நானும் நீயும்
முத்தமிழ் மன்றத்தில் எழுதியது · 21 ஜூன் 2007 – 21 ஜூலை 2007
அன்பு நண்பர்களே, முன்பு எனக்கும் எனக்கும் (http://www.muthamilmantram.com/viewtopic.php?t=18052) என்ற என்னுள்ளான உரையாடலை ரசித்தென்னை ஊக்குவித்தீர்கள். இதோ இப்போது உள்ளும் வெளியும் சேர்ந்து பேசிக் கொள்வது போல் ஒரு உரையாடல் கவிதைத் தொகுப்பை ஆரம்பிக்க நினைக்கின்றேன். உள்ளே என்பது நானாகவும். வெளியே புறப்பொருட்கள் அனைத்தும் நீயென்று சுட்டுமாறும் எழுதத் துவங்குகின்றேன்.
தலைப்பு :
"நானும் நீயும்".
கடவுள் வாழ்த்து:
அண்ட பேரண்டச் சொந்தக்காரனே!
அண்டு வோரண்டச் சேர்க்கைக்காரனே!
கண்டு உன்னுடன் பேசுமாசையில்
வண்டாய் பூவை மொய்க்கவந்தேன்.
நீயா நானா முட்டிப் பார்க்காமல்
நீயார் நானார் என்று பார்க்கவே
நீயாய் நான் அழிந்து சேர்க்கவே
நீயும் எங்கள் துணை நிற்பாயோ?
உள்ளே உருகி
வெளியே பெருகி
எனக்குள் என்னையும்
வெளியில் உன்னையும்
தனிமைப் படுத்தி
நானும் நீயும்
சேர்ந்து கொஞ்சம்
வாக்குடன் வாதமின்றி
வாக்கு வாதம்
செய்ய வரமளிப்பாயோ?
நீயின்றி நானில்லை
நானின்றேல் நீயுண்டு
நானிதை அறிந்தும்
நான்மட்டும் முன்நிற்க
நீஎங்கோ ரசித்திருக்க
நான்வந்து காணும்
வழிகொஞ்சம் சொல்வாயோ?
நானும் நீயே
நீயும் நீயே (முதல் நீ வெளி, அடுத்த நீ இறைவன்!)
இருந்தும் வேற்றுமை
இருப்பது உண்மையன்றோ?
இருப்பில் கரைந்தும்
இன்மையில் நிறைந்தும்
வேற்றுமை நீக்கும்
வழிவகை செய்வாயோ?
நான் அல்லாதது அனைத்தும் நீயோ?
நான் இருப்பது எதிலும் நீயிலையோ?
நான் மட்டும் இருந்தால் நீயெங்கே?
நான் மட்டும் இறந்துநீ நிறைவாயே!
(தொடரும்)
3 ஜூலை 2007
மலைவளம்:
இயற்கை யியல்பா யிருப்பி லிருத்தும்
உயர்வே யுருவா யுவந்தும் - பயிலும்
தனிமை குளுமை பசுமை சிறந்தும்
இனிமை நிறையும் மலை.
மணற்றுகள் சேர்ந்து இறுகி மலையோ
குணமலை பொக்கல் மணலோ - தணலை
ஒளித்து வயிற்றி லடக்கி தழலாய்
வெளிவிடக் காக்கும் மலை.
மேகத்தைத் தொட்டு விளையாடி வேரினைத்
தேகத்தில் ரோமமாய்க் கொண்டது - யாகப்
பலனதைக் கைதனில் நேராய்த் தருமே
நலங்களைத் தேக்கும் மலை.
உயர்ந்த சிகரம் வருணன் கொடையை
நயந்து பெறுமே முதலில் - லயமாய்
அருவி மடுவில் விழவே நதியாய்த்
தருமே புனித மலை.
மலைக்கு மளவாய் மனதினி லெண்ணம்
மலைக்கும் மடுவுக்கும் நீளும் - நிலைக்கும்
வகையைப் பொறுமையில் காட்டியே எந்தன்
தகையைப் பெருக்கும் மலை.
