தொடர்கதைச் சவால் — என் பகுதிகள்
முத்தமிழ் மன்றத்தில் எழுதியது · 5 ஜூன் 2008 – 6 ஜூன் 2008
ஒரு பக்கம் நெல்லை புகழ்பெற்ற கோஷ்டியின் பாட்டுக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் முதியோர்களின் சீட்டுக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. ஒருபக்கம் பெண்களின் பேச்சுக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் வாய் வலிக்க வயிறு முட்டச் சாப்பிடும் விருந்துக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. "சுப்பிரமணியன் வீட்டுக் கல்யாணம் இன்னிக்கு அமோகமா நடக்குதப்பா. ஊரே இங்க தான் இருக்கு. மாப்பிள்ள ஏதோ வெளிநாடுல பெரிய்ய்ய டாக்டராம். அடேங்கப்பா அவங்களோட நடை என்ன, உடை என்ன, பவிசென்ன, நாகரீகம் என்ன" என்று சிலாகித்துக் கொண்டிருந்தார்கள் அந்தக் கிராமப் பெண்மணிகள். கிராமத்தின் சந்தைத் திடலில் வைத்து ஊரடைக்க பந்தல் போட்டு ஜாம் ஜாம் என்று நடந்து கொண்டிருந்தது. சுப்பிரமணியன் அந்த ஊரில் கொஞ்சம் வசதியானவர். ஒரே மகள். வெளிநாட்டு டாக்டர் மாப்பிள்ளை கூடி வந்ததும் ஏற்பட்டிருந்த மகிழ்ச்சி எல்லாம் அவர்கள் திருமணத்திற்குப் பட்டியலிட்ட விஷயங்களைக் கண்டதும் வற்றி விட்டிருந்தது. இருந்தாலும் ஒரு மகள் தானே. திருமணம் முடிந்ததும் சந்தோசமாக வெளிநாடு போய் விடுவாள். அப்புறம் நமக்கென்ன? இருக்கும் நில புலன்களை வைத்து கடனை அடைத்து விடலாம். கல்யாணக் கடனும் வீடு கட்டும் கடனும் தோணாம அடையும் என்று தரகர் சொன்னதை வைத்துப் பல கணக்குப் போட்டிருந்தார். பெண்ணுக்கு ஏற்ற மாப்பிள்ளை கிடைத்ததில் மனம் முழுதும் நிம்மதியாயிருந்தார். மாப்பிள்ளை வெளிநாட்டிலிருந்து தினமும் பெண்ணுக்குப் போன் போட்டுப் பேசுவதை ஊரெல்லாம் சொல்லி மாய்ந்திருந்தார். முதலில் மாப்பிள்ளை ஊரான பட்டணத்தில் வைத்து விடலாம் என்று தான் சம்பந்தியிடம் கேட்டிருந்தார். ஆனால், அவர்கள் இல்லையில்லை பெண்ணின் ஊரில் வைத்து நடத்துவது தான் முறை. எங்களுக்கு அதிலெல்லாம் எந்தக் கஷ்டமும் இல்லை என்று சொன்னதில் இருந்த சூட்சுமம் அவருக்குத் தெரியாமல் போனது. எல்லாச் செலவையும் அவர் தலையில் கட்டிய அவர்களது மாண்பு அறிய வந்த போதும் சரி நம் மகள் வாழ்க்கைக்குத் தானே என்று