் மொத்த நடவடிக்கைகளின் மதிப்பு ரூ. 4,25,910/-. ஆனால் அது எப்படி ஐந்தொகையின் மொத்தம் ரூ.2,08,000/- ஆனது?
  2. நமது முறை இரட்டைப் பதிவியல் முறை தான் அரவிந்தன் அவர்களே. முதலிலிருந்து கடைசி வரை. பதிவேட்டில் அனைத்து நடவடிக்கைகளின் மொத்தத்தைக் காண முடியும். ஐந்தொகையில் இந்த பதிவுகளின் நீக்கி இருப்பை (Net)க் காண்கிறோம். சில கணக்குகளில் பற்றும் வரவும் பதிவு செய்யப் பட்டிருக்கும், சில கணக்குகள் பற்று மட்டுமே கொண்டிருக்கும். சில வரவு மட்டுமே கொண்டிருக்கும். இந்தப் பற்றும் வரவும் பதிவு செய்யப்பட்ட கணக்குகளில் நீக்கி இருப்பைக் காணும் போது பற்று அதிகமாக இருந்தால் வரவு மொத்தத்தை பற்று மொத்தத்திலிருந்து கழித்து விடுவதால் ஐந்தொகையின் மொத்தம் பதிவேட்டின் மொத்தத்தை விட குறைவாகவே இருக்கும்.

  1. இந்த ஒரு மாதத்தில் மணி & கோ லாபம் சம்பாதித்துள்ளதா? நஷ்டம் சம்பாதித்துள்ளதா? மேற்கண்ட ஐந்தொகையை மட்டுமே வைத்து லாபமோ/நஷ்டமோ எவ்வளவு என்று நம்மால் கண்டுபிடிக்க இயலுமா? அப்படி இயலும் என்றால் எவ்வளவு? இயலாது என்றால் வேறு என்ன விபரம் வேண்டும்?
  2. எங்கள் பட்டயக் கணக்காளர் படிப்பில் அனைத்துக் கேள்விகளும் இது போல் எடக்கு மடக்காகவே இருக்கும். கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களின் படி மணி & கோ நல்ல லாபம் சம்பாதித்துள்ளது. லாபம் எவ்வளவு என்றும் நம்மால் கண்டு பிடிக்க இயலும். அது எப்படி என்பது தான் அடுத்த நிலை. அதற்குச் செல்வோமா?

22 ஜூன் 2006

நாம் மேலே பார்த்த ஐந்தொகை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் நடைபெற்ற நடவடிக்கைகளின் தொகுப்பு என்று சொல்லலாம். இந்த ஐந்தொகையிலிருந்து நாம் தயாரிக்கும் அறிக்கைகள் இந்தக் குறிப்பிட்ட காலத்திற்குண்டான கணக்கை முடித்து அடுத்த காலத்துக்கு எடுத்துச் செல்வதாக இருக்கும். உதாரணமாக, இந்த ஐந்தொகை 01-04-2005 முதல் 31-03-2006 முடிய என்று வைத்துக் கொண்டால், இந்தக் கணக்கை முடித்து 01-04-2007 முதல் 31-03-2008 முடிய உள்ள கணக்குகளுக்கு ஆரம்ப இருப்பாக இறக்கம் செய்து அடுத்த ஆண்டிற்கான நிகழ்ச்சிகள் புதுக் கணக்குப் புத்தகத்தில் பதிவு செய்யப்பெறும்.

இந்த ஐந்தொகையிலிருந்து பெறப்படும் கணக்குகள்/அறிக்கைகளாவன:
உற்பத்திக் கணக்கு (Manufacturing Account)
வியாபாரக் கணக்கு (Trading Account)
லாபநட்டக் கணக்கு (Profit & Loss Account)
இருப்பு நிலைக் குறிப்பு (Balancesheet)

இதில் முதல் மூன்றையும் இணைத்து லாபநட்டக் கணக்கு என்று மட்டும் அழைக்கலாம். நிறுவனம் மிகப் பெரியதாகும் போது முதல் இரண்டு கணக்குகளாகப் பிரிப்பார்கள்.

