கணினி~23 நிமிட வாசிப்பு19 ஆண்டுகளுக்கு முன் எழுதியது

வேத(க)க் கணிதம்

முத்தமிழ் மன்றத்தில் எழுதியது · 22 மே 2007 – 15 ஜூன் 2007

அன்பர்களே,

  1. அது நான் பட்டயக் கணக்காளர் படிப்பு படிக்கின்ற நேரம். சென்னையில் ஒரு பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு மூன்று மாதங்களாய் நானும் என் நண்பர் ஒருவரும் சேர்ந்து சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் எதிரே பேச்சிலர்களின் சொர்க்கமாய்த் திகழும் திருவல்லிக்கேணி மேன்சன்களில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தோம்!
  2. எங்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் வேலைக்குச் செல்பவர்கள். இசையும், கூத்தும் கும்மாளமாகவும் இருக்கும்! அந்தச் சமயத்தில் தான் லேண்ட்மார்க் கடையில் ஒரு ஆங்கிலப் புத்தகம் என் கண்ணை ஈர்த்தது. அதை எழுதியவர் ஜகத்குரு சுவாமி ஸ்ரீ பாரதி கிருஷ்ண தீர்த்த மகராஜ் (1884-1960). புத்தகத்தின் பெயர் வேதக் கணிதம் (Vedic Mathematics). சிவப்பு நிற அட்டைப் படத்துடன் வேறெந்த வெளிப்பகட்டும் இன்றி எளிமையாய் இருந்த அந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்து சும்மா திருப்பிப் பார்த்தேன். சரி. வேதத்தில் கணிதம் பற்றி அப்படி என்ன தான் சொல்லி இருக்கப் போகின்றது என்று தெரிந்து கொள்ளும் ஒரு ஆவலில் வாங்கினேன். பொழுது போகாமல் வாசிக்க ஆரம்பித்தவன் வியந்து போய் கொஞ்சம் ஆழ்ந்து தான் போனேன். சிருங்கேரிக் காடுகளில் 8 ஆண்டுகளாகச் சுற்றித் திரிந்தும், கடுமையான தவத்தினாலும், அதர்வண வேதத்தினைத் தெளிந்து ஐயமறக் கற்றும் உணர்ந்து 16 கணித சூத்திரங்களை வேதத்திலிருந்து எடுத்து அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் மிக எளிதாக ஒரு சிறு குழந்தைக்குக் கற்றுத் தருவது போல் விளக்கி இருக்கும் இந்த ஞானி மொத்தக் கணித உலகுக்கே ஒரு வரப்பிரசாதம் தான் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. இந்தத் திரி முடிவுறும் போது நீங்களும் அதை உணர்வீர்கள்! இது வேதக் கணிதம் மட்டும் இல்லை. வேகக் கணிதம் என்பதாலும் வேத(க)க் கணிதம் என்று பெயர் சூட்டியிருக்கின்றேன். அனைத்துமே மனதாலேயே செய்யக் கூடிய கணித முறைகள் ஆகும். எளிய சூத்திரங்களின் மூலம் கணிதத்தில் அவர் தொட்டுள்ள சில பகுதிகளாவன: Arithmetic, Algebra, Geometry – plane and solid, Trigonometry – plane and spherical, Conics – geometrical and analytical, Astronomy, Calculus – differential and integral etc. அப்போது புத்தகம் வாயிலாகவே ஏகலைவனாகக் கற்ற அந்தக் கணித முறையை இன்றும் நான் உபயோகிக்கின்றேன்! பென்சிலோ காகிதமோ இன்றி மனத்தின் மொத்த மகிமையையும் உணர்த்தும் இந்தக் கணித முறையை நம் தமிழ் இளை(ணை)ய சமுதாயத்திற்கு வழங்கும் நோக்குடன், ஆசிரியராய் நம் குருவை மனத்தில் நிலை நிறுத்தி இந்த வேதக் கணிதப் பாடத்தைத் துவங்குவோமா?

பாடம் துவங்கும் முன்பே இக்கணித முறைகள் உயர்நிலைப்பள்ளிக் கணித அளவுக்குக் கூட இல்லை. அவற்றைப் பள்ளிகளில் நடத்தக் கூடாது என்று பல இந்தியக் கணித மேதைகளே கையெழுத்து இட்டு மனுவும் கொடுத்து கற்றுக் கொடுக்காமலேயே நிறுத்தவும் பட்டது! அதையும் இங்கே (http://www.sacw.net/DC/CommunalismCollection/ArticlesArchive/NoVedic.html) காணலாம். ஆகவே இதைக் கண்டிப்பாய்க் கற்க வேண்டும் என்றோ அல்லது இதுவே சிறந்த முறையென்றோ நான் கூற வரவில்லை! ஒரு சாதாரண மனிதன் என்ற நிலையில் கணிதம் பற்றி அவ்வளவாய் அறியாதவனாய் இருந்த போதிலும், நடைமுறைக் கணிதத்தை எளிய முறையில் இந்தப் புத்தகம் எனக்குப் போதித்தது. அதை உங்களுக்கும் அறியச் செய்யவே இங்கு இடுகின்றேன். அனைவரும் நடைமுறையில் உபயோகிக்கும் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், வர்க்கம் காணல், வர்க்கமூலம் காணல், கனமூலம் காணல் போன்றவற்றை இங்கே காண்போம்.

