சுதந்திர தினமும் அக்கினித் தலமும்
முத்தமிழ் மன்றத்தில் எழுதியது · 17 ஆகஸ்ட் 2006 – 10 செப்டம்பர் 2008
அன்பு நண்பர்களே, சென்ற வாரம் திருவண்ணாமலை சென்ற அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் எப்படி இருப்பது? அமர்நாத் திரி முடிவதற்கு முன்னமே இதைச் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. போகப் போக உங்களுக்கே தெரியும். முன்கதைச் சுருக்கம்: இதென்ன கதையா? முன்கதைச்சுருக்கம் எல்லாம் வருதே என்கிறீர்களா? இந்தச் சுற்றுலாவுக்கு முன்கதைச் சுருக்கம் அவசியம். சுமார் 59 ஆண்டுகளுக்கு முன்னர், சிவகாசி என்னும் எங்கள் ஊர் சிற்றூராக இருந்த சமயம். முத்தொழில்கள் வளர ஆரம்பித்த காலம். மக்களின் உழைப்பின் பயனால் களைப்புற்ற நேரத்தில் மது, மாது என்று அலையாமல் ஆன்மீகத்தில் அலைபாய விட்ட காலம். அதில் எங்கள் பெற்றோர்களும் ஒருவர். வாரியார் சுவாமிகளுக்கும் சிவகாசிக்கும் நெருக்கமான தொடர்புண்டு. "திருப்புகழ் சக்கரவர்த்தி" வாரியார் சுவாமிகளால் அறிமுகமான திருப்புகழ் மேல் எங்கள் பெற்றோர் மற்றும் பலர் தீராத ஆவல் கொண்டனர். அருணகிரிநாதரை மானசீக குருவாகவும் வரித்தனர். அவர் பெயராலேயே "அருணகிரிநாதர் சபை" என்னும் சபை ஒன்றைத் துவங்கி அதில் மாலை நேரங்களில் ஆண் பெண் அனைவரும் கூடி திருப்புகழைச் சிந்தித்து, அர்த்தமறிந்து வாசித்து, ராகத்துடன் பாடி மகிழ்ந்தனர். எனவே குருநாதர் அருணகிரியார் அவதரித்த தலமான அண்ணாமலை மேல் மிகுந்த பக்தி கொண்டனர். நினைக்க முக்தி தரும் அத்தலத்திற்குச் செல்வதை வாடிக்கையாகவும் கொண்டனர். அவ்வாறு சென்றிருக்கும் சமயத்தில் அருணகிரிநாதர் ஜெயந்தி விழா ஆகஸ்டு மாதம் 14,15,16 ஆகிய தேதிகளில் (குறிப்பாக ஆகஸ்டு 15 அன்று) விமரிசையாகக் கொண்டாடப் படுவதையும், அன்றைய தினம், தமிழகத்தில் இருக்கும் அனைத்து திருப்புகழ் சபையாரும் திருவண்ணாமலைக்கு வந்திருந்து திருப்புகழை தெருவெங்கும் முழங்கச் செய்யும் அதிசயத்தையும் கண்டு தாமும் அவர்களோடு இணைய வேண்டும் என்று உறுதி பூண்டனர். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிவகாசியிலிருந்து எங்கள் சபையார்கள் அவ்வாறு திருவண்ணாமலைக்கு ஆகஸ்டு மாதம் 15ம் தேதி செல்லும் வழக்கம் ஏற்பட்டது. எங்கள் பெற்றோர்கள் காலத்திற்குப் பிறகும், இந்த நல்ல ஆன்மீகப் பணியைக் கைவிடாமல் செய்து வருகிறோம். இதுவே எங்கள் சுற்றுலாவின் முன்கதைச் சுருக்கம். இனி அண்ணாமலையாரைத் தரிசிக்க கிளம்புவோமா?
18 ஆகஸ்ட் 2006
வருடா வருடம் திருவண்ணாமலைக்கு ஆகஸ்டு 15 அன்று செல்லும் வழக்கம் எங்களுக்கு ஏற்பட்டதைப் பற்றிச் சொன்னேன் அல்லவா. பள்ளியில் படிக்கும் சிறுவர்களாய் இருந்த போது எங்கள் தந்தயாருக்கும் பள்ளி ஆசிரியருக்கும் வாக்குவாதமே வரும். காரணம், சுதந்திர தினத்தன்று கொடியேற்ற கண்டிப்பாக வரவேண்டும் என்று ஆசிரியர் சொல்வார். நாங்கள் திருவண்ணாமலைக்கு கட்டாயம் வரவேண்டும் என்று எங்கள் தந்தையார் அழைப்பார். கொஞ்சம் வளர்ந்த பிறகு (10ம் வகுப்பு சமயத்தில்) எங்களை வீட்டில் விட்டு விட்டு எங்கள் பெற்றோர்கள் திருவண்ணாமலை சென்றதும் உண்டு. ஏன்? இந்த ஆண்டு கூட 1ம் வகுப்பு படிக்கும் என் மகளையும், பள்ளியில் படிக்கும் எனது தமையனார் குழந்தைகளையும் ஆகஸ்டு 15 அன்று பள்ளிக்கு வரவேண்டுமென்றும் இல்லாவிட்டால் ஒவ்வொருவரும் தலா ரூ.500/- தண்டம் கட்ட வேண்டும் என்று கூட அறிவிப்பு வந்திருக்கிறது! இருந்தும் அனைவரும் அருணைக்குச் சென்று வந்தோம். :) பின்னர் கல்லூரி சேர்ந்த பின்னரே நான் வருடந்தவறாமல் திருவண்ணாமலை செல்ல ஆரம்பித்தேன். இந்த ஆண்டு ஒரு போனஸ் எனலாம். ஏனெனில் எப்போதும் ஒரு நாள் முன்னரே அருணைக்குச் செல்வோம். இந்த ஆண்டு 13-08 ஞாயிற்றுக்கிழமை ஆதலால் ஒரு நாள் அதிகம் கிடைத்தது. எனவே சில தலங்களையும் சேர்த்துக் காணலாம் என்று முடிவெடுத்தோம். 12-08-2006 அன்று சனிக்கிழமை இரவு 11 மணியளவில் எங்கள் குடும்பத்தார் மற்றும் எங்கள் அலுவலக ஊழியர்கள் ஒரு வேனில் அருணைக்குக் கிளம்பினோம். அதிகாலை 4 மணிக்கு திருச்சி சென்றடைந்தோம். திருச்சி காவிரியில் தண்ணீர் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. அம்மா மண்டபத்தில் படித்துறையில் கூட்டம் சேர்வதற்கு முன்னரே சென்று நன்றாக காவிரி நதியில் நீராடினோம்.
