கரையைத் தொட்ட அலைகள்
முத்தமிழ் மன்றத்தில் எழுதியது · 19 செப்டம்பர் 2007 – 29 டிசம்பர் 2009
அலை - 1 நேற்று வீட்டில் அப்போது தான் நுழைந்து கண்ணாடியைக் கழற்றி விட்டு வண்டிச் சாவியைச் சன்னலில் வைத்து விட்டு அமர்கின்றேன். தொலைக்காட்சியில் ஒரு பாட்டு ஓடிக் கொண்டிருக்கின்றது. மாதவனும் ஒரு நடிகையும் மொபைலா, மொபைலா. போஸ்ட் பெய்டா ப்ரீ பெய்டா என்று பாடி நடித்துக் கொண்டிருக்கின்றார்கள். எனக்குள் ஒரு எண்ணம் எழுந்தது. வாழ்வும் மொபைல் போன் போல் தானே. ஏற்கனவே ப்ரீ பெய்ட் திட்டத்தில் வந்திருக்கின்றோம். மூச்சிழுக்கும் இன்கமிங் இலவசம் தான். ஆனால் மூச்சை விடும் அவுட் கோயிங் எண்ணிக்கை எண்ணப்படும்! அவுட் கோயிங் வரவு முடிந்ததும் இன் கமிங்கும் கிடையாது அவுட் கோயிங்கும் கிடையாது. சிம் கார்டு இல்லாத செல்பேசியினால் எப்படி பலனில்லையோ அதே போல் உயிரில்லாத உடலுக்கும் பலனில்லை. சரி அப்படியானால் போஸ்ட் பெய்டு திட்டம் எது? என்று யோசனை ஓடியது! ஒரு விதத்தில் பார்த்தால் நாம் வந்திருப்பது செல்பேசியில் உள்ளது போல் போஸ்ட் பெய்ட் திட்டமோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது. இஷ்டம் போல் இன் கமிங்கும் இஷ்டம் போல் அவுட் கோயிங்கும் கணக்கின்றி செய்கின்றோம். ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுகின்றோம். எல்லாம் குறித்து வைக்கப் படுகின்றது. அடுத்தடுத்த பிறவிகளில் அதற்கான விலையைக் கொடுக்கின்றோம். எல்லை மீறிப் போகும் போது இணைப்பு துண்டிக்கவும் படுகின்றது! இணைப்பு வழங்கும் நிறுவனம் ஒரே போல் தான் இணைப்பை வழங்குகின்றது அனைவருக்கும். அதை எந்த முறையிலும் பயன்படுத்தும் சுதந்திரமும் தந்திருக்கின்றது. இணைப்பை நீட்டிப்பதும் துண்டிப்பதும் இணைப்பைப் பெற்றவர் கையிலும் இருக்கின்றது! கிடைத்த அவகாசத்தில் நல்ல தகவல்களைப் பரிமாறி உடலெனும் சாதனத்தின் பயனை அனுபவிக்க வேண்டும் என்று தோன்றுகின்றது.
20 செப்டம்பர் 2007
அலை - 2 நேற்று அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன். ஒரு டிராபிக் போலீஸ் கான்ஸ்டபிள் என்னைக் காண வந்தார். வயது 50 இருக்கும். அடிக்கடி அவரைச் சாலையில் பார்ப்பதுண்டு. நான் செல்லும் வழியில் நெரிசலைக் கட்டுப்படுத்தும் பணியில் இருப்பவர் தான். என்னைப் பார்த்ததும், தலையைச் சொறிந்தார். "என்ன சார்?" என்றேன். "கவர்மெண்ட் ஹெல்மெட் போடச் சொல்லிட்டாங்க. அதிலும் போலீஸ்காரங்க எல்லாரும் கட்டாயமாப் போடனும்னு ஆர்டர் போட்டிருக்காங்க. நான் வாங்குற சம்பளம் கைக்கும் வாய்க்குமே சரியா இருக்கு. உங்களைப் பத்தித் தெரியும். அடிக்கடி ரோட்டில் பார்க்கிறேன். எனக்கு ஹெல்மெட் வாங்க ஹெல்ப் பண்ணுங்க" என்றார். "அரசு உங்களுக்கெல்லாம் ஹெல்மெட் தராதா?" என்றேன். "அதெல்லாம் தராது. நாங்களே தான் வாங்கிக்கனும்" என்றார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எப்போதும் கேட்காத ஒருவர். நம் இடத்துக்கு வந்து கேட்கின்றாரே. இல்லை என வேண்டாம் என ஒரு தொகையைக் கொடுத்தேன். கொடுத்ததை வாங்கிக் கொண்டு அவர் சொன்னது தான் இன்றைய சிந்தனை. "நீங்க கவலையே படாதீங்க. நீங்க ஹெல்மெட் போடனும்னு அவசியம்லாம் இல்ல. ரொம்ப ஸ்ட்ரிக்டா எப்போ சொல்றாங்களோ அப்போ நான் உங்க கிட்ட வந்து சொல்றேன். அதுக்கப்புறம் போடுங்க" என்றார். லஞ்சம் இப்படித் தான் ஆரம்பிக்கின்றதோ என்று நினைத்துக் கொண்டேன்.
21 செப்டம்பர் 2007
இதோ இருக்கு குட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டி ஹெலிகாப்டர். ;)
படம் கிடைக்கவில்லை
28 செப்டம்பர் 2007
அலை - 3 சென்ற வாரம் மதுரைக்கு ஒரு வேலையாய்ச் சென்றிருந்தேன். மதுரை சிம்மக்கல் சாலை. வண்டிகள் மெதுவாய் ஊர்ந்து கொண்டிருக்கின்றன டிராபிக் சிக்னலுக்காக. முன்னால் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்க, அவருக்கும் முன்னால் ஒருவர் மெல்ல நடந்து கொண்டிருந்தார். மிக மிக மெதுவாகத் தான் நகர்ந்து கொண்டிருந்தது போக்குவரத்து, நெரிசலின் காரணமாக. திடீரென்று எங்கிருந்து ஒரு மாடு வந்ததோ இடையில் புகுந்து விட்டது. பாவம் நடந்து கொண்டிருந்தவர் பதறிப்போய் துள்ளிவிட, பின்னால் வண்டியில் வந்தவர் தடுமாறி நாங்கள் சென்று கொண்டிருந்த காரின் முன்பக்கமாய் விழுந்து விட்டார். நல்லவேளை எங்கள் ஓட்டுநர் இதை எப்படிக் கணித்தாரோ உடனே பிரேக் போட்டு நிறுத்தி விட்டார். அதன் பின் நடந்தது தான் இன்றைய எண்ணப் பகிர்வு! வண்டியிலிருந்து கீழே விழுந்தவருக்கு நடந்து கொண்டிருந்தவர் மேல் அப்படி ஒரு ஆத்திரம் வந்து விட்டது. எழுந்தவர் அடிக்க அங்குமிங்கும் தேடினார். கையில் எதுவும் அகப்படவில்லை. என்ன தோன்றியதோ, தலையில் மாட்டியிருந்த ஹெல்மட்டை எடுத்து நடந்து வந்தவரின் மேல் அடிக்க ஆரம்பித்து விட்டார். நடந்து வந்தவர் பொறுமைசாலி. அடியை வாங்கினாலும் மாடு குறுக்கே வந்து விட்டது என்று அவரைச் சமாதானப் படுத்தினார். அப்புறம் சுற்றி இருந்தவர்கள் சமாதானப்படுத்தி போக்குவரத்து பழையபடி நடந்தது. ஹெல்மெட் போடுவதன் உபயோகம் இதுவும் இருக்கின்றதா என்று அறிந்து கொண்டதுடன், பாதுகாப்பு சாதனம் கூட சமயத்தில் அழிக்கும் சாதனமாக உருவெடுக்கும் அதிசயத்தைக் கண்டேன்.
30 செப்டம்பர் 2007
அலை - 4 வானொலியில் இன்று தற்செயலாக ஒரு நிகழ்ச்சியைக் கேட்க நேர்ந்தது. கோடைப் பண்பலையில் 'செப்புக செந்தமிழ்' என்னும் போட்டி நிகழ்ச்சி. நிலையத்திலிருந்து போட்டியாளருடன் அதிக நேரம் தொலைபேசியில் யார் செந்தமிழில் உரையாடுகின்றார்களோ அவர்களுக்குப் பரிசு. இது தான் போட்டி. விதிகள்: ஆம்/இல்லை மட்டும் சொல்லக் கூடாது, ஒரே வார்த்தையை மூன்று முறை உபயோகிக்கக் கூடாது, ஒரு வார்த்தையில் பதில் சொல்லக் கூடாது, வேற்று மொழி வார்த்தைகள் உச்சரிக்கக் கூடாது. ஆகியவைகள் ஆகும். மிக சுவாரசியமாய் நடந்து கொண்டிருந்தது. ஆகா, மிக நல்ல போட்டியாக இருக்கின்றதே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். போட்டியின் நடுவில் ஒரு கல்லூரி மாணவி போட்டியில் பங்கு பெற்றார். அதுவும் கணினி பட்டப்படிப்பு பயிலும் மாணவி. மிக அழகாகத் தமிழில் உரையாடினார். பாடப்பிரிவுகள் கூட தமிழில் உடனுக்குடன் சொன்னது ஆச்சரியமளித்தது. இருந்தும் அவர் தோற்றுப் போனார். காரணம் என்ன தெரியுமா? நிகழ்ச்சியை நடத்தியவர் அவர் "கணிதப் பாடம் எடுத்துப் படிக்கிறேன்" என்று சொன்ன போது இடைமறித்து "ஆன்சிலரியாகவா?" என்று ஒற்றை வார்த்தையில், பதில் ஆம்/இல்லை என்று சொல்லும் வகையில், அதுவும் ஆங்கில வார்த்தை உபயோகித்ததும் அவர் தடுமாறியது தொலைபேசியிலேயே தெரியவந்தது. முதலில் தான் செந்தமிழில் பேசினால் தான் அந்தப் போட்டி நிகழ்த்தத் தகுதியானவராக முடியும் என்று நடத்துபவருக்கே தெரியவில்லையே என்று தான் நினைத்துக் கொண்டேன்!
