விருதுபட்டி பொங்கல்
முத்தமிழ் மன்றத்தில் எழுதியது · 10 ஏப்ரல் 2007
அரசியல் மாநாடுகள் இல்லாத அந்தக் காலத்திலேயே மக்கள் சமுதாய ஒற்றுமைக்கு தங்களுக்குத் தாமாகவே நிர்ணயித்துக் கொண்ட சமூக மாநாடுகள் தான் கிராமத்துத் திருவிழாக்கள் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டவன் நான். ஆன்மீகத்தைச் சார்ந்தே பெரும்பாலும் திருவிழாக்கள் இருந்தன என்றாலும் அதன் நோக்கங்களைக் கூர்ந்து நோக்கினால் மக்கள் அனைவரும் பங்கு பெறும் வண்ணம் சந்தைகள், தேரோட்டம், பொருட்காட்சிகள், விநோதமான நேர்த்திக்கடன்கள் என்று பட்டியல் நீள்வதைக் காணலாம். Mass Marketing என்ற கருத்தை அந்த நாளிலேயே நம் முன்னோர்கள் எப்படி சிந்தித்து நியமித்து இருக்கின்றார்கள் என்று எண்ணி வியந்ததுண்டு. மேலும் வறண்ட பகுதிகளில் எல்லாம் அம்மன் பெயரைப் பார்த்தாலே மழை விரும்புவதாக மாரியம்மன் என்றும், வெயிலைச் சமாளிக்க வெயிலுகந்த அம்மன் என்றும் பெயர்கள் இருக்கக் காணலாம். எங்கள் பகுதியில் விருதுநகர் மாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கலும், சிவகாசி மாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கலும், பத்திரகாளியம்மன் கோவில் சித்திரைப் பொங்கலும் மிகவும் விசேஷமானவை. இரண்டு ஊர்களும் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். இது வரை கோவில் விழாவுக்குக் கொடியேற்றுகையில் தூறல் விழுவதும் இதோ இதை எழுதிக் கொண்டிருக்கும் இப்போது கூட மழை பொழிந்து கொண்டிருப்பதும் இறை இருப்பதற்கான சாட்சிகள். இந்த ஆண்டு பங்குனிப் பொங்கலுக்கு விருதுநகர் சென்றிருந்தேன். விருதுநகர் மாரியம்மன் கோபுரம் மற்ற கோபுரங்கள் மாதிரி இல்லாது சற்று முக்கோணமாக வித்தியாசமாக இருக்கும்.
படம் கிடைக்கவில்லை
விருதுநகர் பொங்கல் என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது தீச்சட்டியும் குத்தாட்டமும் தான்! 1 சட்டி, 16 சட்டி, 21 சட்டி, 108 சட்டி என்று நேர்த்திக்கடன் போட்டு நம்பிக்கையுடன் பக்தர்கள் வரும் போது அவர்களின் வைராக்கியம் தெரிந்து புளகாங்கிதம் அடைவதுடன் அந்த நேர்த்திக் கடனையும் நேர்த்தியாய் நிறைவேற்றி வைக்கவும் அம்மன் உதவுவதை நினைத்து ஆச்சரியம் மேலிடும். இதில் கழுத்தில் குழந்தைத் தொட்டிலுடன் தீச்சட்டியும் ஏந்தி அலகு குத்தி முதுகில் கொக்கி போட்டு ஒருவர் அலங்கரித்த ரதத்தை இழுத்துச் சென்றார் பாருங்கள் இப்போது கூட மேனி சிலிர்த்து கண்ணில் நீர் கோர்க்கின்றது.
