கவிதைகள்~2 நிமிட வாசிப்பு20 ஆண்டுகளுக்கு முன் எழுதியது

பண்பாடாம் பாரதமாம்

முத்தமிழ் மன்றத்தில் எழுதியது · 4 மே 2006

நாகரீக மக்கள் வாழும் நகரம் - நாலு மாடி கட்டிடங்கள் - நாறிக் கிடக்கும் சாலை ஓரம். வரி கேட்கும் நகராட்சி - வாங்கிக் கொள்ளும் அதிகாரிகள் - வாடை அடிக்கும் சாக்கடைகள். குன்றும் குழியுமாய் சென்ற ஆண்டு போட்ட தார்சாலை - அதில் குட்டை குட்டையாய் மழை நீர் தேக்கங்கள். முக்குக்கு மூணு கொடிக் கம்பங்கள் - உடல் மண்ணுக்கு உயிர் எவனோ ஒருவனுக்கு என்ற முழக்கங்கள் - மூலைக்கு மூலை ரசிகர் மன்றங்கள். மினுக் மினுக் என்று எரியும் தெரு விளக்குகள் - பயமின்றித் திரியும் வழிப்பறிக் கொள்ளையர்கள். அழகழகான இல்லங்கள் - அதனுள் அசிங்கமான நடத்தைகள். பாடம் படிக்க வேண்டிய வயதில் - பரிதாபமாய் பிச்சையெடுக்கும் இளம் பிஞ்சுகள். பார்க்க வைத்து கொஞ்சமும் கூசாமல் ரோட்டோரத்தில் வயிற்றை நிரப்பும் புண்ணியவான்கள். அப்பன் சொத்தோ, அநியாய சொத்தோ தெரியாமலேயே ஒட்டகம் போல் குடித்து நிரப்பும் குடிமக்கள். அலங்காரமாய், ஆடம்பரமாய் கடைகள் - அதனால் அநியாயமான விலைகள். இருந்தாலும் அதை வாங்குவது தான் கௌரவம் என்று கூசாமல் வாங்கும் மக்கள்.

நியாய விலைக் கடைகள் - அநியாயத்துக்கு எடைகள்.
உள்ளாடை தெரிய உடை உடுத்தும் பெண்கள்.
சைட் அடிக்கும் கண்ணன்கள் - கமெண்ட் அடிக்கும் கன்னிகள்.
நடை உடை பாவனைகளை சினிமாவுக்கு அடகு வைத்த மாணவ மணிகள்.
நாணமில்லாமல், ஊரறிய கட்டியணைத்த படி செல்லும் கற்புக்கரசிகள்.
சிவனையும் காமுறச் செய்யும் சினிமா போஸ்டர்கள்.

தெரு பெயர், பேருந்து கால அட்டவணை, மைல்கல் இவை யாருக்கும் தெரியாத வண்ணம் போஸ்டர்கள். அடையாள வேலை நிறுத்தம் - அடிக்கடி நடத்தும் அரசு ஊழியர்கள். அனுதினமும் அறைகூவல் விடும் போராட்ட சங்கங்கள். கை நிறைய சம்பளம் வாங்கி கவலை இல்லாமல் செலவும் செய்து விட்டு போதாதென்னும் வங்கி ஊழியர்கள். ரோட்டோர வியாபாரிகளைப் பந்தாடிவிட்டு நடு ரோட்டில் லோடு இறக்கும் லாரியிடம் கமிஷன் அடிக்கும் டிராபிக் போலீஸ்காரர். காது கிழிபட கத்தும் காபி பார்கள். காந்தியம் பேசும் கபட கட்சிக்காரர்கள் - காலை வாரி விடும் தரங்கெட்ட கூட்டணிகள். இன்னும் எத்தனை எத்தனையோ? பண்பாடாம்! இன்னும் இருக்கிறதா?

மேலும் வாசிக்க

கவிதைகள்

கவிதைகள்

நானும் நீயும்

அன்பு நண்பர்களே, முன்பு எனக்கும் எனக்கும் http://www.muthamilmantram.com/viewtopic.php?t=18052 என்ற என்னுள்ளான உரையாடலை ரசித்தென்னை ஊக்குவித்தீர்கள்.…