அங்கிருந்து எங்கள் புனிதப் பயணம் ஆரம்பித்தது. முதலில் திருச்சியிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் நாமக்கல் வழியில் இருக்கும் குளித்தலைக்குச் சென்றடைந்தோம். செல்லும் வழி மொத்தமும் காவிரி அன்னை கூடவே வந்தாள்! காவிரி நீர் இரு கரை மருங்கிலும் பெருக்கெடுத்து ஓடியது கண் கொள்ளாக் காட்சி. காலை 8 மணியளவில் முசிறிக்குச் சென்றடைந்தோம். முசிறியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் திருஈங்கோயில் மலையே நாங்கள் முதலில் தரிசித்த தலமாகும். திருஈங்கோயில் மலை: திருவிங்கநாதமலை, வெங்கிமலை என்றும் அழைக்கப்படும் திருஈங்கோயில் மலை பல சிறப்புக்களைப் பெற்றது. 1008 சிவஸ்தலங்களில் 207வது தலம் இத்தலம். அப்பர், சுந்தரர், சம்பந்தரால் பாடல் பெற்ற தலங்கள் மொத்தம் 277. அவற்றில் 63 தலங்கள் சோழநாட்டுத் தலங்களில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ளவை. 127 தலங்கள் சோழநாட்டுத் தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ளவை.
பாண்டிநாட்டுத் தலங்கள் 14.
மலைநாட்டுத் தலம் 1.
கொங்கு நாட்டுத் தலங்கள் 7
நடுநாட்டுத் தலங்கள் 22
தொண்டைநாட்டுத் தலங்கள் 32
துளுநாட்டுத் தலம் 1
வடநாட்டுத் தலங்கள் 6
ஈழநாட்டுத் தலங்கள் 2
புதிதாய் கண்டறிந்த தலங்கள் 2 (இவையும் சோழ நாட்டுத் தலங்களே)
இந்தத் தலங்களில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள 63 சிவத்தலங்களில் 63வது தலம் நாங்கள் சென்ற திருஈங்கோயில் மலை ஆகும். இங்கு அகத்தியர் ஈ வடிவில் இருந்து தவம் செய்தமையால் இந்த மலைக்கு திருஈங்கோயில் மலை என்று பெயர் வந்துள்ளது. சம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். மலை மேல் இருக்கும் கோவிலுக்குச் செல்ல முடியாமல் அப்பர் கீழேயே இருந்து பாடல் பாடியுள்ளார். நக்கீரர் ஈங்கோய் எழுபது என்னும் நூலே இயற்றியுள்ளார். இங்குள்ள இறைவன் மரகதாலேஸ்வரர். இறைவி: மரகதவல்லியம்மை.
மலை 570 படிகள் கொண்டது. காலை 8 மணிக்கெல்லாம் ஏற ஆரம்பித்தோம். அர்ச்சகர் 10 மணிக்குத் தான் கோவிலைத் திறப்பார் என்று அனைவரும் சொல்ல ஒருவரை அவரது வீட்டிற்கு அனுப்பினோம். அவரும் சீக்கிரம் வருவதாகச் சொல்லியனுப்பினார். மலையேற்றம் கடுமையானது தான். இறைவர் அருளால் அனைவரும் அரை மணி நேரத்திற்குள் ஏறி முடித்து விட்டோம். மேலே ஏறி முடித்ததும் குளிர்ந்த காற்றும், இயற்கைக் காட்சியும், காவிரி அன்னையின் கண்கொள்ளா தரிசனமும் மயக்கியது! அர்ச்சகர் 9.30 மணிக்குத் தான் வந்து சேர்ந்தார். அது வரை கோவில் பூட்டி இருந்தாலும் எங்களுக்கு நேரம் போனதே தெரியவில்லை. இதோ சில படங்கள். இது மலையேற ஆரம்பிக்கும் போது எடுத்தது.
இந்தப் படம் பாதி மலை ஏறியவுடன் எடுத்தது. படிக்கட்டுக்களைப் பாருங்கள். அனைத்துமே கற்களால் ஆனவை.
உச்சியிலிருந்து பார்க்கும் போது காவிரி அன்னையின் அற்புத தரிசனம்.
இது திருஈங்கோயில்மலைக் கோவிலின் உச்சியில் இருக்கும் கோபுரம்.
