என் பார்வையில் இ. கோ. மு. சிங்கம்
முத்தமிழ் மன்றத்தில் எழுதியது · 14 மே 2010
இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கம். சுறா போன்று எளிதில் வாய்க்குள் நுழையாத கரடு முரடான பெயர். ஆனால் மனதுக்குள் எளிதில் நுழைந்து விடுகின்றதே! கௌபாய் எனப்படும் நாடோடி வீரர்களின் வாழ்க்கையைத் தமிழில் காண்பது வித்தியாசமாகவும் வேடிக்கையாகவும் இருக்கின்றது. கௌபாயின் விளக்கத்துடன் திரைப்படம் ஆரம்பமாகின்றது. லாஜிக்கை அப்படியே மூட்டை கட்டி விட்டு 18ம் நூற்றாண்டில் அமிதாப்ஜிக்கு ஜே என்ற முழக்கத்துடன் ஷோலேபுரத்தில் ஆரம்பிக்கின்றது படம். அங்கு பயந்து நடுங்கும் சிங்காரம் தான் ராகவா லாரன்ஸ். அங்கிருக்கும் டெக்ஸாஸ் முள்ளங்கி என்னும் வைரத்தைத் தொலைத்ததால் அவருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றும் சமயத்தில் ஒரு கும்பல் அவரை மீட்டுக் கடத்திச் செல்கின்றது. அவர்களின் ஊரிலிருக்கும் சிங்கம் என்னும் நாடோடி வீரரைப் போலவே லாரன்ஸ் இருப்பது தான் காரணமாம். தூக்கிலிருந்து தப்பிக்க அவர்களுடன் செல்கின்றார் சிங்காரம். இம்சை அரசனின் ஆள் மாறாட்டப் பாதிப்பிலிருந்து இன்னமும் சிம்புதேவன் மீளவில்லை போலிருக்கின்றது. ஜெய்சங்கர்புரம் (நம்ம ஜெய்சங்கர் தான். :) ) தான் சிங்கத்தின் ஊர். மேஜர் சுந்தர்ராஜன் முதல் ஜெய்சங்கர் வரை கௌபாய் வேடத்தில் நடித்தவர்களைப் பட்டியலிடுவது சிறப்பு. தாய் சொல்லைத் தட்டாதே போன்ற படங்களில் ரஜினியும் நடித்திருந்தாலும், உயிருடன் இருப்பதால் விட்டு விட்டார்கள் போலும். ஜெய்சங்கர்புரம் வரும் சிங்காரம் சிங்கமாக அவதாரமெடுக்கின்றார். மிக மிக சீரியஸாகச் செல்லும் ஒரு காட்சியில் சட்டென்று ஸ்பாட் நகைச்சுவையைக் கொடுத்து, இது நகைச்சுவைப் படம் என்று அவ்வப்போது ஞாபகப்படுத்துகின்றார்கள். சிரிக்கவும் வைக்கின்றார்கள். ராகவன் சிம்புதேவனின் ஆஸ்தான நடிகராகிவிட்டார். அணுகுண்டு ஒப்பந்தம் என்னும் ஒரு ஒப்பந்தத்தில் அவருக்கு ஏற்படும் சந்தேகம் கரகாட்டக்காரனின் வாழைப்பழ நகைச்சுவையுடன் ஒப்பிடத் தக்கது. துப்பாக்கி, குதிரை, சீட்டுக்கட்டு, புதையல்வேட்டை, புரியாத செவ்விந்தியர் மொழி, அதற்கு மொழிபெயர்ப்பாளர் என்று சுவாரசியமாகத் தொடர்கின்றது படம். இடையில் தோன்றுகின்றார் வில்லன். அவர் இருக்கும் இடம் தான் USA Puram (உசா புரம்) எனப்படும் இரும்புக்கோட்டை. சிம்புதேவனின் டீமில் ஆஸ்தான வில்லன் நடிகரான நாசர் இரும்புக்கோட்டையாக இந்தப் படத்தில் அசத்தியிருக்கின்றார். இடையில் அல்லக்கையாக வரும் உலக்கையின் நடிப்பும் அருமை! ஆக, உசாபுரம் இரும்புக் கோட்டைக்கும், ஜெய்சங்கர்புரம் முரட்டுச் சிங்கத்துக்கும் நடக்கும் சண்டை தான் கதை. புதையல் வேட்டையில் "மொத்தம் தமிழில் எத்தனை எழுத்துகள்? ஆளவந்தான் யார், கமலா" போன்ற கேள்விகள் சிரிப்பை வரவழைக்கின்றன. சற்றும் பார்ப்பவர்களுக்குப் போரடிக்காமல் புதையல்வேட்டை நடத்தியிருப்பதற்கு கூடுதலாக ஒரு சபாஷ் போடலாம். படத்தில் நான்கே பெண்கள். ஒருவர் ஆச்சி மனோரமா. மற்ற மூவரும் கதாநாயகிகள். கௌபாய்களுக்குச் சென்றவிடமெல்லாம் காதல் என்ற விதியை மாற்றாமல் செல்லுமிடமெல்லாம் ஒவ்வொருவரையும் காதலிக்கின்றார் லாரன்ஸ். ஒவ்வொருவருடனும் ஒரு டூயட். கடைசியில் அவர்களில் ஒருவரைக் கொல்கின்றார். ஒருவரைக் கண்டுகொள்ளாமல் விடுகின்றார். யாரைக் கரம்பிடிக்கின்றார் என்பதை வெள்ளித் திரையில் காணுங்கள். என்ன தான் நகைச்சுவைப் படமென்றாலும், லாஜிக் இல்லையென்று அவ்வப்போது நினைவுபடுத்தினாலும், அடுத்து கதையில் என்னாகப் போகின்றது என்னும் எதிர்பார்ப்பைத் தூண்டும் வகையிலும் வித்தியாசமான காலகட்டங்களின் படங்களை நகைச்சுவை உணர்வுடனும் இயக்கியிருக்கும் இயக்குநர் சிம்புதேவனின் பயணத்தில் இப்படமும் ஒரு மைல்கல். இடைவேளையில் கொரிக்கும் சோளப்பொரியாக இருந்தாலும், வீடு வந்த பின்னும் நாவில் ருசிக்கின்றார் இ.கோ.மு.சி.