இவர் தான் வேதக் கணிதப் புத்தகத்தை எழுதிய குரு ஆவார். பூரி, கோவர்த்தன மட பீடாதிபதியாய் விளங்கிய பெருமைக்குரியவர்.

படம் கிடைக்கவில்லை

நான்கு வேதங்கள் பற்றி அறிந்திருப்பீர்கள். ரிக், யஜூர், சாம, மற்றும் அதர்வண வேதங்கள் என்று. ஒவ்வொன்றுக்கும் உப வேதமும் உண்டு. அவையாவன: ஆயுர் வேதம், காந்தர்வ வேதம், தனுர் வேதம், ஸ்தாபத்ய வேதம் ஆகியனவாகும். இதில் ஸ்தாபத்ய எனப்படும் கட்டிட மற்றும் பொறியியல் வேதத்தினைச் சார்ந்தது இந்தக் கணித முறையாகும்.

சரி. இப்போது நேரடியாய் பாடத்திட்டத்துக்குள் நுழையலாம். இந்தக் கணித முறைகளில் சில சிறப்பு எண்களின் கணிதத்தை எப்படிச் செய்வது என்பதை முதலில் காணலாம். அதாவது இவை எல்லா எண்களுக்கும் பொதுவானவை அல்ல. சில சிறப்பு வகை கணிதங்கள். உதாரணத்துக்கு 50 x 10 என்றால் நாம் பெருக்கிப் பார்ப்பதெல்லாம் இல்லை உடனே ஒரு பூஜ்ஜியத்தை முன்னால் சேர்த்து 500 என்று சொல்லி விடுகின்றோம். ஆனால் அதற்காக 50 x 11 என்றால் ஒன்றைச் சேர்த்து 501 என்று சொல்லலாம் என்ற அர்த்தம் அல்ல என்பது தெரியுமல்லவா? சரி இப்போது 1/19, 1/29, 1/39, 1/49, 1/59, 1/69 ... என்று வகுபடும் எண் 1 ஆகவும், வகுக்கும் எண் 9ல் முடிவடைந்தும் இருக்கும் சிறப்பு எண்களின் பின்னங்களை எப்படிக் கண்டறிவது? இதற்குண்டான சூத்திரம் தான் "ஏகாதிகேன பூர்வேனா" அதாவது தமிழில் மொழி பெயர்த்தால் "முந்தைய எண்ணை விட ஒன்று அதிகம்" என்று பொருள் படும்! நாம் கண்டறியும் எண் ஒரு மந்திரச் சாவி ஆகும்! 19 என்ற எண்ணில் முந்தைய எண்ணை விட ஒன்று அதிகம் எது? அதாவது 9ஐ விட்டுவிட்டு முந்தி இருக்கும் எண் 1. அதனுடன் ஒன்றைக் கூட்டினால் கிடைப்பது 2. அப்படியானால், 29 க்கு 3, 39க்கு 4... இப்படியே செல்லும்! அதாவது 9 என்று முடியும் எண்ணுக்கு முந்தைய எண்ணுடன் ஒன்றைக் கூட்டிக் கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு 1/19 எடுத்துக் கொள்வோம். இப்போது நமது மந்திர எண் 2 ஆகும். இரு முறைகளில் 1/19க்கான விடையைக் கண்டறியலாம்! அதாவது இந்த மந்திர எண்ணால் 1 ஐ வகுத்தும், அல்லது இந்த மந்திர எண்ணால் 1ஐப் பெருக்கியும் ஆகும்!. முதலில் பெருக்கியே கண்டுபிடிப்போம். முதலில் நாம் இட வேண்டிய எண்: 1 (வகுபடும் எண்) பின் அதை நமது மந்திர எண்ணால் பெருக்கி அதை அதற்கு முன்னால் இடுங்கள்.

இப்போது நமக்குக் கிடைப்பது 21
அடுத்து இந்த இரண்டை 2 ஆல் பெருக்கி அதற்கு முன்னால் இடுங்கள்
அதாவது 421
அடுத்து இந்த 4ஐ 2 ஆல் பெருக்கி அதற்கு முன்னால் இடுங்கள்
அதாவது 8421.