6 ஜூலை 2007
மலைவளம் - தொடர்ச்சி
பழுப்பு உடலுக்கு வெண்மைத் தலையாய்
வழுக்கும் குளிர்ந்த பனியோ - அழுத்தம்
விளைக்கும் கனத்தால் நிலத்தைச் சமமாய்த்
திளைத்திடச் செய்யும் மலை.
கடினம் சிகரத்தி லேறுகை கீழே
நொடியில் விழுதல் எளிதாம் - படியென
வாழ்வில் உயரும் முகடும், வருந்திடும்
தாழ்வும் விளக்கும் மலை.
வாமி யவதாரச் சிந்தைக் கருவியாம்
பூமி எனுமா லயத்தூபி - நேமித்த
ஈராறு ஆண்டின் கலசபிசே கக்குறிஞ்சி
சீராய்த் தருமா மலை.
வாமி - பார்வதி.
ஓரேற்றம் ஓரிறக்கம் என்றால் மலையாகும்
சேரேற்றம் சேரிறக்கம் சங்கிலியாம் - யாரே
நவில்வார் எடுப்பிறக் கத்தொடரே வாழ்வென
புவிமேல் அருக்கும் மலை.
அருக்குதல் - காட்டுதல்
ஆழ்கடல மைதி யிலடியிலு றங்கியே
வாழ்கின்ற கோடது கோடியே - பாழ்கண்ணுங்
கொண்டதைக் காணாதே முற்று வெளிமாயை
மண்ட நகைக்கும் மலை
கோடு - சிகரங்கள், காணாதே முற்று - காணாது + ஏமுற்று - ஏமுறுதல் - மயங்குதல்
10 ஜூலை 2007
ஓ. எழுதிவிடலாமே!
இயற்கை யியல்பா யிருப்பி லிருத்தும்
உயர்வே யுருவா யுவந்தும் - பயிலும்
தனிமை குளுமை பசுமை சிறந்தும்
இனிமை நிறையும் மலை.
இயற்கை தன்னியல்பாய் இருப்பிலேயே இருத்தும், உயர்வான உருவை உவந்து பெற்றிருப்பதும், எந்தக் கல்வியும் பயில தேவைப்படும் தனிமையை, குளுமை, பசுமை ஆகியனவற்றுடன் சிறப்பாய்த் தரும் இனிமைகள் பல நிறைகின்றது மலைவளம் ஆகும்.
மணற்றுகள் சேர்ந்து இறுகி மலையோ
குணமலை பொக்கல் மணலோ - தணலை
ஒளித்து வயிற்றி லடக்கி தழலாய்
வெளிவிடக் காக்கும் மலை.
மணல் துகள்கள் சேர்ந்து இறுகி மலையாகின்றதோ? அல்லது குணமான மலை நொறுங்கி மணலாகின்றதோ? எரிமலையைத் தன் வயிற்றில் அடக்கி எப்போது வெளிவிடலாம் என்று காத்துக் கொண்டிருப்பது மலைவளம்.
மேகத்தைத் தொட்டு விளையாடி வேரினைத்
தேகத்தில் ரோமமாய்க் கொண்டது - யாகப்
பலனதைக் கைதனில் நேராய்த் தருமே
நலங்களைத் தேக்கும் மலை.
மேகத்தைத் தொட்டு விளையாடக் கூடிய சிகரங்களைக் கொண்டதும், மர வேர்களைத் தன் ரோமமெனக் கொண்டதும், யாகங்கள் பல செய்வதால் கிடைக்கக் கூடிய மறைமுக பலன்கள் அனைத்தையும் கைகளில் நேரடியாகத் தருவதுமான நலங்களைத் தேக்குவது மலைவளம் ஆகும்.
உயர்ந்த சிகரம் வருணன் கொடையை
நயந்து பெறுமே முதலில் - லயமாய்
அருவி மடுவில் விழவே நதியாய்த்
தருமே புனித மலை.