அத்தனை உயரத்திலும் மிக அழகாக கற்களாலும், சுதை வேலைப்பாடுகளாலும் அமையப்பெற்ற கோவில் மிக அழகாகவும், விஸ்தீரணமாகவும், அனைத்து சந்நிதிகளும் கொண்ட முழுமையான சிவத்தலமாகக் காணக் கிடைத்தது பெறும் பேறாகும். கோவிலினுள்ளே நுழைந்ததும் காட்சி தரும் நர்த்தன விநாயகரையும், கல்வெட்டுக்களையும் காணுங்கள்!
பயபக்தியுடன் மூலவரைத் தரிசிக்கச் சென்றோம். மூலவர் மரகதலிங்கம். உள்ளே சென்று அர்ச்சகர் அபிசேகம் ஆரம்பிப்பதற்குள் என் தமையனாரும், என் அண்ணியாரும் சிவபுராணம் பாட ஆரம்பித்து விட்டனர். கைலாயத்திலேயே இருந்தது போன்ற ஒரு பிரமை. அனைவரும் சிவசிந்தனையுடன் லிங்கேஸ்வரரைத் தரிசித்தோம். அர்ச்சகர் எங்களுக்கே எங்களுக்காக அனைத்து அபிசேக ஆராதனைகளையும் செய்வித்தார். மிக்க மகிழ்ச்சியுடன் உமைபாகனை வழிபட்டோம். பூஜை முடிந்ததும் தலவரலாறு பற்றி அர்ச்சகரிடம் விசாரித்தோம். அவர் கூறிய தகவல்களே மேலே கூறியவை. இங்கு தான் போகருக்கு நவபாஷாண வித்தை கை கூடியதாம். ஒன்பது விஷங்களைக் கொண்டு தயாரிப்பதல்லவா? அதைச் செய்து முடித்ததும் போகருக்கு சித்தம் கலங்கி விட்டதாம். சித்தருக்கே சித்தனான எம்பெருமான் அருளுள்ளம் கொண்டு அவர் சித்தத்தைத் தெளிய வைத்து அருகிலிருந்த பாலதண்டாயுதபாணி சிலையை மாதிரியாகக் கொண்டு நவபாஷாணத்தைச் சிலை வடிக்கச் சொன்னாராம்.
அவ்வாறே, போகரும் பாலதண்டாயுதபாணி சிலையை வடிக்க அந்தச் சிலையே பழனியில் இருந்தது. எனவே பழனிக்குச் செல்ல இயலாதவர்கள் தங்கள் நேர்த்திக் கடனை இங்கேயே செலுத்தும் வழக்கம் இருக்கிறதாம். அந்த பால தண்டாயுதபாணியையும் கண்டு மெய்சிலிர்த்தோம். அப்படியே பழநி மலைக் குமரன் தோற்றம். இதை நிரூபிப்பது போல், பழனியில் நவபாஷாணச் சிலை சேதமடைந்த அன்றே இங்கும் முருகன் காலருகே, தண்டப் பகுதி சிதைவுற்றதாகவும் கூறிய அர்ச்சகர், அந்த சிதைவுற்ற பகுதியையும் காட்டினார். அனைத்தும் அவன் சித்தம் அல்லவா? இன்னும் சில விஷயங்கள் இந்த மலையைப் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டியிருக்கிறது. இன்னும் இரு தலங்கள் சென்ற பின் மீண்டும் திருஈங்கோயில்மலைக்கு வருவோம். சரியா?
20 ஆகஸ்ட் 2006
அடுத்ததாக நாங்கள் சென்றது குளித்தலையில் இருக்கும் கடம்பவனேஸ்வரர். ஆற்றின் வடகரையில் இருப்பது முசிறி. தென்கரையில் இருப்பது குளித்தலை. இது திருக்கடம்பந்துறை என்றும், குளித்தலை என்றும், குழித்தலை என்றும், கடம்பர் கோவில் என்றும் வழங்கப்படுகிறது.
இங்குள்ள இறைவர் - கடம்பவனேஸ்வரர்.
இறைவி - முற்றிலா முலையம்மை - பாலகுஜாம்பாள்
தலவிருக்ஷம் - கடம்ப மரம்
தீர்த்தம் - காவிரி.
அந்தப் பகுதியில் ஆடி 18 மட்டுமின்றி, ஆடி 28ஐயும் விமரிசையாகக் கொண்டாடி மகிழ்கின்றனர். நாங்கள் சென்ற அன்று ஆடி 28. ஆதலால் கோவிலில் கூட்டம் வெகு அதிகம். இருந்தும் கடம்பவனேஸ்வரரைக் கண்குளிரக் கண்டு ஆனந்தித்தோம். இங்கு மூலவர் வடக்கு நோக்கி இருப்பதால், இத்தலம் தக்ஷிண காசி என்று அழைக்கப்படுகிறது. கண்ணுவ முனிவருக்கும், தேவருக்கும் இறைவன் கடம்ப மரத்தில் காட்சி தந்த தலம். ஆதலால் இப்பெயர் வந்தது. அண்ணல் காவிரியின் தென்கரையில் இருந்துகொண்டு வடக்கு நோக்கி காவிரியைப் பார்த்த வண்ணம் தரிசனம் தருகிறார். இது கடம்பவனேஸ்வரர் கோவிலின் பழைய தேர்!