அமைதியாயிருந்தார். எல்லாம் பார்த்துப் பார்த்துச் சரியாகச் செய்திருந்தார். ஆனால், அவர்கள் கேட்ட 150 சவரனில் 15 சவரன் அவரால் செய்ய முடியவில்லை. இத்தனைக்கும் அவரது வீட்டையும் நிலத்தையும் விலையே பேசி விட்டது மனைவிக்கோ மகளுக்கோ தெரியாது. எல்லாக் கணக்கும் சரியாகத் தான் போட்டிருந்தார். ஆனால் திடீரென தங்கம் விலைவாசி ஏறியதில் அவர் கணக்கெல்லாம் மாயமாகிப் போனது. மனைவியின் தாலி 16 சவரன் இருக்கும். அதைத் தவிர எல்லாம் மகளுக்கென்று கொடுத்துப் புதிய நகையாகச் செய்தாகி விட்டது. அதாவது இருக்கட்டும் என்று மகள் ஒரேயடியாய் மறுத்து விட்டாள். வேறு யாரிடமாவது கடன் வாங்கியாவது இந்த 15 சவரனை வாங்கியிருக்கலாம் தான். ஆனால், அதிகம் கடன் வாங்கியறியாத, எப்படிக் கேட்க வேண்டும் என்று கூட அறியாத ஒரு மனிதராய் சுப்பிரமணியன் அந்த ஊரில் தோளில் துண்டைப் போட்டுக் கொண்டு நடந்ததால் பாவம் கல்யாணச் சந்தையின் லாவகம் அறியாதவராகி விட்டார். இந்த விஷயத்தை சம்பந்தி வீட்டாரிடம் சொல்லி விடலாம் என்று அவர் சொன்ன போது, அவரது மகளும் சரி, மனைவியும் சரி, "ஏங்க, நாம என்ன சாதாரண இடத்திலா முடிச்சிருக்கோம்? எவ்ளோ பெரிய இடம்? எவ்ளோ செலவு செய்றோம்? இந்த 15 சவரனுக்காக என்ன சொல்லிடப் போறாங்க? விடுங்க தலை தீபாவளியோட சேர்த்து செஞ்சிட்டாப் போச்சு" என்றனர். ஆஹா! விஷயம் இத்தோடு முடிந்து விடாதா? இன்னும் தீபாவளிலாம் இருக்கா? என்ற நினைவோடு சரியென்று தலையாட்டினார். இருந்தாலும் அவர் மனதில் சம்பந்தி வீட்டாரிடம் சொல்லாமல் போனோமே என்ற கவலையோடே ஊரெல்லாம் மகிழ்ந்திருக்க அவர் மட்டும் கலக்கத்துடன் வெளியே சிரித்துக் கொண்டு உள்ளே மருகிக் கொண்டு இருந்தார். முகூர்த்த வேளை நெருங்கிக் கொண்டிருந்தது. இன்னும் ஒரு மணி நேரத்தில் திருமணம் முடிந்து விடும். அப்புறம் ஒன்றும் பிரச்னை இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது தான், மாப்பிள்ளை அழைப்பின் முன்னமே சம்பந்தியம்மாளும், அவரது அக்காவும் பேசிக் கொண்டே இவரை நோக்கி வந்தனர்.
மாப்பிள்ளையின் பெரியம்மா தான் அவரது காது படபேசினார்.
"ஏங்க்கா சொன்ன படி நகையெல்லாம் போட்டாங்களான்னு பாத்தியா?"'
"இல்லை. ஆனா சம்பந்தி அதெல்லாம் குறை வைக்கவே மாட்டார்."