1 அக்டோபர் 2007
அலை - 5 என் நண்பர் ஒருவரின் அலுவலகத்திற்குச் சில நாட்களின் முன்பு சென்றிருந்தேன். ஏசியின் சில்லென்ற குளிரிலும் இறுக்கமான ஒரு சூழ்நிலை இருந்தது. என் நண்பருக்கு முன் அவரிடம் பணி புரியும் ஒரு ஊழியர் சோகமாக தலைகுனிந்த படி நின்றிருந்தார். அந்த ஊழியர் பல ஆண்டுகளாய் என் நண்பரின் அலுவலகத்தில் வேலை செய்கின்றார். நான் வந்ததும், "சரி. நீ கிளம்பு" என்று ஊழியரை அனுப்பி வைத்து விட்டார் நண்பர். "என்ன விவரம்?" என்று கேட்டேன். "அது ஒன்னுமில்லை. வழக்கமா நடக்குறது தான். கேஷ்ல இருந்து 500 ரூபாய் எடுத்துட்டான். கண்டுபுடிச்சிட்டேன். அதான்" என்றார். எனக்கு ஆச்சரியமான ஆச்சரியம். இந்த ஊழியரா? 500 ரூபாயா? என்று எண்ணிக் கொண்டிருந்தேன். என் எண்ணவோட்டத்தைப் புரிந்து கொண்ட நண்பர், "ஏன் 500 ரூபாய் வேணும்னா என்னையே கேட்டிருக்கலாமே? கொடுத்திருப்பாரே இவர்? என்று தானே நினைக்கிறே?" என்றார். மௌனமாகத் தலையசைத்தேன். "இது அவனோட இயல்பு தாம்ப்பா. அடிக்கடி எடுப்பான். நான் பார்த்து சத்தம் போடுவேன்." என்றார். எனக்கு ஆச்சரியம் அதிகரித்தது. "என்ன அண்ணாச்சி நீங்க வேற. எப்போ பணத்தை எடுக்கிறான்னு தெரிஞ்சதோ தூக்கிட வேண்டாமா?" என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில் என்னை ரொம்பவே யோசிக்க வைத்தது. "இந்த உலகத்துல நேர்மையானவன்னு யாருமே இல்ல. இந்தப் பையன் இருக்கானே, இவன் தேவைக்கு அதிகமா எடுக்கவே மாட்டான். 2 லட்ச ரூபாய் கொடுத்து விட்டாலும் 200 ரூபாய் தேவைன்னா அது தான் எடுப்பான். அவன் அதிகமா ஆசைப்படமாட்டான். ரொம்ப வருசமா இருந்திட்டான். வீட்ல 2 புள்ளைங்க வேற. நானும் முதல்ல ரொம்பக் கண்டிச்சேன். வேலையை விட்டு நிறுத்தினேன். எங்கே போனாலும் அவனோட இயல்பு மாறுமா? அதனால உடனே வேலையை விட்டு நின்றுடுவான். அப்புறம் தான் பாவப்பட்டு சேர்த்துக்கிட்டேன். சேர்த்து 3 வருசமாச்சு. அவனும் எடுக்குறத விடல. ஆனா, இவனுக்கு யாருக்கும் தெரியாம திருடத் தெரியாது. ஈசியா பிடிபட்டுடுவான். அதிகமாத் திருடவும் மாட்டான். அந்த வகையில் இவனை ரொம்ப நம்புறேன் நான். வேற யாரையும் இதே இடத்துல போட்டு அவன் சாமர்த்தியமாத் திருடினான்னா அவ்வளவு தான். நான் தான் ரொம்பக் கஷ்டப்படுவேன். அதான் பிடிபடும் போதெல்லாம் சத்தம் போட்டு விட்டிடுவேன்" என்றார். வித்தியாசமான மனிதர்கள் தான் என்று எண்ணிக் கொண்டேன்.
3 அக்டோபர் 2007
அலை - 6 நேற்று ஒரு வேலையாக விருதுநகர் வரை செல்ல வேண்டியிருந்தது. சிவகாசி - விருதுநகர் செல்லும் சாலையின் 26 கிமீட்டருக்கும் வேகத்தடை என்று தனியாக தேவையில்லை. சாலையே வேகத்தடை போன்று குண்டும் குழியுமாகத் தான் இருக்கும். இப்போது என்றில்லை. எனக்கு நினைவு தெரிந்து 25 ஆண்டுகளாக இப்படித் தான் இருக்கின்றது. நேற்று மெதுவாகக் காரோட்டிக் கொண்டிருந்தேன். அன்னக்கிளி உன்னைத் தேடுதே என்று ஜானகி உருகிக் கொண்டிருந்தார். ஒரு வளைவில் அப்போது தான் திரும்புகின்றேன். எதிரே திடுமென்று நான்கு இளைஞர்கள். இரண்டு இரு சக்கர வாகனங்களில் வெகு வேகமாக வந்து கொண்டிருக்கின்றனர். ஒருவருக்கொருவர் பந்தயம் வைத்திருப்பார்கள் போலும். அனைவர் முகங்களிலும் வெறி. முன்னே வந்த வண்டி நான் அப்போது தான் தாண்டிய வளைவுக்காக சிறிது வேகம் குறைக்க, பின்னால் வந்த வண்டி ஓட்டியவர் என்ன நினைத்தாரோ, முன்னால் இருந்த வண்டியை முந்த எண்ணி திடீரென்று வேகம் கூட்ட, எனக்கு நேருக்கு நேர் கண்ணுக்கெதிரே வந்தது அந்த வண்டி. சரி இன்னைக்கு கசமுசா ஆகப் போகின்றது என்று திடீர்பிரேக் போட்டு இடது புறம் வண்டியை இறக்கி விட்டேன். மயிரிழையில் கால் வாசி கூட இருக்காது. கிட்டத்தட்ட உரசியது என்றே சொல்லவேண்டும். அவ்வளவு நெருக்கத்தில் அந்த பைக் என்னைப் படுவேகத்தில் எதிர்திசையில் தாண்டிச் சென்று விட்டது. ஒரு நிமிடம் எனக்கு கைகால் ஓடவில்லை. 10 வருடங்களுக்கு முன் என் வேகமும் இதே போல் தானே இருந்தது என்று மனசாட்சி சொல்லியது. ஓரிரு முறை கீழே விழுந்ததும் ஞாபகம் வந்தது. கடைசியாகத் தோன்றிய எண்ணம் தான் உங்களிடம் பகிர நினைத்தேன். குண்டும் குழியுமாய் இருக்கும் சாலையிலேயே இவ்வளவு வேகம் செல்கின்றார்களே? நல்ல சாலையாய் இருந்து விட்டால்? கேட்கவே வேண்டாமே? போக்குவரத்து விதிகளைச் சரியாகக் கடைப்பிடிக்க நினைக்காத பொறுப்பில்லா மக்கள் இருக்கும் ஊருக்கு நல்ல சாலை போட்டால் இன்னும் அதிக விபத்துக்கள் நேருமோ? அதனால் குண்டும் குழியாய் இருப்பதே நல்லது தானோ? என்று தோன்றியது.
5 அக்டோபர் 2007
அலை - 7 இப்போது தினமும் தென்காசியிலிருந்து சென்னை வரை செல்லும் பொதிகை அதிவிரைவு வண்டி வாரத்துக்கு மூன்று நாட்கள் இயக்கப்பட்ட சமயம். சிவகாசி வட்டார வரி செலுத்துவோர் சங்கமும், சிவகாசி எம்.பி. சிப்பிப்பாறை ரவிச்சந்திரனும் சேர்ந்து அதை வாரம் முழுமையும் தினமும் இயக்கக் கோரி நடையாய் நடந்து கொண்டிருந்தோம். சிவகாசி வ.வ. செ. சங்கத்தில் நான் முன்பொரு சமயம் செயலராக இருந்தேன். தற்போதைய தலைவர், "நாளை சென்னை ரயில்வே பொதுமேலாளரைச் சந்திக்க இருக்கிறோம் நானும் எம்.பி.யும், நீங்களும் வாருங்கள்" என்றார். அன்று சென்னையில் எனக்கொரு பணி இருந்ததால் நானும் வருகின்றேன் என்று சொன்னேன். போவதற்கு ஏற்கனவே பிரயாணச் சீட்டு இருந்தது எங்களுக்கு. வருவதற்கு இல்லை! சரி நாம் செல்வதே எம்.பி.யோடு தானே, எம்.பி. கோட்டாவில் வாங்கிக் கொள்வோம் என்று சென்று விட்டோம். அங்கு எம்.பி., சங்கத் தலைவர், நான் மூவரும் சென்று ரயில்வே பொதுமேலாளரைச் சந்தித்தோம். அவரிடம் நாங்கள் பல முறை கேட்டுக் கேட்டு அலுத்துப் போய்விட்டோம். அவரே நொந்து போய், இந்த முறை உங்களுக்கு நிச்சயம் செய்கின்றேன் என்று ரயில்வே இணையமைச்சர் வேலுவிடம் பேசி அடுத்த மாதத்திலிருந்து பொதிகை விரைவு வண்டியை வாரத்துக்கு ஆறு நாட்கள் இயக்க அப்போதே உத்தரவிட்டார். எங்களுக்கு வந்த வேலை முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. இதில் கடைசியாக பொதுமேலாளரைப் பார்க்கச் சென்றதைத் தவிர என் பங்கு எதுவுமே கிடையாது. சரியென்று வெளியே வந்து எம்.பி.யிடம் டிக்கெட் கோட்டாவுக்கு லெட்டரில் கையெழுத்து வாங்கிவிட்டு மாலை ரயில் நிலையம் சென்று நிலைய அதிகாரியைச் சந்திக்கிறோம். அன்று பார்த்து ரயில் டிரைவர் கூட நிற்கும் அளவுக்கு நிரம்பி வழிந்தது! எம்.பி. என்ன? பிரதமர் கோட்டா கூட தர இயலவில்லை. இதோ மந்திரி கோட்டாவே கொடுக்க முடியாமல் இருக்கின்றேன் என்று கையை விரித்து விட்டார். கடைசியாக நீங்கள் எம்.பி. லெட்டர் கொடுத்ததால் ரயிலில் உள்ளே அனுமதிக்கச் சொல்கிறேன் என்று அனுமதித்தார்கள். அந்த இரவு முழுதும் ரயிலில் தரையில் உட்கார்ந்து கொண்டு வந்தோம் நானும் தலைவரும்! ரயில்வே பொது மேலாளரையே பார்த்து விட்டு வந்தால் கூட (அப்போதே அவரிடம் காலையில் சொல்லியிருந்தால் ஏ.சி. யில் கூட இடம் கிடைத்திருக்கும். நாங்கள் சென்றதோ பொதுக்காரியம். நமக்கு டிக்கெட் வேண்டும் என்பதற்காக பொதுமேலாளரைக் கேட்பதா என்று விட்டு விட்டோம்!) நமக்கென்று கிடைப்பது தான் கிடைக்கும் என்று இருவரும் பேசிக் கொண்டோம்.
