முப்பரிமாணப்படம் தயாரிப்பது எப்படி?
முத்தமிழ் மன்றத்தில் எழுதியது · 22 ஜூலை 2006 – 3 ஏப்ரல் 2008
முப்பரிமாணப்படம் என்பது ஒன்றும் கண்கட்டு வித்தையில்லை. அறிவியல். நாம் இங்கு காணும் அனைத்து முப்பரிமாணப்படங்களும் குறுக்கு வகை முப்பரிமாணப்படங்கள். (Cross View 3D or X view 3D) அதாவது நாம் ஒரு பொருளை இரண்டு கண்களால் பார்க்கும் போது மட்டுமே அதன் முப்பரிமாணத்தை உணர முடியும். குறுக்கு வகை முப்பரிமாணப்படங்களில் வலது பக்கம் இருக்கும் படம் இடது கண்ணுக்கும், இடது பக்கம் இருக்கும் படம் வலது கண்ணுக்கும் உடையதாகும். படத்தின் மேல் பார்வையை நிலை குத்தாமல், படத்துக்கும், நம் கண்களுக்கும் இடையே பார்வையை நிலைகுத்தச் செய்தால், ஒரு குறிப்பிட்ட நிலைகுத்தலில், பின்புலத்திலுள்ள படத்தில் மூன்று படங்கள் தெரிய ஆரம்பிக்கும். அதாவது உங்கள் கண்கள் நீங்களறியாமலேயே, வலது புறம் உள்ளதை இடது கண்ணும், இடது புறமுள்ளதை வலது கண்ணும் பார்க்கிறது என்று அர்த்தம். இதனால் உங்களுக்கு முப்பரிமாணத்திலேயே படம் தெரியும்.
படம் கிடைக்கவில்லை
முதல் முப்பரிமாணப்படம்: இனி, முதல் முப்பரிமாணப் படத்தை எப்படி எடுப்பது என்று பார்ப்போம். முதலில் முப்பரிமாணமுள்ள ஒரு பொருளை (நீள, அகல, உயர) எடுத்துக் கொள்ளுங்கள். பின்புலத்தில் அசையும் பொருள் எதுவும் இருக்காத வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். இனி சிறிது நேரத்திற்கு மட்டும் முடிந்த வரை அசையாமல் இருங்கள். இப்போது உங்கள் கேமராவைக் கொண்டு பார்வையிடும் பகுதியில் (Optical View Finder) இடது கண்ணை வைத்து படம் எடுங்கள். அப்படியே நீங்கள் அசையாமல் வலது கண்ணில் வைத்தும் அதே பொருளை இன்னொரு படம் எடுங்கள். இதன் மூலம் இடது கண்ணால் ஒரு படமும், வலது கண்ணால் ஒரு படமும் எடுக்கப் படுகிறது. டிஜிட்டல் கேமரா வைத்திருந்தாலும் பார்வையிடும் லென்சின் மூலமாகவே படம் எடுத்தல் ந்ன்று. இது பக்கத்தில் உள்ள பொருளுக்கு மட்டுமே பொருந்தும். தூரத்தில் உள்ள பொருளை எடுக்க வேண்டுமாயின், உங்களுக்கும் அந்தப் பொருளுக்கும் உள்ள தூரத்தில் 1/30 பங்கு இடப்புறப்படம் எடுத்ததும் வலப்புறம் நகர வேண்டும். எனவே 30 அடி தூரத்திலுள்ள ஒரு பொருளை முப்பரிமாணத்தில் எடுக்க வேண்டுமானால், முதலில் இடப்புறப் படம் எடுத்து விட்டு, 1 அடி (1/30) வலப்புறம் நகர்ந்து வலப்புறப்படத்தை எடுக்க வேண்டும். இரண்டு படங்களையும் எடுக்கும் போது போகஸ், எக்ஸ்போசர் ஆகியவற்றை மாற்றக் கூடாது என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை அல்லவா? இனி மென்பொருளைப் பார்ப்போமா?