அடுத்து தான் கவனம் தேவை! 8ஐ 2 ஆல் பெருக்கும் போது நமக்குக் கிடைப்பது 16. ஆனால் நாம் ஒரு எண் மட்டுமே இட வேண்டும். எனவே 6 ஐ மட்டும் இட்டுக் கொண்டு மனதுள் 1ஐ வைத்துக் கொள்ளுங்கள்! இப்போது நாம் இட வேண்டியது 68421. (மனதில் 1) அடுத்து வழக்கம் போல் 6 ஐ 2 ஆல் பெருக்கினால் நமக்குக் கிடைப்பது 12 ஆகும். ஏற்கனவே நாம் மனதில் 1 வைத்திருக்கின்றோம் அல்லவா? அதை இந்த 12 உடன் கூட்டுங்கள். கிடைப்பது 13. இப்போது 3 ஐ இட்டு விட்டு ஒன்றை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். 368421 (மனதில் 1) அடுத்து 3 ஐ 2 ஆல் பெருக்குங்கள். கிடைப்பது 6. ஏற்கனவே மனதில் இருக்கும் 1 ஐயும் கூட்டி 7 என்று இடலாம். 7368421 அடுத்து இந்த 7 ஐ 2 ஆல் பெருக்குங்கள். கிடைப்பது 14. 4 ஐ இட்டு விட்டு 1ஐ மனதுள் வைத்துக் கொள்ளவும். 47368421 (மனதில் 1) அடுத்து இந்த 4 ஐ 2 ஆல் பெருக்கக் கிடைப்பது 8, மனதில் இருக்கும் 1 ஐக் கூட்ட கிடைப்பது 9.

947368421
இதே முறையை இப்படியே தொடர்ந்தால்,
8947368421 (மனதில் 1)
78947368421 (மனதில் 1)
578947368421 (மனதில் 1)
1578947368421 (மனதில் 1)
31578947368421
631578947368421
2631578947368421 (மனதில் 1)
52631578947368421
052631578947368421 (மனதில் 1)

இப்போது நாம் 0 ஐ 2ஆல் பெருக்கக் கிடைப்பது 0 மனதில் இருக்கும் 1 உடன் கூட்டினால் நாம் முன்பே ஆரம்பித்த 1 என்று இட வேண்டும். அப்போது கிடைப்பது, 1052631578947368421 என்று வரும். இனி மீண்டும் 1 ஐ 2 ஆல் பெருக்க 2 என்று Recurring Fraction துவங்கி விடும். அதாவது 1/19 க்கு 18 எண்கள் தொகுதி தொகுதியாய் வர ஆரம்பித்து விடும்! இந்தப் பதினெட்டு எண்களையும் 19ஐக் கொண்டு வகுக்காமலேயே நாம் கண்டு கொண்டோம்! இப்போது கடைசியாய் சேர்த்த 1ஐ நீக்கி விட்டு வரிசையாய் இட்டு விடலாம்! இப்போது 1/19 = .052631578947368421... ஆகும். அது அப்படியே மீண்டும் மீண்டும் தொடர ஆரம்பித்து முடிவிலாது சென்று கொண்டே இருக்கும். (விடை சரிதானா என்று கணினியின் கால்குலேட்டரில் போட்டுப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்! ;) ) இதை நமக்குச் சொல்லிக் கொடுத்த முறைப்படிப் போடுவதாய் இருந்தால் கீழ்க்கண்டவாறு இருக்கும்!

படம் கிடைக்கவில்லை

நான் சொல்லிக் கொடுக்கும் முறை புரிகின்றதா என்று சொன்னீர்களேயானால் நான் தொடர வசதியாய் இருக்கும்.

நன்றி நண்பர்களே! புரியவில்லை என்றால் முறையில் கோளாறு இல்லை நடையில் தான் கோளாறு என்று அர்த்தம். எனவே திருத்திக் கொள்ளலாம்! இப்போது அதே கணிதத்தை வகுத்துக் கண்டுபிடிப்போம்! வகுக்க வேண்டிய எண் 1: வகுபடு எண்: நம் மந்திரச் சாவி எண்ணான 2. பெருக்கும் போது ஒவ்வொரு எண்ணாக பின்னுக்கு இட்டு வந்தோமல்லவா? இப்போது முன்னுக்கு இட வேண்டும்! அவ்வளவு தான்! 1 ஐ இரண்டால் வகுக்கக் கிடைக்கும் ஈவு 0 மீதி 1. இப்போது 0 என்ற ஈவை இட்டு விட்டு 1 ஐ மனதில் நினைத்துக் கொள்ளவும். 0 (மனதில் 1) இப்போது இந்த மனதில் இருக்கும் 1 ஐயும் இட்ட பூஜ்ஜியத்தையும் சேர்த்து 10 ஆக்கி அதை இரண்டால் வகுக்கவும்! கிடைக்கும் 5 ஐ அடுத்து இடவும். 05 அடுத்து இந்த 5 ஐ இரண்டால் வகுக்கக் கிடைப்பது 2.மீதி 1 மனதில் வழக்கம் போல்! 052 (மனதில் 1) அடுத்து இந்த 2 க்கு முன் மனதில் இருக்கும் 1 ஐச் சேர்த்து 12 ஆக்கி அதை 2 ஆல் வகுங்கள். கிடைப்பது 6.

