பதியம்
முத்தமிழ் மன்றத்தில் எழுதியது · 2 செப்டம்பர் 2007 – 5 ஜூன் 2009
தண்டு - 1 சென்னை மருத்துவக் கல்லூரி. பல மருத்துவர்களைத் தன் வாழ்நாளில் உருவாக்கி வழியனுப்பி விட்ட அலுப்பில் கல்லூரியின் கதவு துருப்பிடித்து காவலர் அடைக்கும் போது சத்தமிட்டுக் கொண்டிருந்தது. உள்ளே நிறைய பசுமையான மரங்கள். இத்தனை மரங்களை யார் ஊன்றி இருப்பார்கள்? அவர்கள் இப்போது உயிரோடு இருப்பார்களா? அவர்களைக் காப்பாற்ற இந்தக் கல்லூரியில் படித்த மருத்துவர்கள் உதவி இருப்பார்களா? தெரியாமலேயே காற்றுக்கு அசைந்து கொண்டிருந்தது. பொங்குங் காலம் புளியமரம், மங்குங் காலம் மாமரம் என்பார்கள். இது பொங்குங் காலம் போலும். புளிய மரங்கள் நிறைய இருந்தன. புளியம் பூக்களில் இருக்கும் இனிய புளிப்பை ரசித்து ருசித்த படி மாணவ மாணவிகள். நேற்று தான் மழை பெய்திருந்ததால் சுத்தமாக இருந்தது மருத்துவக் கல்லூரியைச் சுற்றி கருப்பு ரேகையாய்ப் பரவி இருந்த தார்ச் சாலைகள். ஆங்காங்கே பள்ளத்தில் நீர் தேங்கி இருந்தது. பணக்காரர்கள் மட்டுமே படிக்க முடிகின்ற படிப்பாய் மருத்துவப் படிப்பு இருப்பதால் மருத்துவர்கள் பணக்காரர்கள் ஆகின்றார்களா? அல்லது மருத்துவர்கள் பணக்காரர்களாய் இருப்பதால் அந்தப் படிப்பும் அப்படி இருக்கின்றதா? என்ற கேள்வி கேட்பது போல் செல்வச் செழிப்பைக் காட்டிக் கொண்டிருந்தது கல்லூரிக் கட்டிடங்கள். உள்ளே செல்லும் அனைவரும் எங்கள் உள்ளம் எப்படியோ தெரியாது ஆனால் எங்கள் உடுப்பு வெள்ளை என்று வெள்ளைக் கோட் மாட்டிச் சென்று கொண்டிருந்தனர். இன்று யாரை அல்லது எதை அறுக்கப் போகின்றோம் என்பது பேச்சாக இருந்திருக்குமோ? எத்தனையோ மருந்துகள் பற்றியும் உடல் உறுப்புக்கள் பற்றியும் கவனமாய் ஊன்றிப் படிக்க வேண்டிய இந்தக் கால கட்டத்தில் கூட நண்பர்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டு செல்வது ஆச்சரியம் தானே? காலை மணி 10.15. கல்லூரி ஆரம்பித்து 15 நிமிடம் ஆகியிருந்தது. வெகு வேகமாக வாசலில் ஒரு ஹோண்டா சிட்டி கார் வந்து நின்றது. வழக்கமாக சரியான நேரத்திற்குள்ளேயே வந்து விடும் கார் என்ன இன்று தாமதமாக வந்திருக்கின்றதே என்று ஆச்சரியம் வாட்ச்மேனுக்கு. லேட்டாக வரும் வண்டிகளை விடக் கூடாது என்று டீன் கட்டளை இட்டிருந்தார். ஆனால் வாட்ச்மேன் அவராகவே கதவைத் திறந்தார். கார்க் கண்ணாடி தானியங்கியால் திறந்தது. தலையை மட்டும் லேசாக அசைத்து நன்றி சொன்னார் உள்ளிருந்தவர்! வாட்ச்மேன் அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார். "எவ்வளவு பெரிய பணக்காரங்கன்னு தெரியலப்பா. ஆனா அதுக்கு இருக்குற மரியாதை யாருக்கும் வராது தெரியுமா?" இன்னொரு வாட்ச்மேனிடம் பேசிக் கொண்டார். காரிலிருந்து அவசரமாக இறங்குவது யாரென்று தெரியவில்லையா? நன்றாகப் பாருங்கள் நம் வேதா தான். (ஊன்றும்)
3 செப்டம்பர் 2007
தண்டு - 2 பச்சைப் பசேல் வயல்வெளியெல்லாம் சுற்றும் காற்றாடிகளாய் மாறிக் கொண்டிருக்கும் தென்னிந்தியாவின் எல்லை. ஆடி மாதம் மட்டும் இல்லாது எப்போதும் ஆடி அம்மியே பறக்கும் படி வீசும் காற்று. மூன்று திசைகளிலும் கடல் இருப்பதால் இருக்குமோ? ஆம் கன்னியாகுமரி. முக்கடல்களும் முக்கூடலாய் சந்திக்கும் இடம். அது மட்டுமின்று மேற்கு மலைத் தொடர் வந்து முடிச்சாய் விழும் இடமும் கூட. நாம் இங்கேயே இருந்தால் கன்னியாகுமரியையே ரசித்துக் கொண்டிருக்க ஆரம்பித்து விடுவோம். நாம் செல்ல வேண்டியது இன்னும் கொஞ்சம் மேற்கே. கொஞ்சம் என்றால் முப்பது கிலோ மீட்டர் தான். பத்மநாபபுரம் என்று கோட்டை கட்டி ஆண்டு வந்த கேரள மரபு மன்னர்கள் ஆண்ட ஊர் இப்போது தக்கலை என்று இருக்கின்றது. அதற்கும் கொஞ்சம் மேற்கே திருவனந்த புரம் சாலையில் இருக்கின்றது கரிசல்விளை. மக்கள் பேசுவது மலையாளமா தமிழா என்று அறிய முடியாத மொழி. இருப்பது நூறே வீடு தான். கடல் மிக அருகிலேயே இருந்தாலும் சுற்றிலும் வயல்வெளியில் பசுமை கண்ணைப் பறிக்கும் ஒரு குக்கிராமம். மண் வாசம் மலையாள ஈரத்தில் எப்போதும் மூக்கைத் துளைப்பது ஆச்சரியம் தான். மொத்த ஊரையும் காக்கும் தெய்வங்களாக கன்னிகளாம் புனித மேரியும், தேவி பகவதியும் தான் இருந்தனர். இங்கிருந்த வயல் வெளியில் விளையும் வள்ளிக் கிழங்குகளுக்கு உலகெங்கும் கிராக்கி உண்டு. வயல்வெளி கூட கோணல்மாணல் இன்றி சச்சதுரமாய் அமைந்திருப்பதைக் காண்பதே கொள்ளை அழகு. ஆங்காங்கே வற்றாத ஏரிகள் வெறுமே ஏரிகளாய் இல்லாமல் தாமரைத் தடாகங்களாக மாறி இருந்தன. மீன்கள் பிடிப்பதற்கு யாரும் இன்றி தாமரை மேல் துள்ளி விளையாடுகின்றன. பரிசல்களில் அந்தத் தாமரையைப் பறிக்கச் செல்பவர் மீன்களுக்கு வலிக்குமோ என்று மிக மெதுவாக துடுப்பை வருடிக் கொண்டு செல்கின்றார். கரிசல் விளையில் பெரிய மனிதர் ராமசுப்பு. இப்படி வளங்கொழிக்கும் நிலத்தில் 40 ஏக்கர் வைத்திருந்தால் அவர் பெரிய மனிதராய் இருப்பதில் வியப்பில்லை தானே? அவரது மனைவி தங்கம் 20 ஆண்டுகளுக்கு முன்னமே வேலய்யாவைப் பெற்றுக் கொடுத்து விட்டுப் போய்ச் சேர்ந்து விட்டாள். அம்மா இருந்திருந்தால் நன்றாய்ப் படித்து வளர்ந்திருப்பானோ என்னவோ வேலய்யாவுக்கு படிப்பே தலையில் ஏறவில்லை. 10வது வயதிலேயே வயக்காட்டில் இறங்கி விட்டான். வள்ளிக் கிழங்கை அப்படியே சாப்பிடுவான். ஆள் தான் படிக்கவில்லையே தவிர பெரிய மனித தோரணையெல்லாம் உண்டு. இந்த 20 வயதிலேயே வேலய்யாவுக்கு ராமசுப்பு கட்டி வைக்கும் கல்யாணம் அதோ அங்கே நடந்து கொண்டிருக்கின்றது போல. பொன் போட்டால் பொன் விளையும் பூமியாய் இருப்பதன் மகிமை அறியத் தானோ என்னவோ, அல்லது வேலய்யாவின் வாழ்க்கையைச் சோதிக்கத் தானோ என்னவோ ஒரு புயல் வீச ஆரம்பமாவது தெரியாமல் வேலய்யா ரொம்பச் சந்தோசமாய் இருந்தான். (ஊன்றும்)