"ஆமா. நேத்து சாப்பாட்டிலேயே தெரியலையாக்கும்? சுத்தப் பட்டிக்காடுன்றதைத் தான் பாத்தோமே?" என்ற அங்கலாய்ப்பில் சுப்பிரமணியனுக்குப் பகீர் என்றது. எத்தனை சிரமப்பட்டு நிகழ்த்தும் நிகழ்ச்சியை எத்தனை எளிதாய்க் குறை கூறுகின்றார்களே என்று நினைத்துக் கொண்டார். "எதுக்கும் சரியா இருக்கான்னு செக் பண்ணிப் பாக்குறது தானே முறை" என்று அவர் வயிறில் மேலும் புளியைக் கரைத்தார் மாப்பிள்ளையின் பெரியம்மா. சும்மா இருப்பவர்களைக் கூட உறவினர்கள் இப்படித் தூண்டி விடுகின்றார்களே! "எல்லாம் சரியா இருக்கும்மா. நீங்க கவலைப்படவே வேண்டியதில்லை." என்று பொத்தாம் பொதுவாய்ச் சிரித்துக் கொண்டே பேசியவர், "முகூர்த்தத்துக்கு இன்னும் ஒரு மணி தான் இருக்கு. மாப்பிள்ளை தயாராயிட்டாரா?" என்று கேட்டு வைத்தார். "சரி நாம சம்பந்தியம்மாகிட்டே கேட்டுக்குவோம் எந்தெந்த நகை எவ்ளோ சவரன்னு" என்று நேராக இவரது மனைவியை நோக்கிச் சென்றனர். அடடா! இந்த நேரத்தில் பொய்யாகவாவது 15 சவரனை ஏற்றிச் சொல்வாளா நம் பத்தினி. அவளிடம் சொல்ல வேண்டும் என்று கண்களால் தேடுவதற்குள் அவர்கள் இருவரும் அவரது மனைவியை நெருங்கிச் சிரித்துப் பேச ஆரம்பித்திருந்தனர். அவரது கண்கள் இருள ஆரம்பித்திருந்தது. சரி விதிவசம் என்று நினைத்துக் கொண்டு அவர்கள் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தவர் ஐந்து நிமிடங்களில் சம்பந்தி வீட்டார்களின் முகம் கடுகடு என்று ஆவதைக் கண்டதும் மெதுவாக அவர்களை நோக்கி நகர்ந்தார். "நான் இதுக்குத் தான் அப்பவே சொன்னேன். நல்ல இடத்துல போய் சம்பந்தம் முடிச்சிருக்கே. 15 சவரன் போட வக்கில்ல. இவங்களுக்கெல்லாம் கல்யாணம் ஒரு கேடு." என்று பேச்சு ஆரம்பித்திருந்தது. நினைத்த மாதிரியே நடந்து விட்டது. இனி மகளின் திருமணம் அவ்வளவு தானா என்று நினைத்தவருக்கு நெஞ்சின் ஒரு ஓரத்தில் இடி இறங்கியது போல் இருந்தது. சரி, தலைக்கு மேல் போயாச்சு, இனி ஜாண் போனால் என்ன முழம் போனால் என்ன என்று முடிவு செய்து கொண்ட்டு "சம்பந்தியம்மா, நீங்க நினைக்கிற மாதிரி எதுவுமே இல்லை. நான் எல்லாம் பார்த்துப் பார்த்து செஞ்சிருக்கேன். நகையும் சரியாத் தான் போட்டிருக்கேன். என் மனைவி எடை விவரம் சரியாத் தெரியாம தப்பாச் சொல்லிருப்பா. கல்யாணம் முடியட்டும் நானே உங்களுக்குச் சரியா எடை போட்டுக் காட்டுரேன். இவ்வளவு செலவு செய்து நடத்துறவன் இதைச் சரியாச் செய்திருக்கா மாட்டேனா? சொல்லுங்க? முகூர்த்த