0526
அடுத்து 6 ஐ 2 ஆல் வகுக்கக் கிடைப்பது 3
05263
அடுத்து 3 ஐ 2 ஆல் வகுக்கக் கிடைப்பது 1 மீதி 1 மனதில்!
052631 (மனதில் 1)
அடுத்து 11 ஐ 2 ஆல் வகுக்கக் கிடைப்பது 5 மீதி 1 மனதில்!
0526315 (மனதில் 1)
இப்படியே தொடர்வோம்!
05263157 (மனதில் 1)
052631578 (மனதில் 1)
0526315789
05263157894 (மனதில் 1)
052631578947
0526315789473 (மனதில் 1)
05263157894736 (மனதில் 1)
052631578947368
0526315789473684
05263157894736842
052631578947368421

இப்போது மீண்டும் 1 ஐ 2 ஆல் வகுக்க நேரிடுகின்றது அல்லவா? எனவே தொகுதியைக் கண்டறிந்து விட்டோம் என்று பொருள் ஆகும்! இப்போது அப்படியே எழுதலாம்! 1/19 = .052631578947368421 என்று! இப்போது இன்னும் ஒரு எளிய முறை சொல்லித் தருகின்றேன்! பாதி கண்டறிந்து விட்டாலே போதும்! அதாவது 1/19 க்கு தொகுதிக்குத் தேவையான எண்கள் 18 (அதாவது 19 - 1 = 18). இப்போது நம் எண்களை பாதி பாதியாகப் பிரியுங்கள்! 052631578 947368421 இந்த இரண்டு எண்களையும் கூட்டினால் 999999999 என்று வருகின்றதா! எனவே முதல் 9 எண்களைக் கண்டறிந்து விட்டால் அடுத்த 9 எண்களை 9 இலிருந்தே கழித்தே அறிந்து கொள்ளலாம்! வேலை பாதியாகி விட்டதா?! எனவே எண்ணிக் கொண்டே வாருங்கள், முதல் 9 எண்கள் கண்டறிந்ததும் அடுத்த 9 எண்களை 9 லிருந்து கழித்துக் கழித்தே நிரப்பி விட முடியும்! இன்னும் அதிசயம் காண வாருங்கள்!

சரி. இதை அப்படியே 1/29 க்கும் கண்டறிய முடியுமா?
நிச்சயம் முடியும்!
முதலில் வகுக்கும் முறையில் காணலாம்!
நாம் கண்டறிய வேண்டிய வகுக்கும் எண்: 1

மந்திரச்சாவி எண்: 3 (அதாவது 29ல் 9க்கு முந்தி இருக்கும் 2 ஐ விட ஒன்று அதிகம்- சூத்திரப்படி) கண்டறிய வேண்டிய எண் தொகுதி : 28 (அதாவது 29 - 1. எனவே 28 வரும் வரை காத்திருங்கள். வந்தவுடன் நிறுத்திக் கொள்ளலாம்! அடுத்து 9லிருந்து கழித்துக் கழித்து நிரப்பி விடலாம்!)

தொடங்குவோம்!
0 (மனதில் 1)
03 (மனதில் 1)
034 (மனதில் 1)
0344 (மனதில் 2)
03448
034482 (மனதில் 2)
0344827 (மனதில் 1)
03448275 (மனதில் 2)
034482758 (மனதில் 1)
0344827586
03448275862
034482758620 (மனதில் 2)
0344827586206 (மனதில் 2)
03448275862068(மனதில் 2)
இதோ 28 வந்து விட்டது!

எனவே அடுத்த 14 எண்கள் ஒவ்வொரு எண்ணையும் 9 லிருந்து கழித்து அப்படியே எழுதலாம்!

99999999999999
03448275862068
--------------------
96551724137931
எனவே 1/29 = 0344827586206896551724137931

இப்போது பெருக்கல் முறையில் சரிபார்த்துக் கொள்ளுங்கள்! 1 ஐ மந்திர எண் 3 ஆல் பெருக்கி! அல்லது நமது வழக்கமான முறையான கீழ்க்கண்டது போல் 29 ஆல் வகுத்துச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். ;)

படம் கிடைக்கவில்லை

இப்படியே 1/39 க்கு 4 ஐ வைத்து, 1/49க்கு ஐந்தை வைத்து என்று கண்டுபிடித்துப் பாருங்கள். எத்தனை எளிமை என்று புரியும்! தொடர்வோமா?!

