சிந்தனைகள்~9 நிமிட வாசிப்பு20 ஆண்டுகளுக்கு முன் எழுதியது

கண்டதைச் சொல்கிறேன்

முத்தமிழ் மன்றத்தில் எழுதியது · 10 அக்டோபர் 2006 – 13 ஜனவரி 2007

நான் நேற்றுக் கண்ட இரு காட்சிகள் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். காட்சி ஒன்று: எங்கள் ஊரில் உள்ள சாலைகள் அனைத்தும் குறுகலானவை. மிக அதிகமான மக்கள் நெருக்கம் உள்ள ஒரு ஊர் எங்களுடையது. எப்போதும் ஜன சந்தடி அதிகம் இருக்கும் சாலையில். இந்நிலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், போக்குவரத்தைச் சீரமைக்கவும் பல தெருக்களை ஒருவழிச்சாலையாக மாற்றி இருக்கிறார்கள். இதில் பலர் பலன் பெற்றனர். சிலர் சுற்றிச் செல்வதாக வருத்தப் பட்டனர். இருந்த போதும் விதிமுறையை அனைவரும் பின்பற்ற ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் நேற்று ஒரு 8 அல்லது 9 வயது நிறைந்த பள்ளிச் சிறுமி அந்த ஒருவழிப் பாதை வழியே தனது சிறு மிதி வண்டியை இறங்கித் தள்ளிச் செல்ல முயன்றாள். சாதாரணமாக ஒரு வழிப்பாதையில் வண்டியை ஓட்டிச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். அதே சமயம் தள்ளிச் செல்ல அனுமதிப்பார்கள். அதை நினைத்து அந்தச் சிறுமி செல்லத் துணிந்தாள் போலும். போக்குவரத்துக் காவலர் பொறுமையுடன் இந்த வழியே மிதிவண்டியைத் தள்ளியும் செல்லக் கூடாது என்று கூறினார்! அந்தச் சிறுமிக்கு அருகில் தான் இல்லம் போலும். அவள் கெஞ்சினாள். நம் காவலர்கள் தான் கெஞ்சினால் மிஞ்சுவரே! அதிகார தோரணையில் பேச ஆரம்பித்து விட்டார். தண்டனை தருவார்கள், தண்டம் கட்ட வேண்டும் என்று மிரட்டினார். சுற்றித் தான் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினார். சிறுமியும் வருத்தத்துடன் வண்டியைத் திருப்பினாள். இதையனைத்தையும் நான் பார்த்துக் கொண்டு தான் இருந்தேன்! ஆனால், கதை அதோடு முடியவில்லை. அவள் திரும்பிய அதே நொடியில் நின்ற காவலரை விட அதிக அதிகாரமுள்ள பதவியில் இருந்த ஆய்வாளர் தனது மோட்டார் சைக்கிளில் அதே ஒரு வழியில் சென்றார் பாருங்கள். அப்போது நின்று கொண்டிருந்த காவலர் உடலை விறைப்பாக்கி ஒரு பெரிய சல்யூட்டாக வைத்தார். அப்போது அந்தச் சிறுமி மீண்டும் திரும்பி அந்தக் காவலரைப் பார்த்தாள். அவள் கண்களில் ஏளனம், ஏக்கம், பச்சாதாபம், திருப்தி இவையனைத்தையும் ஒரு சேரக் கண்டேன். சட்டத்தை உருவாக்குபவர்களே அதை மீறும் வரை உலகம் எப்படி உருப்படும் என்றும் நினைத்துக் கொண்டேன். அப்படிக் கண்டதைச் சொல்லிவிட்டேன் உங்களிடம்! நீங்களும் கண்டதைச் சொல்லலாமே இவ்விடம்!

காட்சி இரண்டு: அப்போது பார்த்தது இல்லத்திற்குச் சாப்பிடச் செல்லும் போது! மீண்டும் அலுவலகத்துக்குத் திரும்பும் போது ஒரு நிகழ்ச்சி. இதுவும் சாலையில் தான் நிகழ்ந்தது. சாலையில் வண்டியில் சென்று கொண்டிருந்தேன். ஒரு யுவதியும், அவர் பாட்டியும் நடந்து கொண்டிருந்தனர். இருவரும் பேச்சு சுவாரசியமாகச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் சாலையைக் கடக்கும் இடத்தைத் தாண்டி விட்டார்கள் போலும். அந்தப் பெண்மணி சடாரென சாலையின் குறுக்கே செல்லபார்த்தார்! நல்ல வேளையாக இளவயதுப் பெண் அந்தப் பாட்டியின் கைகளைப் பிடித்துக் கொண்டு அவரைக் கண்டித்ததுடன், சாலையின் இருபுறமும் பார்த்து, போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப் பிடித்து அதை அந்தப் பாட்டிக்கும் சொல்லிப் பொறுமையுடன் சாலையைக் கடந்து அழைத்துச் சென்றார். இந்தக் கால இளைஞர்களுக்குப் பொறுமையில்லை, பொறுப்பில்லை என்ற் யார் சொன்னார்கள்? பொறி தான் வேண்டும் அவர்களுக்கு. பயிர் என்று இருந்தால் களையும் இருக்கும். நம் இளைஞர்களில் பொறுமையாளர்களும், பொறுப்பாளர்களும் நிறையவே இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