25 ஜூன் 2006

லாபம் என்பது என்ன? இதென்ன கேள்வி? லாபம் என்றால் லாபம். நஷ்டம் இல்லாதது லாபம். வரவை விட செலவு குறைவாக இருந்தால் லாபம். வருடக் கடைசியில் கையில் காசு மிஞ்சினால் லாபம். என்று சொல்கிறீர்களா? லாபம் என்பது மேலே சொன்ன அனைத்தும் தான் என்றாலும், அது ஒரு குறிப்பிட்ட காலத்தைப் பொருத்ததாக இருக்கும். அதாவது, நீங்கள் லாபம் என்று சொன்னாலே அது ஒரு நாளையோ அல்லது மாதத்தையோ அல்லது வருடத்தையோ அல்லது குறைந்த பட்சம் ஒரு நிகழ்ச்சியையோ பொருத்ததாகத் தான் இருக்கும். ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியினால் உங்களின் வரவு செலவை விட அதிகரித்தால் அது லாபம். அல்லவா? எனவே வரவுக்கும் செலவுக்கும் உள்ள வித்தியாசமே அந்தக் குறிப்பிட்ட காலத்தின் லாபம் அல்லது நஷ்டம் எனப்படும். எனவே அந்தக் குறிப்பிட்ட காலத்திற்கான செலவு அனைத்துமே செலவு எனவும், அந்தக் குறிப்பிட்ட காலத்திற்கான வரவு அனைத்துமே வரவு எனவும் அதன் வித்தியாசமே அந்தக் குறிப்பிட்ட காலத்திற்கான லாபம் அல்லது நஷ்டம் எனவும் கணக்கிடப் படும். இந்த வாக்கியத்தில் ஒரு வார்த்தையே மிக முக்கியமானதாகும். கணக்கியலுக்கே அடிப்படை என்று கூடச் சொல்லலாம். அது எந்த வார்த்தை? சொல்லுங்களேன் பார்ப்போம்.

27 ஜூன் 2006

குறிப்பிட்ட காலத்தில் என்பதற்கும், குறிப்பிட்ட காலத்திற்கான என்பதற்கும் என்ன வித்தியாசம்? நாம் கணக்குப் பதிவு செய்யும் காலத்தில் செலவளித்த செலவோ, அல்லது வந்த வரவோ அல்லாமல், அந்த குறிப்பிட்ட காலத்திற்கான செலவு அல்லது வரவு என்று கணக்கிட்டுக் கொள்வதே சிறந்த முறையாகும். இதை ஆங்கிலத்தில் Accrual Basis என்பார்கள். உதாரணமாக நீங்கள் உங்கள் பணியாளர்களின் பணிக் கொடையை (Service and Gratuity) கொடுக்காமல் இருக்கலாம். ஆனால் அது உங்களுக்கு செலவு தானே. எனவே அதையும் ஒவ்வொரு ஆண்டும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும். பணம் வெளியே சென்றால் தான் செலவு என்றில்லை. நீங்கள் கொடுக்க வேண்டியதாக இருந்தாலே அது செலவு தான். அதே போல், பணம் வந்தால் தான் வரவு என்றில்லை. உங்களுக்கு வர வேண்டியதாக இருந்தாலே அது வரவு தான். இதைத் தான் Income Recognition என்றும் சொல்வார்கள்.