23 மே 2007

அப்படியே செய்வோம் விவேக். இந்த 1/19,1/29,1/39 ஆகியவற்றை இன்று முடித்து விட்டு நாளை அடுத்தது துவங்குவோம்! 1/39 ஒரு எளிய எண். (39 - 1 = 38 வரும் வரை காத்திருங்கள் அல்லது மீண்டும் 1 வருகின்றதா என்று பாருங்கள்!)

வகுக்க வேண்டிய எண் : 1
மந்திர எண்: 4 (3 ஐ விட 1 அதிகம்)
பெருக்குவோமா?
1
41
641 (மனதில் 1)
5641 (மனதில் 2)
25641 (மனதில் 2)
025641 (மனதில் 1)
1025641

ஹுர்ரே! 1 வந்து விட்டது! எனவே இந்தத் தொகுதிக்கு 6 எண்கள் தான்! எனவே 1/39 = 025641 025641 025641 ... என்று முடிவில்லாமல் செல்லும்! அடுத்து 1/49 பார்ப்போம். (49 -1 = 48 என்று கணக்கிடும் போது வருகின்றதா என்று பார்க்க வேண்டும். வந்து விட்டால் அதோடு நிறுத்திக் கொண்டு, 9 இலிருந்து கழித்தே இட்டு விடலாம்!)

பெருக்க வேண்டிய எண் : 1
மந்திர எண்: 5
தொடங்குவோமா?
1
51
551 (2)
7551 (2)
77551 (3)
877551 (3)
3877551 (4)
93877551 (1)
693877551 (4)
4693877551 (3)
34693877551 (2)
734693877551 (1)
6734693877551 (3)
336734693877551 (3)
8336734693877551 (1)
18336734693877551 (4)
918336734693877551
5918336734693877551 (4)
95918336734693877551 (2)
795918336734693877551 (4)
9795918336734693877551 (3)

89795918336734693877551 (4) நிறுத்துங்க நிறுத்துங்க! 48 வந்துருச்சா?! அப்போ பாதி கண்டு புடிச்சிட்டோம்னு அர்த்தம்! அடுத்து 9ல இருந்தே கழித்து விடலாம்!

9999999999999999999999
9795918336734693877551
-------------------------------
0204081663265306122448

எனவே 1/49 = .02040816632653061224489795918336734693877551... இந்த எண் தொகுதி அப்படியே முடிவில்லாமல் நீளும்! புரிய வில்லை என்றால் எங்கே புரியவில்லை என்று தயங்காமல் கேளுங்கள் நண்பர்களே! அனைத்தும் புரிந்தது என்றால் அடுத்த பாடத்துக்கு விரைவோம்!

இப்போது சற்று எளிதான பெருக்கல் கணக்குகளுக்குச் செல்வோம். இது புது முறை பெருக்கலாகும். இதற்கான சூத்திரம் இது தான். 'நிகிலம் நவதஸ்கர்மாம் தஸதா' 'தமிழில் எல்லா எண்களும் ஒன்பதிலிருந்தும் கடைசி எண் மட்டும் பத்திலிருந்தும்'

சரி எப்படிப் பெருக்குவது?
உதாரணத்துக்கு இரண்டு எண்கள் எடுத்துக் கொள்வோம்!
9, 7 இதைப் பெருக்க வேண்டும்.
முதலில் 10 ஐ அடிப்படையாய்க் கொள்ளுங்கள்!

10 லிருந்து இந்த எண்களைக் கழியுங்கள். அந்த மீதியை இப்படி எழுதிக் கொள்ளுங்கள். அதாவது 9 - 10, 7 - 10 எனவே -1, -3 என்று போட்டுள்ளோம்.

9 - 1
7 - 3
இப்போது இந்தப் படத்தைப் பாருங்கள்.

படம் கிடைக்கவில்லை

முதல் எண் (-1) * (-3) அதாவது 3. அடுத்த எண் குறுக்குமுறைக் கூட்டல் அதாவது (9 - 3) அல்லது (7 - 1) அதாவது 6. எனவே விடை 63! இது பார்க்க வேடிக்கையாய் உங்களுக்குத் தோன்றலாம். அடுத்து பாருங்க!

அடுத்து 91, 92 ஐப் பெருக்குவோம். இதே முறையில்! இப்போது நாம் எடுத்துக் கொண்ட அடிப்படை எண் 100. எனவே 100 க்கும் 91 க்கும் உடைய இடைவெளியை -9, -8 என்று இட்டுள்ளோம். இனி -9 x -8 = 72 இது முதலாகவும். 91-8 அல்லது 92-9 அதாவது 83 அடுத்த எண்ணாகவும் இட்டு விட்டால்,

படம் கிடைக்கவில்லை

91 x 92 = 8372 இப்போது புரிகின்றதா எத்தனை எளிதென்று?