13 செப்டம்பர் 2006
கடம்ப வன நாதரை வணங்கி விட்டு அடுத்து நாங்கள் சென்றது இரத்தினகிரீஸ்வரர். என்ன பார்க்கிறீர்கள்? இரத்தினகிரி தான்! வேலூர் அருகேயுள்ள ரத்தினகிரி மிகவும் பிரபலம்! குளித்தலை அருகேயிருக்கும் இந்த இரத்தினகிரியும் இங்கே பிரபலம் தான். இந்த இரத்தினகிரீஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்தவர். பலருக்கு குலதெய்வமாம்! மலை மேல் இருக்கிறார். 1100 படிகள் கொண்ட மலை மேல் இருக்கிறது பிரம்மாணடமான கோவில். ஏற்கனவே மதிய நேரம்! வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. மலை மேல் ஏற ஆரம்பித்தோம். என் இளைய மகள் மகாஸ்ரீயையும் தூக்கிக் கொண்டு ஏற வேண்டிய கட்டாயம் எனக்கு! ஈசன் மேல் பாரத்தைப் போட்டு விட்டு நடக்க ஆரம்பித்தோம். ஒவ்வொரு 50 படிகளுக்கும் மண்டபம் கட்டி வைத்திருக்கிறார்கள். எனவே மிகவும் வசதியாகப் போய்விட்டது! எங்களுடன் வந்த அனைவரும் மேலே சென்று விட்டார்கள். நான், என் மனைவி மற்றும் மகள் தான் கடைசியாகச் சென்றோம். வாழ்நாளில் மறக்க முடியாத மலையேற்றம்! செங்குத்தாக ஏறும் மலைப்படிகள். இதயத்தின் லப்டப் ஓசை வெறும் காதுக்கே கேட்கும் அளவுக்கு துடிக்க ஆரம்பித்து விட்டது! எப்படியோ ஏறி மலை உச்சியை அடைந்தோம். ஆஹா! என்ன பிரமாதமான கற்கோவில்? அனைவரும் பார்க்க வேண்டிய திருத்தலம். இத்தலத்தின் பெருமைகளைப் பார்ப்போம்.
18 ஆகஸ்ட் 2008
இரண்டாண்டுகள் கழித்து மீளவும் யாத்திரையைத் துவங்குவோம். வழக்கம் போல் இந்த ஆண்டும் திருவருணைக்கு மூன்று நாட்கள் பயணம் மேற்கொண்டோம். இந்த ஆண்டு ரயிலில் விழுப்புரம் வரை சென்று பின் திருவருணைக்கு 14-08-2008 அன்று வியாழன் காலை சுமார் 7 மணியளவில் வந்து சேர்ந்தோம். காலையில் கண் குளிர அண்ணாமலையாரையும் உண்ணாமுலையம்மனையும், கம்பத்திளையரையும் தரிசித்தோம். மதியம் உணவருந்தி விட்டு, வேலூர் அருகே சமீபத்தில் தங்கத்தால் இழைத்து நேர்த்தியாகக் கட்டிமுடிக்கப்பட்ட ஸ்ரீபுரம் நாராயணி பீடம் பொற்கோவிலைத் தரிசிக்கச் சென்றோம். செல்லும் வழியில் படவேடு ரேணுகா பரமேஸ்வரி ஆலயத்தில் அம்மனைத் தரிசித்தோம். அம்மன் எழில் கொஞ்சும் ரூபத்தில் காட்சியளிக்கின்றாள். மெய்மறந்து தரிசித்தோம். பின் அங்கிருந்து ஸ்ரீபுரம் சென்று சேர்கையில் மணி 5.30 ஆகியிருந்தது.
ஸ்ரீபுரம். உலகத்தரத்தில் ஒரு தென்னிந்தியக் கோவில். அழகான அறுங்கோணப் பாதையால் சூழப்பட்டு, பின்னர் நீள்வட்டமாக அமைக்கப்பட்டு, அஷ்டலக்ஷ்மிகளுக்கும் வாயிலமைக்கப்பட்டு, நாராயணி தகதகவென்று ஜொலிக்கும் பொற்கோவிலில் வீற்றிருக்கின்றாள். காணக் கண் கோடி வேண்டும். கோவிலின் சுத்தமும், நேர்த்தியும், பணியாளர்களின் ஒழுங்கும் தற்கால ஆலயம் ஒன்றை இவ்வாறு எழுப்ப சாத்தியமுண்டா என்ற பிரமிப்பும் என்றும் மனதை விட்டு நீங்காது. அலைபேசி, புகைப்படக் கருவி எதையும் அனுமதிக்காததால் மனம் ஒருமையுடன் கோவில் தரிசனத்தில் செல்கின்றது. :) இதோ http://www.sripuram.org யில் இருந்து சில படங்கள். பறவைப் பார்வையில் 100 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் கட்டப்பட்டிருக்கும் கோவில். (அறுங்கோணப் பாதையும், நீள்வட்டச் சுற்றும், கோவில் நடுவிலும் காணக் கிடைக்கின்றது)
படம் கிடைக்கவில்லை
அறுங்கோணப் பாதையின் இரு மருங்கிலும் அழகிய கற்சிலைகள், நன்றாகப் பராமரிக்கப்படும் புல்வெளிகள்
படம் கிடைக்கவில்லை
தங்கக் கோபுரம்
படம் கிடைக்கவில்லை
அஷ்டவாயில்களுடன் கோவில்.