நேரம் ஆரம்பிக்கப் போகுது. சீக்கிரம் நல்ல விஷயம் நடக்கட்டும்." என்று காலில் விழாத குறையாய்க் கேட்டார். அவர் பேசியதில் சம்பந்தியம்மாளின் மனம் கொஞ்சம் கரைந்து போயிருந்தது. "நாங்க ஒன்னும் கொடுமைக்காரங்க இல்ல சம்பந்தி. ஆனா, சொன்னபடி சரியா இருக்கனும்ல. இதுலேயே சரியில்லைன்னா, அப்புறம் பொண்ணைப் பத்தி அவ குணத்தைப் பத்தி நீங்க சொன்னதெல்லாம் சரியில்லைன்னு ஆயிரும். நீங்க சொல்றதால விட்றேன். ஆனா, கல்யாணம் முடிஞ்சதும் எனக்கு நீங்க கணக்கு சரி பண்ணிக் காட்டிடுங்க. அது போதும்." என்று அப்போதைக்கு அவர் நெஞ்சில் பால் வார்த்தார். இதோ திருமணமும் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த கெடுவும் முடிந்தது. கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாய்க் கலைந்து போக ஆரம்பிப்பதற்கும், சம்பந்தியம்மாள் எங்கள் கணக்கைச் சரி செய்து காட்டுங்கள் என்று கேட்பதற்கும் சரியாக இருந்தது. "நகை ஆசாரியையும் வரச் சொல்லுங்க" என்ற மாப்பிள்ளையின் பெரியம்மா அவர் கண்களுக்கு சிங்கமாய்த் தெரிந்தார்! அவரது மகள் வசந்தி போட்டிருந்த நகைகள், அவளது அம்மா அப்போதைக்குக் கல்யாணத்திற்கென்று போட்டிருந்த நகைகள் எல்லாம் சேர்த்து எடை போட்டுப் பார்த்ததில் சுத்தமாய் 15 சவரன் குறைவது ஒவ்வொருவருக்காய்த் தெரிய ஆரம்பித்தது. "இதுக்குத் தான் நான் முதல்லயே சொன்னேன். இப்படியெல்லாம் நடக்கும்னு எனக்குத் தெரியும். எத்தனை இடத்தில் பார்த்திருக்கேன்." என்ற பெரியம்மா, "இதான் உன் சம்பந்தி வீட்டு லட்சணம்" என்று முகத்திரை கிழித்த சந்தோசத்தில் வக்கனையாய் பேச, உலகமே தட்டாமாலையாய் சுற்ற ஆரம்பித்திருந்தது சுப்பிரமணியனுக்கு. அவர் தலைகுனிந்திருந்த வேளை, ஒரு குரல், "ஏன் மாமா, வசந்திக்குன்னு செஞ்ச இந்த பச்சைக் கல்லு வளையலும் நெக்லேசும் கல்யாணம் முடியிற வரை போட்டிருன்னு அத்தை கொடுத்தாங்களே கல்யாணக் களேபரத்துல மறந்துட்டீங்க தானே?" என்று சிரித்துக் கொண்டே கழற்றிக் கொடுத்த அவரது தங்கையின் மகள் லட்சுமி உண்மையில் அவரது கண்களுக்கு மகாலட்சுமியாகவே தெரிந்தாள். "இதையும் சேர்த்துப் பாருங்க. 150 சவரன் சரியா இருக்கும். எங்க மாமா சொன்னார்னா சொன்னபடி நடப்பாரு." என்றது சம்பந்தி வீட்டாரின் வாயை அடைத்தது.
சுப்பிரமணியனின் கண்களில் கண்ணீர் ஆறாய் ஓடிக் கொண்டிருந்தது.
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
அல்லவா?