வேற்றுமையில் ஒற்றுமை தான் நிலைக்கும் தோழி! ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொன்னாலும், அவரவர் அவரவர் எல்லைக்குள் இருந்து கொள்ளலாம். யாரையும் யாரும் குறை சொல்ல வேண்டியதில்லை. அவரவர்க்கு அவரவர் பண்புகள், பழக்கங்கள் பெரிது. இது தான் நடைமுறைக்கு ஒத்து வரும். அதை விடுத்து ஜாதியே இல்லை, மதமே இல்லை, பால் வேறுபாடே இல்லை என்றால் எப்படி? இது அனைத்துமே உடைந்த கண்ணாடிகள். ஒட்ட வைக்க முயற்சி செய்தால் அசிங்கமாகவும் இருக்கும். கையையும் அறுக்கும். தனித்தனியே முகம் பார்த்துக் கொள்ளலாம்! சம்சாரம் அது மின்சாரம் படம் பார்த்தீர்கள் தானே! அதில் விசு இதைத் தான் செய்திருப்பார்! உடையாமல் இருக்கும் வரை சந்தோசம். பிரிந்து விட்டால் அவ்வளவு தான். அதற்குப் பின் மீண்டும் ஒட்ட வைக்க முடியாது. நீங்கள் சொல்லும் இனம், மதம், ஜாதி, பால் அனைத்தும் ஏற்கனவே உடைக்கப்பட்டு விட்டன. இனி எவ்வாறு ஒட்ட இயலும். தண்ணீரை எத்தனை எத்தனையாகப் பிரித்தாலும் அது தண்ணீர் தான். சமமான பண்பு தான் ஒவ்வொரு துளியும் கொண்டிருக்கும். அது போல் அனைவரும் சமம் என்னும் குணம் தான் வர வேண்டும்.

மனிதரில் என்ன மனிதரில், இந்த உலகில் உள்ள ஒவ்வொரு அணுவும் சமமானது தான். ஒவ்வொன்றிலும் ஒரே அளவுள்ள சக்தி தான் நிறைந்திருக்கிறது. இறைவன் யாரையும் அவ்வாறு படைக்கவில்லை. அவ்வாறு படைத்தால் அவன் இறைவனும் அல்லன். மனிதன் தனக்குள் வைத்துக் கொண்டது தான் இந்த மதம், ஜாதி, இனம் எல்லாம். ஆனால் அன்பொன்றைப் போதிக்காத மதம் ஏதேனும் இங்கு உண்டா? அன்பை மட்டுமே அனைத்து மதங்களும் போதிக்கின்றன. பின் ஏன் இத்தனை மதக் கலவரங்கள்? காரணம் மதங்கள் அல்ல. அதைப் பின்பற்றும் மனிதர்களின் மனங்கள். என் மதம் மட்டுமே உயர்ந்தது என்ற எண்ணம் தான் மனிதன் இன்னொரு மனிதனை மதத்தின் காரணத்தால் அழிப்பது. ஏன் ஏன் ஏன் என்று கேட்டுக் கொண்டே போனால், கடைசியில் எந்த மதச் சண்டைக்கும் வேறு ஒரு தனிப்பட்ட காரணம் இருந்தே தீரும் மதத்திற்கும் அப்பாற்பட்டு. இந்தக் கூத்தைக் கேளுங்கள். இயேசுவை வழிபட மட்டும் 9 மதங்கள் இருக்கின்றனவாம். அவற்றுக்குள் ஏற்படும் சண்டையே பயங்கரமாக இருக்கிறது. இயேசுபிரானைக் கூட வேற்றுமை விட்டு வைக்கவில்லையே. எந்த புத்தர் கடவுள் என்ற ஒருவர் இல்லை. ஆசையை விட்டொழியுங்கள் என்றாரோ, அவரையே கடவுள் என்று துதி பாடவும், சண்டை போடவும், அவர் பெயரால் பணம் சம்பாதிக்கவும் ஒரு கூட்டம் இருக்கிறதே. இந்து மதமும் அவ்வாறே தான். எந்த மதமும் அன்பை மட்டுமே போதிக்கையில் ஏன் இத்தனை சண்டை? ஏன் தெரியுமா? தியாகம் செய்யவும், விட்டுக் கொடுக்கவும் இங்கே யாருமே இல்லை. எல்லோரும் என் மதம், என் இனம், என் குணம், என் இயல்பு இது தான் பெரிது என்று தான் எண்ணுவான். தோழி சிறிது நினைத்துப் பாருங்கள் உங்களால் உங்கள் மதம், இனம், குணம், இயல்பைத் தியாகம் செய்ய இயலுமா? அது என்று இயல்கிறதோ அன்றே இறைத் தன்மைக்கு உயர்கிறோம். சக மனிதனின் கண்ணீரைப் பார்த்ததும் நமக்கும் கண்ணீர் வருகிறதா? சக மனிதனின் சிரிப்பில் நாம் சிரிக்கிறோமா, சக மனிதன் குற்றமிழைத்தாலும் நம்மால் மன்னிக்க முடிகிறதா என்று உள்நோக்கி திருப்புங்கள் கேள்வியை. எங்கள் ஆசிரியர் சொல்வார். நீ யாராவது ஒருவரை நோக்கி நீ தான் காரணம் என்று கை நீட்டினால், மூன்று விரல்கள் உன்னை நோக்கித் தான் இருக்கும். அதே சமயம் இரு கைகளையும் விரித்து நீங்கள் தான் காரணம் என்று சொல்லி கட்டியணைத்துக் கொள் என்பார்! எதிரியை வெல்ல ஒரே வழி அவனை நண்பனாக்கிக் கொள்வது தானே! மேலும் பேசுவோம்.

