பகுவல்கள்
முத்தமிழ் மன்றத்தில் எழுதியது · 12 ஜூலை 2010 – 20 டிசம்பர் 2010
பகுவல்கள் (fractals) என்றால் என்ன? கட்டற்ற களஞ்சியமாம் விக்கிபீடியாவிலிருந்து: பகுவல் எனப்படுவது ஒரு வகை கணிதப் பண்புகள் கொண்ட ஒரு வடிவம் அல்லது தோற்றம் ஆகும். பகுவல்களின் சிறப்பு என்னவென்றால் அவற்றைத் பிரித்துப் பார்த்தால் அல்லது பெரிதாக்கி அல்லது சிறிதாக்கிப் பார்த்தால் அவற்றின் கணிதப் பண்புகள் அல்லது தோற்றம் ஒரே மாதிரி அமையும். அதாவது அவை தன்னிலை சமநிலை பேணும். பகுவல் தேற்றின் (theory) படி, குறுகிய இலக்களவில் ஒழுங்கு அமைந்தால், அந்த ஒழுங்கு வெவ்வேறு படிமானங்களில் (magnitudes) திரும்பத் திரும்ப அமையுமானால், அழகான பட்டவங்கள் (patterns) கோளகை (global) அளவில் ஏற்படும் என்று சொல்லுவார்கள். மலையும், மடுவும், ஆறும், அருவியும், குளமும், ஏரியும், காடும், வயலும், கடலும், கரையும், மொத்தத்தில் ஐந்திணைகளையும், ஏன் இந்தப் பேரண்டத்தையுமே, பகுவலாய்ப் பார்ப்பது அண்மைக்கால அறிவியற் போக்கு. (நன்றி: வளவு) வரைவு மொழியிலன்றிச் சாதாரணமாகச் சொல்லப் போனால், தம்மில் தம்மையே பகுதியாய்க் கொண்டிருப்பது பகுவல் ஆகும். பகுவல்களைப் பெரிதாக்கிக் கொண்டே போனால் மீண்டும் அவற்றின் வடிவத்தையே அதனுள் காணலாம். பகுவல்களின் சிறந்த எடுத்துக்காட்டாக இப்பரந்த பிரபஞ்சத்தையே காட்டலாம் எனினும், நாம் அடிக்கடி காணும் ஒரு எடுத்துக்காட்டு, கோவில்களின் மேற்கூரைகளில் வரையப்பட்டிருக்கும் (வி)சித்திரப் படங்களைக் கை காட்டிக் கூறலாம்.
2 படங்கள் கிடைக்கவில்லை
இவை மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் மேற்கூரையை அலங்கரிக்கும் பகுவல்கள் ஆகும். இவற்றை வரையும் நுணுக்கமான ஓவியர்கள் வெறும் ஆணிகளையும் வெவ்வேறு அளவிலான சணல் கயிறுகளையும் கொண்டு ஆணிகளில் ஒரு முனையையும், மறு முனையில் கரிக்கட்டிகளையும் கட்டிக் கொண்டு சித்திரந் தீட்டுவதைக் கண்டால் ஆச்சரியமாக இருக்கும். வானத்தில் தென்படும் நட்சத்திரங்கள், கோள்கள், உடுமண்டலங்கள் ஆகியவற்றைப் பகுவல்களாகக் காணும் அறிவியல் பாங்கை முன்பே கண்டு அதைக் கோவிலின் மேற்கூரைகளில் அண்ணாந்து பார்த்தால் தெரியும் வண்ணம் வரைந்த நம் முன்னோர்களின் சிறப்பே சிறப்பு. இனி, நவீனப் பகுவல்கள் பற்றியும், பகுவல்களின் தந்தை என்று யார் அழைக்கப்படுகின்றார் என்பது பற்றியும், அவற்றின் கணிதத் தன்மை பற்றியும் தொடர்ந்து காண்போம்.