படம் கிடைக்கவில்லை
தங்கத்தால் இழைக்கப்பட்ட வேலைப்பாடு மிக்க தூண்கள்
படம் கிடைக்கவில்லை
இப்பெருங்கோவிலை திட்டமிட்டு எழுப்பிய இளந்துறவி
படம் கிடைக்கவில்லை
கோவிலில் தரிசனம் மட்டும் மூன்று மணி நேரம் ஆகின்றது. நேரம் போவது தெரியவே இல்லை. இரவு விளக்கு ஒளியில் தங்கக் கோவில் பிரகாசிப்பதைக் காணக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். கோவிலில் இருந்து வெளியே வருகையில் மண்டபத்தில் இளஞ்சிறுவர் ஒருவர் அற்புதமாய் டிரம்ஸ் இன்னிசைக் கச்சேரி நிகழ்த்திக் கொண்டிருந்தார். சுடச்சுட பிரசாதமும் வழங்கப்பட்டது. நிறைவாய் வெளியேறி திருவருணைக்கு மீண்டும் இரவு 9.30 மணியளவில் திரும்பினோம்.
20 ஆகஸ்ட் 2008
மறுநாள் ஆகஸ்டு 15. நினைவு தெரிந்த நாளிலிருந்து, ஆகஸ்டு 15 என்றால் அன்று திருவண்ணாமலையில் தான் சுதந்திர தினம் கொண்டாடியிருக்கின்றேன்! தவிர்க்க முடியாத பள்ளி/கல்லூரி நாட்கள் தவிர மற்ற வருடங்களில் அங்கே நடக்கும் ஸ்ரீ அருணகிரி நாதர் திருவிழாவில் எங்கள் சங்கத்தினரும் மேடையில் பாட வாய்ப்புக் கிடைத்தது நாங்கள் செய்த புண்ணியம் என்றே சொல்ல வேண்டும். சுமார் 200 க்கும் மேற்பட்டோர் சிவகாசியிலிருந்து இந்த தினத்தில் திருவருணை சென்று அண்ணாமலையாரை வணங்கி, முருகப் பெருமானை வழிபட்டு ஆண்டு தோறும் பத்து திருப்புகழ் பாடல்கள் வீதம் பண்ணமைத்துப் பஜனை செய்து தெய்வீக மணம் கமழச் செய்கின்றார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் காலை 8 மணி முதல் 9 மணி வரை பஜனை நடைபெற்றது. இதோ மேடையில் சிறந்த முறையில் பஜனை நிகழ்த்தும் சிவகாசி அன்பர்கள்.
படம் கிடைக்கவில்லை
கோவிலில் யானை சிலையின் மீது சவாரி ஏறி வெள்ளோட்டம் காணும் மஹாஸ்ரீயும், தும்பிக்கையை விடாது பிடிக்கும் வித்யாவும், உடன் வந்து விளையாடிய ஒரு சிறுவனும் இதோ.
படம் கிடைக்கவில்லை
எழில் கொஞ்சும் பிரபுட தேவ மஹாராஜா கட்டிய ராஜ கோபுரத்தையும் மற்ற கோபுரங்களையும், திருவண்ணாமலையையும் இந்த நீள் படத்தில் ஒருங்கே கண்டு மகிழுங்கள். படத்தின் மேல் சொடுக்கி முழு அளவில் காணவும்.
படம் கிடைக்கவில்லை
28 ஆகஸ்ட் 2008
அன்று மதியம் எங்கள் சங்கத்தின் சார்பில் 600 பேருக்கு அன்னதானம் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் இச்சேவையைச் செய்து வருகின்றோம் என்பதில் ஒரு நிறைவு. பின்னர் அன்று இரவு பௌர்ணமி என்பதால் (அன்று தான் சந்திரகிரகணமும் கூட) கிரிவலம் வரலாம் என்று நினைத்திருந்தேன். திடீரென இன்ப அதிர்ச்சியாக, சூரியா அவரது இல்லத்தின் அருகே இருக்கும் மூன்று பெண்மணிகளுடன் கிரிவலம் வருவதாகச் சொல்ல, ஆச்சரியமாகவும் மிக்க மகிழ்ச்சியாகவும் இருந்தது. கதிர்க்குட்டியுடன் மஹாஸ்ரீயும், வித்யாவும் ஆர்வமாக விளையாடினர். பின்னர் இரவு 11 மணிக்கு மேல் நாங்கள் அனைவரும் கிரிவலம் கிளம்பினோம். அடேங்கப்பா, பௌர்ணமி என்றால் எவ்வளவு பேர் இரவென்றும் பாராமல் கிரிவலம் வருகின்றார்கள் என்று அன்று தான் கண்டோம். அதனால் தானோ என்னவோ அதிகம் எங்கேயும் அமராமல் கிரிவலம் செய்தோம். பாவம் சூரியா, கதிர்க்குட்டியையும் தூக்கிக் கொண்டு கிரிவலம் வந்தார். கிரிவலம் செய்து முடிக்கையில் அதிகாலை 3 மணி ஆயிற்று. அப்போது கூட பேருந்து நிலையம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, சூரியாவை வழியனுப்பி விட்டு தங்கியிருக்கும் விடுதிக்கு வந்து சேர்ந்தேன். அடுத்த நாள் 16-08-2008 அன்று திருவண்ணாமலையைச் சுற்றிலும் ஒரு சுற்றுலா செல்லலாம் என்று எண்ணியிருந்தோம். அதன்படி அதிகாலை 6.30 மணிக்கெல்லாம் குளித்து முடித்துக் கிளம்பினோம். மொத்தம் 24 பேர், ஒரு வேன் மற்றும் ஒரு மகிழ்வுந்தில் கிளம்பி நேராக திருவரங்கம் சென்றோம். இங்கு தான் தமிழகத்திலேயே மிகப் பெரிய பள்ளி கொண்ட பெருமாள் காட்சியளிக்கின்றார். கோவில் நிறைய கற்றூண்களுடன் அழகான வீதிகளைக் கொண்டு அமைந்துள்ளது. அதிகாலையிலேயே பெருமாள் தரிசனம் கிடைத்தது மனதுக்கு மிகவும் நிறைவாக இருந்தது. இதோ காலையில் திருவரங்கம் கோவில்.