9 அக்டோபர் 2007
அலை - 8 நேற்று அதிகாலையில் நடப்போம் என்று நானும் என் மனைவியும் நடந்து கொண்டிருந்தோம். இங்கிருக்கும் தண்ணீர்ப் பிரச்னை பற்றி சிவகாசி பற்றித் தெரிந்தவர்கள் அறிவார்கள். குடிநீர் கிடைக்காமல் அலையாய் அலைந்து ஒரு குடம் 2 ரூபாய் என்று உப்பு நீரைப் பெற்று அதைக் குடித்த காலம் எல்லாம் இருக்கின்றது. போன ஆண்டு பெய்த நல்ல மழையாலும், சமீபத்தில் வந்திருக்கும் மானூர் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தாலும் நிலத்தடி நீரும், குடிநீரும் ஏதோ பாதிப்பில்லாமல் கிடைக்கின்றது. ஆனால், இந்த ஆண்டு பருவகாலத்தில் பெய்யும் மழை கூடப் பெய்யவில்லை. அடுத்த ஆண்டு என்ன நிலையோ என்ற கவலை உள்ளூர இருக்கின்றது. இந்த நிலையில் நகராட்சி குழாய் மூலமாய் வீடு வீடாய் குடிநீர் வழங்கும் பணியைச் செய்து வருகின்றது. நேற்று நாங்கள் நடந்து செல்கையில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பல வீடுகளில் இருந்து அந்த நீரைத் தாங்கள் பிடித்தது போக மீதியை அடைத்துக் கூட வைக்காமல் மக்களே வீணடித்ததை எண்ணி வந்த மனக்குமுறலே இன்றைய அலை. கிடைத்தற்கரிய நீரை இப்படி வீணடிப்பதற்குக் காரணம் என்ன என்று யோசித்தேன். நகராட்சியும், அதன் அதிகாரிகளும், குடிநீர் திறந்து விடுவது மட்டுமே நம் வேலை என்று நினைப்பதில் ஆரம்பிக்கின்றது பிரச்னை. இப்போது நீரைச் சேமித்தால் தானே கடுங்கோடையில் பலனளிக்கும்? குறிப்பிட்ட நாட்களில், குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே நீர் திறந்து விடப்படும் என்று அறிவித்து அதன்படி நேரந்தவறாமல் செய்தாலே பாதி நீர் சேமிக்கப்பட்டிருக்கும். பொதுமக்களும் ஒரு துணியை வைத்து உபரி நீரை அடைத்து வைத்தால் என்ன? அப்படி என்ன எத்தனை அலட்சியப் போக்கு? பொறுப்பின்மை மேல்மட்டத்திலிருந்து அடிமட்டம் வரை ஊடுருவியிருக்கின்றது. நம்மைத் திருத்த ஒரு நல்ல சர்வாதிகாரி அமைந்தால் நல்லது என்ற எண்ணம் கூட தோன்றுகின்றது. இந்தியா வல்லரசாவது ஒரு லட்சியம். அந்த லட்சியம் நிறைவேற வேண்டுமாயின், பொது மக்களின் அலட்சியத்திலிருந்து, தனக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்து விட்டது இனி என்ன ஆனால் என்ன என்ற 'அ'சட்டுத்தனமும், தானும் பஞ்ச பூதத்தின் ஒரு கலப்பு விகிதம் தான், பஞ்ச பூதங்களைக் காத்தால் தானும் காக்கப் படுவோம் என்பது தெரியாத 'அ'றியாமையும், தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்னும் 'அ'கம்பாவமும் ஆகிய 'அ' க்கள் நீக்கினாலே போதும். அலட்சியம் எப்போது 'அ' நீங்கி லட்சியம் நிறைவேறுமோ?!
15 அக்டோபர் 2007
அலை - 9 நேற்று ஒரு சின்ன வேலையாய் சிவகாசி அரசு பொது மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய வேலை வந்தது. அழைத்தவர் என் தணிக்கைப் படிப்பின் குரு திரு. கிரிதர். அங்கே ஏதோ ஓரு வங்கி மேலாளர் தொண்டு செய்வதாயும் அதைக் காண வருமாறும் அழைத்திருந்தார். எனக்கு முதலில் செல்லத் தயக்கம் தான். சரி, பணம் ஏதோ கேட்கப் போகின்றார்கள் என்று நினைத்துக் கொண்டேன். மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே செல்ல நேர்ந்தது. அங்கு சென்றதும், அந்த வங்கி மேலாளர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதுடன் மருத்துவமனையில் ஆட்களை வைத்துப் பல இடங்களைச் சுத்தம் செய்வதாகவும் அதைக் காணுமாறும் அழைத்துச் சென்றார். ஒரு மருத்துவமனை எப்படி இருக்கக் கூடாதோ அப்படி இருந்தது அரசு மருத்துவமனை. உண்மையில் யாரேனும் நோயைத் தீர்ப்பதற்காகச் சென்றால் கட்டாயம் வேறு நோயோடு தான் திரும்ப வருவார்கள். அசுத்தம், குப்பை, கழிவு இவைகளின் ஆக்கிரமிப்பாக மருத்துவமனை இருந்தது கண்டு மனம் வருந்தியது. அத்துடன் அவர் சொன்னது தான் ஆச்சரியம் தந்தது. "இப்போ பாதியாக் குறைஞ்சிருக்கு சார். 3 வாரமா ஞாயிற்றுக் கிழமை இதைச் செய்றோம்." என்றார். "எவ்வளவு செலவாகின்றது?" என்று கேட்டேன். "செலவே கிடையாது சார். இங்கே வேலை பார்க்குறவங்க அவ்வளவு பேரும் சுய உதவிக் குழுக்கள்ல இருக்குறவங்க. சுமார் 200 பேருக்கு மேல் இருக்காங்க. வாரத்துல ஒரு நாள் சம்பளம் கூட வாங்காம இப்படி வேலை செய்றாங்க. அவங்க ஊர்க்காரங்க தானே இங்கே மருத்துவம் பார்த்துக்குறாங்க. அதான்" என்றார். எனக்குள் எண்ணங்கள் ஓட ஆரம்பித்தது. இந்த மேலாளர் வெளியூர்க்காரர். வேலை செய்பவர்களோ கூலி வேலை செய்து பிழைப்பவர்கள். இவர்கள் இருவரையும் ஒருங்கிணைத்தது எது? தன்னலமில்லாச் சேவை. இது போன்ற சேவை செய்வார்கள் இருப்பதால் தான் மழை பெய்கின்றது. கடமையைச் செய்ய வேண்டியவர்கள் செய்யாததால் இவர்கள் எல்லாம் உள்ளே புகுந்து தம் சேவை செய்ய வேண்டியிருக்கின்றதே? கடமையை இப்போதும் செய்யாதவர்களைச் செய்ய வைக்காமல், வாரத்திற்கு ஒருமுறை மட்டும் போய் சேவை செய்வதால் என்ன சாதிக்க முடியும்? என்ற கேள்விகளுடனேயே வெளியேறினேன். படங்கள் சில பதிவுசெய்தேன் செல்பேசியில். இதோ உங்கள் பார்வைக்கு! கழிவு நீர் வாய்க்காலில் இருக்கும் நோய் பரப்பிகள்!
படம் கிடைக்கவில்லை
குப்பைகள், கழிவுகளால் சூழப்பட்டிருக்கும் வளாகம்.
படம் கிடைக்கவில்லை
சுய உதவிக் குழு உறுப்பினர்களின் சேவை.
படம் கிடைக்கவில்லை
17 அக்டோபர் 2007
அலை - 10 நேற்று ஏதோ ஒரு தொலைக்காட்சியில் சும்மா நிகழ்ச்சிகளை மாற்றிக் கொண்டிருந்தேன். ஒரு கால்பந்து விளையாட்டு ஒளிபரப்பு நடந்து கொண்டிருந்தது. இரவு நேரம் வண்ண மயமான ஜொலிக்கும் விளக்கொளியில் பெரியதொரு மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. எங்கே பூமிக்கு நான்கு சூரியன்கள் வந்து விட்டார்களோ என்று நான்கு புறமும் சிறியதாய் நிழலோட வீரர்கள் விளையாடுவதைக் கண்டு ரசித்தேன். திடீரென எண்ண அலை அடிக்க ஆரம்பித்தது! அந்த விளக்குகளில் எத்தனை சின்னச் சின்ன பல்புகள் இணைந்து இப்படி ஒளிவெள்ளம் பாய்ச்சுகின்றன என்று எண்ணிப் பார்த்தால் நமக்கே வியப்பாய் இருக்கின்றது. அந்த பல்புகளில் ஒன்றிரண்டு செயல்படாது போய்விட்டால் கூட விளையாட்டு பாதிக்காது. அதே சமயம், மொத்தம் எல்லா பல்புகள் செயல்படாமல் போய் விட்டால் விளையாட்டே நடக்காது. கூட்டுறவாய் இருப்பதால் தான் அத்தனை உயரத்தில் இருக்கின்றனவோ என்று நினைத்துப் பார்க்கிறேன்! சிறு சிறு தடங்கல்கள் பெரிய காரியங்களுக்கு இடையூறாய் இராது என்பதையும் அவை உணர்த்தின! அதே சமயம், தடங்கல்களைக் கண்டும் காணாது விட்டு விட்டாலும் மொத்த காரியமும் பாதிக்கப்படும் அபாயமும் உண்டென்பதையும் அறிவித்தன! அதுமட்டுமா முக்கியமான இன்னொன்றும் அறிந்தேன்! மக்கள் எல்லோரும் காரியத்தில் தான் கண்ணாயிருப்பார்களே ஒழிய, காரணமாய் விளங்கும் விளக்குகளைக் கண்டு கொள்ள மாட்டார்கள் என்பது தான் அது!