13 ஜூலை 2010
இங்கு (http://muthamilmantram.com/viewtopic.php?p=454457#p454457) நாம் ஏற்கனவே பிபனாக்கி எண்கள் மற்றும் தங்கப் பிரிவினை எண் விகிதம் கொண்ட சிறப்புப் பகுவல்கள் குறித்துப் பார்த்திருக்கின்றோம். நத்தைக் கூடுகள் யாவும் சிறப்புப் பகுவல்களின் வடிவமைப்பே ஆகும். இனி ஒரு பகுவல் எவ்வாறு உருவாக்கப்படுகின்றது என்று கீழே காணும் படத்தைக் கொண்டு விளக்கலாம். (நன்றி: விக்கிபீடியா)
ஒரு சமபக்க முக்கோணத்தை எடுத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு பக்கத்தையும் மூன்றாகப் பிரிக்க வேண்டும். பின்னர் ஒவ்வொரு பக்கத்திலும் அவ்வாறு மூன்றாகப் பிரித்த பகுதியில் நடுப்பகுதியை நீக்கி, அப்பகுதி மேலெழும்புமாறு செய்ய வேண்டும். இதனால் அதன் சமச்சீர் தன்மை பாதிக்கப்படக் கூடாது. இதே போல் மூன்று பக்கங்களிலும் செய்தோமேயானால் அதுவே இப்பகுவலின் முதல் சுற்று (Iteration) ஆகும். இப்போது இருக்கும் வடிவத்தின் அனைத்துப் பகுதிகளும் சம அளவினைக் கொண்டதாகவே இருக்கின்றது. இப்பக்கங்கள் ஒவ்வொன்றையும் மீண்டும் மூன்றாகப் பிரித்து மேலுழும்புமாறு செய்தால் இரண்டாவது சுற்று ஆகும். இப்படியே அடுத்தடுத்த சுற்றுக்கள் செல்லச் செல்ல, அது ஒரு பனித்துகளின் வடிவம் பெற்றுவிடும்! இனி இவ்வாறு மேலெழும்பாமல், முக்கோணத்தின் உள்ளேயே விழுந்து விடுமாறு செய்தால் என்னாகும்? இவ்வாறு வடிவம் பெறும்!
படம் கிடைக்கவில்லை
தொடர்வோம்...
22 ஜூலை 2010
ஆக, பகுவல்களின் முக்கியப் பண்பு அவற்றின் சுற்றுக்களின் எண்ணிக்கையில் இருக்கின்றது என்பது தெரியவரும். சுற்றுக்கள் (Iteration) அதிகமாக அதிகமாக பகுவல்கள் நுணுக்கமாகிக் கொண்டே செல்கின்றன. ஒவ்வொரு பகுவலுக்கும் ஒரு முதல் வடிவம், அதை மாற்றும் விகிதம், சுற்றுக்கள் ஆகியவை அடிப்படையாகும். முதல் வடிவத்தில் மாற்றும் விகிதத்தை அறிமுகப்படுத்தும் போது அடுத்த சுற்றில் அடுத்த வடிவம் கிடைக்கின்றது. பின்னர் இந்த வடிவம் முதலாகக் கொண்டு மீண்டும் மாறும் விகிதம் அறிமுகப்படுத்தப்பட்டு சுற்றுக்கள் செல்கின்றன. எடுத்துக்காட்டாக ஒரு வட்டத்தை முதல் வடிவமாகக் கொள்ளலாம். மாற்றும் விகிதமாக 10% பெரியது அல்லது சிறியது என்று அறிமுகப்படுத்தலாம். பெரியது என்றால் அடுத்த வட்டம் முதல் வட்டத்தைக் காட்டிலும் 10% அதிகமானதாக இருக்கும். அடுத்த சுற்றில் 2வது வட்டத்தைக் காட்டிலும் 10% பெரியதாக இருக்கும். இப்படியே சுற்றுக்கள் செல்லும். இந்த மாற்றும் விகிதத்தையுமே கணித ரீதியாக மாற்றிக் கொண்டே செல்லலாம். வடிவத்தையும் சற்று மாற்றிக் கொண்டே செல்லலாம். இப்படித் தான் பல பகுவல்கள் பரிணாம வளர்ச்சி பெறுகின்றன. பகுவல்களில் பலவகை உண்டு. நாம் முதலில் பார்த்த சுற்றுச் சார்பமைவு பகுவல்கள் (Iterated Function System) அதில் ஒரு வகையாகும். அடுத்ததாக நாம் காணவிருப்பது L-System என்றழைக்கப்படும் லின்டன்மேயர் Lindenmayer (http://en.wikipedia.org/wiki/Aristid_Lindenmayer) அமைவு ஆகும். ஒரு பரிமாணமுடைய கோடுகளை மட்டும் கொண்டு இந்தப் பகுவலை வரைந்தால் கிடைப்பது ஓரறிவு மரங்களின் வடிவமாகும்! இதை வைத்துத் தான் அவதார் போன்ற திரைப்படங்களில் காடுகளையே கணினிகளால் உருவாக்க இயலுகின்றது. இதோ ஒரு பரிமாண மரம்...