9 செப்டம்பர் 2007
தண்டு - 3 அந்தப் படகு போன்ற பெரிய காரின் ஓட்டுநர் இருக்கையில் இருந்து வேக வேகமாய் இறங்கியவள் வேதா. மருத்துவக் கல்லூரியில் முன்றாமாண்டு பயிலும் ஒரு மாணவி. வழக்கமான பெண் மருத்துவர் போல் மகப்பேறு மருத்துவத்தில் இல்லாமல் இதய அறுவை சிகிச்சைப் பிரிவில் பேரார்வம் கொண்ட ஒரு பணக்கார மாணவி. எவ்வளவு பணம் என்று பின்னால் பார்ப்போம். சுண்டினால் ரத்தம் வரும் சிவப்பும் அல்ல. களையாய் முகம் காட்டும் கருப்பும் அல்ல. மாநிறம். ஹீல்ஸ் போட வேண்டாத சராசரியை விட கொஞ்சம் அதிக உயரம். அகன்ற நெற்றியில் மிகச் சிறிய பொட்டு. தீர்க்கமான கண்கள். கூர் நாசி. காது கழுத்து கைகள் என்று எதிலும் பெரும் பணக்காரி என்பதாலேயே பெரிய நகை எதுவும் இல்லை. அனைத்துமே எளிமையாய் முகத்தில் எப்போதும் ஒரு புன்னகை ஏந்தி இருப்பவள். வெள்ளை நிறச் சுடிதார், பளீர் ஆரஞ்சு நிறத் துப்பட்டா அணிந்திருந்தாள். வேதாவுக்கு யாரிடமும் பேச்சு வாங்குவது பிடிக்காது. அதற்காக வகுப்பில் முதலிடம் எல்லாம் இல்லை. ஆனால் செய்ய வேண்டிய வேலையைச் சரியான நேரத்தில் சரியாகச் செய்வதில் ஒரு ஆர்வம். எப்போதும் நேரத்தில் கிளம்பி நேரத்தில் வந்து வகுப்பு ஆரம்பிக்கும் போது வந்திருப்பாள் வேதா. இன்றும் அதே போல் தான் கிளம்பினாள். ஆனால், வழியில் ஏதோ தகராறு காரணமாய் டிராபிக்கில் மாட்டிக் கொண்டாள். இதோ கால் மணி நேரம் தாமதம். ஓட்டமும் நடையுமாய் வகுப்புக்குச் சென்றாள் வேதா. இன்று முதல் வகுப்பு டாக்டர் சேகருடையது. யாரும் வாசலில் அவரது அனுமதிக்காகக் காத்திருப்பது அவருக்குப் பிடிக்காது. யாரும் இடையில் வரவேண்டுமென்றால் அவர்களாகவே அனுமதி ஏதுமின்றி வரலாம் என்று சொல்வார். அவர் வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும் போதே யாரும் உள்ளே வருவார்கள் போகவும் செய்வார்கள். கண்டு கொள்ளவே மாட்டார். அது வேதாவுக்கும் தெரியும். ஆனால் அவள் அப்படி தாமதமாய்ப் போனதே இல்லை. இன்று அவளுக்கு நேரம் சரியில்லை போலும். வகுப்பு நடந்து கொண்டிருந்தது. வேதா அவசர அவசரமாக வந்து நின்றாள் வாசலில். சேகர் அவர் பாட்டுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அவர் தன்னைப் பார்ப்பார் என்று நின்றிருந்தாள் வேதா. அவர் கண்டுகொள்வதாய் இல்லை. அவளுக்கோ பொறுமை கொஞ்சம் கொஞ்சமாய்க் கரைந்து கொண்டே இருந்தது. உள்ளே செல்லவா வெளியே போய் விடுவோமா என்று மனம் அலைக்கழிகையில் அவளைப் பார்த்தார் சேகர். "உனக்கு என்ன வேண்டும்?" என்றார் சேகர். "லேட்டாயிருச்சு சார். மன்னியுங்கள்" என்றாள் வேதா. "ம். உன்னையும் நம்பி நோயாளி ஒருத்தன் தன் உடம்பைக் காட்ட வருவான்ல. அவனை மாதிரி பாவம் செஞ்சவன் யாரும் இல்ல. உள்ளே போ. எப்போ தான் டைமோட அருமை புரிவீங்களோ? கேக்காமலேயே உள்ள போய் உட்கார வேண்டியது தானே என் டைமையும் சேர்த்து வேஸ்ட் பண்ற" என்றார். வேதாவின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது. அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. உள்ளே சென்று அவளது இடத்தில் அமர்ந்தாள் வேதா. "இன்று லேட்டானதுக்கு நான் என்ன செய்வேன்? எல்லாம் என் நேரம்" என்று நினைத்துக் கொண்டாள். அவள் கண்களின் கலக்கம் சேகருக்கே பாவமாய் இருந்தது. தேவையில்லாமல் நோகடித்து விட்டோமோ என்று நினைத்துக் கொண்டார். பாடம் தொடர்ந்தது. வகுப்பு முடிவில், "உன் பேரென்ன?" என்ற படி அழைத்தார் அவளை. "வேதா சார். சாரி சார். நான் எப்பவுமே லேட்டானதில்லை. இன்னைக்கு லேட்டானதுக்குக் கூட நான் காரணமில்லை" என்றாள். டாக்டர் சேகர் இப்படியும் சிரிப்பாரா என்று நினைத்துக் கொண்டாள் வேதா. காரிடரில் நடந்து கொண்டே பேசினார் சேகர். "இங்கே பாரும்மா. நீ படிக்கிறது மருத்துவம். இங்கே வேண்டியது பெர்பக்ஷன். உனக்குக் கீழே வேலை பாக்குற நர்சுக்கும் சேர்த்து நீ தான் பொறுப்பு. லேட்டானதுக்கு நீ காரணம் இல்லைன்னா அந்தப் பொறுப்பை உன்னால் தட்டிக் கழிக்க முடியாது. தெரிஞ்சதா? அதே மாதிரி ஒரு சின்ன சிச்சுவேஷனுக்கே இப்படிக் கலங்குறியே? நீ எப்படி பேஷண்டைச் சமாளிப்ப? நீயே கலங்கி அவங்களையும் கலங்க வைப்பே போல இருக்கே? நீ மருத்துவத்தை விடப் படிக்க வேண்டிய விஷயம் ரொம்ப இருக்கு." என்றவாறு நடந்து கொண்டிருந்தார். வேதா ஆச்சரியத்துடன் நின்று கொண்டிருந்தாள். (ஊன்றும்)
28 செப்டம்பர் 2007