மலையின் உயர்ந்த சிகரங்கள் மழையெனும் கொடையை நயந்து பூமியிலேயே முதலாய்ப் பெற்று லயத்துடன் அருவி பள்ளத்தினில் விழ நதியாகத் தரும் புனிதமான மலைவளம்.
மலைக்கு மளவாய் மனதினி லெண்ணம்
மலைக்கும் மடுவுக்கும் நீளும் - நிலைக்கும்
வகையைப் பொறுமையில் காட்டியே எந்தன்
தகையைப் பெருக்கும் மலை.
மலைக்கும் அளவுக்கு மனதில் எண்ணங்கள், மலைக்கும் மடுவுக்குமாய் நீளும். ஆனால் சாதித்து நிற்கும் வழிவகையைத் தன் பொறுமையில் காட்டி நம் தகுதியைப் பெருக்கும் மலைவளம்.
பழுப்பு உடலுக்கு வெண்மைத் தலையாய்
வழுக்கும் குளிர்ந்த பனியோ - அழுத்தம்
விளைக்கும் கனத்தால் நிலத்தைச் சமமாய்த்
திளைத்திடச் செய்யும் மலை.
மலையின் பழுப்பான உடலுக்கு வெள்ளைத் தலையாய் வழுக்கும் குளிர்ந்த பனிக்கட்டிகள். மலையின் அழுத்தம் விளைவிக்கும் கனத்தாலேயே அதைச் சுற்றி இருக்கும் நிலமும் சமமாய்க் கடலில் மூழ்காமல் சமநிலை திளைத்திடச் செய்வது மலைவளம்.
கடினம் சிகரத்தி லேறுகை கீழே
நொடியில் விழுதல் எளிதாம் - படியென
வாழ்வில் உயரும் முகடும், வருந்திடும்
தாழ்வும் விளக்கும் மலை.
மலைச் சிகரத்தில் ஏறுவது மிகக் கடினம். கீழே நொடியில் விழுதல் மிக எளிதானது! அதைப் பார்த்தாகிலும் வாழ்வில் உயரும் உயர்வும், வருத்தம் தரும் தாழ்வும் எப்படிப்பட்டது என்று படித்துக் கொள் என்று விளக்கும் மலைவளம்.
வாமி யவதாரச் சிந்தைக் கருவியாம்
பூமி எனுமா லயத்தூபி - நேமித்த
ஈராறு ஆண்டின் கலசபிசே கக்குறிஞ்சி
சீராய்த் தருமா மலை.
பார்வதி தேவி அவதாரம் செய்ய நினைக்கையில் அதற்குக் கருவியாய் விளங்கியது பர்வத மலை. பூமியையே ஆலயமாய்க் கொண்டால் மலைகள் தான் அவற்றின் தூபிகள் எனப்படும் கோபுரங்கள் ஆகும். அத்தகைய கோபுரங்களுக்கு பன்னிரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நியமித்த படி நடத்த வேண்டிய கலச அபிஷேகம் செய்ய குறிஞ்சி மலரையும் சீராகத் தரும் மாமலைவளம்.
ஓரேற்றம் ஓரிறக்கம் என்றால் மலையாகும்
சேரேற்றம் சேரிறக்கம் சங்கிலியாம் - யாரே
நவில்வார் எடுப்பிறக் கத்தொடரே வாழ்வென
புவிமேல் அருக்கும் மலை.
ஒரே ஒரு ஏற்றம், ஒரே ஒரு இறக்கம் என்றால் அது மலை! சீரான பல ஏற்றங்களையும், சீரான பல இறக்கங்களையும் கொண்டிருந்தால் மலைத் தொடராம். இப்படியான ஏற்றங்களையும் இறக்கங்களையும் தொடராய்த் தருவது தான் வாழ்க்கை என்று பூமி மேல் காட்டும் மலையைத் தவிர வேறு யாரே நவில்வார்?
ஆழ்கடல மைதி யிலடியிலு றங்கியே
வாழ்கின்ற கோடது கோடியே - பாழ்கண்ணுங்
கொண்டதைக் காணாதே முற்று வெளிமாயை
மண்ட நகைக்கும் மலை.