இது கணினியால் உருவாக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட முப்பரிமாண மரங்களின் படம்...
படம் கிடைக்கவில்லை
13 செப்டம்பர் 2010
அடுத்ததாக நாம் காண்பவை கவர்வான் (Attractors) வகைப் பகுவல்கள் ஆகும். அதென்ன கவர்வான்? என்ன தான் உடல் முழுவதும் எண்ணையைத் தடவிக் கொண்டு மண்ணில் புரண்டாலும், ஒட்டும் மண் தான் ஒட்டும் என்று ஒரு பழமொழி உண்டு. அதே போல ஒரு கணிதச் சார்பைப் (Mathematical Function) பயன்படுத்தி முப்பரிமாணத் தளத்தில் புள்ளிகளைப் படியவைக்கும் போது அதற்கு ஒரு வடிவம் உண்டாகின்றது. அந்தப் புள்ளிகள் எல்லாம் ஒழுங்கமைவாக அந்த வடிவத்தை நோக்கி ஈர்க்கப்படுகின்றன. வெற்றிடங்களில் அந்தப் புள்ளிகள் விழுவதில்லை. எனவே தான் இதைக் கவர்வான் (அதாவது கணிதச் சார்பு புள்ளிகளைக் கவர்வதால்) வகைப் பகுவல்கள் என்கின்றனர். இப்பகுவல்களின் கணிதச் சார்புகள் அனைத்தும் ஏதேனும் ஒரு முப்பரிமாணப் புள்ளியை (x1,y1,z1) உள்ளீடாகப் பெற்று அதைச் சார்பில் பயன்படுத்தி மற்றொரு முப்பரிமாணப் புள்ளியை (x2,y2,z2) வெளியீடாகப் பெற உதவுகின்றன. அதிகப்படியான பகுவல்கள் இந்த வகையிலேயே காணக் கிடைக்கின்றன. முதலில் நாம் குறிப்பிட்ட சுற்றுச் சார்பமைவு பகுவல்கள் (Iterated Function System) கூட இந்த வகையின் கிளைப்பகுவலே. ஒவ்வொரு சுற்றிலும் புள்ளிகள் வடிவத்தை நோக்கி ஈர்க்கப்படுவது தான் இங்கும் அடிப்படையாகும். கணக்கிலடங்கா வடிவங்களை ஒரு சார்பின் ஒரு மாறிலியின் அளவைச் சற்றே மாற்றியே பெற முடியுமாயின், பற்பல மாறிலிகள், மாறிகள் கொண்ட கணிதச் சார்புகளைக் கொண்டு என்னென்ன வகையான பகுவல்களை உருவாக்க முடியும்?! இன்றைய அதிநவீனக் கணினிகள் கூடத் தடுமாறும் வகையில் இக்கணக்குகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது. இதோ சில கவர்வான் வகைப் பகுவல்கள்! இவை நாம் முதலில் கண்ட சுற்றுச் சார்பமைவுப் பகுவல்களின் பல்வேறு வடிவங்கள்:
2 படங்கள் கிடைக்கவில்லை
இவை ஜுவாலை வகைப் பகுவல்கள்
2 படங்கள் கிடைக்கவில்லை
இவை இயற்கையில் காணக் கிடைக்கும் முப்பரிமாணப் பொருட்களின் (வ)படிவங்கள்.
3 படங்கள் கிடைக்கவில்லை
இனி ஒரு கணிதச் சார்பின் ஒரு மாறி அல்லது மாறிலியின் அளவைச் சற்றே மாற்றினால் என்ன ஆகும் என்றும் காணலாம். இது அளவை மாற்றும் முன்பு ஒரு ஒழுங்கமைவு கோள் அல்லது கோளம்
படம் கிடைக்கவில்லை
இது அளவைச் சற்றே மாற்றியதும்... விண்ணில் காணக் கிடைக்கும் கோள் ஆகி விடும்!
படம் கிடைக்கவில்லை
தொடர்வோம்...