தண்டு - 4 இதோ மணமேடையில் கிராமத்துக் காட்டானாக உட்கார்ந்திருக்கும் வேலய்யாவைப் பற்றிச் சில வரிகள். தன்னைச் சுற்றித் தான் இந்த உலகம் சுற்றுகின்றது என்று நினைக்கும் குழந்தை மனம். தந்தையின் மேல் பாசமும் மரியாதையும் அளவிடமுடியாதது. ராம்சுப்பு அவனைப் பார்த்து செத்துப் போ என்று சொன்னால் உடனே செத்துப் போய் விடுவான். நண்பர்கள் அதிகம் கிடையாது. அதற்காக தனிமையே நண்பன் என்றும் கொண்டவனில்லை. எல்லாமே அளவோடு தான் வேலய்யாவுக்கு. எகத்தாளமாய்ப் பேசுவதில் கில்லாடி. கேரளா தான் அறிவாளிகளும் படித்தவர்களும் நிறைய இருக்கும் மாநிலம் என்று சொன்னால் போதும். உடனே எகத்தாளமாய், "ஆமா, கிழக்கால இருக்குற மலைய மேக்கு மலைத் தொடர்னு சொல்வாகள்ல. ரொம்ப அறிவாளிக தான்" என்பான்! எதிலுமே ஒரு தெனாவெட்டு தான் அவனுக்கு. தன்னை மிஞ்சி எதுவும் நடந்து விடாது என்ற நம்பிக்கை மிக அதிகம் இருந்தது. மொத்தத்தில் தான் ஒரு ராஜாங்கம் நடத்துவதாகவும், அதன் ராஜாவாக தானே முடிசூட்டிக் கொண்டதாகவும் அவனது கற்பனை ஓடிக் கொண்டிருக்கும். இதோ கரிசல் விளையிலிருந்து தக்கலை செல்லும் வழியில் இருக்கும் ஊர் திங்கள் சந்தை. திங்கள் சந்தை பெயருக்கேற்றாற்போல் அந்தப் பகுதியில் பெரிய சந்தை தான். எந்தப் பொருள் வாங்க வேண்டுமானாலும் விற்க வேண்டுமானாலும் அங்கே தான் கூட வேண்டும். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மொத்தச் சந்தையும் களை கட்டும். வேலய்யாவின் ராஜாங்கத்துக்கு ராணியாக வரப்போகும் மாரித்தாய் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். வேலய்யன் அளவுக்குக் கருப்பில்லை. மனத்தின் வெள்ளைக்கோ அளவில்லை. கிராமத்து அழகி. படியத் தலை வாரி, இரட்டைச் சடையிட்டு பதுமையாய் இருந்தாள். அடுத்தவர்க்கு ஏதோ ஒன்று என்று சொன்னாலே கண்ணீர் விடும் இளகிய மனம். படிப்பு ஏறினாலும் பத்துக்கு மேல் படிக்க வைக்கவில்லை வீட்டில். மாரித்தாயின் அப்பா சாமிக்கண்ணு திங்கள் சந்தையில் பெரிய கிழங்கு வியாபாரி. மாரித்தாய் அந்த வீட்டிற்கு நான்காம் பெண்குழந்தை. இவளுக்குப் பிறகு ஒரு தம்பி இருக்கிறான். இந்த வருடம் பத்தாவது பரிட்சை எழுதுகின்றான். அவனுக்கு கணக்கு மாரித்தாய் தான் சொல்லித் தருவாள். ராமசுப்பு வயலில் விளையும் வள்ளிக் கிழங்கு நேராக சாமிக்கண்ணு மண்டிக்குத் தான் செல்லும். இருவருக்கும் நல்ல பழக்கம் இருந்தது. பல வருடப் பழக்கம் என்றாலுங் கூட ராமசுப்பு சாமிக்கண்ணுவின் குடும்பம் பற்றியெல்லாம் அதிகம் அறிந்திருக்கவில்லை. தானுண்டு தன் வேலையுண்டு என்று தான் இருப்பார். பல சமயங்களில் ராமசுப்புவின் வேலையாளோ அல்லது வேலய்யாவோ வந்து வியாபாரம் பண்ணி விட்டுப் போய் விடுவார்கள். மற்ற பெண்குழந்தைகளைக் கரையேற்றி விட்ட சாமிக்கண்ணு இன்னும் இருப்பது மாரித்தாய் தான். அவளுக்கும் ஒரு நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்து விட்டால் தன் பாரம் தீர்ந்து விடும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் தான், ராமசுப்புவும் வேலய்யாவுக்கு பெண் தேட ஆரம்பித்தார். எப்போதும் வியாபாரம் பற்றியே பேசும் ராமசுப்பு சாமிக்கண்ணுவிடம் வேலய்யாவுக்கு பெண் தேடிக் கொண்டிருப்பதைச் சொன்னதற்குக் காரணம் தன் ஒரே மகனுக்குத் திருமணம் என்ற பெருமிதம் தான்! அப்போது கூட சாமிக்கண்ணு மாரித்தாய்க்கு மாப்பிள்ளை பார்ப்பதை ராமசுப்புவிடம் சொல்லவில்லை. காரணம் ராமசுப்புவின் செல்வாக்கோடு ஒப்பிடுகையில் சாமிக்கண்ணு அவ்வளவு செல்வந்தரோ பெயர் பெற்றவரோ இல்லை என்பது தான். தன்னை விட ரொம்பப் பெரிய இடத்தில் பொண்ணைக் கட்டிக் கொடுத்தால் பெண்ணை ரொம்பக் கஷ்டப்படுத்துவார்கள் என்று நினைக்கும் மனமுள்ளவர் சாமிக்கண்ணு. கரிசல்விளையில் ஒரு மாப்பிள்ளை இருப்பதாக சாமிக்கண்ணுக்கு தகவல் வந்திருந்தது. சரி மாப்பிள்ளை ஆள் எப்படி என்று பார்த்து விசாரித்து வருவோம் என்று கரிசல் விளைக்கு வந்திருந்தார் சாமிக்கண்ணு. ஊருக்குள் நடந்து வருகையில் தான் ராமசுப்பு எதிரில் வந்தார். வந்தவர், "என்ன சாமிக்கண்ணு இம்புட்டு தூரம்?" என்றார். "இல்ல. எம் பொண்ணுக்கு மாப்புள்ள விசாரிச்சுப் போலாம்னு வந்தேன்." என்றார் சாமிக்கண்ணு. "அப்படியா? யாரு மாப்புள்ள" என்றார் ராமசுப்பு. "மேட்டுத்தெருவுல கருப்பசாமின்னு பையன் பேரு" என்றார் சாமிக்கண்ணு. "ஓ. அந்தப் பயலா. நல்ல பய தான். அவன நம்பிக் கட்டிக் கொடுக்கலாம். இவ்ளோ தூரம் வந்திருக்கே வீட்டுக்கு வா" என்று வீட்டுக்கே அழைத்துச் சென்று விட்டார். மாப்பிள்ளையைப் பற்றி தெரிந்த ஒரு பெரியவரிடம் விசாரித்துக் கொண்ட திருப்தியில் திரும்பி விட்டார் சாமிக்கண்ணு. நிச்சயதார்த்தம் அந்த வாரமே நடந்தது கருப்பசாமிக்கும் மாரித்தாய்க்கும். நிச்சயதார்த்தத்துக்கு ராமசுப்புவும் வேலய்யாவும் கூட வந்திருந்தார்கள். ஆனால் காலம் கருப்பசாமியை மாரித்தாய் கழுத்தில் முடிச்சுப் போடவிடவில்லை. திடீரென்று வந்த கொள்ளை நோயில் கருப்பசாமி உயிரிழந்தான். மாரித்தாயும் அதிர்ஷ்டக்கட்டையாகி விட்டாள். எந்த மாப்பிள்ளை வந்தாலும் நிச்சயதார்த்தம் முடிந்து மாப்பிள்ளை செத்துட்டானாமே என்று தெரிந்ததும் நழுவி விடுவார்கள். இது நடந்து இரண்டு மாதங்கள் இருக்கும். சாமிக்கண்ணு மகளை நினைத்து ரொம்பத் தளர்ந்து போயிருந்தார். ஒருநாள் சந்தைக்கு வந்திருந்த ராமசுப்புவிடம் மனமுடைந்து தன் நிலை பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார் சாமிக்கண்ணு. ராமசுப்பு கொஞ்சம் கூட யோசிக்காமல் அப்போதே சொல்லிவிட்டார், "கையில் வெண்ணையை வைச்சிட்டு நெய்க்கு அலைஞ்ச கதையால்ல இருக்கு. எம்பையன் வேலனுக்கு உம் பொண்ணைக் கட்டி வைச்சிருவோமா?". "என்ன பார்க்குற? மாப்பிள்ள பத்தி தான் உனக்கே தெரியும்ல. என் பெயரைக் காப்பாத்துவான். உனக்கு விருப்பம்னா சொல்லு கட்டி வைச்சிரலாம். மண்டக்காடு பகவதிய மிஞ்சி ராசிலாம் என்ன செஞ்சுரும்னு பாப்போம்." என்றார். மணமேடையில் தலைகுனிந்த வண்ணம் தன் ராஜாவை மனக்கண்ணால் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் மாரித்தாய். வேலய்யாவுக்கும் இதில் ரொம்பத் திருப்தி என்பதை அவனது வெட்கப்பட்ட முகமே காட்டிக் கொடுக்கின்றது! (ஊன்றும்)