ஆழ்கடலின் அமைதிக்குள்ளேயே பல சிகரங்கள் இருக்கும். ஆனால் நமது பாழ்கண்ணோ அப்படிப்பட்ட உள்ளிருக்கும் சிகரங்களை காணாது ஏமாற்றமுற்று வெளியே மாயையாய்த் தெரியும் சிறு குன்றுகளைக் கூட சிகரங்கள் என்று எண்ணிக்கொள்ள அதைக் கண்டு நகைக்கும் மலை!
16 ஜூலை 2007
வனவளம்
இருட்டு ஒளிக்கும் கதிரவன் வழுக்கும்
திருட்டு இடமாம் வெளியாய் - கருக்கும்
தரையைப் படுகையால் மூடிச் சிறக்கும்
வரையில் பசுமை வனம்.
இருட்டை ஒளித்து வைக்கும் கதிரவனின் கூசக் கூடிய ஒளியையும் (வழுக்கு - கூசும் ஒளி) திருட்டு செய்கின்ற இடமாய், தரையை எப்போதும் கருப்பாய் நிழலால் (படுகை) மூடிச் சிறக்கும், எல்லையில்லாப் பசுமை கொண்டது வனம்.
விசையின்றிப் பந்தினைப் பஞ்சுபோ லெட்டுத்
திசைதிரிந்து மூடு மிளையை - இசைமுழங்க
ஈர்த்திங்கு தற்பொழிவில் ஊர்நலமுங் கண்டெமைச்
சேர்த்து அணைக்கும் வனம்.
எந்த ஒரு விசையுமின்றிப் பூமிப் பந்தினை பஞ்சு போல் எட்டுத் திசையிலும் மூடித் திரிகின்ற மேகத்தை (இளையை), இடி எனும் இசை முழங்க, ஈர்த்து இங்கே தன்னலத்தில் (தற்பொழிவில்) பொதுநலமும் கண்டு நம்மையும் சேர்த்து அணைத்து வழிகாட்டிடும் வனவளம்.
கோவிலங்கு கோலோச்சும் ஆரணிய ஆட்சியதில்
கோவிலங்கு சூழ்கொள்ளும் தண்மையே - சாவிலங்கு
ஒன்றடித் தொன்றுவாழும் பூமியோட்டம் காட்டியே
நன்றாய் நவிலும் வனம்.
சிங்கம் (கோவிலங்கு) கம்பீரமாய் ஆட்சி செய்யும் கானகத்தில் கோவில் அங்கே கொண்டிருப்பது சூழ்ந்திருக்கும் குளிர்ச்சியே. சாவில் அங்கே ஒன்றை அடித்து ஒன்றை வாழ்வும் பூமியின் சுழற்சி முறையை நன்றாய் நவில்வதும் வனம்.
வான்முட்டி நூறாண்டு வாழ்ந்துநின்று நீள்மரமுந்
தேன்கட்டி சேர்த்திடும் தேகமெங்கும் - கூன்தட்டி
தீர்ந்தாலும் பல்லாண்டு சென்றெரியாய் வீணர்கை
சேர்க்குந் தியாக வனம்.
வான்முட்டி நூறாண்டுகளுக்கும் மேலாய் வாழ்ந்து பல தேன்கூடுகளைத் தன் தேகத்தில் கொண்டிருக்கும் மரங்களும் ஓர் நாள் வயதாகி (கூன்தட்டி)க் கீழே விழுந்தாலும், பல்லாண்டுகள் கழித்து எரிபொருளாய் மானிடர்களின் கைகளில் சேர்க்கின்ற தியாக மனப்பான்மை கொண்டிருக்கும் வனம்.
வேரெடுப்பின் மூலிகையாந் தந்திடு முக்கனியாம்
தேரெடுத்தோ டாதோரி டம்நிலைகொள் - பேரெடுக்கு
மெய்யெலாம் தானமென வீடுதந்து மானிடர்க்கு
செய்வதெலாம் செய்யும் வனம்
வேரெடுத்தால் மூலிகையாம். தந்திடும் முக்கனியாம். தேரெடுத்து ஓடாது ஓரிடத்தில் நிலை கொண்டாலும், பேரெடுக்கும் வகையில் தன் உடலையெல்லாம் தானமெனத் தந்து மானிடர்க்கு வீடு தந்து செய்வது அனைத்தும் செய்யும் வனம்.