படம் கிடைக்கவில்லை
5 செப்டம்பர் 2008
திருவரங்கம் கோவிலில் நெடிய பெருமாளைக் கண்குளிரத் தரிசித்து விட்டு திருக்கோவிலூர் கிளம்பினோம். செல்லும் வழியில் ஞானானந்த சுவாமிகளின் தபோவனம் என்றொரு கோவில் இருக்கின்றது. அங்கே வேதபாடசாலையும் இருக்கின்றது. உள்ளே சென்றோம். அப்போது தான் அபிஷேக ஆராதனைகள் நடைபெற ஆரம்பித்திருந்தன. பாடசாலையில் பயிலும் மாணாக்கர்களிடம் பேச்சுக் கொடுத்தோம். ஒரு மாணவர். அவருக்கு 12 வயதிருக்கும். நீங்கள் எல்லாம் யார் என்று கேட்டோம். நாங்கள் சிவாச்சாரியார்கள் என்றார் பாருங்கள். கண்களில் அத்தனை தீட்சண்யம். பள்ளியில் படித்துக் கொண்டே இங்கே பயில்கின்றீர்களா என்றோம். இல்லை என்று பதிலளித்தார். ஆச்சரியமாக இருந்தது. எங்கள் உள்ளத்தில் உலக அறிவு இல்லாமல் என்னவெல்லாம் இந்தக் குழந்தைகள் இழந்திருக்கின்றனவோ என்ற எண்ணம் ஓடியது. அது அவருக்கும் தெரிந்தது போலும். அவர் எங்கள் பரிதாபப் பார்வை கண்டு உள்ளுக்குள்ளே சிரித்துப் பரிகசிப்பது போலத் தோன்றியது. பின், மற்ற சிறுவர்களுடன் விளையாடச் சென்று விட்டார். அவர்களுக்குள் என்ன பேசுகின்றார்கள் என்று கூர்ந்து கவனித்த போது, ஒரு தேவாரப் பாடலில் இருக்கும் நயத்தினைக் குறித்தும், அதைப் பாடும் ராகம் குறித்தும் பேசியது காதில் விழுந்தது. மெய்சிலிர்த்தது. அப்பிரமிப்புடன் திருக்கோவிலூர் கிளம்பினோம். மஹாவிஷ்ணு வாமன அவதாரமெடுத்து, மஹாபலியிடம் மூன்றடி தானம் கேட்டு, அதில் ஓரடியால் பூமியை அளந்தும், இன்னொரு அடியால் வானம் அளந்தும் மற்றொரு அடியால் மஹாபலியின் தலையில் வைத்தும் அருள்பாலிக்கும் அரிய கோவில் திருக்கோவிலூர். உலகளந்த பெருமாள் என்ற நாமத்துடன் விளங்குகின்றார். மேலும் அரிய விவரங்களுக்கு மாதவப்பந்தல் (http://madhavipanthal.blogspot.com/2007/11/blog-post.html) என்ற பெயரில் அடியவர் ஒருவர் எழுதியிருக்கும் வலைப்பூப்பதிவைப் படித்து தேகளீசனைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். (கட்டாயம் முழுக்கட்டுரையையும் படியுங்கள்) இதோ திருக்கோவிலூர் கோபுர அழகு.
படம் கிடைக்கவில்லை
10 செப்டம்பர் 2008
திருக்கோவிலூர் (பழம்பெயர் திருக்கோவலூர் ஆகும்) தரிசனம் முடிந்ததும், தென்பெண்ணை ஆற்றின் மறுகரையில் இருக்கும் அர கண்ட நல்லூர் என்ற பெயரில் தற்போது வழங்கப்படும் அறையணி நல்லூர் சென்றோம். அறையணி நல்லூர் அரகண்ட நல்லூர் அதுல்ய நாதேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் தென் ஆற்காட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள 96 கல்வெட்டுக்களுள் பெரும்பான்மையானவை சோழர் காலத்தவை. பாண்டவர்கள் வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை. இங்குள்ள இறைவன் அறையணிநாதேசுவரர்; இறைவி அழகிய பொன்னம்மை. - நன்றி விக்கிபீடியா பெண்ணை ஆற்றின் வடகரையில் திருக்கோயிலூருக்கு அருகே அமைந்துள்ள மற்றொரு சிறப்பான கோயில் இது. தற்பொழுது அரகண்ட நல்லூர் என அழைக்கப்படுகிறது. இங்கு எழுந்தருளி அருள்பாலிக்கும் இறைவன் அறையாணிநாதேசுவரர் என்றும், ஒப்பிலாமணீஸ்வரர் ஒப்பு ஒருவரும் இல்லாத நாயனார் எனக் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டு அழைக்கப்படுகின்றனர். இக்கோயிலுக்குச் சோழர், பாண்டியர், கோப்பெருஞ்சிங்கன், விஜய நகர மன்னர்கள் ஆகியோர் பெருந்தொண்டு செய்துள்ளனர். ஞானசம்பந்தர் பெருமாள் இத்தலத்து இறைவனை ஆரமாகிய பாம்பினார் அண்ணலார் அறையணி நல்லூர், வரமாய் நினைப்பார்கள் நம் வல்வினை மாயுமே என்று போற்றுகின்றார். இங்கு