19 அக்டோபர் 2007
தண்டு - 5 என்னதான் டாக்டர் சேகர் விளக்கம் கொடுத்திருந்தாலும், அன்றைய தினம் வேதாவுக்கு அடுத்தடுத்த வகுப்புக்களில் கவனமே செல்லவில்லை. "ஒரு நாள் லேட்டா வந்தா அதுக்காக இப்படியா செய்வாரு? மெத்தப் படிச்சாலே தலைக்கனமும் நம்ம அப்பா மாதிரி சேர்ந்தே வந்திடும் போல" என்று நினைத்துக் கொண்டாள். அப்பாவைப் பற்றி நினைத்ததும் இன்னும் கவலை அவளுக்கு அதிகரித்து விட்டது. அப்பா, அம்மா, வேதா என்று எத்தனை சிறிய குடும்பமாய் இருந்தாலும் எத்தனை குதூகலமாய் இருந்தது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாய் பொழுது எப்படியெல்லாம் கழிந்தது? திடீரென்று பத்தாண்டுகளுக்கு முன் தொண்டைப் புற்று நோய் வந்து இரண்டாண்டுகள் அம்மா பட்ட வேதனை அறிந்து, இருவருக்கும் கண்ணீர் கூட வற்றி, கடைசியில் அம்மா இறந்தாலே நல்லது என்று நினைக்க வைத்தானே இறைவன்? கடந்த எட்டாண்டுகளாய் அம்மா இல்லாத வாழ்க்கை அவள் கண் முன் திரும்பவும் ஓடியது. எத்தனை சந்தோசத்துடன் இருந்த அப்பா இப்போது எப்படி மாறிவிட்டார்? என்னிடம் கூட அன்பில்லையோ என்று எண்ணும் அளவுக்கு ரொம்பத் தான் மாறிவிட்டார். இந்த வயசில் இவருக்கு இவ்வளவு தேவையில்லை. என்ற எண்ணங்கள் அவளைச் சுற்றிச் சுற்றி வந்ததில் வகுப்புக்கள் போனதே தெரியவில்லை. வெளியே இன்றும் மழை பெய்து கொண்டிருந்தது. வகுப்பை விட்டு வெளியே வராமல் சன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தாள் வேதா. காருக்குப் போவதற்குள் நனைந்து விடுவோம் என்று நினைத்துக் கொண்டாள். அவள் அருகே அமர்ந்திருக்கும் ஜானகி தான் இப்போதைக்கு அவளுக்குத் தோழி. வேதாவுக்கு நெருங்கிய நட்பென்று இருந்தவள் பள்ளியில் ரமா தான். இருவரும் கழுத்தைக் கட்டிக் கொண்டு கிடப்பார்கள் எப்போதும். அவளுக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தும் கூட நட்பு தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. அவளது அப்பா ஒரு ஐ.ஏ. எஸ். அதிகாரி. அவருக்கு வேலை டில்லிக்கு மாற்றலாகி செக்ரட்டரியேட் சென்ற போது இவளையும் அழைத்துச் சென்று விட, இப்போது போனில் மட்டுமே நட்பு தொடர்கின்றது. ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை போல இப்போதைக்கு பக்கத்தில் இருக்கும் ஜானகியுடன் தான் கொஞ்சம் நட்பு தொடர்கின்றது. இத்தனைக்கும் வேதா ஒன்றும் உம்மணா மூஞ்சி அல்ல. கலகலப்பானவள் தான். ஆனால் அம்மா இறந்ததன் தாக்கம் எட்டாண்டுகளுக்கும் மேல் தொடர்கின்றது. அப்பாவையும் சேர்த்து இந்தச் சிறிய வயதில் தாங்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம். பணமும், அதிகாரமும் இருந்து என்ன செய்ய? இதில் இந்த மருத்துவப் படிப்பு வேறு படித்து என்ன செய்யப் போகின்றோம்? என்ற எண்ணங்களெல்லாம் வேறு ஓட ஆரம்பித்ததில் மெல்லிய கண்ணீர் எட்டிப் பார்த்தது. பக்கத்தில் இருந்த ஜானகி அதெல்லாம் பற்றித் தெரியாமலேயே, "ஹேய் வாடி, இப்படியே இருந்தீன்னா அப்புறம் வீட்டுக்குப் போக முடியாது. வா என் குடையில் உன்னைக் கார் வரைக்கும் கொண்டு போய் விட்றேன்" என்றாள். ஏதேதோ எண்ணத்தில் இருந்த வேதா, "நீ போகனும்னா போ. நான் மெதுவா கிளம்பிக்கிறேன்" என்றாள். ஜானகி, "என்னவோ இன்னைக்கு மூடு சரியில்லையாக்கும். சரி உன் இஷ்டம்" என்ற படி கிளம்பிவிட்டாள். ஒருகணம் திரும்பி அவளைப் பார்த்த வேதா, இதுவே ரமாவாயிருந்தால்," ஆமா பெரிய இவ, இப்போ வரப்போறியா இல்லையா?" என்று உரிமையுடன் அழைத்துச் சென்றிருப்பாள் என்று நினைத்துக் கொண்டாள். நட்பில் ஏன் இப்படி கம்பேர் செய்றோம் என்றும் நினைத்துக் கொண்டாள். ஆக மொத்தம் குழப்பமான மனநிலையில் இருந்த வேதாவுக்கு ஒரே ஒரு ஆறுதலாய் மழை தான் இருந்தது. ஒரே ஆதார சுருதியுடன் வெளியே பெய்து கொண்டிருந்தது மழை. கொஞ்ச தூரம் தாண்டி என்ன இருக்கின்றது என்பது கூடத் தெரியாத அளவுக்கு அடர்த்தியாய் பெய்து கொண்டிருந்தது. பார்ப்பவர்கள் மனம் முதற்கொண்டு சில்லிடச் செய்தது மழைக்காற்று. எழுந்து ஜன்னல் அருகே சென்றாள் வேதா. வகுப்பில் ஒருவரும் இல்லை. அவள் மட்டும் தான். ஜன்னல் கம்பியைப் பிடித்துக் கொண்டு கடந்த கால வாழ்க்கை எப்படி தன் எதிர்கால வாழ்க்கையைப் பாதிக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்தாளோ? (ஊன்றும்)
6 பிப்ரவரி 2008
தண்டு - 6 வேலய்யாவுக்கும் மாரித்தாய்க்கும் புதுக்குடித்தனம் ஆரம்பமாகியது. ராமசுப்பு வேகவேகமாகச் சம்மதித்து விட்டாரேயொழிய அவர் மனம் சந்தேகங்களினால் சூழப்பட்டிருந்தது. "படிக்காத நம்ம பையனுக்கு நாலெழுத்து படிச்ச புள்ளையைக் கட்டிக் கொடுத்து வைச்சிட்டோமே, புருசனை மதிக்காமப் போயிட்டா என்ன பண்றது? இவனுக்கு வேற உலக நடப்பு ஒன்னும் தெரியாது. மாமியார் இருந்தாவாவது கொஞ்சம் அடக்கி வைச்சிருப்பா. புதுசா வந்தவளால என்னென்ன நடக்கப் போவுதோ?" என்று நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், மாரித்தாயின் நல்ல குணமும், பணிவான பேச்சும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. சாமிக்கண்ணு கல்யாணத்துக்கு முன்பாகவே ராமசுப்புவைப்பற்றியும் வேலய்யாவைப் பற்றியும் அவருக்குத் தெரிந்ததைச் சொல்லி