படம் கிடைக்கவில்லை
அதுவும் சரியாக பள்ளி ஆண்டு விடுமுறை நாட்களிலேயே இந்தத் திருவிழாக்கள் அமைந்திருப்பதால் பள்ளிக் குழந்தைகளுக்குக் கொண்டாட்டமும் குதூகலமும் எல்லை இல்லாதிருக்கும். விருதுநகரிலேயே மிகப் பெரிய திடல் இருக்கும் பள்ளியான காமராஜர் வித்யாசாலாவில் பொருட்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஒரு நபருக்கு 15 ரூபாய் நுழைவுக் கட்டணம் என்றதும் சற்று அதிகமாகத் தான் தோன்றியது. ஆனால் உள்ளே நுழைந்ததும் இருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்ததும் அட! இந்தக் கட்டணம் குறைவு போலிருக்கின்றது என்ற நினைவு தோன்றி விட்டது. இந்தப் பொருட்காட்சி நடத்துவதால் கிடைக்கும் மொத்த லாபமும் பள்ளி வளர்ச்சிக்கே செல்கின்றது. இது போன்ற நிகழ்ச்சிகளும் விருதுநகர் மாவட்டம் தொடர்ந்து 18 ஆண்டுகளாக மாணவர் தேர்ச்சியில் தமிழகத்தில் முதலிடம் வகிப்பதற்கான காரணமாய் இருக்கக் கூடும். உள்ளே நுழைந்ததும் கருத்தைக் கவரும் வண்ணம் சப்தகிரி மனவளர்ச்சி குன்றிய பள்ளியினர் செய்திருந்த கலைப் பொருட்களைப் பார்வையில் வைத்திருந்தனர். மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளை என்ன செய்ய வேண்டும் என்று தெரியாதவர்கள் நிச்சயம் உள்ளே நுழைந்து வெளியே வந்தால் மன நிம்மதி அடைவார்கள். ஒருபுறம் சினிமா பாடல் கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருக்க, ஒரு புறம் பெரிய திரையில் விளம்பரங்கள் ஓடிக் கொண்டிருக்க, நூற்றுக் கணக்கான கடைகளில் கூட்டம் முண்டியடித்தது. இந்த டில்லி அப்பளத்திலும் மாங்காயிலும் அப்படி என்ன தான் இருக்குமோ? அந்தக் கடைகளில் கூடுதல் கூட்டம்! சரியென்று ராட்டினங்கள் பகுதிக்குச் சென்றோம். அங்கே தலை சுற்றுமளவுக்கு இந்த ஆண்டு ராட்டினங்கள் நிறுவப் பட்டிருந்தன. அதிலும் குறிப்பாக இந்த இரண்டு ராட்டினங்களும் கிறுகிறுப்பை உருவாக்கியது. நல்லவேளை நான் ஏறவில்லை. என் மகள் மட்டும் ஜெயிண்ட் வீல் எனப்படும் பெரிய சக்கர ராட்டினத்தில் ஏறினாள்.
படம் கிடைக்கவில்லை
வலது புறம் தெரியும் இந்த கடிகார முள் போன்ற ராட்டினத்தில் சுமார் 50 பேரை அப்படியே தலைகீழாக சில விநாடிகள் நிற்க வைக்கின்றனர். கீழே இருந்து பார்க்கும் நமக்கே தலை சுற்றுகின்றது!
படம் கிடைக்கவில்லை
இந்த ராட்டினத்தில் ராட்சச ஊஞ்சல் போல் ஊசலாடிக் கொண்டே உள்ளுக்குள் சுற்றிக் கொண்டிருந்தது. பக்கத்தில் போவதற்குள் அங்கிருந்து மக்கள் கிளப்பும் சத்தத்திலேயே பாதி கிறக்கம் வந்து விடுகின்றது. என் மகள் ஏறுவேன் என்று அடம் பிடித்தாள். அவள் வயதுக்காரர்களை ஏற்ற மறுத்ததால் நிம்மதி அடைந்தேன். பின் குதிரை ராட்டினம், மான் வண்டி, தவளை ராட்டினம் என்று குழந்தைகளை ஏற்றி குதூகலப் படுத்தினோம்.
3 படங்கள் கிடைக்கவில்லை
அதோடு விடுவோமா, சின்னதாக ஒரு ஷாப்பிங்கையும் முடித்துக் கொண்டு வீட்டுக்குச் சென்று அக்கடா என்று படுக்கும் போது மணி நள்ளிரவு 1. ஒன்றை மறந்து விட்டேனே! கட்டிளங் காளையர்கள் பலர் வாழ்க்கை என்னும் சக்கரத்துக்குள் சிக்குவதும் இந்தப் பொங்கல் காலத்திலேயே நிச்சயிக்கப்படும்! மொத்தத்தில் திருவிழாக்கள் அனைத்து தரப்பினரையும் சந்தோசப் படுத்துவதால் வேண்டும் வேண்டும் திருவிழாக்கள் இன்னும் என்றே கேட்கத் தூண்டுகின்றது. அடுத்து சிவகாசி சித்திரைப் பொங்கலின் போது இன்னும் எழுதுகின்றேன்.