16 அக்டோபர் 2010
பகுவல்களின் தந்தை என்றழைக்கப்படும் Benoit B. Mandelbrot அவர்கள் தமது 85ம் வயதில் இன்று காலமானார். அன்னாருக்கு அவர் கண்டறிந்த பகுவலின் மூலமாக அவரது ரசிகர் ஒருவர் உருவாக்கிய அஞ்சலி இது. இயற்கையின் தத்துவத்தைப் புதிய முறையில் நிறுவ முனைந்த கணித மேதையின் காலத்தில் நாமும் வாழ்ந்ததில் நமக்குப் பெருமையே. 7lzcZrIEVTc
http://www.edge.org/3rd_culture/bios/mandelbrot.html
2 நவம்பர் 2010
அடுத்து நாம் காணவிருப்பது மிகவும் பிரபலமான, நுணுக்கமான, அழகான வடிவமைப்புடைய பகுவல்களாகும். இவையும் கவர்வான் வகைப் பகுவல்களின் ஒரு பகுதியே ஆகும். பகுவல் என்றால் தம்மில் தம்மைப் பகுதியாய்க் கொண்டிருத்தல் என்று கண்டோம். கணிதச் சார்புகள் தம்மில் தம்மைப் பகுதியாய்க் கொண்டிருப்பதால் அவைகள் மூலம் கிடைக்கும் வடிவங்களும் பகுவல்களாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக ஒரு எளிமையான கணிதச் சார்பை (Mathematical function) எடுத்துக் கொள்வோம். அதன் வெளியீடையே அந்தச் சார்பின் மறு உள்ளீடாக அடுத்த சுற்றில் கொடுப்பதால் பகுவல்கள் கிடைக்கின்றன. z = f(z) என்பது முதல் சுற்றாக எடுத்துக் கொண்டால், அடுத்தடுத்த சுற்றுக்களில் இதே சார்பின் உள்ளீடு z, f(z), f(f(z)), f(f(f(z))), ..., இவ்வாறாக அமையும். முதல் எண்ணையும், சார்பையும் பொருத்து இந்தப் பகுவல்கள் வடிவமெடுக்கின்றன. இப்போது எடுத்துக்காட்டாக இந்தச் சார்பைக் காணுங்கள். f(z) = z * z என்பது ஒரு எளிமையான சார்பு. இப்போது z க்கு முதல் மதிப்பாக 1 ஐக் கொடுப்போம். எத்தனை சுற்றுக்கள் சென்றாலும், இதன் மதிப்பு (1,1,1,...) இப்படியே தான் செல்லப் போகின்றது. ஆக, இந்தச் சார்பையும் மதிப்பு 1ஐயும் பொருத்தவரை கவர்வான் அல்லது புள்ளி செல்லும் திசை, அல்லது எல்லை 1 என்று கூறலாம். அதுவே இதே சார்பில் 1க்குப் பதிலாக 0.5 என்ற எண்ணுடன் ஆரம்பிப்போமேயானால், அதன் மதிப்புக்கள் (0.5,0.25,0.0625,0.0039, ...) என்று புள்ளி செல்லும் திசை பூச்சியத்தை நோக்கிச் செல்வதைக் காணலாம். இதே சார்பில் 0.5க்குப் பதிலாக 2 என்று ஆரம்பித்தால் (2,4,16,256,65536,...) என்று முடிவிலியை நோக்கிச் செல்லும். எல்லாச் சார்புகளும், எல்லா மதிப்புக்களும் இவ்வாறு ஏதோ ஒரு எண்ணையோ எல்லையையோ நோக்கிச் செல்லும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறாகும். எங்கு செல்வது என்று தட்டுத்தடுமாறி நிற்கும் சார்புகளும் மதிப்புக்களும் உண்டு. எடுத்துக்காட்டாக, இதே சார்பில் f(z) = z * z + 0.1 என்ற சார்பைக் கொடுத்து 0.9 என்ற மதிப்புடன் ஆரம்பித்தோமேயானால், (0.9, 0.91, 0.9281, 0.96136961 ...) என்று கொஞ்சம் மெதுவாக முடிவிலியை