முப்பரிமாணப் படங்களைத் தயாரிப்பதற்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் மென்பொருள் இது. மிகவும் அருமையான இந்த மென்பொருளை இலவசமாகத் தந்துள்ளார் இதனை எழுதியவர். http://stereo.jpn.org/eng/stphmkr/ இந்தத் தளத்திலிருந்து நீங்கள் Stereophotomaker என்னும் இந்த அற்புத மென்பொருளைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். சமீபத்திய பதிப்பு 3.02 ஆகும். இதை http://stereo.jpn.org/eng/stphmkr/file/stphmkre302.zip (576 K) உதவியின்றி. http://stereo.jpn.org/eng/stphmkr/file/stphmkre302all.zip (6504 K) உதவியுடன் தரவிறக்கிக் கொள்ளலாம். உதவியுடன் தரவிறக்கம் செய்து கொள்வதே உகந்தது. இந்த மென்பொருளை நிறுவ வேண்டிய அவசியம் இல்லை. ஏதேனும் ஒரு போல்டரில் இதை விரிவாக்கம் செய்து உபயோகிக்கத் தொடங்கலாம்.
மென்பொருளை ஆரம்பித்த உடன் இவ்வாறு தான் இருக்கும்.
படம் கிடைக்கவில்லை
23 ஜூலை 2006
இந்த மென்பொருளின் மூலம், குறுக்குப் பார்வை முறை (Cross View) இணைப் பார்வை முறை (Parellel View), கண்ணாடி வைத்துப் பார்க்கும் அனகிலிஃப் முறை (Anaglyph) என்று எந்த வகையான முப்பரிமாணப்படத்தையும் உருவாக்க இயலும். இவற்றில் முதலிரண்டு முறைகளான, குறுக்குப் பார்வை முறையும், இணைப்பார்வை முறையும் எந்த வித கருவிகளும் இன்றி நேரடியாகவே முப்பரிமாணத்தை உணரும் தன்மை கொண்டவை. அதிலும் குறுக்குப் பார்வை முறை மூலம் எவ்வளவு பெரிய படமாகவும் முப்பரிமாணத்தில் ஆக்க இயலும் என்பதாலும், அதைப் பார்ப்பது எளிது என்பதாலும், குறுக்குப் பார்வை முறை முப்பரிமாணப்படங்களே அதிக பிரபலத்துடன் இருக்கின்றன. நாமும் இந்த வகை குறுக்குப் பார்வை முறை முப்பரிமாணத்தை எவ்வாறு தயாரிப்பது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
இனி நமது முதல் முப்பரிமாணப் படத்தை உருவாக்குவோமா? நான் ஏற்கனவே சொன்ன படி இடது கண்ணால் ஒரு படமும், அதே பொருளை வலது கண்ணால் ஒரு படமும் எடுத்துக் கொள்ளுங்கள். தாங்கி - டிரைபாட் (Tripod) வைத்து புகைப்படம் எடுத்தால் தெளிவாகவும் துல்லியமாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை! அதே போல் மிகவும் நுணுக்கமாக எடுக்க வேண்டுமானால் போகஸ் செய்யும் பொருளுக்கும் நமக்கும் உள்ள இடைவெளி 30 பங்குக்கு ஒரு பங்கு நாம் வலப்புறம் கோடு போட்டு நகர்ந்து எடுத்தால் அது மிகவும் அறிவியல்பூர்வமாக இருக்கும். ஆனால் நான் அந்த அளவு தொழில் முறை புகைப்படக் கலை அறிந்தவன் அல்ல. :( இருந்தும் சாதாரணமாக எடுத்தாலும் மென்பொருளின் மூலம் தவறுகளைத் திருத்தி விடலாம். எனவே கவலை வேண்டாம். இனி செய்முறை விளக்கத்தைக் காண்போம். கீழே உள்ள இந்தப் படம் இடக்கண்ணால் எடுத்த படமாகும். எனவே அதை left.jpg என்று பெயர் வைத்துள்ளேன்.