இந்த இரண்டு எண்களுமே ஒன்றுக்கொன்று நெருக்கமாயும், மேலும் 100 அல்லது 10க்கு அருகிலும் இருப்பதைக் கவனியுங்கள். அப்படிப்பட்ட சிறப்பு எண்கள் யாவையும் இப்படிப் பெருக்க முடியும்! உதாரணமாய் 999, 991 என்று வைத்துக் கொள்ளுங்கள்! அதாவது 1000க்கு அருகிலும், இரண்டு எண்களும் அருகருகிலும் இருப்பது!

படம் கிடைக்கவில்லை

எனவே 999 x 991 = 990009 என்று எளிதாய்க் காண முடிகின்றதா? -1 x -9 = 9 இதில் முன்னே இரண்டு பூஜ்ஜியங்கள் இருப்பதைக் கவனியுங்கள். இதற்குக் காரணம் நாம் 1000 அடிப்படையாய் எடுத்திருப்பதே! இனி சில உதாரணங்களைக் காண்போம்!

இப்போது இந்த எண்களைப் பாருங்கள்.
88 ,91
100 ஐ அடிப்படையாய்க் கொள்வோம்!

படம் கிடைக்கவில்லை

இதில் 12 x 9 = 108 ஆனால் நாம் அடிப்படையாய்த் தேர்ந்தெடுத்தது 100 எனவே இரண்டு எண்களுக்குத் தான் இடமுண்டு. எனவே அதிகமுள்ள 1 ஐ முன்னிருக்கும் 79 உடன் கூட்டி 80 ஆக்கிக் கொண்டால் 88 x 91 = 8008. எதுவும் கடினமென்றால் சொல்லுங்கள். விளக்குவோம்!

24 மே 2007

அடுத்து 111,112 ஐப் பெருக்குவதும் அதே முறையில் செய்யலாம். இப்போதும் 100ஐ அடிப்படையாகக் கொள்ளலாம். முன்பு 100 லிருந்து வித்தியாசத்தை எதிர்மறையில் (-) இல் போட்டோமல்லவா? இப்போது (+) ஆகவே போடலாம். எனவே குறுக்குக் கழித்தல் அல்ல குறுக்குக் கூட்டல்!

படம் கிடைக்கவில்லை

இந்தப் படத்தினைப் பார்த்தால் புரிகின்றது அல்லவா? 111 x 112 = 12432 என்று போட்டு விடலாம் தானே?

அடுத்து 41,42 ஆகிய எண்களை எப்படிப் பெருக்குவது என்று பார்ப்போம்! இது 100 லிருந்து கழிப்பதற்குச் சும்மா இருந்து விடலாம்! ஏனென்றால் 59 x 58 கண்டு பிடிக்க வேண்டி இருக்கும் அப்புறம்! எனவே 10 ஐ அடிப்படையாய் வைத்துக் கொள்ளலாம். அதாவது (10 x 4) = 40 எனவே 40 ஐ அடிப்படையாகக் கொண்டு கணக்கை ஆரம்பிப்போம். கீழே உள்ள படத்தைப் பாருங்கள். அதில் உள்ள ஒரே வித்தியாசம், நாம் கணக்கைக் கண்டறிந்த பின் அதை மீண்டும் 4 ஆல் பெருக்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அது 10ன் மடக்கையாக இருக்கும்!

படம் கிடைக்கவில்லை

எனவே 41 x 42 = 1722 என்று எழுதி விடலாம்!

404, 406 என்று எடுத்துக் கொள்வோம்! 100 ஐ அடிப்படையாகக் கொள்ளலாம். (100 x 4)

படம் கிடைக்கவில்லை

மேற்கண்ட படத்தைப் பாருங்க. 404 x 406 = 164024 என்று உடனே எழுதி விடலாமே!

இது வரை ஒன்றுக்கொன்று அருகில் இருந்த எண்களையே பெருக்கி வந்தோம். இப்போது கொஞ்சம் தள்ளி இருக்கும் எண்களையும் பெருக்கிப் பார்ப்போம்! உதாரணமாய் 92,101 என்று வைத்துக் கொள்ளுங்கள்! இப்போதும் 100 ஐயே அடிப்படையாய் வைத்துக் கொள்ளலாம்! இதில் ஒன்று 100க்கு மேலேயும், ஒன்று 100க்குக் கிழேயும் உள்ளது. எனவே -8 , +1 என்று வரும்! கீழே இருக்கும் படத்தைப் பாருங்கள். (92 + 1) என்று வருவதில் 93 லிருந்து ஒன்றினை வலப்பக்கம் கொண்டு வந்தால் அது 100 ஆகி விடும். அதிலிருந்து 08 ஐக் கழிக்க 92 என்று வந்து விடும்.