13 ஜனவரி 2007

நேற்று சென்னையில் கண்டதை உங்களிடம் சொல்லவேண்டும் என்று தோன்றியது! மதியம் மணி 4. தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் எனது வேலையை முடித்துக் கொண்டு வில்லிவாக்கம் வரை செல்ல வேண்டும். சென்னைக்குச் சென்றால் நான் விரும்பி ஏறும் வாகனம் ஆட்டோ தான்! தேனாம்பேட்டையில் இருந்து வில்லிவாக்கம் செல்ல குறைந்த பட்சம் முக்கால் மணி நேரமாவது ஆகும். அரங்கத்திலிருந்து வெளியே வந்தவன், நின்று கொண்டிருந்த ஒரு ஆட்டோவை நோக்கிச் சென்றேன். அருகில் சென்றவுடன் ஆச்சரியத்தில் உறைந்து விட்டேன் என்றால் அது மிகையாகாது! ஆம். அந்த ஆட்டோ ஒட்டுநர் ஜெபமாலையை எடுத்து உருட்டிக் கொண்டிருந்தார்! நிஜம் தான். நம்புங்கள்! ஏறி உட்கார்ந்ததும், சரியான தொகையே சொல்லவே ஏதும் பேரம் பேசவில்லை. சிறிது நேரம் கழித்து அவருடன் பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன். என்ன ஐயா? ஜெபமாலையை உருட்டிக் கொண்டிருந்தீர்களே என்று கேட்டேன். அவர் சொன்னது எனக்கு மேலும் ஆச்சரியத்தை உண்டு பண்ணியது. "இந்த உலகில் கொடிய சக்திகள் அழியவும், நல்ல சக்திகள் பெருகவும் ஜெபமாலை உருட்டுகின்றேன்" என்றார் பாருங்கள். அசந்து போய்விட்டேன். "இப்படி செய்யச் சொல்லி யார் சொன்னாங்க?" என்று கேட்டேன். "யாரும் சொல்லவில்லை. எனக்காய்த் தோன்றியது. செய்கின்றேன்" என்றார் என்னுடைய ஆச்சரியத்தை இன்னும் அதிகப்படுத்த. அதோடு விடவில்லை. "எனது வாகனத்தில் எப்போதும் எண்ணெய் பாக்கெட் இருக்கும். சவாரி இன்றி செல்லும் போது எந்தக் கோவிலைப் பார்த்தாலும் நிறுத்தி பாக்கெட்டிலிருந்து என் கைப்பட விளக்கில் எண்ணெய் ஊற்றி இறைவனை வழிபடுவேன். தீபம் ஏற்றியதும் ஜுவாலையில் உலகின் அனைத்து தீய சக்திகளும் பஸ்பமாகிவிடும்!" என்றார். "நான் மதுராந்தகம். எனக்கு மூன்று குழந்தைகள். 5 ஆட்டோக்களுக்கு மேல் வைத்து ஓட்டிக் கொண்டிருந்த நான், ஏவல், பில்லி சூனியம் என்று எனக்கு வைத்ததால் நடுத்தெருவுக்கு வந்துவிட்டேன். இப்போது இந்த வாடகை ஆட்டோ வாங்கி ஓட்டிக் கொண்டிருக்கின்றேன். ஏவல், பில்லி சூனியம் வைப்பவர்களைப் பார்த்து பரிதாபப்படுகின்றேன். என் சொத்துக்களை வேண்டுமானால் அவர்களால் ஏதாவது செய்ய முடியும். ஆனால், என் உறுதியை அவர்களால் குலைக்க முடியுமா?" என்றார்! "ஏவல் என்று எதை வைத்துச் சொல்கின்றீர்கள்?" என்றேன். "எனக்கு யாரும் சொல்ல வேண்டியதில்லை. எனக்கே தெரிந்தது. நான் வணங்குவது சுதர்சனச் சக்கரம். அந்தச் சக்கரமே ஜுவாலை தான்!" என்றார். "ஜெபமாலை உருட்டும் ஆட்டோக்காரரை இப்போது தான் பார்க்கின்றேன்" என்றேன். "இதெல்லாம் என்ன பிரமாதம்? எனக்குத் தெரிந்து ஒருவர் ராம நாமாவை ஆட்டோ ஓட்ட ஆரம்பித்ததிலிருந்து மாலை வீட்டுக்குச் செல்லும் வரை தியானிப்பார்" என்றார்! சடாரென்று ஆட்டோவை நிறுத்தி, வில்லிவாக்கத்தில் நீங்கள் சொன்ன இடம் வந்து விட்டது என்றார்! அவருடன் பேசிக் கொண்டிருந்ததில் முக்கால் மணிநேரம் போனதே தெரியவில்லை. அந்த மனிதரை என்னால் மறக்கவே முடியாது!