21 ஜூலை 2007
வனவளம் - தொடர்ச்சி
காற்றாடும் மூங்கில்கள் காதலோட ராவிடின்
சீற்றமுடன் வெந்திடுமே செந்தழலில் - காற்றோடும்
தும்பி துளைத்த துவாரத் திலின்னிசை
கும்பிக்கும் போதை வனம்.
காற்றிலாடும் மூங்கில்கள் காதலோடு உரசிக் கொண்டால் சீற்றமுடன் வெந்திடும் கானகமும் செந்தழலில். அதே காற்று அதே மூங்கிலில் வண்டு துளைத்த துவாரத்தில் ஓடும் போது இன்னிசையைத் தன் வயிற்றில் கொண்டு போதையில் மிதக்கச் செய்வது வனம்!
தளிர்க்கும் அரியிலை, ஞாறும்பூ, காயும்
துளிர்க்குங் கனிவகை கொண்டும் - ஒளிக்கும்
அடிவேர் நலமே விழாது நிறுத்தும்
படியென நூற்கும் வனம்.
தளிர்க்கும் பசுமையான இலை, மணக்கும் பூ, காய்களும், செழிக்கும் நல்ல கனிகளும் கொண்டு இருந்தாலும், ஒளித்து வைத்திருக்கும் அடிவேரின் ஆரோக்கியமே (உள்ளிருக்கும் நல்ல குணங்களே) மரத்தை விழாது நிறுத்துகின்றது என்று படித்துக் கொள் என்று கற்றுக் கொடுக்கும் வனம்.
புல்லொடு, பூண்டும், செடியொடு அல்லையும்
நல்லுயரக் கம்பியும் வாழவே - இல்லெனாது
தங்குதரி தாய்பாகம் தேவைக்காய்ச் சின்னமின்றி
பங்குதந்து காக்கும் வனம்.
புல், பூண்டு, செடி, கொடி (அல்லை), நல்ல உயரமான மரம் என்று அனைத்தும் விளங்க, அனைத்துக்கும் இல்லை எனாது அவரவர் தேவைக்கென இருப்பிடத்தை (தங்குதரி) உரிமையுடன் எடுத்துக் கொள்ளும்படி (தாய்பாகம்) குற்றமின்றி (சின்னமின்றி) பங்கு கொடுத்து அனைத்தையும் காக்கும் வனம்.
வேடந்தாங் கிப்பறந்து கண்டந்தாண் டும்பட்சி
வேடந்தாங் கல்எனக் கண்டிடும் - மாடத்தில்
காய்கனியொ டோம்பும் விருந்தில் குணங்காட்டி
தாய்மை சிறக்கும் வனம்.
கண்டம் விட்டு கண்டம் வந்தாலும் எந்தப் பறவையையும் வாவென்று விருந்தோம்பலுடன் அழைத்து கிளை எனும் மாடத்தில் காய் கனிகள் கொடுத்து அவற்றை உபசரித்து மீண்டும் அனுப்பி விட்டு தாய்மையுடன் எதிர்பார்ப்பின்றி நிற்கும் வனம்.
மூலஞ் சிறுவிதை, யுச்சம் மகோன்னதம்
கால முடிவில் உரமென - ஞால
நிலைபெறும் வாழ்வாய்ச் சொதையாய் முன்னும்
கலைபயில நிற்கும் வனம்.
சின்னஞ் சிறு விதையே மூலமாய், வளர்ச்சியில் மகோன்னதமான உருவமாய், காலத்தின் முடிவில் அடுத்தவர்க்கு வழி விடும் உரமாய், ஞாலத்தின் நிலைபெறும் வாழ்வாய், சொத்தாய், முன்னேறும் கலை பயிலும் படி நிற்கும் வனம்.