6 ஜூன் 2008
கி.பி. 4008 சர் சர் என்று வானத்தில் நூறு அடி உயர டிராபிக்கில் ஜோவர் ஹோவர்கள் ரோபோக்களால் ஓட்டக் கொண்டிருக்கப்பட்டிருக்க, ஐக்கிய உலக அரசின் முதல் குடிமகனான பாட்ரிக்கைச் சந்திக்கச் சென்று கொண்டிருந்தார் யங் கிளேட். "இப்போ இருக்கும் டிராபிக்கைப் பார்த்தால் இன்னும் பத்து நிமிசம் ஆகும் போல இருக்கே? ஒழுங்கா க்யூ பாண்ட் விர்ச்சுவல் சாட் யூஸ் பண்ணிருக்கலாம். ஆனா, சில விஷயங்களை என்ன தான் சாட்ல சொன்னாலும், நேர்ல சொன்னது போல் இருக்காது" - க்ளேட் அவருக்குள் சொல்லிக் கொண்டார். அவர் செல்வதற்கும் பாட்ரிக் தூக்கத்தில் இருந்து எழுந்து அறையில் இருந்து வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது. "என்ன விஷயம் க்ளேட்? என்ன அவசரமா பார்க்க வந்திருக்கீங்க?" "விசயம் ரொம்ப அவசரம் மிஸ்டர் பிரெசிடெண்ட். மொத்த உலகையும் ஒரே நாடாக்கி எல்லாரும் ஒரே குடிமக்களா ஒத்துமையா வாழ்ந்து வர்ற இந்த நேரத்துல நம்ம ஹோம் ப்ளானட்டோடு மோதுறதுக்கு காமெட் எக்ஸ் 4374 இன்னும் ஆறே மாதங்களில் வர்றது பத்தித் தான் பேச வந்தேன்." க்ளேட் - ஐக்கிய அரசின் விண்படைத் தளபதி. "இப்படித்தான் ஆயிரக்கணக்கான வருசங்களா ஆராய்ச்சியாளர்கள் பூமியோட ஆயுள் முடியப் போகுதுன்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க. ஆனா, அவங்க ஆயுள் தான் முடிஞ்சு போச்சு. எனக்கென்னவோ இந்த காமெட் மோதப் போகுதுன்னு சொல்லி நிறைய ஆராய்ச்சிக்காரங்க சாப்பிட்றாங்கன்னு தான் தோணுது." என்றார் பாட்ரிக். "இதுக்கு முந்தி எப்படியோ? இந்த தடவை மோதப்போறதும் நிஜம். அப்படி மோதினால் பூமி என்ன ஆகும் என்பதையும் நம்ம ஸ்டிம் எக்ஸில் ஸ்டிமுலேட் பண்ணி வைச்சிருக்கோம். நீங்க அதை ஒருமுறை பார்த்தால் இப்படிப் பேச மாட்டீங்க. பூமியைக் காக்கும் யுத்தம் உடனே துவக்கனும்." "போர்ப்படைத் தளபதிகளுக்கு போர் இல்லைன்னா சும்மா இருக்க முடியாதே? சரி கொண்டாங்க பார்ப்போம்." என்றதும் அந்த அறை இருண்டது. அறையின் முழுச்சுவரிலும் வால் நட்சத்திரம் மோதுவதால் புவி சுக்கு நூறாய்ச் சிதறும் காட்சி தத்ரூபமாகக் காட்டப்பட்டது. காட்சியைக் கண்டு அதிர்ச்சியில் கொஞ்சம் வியர்த்திருந்தார் பாட்ரிக். "சரி. இதைத் தவிர்க்க வழியில்லையா?" என்றார் பாட்ரிக். "இருக்கு. நம்மோட ஸ்டார் போர்ஸ் மிசைலோட ரேஞ்ச் 1200 பில்லியன் கி.