இந்தப் படம் அதே விளக்கை வலக்கண்ணால் எடுத்த படமாகும். எனவே அதை right.jpg என்று பெயர் வைத்துள்ளேன்.
இனி மென்பொருளை ஓட விடுங்கள். File->Open Left/Right Images என்பதைத் தேர்ந்தெடுங்கள். இது போன்ற ஒரு டயலாக்கில் இரண்டு (Left.jpg & right.jpg) படங்களையும் தேர்ந்தெடுத்துக் கொண்டு Open ஐ கிளிக் செய்யுங்கள்.
அவ்வாறு இரண்டு படங்களையும் திறந்தவுடன் கீழ்க்கண்டவாறு இரண்டு படங்களையும் அருகருகே காணலாம். :)
இந்தப் படத்தில் இடது புறத்தில் இடது படமும், வலது புறத்தில் வலது படமும் இருக்கிறது. ஆனால் நமக்கு இடது புறத்தில் வலது படமும், வலதுபுறத்தில் இடது படமும் வேண்டுமல்லவா, எனவே நான் வட்டமிட்டுக் காட்டியிருக்கும் Swap பட்டனை அழுத்தினால் வலது புறத்துக்கு இடது படமும், இடது புறத்துக்கு வலது படமும் சென்று விடும்!
இவ்வாறு படங்களை மாற்றி வைத்தவுடன் F5 பட்டனை அழுத்துங்கள். அல்லது Stereo->Adjustment View ஐத் தெரிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் திரை கீழ்க்கண்டவாறு மாறுவதைக் காணலாம். இதில் முக்கியமாக வலது புறத்தில் இடது படமும், இடது புறத்தில் வலது படமும் மாறியிருப்பதை மெனு பாரில் உள்ள கோப்புகளின் பெயரை வைத்து உறுதி செய்து கொள்ளுங்கள்.
மூன்றாவதாக ஒரு படம் உருவாகியிருப்பதைக் காணுங்கள். அது இரண்டு படங்களையும் இணைத்த ஒரே படமாகும்! இனி தவறுகளைத் திருத்தும் பணியை ஆரம்பிப்போமா?
25 ஜூலை 2006
இனி 'K' என்னும் குறுக்கு கீயை அழுத்த வேண்டும், அல்லது Adjust -> Easy Adjustment என்னும் மெனுவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் கீழ்க்கண்ட டயலாக் வரும்.
இந்த டயலாக்கை உற்று நோக்குங்கள். இது பல தகவல்களையும், படத்தின் தவறுகளை நீக்கக் கூடிய பல வசதிகளையும் கொண்டுள்ளது. இதன் மூலம், இரண்டு படங்களில் ஒன்றை மட்டும் தேவையான அளவு பெரிதாக்கவோ, அசைக்கவோ, சுற்ற (Rotate) வைக்கவோ முடியும். ஒவ்வொன்றாய் பார்ப்போம்.