வைத்திருந்தார். அதனால் அப்பாவுக்கும் பிள்ளைக்கும் ஏற்றவாறு மாரித்தாயும் நடந்து கொண்டாள். வெகுநாட்களாய் ராமசுப்பு மற்றும் வேலைக்காரர்களின் உப்பு சப்பில்லாத சமையலில் தான் வேலய்யாவின் காலம் ஓடிக்கொண்டிருந்தது. இப்போது மாரித்தாய் வந்ததும் அவளது வக்கனையான கைப்பக்குவத்துக்கு வேலய்யா மட்டுமின்றி ராமசுப்புவும் அடிமையாகிவிட்டார். மாரித்தாய் என்ன சொன்னாலும் இருவரும் ஆமாஞ்சாமி போட ஆரம்பித்திருந்தனர். கொஞ்சம் கொஞ்சமாய் வீட்டு ராஜ்ஜியம் மொத்தமும் மாரித்தாயின் கைகளுக்குச் சென்றது. என்னென்ன சாமான் வாங்குவது என்பதிலிருந்து செலவுகள் ஒவ்வொன்றுக்கும் அவள் கேட்கும் கணக்கும், அவளது தொலைநோக்கு சிந்தனையும் கண்டதில் ராமசுப்புவுக்கு மிகுந்த திருப்தி. அதை வெளிப்படையாகவே அவ்வப்போது "இனி நான் நிம்மதியாகக் கண் மூடலாம்" என்று சொல்ல ஆரம்பித்து விட்டார். மாரித்தாய்க்கும் வேலய்யாவை ரொம்பத்தான் பிடித்து விட்டது. அவனது வஞ்சகமில்லாத பேச்சும், அயராத உழைப்பும், கள்ளமில்லா அன்பும் அவளைக் கட்டிப் போட்டு விட்டது. அவளுக்குப் பிடிக்கும் என்று நாகர்கோவிலுக்குப் போய் தேங்காய் மிட்டாய் வாங்கி வந்ததையும், நாகர்கோவில் போன காரணத்தை ராமசுப்பு கேட்டதற்கு அவன் சொல்ல முடியாமல் நெளிந்ததையும் எப்போது நினைத்தாலும் அடக்கமுடியாத சிரிப்பு வந்து விடும் அவளுக்கு. வேலய்யா அவளை "தாயி...தாயி" என்று தான் கூப்பிடுவான். "ஏங்க, தாயின்னா அர்த்தமே வேற ஆயிரும்ல. பேசாம மாரித்தாயின்னு கூப்பிடுங்க, இல்லைன்னா மாரின்னு கூப்பிடுங்க" என்றாள் மாரித்தாய். அதற்கு வேலய்யா, "அதெல்லாம் ஒன்னுமில்ல எனக்கு இதான் புடிச்சிருக்கு. இப்படிக் கூப்பிட்டா என்னவாம்? நான் அப்படித் தான் கூப்பிடுவேன்" என்று அடம்பிடித்து விட்டான். சரியென்று விட்டுவிட்டாள் மாரித்தாய். வீட்டை விட்டு வெளியே போனால் முன்பெல்லாம் வேலய்யா விருக் விருக்கென்று வேட்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு நடக்க ஆரம்பித்து விடுவான். கல்யாணம் முடிந்த பிறகு, ஒரு நாள் மாரித்தாயும் வேலய்யாவும் எல்லைக் கருப்பசாமி கோவிலுக்குக் கிளம்பினார்கள். எல்லைக் கருப்பசாமி கோவில் ஊருக்கு 4 கி.மீ. மேற்கே இருந்தது. அந்தச் சாமி தான் ராமசுப்புவின் குலதெய்வம். சாயங்காலம் 4 மணி போல் இருவரும் நடக்க ஆரம்பித்தனர். வேலய்யா வழக்கம் போல் வேகமாக நடையைப் போட ஆரம்பித்தான். பேசிக்கொண்டே சென்றவன், என்ன இது மாரித்தாயின் சத்தத்தையே காணோமே என்று திரும்பிப் பார்த்தால், அவளோ 40 அடி பின்னால் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தாள். "ஏந்தாயி, வேகமாப் போனா கூப்பிடலாம்ல. கொஞ்சம் நடையை எட்டிப்போடு புள்ள. காலங்காத்தால வீடு வந்து சேரணும்ல" என்றான் வேலு. "எம்மாடி எவ்ளோ வேகமா நடக்குறீய. பொம்பள ஒருத்தி வாக்கப்பட்டு கூட வர்றாளே. அவளையும் கூட்டிப் போவோம்னு கொஞ்சமாவது பொறுப்பிருக்கா? என் வேகம் இம்புட்டுத்தேன். வேணும்னா என்னைத் தூக்கிட்டு போறவுக" என்றாள் மாரித்தாய். "அது சரி. அது வீட்டுக்குள்ளேன்னா செய்யலாம். வெளியிலேன்னா ஆகாது. வேணும்னா நான் உன் கூடவே மெதுவா வர்றேன்" என்ற படி மெதுவாய் நடக்க ஆரம்பித்தான் வேலு. அப்படியே அவர்கள் வீடு திரும்ப மணி இரவு 9 ஆகிவிட்டது. ராமசுப்புவுக்கோ இருப்பு கொள்ளவில்லை. வந்ததும் வராததுமாய் "ஏண்டா பொட்டப்புள்ளைய கூட்டிட்டு 4 மணிக்குல்லாம் கெளம்புனவன் இவ்ளோ நேரம் எங்கே போனே?" என்றார். "ஆமா. என்னைக் கேக்குறதுக்கு இவளைக் கேளுங்க. நடக்கமாட்டாம நடந்து வாரா. அவ கூட மெதுவா நடந்ததுல அவளுக்கு வலிச்சதோ இல்லியோ என் காலு ரொம்ப வலிக்குது. வெந்நீத்தண்ணி ஒத்தடம் கொடுத்தா தான் சரியாகும் போல. போய் வெந்நீ வை புள்ளே" என்று ஆசையுடன் அவளைக் கண் சிமிட்டிக் கொண்டே பார்த்தான் வேலு. "சைக்கிள்ல பவிசா போயிருக்கலாம்ல" என்றதோடு விட்டு விட்டார் ராமசுப்பு. இப்படி கிராமத்துக் காதலாய்ப் போய்க் கொண்டிருந்த வேலு, மாரித்தாயின் வாழ்க்கைச் சக்கரத்தின் வேகத்தைச் சடாரெனத் திசைதிருப்பும் நிகழ்வு விரைவிலேயே வந்து சேர்ந்தது. (ஊன்றும்)
22 மார்ச் 2008
தண்டு - 7 மழை விட்டு வெகுநேரமாகி இருந்தது. மரங்கள் இலைகளின் மூலமாய் முன்பு வேர் மூலம் தந்த தண்ணீரை நன்றியுடன் சொட்டுச் சொட்டாய் மண்ணுக்குத் தந்து கொண்டிருந்தன. மண் வாசனை மூக்கைத் துளைத்தது. எவ்வளவு நேரம் இப்படியே நின்றிருந்தாள் என்றே தெரியவில்லை. கடிகாரத்தைப் பார்த்ததும் தான் தெரிந்தது மணி 6.30 ஆகி விட்டிருந்தது. கிட்டத்தட்ட இருட்ட ஆரம்பித்து வெளியே தூரத்தில் எதுவும் தெரியவில்லை. வகுப்பறையில் அவளைத் தவிர யாருமே இல்லை. வெறிச்சோடிக் கிடந்தது. அவளது நோட்டை எடுத்துக் கொண்டு வெளியேறினாள் வேதா. வராந்தாவில் நடந்து போகும் போது கல்லூரி முதல்வரும் எதிரே வந்தார். "என்னம்மா இவ்வளவு லேட்டா போறியே?" என்றார். "ஆமா சார். மழை. குடை கொண்டு வரல. அதான்." என்றாள் வேதா. கல்லூரி முதல்வர் அல்லவா? ஏதும் தப்பு சமாச்சாரமாக இருக்குமோ என்று சந்தேகக் கண்ணுடன் அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்தார். அப்படி ஏதும் தெரியவில்லை. "சரி. கவனமாப் போ." என்றவாறு சென்று விட்டார். மெல்ல கட்டிடங்களை விட்டு வெளியே வந்தவள், மரத்தின் அடியில் சொட்டாய் விழுந்த நீரைத் தலையில் இருந்து துடைத்துக் கொண்டே