மீ. மொத்தம் மூன்று மிசைல்களை வைத்து இந்த ரேஞ்சுக்குள் காமெட் வரும் போது அதனோடு மோதி வெடிக்கச் செய்தால் காமெட்டின் பாதை மாறும். அப்படி மாறினால் பூமி தப்பிக்க 60 சதம் வாய்ப்பிருக்கின்றது." "ஏன் 60 சதம்? நூறு சதத்துக்கு என்ன வழி?" "ஏனென்றால் நம் மிசைல் தாக்குவதால் காமெட்டின் சிதறிய பாகங்கள் பூமியில் விழுந்தே தீரும். அது நிச்சயமாக பாதிப்பை ஏற்படுத்தும்." என்றார் க்ளேட். "சரி இப்போ என்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கின்றீர்கள்." "உங்கள் ஒப்புதல். ஸ்டார் போர்ஸ் மிசைல்ஸை ரெடி பண்ணி ஏவுவதற்குத் தயார் படுத்தனும். மொத்த உலகிலிருந்தும் அதற்கு உதவும் விஞ்ஞானிகள் கொண்ட படையை உருவாக்கனும். எத்தனையோ பில்லியன் ஆண்டுகளாய் இருக்கும் உலகை இப்படி ஒரு காமெட் கையில் கொடுத்து விடக் கூடாது." "இன்னும் ஒரே வாரத்தில் உலக சபையைக் கூட்டி அதற்கான முடிவு எடுக்கப்படும்." "நன்றி மிஸ்டர் பிரெசிடெண்ட்." அடுத்த ஒரு வாரம். நொடியில் போனது. க்ளேட் கேட்ட படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. க்ளேடே அந்த அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தும் சீப் கமாண்டராகவும் நியமிக்கப்பட்டார். உலகின் ஒவ்வொரு மனிதரும் அடுத்த ஆறு மாதங்களில் நிகழும் நிகழ்வுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தனர். தெய்வங்களைத் தொழும் வழக்கம் என்ன என்று கணினியைத் தேடிப் படித்துப் பார்க்கப் பட்டு சர்வமத பிரார்த்தனை அரசின் சார்பில் நடத்தப்பட்டது. இதோ கவுண்ட் டவுன் ஆரம்பமாயிற்று. உலகம் மொத்தமும் வால் டிவியில் ஸ்டார் போர்ஸ் மிசைலின் நேரடி ஒளிபரப்பைக் கண்டு விரல் நகம் கடித்துக் கொண்டிருந்தனர். ஒரு புறம் காமெட்டும் இன்னொரு புறம் மிசைலும் காட்டப்பட்டுக் கொண்டிருந்தது. ஒளியின் வேகக் குறைவினால் 15 நிமிடங்களுக்கு முந்தைய காமெட்டின் நிலையையே காண முடிந்தது. அப்படியே அந்த நேரம் குறைந்து கொண்டு வந்தது. எல்லாம் கணினிகளால் அப்டேட் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. மிசைல் ஏவும் பட்டன் க்ளேட் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதையும் கணினியில் செட் செய்து விடலாம் என்று சொன்னதற்கு மறுத்து விட்டார் க்ளேட். ஏதேனும் மிஷின் கோளாறு ஏற்பட்டு விட்டால் மனித குலத்தின் ஒரே ஒரு வாய்ப்பும் தட்டிப்பறிக்கப்பட்டு விடும். அதை நான் பார்த்துக் கொள்கின்றேன் என்று சொல்லி விட்டார்.
இதோ,
10
9
8
7
6
5
4
3
2
1
0
மொத்த உலகும் பரபரப்பின் உச்சியில் இருந்தது. பூஜ்ஜியத்தைத் தொட்ட பின்னும் மிசைல்கள் புறப்படவில்லை. விஞ்ஞானிகளின் முகத்தில் ஈயாட வில்லை. எல்லோரும் க்ளேடின் முகத்தைப் பார்த்தனர். க்ளேடின் இறுகிய முகமோ கணினித் திரையைக் கண்டு கொண்டிருந்தது. அவர் இன்னும் பட்டனையே அழுத்த வில்லை.