நோக்கிச் செல்லும். ஒரு அடர்ந்த காட்டில் மருண்ட இருட்டில் திக்குத் தெரியாமல் ஒரு குரங்கு துள்ளிக் குதித்துக் கொண்டிருந்ததாம். அப்போது அதற்குக் கையில் ஒரு மதுபுட்டி கிட்டியதாம். உடனே அந்த மதுவை ஒரே மடக்கில் குடித்த குரங்கு இன்னும் அதிகமாகக் குதிக்க ஆரம்பித்ததாம். இது போதாதென்று அந்தக் குரங்கை ஒரு தேள் ஒன்றும் கொட்டியதாம். இப்போது அந்தக் குரங்கு எப்படியெல்லாம் குதிக்குமோ அது போல நமது பகுவலின் புள்ளியும் குதிக்குமானால் கிடைப்பது தான் ஜூலியா வகைப் பகுவலாகும்! (தொடர்வோம்)
ஜூலியா வகைப் பகுவல்களைக் கண்டறிந்தவர் Gaston Julia என்றழைக்கப்படும் 1919 வாக்கில் வாழ்ந்த பிரெஞ்சுக் கணித மேதை ஆவார். மேலே காணும் படத்தில் வலது புறத்தில் இருப்பவர் ஜூலியா. இவரது காலத்தில் பல பக்கங்களுக்குப் பகுவல்களின் கணிதச் சார்புகளைப் பற்றி எழுதித் தள்ளியிருக்கின்றார் மனிதர். ஆனால், அவரால் இந்தப் பகுவல்களை மனக் கண்ணிலாவது கண்டிருக்க முடிந்ததா என்று தெரியவில்லை. ஐம்பது ஆண்டுகளாக வெறும் காகிதத்தில் எழுதப்பட்ட கணிதச் சூத்திரங்களாக இருந்த இவரது ஆக்கங்கள், நுணுக்கமான கணிதச் சூத்திரங்களை நொடியில் தீர்வு காண இயலும் கணினிகள் வந்த உடன் வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்தன. பகுவல்களைத் திரையில் பார்த்தவர்கள் மெய்மறந்து போயினர்! அவரது நினைவாக இவ்வகைப் பகுவல்களுக்கு ஜூலியா பகுவல்கள் என்றே பெயரிட்டு அழைக்க ஆரம்பித்தனர். ஜூலியா வகைப் பகுவல்கள் பற்றி அறிவதற்கு முன் நாம் கணிதத்தின் கற்பனை எண்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். நாம் அனைத்து நேர்மறை எண்களுக்கும் வர்க்கமூலம் கண்டறிய இயலும் என்பதை அறிந்திருப்போம். எடுத்துக்காட்டாக +4 என்னும் எண்ணின் வர்க்கமூலம் (+2 அல்லது -2) ஆகும். 2 * 2 அல்லது -2 * -2 ஆகியவை 4 என்ற தீர்வைத் தருவதால் வர்க்க மூலம் காண இயலுகின்றது. இனி -4 என்ற எதிர்மறை எண்ணின் வர்க்கமூலம் யாது? என்று கேட்டால் கணிதத்தில் பதில் கிடைப்பதில்லை. ஆயினும் அப்படி ஒரு எண் இருப்பதாகக் கற்பனை செய்து பொறியியல் மற்றும் பல துறைகளில் பல கணக்குகளுக்குத் தீர்வு காண்கின்றனர். இவற்றைக் கற்பனை செய்யமட்டுமே முடிவதால் இவற்றைக் கற்பனை எண்கள் (imaginary numbers) என்றழைக்கின்றனர். கற்பனை எண்களின் கணிதக் குறியீடு i ஆகும். i என்பது -1ன் வர்க்கமூலம் ஆகும். ஆக, -9 ன் வர்க்கமூலம் 3i அல்லது -3i ஆகும். நாம் கணிதம் பயின்ற காலத்தில் பொடிப் பொடிக் கட்டங்கள் கொண்ட படக் காகிதத்தில் (Graph sheet) நேர்கோடுகள் அல்லது வளைவுக் கோடுகள் வரைந்திருப்போம். அவற்றில் இரு மாறிகளைப் பயன்படுத்தியிருப்போம். x அச்சு மற்றும் y அச்சு ஆகிய இரு