4 நவம்பர் 2007
அலை - 11 கடந்த வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் வழக்கம் போல் வகுப்பை முடித்து விட்டு வெளியே வருகின்றேன். சாலையில் ரயில்வே கதவு மூடப் பட்டிருந்தது. கூட்டமாக இருந்தது. நானும் ஓரமாய் வண்டியை நிறுத்தி விட்டு காத்திருக்க ஆரம்பித்தேன். பத்து நிமிடங்கள் ஆகியிருக்கும். ரயிலும் வரவில்லை. கதவும் திறக்கப்படவில்லை. மெதுவாய் விஷயம் கசிய ஆரம்பித்தது. ரயில் அப்போதே சென்று விட்டதாம். கதவு சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக சிக்கிக் கொண்டதாம். திறக்க முடியாதாம் என்று. பள்ளிக்குச் செல்லும் மாணவர்களில் இருந்து அலுவலகம் செல்லும் அவசர மனிதர்கள் வரை பரபரப்பு தொற்றிக் கொண்டது. அந்தக் கதவைத் தாண்டாமல் செல்ல வேண்டுமென்றால் குறைந்தது 5 கி.மீ. சுற்றிச் செல்ல வேண்டிய சூழ்நிலை. ரயில்வே ஊழியரோ வியர்க்க விறுவிறுக்க திறக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். ஊஹும். முயற்சி பயனளிக்கவில்லை. எனக்கு 9 மணிக்கு மேல் தான் வேலை என்பதால் பொறுமையாய் பார்த்துக் கொண்டிருந்தேன் மக்களின் உணர்ச்சிகளை! கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கலைய ஆரம்பித்தது. ஐந்து கி.மீ. சுற்றிச் சென்று விடுவோம் என்று நகர ஆரம்பித்தனர். ரயில்வேயின் குறைபாடுகள் அனைத்தும் வரிசையாய் பட்டியலிடப்பட்டன. முணுமுணுப்புக்களில் இருந்து அதிக பட்ச திட்டு அந்த ஊழியரிலிருந்து லல்லு பிரசாத் வரை சென்றது! ஐம்பது பேர் வரை திரும்பிச் சென்றிருப்பார்கள். ஓரிரு நிமிடங்களில், ஊழியரின் விடாமுயற்சியால் கதவு திறந்தே விட்டது! எல்லோருக்கும் மகிழ்ச்சியைப் பார்க்க வேண்டுமே! அப்போது என்னிடம் அசைந்தாடிய எண்ண அலைகள் இவை! பொறுத்தார் பூமியாள்வார் என்றது சரி தான் போலும் என்று சந்தோசப் பட்டுக்கொண்டேன். (ஒரு வேளை நான் பொறுத்திருந்ததால் இந்தப் பெருமிதம் போலும்!) கதவைத் திறக்கவே முடியாமல் போயிருந்தால் முதலில் சென்றவர்கள் சரியான முடிவைச் சீக்கிரமே எடுத்தவர் ஆகின்றார்களே! அவர்களை அவ்வாறு செய்யத் தூண்டியது எது? நமக்கேன் அந்தச் சிந்தனை வரவில்லை? ஒரு வேளை வேலை அவசரமாயிருந்தால் நாமும் சென்றிருப்போமோ என்று நினைத்தேன். நாம் எதுவரை பொறுத்திருப்பது என்ற கேள்விக்கு அப்புறம் ஒருவாறு சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தேன். அந்தக் கதவில் தினந்தோறும் வேலை செய்பவர் அவர். அவரே நம்பிக்கையுடன் திறந்து விடும் என்று முயற்சிக்கின்றாரே, அது வரை நாம் பொறுப்பதில் தவறில்லை. அவரே ஒரு முடிவுக்கு வந்து, என்னால் முடியவில்லை, ஒரு பத்து நிமிடத்தில் நிபுணர் வந்து திறந்து விடுவார் பொறுங்கள் என்று சொன்னால் நிச்சயம் பொறுத்திருக்க மாட்டேன் என்று தோன்றியது. எப்படியோ கதவு திறந்தது சந்தோசமே.
24 நவம்பர் 2007
அலை - 12 இந்த முறை பாதயாத்திரை செல்லும் போது கோவில்பட்டி நகருக்குள் நடந்து சென்று கொண்டிருக்கின்றோம். அப்போது நடந்த ஒரு சிறு நிகழ்ச்சியும் அப்போது தோன்றிய எண்ண அலையும் தான் தற்போது உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தது. வழியில் அரசாங்கம் கட்டிக் கொடுத்திருந்த கழிப்பறையில் ஆண், பெண் படங்கள் வரைந்து வைத்திருந்தனர். அந்தப் பெரிய சுவற்றில் தீபாவளிக்கு வெளியிடப்பட்ட திரைப்படங்கள் முதல், அரசியல் கட்சிக் கூட்டம் வரையான அறிவிப்புக்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர் சிலர். பாவம் எந்தக் கழிப்பறைச்சுவரில் ஒட்டப்பட்டிருந்ததோ அந்தக் கழிப்பறையை உபயோகிக்கக் கூட முடியாமல் தள்ளாடிக் கொண்டிருந்தனர் பொதுமக்கள். இதைப் பார்த்ததும் எனக்குள் பல கேள்வி அலைகள் தோன்றின. இதற்குக் காரணம் யார் அல்லது என்ன? நாம் எப்போது திருந்தப் போகின்றோம்? இது ஒரு சிறிய விஷயம் தானா? இதற்குப் போய் கவலைப்படுவது என்னுடைய கோளாறா?
6 டிசம்பர் 2007
அலை - 13 நேற்று தொலைக்காட்சியில் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்தேன் தற்செயலாக. அதில் ஒரு செய்தி. அரிய ரக பூனை போன்று இருக்கும் சீனப்புலி ஒன்று சீன தேசம் அல்லாத வேறு இடத்தில் குட்டி போட்டிருப்பதாகவும், இவ்வகை விலங்கு வெகு அரிதென்றும் அந்தப் புலிக் குட்டியைக் காட்டினார்கள். ஒரு கைக்குள் அடங்குவது போல் இருந்த அந்தக் குட்டியைப் புட்டியில் பாலூட்டிச் சீராட்டி இருவர் கண்ணுங் கருத்துமாய் பராமரிப்பதாய்க் காட்டினார்கள். அக்குட்டிக்கென்று மெத்தை போன்ற படுக்கை எல்லாம் வைத்து மிக அருமையாய் இருந்தது. எனக்குப் பார்க்க மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தது. ஆனால் கடைசியில் செய்தி முடியும் தருவாயில் அவர்கள் தந்த தகவல் தான் எனது எண்ண ஓட்டத்தை மாற்றுவதாய் அமைந்தது. செய்தியில் கடைசியாகச் சொன்ன தகவல் இது தான். "அந்தக் குட்டி அதே விலங்குக் காப்பகத்தில் இருக்கும் தாயிடம் இருந்து பிரிக்கப்பட்டு மிகக் கவனமாகப் பராமரிக்கப் பட்டு வருகின்றது." நமக்கு எத்தனை தான் அரிய இனமாய் இருந்து விட்டுப் போகட்டுமே? அந்தத் தாயைப் பொருத்த வரை அது இன்னும் அரியது தானே? தாயுடன் இருந்தால் இன்னும் போஷாக்குடன் வளரும் வாய்ப்பு இருக்கும் தானே? தாயுடன் சேர்த்தே வளர்க்க இயலாதா? என்ற கேள்வியுடன் மனிதன் தன் சுயநலத்துக்காக என்னவெல்லாம் செய்கின்றான் என்று எண்ணிக் கொண்டேன்.
28 டிசம்பர் 2007
அலை - 14 இரு வாரங்களுக்கு முன் பெங்களூரில் பட்டயக்கணக்காளர்களின் மாநாடுக்குச் செல்ல வேண்டிய சந்தர்ப்பம் வாய்த்தது. அழகிய பெங்களூரைக் குளிர்காலத்தில் பார்த்தது மனதுக்கு மிகவும் இனிமையாக இருந்தது. சிவகாசியிலிருந்து சுமார் 20 பட்டயக்கணக்காளர்கள் சென்றிருந்தோம். மொத்தம் நான்காயிரத்துக்கும் அதிகமான நண்பர்கள் குழுமியதால் மாநாடு கந்திவீரா (எப்படி உச்சரிப்பது!?) குளிரூட்டப்பட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அப்போது மேடையில் பேச்சாளர்கள் கூறிய சில சுவை/பயன்மிகு தகவல்களை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். இன்னும் பத்தாண்டுகளில் எவ்வாறு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயரும் என்று ஒரு அறிஞர் பல உதாரணங்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட ஒரு நண்பர், "டாலருக்கெதிரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வது இருக்கட்டும். நம் நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பாலானோர் இன்னும் மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கின்றனரே அதற்கு என்ன செய்வது?" என்று கேட்டார். அதற்கு அந்த அறிஞர் சொன்ன விஷயம் சிந்திக்கத் தக்கதாய் இருந்தது. "இந்தியாவில் தற்போது நூறு கோடி ஜனத்தொகை இருக்கின்றதென்றால் அதில் 70 கோடி பேர் வசதியில் மிகவும் பின் தங்கியவர்களாக இருக்கின்றனர். மீதி இருக்கும் 30 கோடி பேர் பொருளாதாரத்தில் நடுத்தரம் மற்றும் உயர்ந்த வர்க்கத்தவர்களாய் இருக்கின்றனர். நாம் இன்னும் பத்தாண்டுகள் கழித்து என்று பேசுவது இந்த முப்பது கோடி பேரின் வளர்ச்சி பற்றித் தான். அப்படியானால் மீதி இருக்கும் 70 கோடி பேரின் நிலை என்ன என்ற கேள்விக் குறி எழுகின்றது. அது நியாயமானதே. மக்களின் வாழ்க்கைப் போக்கு அவ்வாறு இருக்கின்றது. ஒருபுறம் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகின்றது. வருடத்திற்கு லட்சோப லட்சம் பட்டதாரிகள் கல்லூரிகளில் இருந்து வெளியேறுகின்றனர். இன்னொரு பக்கம் பணியாளர் கிடையாத் திண்டாட்டம் மிக அதிகமாக இருக்கின்றது. எந்தத் துறையாய் இருந்தாலும் நல்ல சம்பளம் கொடுத்தும் கூட சிரத்தையுடன் செய்யும் பணியாளர் கிடைப்பது மிக அரிதாக இருக்கின்றது. இன்னொரு வகையில் சொன்னால், வேலையில்லாமல் இருப்போரின் தகுதிக்கும், வேலை தருவோரின் எதிர்பார்ப்புக்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கின்றது. அந்த இடைவெளியைக் குறைப்பதற்காக நாம் அனைவரும் பாடுபடவேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம்." என்று சொல்லிக் கொண்டே வந்தவர் கடைசியாக, அந்த எழுபது கோடி பேரின் வாழ்க்கைத் தரத்தையும் மீதி இருக்கும் முப்பது கோடி பேர் சேர்ந்து முன்னேற்ற வேண்டும். முன்னேற்றுவார்கள் என்று நம்பிக்கையுடன் முடித்தது எனது எண்ணங்களில் அலைகளாய் வெகுநேரம் (இப்போது வரை!) சுழன்று கொண்டிருக்கின்றது!