தன் காரை வந்தடைந்தாள். காரில் ஏறுவதற்கும் அவளது செல்போன் ஒலிப்பதற்கும் சரியாய் இருந்தது. எடுத்துப்பார்த்தாள். அப்பா தான். அவராய்க் கேட்பதற்குள் இவளே ஆரம்பித்தாள், "தோ, கிளம்பிட்டேருக்கேம்ப்பா. மழைல மாட்டிக்கிட்டேன். அதெல்லாம் ஒன்னுமில்லை" என்றவாறு அணைத்தாள். வேதாவின் கார் அந்தத் தெருவில் வந்ததுமே, அவளது பங்களாவின் கதவுகள் திறந்து கொண்டன. காரின் சப்தம், அது வரும் வேகம் இதை எல்லாம் வைத்து வாட்ச்மேன் மிகச் சரியாகக் கணித்து வைத்திருந்தது தான் காரணம். காரை லாவகமாய் ஓட்டியபடி வீட்டினுள் நுழைந்தாள் வேதா. கார்ச்சாவியை விரலில் சுழற்றியபடி உள்ளே நுழைந்தவள், சோபாவில் அப்பா உட்கார்ந்திருந்ததைப் பார்த்ததும் அவளும் அருகே சென்று அமர்ந்தாள். வாழ்க்கையில் எத்தனை சிகரங்களைப் பார்த்த மனிதர்? எப்படி மனதில் இத்தனை ஆழ்ந்து போய்விட்டார்? என்று கவலைப்பட்டாள். கனத்த குரலில் சாதுரியமான, நகைச்சுவையான அவரது குரலை மீண்டும் கேட்கவே முடியாதோ? என்று நினைத்துக் கொண்டாள். "வாம்மா, வந்துட்டியா." என்றார் அப்பா. "ஆமாம்ப்பா, சாப்டீங்களா?" என்று கரிசனத்துடன் கேட்ட மகளை அப்போது தான் முதன் முதலில் பார்ப்பது போல் பார்த்தார் வேதாவின் அப்பா. அவர் கண்களில் எத்தனையோ உணர்வுகள் சட்டென்று வந்து சென்றதைக் கண்டாள் வேதா. "இல்லைம்மா. நீ வரட்டும்னு தான் உட்கார்ந்திருந்தேன். வா சேர்ந்தே சாப்பிடுவோம்." என்றார். இருவரும் சேர்ந்தே இரவு உணவருந்தினர். அம்மா இறந்ததிலிருந்தே சமையல்காரியின் சமையல் தான். கல்லூரி விடுமுறை நாட்களில் மட்டும் வேதா சமைப்பாள். அன்று மட்டும் அப்பாவுக்கு அதிகமாய் இரண்டு கவளம் உள்ளே செல்லும். இதற்காகவே நாம் கல்லூரியில் இருந்து நின்றால் என்ன? என்று நினைப்பாள் வேதா. அப்பாவின் வற்புறுத்தலில் தான் அவளது கல்வி வண்டி ஓடியது. தினமும் சமைத்து விட்டுச் செல்லலாம் என்றால் அதற்கு அப்பாவின் அனுமதி இல்லை. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதன் நவீனச் சான்றாய் வேதா இருந்தாள். அன்று இரவு தனது அறைக்குள் நுழைந்து கட்டிலில் விழுந்தவளுக்குத் தூக்கம் அத்தனை எளிதாய் வரவில்லை. கண்களில் நீர் கோர்க்க அப்பாவுடனான அவளது நாட்களை நினைவு தெரிந்த நாளிலிருந்து அசைபோட ஆரம்பித்தாள் வேதா. (ஊன்றும்)
27 மே 2008
தண்டு - 8 அந்த ஆண்டு வெள்ளாமையைப் பார்த்து மனம் பூரித்திருந்தார் ராமசுப்பு. அவருக்கென்ன? உழைத்துக் கொடுக்க ஒரே பையன். விளைந்ததைச் சம்பந்தி வீட்டிலேயே வியாபாரம் பண்ணி விடலாம். வந்து யார் கையில் கொடுக்கப் போகின்றார்? மருமகள் கையில். "என்னவோ உங்க அப்பாகிட்ட பணம் வாங்கி உன் கிட்டே கொடுக்குறாப்புல இருக்கு மருமவளே" என்று சொல்லிக் கொண்டே கொடுத்தார் பெரிசு. திருமணம் முடிந்த சில மாதங்களில் நல்ல சேதி கிடைத்து விடாதா என்று இரு வீட்டுப் பெரிசுகளும் எதிர்பார்த்திருக்க, அந்தச் சேதியும் வந்தே சேர்ந்தது. ஆம், மாரித்தாயி தாயாகப் போகின்றாள் என்ற சேதி தான் அது. வேலுவைக் கையில் பிடிக்க முடியவில்லை. "உங்க ஐயித்தை இருந்திருந்தா வாயும் வயிறுமா இருக்குறவளைப் பக்குவமாப் பாத்துக்குவா. பெரிய மனுசி மாதிரி பெத்துப் போட்டதும் போய்ச் சேர்ந்துட்டா. நீ பேசாம உங்கம்மா வீட்டுக்குப் போய் இருக்கலாம்ல. உங்கம்மா பத்திரமா பாத்துக்குவா" என்ற ராமசுப்புவை மறுத்து, "அதெல்லாம் ஒன்னும் வேணாம். நான் இங்கனயே இருக்கேன். ஒம்போது மாசத்துல வளையப் போட்டுக் கூட்டிப் போகட்டும். இல்லையின்னா இங்கனயே புள்ளையும் பெத்துக்குறேன்." என்ற மருமகளைப் பெருமையுடன் பார்த்தார் ராமசுப்பு. அந்தப் பெருமை கொஞ்ச காலம் கூட நீடிக்க வில்லை. மாரித்தாயிக்கு 6 மாதங்கள் ஆகியிருக்கும் போது இரவு படுத்த பெரிசு காலை எழவில்லை. பேரன் பேத்தியைப் பார்க்காமலேயே போய்ச் சேர்ந்து விட்டார். வேலுவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி என்பது கொஞ்ச நஞ்சமில்லை. பாவம், அம்மாவும் அப்பாவுமாக இருந்து வளர்த்த மனுசர். அவனுக்கு வேறு உறவே யாரும் இல்லாமல் இருவரும் ஒரே வீட்டில் எத்தனை ஆண்டுகள் இருந்தார்கள்? குடும்பத்தில் சில சமயங்களில் இது மாதிரியான எதிர்பாராத இழப்புக்கள் நேர்ந்து விடுகின்றன. உடல் சரியில்லாமல் இருந்து எப்போது போவாரோ என்று நினைக்க வைத்தும் இறப்பு நேர்கின்றது. திடீரென்று நேற்று நன்றாக இருந்தாரே? இன்று என்னாச்சு? என்று செல்பவர்களும் இருக்கின்றார்கள். இறப்பு என்னவோ ஒன்று தான். ஆனால் இரண்டின் தாக்கமும் நிச்சயம் வேறுபாடாய்த் தான் இருக்கின்றது. அவனுக்கு மாரித்தாயைக் கூடப் பிடிக்காமல் போய் விடுமோ என்னுமளவுக்கு வாழ்க்கையில் பிடிமானம் இல்லாமல் போயிற்று. சாரை சாரையாய்க் கண்ணீர் ஓடி கன்னத்தில் வடு ஏற்பட்டு விட்டது. வேலு ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. துக்கம் விசாரிக்க ஆட்கள் வர வர ஒவ்வொருவரையும் பார்க்கப் பார்க்கக் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதேயன்றி வார்த்தைகள் எதுவும் வரவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது என்பார்களே, அதை நேரடியாய் அன்று அந்தக் கிராமமே பார்த்து அனைவருக்கும் தாங்கவொண்ணா வேதனையைத் தந்தது. "என்னப்பா, இப்படியே எவ்ளோ நேரம் வைச்சிக்கிட்டே இருக்கப் போறீங்க? ஆகுற வேலையைக் கவனிங்க" என்று ஏதோ ஒரு பெரிசு குடிபோதையில் நாட்டாமை