அச்சுக்களில் இரு பரிமாண வடிவங்களை வரைய முடிகின்றது. இதையே ஜூலியாவும் பயன்படுத்தினார். x அச்சில் நிஜ எண்களையும், y அச்சில் கற்பனை எண்களையும் பொருத்தலாம் என்றும் அவ்வாறு பொருத்தும் போது z, f(z), f(f(z)), f(f(f(z))), ..., என்ற சார்புகளும் அவற்றின் மதிப்புக்களும் பல சமயங்களில் முடிவிலியை நோக்கிச் செல்லாமலும், ஒரு குறிப்பிட்ட பாதையை மட்டுமே தேர்ந்தெடுக்காமலும் நாம் கண்ட குரங்கு போலத் துள்ளித் திரிவதைக் கண்டார். ஆம். z என்னும் குரங்கு i என்னும் மதுவைக் குடித்ததுடன் c என்னும் தேளும் சேர்ந்து கொட்டுவதால் குதித்தாடுகின்றது! அவ்வாறு அவர் தேர்ந்தெடுத்த ஒரு எளிய சார்பு தான் நாம் மேலே கண்ட f(z)=z*z+c என்னும் சார்பு ஆகும். இதில் z = 2 + 3i மற்றும் c = 4 + 5i என்று கொண்டால், முதல் சுற்றில், ((2 + 3i) * (2 + 3i)) + (4 + 5i) என்று சமன்பாடு விரிவடைந்து பின்னர் -1 + 17i என்ற தீர்வு கிடைக்கின்றது. இப்படியே இது அடுத்தடுத்த சுற்றுக்களில் வெவ்வேறு எண்களைக் கொண்டு விளங்கும். அதாவது ஒரு நிஜ எண் மற்றும் ஒரு கற்பனை எண் மட்டும் இருக்கும். நிஜ எண்ணை x அச்சிலும், கற்பனை எண்ணை y அச்சிலும் வைத்து விட்டால் போதுமானது! இதோ அவ்வாறு வரையப்பட்ட ஒரு ஜூலியா வகைப் பகுவலைக் காணலாம்.
மேலும் சில ஜூலியா பகுவல்கள்.
2 படங்கள் கிடைக்கவில்லை
எவ்வளவு முறை அடுக்கடுக்காகச் சுற்றுக்கள் சென்றாலும், இப்பகுவல்கள் ஏதேனும் ஒரு புள்ளியையோ எல்லையையோ நோக்கிச் செல்லாததால், பிரபஞ்சத்தைப் போலவே எல்லை கடந்ததாக இருக்கின்றன! ஆழ்ந்து அகன்று கொண்டே செல்லும் இந்த ஜூலியாப் பகுவலைத் தயாரித்த கணினி 410 மணி நேரங்கள் உழைத்திருக்கின்றது என்பது இந்தக் கணக்குகளுக்குக் கணினியின் தேவையை நியாயப்படுத்தும்! fHwAITISiKo தொடர்வோம்.
இவற்றில் z மற்றும் c க்கு வெவ்வேறு மதிப்புக்களும் கற்பனை எண்களும் கொடுத்தாலே நம் கற்பனைக்கெட்டாத ஜூலியாப் பகுவல்கள் கிடைக்கும் என்ற நிலையிருக்க, பகுவல்களில் ஆர்வமிக்க ஒருவர் மெனக்கெட்டு வெறும் z மற்றும் c ஆகிய மாறிகளைக் கொண்டு 679 விதமான சூத்திரங்களை (http://www.lifesmith.com/formulas.html) உருவாக்கி இருக்கின்றார். இவற்றிலும் வெவ்வேறு மதிப்புக்களும் கற்பனை எண்களும் கொடுத்தால், அடேங்கப்பா! இவற்றைக் காண நம் வாழ்க்கை போதாது என்ற எண்ணமே மேலிடுகின்றது. ஜூலியா பகுவல்களே கற்பனைக்கெட்டாதவாறு எல்லைகளற்று இருக்கும் போது அந்த ஜூலியா பகுவலே தனது பகுவலில் ஒரு சிறு பகுதி தான் என்று ஒருவர் சுட்டிக் காட்டினார். அவர் தான் பகுவல்களின் தந்தை என்றழைக்கப்படும் Benoit B. Mandelbrot ஆவார். அவர் அப்படி என்ன கண்டறிந்தார்? என்பதைப் பற்றியே அடுத்து காணவிருக்கின்றோம்.