1
2
3
4
5
என்று கவுண்ட் அப் ஆரம்பித்திருந்தது. மக்கள் அனைவரும் அல்லோகல்லோலப்பட்டனர். 100 சதம் பேரும் முதலில் திட்டியது கிளேடைத் தான் என்பதில் ஐயமே இல்லை. சரியாக 45 வது வினாடியில் தம் விரலின் அருகில் இருந்த பட்டனை அழுத்தினார் க்ளேட். இதோ உலகைக் காக்கும் மூன்று ஏவுகணைகள் சீறிப்பாய்ந்தன. மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது அனைவரிடமும். ஏவுகணை பாய்ந்த 6வது மணி நேரத்தில் காமெட்டைத் தாக்கின. காமெட் திசை திரும்பியது மட்டுமின்றி ஒரு துகள் கூட புவியை நோக்கி வராமல் புவி காப்பாற்றப்பட்டது. எல்லோரும் க்ளைடைப் பாராட்டு மழையால் நனைத்தனர். காரியம் முடிந்ததும் அவர் ஏன் க்ரவுண்ட் பூஜ்ஜியத்தில் பட்டனை அழுத்தவில்லை என்ற கேள்வியுடன் தொலைக்காட்சிக் கேமிராக்கள் சூழ்ந்து கொண்டன. முகத்தில் மகிழ்ச்சியுடன் பேச ஆரம்பித்தார் க்ளேட். "உலக மக்களுக்கு வணக்கம். நான் ஏன் சரியாக பட்டனை அழுத்தவில்லை என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டிருப்பீர்கள். எல்லாமே ஸ்டிமுலேட் செய்த படி தான் நடந்து கொண்டிருந்தது. ஆனால், கவுண்ட் டவுன் ஆரம்பித்த பிறகு தான் காமெட் ஸ்டிமுலேட் செய்தது போல் அல்லாமல் லேசாகத் திரும்பி விட்டிருப்பதைக் கண்டேன். காரணம் யோசித்ததும் விளங்கியது. 11 ஆண்டுகளுக்கொருமுறை தோன்றினாலும் எப்போது அதிக வீச்சைத் தொடும் என்று யாராலும் கணிக்க முடியாத சூரிய காந்தப் புயல் நேற்று வீச ஆரம்பித்ததை அனைவரும் அறிவீர்கள். அந்தப் புயலால் காமெட் ஈர்க்கப்படுவதை உணர்ந்தேன். ஆனாலும் காமெட் வரும் வேகத்துக்கு சூரியப் புயலால் மட்டுமே காமெட்டை ஈர்த்து விட முடியாது. அது புவியின் மீது மோதத்தான் செய்யும். ஆனால் இந்தப் புயலை நம் கணினிகள் ஸ்டிமுலேட் செய்யவில்லை. நல்ல வேளையாக நாம் மிசைல் லாஞ்சிங்கை கணினி மயமாக்கவில்லை. சிறிது நேரம் எதிரியை நமது எல்லைக்குள் வரவிட்டேன். சரியாக 45 விநாடிகள். இதோ, இப்போது ஏவினால், சூரியக் கடவுளின் உதவியோடு, நம் எல்லைக்குள் வந்த எதிரி காமெட்டை விரட்டி விடலாம் என்று துல்லியமாக மனக்கணக்குப் போட்டு பட்டனை அழுத்தினோம். காமெட் அசுரனை விரட்டியே விட்டோம்! 60 சதம் தான் திட்டத்தின் வெற்றி என்று நானும் நம்பியிருந்தேன். ஆனால், சரியான நேரத்தில் சரியான இடத்தில் வைத்து மோதியதாலேயே 100 சதம் நம் பூமியைக் காக்க முடிந்தது." என்று முடித்தார். அனைவரும் அவருக்குப் புகழாரம் சூட்டினர். "உங்களால் தான் இது சாத்தியமாயிற்று" என்றார் பாட்ரிக். "அப்படி இல்லை மிஸ்டர் ப்ரெசிடெண்ட். நாம் செய்ய நினைக்கும் காரியத்தைச் சரியான நேரத்தில் சரியான இடத்தில் செய்தோமேயானால், இந்த மொத்த பூமியையும் நம் கையில் கிடைக்கச் செய்ய முடியும் என்று இன்றைக்கு 4028 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு தீர்க்கதரிசி பழந்தமிழ் மொழியில் ஒன்றே முக்கால் அடியில் சொல்லி விட்டுப் போயிருக்கின்றார்." ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின்.