9 செப்டம்பர் 2006

அடுத்து நாம் காணவிருப்பது லாப நட்டக் கணக்காகும். ஒரு குறிப்பிட்ட கால அளவில் ஒரு நிறுவனம் ஈட்டியிருக்கும் லாபம் அல்லது நட்டத்தைக் கணக்கிட உதவும் கணக்கு இது. நாம் முதன்முதலில் பார்த்த மூன்று வகைக் கணக்குகளில், இறுதி வகைக் கணக்கான வரவு செலவு கணக்குகள் அனைத்தையும் இந்தக் கணக்குக்கு மாற்றி, சில வெளி விஷயங்களையும் கணக்கிட்டு இதில் இணைத்து விட்டு இந்தக் கணக்கையும் முடித்தால் நமக்குக் கிடைப்பது லாபம் (செலவை விட வரவு அதிகம் இருந்தால்) அல்லது நட்டம் (வரவை விட செலவு அதிகம் இருந்தால்). நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். வரவு கணக்குகள் (உதாரணம் விற்பனை க/கு) எப்போதும் வரவு பக்கத்தையே கொண்டிருக்கும். செலவு கணக்குகள் (உதாரணம் கொள்முதல் க/கு) எப்போதும் பற்று பக்கத்தையே கொண்டிருக்கும். லாப நட்டக் கணக்கும் ஒரு வரவு செலவு கணக்கே! எனவே லாபம் என்றால் அது வரவு பக்கத்தையும், நட்டம் என்றால் அது செலவு பக்கத்தையும் கொண்டு அந்தப் பக்கத்தில் அதிக தொகையினைக் கொண்டிருக்கும். தினம் தினம் பதிந்த பதிவுகளைப் பேரேட்டில் பதிந்து, அதிலிருந்து ஐந்தொகை எடுத்தோம் அல்லவா. அந்த ஐந்தொகையிலிருந்து வரவு செலவுக் கணக்குகளை நீக்கி அதை லாப நட்டக் கணக்குக்குக் கொண்டு வந்த பின்னர், மீதி இருக்கும் கணக்குகளான சொத்துக் கணக்கு, பெயர்க்கணக்குகளைக் கொண்டு தயாரிக்கப்படுவதே இருப்பு நிலைக் குறிப்பு (Balance Sheet) எனப்படும். எனவே ஐந்தொகையிலிருந்து இரண்டு அறிக்கைகள் தயாரிக்கப்படுகின்றன. லாபநட்டக் கணக்கும், இருப்பு நிலைக் குறிப்பும். சில வெளி விஷயங்கள் என்று சொன்னேனல்லவா அவை என்ன என்று அடுத்துப் பார்ப்போம்.

25 செப்டம்பர் 2006

இந்த லாப நட்டக் கணக்கும் இருப்பு நிலைக் குறிப்பும் இருக்கிறதே, மிக முக்கியமான விஷயங்களாகும். இதற்காகத் தானே நாம் கணக்கே பதிவது. இருப்பு நிலைக் குறிப்பில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஆங்கில T வடிவ, இரண்டு பக்க அமைப்பு. மற்றது மேலிருந்து கீழாகவே ஒரே பக்கத்தில் இடும் Vertical அமைப்பு. T வடிவ இருப்பு நிலைக் குறிப்பில் இந்தியாவைப் பொருத்தவரை இடது பக்கம் பொறுப்புக்களும், வலது பக்கம் சொத்துக்களும் இருக்கும். அமெரிக்காவில் மாறி இருக்கும். ஐந்தொகையில் லாப நட்டக் கணக்குக்கு எடுத்த வரவு செலவுக் கணக்குகள் போக, மீதி இருக்கும் பெயர்க்கணக்குகளும், சொத்துக் கணக்குகளும் இருப்பு நிலைக் குறிப்பில் இடப்படும். இதில் வரவு மிகுதியாக இருக்கும் கணக்குகள் பொறுப்புக்களாகவும், பற்று மிகுதியாக இருக்கும் கணக்குகள் சொத்துக்களாகவும் கணக்கிலெடுக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை அல்லவா? இருப்பு நிலைக் குறிப்பில் இருக்கும் அனைத்து கணக்குகளையும், அதை மீண்டும் பணமாக கொடுக்கவோ அல்லது பெறவோ ஆகும் காலத்தைக் கணக்கிட்டு அந்த வரிசைக் கிரமமாக அடுக்க வேண்டும் (In the order of Liquidity). எதை உடனே பணமாக்க முடியுமோ அதைக் கீழேயும், எதை உடனே பணமாக்க முடியாதோ அதை மேலேயும் இருக்குமாறு இட வேண்டும். அதே போல் தான் பொறுப்புக்களும். இனி லாப நட்டக் கணக்கு & இருப்பு நிலைக் குறிப்பின் எடுத்துக் காட்டுகளைக் காண்போம்.

3 டிசம்பர் 2006

அடுத்ததாக நாம் முன்பே தயாரித்திருந்த ஐந்தொகையிலிருந்து எவ்வாறு லாபநட்டக் கணக்கையும், இருப்புநிலைக் குறிப்பையும் தயாரிப்பது என்று காண்போம்.