அலை - 15 இதுவும் மேலே சொன்ன பெங்களூர் மாநாட்டில் பேசப்பட்ட விஷயம் தான். இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் ஸ்தாபனத்தின் முன்னாள் தலைவர் திரு. மனோகரன் பேசும் போது கூறிய ஒரு சிறுகதை இது! முதலில் என்னவோ ஏதோவென்று சிந்திக்க வைத்து பின் அவர் எதற்கு அவர் இதை உதாரணமாய்ச் சொன்னார் என்றறிந்த போது கூட்டமே அதிசயித்து ரசித்து ஆரவாரத்துடன் சிரித்தது. படிக்கும் காலத்தில் அவரது வருமான வரி வகுப்புக்களில் கலந்து கொண்டு அவரது ஆவல் தூண்டும் உரைகளைக் கேட்கும் பாக்கியம் கிடைக்கப்பெற்றவன் நான் என்பதில் மகிழ்ச்சி எனக்கு. சரி இப்போது கதைக்கு வருவோம். பட்டப்பகலில் ஒரு ரயில் தடம்புரண்டு வயல்வெளியில் இறங்கி விட்டிருந்தது. ரயில் நின்று விட்டது. சிலருக்குக் காயத்துடன் தப்பியிருந்தனர். இப்போது ரயில் ஓட்டுநரிடம் விசாரணை நடந்து கொண்டிருந்தது. அதிகாரி: "வண்டி ஒழுங்காகச் சென்று கொண்டிருக்கும் போது ஏன் தடம் புரண்டது?" ஓட்டுநர்: "அய்யா, நான் வண்டியை ஒழுங்காகத் தான் ஓட்டிக் கொண்டிருந்தேன். அப்போது தூரத்தில் ஒருவன் தண்டவாளத்தின் மீது சாவகாசமாக நடந்து வந்து கொண்டிருப்பதைக் கண்டேன். பலத்த அழைப்பான் சத்தம் கொடுத்தும் அவன் கண்டு கொள்வதாய் இல்லை" அதிகாரி: "அட! அதைப் பற்றி உனக்கென்ன கவலை? சட்டம் தான் உன்னைப் பாதுகாக்கின்றதே! நீ ஓட்டி வரும் வண்டியில் அமர்ந்திருக்கும் மனிதர்களின் உயிரை விட அந்த ஒருவனின் உயிரா பெரிது? அவனை ஏற்றி இருந்தால் இந்நேரம் இத்தகைய விபத்து நிகழ்ந்திருக்காதே? அதைச் செய்யாமல் இப்படியா வண்டியைத் தடம் புரளச் செய்வது?" ஓட்டுநர்: "நீங்கள் சொல்வது மிகச் சரி. நானும் அது படி தான் அவனை ஏற்றுக் கொல்ல முடிவு செய்தேன். நான் ஓட்டி வருவதைப் பார்த்ததும் அவன் திடீரென்று வயல்வெளியில் இறங்கி ஓட ஆரம்பித்தானா? அதனால் நானும் அவனைக் கொல்வதற்காக ரயிலை வயல்வெளியில் இறக்கி விட்டேன்" இது தான் கதை! இதை அவர் எதற்கு உதாரணமாய்ச் சொன்னார் தெரியுமா? பல செயல்படுத்த முடியாத கிடுக்கிப் பிடிகளைத் தேவையில்லாமல் வருமான வரி/ஆய/சுங்க/சேவை வரிச்சட்டத்தில் கொண்டு வந்திருக்கும் நிதி மந்திரி தான் ரயில் ஓட்டுநர். வரிகள்/ சட்டங்கள் ஆகியவை ரயில். ஒழுங்காக வரிகட்டுவோர் ரயிலில் பயணம் செய்பவர்கள். கருப்புப் பணத்தை மடக்குகின்றேன் பேர்வழி என்று பல வித வரிகளை, வித விதமாய் மாற்றி மாற்றிப் போட்டாலும், அதிலிருந்து எளிதில் தப்பி விடுபவர்கள் தண்டவாளத்தில் வருவது போல் வந்து விட்டு வயல் வெளியில் மறைந்து விடுபவர்கள். அவர்களைப் பிடிப்பதற்காக மொத்த ரயிலையும் திருப்பி, எல்லோரையும் அவதிக்குள்ளாக்கி, ரயிலும் ஓடாமல், விபத்துக்கும் உள்ளாக்கி பொருளாதாரத்தில் பல பிரச்னைகளுடன் கூடிய இடியாப்பச் சிக்கலான சட்டதிட்டங்கள் கொண்ட வரி அமைப்பு உருவாக்கிய பெருமை ஓட்டுநர்களைச் சாரும் என்று முடித்தார். ஆச்சரியத்தில் ஆழ்ந்தோம்! மறக்க முடியாத அலை தான்!
அலை - 16 இதுவும் அங்கே நடந்த ஒரு நிகழ்வில் பரிமாறிய தகவலே. தி ஆர்ட் ஆப் லிவிங் ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் சிறப்புப் பேச்சுரையுடன் ஆரம்பித்தது இரண்டாவது நாள் மாநாடு. மிக எளிமையான ஆங்கிலத்தில், அனைவருக்கும் புரியும் வண்ணம் அமைதியாய், மேடையில் அங்குமிங்கும் உலாத்திக் கொண்டு இனிமையாய் பேசினார் குரு. அவரது பேச்சில், அன்பும், சாந்தமும், சமத்துவமும், சமாதானமும் இன்றைய உலகிற்கு எவ்வளவு தேவை என்ற ஆதங்கம் தொனித்தது. அப்போது அவர் கூறிய தகவல் தான் இப்போதைய எண்ண அலை. இந்தியாவில் நாம் தான் சொல்கின்றோம். அனைவரும் ஒன்று. வேற்றுமையில் ஒற்றுமை என்று. ஆனால் இந்தியாவின் ஒரு பகுதியான நாகலாந்தில் இப்போதும் ஒரு பகுதியில் வசிக்கும் மக்கள் அந்தப் பகுதி தவிர வேறெங்கும் நிலம் வாங்கக் கூடாது என்ற சட்டம் இருக்கின்றது. அது ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்டு இன்றும் கூட அமுலில் இருக்கின்றது. இன்னும் நூற்றுக்கணக்கான மாவட்டங்களில் தொழில் துவங்கக் கூட யாரும் முன்வருவதே இல்லை. காரணம் நக்சலைட்டுகள். நக்சலைட்டுகள் என்பவர்கள் யார்? தகுந்த வழிகாட்டுதல் இல்லாத இந்திய இளைஞர்கள். இவர்களைப் போல் நூறு பேரைத் தான் விவேகானந்தர் கேட்டார். இந்தியாவின் தலையெழுத்தினை மாற்றி அமைக்க. இங்கு கூடியிருக்கும் உங்களைப் போன்ற பட்டயக் கணக்காளர்கள் நிச்சயம் இந்த மாவட்டங்களில் தொழில் துவங்க தங்கள் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்க முடியும். அதனால் தீவிரவாதமும் குறையும். நாங்கள் பல நக்சலைட்டுக்கள் குழுவைத் தொழில் துறைக்கு இழுத்து வந்திருக்கின்றோம் என்று நம்பிக்கையுடன் சொன்னார். உண்மையில் ஆச்சரியமாக இருந்தது. என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் என்ற எண்ணம் அலையாக வெளிப்பட்டது.
23 ஜனவரி 2008
அலை - 17 கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்று சொல்வது கீதை. எனினும் நம் மனம் பலனை எதிர்பாராமல் இருப்பதில்லை. இந்தப் பொருளுலகத்தில் குறைந்த பட்சம் கடமையைச் செய்யும் வரை பலனை எதிர்பாராமல், செய்தவுடன் எதிர்பார்ப்பதிலாவது தவறில்லை என்று நினைக்கின்றேன். வயலுக்குப் பலன் அறுவடை. மாணவர்க்குப் பலன் பரிட்சையில் தேர்ச்சி. இன்று ஒரு மகிழ்ச்சியான நாள். ஒரு ஆசிரியரிடம் பயின்ற மாணவன் பேரும் புகழும் அடைகையில் உண்மையில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் உவகையும் அடைபவர்களில் ஆசிரியரும் ஒருவராக இருப்பார் தானே. அத்தகைய அனுபவம் இன்று எனக்கு! பட்டயக்கணக்காளர் படிப்பிற்கு எங்களிடம் பயின்ற மாணவர்கள் 10 பேர் இன்று இரண்டாம் நிலை தேர்ச்சி அடைந்தனர் என்ற செய்தி இன்று காலையை மகிழ்ச்சியான காலையாக விடியவைத்தது. நான் தேர்வு எழுதி தேர்ச்சியடைந்த சந்தோசம் போல் இரட்டிப்பு சந்தோசம் அடைந்தேன். தேர்ச்சி பெற்ற இளந்தலைமுறையினர் மென்மேலும் முன்னேற வேண்டும் என்ற மனம் நிறைந்த ஆசியும், தேர்ச்சியடையாதோர் அடுத்த தேர்வில் தேர்ச்சி பெற ஊக்கமும் தருவதே என் கடமை. இன்றைய எண்ண அலைகள் மகிழ்ச்சிப் பேரலைகளாய் வந்தது. :)
16 மார்ச் 2008
இதோ, இப்போதே! அலை - 18 சென்ற முறை சென்னை சென்றிருந்த போது வேலையெல்லாம் முடித்து விட்டு தங்கியிருந்த அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். இரவு 9.50 மணி இருக்கும். ஆட்டோவில் ஏறினேன். நான் செல்ல வேண்டிய இடத்தை ஓட்டுநரிடம் சொல்லிவிட்டு ஏறி அமர்ந்து கொண்டேன். வண்டி சிறிது தூரம் சென்றிருக்கும். ஓட்டுநர் "சார் நான் பக்கத்துல ஒரு இடம் வரைக்கும் வசூலுக்குப் போக வேண்டியிருக்கு. 2 நிமிசம் எக்ஸ்ட்ரா ஆகும் பரவாயில்லையா?" என்றார். நான் நினைத்துக் கொண்டேன், "சரியா நமக்குன்னு எங்கிருந்தோ வந்து சிக்குறாங்கப்பா. நம்ம முகத்துல ஏதோ எழுதி ஒட்டிருக்குமோ?" என்று. வேண்டாம் என்றால் விட்டு விடவா போகின்றார். நீங்க வேற ஆட்டோல ஏறிக்கோங்க சார் என்றால் என்ன செய்வது? ராத்திரி நேரம் வேறு. அடுத்து எனக்கு வேலை என்று தூங்கப் போவது மட்டுமே இருந்ததாலும், அப்படி எங்கே தான் போகின்றார் பார்ப்போம் என்ற நினைப்பினாலும், "சரி" என்று மட்டும் சொல்லிவைத்தேன். வண்டி சிறிது தூரம் செல்ல வேண்டிய சாலையிலிருந்து பிரிந்து சென்றது. இன்று சிவராத்திரி தான் போலும் என்று நினைத்திருந்தேன். வண்டியை நிறுத்தி விட்டு, "தோ வந்துட்றேன் சார்" என்றவர் நான்கு கால் பாய்ச்சலில் சாலையின் குறுக்கே பாய்வார் என்று நினைக்கவே இல்லை. இத்தனைக்கும் அந்த ஓட்டுநருக்கு வயது ஐம்பதாவது இருக்கும். ஓட்டமும் நடையுமாகச் சென்றவர், ஒரே நிமிடத்தில் திரும்பி வந்து விட்டு ஆட்டோவைக் கிளப்பினார். எனக்கு ஆச்சரியமான ஆச்சரியம். இதற்காகவா என்னிடம் அனுமதி கேட்டார்? ஒரு நிமிட வேலை என்றால் அவராகவே நிறுத்தி விட்டு, சென்றிருக்கலாம் தானே என்று நினைத்துக் கொண்டேன். அவரிடமே அதைக் கேட்கவும் செய்தேன். அதற்கு அவர் சொன்ன பதில் எனக்கு பெரிய படிப்பினையாய் இருந்தது. "சார், ஒரு நிமிசமானாலும், பத்து நிமிசமானாலும் கஸ்டமர் நீங்களும் சேர்ந்துல்ல காத்திருப்பீங்க. அதான் சார். வேகமா போய்ட்டு வந்துட்டேன்" எத்தனை பெரிய வார்த்தை? நம் அலுவலகத்திலேயே எதிரே நம்மைத் தேடி வந்தவர்களை உட்கார வைத்து விட்டு எத்தனை வேலைகள் செய்திருப்பேன் என்று நினைக்கும் போது வெட்கம் பிடுங்கித் தின்றது. அந்த ஆட்டோ ஓட்டுநரை நினைத்தாலே அவரது கடமையுணர்வு என்னை ஆக்கிரமிக்கும்.