படம் கிடைக்கவில்லை

எனவே 92 x 101 = 9292 என்று எளிதில் போட்டு விடலாம். இது ஒரு மிகப் பெரிய எண்ணுக்கும் காண வியலும்! உதாரணமாய் 999995 x 1000005 என்ற சிறப்பெண்ணை எடுத்துக் கொள்வோம்! இதற்கு அடிப்படையாய் 1000000 ஐ எடுத்துக் கொள்ளலாம்! 1000000 லிருந்து 25 ஐக் கழிக்கும் போது தான் நம் சூத்திரம் உதவும்! அதாவது முதல் எண் மட்டும் 10 லிருந்தும் அடுத்த எண்களெல்லாம் 9 லிருந்தும் கழிக்க வேண்டும்! எனவே 000025 ஐ 1000000 லிருந்து கழிக்கும் போது முதல் எண்ணான 5 ஐ மட்டும் 10 லிருந்து கழித்து விட்டு பின் அனைத்தையும் 9 லிருந்து கழித்து அப்படியே எழுதலாம்!. கீழ்க்கண்ட படத்தை பாருங்கள்.

படம் கிடைக்கவில்லை

இதிலிருந்து 999995 x 1000005 = 999999999975 என்று எழுதி விடலாம் பெருக்காமலேயே! சரி இவையெல்லாம் சிறப்பெண்களின் பெருக்கலே. இப்படிப் பட்ட எண்கள் வந்தால் இப்படிப் பெருக்கலாம். அடுத்த சிறப்புப் பெருக்கலைக் காண்போம்! எனவே இரண்டு எண்களைப் பெருக்க வேண்டுமெனின் மனதிலேயே ஏதேனும் ஒரு முறையைத் தேர்ந்தெடுக்கும் வகையில் மூன்று முறைகள் இருக்கின்றன. அவற்றில் ஏதேனும் ஒரு முறையை நம்மால் தேர்ந்தெடுத்துப் பெருக்க முடியும்! அடுத்த முறையைக் காண்போமா இனி?

அடுத்ததாக நாம் எடுத்துக் கொள்ளும் சிறப்பெண்களைப் பாருங்கள்! 46 x 44, 37 x 33, 32 x 38, 75 x 75 இந்த வகை எண்களின் கடைசி எண்களின் கூட்டுத் தொகை 10 (6+4, 7+3, 2 + 8, 5 + 5) ஆகவும், அதே சமயத்தில் தசம தானத்தில் இருக்கும் எண்கள் ஒரே எண்களாகவும் (4,3,3,7) இருக்கும் பட்சத்தில் அவற்றைப் பெருக்குவது மிக எளிது! 46 x 44 ஐப் பெருக்க முதலில் 6 x 4 = 24 ஐ முதலில் போட்டுக் கொள்ளுங்கள். அடுத்து தசம தானத்தில் இருக்கும் 4 உடன் ஒன்றைக் கூட்டி அதை 4 ஆல் பெருக்குங்கள் அதாவது 4 x 5 = 20 அதை நாம் ஏற்கனவே எழுதியிருக்கும் 24 க்கு முன்னால் போட்டு விடுங்கள். அவ்வளவு தான். எனவே 46 x 44 = 2024 இப்படியே எல்லா எண்களையும் இதோ கீழே இருக்கும் படத்தில் பெருக்கிக் காட்டி இருக்கின்றேன்!

படம் கிடைக்கவில்லை

இது ஏற்கனவே இன்று மருதண்ணா காட்டிய கணக்கின் வழி செய்ததாகும்! இது 5 ல் முடியும் எண்களின் வர்க்கங்களுக்கும் (அதாவது 15^2, 25^2, 35^2, 45^2...) செல்லுபடியாகும் நம் நிபந்தனைகளுக்கு உட்படுவதால்! தொடர்வோமா?

2 ஜூன் 2007

இனி எந்த வகையிலும் பொருந்தாத எண்களை எப்படிப் பெருக்குவது என்று காண்போம்! எத்தனை பெரிய எண்ணானாலும் சரி, எளிதில் மனத்தாலேயே பெருக்கி விட முடியும் என்பது தான் இதன் சிறப்பம்சம்! இந்த முறை நமக்குக் குழந்தையாய் இருக்கும் போதே சொல்லிக் கொடுத்திருந்தால் எத்தனை எளிதாய் இருந்திருக்கும் என்று இப்போது நினைத்துப் பார்க்கின்றேன். இந்த முறை நாம் ஏற்கனவே உபயோகிக்கும் முறையிலிருந்து சிறிய வித்தியாசமே! மந்திரத்தால் மாங்காய்கள் விழுவதில்லை. ஆனால், கம்பும் லாவகமும் இருந்தால் மரத்தில் ஏறாமலேயே மாங்காயைப் பறிக்க முடியும் தானே! அப்படியான பயிற்சி தான் இது! இதற்கு உங்களுக்குத் தேவையான உபகரணம் ஒன்றே ஒன்று தான்! அது தான் மனம்! உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டியது 1 முதல் 9ம் வாய்ப்பாடு! அதாவது கீழ்க்கண்ட அட்டவணை. இது அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்றே நினைக்கின்றேன். இது உங்களுக்கு மனப்பாடமாய்த் தெரிந்திருந்தால் உங்களால் 20 இலக்க எண்ணைக் கொண்டு ஒரு 20 இலக்க எண்ணைப் பெருக்கி விடை சொல்ல முடியும்!