வந்த ஞானசம்பந்தர். இங்கிருந்தே திருவண்ணாமலையைப் பார்த்து வணங்கிப் பாடுகின்றார். அவர் நின்று பாடிய இடத்தில் ஞானசம்பந்தர் பாதங்கள் ஒரு கற்பீடத்தில் காணப்படுகின்றன. இங்கிருந்தே நினைக்க முக்தி தரும் திருவண்ணாமலையைக் கண்டு தரிசனம் செய்யலாம். பாதபீடம் அருகே இக்கோயிலிலும் அருணாசலேசுவரர் சன்னதி உள்ளது. கோபுரத்திற்கு அருகே பாறையில் பல்லவர் காலக் குடைவரைக் கோயில் உள்ளது. அதில் சிற்பங்கள் ஏதுமில்லை. அண்மையில் குடமுழுக்கு நடைபெற்று இக்கோயில் புதுப்பொலிவுடன் விளங்குகிறது. பகவான் ஸ்ரீ ரமணர் விஜயம்பகவான் ரமணர் ஆன்மீக அநுபவம் பெற திருவண்ணாமலைக்கு வந்தார். விழுப்புரம் வந்து ரயிலில் மாம்பழப் பட்டு என்ற ஊர் வரைக்கும் வந்தார். பின்னர் அங்கு இறங்கி அறையணிநல்லூர் கோயிலைக் கண்டு அத்தலத்திற்கு நடந்தே வந்து இறைவனைத் தரிசிக்கிறார். பின்னர் அங்கு இறங்கி அறையணிநல்லூர் கோயிலைக் கண்டு அத்தலத்திற்கு நடந்தே வந்து இறைவனைத் தரிசிக்கிறார். ஞானசம்பந்தர் கண்டது போல இங்கிருந்தே திருவண்ணாமலை ஒளியைத் தரிசிக்கிறார். பின்னர் கீழையூர் வீரட்டானேசுவரரையும் தரிசித்து திருவண்ணாமலை செல்கிறார். பகவான் ஆன்மீகப் பயணத்தில் இந்த இரு கோயில்களும் முக்கிய இடம் பெற்று விளங்குகின்றன. நன்றி: அமுதசுரபி (http://tamil.sify.com/amudhasurabi/fullstory.php?id=13562004) இதோ ஆற்றங்கரையில் பாறையின் மேல் அழகான கோவில்
படம் கிடைக்கவில்லை
அரகண்டநல்லூரில் தரிசனம் முடித்ததும் திருக்கோவிலூர் மற்றும் அரகண்ட நல்லூர் ஆகிய இரு தலங்களுக்கும் இடையில் விளங்கும் கீழையூர் கோவிலில் தரிசனம் செய்யச் சென்றோம். கீழையூர் வீரட்டானம்திருக்கோயிலூரில் கீழையூர் என்னும் பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் வீரட்டேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாகத் தோன்றி அருள்பாலிக்கிறார். சிவபெருமானின் பெருமை பேசும் அட்ட வீரட்டத்தலங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது. அந்தகாசுரனை அழித்த தலம். இது அசுரனை அழிக்க நடத்திய போரில் 64 பைரவர்கள் இத்தலத்தில் உதித்தார்கள். எனவே பைரவ பைரவி வழிபாட்டிற்குச் சிறப்பிடமாக இத்தலம் விளங்குகிறது. அறியாமை, எல்லா உயிர்களுக்கும் வருத்தம் ஏற்படுத்தும் இயல்புடையாதகையால், அவ்வறியாமையை ஞானமூர்த்தியாகிய சிவபெருமான் அழிப்பதையே அந்தகாசுரவதம் நமக்கு அறிவுறுத்துகிறது. கருந்துறை அந்தகன் தன்போல் அசுரன்வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம்வருத்தஞ் செய்தானென்று வானவர் வேண்டக்குருத்துயர் குலங்கைக் கொண்டு கொன்றானே மாசி மாதத்தில் 6ஆம் நாள் விழாவில் மாலையில் அந்தகாசுர சம்கார ஐதீக வைபவம். இத்தலத்தில் நடைபெறுகிறது. அப்பர், ஞானசம்பந்தர் இருவரும் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார். பெரியானை கணபதிமேற்கு நோக்கிய கோயில், கோபுர வாயிலின் வழியே நுழைகிறோம். முதல் திருச்சுற்றில் வலப்புறம், சிறப்பு மிக்க பெரியானை கணபதியின் சன்னதி உள்ளது. சுந்தரரும் சேரமான் பெருமானும் கயிலை செல்வதை அறிந்து, தானும் செல்ல ஒளவையார் விரும்புகிறார். ஒளவையார் பூஜையிலும் தத்துவ நிலையைத் தந்தெனையாண்ட வித்தக விநாயக விரைகழல் சரணே என்ற விநாயகர் அகவல் பாடல்களாலும் மகிழ்ந்த கணபதி பெருமாள், தனது துதிக்கையால் ஒளவையாரைக் குழந்தையைப் போல தூக்கி சுந்தரர் செல்வதற்கு முன்னரே கயிலையில் விட்டு அருள்புரிந்த தலம், இது, இடது பக்கம் அருணகிரிநாதர் போற்றிய