11 மே 2008
அலை - 19 இரண்டு நாட்களுக்கு முன்னர் இரயிலில் இரவுப் பயணம் செய்து கொண்டிருக்கின்றோம். அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு இரவு விளக்குகள் மட்டும் நீல ஒளியை மங்கலாய் வழங்கிக் கொண்டிருந்தது. திடீரென்று நாங்கள் படுத்திருந்த அறைக்கு அடுத்த அறையிலிருந்து இருவர் கத்தி சண்டை போடுவதை அறிய முடிந்தது. (அட! நீங்க வேற! இது கத்திச் சண்டை இல்லை. கத்தி சண்டை!) என்னவென்று எழுந்து போய்ப் பார்த்தால் மேலடுக்கில் ஒரு இளம் பெண்மணி எழுந்து உட்கார்ந்திருக்கின்றார். நடுப் பகுதியில் படுத்திருந்த ஒரு இளைஞர் கீழே படுத்திருந்த முதியவர் ஒருவருடன் வாய்த் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். அவர்கள் பேசிக் கொள்வதிலிருந்து மூவருமே ஒருவரை ஒருவர் அறிந்திருக்கவில்லை என்பது தெரிந்தது. இளைஞரின் சீட்டுப் படி அவர் படுத்திருந்தது அவருடைய இடம் அல்ல. இதை எப்படி எடுத்துக் கொண்டாரோ அந்த முதியவர். இளம் பெண்ணைக் கேலி செய்வதற்காகத் தான் இளைஞர் இங்கே வந்து படுத்திருக்கின்றார் என்று ஏதோ சொல்லியிருக்கின்றார் போலும். உண்மையில் என்ன நடந்ததென்றால், அந்த இளம்பெண்ணின் தாயார் நடுவில் ஏறிப் படுக்க முடியாது என்பதால் அந்த இளம்பெண் இந்த இளைஞரிடம் கேட்டு அவரது இருக்கையை அவரது தாயாரும், அவரது தாயாரின் சீட்டில் இந்த இளைஞரும் மாற்றிக் கொண்டு படுத்திருக்கின்றார்கள். இதில் தவறு என்னவோ முதியவருடையது தான். ஆனால், பேசிய பேச்சுக்களும், எழுப்பிய கூச்சலும் அந்தப் பெட்டியே கொஞ்ச நேரத்துக்கு அல்லோகல்லோலப்பட்டது. இத்தனைக்கும் அந்த இளம்பெண், தான் தான் அந்த இளைஞரை அந்த இருக்கையில் படுக்கச் சொன்னதாகச் சொன்ன பின்னும், அந்த முதியவர் தன் தவறை உணராமல் மேலும் பேசிக் கொண்டே செல்ல, ஒரு கட்டத்தில் ரயில் காவலர்கள் வந்து தீர்க்க வேண்டியதாயிற்று. அந்த இளைஞர் மேல் தவறில்லை என்றாலும், சிறிது நேரத்திலேயே முதியவர் என்றும் பாராமல் ஒருமையில் பேச ஆரம்பித்தது மனதுக்கு மிகவும் வருத்தமாய் இருந்தது. முதியவரும் கொஞ்சமும் தன் மேல் தவறிருக்கின்றது என்று ஒப்புக் கொள்ளாமல் சரிக்குச் சரி நின்றதும் கஷ்டமாய் இருந்தது. வெகுநேரம் இவர்களில் யார் பக்கம் நீ நிற்பாய் என்று என்னை நானே கேட்டுக் கொண்ட கேள்விக்குப் பதிலே கிடைக்காமல், தூங்கியே போனேன்.
10 பிப்ரவரி 2009
அலை: 20 இன்று அவசர அவசரமாக இரண்டு அலைபேசி அழைப்புக்கள் பேச வேண்டி இருந்தது. அப்போது எழுந்து மனதை மூடிச் சுருட்டிய ஒரு அலை தான் இன்றைய அலை. ஒரு சின்னக் கணக்குத் தான். நான் உபயோகிப்பது அரசு சார் தொலைபேசி நிறுவனமான BSNL வழங்கும் அலைபேசிச் சேவை. ஒரு அலைபேசி அழைப்பு முடிந்ததும், இன்னொரு அலைபேசி அழைப்பு உடனேயே அழைக்க BSNL விடுவதில்லை! காரணம், அவர்களது சேவையை நாம் பெறுவதற்காக நமக்கு நன்றி அறிவிக்கின்றார்களாம்! ஒவ்வொரு அலைபேசி அழைப்பு முடிந்ததும் (Thank you for using Cellone Services) என்னும் வாசகம் வந்து நிற்கின்றது. இது அழைப்பவருக்கும், அழைக்கப்பட்டவர்க்கும் ஆக, இருவரும் இந்நிறுவன அலைபேசிச் சேவை மூலம் பேசினால், இருவருக்கும் வருகின்றது. அதன் பின்னர் நாம் அலைபேசியை உபயோகிக்க வேண்டுமாயின், Ok என்று அழுத்தி அதன் பின்னரே உபயோகிக்க முடியும்! இதென்ன? சாதாரணமான விஷயம்! இதற்காக இத்தனை அலட்டலா? என்று நீங்கள் கேட்கக் கூடும்! அநேகமாக நாட்டில் பெரும்பான்மையோர் உபயோகிப்பது இந்தச் சேவை ஆகும். இந்தியாவில் சுமார் ஒரு கோடி பேராயினும் இதை உபயோகிப்பார்கள் என்று மனதில் கொள்வோம்! இப்போது ஒரு அலைபேசி அழைப்பை முடித்து அவர்களின் நன்றியை நாம் பெற்றுக் கொண்டு Ok அழுத்துவதற்கு இரண்டு விநாடிகள் ஆகின்றது என்று வைத்துக் கொள்வோம். ஆக, ஒரு முறை அலைபேசி அழைப்பு வந்தால் 4 நொடிகள் இழப்பு ஏற்படுகின்றது. (இருபுறமும் Ok அழுத்த வேண்டும்!) ஒரு நாளைக்கு ஒரு அலைபேசிக்கு 10 அழைப்புகள் வருவதாகவோ பேசுவதாகவோ வைத்துக் கொண்டால், 10,00,00,000 x 4 = 40,00,00,000 அதாவது நாற்பது கோடி நொடிகள் இழப்பு ஏற்படுகின்றது. அதாவது 66,66,666 நிமிடங்கள். அதாவது 11,111 மணி நேரங்கள். அதாவது 4629 மனித நாட்கள். இது ஒரு நாளைக்கு. ஆக, 365 நாட்களுக்கு, 16,89,585 மனித நாட்கள் இழப்பு ஏற்படுகின்றது. ஒரு நாளுக்கு 30 ரூபாய் இழப்பு என்று வைத்துக் கொண்டால், ஒரு ஆண்டுக்கு 5,07,00,000/- ரூபாய் இழப்பு ஏற்படுகின்றது. இந்த ஐந்து கோடியே ஏழு லட்ச ரூபாய் இழப்பை யாரிடம் கேட்டு ஈடு செய்வது? அப்படி அவர்கள் நன்றி சொல்லி நாம் ஏற்க வேண்டுமா? என்ற எண்ண அலை இந்த இரு அலைபேசி அழைப்புக்களின் இடையே தோன்றியது! சீக்கிரமே தீரும் என்று நம்புவோம்!