படம் கிடைக்கவில்லை

இந்த ஐந்தொகைக்கு வெளியிலிருந்தும் (அதாவது நாம் பதிந்த கணக்குக்கு வெளியிலிருந்தும்) சில விஷயங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே கூறியிருந்தேன். அது என்ன வெளி விஷயங்கள்? அவற்றை ஏன் லாபநட்டக் கணக்கில் இணைக்க வேண்டும்? என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. ஒரு உதாரணத்துடன் விளக்கினால் உங்களுக்கே புரியும். உதாரணம்: உங்கள் கொள்முதல் கணக்கு குறிப்பிட்ட காலத்தில் வாங்கிய கொள்முதல்களைக் காட்டும். ஆனால் நமக்குத் தேவையோ குறிப்பிட்ட காலத்திற்கான கொள்முதல். அல்லவா? அதை எவ்வாறு கண்டறிவது? அதற்குத் தான் வெளிவிஷயமான சரக்கு இருப்பு நிலவரம் (Closing Stock) உதவி புரியும். மொத்தக் கொள்முதலில் இருந்து கையில் இருக்கும் சரக்கு இருப்பைக் கழித்து விட்டால் கிடைப்பது குறிப்பிட்ட காலத்திற்கான கொள்முதலாக இருக்கும் அல்லவா? நமது மேலே கண்ட ஐந்தொகையில் கொள்முதல் ரூ. 1,55,000/- ஆனால் விற்பனையோ ரூ. 88,000/-. இதற்கு அர்த்தம் ரூ. 1,55,000/-க்கு வாங்கி ரூ.88,000/- க்கு விற்றதாக நிச்சயம் இருக்காது அல்லவா? யாரேனும் நட்டத்துக்கு விற்பார்களா? இதற்கு அர்த்தம் ரூ.88,000/-க்கு விற்றது போக ரூ.1,55,000/-க்கு வாங்கிய கொள்முதலில் எவ்வளவு சரக்கு கைவசம் இருப்பு இருக்கிறது என்று அறிய வேண்டும்! அதைக் கொள்முதலில் இருந்து கழித்து விட்டால் சரியான லாபம் தெரிய வரும்! இப்போ உங்களுக்கு ஒரு சிறு வினா. மணி & கோவிடம் இருக்கும் இருப்பின் மதிப்பு எவ்வளவு? என்பதே அது! கண்டறிந்து சொல்லுங்க பார்ப்போம்.

4 டிசம்பர் 2006

தோழி சரியான வழியில் செல்கிறார்! நீங்கள் சொல்வது 100% சரி! ஆம் சகோதரி. அதைத் தான் ஐந்தொகையிலேயே ஒளித்து வைத்திருக்கிறேன். கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் அந்த வியாபாரத்தின் லாப வீதத்தைக் கண்டு கொள்ளலாம். அதற்கு வசதியாக இந்த ஐந்தொகையின் மொத்த நடவடிக்கையையும் உங்களுக்காக மறுமுறை தந்திருக்கிறேன். அதிலிருந்தாவது கண்டறிகிறீர்களா என்று பார்ப்போம்! இது அனைத்தும் 01-04-2006 முதல் 30-04-2006 முடிய நடந்த நிகழ்வுகளாக வைத்துக் கொள்வோம்.