படம் கிடைக்கவில்லை

சரி. முன்னோட்டமெல்லாம் போதும். களத்தில் இறங்குவோம். பெருக்கல் குறிக்கான உண்மையான அர்த்தத்தை இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்! உதாரணத்திற்கு இரண்டு எண்கள் எடுத்துக் கொள்வோம். 81,54 என்று வைத்துக் கொள்ளுங்கள்! இனி நாம் பேனா பென்சில் எதையும் எடுக்க வேண்டியதில்லை. மனதாலேயே இதைப் பெருக்க முடியும். கீழ்க்கண்ட படங்களின் தொகுப்பு பாருங்க! இந்த எண்களை மூன்றே படிகளில் மனத்துக்குள்ளேயே பெருக்கி கூட்டி பதிலை அப்படியே எழுதி விட முடியும்! முதல் படி:

படம் கிடைக்கவில்லை

இது நாம் வழக்கம் போல் பெருக்குவது தான். இதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது தானே? இரண்டாம் படி:

படம் கிடைக்கவில்லை

இது தான் மிக முக்கியமான படி! பெருக்கல் குறிக்கான அர்த்தமும் தத்துவமும்! அதாவது ஒன்றாம் எண்ணைக் கொண்டு இரண்டாம் எண்ணையும், இரண்டாம் எண்ணைக் கொண்டு ஒன்றாம் எண்ணையும் பெருக்கி வரும் விடைகளைக் கூட்டி (4 x 8 = 32, 5 x 1 = 5) 37 என்று வருவதில் 7 ஐ மட்டும் இட்டு விட்டு மனதில் 3 ஐச் சேமியுங்கள். பச்சை நிறத்தில் இருப்பது அனைத்தும் மனதிற்குள்ளேயே நடக்கின்றது! மூன்றாம் படி:

படம் கிடைக்கவில்லை

அடுத்து மீண்டும் மீதமுள்ள இரண்டாம் எண்ணையும் இரண்டாம் எண்ணையும் பெருக்குங்கள். அதாவது (5 x 8 = 40) அதனுடன் ஏற்கனவே மனதில் இருக்கும் 3 ஐயும் கூட்டி 43 என்று இட்டு விட்டால் நம் பெருக்கல் முடிந்தது. எனவே 81 x 54 = 4374 இதை இன்னும் சில எடுத்துக் காட்டுகளுடன் பார்த்து விட்டு, அடுத்து மூன்றிலக்கம், நான்கிலக்கம் என்று தொடர்வோம்! இதன் மூலம் ஒவ்வொரு எண்ணும் மற்ற எண்ணால் பெருக்கப்பட்டு விடுவதுடன் அவ்வப்போது கூட்டியும் விடுகின்றோம்! எனவே எப்போதும் இரண்டு ஒற்றைப்படை எண்களைப் பெருக்கி (அதாவது அதிக பட்சம் 9 x 9) இரண்டு எண்களைக் கூட்ட வேண்டும் மனதிற்குள்ளேயே (அதுவும் அதிக பட்சம் 81 + 81). அவ்வளவு தான். சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.

15 ஜூன் 2007

இப்போது 46, 34 என்ற இன்னும் இரு எண்களை இதே முறையில் பெருக்கிப் பார்ப்போம். இதுவும் புரிந்தது என்றால் சொல்லுங்கள் அடுத்து மூன்றிலக்க எண்களைப் பெருக்குவோம்!

2 படங்கள் கிடைக்கவில்லை

மேலும் வாசிக்க

கணினி

கணினி

வன்தட்டின் எமன் - SSD

கணினியை உபயோகிக்கும் நம்மெல்லோர்க்கும் வன் தட்டின் முக்கியத்துவம் பற்றித் தெரியும். இப்போது வன் தட்டைக் காணாமல் செய்வதற்கு ஒரு எமன் வந்திருக்கின்றான்…

கணினி

அலுவலகம் திறப்போம் வாரீகளா?

என்ன தான் IBM நிறுவனம் பிசினஸ் மெஷின்ஸ் என்று பெயர் வைத்திருந்தாலும், பெரு வர்த்தகத்துக்கு மட்டுமே கணினிகள் உபயோகிக்க முடியும் என்றொரு காலம் இருந்தது.…