இனி, முப்பரிமாணத்திற்குப் பின் இருக்கும் அறிவியல் கொஞ்சம்! நீங்கள் ரயிலில் சென்று கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கென அதிர்ஷ்டமாகக் கிடைத்துள்ளது சாளரம் அருகே உள்ள இருக்கை. ஆனந்தமாகக் காற்று வாங்கிக் கொண்டு இயற்கையை ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள். நகர்ந்து கொண்டிருக்கும் ரயிலில் இருந்து, ஒரு பொருளைக் (உதாரணம் ஒரு மரம்) குறிப்பிட்டுப் பார்த்தீர்களேயானால், ரயில் செல்லும் போது மரத்துக்கு முன்னுள்ள பொருட்கள் எதிர்புறம் செல்வதாகவும், மரத்துக்குப் பின்னுள்ள பொருட்கள் உங்களுடனே வருவது போலவும் தோற்றமளிக்கும்! அதாவது, மரத்தை மையமாக வைத்து ரயில் அதைச் சுற்றுவது போல! சிறிது நேரத்தில் ரயிலும் அதைத் தாண்டி விடும். இனி, நாம் இடது கண்ணின் வழியாக ஒரு பொருளைப் படம் எடுத்துள்ளோம். வலது கண்ணை வைத்தும் அதே பொருளைப் படம் எடுத்துள்ளோம். ரயிலில் செல்வதை ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள். அந்தப் பொருளுக்கு முன்னால் இருக்கும் பொருட்கள் எதிர் புறத்தில் (அதாவது இடது கண்ணில் எடுத்த படத்தில் வலப்புறமும், வலது கண்ணில் எடுத்த படத்தில் இடப்புறமும்) விலகி இருக்கவேண்டும்! அந்தப் பொருளுக்குப் பின்னால் இருக்கும் பொருட்கள் அதிகம் அசைந்திருக்காது. உதாரணத்துக்கு இதோ இந்தப் படத்தைப் பாருங்கள்.
படம் கிடைக்கவில்லை
மேற்கண்ட படத்தில், பல்குத்தும் குச்சிகள் இருக்கும் கண்ணாடி டம்ளர் முன்னால் இருக்கும் பொருளாகும். பின்புலத்தில் மற்ற பொருட்கள் இருக்கின்றன. வலப்புறம் இருப்பது இடக்கண்ணால் எடுத்தது. இடப்புறப்படம் வலக்கண்ணால் எடுத்தது. இதில் இடப்புறம் இருக்கும் படத்தில் டம்ளர் இடப்புறத்திலும் (அதாவது வலக் கண்ணால் எடுத்தது!), வலப்புறம் இருக்கும் படத்தில் டம்ளர் வலப்புறத்திலும் (இடக்கண்ணால் எடுத்தது) எதிர்புறத்தில் மாறி இருப்பதால், அது முன்னால் இருக்கும் பொருளாகும்! பின்னால் இருக்கும் பொருட்களான, உப்பு, மிளகு பாத்திரங்கள் டம்ளரை விட சிறிது பின் புறத்தில் இருக்கின்றன. ஆனால், இடப்புறத்தில் இருக்கும் தூண் போன்ற அமைப்பு, இரண்டு படங்களிலும் அசையாமல் ஒரே இடத்தில் இருக்கிறது. இதுவே கடைசியில் உள்ள பொருளாகும். இவ்வாறு பொருட்களை இரண்டு படங்களிலும் சரியாக வைப்பதன் மூலம் அற்புதமான முப்பரிமாணப்படங்கள் உருவாகின்றன.
இனி நமது படத்துக்கு வருவோம். இந்தக் கொத்து விளக்கில், ஒளிரும் பந்துகள் முன்னால் இருப்பது. தாங்குகின்ற கூரை கடைசிப் பகுதி. எனவே கடைசிப் பகுதி அதே இடத்திலும், முன் இருக்கும் பந்துகள், இடப்புறப்படத்தில் வலப்புறமும், வலப்புறப் படத்தில் இடப்புறமும் நகன்று இருக்குமாறு அமைத்தோமேயானால், நமது முப்பரிமாணப்படம் ரெடி! நாம் வெறும் கைகளினால் எடுத்ததால் கொத்து விளக்கின் மேல்பாகம் அதே இடத்தில் இல்லாமல் நகன்றிருக்கிறது. அதைச் சரி செய்து விட்டால் வேலை முடிந்தது. அதற்கு என்ன செய்ய வேண்டும்? படம் தெரிகிறதல்லவா? அதில் மவுசை வைத்து டிராக் (Drag) செய்ய வேண்டும். அவ்வாறு கவனமாக ஒரு படத்தின் மேல் இன்னொரு படம் கனகச்சிதமாக பின்னால் கூரையிலிருந்து தொங்க ஆரம்பிக்கும் குமிழ் இருக்கும் இடத்தில் அமையுமாறு டிராக் செய்ய வேண்டும். அவ்வாறு டிராக் செய்து சரி செய்யப்பட்ட படம் இது!