  1. 01-04-2006 மணி ரூ. 100000/-ஐ முதலீடு செய்கிறார்.
  2. 02-04-2006 ரூ.25000/-க்கு பஞ்சு கொள்முதல் செய்கிறார்.
  3. 03-04-2006 ரூ.1000/- கிட்டங்கி வாடகை கொடுக்கிறார்.
  4. 03-04-2006 ரூ.10000/-க்கு ரொக்க வியாபாரம் நடக்கிறது.
  5. 03-04-2006 ரூ.15000/-க்கு பஞ்சை ராமசாமிக்குக் கடனுக்கு விற்கிறார்.
  6. 05-04-2006 ரூ.30000/-க்கு பஞ்சு கொள்முதல் செய்கிறார்.
  7. 06-04-2006 ரூ.75000/-க்கு குமரப்பனிடம் இருந்து பஞ்சு கொள்முதல் கடனுக்கு வாங்குகிறார்.
  8. 08-04-2006 ரூ.40000/-க்கு பஞ்சு ரொக்க விற்பனை நடக்கிறது.
  9. 10-04-2006 ரூ.14500/- ராமசாமியிடம் இருந்து கணக்கு முடித்து வசூலாகிறது.
  10. 10.12-04-2006 ரூ. 1000/- மதிப்புள்ள பஞ்சு சரியில்லை என்று திரும்பப் பெறப்பட்டு ரொக்கம் கொடுக்கப்பட்டது. 11.13-04-2006 அந்த திரும்பி வந்த பஞ்சு குமரப்பனிடம் இருந்து வாங்கியது. அதை ரூ.800/-க்கு திருப்பி அளிக்கப்பட்டது. 12.14-04-2006 ரூ.50/- டீச் செலவு

  11. 15-04-2006 ரூ. 50000/- குமரப்பனுக்கு பணம் அனுப்பப் பட்டது. அதற்கு கேட்புவரைவோலை தரகு ரூ.60/- ஆயிற்று.
  12. 17-04-2006 ரூ.3000/- பஞ்சு கிட்டங்கிக்கு காப்பீடு செய்யப்பட்டது.
  13. 18-04-2006 ரூ.5000/-க்கு பஞ்சு ரொக்க விற்பனை
  14. 24-04-2006 ரூ.2000/- மாத சம்பளமாக கணக்கருக்கு வழங்கப்பட்டது.
  15. 26-04-2006 ரூ.5000/- வீட்டுச் செலவுக்காக மணி எடுத்துக் கொண்டார்.
  16. 26-04-2006 ரூ.25000/-க்கு பஞ்சு கொள்முதல் குமரப்பனிடம் இருந்து.
  17. 27-04-2006 ரூ.18000/-க்கு ராமசாமிக்கு பஞ்சு விற்பனை.
  18. 30-04-2006 ரூ.5000/- போட்டு இந்தியன் வங்கியில் ஒரு வங்கிக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டது.

5 டிசம்பர் 2006

தோழி! மிகச் சரியாகக் கண்டறிந்து விட்டீர்கள். வீட்டில் கணக்குப் பார்ப்பது நீங்கள் தானே?! இதோ அட்டவணைப்படுத்தி இருக்கிறேன்!

படம் கிடைக்கவில்லை

அனைவருக்கும் புரிகிறதா? தொடரலாமா?

இதோ லாபநட்டக் கணக்கும், இருப்பு நிலைக்குறிப்பும் வழங்கியிருக்கிறேன். நன்றாக ஊன்றிப் படியுங்கள். சந்தேகத்தைக் கேளுங்கள். விளக்கத்தை அடுத்து இடுகிறேன்.

படம் கிடைக்கவில்லை

அது மிகவும் எளிதான விஷயம். காப்புறுதி ஒரு ஆண்டுக்கு 3000 ரூபாய் என்றால் ஒரு மாதத்திற்கு? ரூபாய். 250 மட்டும் தானே? எனவே லாப நட்டக் கணக்கைத் திருத்த வேண்டும்! இதோ திருத்தப்பட்ட லாப நட்டக் கணக்கும் இருப்பு நிலைக் குறிப்பும்.

படம் கிடைக்கவில்லை

மேலும் வாசிக்க

கணினி

கணினி

வன்தட்டின் எமன் - SSD

கணினியை உபயோகிக்கும் நம்மெல்லோர்க்கும் வன் தட்டின் முக்கியத்துவம் பற்றித் தெரியும். இப்போது வன் தட்டைக் காணாமல் செய்வதற்கு ஒரு எமன் வந்திருக்கின்றான்…

கணினி

அலுவலகம் திறப்போம் வாரீகளா?

என்ன தான் IBM நிறுவனம் பிசினஸ் மெஷின்ஸ் என்று பெயர் வைத்திருந்தாலும், பெரு வர்த்தகத்துக்கு மட்டுமே கணினிகள் உபயோகிக்க முடியும் என்றொரு காலம் இருந்தது.…