20 டிசம்பர் 2010
20 November 1924 முதல் 14 October 2010 வரை இந்த மண்ணில் வாழ்ந்த Benoît Mandelbrot என்னும் போலந்து நாட்டில் பிறந்து பிரான்ஸ் நாட்டுக்குக் குடிபெயர்ந்து இறுதியில் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவின் குடிமகனாக இரட்டைக் குடியுரிமை பெற்ற கணித மேதையைப் பகுவல் உலகம் மறக்கவியலாது. ஏனெனில் பெற்ற குழந்தைக்குப் பெயரிடுபவர் தந்தையன்றோ? இவர் தான் 1975ல் பகுவல்களுக்குப் பகுவல்கள் (fractals) என்று பெயரிட்டவர் ஆவார். சமகால கணித/அறிவியல் விஞ்ஞானிகளில் மேன்டல்ப்ராட் மிக முக்கியமானவர் என்பதில் ஐயமில்லை. பகுவல்கள் மட்டுமின்றி இவர் தொட்டுச் சென்ற கணிதச் சமன்பாடுகளும் விட்டுச் சென்ற அறிவியல் கோட்பாடுகளும் அவர் தம் முக்கியத்துவத்தைப் பறைசாற்றும்.
படம் கிடைக்கவில்லை
சந்தையில் பருத்தியின் விலை அடுத்து என்னவாக இருக்கும் என்று கணிப்பதாக இருந்தாலும், அண்டவெளிப் பெருவெடிப்பு இருந்ததோ இல்லையோ நட்சத்திரங்களின் அமைப்பு இவ்வாறு இருக்க வாய்ப்பிருக்கின்றது என்று கணிப்பதாக இருந்தாலும் மேன்டல்ப்ராட் தனது கருத்தை ஆணித்தரமாக நிலைநாட்டினார். அவர் கண்டறிந்த உன்னதப் பகுவலுக்கு மேன்டல்ப்ராட் என்ற அவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. இந்த மேன்டல்ப்ராட் பகுவல் அனைத்து வித ஜூலியா பகுவல்களையும் தன்னுள் அடக்கியதாய் இருப்பது மிகுந்த ஆச்சரியமுடையதாகும்! அது மட்டுமின்றி நாம் அண்டத்தில்/பிண்டத்தில் காணும் பல வடிவங்களையும் இந்தப் பகுவலில் காண முடிவது (நட்சத்திர வெடிப்பு, உடுமண்டலங்களின் அமைப்பு, பனிக்கட்டியின் வடிவம் இன்னும் எத்தனை எத்தனையோ வடிவங்கள்) அண்டப் பிறப்பின் ரகசியங்களைப் புட்டு வைப்பதாய் இருக்கின்றது என்பது பல விஞ்ஞானிகளின் கருத்தாக இருக்கின்றது.
படம் கிடைக்கவில்லை
இது மேன்டல்ப்ராட் பகுவல் சமன்பாடு அவரது கையெழுத்திலேயே!
படம் கிடைக்கவில்லை
மேலே படத்தில் காட்டப்பட்டிருப்பது மிகவும் பிரபலமான மேன்டல்ப்ராட் பகுவலாகும். நாம் ஜூலியா பகுவலில் ஏற்கனவே கண்ட கற்பனை எண்களின் துணை கொண்டு z=z^2 + c என்னும் சமன்பாட்டை மீண்டும் மீண்டும் சுற்றுக்களாக உட்படுத்தும் போது x மற்றும் y அச்சில் மெய் மற்றும் கற்பனை எண்களைப் பதிய வைக்கும் போது கீழ்க்காணும் விதமாக பகுவல் காணக் கிடைக்கின்றது.
படம் கிடைக்கவில்லை
இந்தப் பகுவலில் இருக்கும் அதிசயம் என்னவென்றால், மேலிருக்கும் படத்தில் ஊதா எல்லைக்குள்ளிருக்கும் எந்த ஒரு புள்ளியையும் ஆரம்பப் புள்ளியாய் எடுத்துக் கொண்டு, எத்தனை சுற்றுக்கள் சென்றாலும் அது மேன்டல்ப்ராட் பகுவலின் எல்லைக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வருமே அன்றி ஒரு போதும் வெளியேறாது. வெள்ளைப் பகுதியிலிருக்கும் ஒரு புள்ளியை ஆரம்பமாய்க் கொண்டு அடுத்தடுத்த சுற்றுக்கள் செல்லும் போது அது முடிவிலியை நோக்கிச் செல்வதைக் காண இயலுகின்றது. இது கிட்டத்தட்ட அண்டவெளியின் கருந்துளையின் அம்சத்தைப் ஒத்திருப்பதைக் காண முடிகின்றது! (தொடர்வோம்)