சென்னையில் நடந்த மற்றொரு நிகழ்ச்சி! ஒரு மிகப் பெரிய கடைக்கு (பெயர் வேண்டாமே!) ஒரு பொருளை (நண்பருக்கு டிஜிட்டல் கேமிரா) வாங்குவதற்காகச் சென்றிருந்தோம். அங்கிருந்த ரகங்களைப் பார்த்து அசந்து போய் நிற்கையில் ஒரு கேமிராவை எடுத்து, இதன் விலை என்ன? என்று கேட்டதும் அவர், பில்லோடா? இல்லாமலா? என்று கேட்டார் பாருங்க! அத்தாம் பெரிய கடையில், விலை அதிகமான ஒரு பொருளை வாங்குவதில் மக்கள் எப்படி இதற்கு ஒத்துக் கொள்கின்றார்கள் என்று நினைத்தேன்! அதற்கு கடைக்காரர், 2 ஆண்டு வாரண்டியெல்லாம் உண்டு சார்! நாங்கள் அனைத்தும் தந்து விடுவோம், பில் தவிர என்றார். இன்னும் ஒரு கூத்தும் நடந்தது, சுமார் 15000 ரூபாயை கடன் அட்டையின் மூலம் செலுத்தினார் என் நண்பர். அதையும் வாங்கிக் கொண்டனர்! இதை எவ்வாறு கணக்கு வைப்பார்கள் என்று ஒரு பட்டயக் கணக்காளனான எனக்கே புரியவில்லை! ஹும். மனிதர்கள் எப்படியெல்லாம் இருக்கின்றார்கள்!

மேலும் வாசிக்க

சிந்தனைகள்

சிந்தனைகள்

இன்றைய சிந்தனை - பாத்திரமா? நீரா?

அன்பு நண்பர்களே, எல்லாம் வல்ல இறையாசியுடன் இன்றைய சிந்தனை என்னும் தலைப்பில் தினந்தோறும் ஏதேனும் மனதில் தோன்றும் சிந்தனை விதைகளை விதைக்கலாம் என்றிருக்க…

சிந்தனைகள்

கரையைத் தொட்ட அலைகள்

அலை - 1 நேற்று வீட்டில் அப்போது தான் நுழைந்து கண்ணாடியைக் கழற்றி விட்டு வண்டிச் சாவியைச் சன்னலில் வைத்து விட்டு அமர்கின்றேன். தொலைக்காட்சியில் ஒரு பாட…

சிந்தனைகள்

என்னுடைய ஆசிரியர்கள்

இதோ பார்த்து விட்டேன். தொடங்குகின்றேன். நான் பிறந்தது 1974 ஆகஸ்டு. ஆனால் 1977 ஆரம்பத்திலேயே அதாவது 3 ஆண்டுகள் நிறைவிலேயே என்னைப் பள்ளியில் சேர்த்தார்க…