23 மே 2009
அலை 21: சில வாரங்களுக்கு முன் திடீர் தட்பவெப்ப நிலை மாற்றத்தால் வித்யாவுக்குக் காய்ச்சல் ஏற்பட்டிருக்க மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். சிறார்களுக்கான மருத்துவமனை என்பதாலும், பலரும் காய்ச்சலில் பாதிக்கப்பட்டிருந்ததாலும் கூட்டம் அதிகமாக இருந்தது. எங்கள் முறை வருவதற்கு வெகுநேரம் (கிட்டத்தட்ட 1 1/2 மணி நேரம்) காத்திருந்தோம். அதற்குள் காய்ச்சல் அதுவாகவே குறைந்து விட்டது வேறு விஷயம். விஷயத்துக்கு வருகின்றேன். எனக்கு எதிரே ஒரு மனவளர்ச்சி குன்றிய மகனுக்கு காய்ச்சல் என்று அக்குழந்தையின் தாயும் தந்தையும் அழைத்து வந்திருந்தார்கள். அக்குழந்தையால் உடல் வலி பொறுக்க இயலாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பிக்க, அனைவரின் கவனமும் அக்குழந்தையின் பக்கம் திரும்பியது. நான் ஒருமுறை சுற்றிலும் அனைவரையும் பார்த்தேன். அனைவரின் கண்களிலும் பரிதாபம் மிஞ்சியது. ஆனால், அத்தாயின் முகத்தைப் பார்த்தேன். அவர் எதையும் கண்டுகொள்ளாமல், குழந்தையைச் சமாதானப்படுத்தியும், சிரித்து அதன் கவனத்தைத் திருப்பியும், ஆகாரம் வழங்கியும் அழகாகக் கையாண்டதைக் கண்டேன். இத்தனைக்கும் அவர்களைப் பார்த்தால் காதிலோ கழுத்திலோ குண்டுமணி தங்கம் கூட இல்லை. மிகவும் வறுமையில் தவழும் குடும்பமாகத் தெரிந்தது. குழந்தை வளர்ப்பதே எத்தனை கடினம்? அதிலும் மனவளர்ச்சி குன்றிய அக்குழந்தையால் எத்தனை வருத்தமுற்றிருப்பார்கள்? ஏதோ அனாதையாக்கித் தெருவில் விடாமல், தன்னம்பிக்கையுடனும் மாறா அன்புடனும் தாய்மையுடனும் விளங்கிய அத்தாயை இப்போது நினைத்தாலும் கூட நெஞ்சம் நெகிழ்கின்றது. இவர்களைப் போன்றவர்களால் தான் உலகம் உருண்டோடுகின்றது போலும்.
அலை 22: இதுவும் சில வாரங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு நிகழ்வு. காலை 8.30 மணிக்கு வழக்கம் போல் வகுப்பை முடித்துக் கொண்டு எனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தேன். அப்போது சாலையில் எனக்கு முன் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. எதிர் புறமிருந்து இரண்டு மினி பஸ்கள் வந்து கொண்டிருந்தன. அவைகளின் வேகம் தூரத்தில் இருந்து பார்க்கும் போதே பயமுறுத்துவதாக இருந்தது. இத்தனைக்கும் அந்தச் சாலையின் முடிவில் இருக்கும் ஒரு நிறுத்தத்தில் இருந்து கிளம்பி பதினைந்து நொடிகள் கூட இருந்திருக்காது. அதற்குள் இத்தனை வேகம் எப்படி எடுத்தன? என்று நினைப்பதற்குள் அந்த விபத்து நடந்து விட்டது. ஒரு மினிபஸ்ஸை மற்றொரு மினிபஸ் படுவேகமாக முந்தி விட்டு, எதிரே என் புறம் சென்று கொண்டிருந்த பேருந்துடன் மோதாமல் தவிர்க்க எனக்கு எதிர்புறத்தில் மினிபஸ்ஸின் முன்னே மெதுவாகச் சென்று கொண்டிருந்த ஒரு இருசக்கரவாகனத்தை மோதிக் கண் முன்னே தூக்கி வீசியது! அப்பப்பா! என் கண் முன்னே ஒரு நொடிப்பொழுதில் நடந்த கோர விபத்தைக் கண்டதும் என்ன செய்வதென்று அறியாமல் அவர்களின் அருகில் செல்வதற்குள், மினி பஸ் வெகுதூரம் சென்று விட்டிருந்தது. அந்த வாகனத்தில் ஒரு 8 வயது மதிக்கத் தக்க சிறுவன், அவனது தந்தை, அவனது தாயார் ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். பலத்த அடி யாருக்கும் இல்லை என்பது ஆறுதலான விஷயமாக இருந்தது. சிறுவன் அதிர்ச்சியில் மயக்கமாகி இருந்தான். சட்டென்று சுதாரித்து வண்டியைத் திருப்பி மினிபஸ்ஸைத் துரத்தி நிறுத்தி ஓட்டுநர் பக்கம் பார்த்தால் ஆச்சரியமாக இருந்தது. ஓட்டுநருக்கு 25 வயது கூட இருக்காது. இத்தனை இளவயது நபர் அனுபவமின்றி சாலையில் ஓட்ட அனுமதிக்கும் முன் அவர்களின் நிதானத்துக்குப் பயிற்சியும் தேர்வும் வைக்க வேண்டும் என்று தான் தோன்றியது. என்ன செய்வது? குறைந்த பேருந்துகள். அதிக மக்கள் தொகை. ஒருவருக்கொருவர் பேருந்து ஓட்டும் தொழிலில் போட்டி வேறு. கண் முன்னே நடைபெற்றதால் பெரியதாகத் தோன்றுகின்றதோ என்று உணர்கின்றேன்.
அலை 23: இது நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலின் போது நடந்தது. மறுநாளோடு தேர்தல் பிரச்சாரம் முடிவடையப் போகின்றது என்றிருந்தது. அன்று ஒரு கட்சியிலிருந்து சிலர் ஒவ்வொரு வீட்டிற்கும் வந்தனர். வீட்டிலிருக்கும் வாக்குகளின் எண்ணிக்கைக்கேற்ப ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் நூற்றைம்பது விநியோகிக்கப்பட்டது. இத்தனைக்கும் யாருக்குத் தருகின்றோம் என்பதில்லாமல் சமத்துவமாய் செயல்பட்டது ஆச்சரியம். அதாவது வறுமையில் உழல்பவர்கள் என்று இல்லாமல் பணக்காரர்கள் வசிக்கும் பங்களா வீட்டிற்குள்ளும் சென்று இதே பணம் வழங்கப்பட்டது. எனக்கும் பணம் தரப்பட்டது. அனைத்தும் ஐம்பது ரூபாய் நோட்டுக்கள். ஒவ்வொன்றிலும் காந்தி பாவம் சிரித்துக் கொண்டிருந்தார். பணத்தை வாங்கிய கையோடு எதிர்க்கட்சியினரின் கட்சி அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு தகவலளித்தேன். அவர்களுக்கு இதுகுறித்துத் தெரியாது என்று நான் நினைத்திருக்க, அவர்களோ மிகவும் பரிதாபமாக, தங்களால் இது குறித்து ஏதும் செய்ய முடியாத நிலையில் இருப்பதாகத் தெரிவித்தனர். ஒருவேளை இவர்களும் பணம் வாங்கி இருப்பார்கள் போலும் என்று நினைத்துக் கொண்டேன். இணையத்தில் தேடிப்பார்த்ததில் ஒவ்வொரு மாவட்டத்தின் தேர்தல் அதிகாரிகளின் அலைபேசி எண்களும் பெயர்களும் தரப்பட்டிருந்தன. அவர்களிடம் புகார் செய்யலாமா என்று ஒருகணம் நினைத்துப் பார்த்தேன். நல்லவேளையாக அவ்வாறு நினைத்ததால் ஏதும் செய்யவில்லை. இவர்களுக்கெல்லாம் தெரியாமலா ஒரு கட்சியின் நபர்கள் இத்தனை பெரிய ஊரின் ஒவ்வொரு வீட்டிலும் பணம் விநியோகிக்க முடியும்? பணத்தை வாங்கி அதைச் செல்லாததாக்கி இல்லத்தில் அவ்வப்போது பார்வையில் படும் இடத்தில் வைத்திருக்கின்றேன்.
14 ஜூன் 2009
அலை 24: இன்று நமது அரசின் கல்வித் திட்டத்தின் பிரச்னைகள் குறித்துச் சில அனுபவங்கள் ஏற்பட்டது. அதை விவரிக்க முயல்கின்றேன். இன்றைய தேதியில் திருமணத்திற்கு மாப்பிள்ளை/பெண் பார்க்கும் முன்னமே திருமண மண்டபத்தைப் பதிவு செய்ய வேண்டி இருப்பது போலவே, குழந்தை பிறக்கும் முன்னரே அக்குழந்தையை எந்தப் பள்ளியில் சேர்ப்பது என்று யோசிக்க வேண்டும் போல! அவ்வாறு யோசிக்கவில்லை எனில், நடந்து முடிந்த பத்தாம் வகுப்புத் தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 465 (நன்றாகப் பாருங்கள் 93%) மதிப்பெண் பெற்ற ஒரு மாணவர் போல் நீங்களும் அல்லாட வேண்டியிருக்கும். எனக்குத் தெரிந்த ஒரு ஏழைக் குடும்பத்தைச் சார்ந்தவர் அந்த மாணவர். படிப்பதற்கே மிகவும் கடினமான சூழ்நிலை. அந்தச் சூழ்நிலையிலும், வீட்டிற்கு அருகிலேயே (நான் படித்த பள்ளி தான்!) பத்தாம் வகுப்பு வரை மட்டுமே இருக்கும் அரசு பள்ளியில் சேர்ந்து படித்து நான் மேற்கூறிய மதிப்பெண் பெற்று விட்டார். அடுத்து பதினொன்றாம் வகுப்பில் அவரைச் சேர்த்துக் கொள்ள எந்தப் பள்ளியும் தயாரில்லை என்பது தான் இப்போது கொடுமை. அடுத்துப் பயில அரசு பள்ளி கூட அவரைச் சேர்த்துக் கொள்ள மறுக்கின்றது. காரணம் அவர்களுக்கென்று கொடுக்கப்பட்ட எண்ணிக்கை முடிந்து விட்டதாம்! இந்த மாணவர் பின் தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர். இதற்கும் கீழான வகுப்பைச் சேர்ந்திருந்தால் வா, சேர்த்துக் கொள்வோம் என்று சொல்லிவிட்டனர். மற்ற தனியார் பள்ளிகளோ, இரண்டு கேள்விகளால் இம்மாணவனைச் சுட்டெரிக்கின்றன. முதல் கேள்வி, நீ படித்தது அரசு பள்ளியிலா? அங்கு பாடம் எல்லாம் எப்படி சொல்லித் தந்தார்களோ? இரண்டாம் கேள்வி, கடந்த பத்தாண்டுகளாக நீ இங்கே படித்திருந்தால் கட்டியிருக்கும் கட்டணத்தை இப்போது கட்ட முடியுமா? நான் கேட்கின்றேன், இப்படிப் பள்ளிக்குப் பள்ளி வித்தியாசத்தைப் போக்குவதற்காகத் தானே பத்தாம் வகுப்புத் தேர்வு பொதுவில் நடத்தப் படுகின்றது? பாவம் அந்த மாணவன். இத்தனை மதிப்பெண்கள் பெற்றும் கூனிக் குறுகி ஒவ்வொரு பள்ளிக்கும் பந்தாடப்படுவதையும் ஏழையாய் அதுவும் இந்த சாதியில் பிறந்து விட்டோமே என்று நொந்து போய் விரக்தியாய்ச் சென்றதையும் காணும் போது மனம் வலிக்கின்றது. இது மட்டுமின்றி, பத்தாம் வகுப்புக்கான மதிப்பெண்கள் பட்டியல் வெளியிட்டதும் புத்தகங்களை வெகு வேகமாக விநியோகித்ததாய் மார் தட்டிக் கொண்ட அரசு, இன்னமும் மாற்றுச் சான்றிதழும், அசல் மதிப்பெண் சான்றிதழும் தரவில்லை! இதனால் 12ம் வகுப்பு வரை இருக்கும் பள்ளியில் படிப்பவர்கள் வழக்கம் போல் பதினொன்றாம் வகுப்புக்குச் சென்று விட, பத்தாம் வகுப்பு வரை மட்டுமே இருக்கும் பள்ளியில் படித்து முடித்தவர்கள், பள்ளி ஆரம்பித்து இத்தனை நாட்கள் ஆன பின்னும் மாற்றுச் சான்றிதழும் கிடைக்காமல் எந்தப் பள்ளியில் சேர்ப்பது என்று அல்லாடுகின்றனர். மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடும் கல்வித் துறையில் ஏன் இத்தனை குளறுபடிகள்?! ஆரம்பப் பாடசாலையில் பயின்றவர்கள் எல்லாம் உயர்நிலைப் பள்ளியில் சேர வேண்டாம் என்று அரசே நினைப்பது போல் இருக்கின்றது. விரைவில் தீர்வு வரட்டும்.