முருகப் பெருமான் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் பல்லவர் கால சப்தமாதர் சிற்பங்கள் வழிபடப் பெறுகின்றன. பிற்காலப் பல்லவ மன்னர்களான மூன்றாம் நந்திவர்மன் மற்றும் நிருபதுங்கவர்மன் ஆகியோர் வழிபாட்டிற்குத் தானம் அளித்ததைக் கல்வெட்டுகளினால் அறியமுடிகின்றது. தற்போதைய கோயில்களில் கருவறைக் கட்டட அமைப்பு பராந்தகச் சோழர் காலத்தை சேர்ந்ததாகும். இக் கோயிலின் கருவறைச் சுவரில் காணப்படும் முதலாம் இராஜராஜசோழனின் கல்வெட்டு மிகவும் வரலாற்றுச் சிறப்புடையது. சோழர் அதிகாரியாகத் திகழ்ந்த வீதி விடங்கள் கம்பன் என்பவன் அளித்த கொடையைக் குறிக்கின்றது. அதனைக் கூறும் பொழுது இராஜராஜசோழனின் தாயார் வானவன்மாதேவி மலையமான் குலத்தை சேர்ந்தவள். அவளைப் புலியை பயந்த பொன்மான் எனப் புகழ்ந்து கூறுகிறது மலையமான் குலத்தோர். தங்கள் குலதெய்வமாக போற்றிய கோயில் இதுவே எனவும் சங்கப் புலவரான கபிலர் பாரி மகளிர் திருமணம் பற்றியும் கூறுவதால் வரலாற்றுச் சிறப்புடையதாக விளங்குகிறது. பாட்டு வடிவில் இக் கல்வெட்டு அமைந்திருப்பதால் இதனைத் திருக்கோயிலூர் பாட்டு எனக் கொள்ளலாம். திருச்சுற்றில் எட்டுக் கரங்களுடன் காட்சி தரும் துர்க்கையின் சிற்பம் அற்புதமானது. தேவியின் விழிகள் மட்டும் வெள்ளையாக அதில் கருமணிகளும் தெரிய இயற்கையாக அமைந்த கல்லிலே சிற்பத்தை வடித்த சிற்பத்தைப் பாராட்ட வேண்டும். அனைவரும் கண்டு வணங்க வேண்டிய தெய்வ வடிவம். சுவாமி கோயிலை அடுத்து தனிக்கோயிலில் சிவானந்த வல்லி என்ற பெயருடன் தேவி அருள்பாலிக்கிறார். அழகே வடிவான தேவி. அட்டவீரட்டங்களில் ஒன்றாகத் திகழும் இக்கொயில் அண்மையில் குடமுழக்குச் செய்யப்பெற்று புதுப்பொலிவுடன் காட்சி தருகிறது .கபிலர் குன்றுவீரட்டானேசுவரர் கோயில் அருகில் ஆற்றின் நடுவில் சிறுகுன்று (பாறை) காணப்படுகிறது. இதனைக் கபிலர் குன்று என அழைக்கின்றனர். சங்கப்புலவர் கபிலரின் நெருங்கிய நண்பரான பாரி, கடையேழு வள்ளல்களில் ஒருவர். மூவேந்தர்களால் அவனது பறம்புநாடு அழிந்துபட, அங்கவை சங்கவை என்ற தன் இரு பெண்களைக் கபிலரிடம் அடைக்கலப்படுத்தி இறந்துவிடுகிறான். பல்வேறு குறுநில மன்னர்களிடம் அப் பெண்களை மணந்துகொள்ளும்படி கபிலர் வேண்டினர். அவர்கள் மறுத்துவிடவே இறுதியாக மலையமான் திருமுடிக்காரியிடம் அப்பெண்களை ஒப்படைத்துவிட்டு கபிலர் உயிர் நீத்தார் என்பதை இலக்கியங்களின் மூலம் அறிகிறோம். திருக்கோயிலூர் வீரட்டானேசுவரரர் கோயிலில் இராஜராஜசோழன் கல்வெட்டில் பாரியின் பெண்களை அடைக்கலப்படுத்திவிட்டு கபிலர் கல்லொன்றில் தீ வளர்த்து உயிர் நீத்தார் என்ற வரலாற்றுச் செய்தி கூறப்படுகிறது. தெய்வக் கவிதை செஞ்சொற்கபிலன்மூரிவண் தடக்கை பாரி தடைக்கலப்பெண்ணை மலையற் குதவிப் பெண்ணைஅலைபுனல் அழவத்து அந்தரிட்சம் செலமினல் புகும் விசும்பின் வீடுபேறெண்ணிகனல்புகும் கபிலக் கல்லது. என்பதே அக்கல்வெட்டு வரிகள் வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கல்லை வரலாற்றுச் சின்னமாகத் தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. நன்றி: அமுதசுரபி கீழையூர் கோவிலுக்கு எதிர்ப்புறம், பகவான் ரமண மகரிஷி திருவருணைக்கு வரும்முன் வந்து தங்கிய இல்லத்தைத் தரிசிக்கும் புண்ணியமும் பெற்றோம். சரியாக மணி நடுப்பகல் 12 ஆயிற்று. கோவில்களில் உச்சி காலப் பூஜைகள் நடைபெற்றிருக்கும் என்பதால் யாத்திரையில் அடுத்த கோவிலுக்கு உடனே செல்ல இயலாது என்ற நிலை வந்தது. என்ன செய்யலாம் என்று நினைப்பதற்குள் அதற்கும் இறைவன் வழி வகுத்துத் தந்தான்.