பண்ண, இதோ ராமசுப்புவின் உடல் தகனம் செய்ய எடுத்துச் செல்லப் பட இருந்தது. "நிறுத்துங்க" என்று கத்தினான் வேலு. அது வரை பேசாதவன் திடீரென்று சத்தமாய்ப் பேசியதும் மொத்த ஆட்களும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர். "எங்கப்பாவை என்ன செய்யனும்னு எனக்குத் தெரியும். எங்க காட்ல களத்து மேட்டுப் பக்கத்துல அவரைப் பொதைக்கப் போறேன்." என்றான் வேலு. "எலேய். ஒனக்கென்ன புத்தி கித்தி மழுங்கிப் போச்சாலே? பொதைக்கப்போறானாம்ல. அதுவும் களத்து மேட்ல. ஊரு வழக்கம் என்னலே? இப்படி எல்லாரும் சொல்லிட்டே போனா அப்புறம் ஊரே பொதகுழியாப் போகும்லே. என்னவோ ஒனக்கு மட்டும் தான் பாசம் இருக்குதாக்கும். சொல்ல வந்துட்டான். தூக்குங்கலே கெழக்காம" என்றார் இன்னொரு ஊர்ப் பெரிசு. "யாராவது எங்கப்பாவைத் தொட்டீங்க, தகாத வார்த்தை வந்துப்புடும் ஆமா." என்று கொதித்தெழுந்தான் வேலு. "எலேய், சொன்னாக் கேளுவே. வயக்காட்ல போயி பொணத்தைப் பொதைச்சா, வயக்காடு உருப்படுமாலே? அப்புறம் தேவைக்கு யாருக்காவது விக்க முடியுமாலே? கொஞ்சம் யோசிச்சுப் பாரு. ஆத்திரப்பட்டு என்னாவப்போகுது சொல்லு? உங்கப்பா திரும்பி வந்துருவாரா?" என்று சலசலப்பு ஏற்பட்டது. "என்னாங்க. எதுன்னாலும் யோசிச்சுச் செய்ங்க" என்று மெதுவாக இழுத்ததற்கே மாரித்தாயைக் கண்டபடி ஏசிவிட்டான் வேலு. "இதுல நீ தலையிடாத தாயி. அப்புறம் பொல்லாதவனாயிடுவேன்." என்று ஆசை மனைவியைப் பார்த்து ஆவேசப்பட்டதைப் பார்த்ததும் தான் ஊரும் கொஞ்சம் உஷாராக ஆரம்பித்தது. "நம்ம சாதி வழக்கப்படி குழந்தைங்களத் தான் பொதைக்கிறது வழக்கம். அது கூட உனக்குத் தெரியாதா" என்று எல்லா வகைக் கிடுக்கிப் பிடியும் போட்டுப் பார்த்தார்கள். "எங்கப்பா ஒரு குழந்தை மாதிரி தான் இருந்தாரு. அதனால செய்றது சரி தான்" என்றான் வேலு. நிலத்தை விற்க முடியாது, வயக் காட்டு வேலைக்கு யாரும் வரமாட்டாங்க, ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுவோம் என்று எத்தனையோ நிபந்தனைகளை ஊர் முழுதும் அள்ளி விட்டும், வேலு என்னவோ அவன் முடிவில் இருந்து மாறவே இல்லை. "சீமையில இல்லாத அப்பான்னு சொல்லி பொச கெட்ட பயபுள்ள இப்படி ஒத்தக் கால்ல நிக்குது. இவனும் கேக்குற மாதிரித் தெரியல்ல. இப்படியே விட்டா அப்புறம் பெருசு நாறிப் போயி ஊரெல்லாம் நாஸ்தியாகிப் போவும். இப்போ என்னலே? உங்கப்பாவை உன் இடத்துல பொதைக்கனுமாக்கும். சரி. செய்லே." என்று அரைமனதோடு ஊர்த்தலைவர் சொல்ல, அதன் படியே செய்வதென்றும் முடிவாயிற்று. இதோடு நின்றதா? அப்படி நின்றால், பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்ற பழமொழிக்கு அர்த்தமே இல்லாமல் போய் விடுமே? (ஊன்றும்)
15 பிப்ரவரி 2009
(பதியம்) கதை எழுதி வெகுநாட்கள் ஆகிவிட்டமையால் அனைவருமே மறந்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். :) இதோ, மீண்டும் பதியம் வந்தே விட்டது. முதலில் முன்கதைச் சுருக்கத்துடன் ஆரம்பிக்கின்றேன். சுருக்கம் புரியாதவர்கள் முதலிலிருந்தே படித்து விடுங்களேன்! முன்கதைச் சுருக்கம்: ஒருபுறம் சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் வேதா, தாயை இழந்தவள். பணக்காரத் தந்தையின் ஒரே புதல்வி. அவர் மேல் உயிரையே வைத்திருக்கின்றாள். இன்னொரு புறம் இந்தியாவின் தென்கோடியில் இருக்கும் கரிசல்விளையில் வசிக்கிறார்கள் வேலய்யாவும், மாரித்தாயும். வேலய்யாவின் தந்தை ராமசுப்பு அந்த ஊரின் பெரிய மனிதர். வேலய்யா ராமசுப்புவின் ஒரே மகன். தாயைச் சிறு வயதிலேயே இழந்து விட்டதால் தந்தையின் பாசத்துக்கு அளவில்லாமல் வளர்ந்தான். சரியாகப் படிக்காவிட்டாலும், நல்லவன். குழந்தை மனம் கொண்டவன். தந்தை இறந்த போது அவர் உடலைத் தன் நிலத்திலேயே அடக்கம் செய்ய வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்று சாதித்தவன். தண்டு - 9: படுக்கையில் மல்லாந்து படுத்திருந்தாள் வேதா. தன் நினைவுக்கு எட்டுமட்டும் இளவயதில் தன் தந்தையைப் பற்றிய நினைவைக் கொண்டு வர முயன்றாள். எத்தனை இனிமையான காலங்கள் அவை? வேதாவின் அம்மா மஹாலட்சுமி. பெயருக்குப் பொருத்தமில்லாத குணங்களுடன் பலர் இருக்கும் இவ்வுலகில் சற்று வித்தியாசமாகப் பெயருக்கு அப்படியே பொருத்தமானவள். சாந்த சொரூபி. அதிர்ந்து பேசத் தெரியாது. அவள் கோபப்பட்டு இது வரை வேதா பார்த்ததே இல்லை. முகத்தில் எப்போதும் ஒரு புன்சிரிப்பு தவழ்ந்து கொண்டே இருக்கும். வேதாவின் மேல் கொள்ளைப் பிரியம் உண்டு. வேதாவின் தந்தை ரங்கராஜன். அவரை ரங்கராஜன் என்பதை விட, சிங்கராஜன் என்பது பொருத்தமாக இருக்கும். அதிகம் பேச மாட்டார். பேச ஆரம்பித்தால் யாராலும் தாங்க முடியாது. ஒரே கர்ஜனையாகத் தான் இருக்கும் என்பார்கள். அவர் கண்களில் ஒரு தீட்சண்யம் தெரியும். அவர் கண்களைப் பார்த்தால், அவரிடம் இருக்கும் என்ன தான் நடக்கட்டுமே என்னும் அலட்சிய மனோபாவம் பார்ப்பவர்களுக்கும் பரவி வரும். ஒருநாள் தாடி கூட வரவிடாது அவரின் கன்னங்கள் எப்போதும் வழுவழுவென்று இருக்கும். யாரையும் பார்த்த மாத்திரத்தில் எடை போட வல்லவர். இளவயதிலேயே முன்வழுக்கை விழுந்து இருந்தது. எப்போதும் மெல்லியதாய் ஒரு நாமம் இட்டிருப்பார். வேதா ஆறாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம் அது. அன்று திடீரென்று, "நீ பள்ளிக்குச் செல்ல வேண்டியதில்லை இன்று உனக்கு விடுமுறை" என்று