அலை 25: இந்த அனுபவம் நான் முன்பு கூறிய ஏழை மாணவருடைய தந்தையுடனான ஒரு உரையாடலின் போது எனக்கு ஏற்பட்டது. அவர் நான் வெகுகாலமாக முடி திருத்திக் கொண்டிருக்கும் கடையை வைத்து நடத்திக் கொண்டு இருக்கின்றார். மிகவும் சாது. சமூக நடவடிக்கைகள், பொதுநலச் சேவை ஆகியவற்றிலும் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர். முக்கியமாக, எங்கள் தெருவில் பள்ளிக்கு அருகிலேயே இருக்கும் ஒரு மதுபானக் கடையை எப்படியும் மூடி விடவேண்டும் என்று அவர் எவ்வளவு பாடுபட்டார் என்பது எனக்குத் தெரியும். அது நடக்கவில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும். அவருக்கு 3 குழந்தைகள். 2 மகள்கள், ஒரு மகன். மூத்த மகள் பட்டப்படிப்பு படித்து முடித்து இப்போது தான் வேலைக்குச் செல்கின்றார். இளைய மகள் கல்லூரி படித்துக் கொண்டிருக்கின்றார். மகன் இப்போது பத்தாவது முடித்து விட்டுப் பள்ளி கிடைக்காமல் கஷ்டப்படுகின்றார். அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்னவை: "நான் இதுவரை என்னோட சாதனைன்னு நினைக்கிறது யாரிடமும் கடன் வாங்கியதில்லை என்பதுவும் யாரிடமும் தகுதியின்றிச் சிபாரிசுக்குக் கேட்பதில்லை என்பதுவும் தான். என்னுடைய குழந்தைகள் அத்தனை பேரும் பொறுப்புடன் படித்ததால் எனக்கு அது சாத்தியமானது. இதுவரை அவர்களைப் படி என்று நான் சொன்னதில்லை. என்ன படிக்கின்றார்கள் என்றும் பார்த்ததில்லை. திரைப்படம், தொலைக்காட்சி என்று நேரம் செலவளிப்பதும் இல்லை. வாழ்க்கையில் பல இக்கட்டான சூழ்நிலைகளிலெல்லாம் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டாலும், பல்லைக் கடித்துக் கொண்டு கடன் வாங்காமல் சமாளித்திருக்கின்றேன். என்னை நம்பி எந்த வங்கியும் கடன் தருவதில்லை. தந்தால் மீட்டர் வட்டியும் கந்து வட்டிக் காரர்களும் தான் தருவார்கள். அவர்களிடம் வாங்கி இருந்தால் என் நிம்மதி தான் அடகு போயிருக்கும். எனவே நான் யாருக்கும் கடன் கொடுப்பதும் இல்லை. வாங்குவதும் இல்லை", என்றார். இவ்வளவும் சொன்னவர் இன்னொன்றும் சொன்னார். அதில் எனக்கு ஒப்புதல் இல்லை. இருப்பினும் அவர் சொன்னதை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன். அதாவது அவரது குழந்தைகள் பொறியியல் கல்லூரியில் சேரும் அளவுக்கு நல்ல மதிப்பெண் பெற்ற போதும், கலைக்கல்லூரியிலேயே சேர்ந்து படிக்குமாறு அறிவுறுத்தினாராம். கஷ்டமான மேற்படிப்புப் படித்துக் குறைந்த மதிப்பெண் வாங்குவதைக் காட்டிலும், எளிதான மேற்படிப்புப் படித்து முதல் மதிப்பெண் பெறுவது சிறந்தது என்பது அவருடைய எண்ணம். வாழ்க்கையில் அவரின் லட்சியமும், வாழ்க்கையை நடத்திச் செல்லும் விதமும் அறிந்து கொள்ளப் பரவசமூட்டுவதாய் இருந்தது.
25 ஜூலை 2009
அலை: 26 இன்று அலுவலகத்திற்கு வந்த நண்பர் ஒருவரின் அனுபவத்திலிருந்து... இந்த நண்பர் தமிழகத்திலிருந்து வியாபார நோக்கிற்காக கேரளாவில் இடம் பெயர்ந்து சென்று அங்கேயே 25 வருடங்களுக்கும் மேலாக வசித்து வருகின்றார். அவ்வப்போது தமிழகத்துக்கும் வந்து செல்வார். குழந்தைகள் தமிழகத்தில் பிறந்தவர்கள் என்றாலும், படித்தது எல்லாமே மலையாளம் தான். கிட்டத்தட்ட மலையாளிகள் என்றே சொல்லலாம். இப்போது அவர்கள் கல்லூரியில் படிக்கும் வயதினை எட்டி இருக்கின்றார்கள். அங்கிருக்கும் பொறியியல் கல்லூரியில் இடமும் கிடைத்தது. பணம் கட்டப் போகும் போது ஏற்பட்ட அனுபவம் தான் அதிர்ச்சி தருவதாக இருந்தது. அதாவது கேரளாவில் பிறந்து வளர்ந்த மாணவர் என்றால் ஆண்டுக்கு ரூபாய் 25,000/- கட்டணமாம். அதுவே வேறு மாநில மாணவர்கள் என்றால் ரூபாய் 35,000/- கட்டணமாம். தமிழகத்தில் எந்த ஒரு கல்லூரியும் இது போன்று கட்டணம் வசூலிப்பதில்லையே என்று ஆச்சரியமாக இருந்தது. இது தான் இந்திய ஒருமைப்பாடு என்று நினைத்துக் கொண்டேன்.
29 டிசம்பர் 2009
அலை - 27 இன்று காலை அலுவலகம் வரச் சற்றுத் தாமதமாயிற்று. அவசர அவசரமாகக் கிளம்பி வந்தால் எப்போதும் நெரிசலாக இருக்கும் பாதையில் இன்றோ நகரக் கூட இடமில்லாமல் நிறைய வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. என்னவென்று விசாரித்தால், பக்கத்தில் இருந்தவர், "என்னவோ தெரியலீங்க. ஏதோ ஆம்புலன்ஸ் சத்தம் மாதிரி கேக்குது. ஏதாச்சும் விபத்து நடந்திருக்கும்னு நினைக்கிறேன்" என்றார். நானும் கூர்ந்து கவனித்தேன் தூரத்தில் ஆம்புலன்ஸ் வண்டியின் சத்தம் போல் சைரன் சத்தம் கேட்டது. சரியென்று காத்திருக்க ஆரம்பித்தேன். ஐந்து நிமிடங்கள் காத்திருத்தலுக்குப் பின் தான் தெரிய வந்தது ஒரு தமிழக அமைச்சர் அந்த வழியாகச் செல்கின்றார் என்று. :) அடேங்கப்பா! எத்தனை ஆரவாரம்? எத்தனை ஆர்ப்பாட்டம்? 30 கார்கள் புடை சூழ, முன்னும் பின்னும் பல காவல்துறை வண்டிகள் புழுதி கிளப்ப அமைச்சர் சென்று கொண்டிருந்தார். அப்போது எனக்கு ஒரு பாடல் மனதுக்குத் தோன்றியது.
மாதர் பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி
போதொடு நீர் சுமந்து ஏத்தி, புகுவார் அவர் பின் புகுவேன்!
யாதும் சுவடு படாமல், ஐயாறு அடைகின்ற போது
காதல் மடப் பிடியோடு, களிறு வருவன கண்டேன்!
கண்டேன் அவர் திருப்பாதம்!
கண்டறியாதன கண்டேன்!!
மேலே கண்ட அப்பர் பாடல் தான் அது. மிகக் கடுமையான கைலாய யாத்திரை மேற்கொண்ட அப்பர் மானசரோவர் ஏரியில் மூழ்க, எழும் போது திருவையாறு குளக்கரையில் எழுந்தார். அப்போது பாடிய பாடல் இது. இதில் வரும் பதமான "யாதும் சுவடு படாமல்" என்பதற்கு சிலேடையாய் பொருள் காணலாம். காலடிச் சுவடே படாமல் திருவையாறு வந்ததாகவும், தான் வந்த ஆடம்பரம் ஏதுமின்றி எனவும் கொள்ளலாம். பல அடியவர்கள் முன்னே செல்ல அவர்கள் பின்னால் நான் புகுவேன் என்ற வார்த்தைகளால் அது விளங்கக் கூடும். அவர் அப்பர். இவர்?