இனி ஒகே கொடுத்து வெளியே வாருங்கள். படமும் அழகாக நகன்றிருக்கும். இதோடு விட்டால் போதாது. தேவையில்லாத பகுதியை நீக்கி Crop செய்ய வேண்டும். அதற்கென இருக்கும் பட்டனை
அழுத்தி கீழ்க்கண்ட படம் போல் ஆக்கிக் கொள்ளுங்கள்.
இது விளக்கை மட்டும் Crop செய்த பின் இருக்கும் தோற்றம்.
இந்தப் படத்தைப் பொருத்த வரை அதிக தவறுகள் இல்லை. எனவே உடனே வேலை முடிந்தது. எனவே First 3d.jpg என்னும் பெயரில் இதை சேமிப்போம்.
இதோ நமது முதல் முப்பரிமாணப்படம். எவ்வாறு இருக்கிறது? சொல்லுங்களேன்.
1 ஏப்ரல் 2008
உங்களின் ஆர்வம் ஆச்சரியப்பட வைக்கின்றது சசி. உங்கள் படத்தைக் கொஞ்சம் திருத்தியிருக்கின்றேன். வலது படம் இடப்புறமும், இடது படம் வலப்புறமும் கொண்டு செல்ல வேண்டும். அப்போது தான் அது குறுக்குப் பார்வை முறை (Cross Eye) ஆகும். அதற்குக் கீழ்க்கண்ட பட்டனை உபயோகிக்க வேண்டும்!
படம் கிடைக்கவில்லை
இதோ. திருத்தப்பட்ட படம்.
படம் கிடைக்கவில்லை
3 ஏப்ரல் 2008
படம் கிடைக்கவில்லை
சசி உங்களுக்கு சில குறிப்புகள்:
- இடப்புறம் ஒரு படமும், வலப்புறம் ஒரு படமும் எடுக்கையில் கிடைமட்டமாகத் தான் கேமிரா நகரவேண்டுமேயன்றி (Horizontal) மேலோ கீழோ நகரக் கூடாது!
- நீங்கள் அசைவதால் படத்துக்கு ஒளி கிடைப்பது மாறக் கூடாது. இதனால் இரண்டு படமும் ஒரே வெளிச்சத்துடன் இருக்கும்.
- கொஞ்சம் கொஞ்சம் மாற்றி எடுத்திருந்தாலும் கூட, மென்பொருளின் மூலம் மிக எளிதாகச் சரி செய்ய இயலும்.
- ஸ்டீரியோ போட்டோ மேக்கர் மென்பொருளின் ஒவ்வொரு கருவியும் மிக நேர்த்தியாகச் செயல்படக்கூடியவை. நமக்கு முக்கியமாகத் தேவைப்படுவது Rotation, Image Size. இதைச் சரியாகச் செய்து விட்டாலே மிக அருமையான முப்பரிமாணப்படங்கள் தயாரிக்கலாம்.
உங்கள் கோப்பை நான் என்ன செய்தேன் என்றறிய கீழிருக்கும் இரண்டு அசைபடங்களையும் காணுங்கள்! :) படம் 1 (http://www.diamondcrackers.com/giri/sasi1.avi) (1.4 MB) படம் 2 (http://www.diamondcrackers.com/giri/sasi2.avi) (5.9 MB) அடுத்து மன்றத்திலேயே படம் அசையுமாறு செய்து விட நிர்வாகத்தைக் கேட்போம்.