அப்பா அறிவித்ததும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள் வேதா. "எதற்கப்பா இன்று லீவு?" என்று கேட்டதற்கு, "இன்றைக்கு நாம் ஒரு விழாவுக்குப் போறோம். எங்களோடு நீயும் வர்றே" என்றதும் தான் அம்மாவும் தன்னுடன் வரப் போகின்றார் என்று வேதாவுக்குத் தெரியவந்தது. அது இரட்டிப்பு மகிழ்ச்சி அல்லவா? ஏனென்றால் வேதா, அம்மா அப்பாவுடன் இணைந்து எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் சென்றதில்லை. அவளது பள்ளி சிநேகிதியர் எல்லாரும் உறவினர்களின் திருமண விழாவுக்கும், சொந்தங்களின் பிறந்தநாள் விழாக்களும் சென்று வந்ததாய் டம்பமடிக்கும் போது இவள் மனம் சோகத்தில் ஆழ்ந்து விடும். அலுவலக ரீதியாக விருந்தினர்கள் பலர் தங்கள் வீட்டுக்கு வந்திருந்த போதிலும் உறவினர்கள் என்று யாரும் எப்போதும் வந்ததாகவே வேதாவின் நினைவில் இல்லை. மஹாலட்சுமி, ரங்கராஜன் இருவரின் பெற்றோரும் வேதா பிறக்கும் முன்னரே இறந்து விட்டனர் என்று கேள்விப்பட்டிருக்கின்றாள். ஆனால் உறவினர்கள்? வேதா மஹாலட்சுமியிடம் இதுபற்றிக் கேட்ட போது, அவருக்கு 2 அண்ணன்களும், தந்தை ரங்கராஜனுக்கு 1 தங்கையும் இருப்பதை அறிந்து கொண்டாள். ஆனால், உறவுகளுடன் ஏதோ பெரிய சண்டையானதால் யாருமே இங்கு வருவதுமில்லை, இவர்களும் எங்கும் செல்வதுமில்லை என்று அம்மா சொன்னதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்தாள். அதெப்படி அத்தனை உறவுகளுடனும் சண்டை என்று எவ்வளவோ நச்சரித்துக் கேட்டும் மஹாலட்சுமி சொல்லவில்லை. அப்பாவிடம் கேட்பதற்கு இவளுக்குத் தைரியம் வரவில்லை. வேதா ஆறாம் வகுப்புப் படிக்கும் போது நடைபெற்ற அந்த விழா ரங்கராஜனின் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை உருவாக்கிய விழா. அந்த விழாவின் பின்னர் அவர் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு வேதாவே ஆச்சரியப்பட்டிருக்கின்றாள். அவள் மட்டுமா? அம்மா மஹாலட்சுமியும் தான். ஏன்? ரங்கராஜனுமே தான். (ஊன்றும்)
5 ஜூன் 2009
தண்டு - 10 ராமசுப்பு இல்லாத வீடு வெறிச்சென்று இருந்தது. மாரித்தாயும் வேலய்யாவும் ஏதோ தனிமையை உணர்ந்தார்கள். "பெருசுங்க இருக்குறப்ப அவுக மதிப்பு தெரியிறதில்ல. இல்லாதப்ப, இருந்திருந்தா நல்லாருந்திருக்குமேன்னு நினைக்காத ஆளில்ல." என்று கூறிக் கொண்டான் வேலய்யா. மாரித்தாய்க்கு அது ஏழாம் மாதம். நாகர்கோவில் ஆஸ்பத்திரிக்குச் சென்று அவ்வப்போது காட்டி வந்தான் வேலய்யா. திங்கள் சந்தையிலிருக்கும் மாமனார் வீட்டுக்குப் போய் கொஞ்ச காலம் ஓய்வாய் இருக்கலாம் என்று சொன்ன போது கூட, இவன் தன்னந்தனியனாய் வீட்டில் இருப்பானே என்று போக மறுத்து விட்டாள் மாரித்தாய். அவளது அம்மாவைத் தான் அங்கிருந்து அவ்வப்போது வரவைத்து கவனித்துக் கொள்ளச் சொன்னாள். வேலய்யா வயல்வெளிக்குச் செல்லும் போதெல்லாம், அங்கே ஈசான மூலையில் புதைத்திருந்த ராமசுப்புவின் சமாதிக்குச் சென்று கும்பிடாமல் திரும்ப மாட்டான். அங்கேயே சிறிது நேரம் அமர்ந்திருந்து பின் பெருமூச்சு விட்டுக் கிளம்புவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தான். இவ்வாறு நாட்கள் உருண்டோடிக் கொண்டிருக்கையில் ஒரு நல்லசேதியும் ஒரு கெட்ட சேதியும் அவனுக்கு வந்து வாய்த்தன. மாரித்தாய்க்கு வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் இருக்கின்றன என்ற நல்ல சேதி கேட்டதும் மகிழ்ச்சியில் தலைகால் புரியாவிட்டாலும், அவளுக்கு அதனால் ஏற்படப் போகும் கஷ்டங்களை நினைத்துக் கொஞ்சம் கலங்கவும் செய்தான். மாரித்தாய் தான் அவனைத் தேற்றினாள். ஒன்றும் படிக்காத, தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவனின் படிப்பறிவையும், வேலையையும் பாதிக்கும் எந்த ஒரு நிகழ்வும் நிச்சயம் கெட்ட சேதியாகத் தானே இருக்கும்? ஆம், அவன் எந்த நிலத்தை இத்தனை காலம் தெய்வமாய் நினைத்தானோ? எந்த நிலத்தில் அவனது அவயம் முழுதும் பட்டு உருண்டானோ, தாயைப் பார்த்தறியாத அவன் கண்ணுக்கு எந்த நிலம் தாயாய்த் தோன்றியதோ அதுவும் பறிபோகும் என்ற பேரிடி அவன் முன் வந்து விஸ்வரூபம் எடுத்து நின்றது. அவனது நிலத்தில் அரசின் விவசாயத்துறை ஆராய்ச்சி மையம் அமைய இருப்பதாகவும், அவனது நிலம் மிகச் சாதகமாக இருப்பதாகவும், நிலத்தில் 3 ஏக்கர் இடத்தைக் கட்டாய நிலக் கொள்முதல் செய்ய இருப்பதாகவும் ஒரு சிறு கையகலச் சீட்டில் இருப்பதாக மாரித்தாய் வாசித்துச் சொல்ல, செய்வதறியாது திகைத்து மரத்தூணில் சாய்ந்து விட்டான் வேலய்யா. "என்னங்க, என்னங்க" என்று மாரித்தாய் கூப்பிட்டது கூட காதில் விழவில்லை. "என்னங்க, நிலத்துக்கு உண்டான பணத்தைத் தந்திருவாகளாமில்ல" என்ற அவளைப் பார்த்து குரூரமாகச் சிரித்தான். "பணம் யாருக்கு தாயி வேணும்? அப்பா சமாதி இருக்கிற இடத்தைக் கேக்குறாகளான்னு தான் முதல்ல பாக்கனும். ஒன்ன எடுத்துட்டு ரெண்டு குடுக்குது தெய்வம்னு நினைச்சேன். இப்போ என்ன செய்யிறது எங்கே போயிக் கேக்கன்னு கூடத் தெரியலியே?" என்று நொந்து போய் அரற்றினான். "அதெல்லாம் ஒன்னும் இருக்காது. நமக்குத் தான் நிறைய இடம் இருக்குதுல்ல. கவலைப்படாம எதுக்கும் உடனே நம்ம கிராமச்சாவடில்ல போயி விசாரிச்சிட்டு வந்துடுங்க." என்று தேற்றினாள் மாரித்தாய். சரியென்று கிளம்பினான் இனி வாழ்வில் இனிமை என்பதை வெகுகாலம் பார்க்க வாய்ப்பில்லாத வேலய்யா. (ஊன்றும்)