தரவுச் சுரங்கம் - 37

தரவுச்சுரங்கம் – 37

கனத் தரவு (Data Cube) அமைப்பில் முதன்மையான மூன்று செயல்பாடுகள் குறித்து சென்ற பகுதியில் கண்டோம். இந்தப் பகுதியில் மீதமுள்ள முக்கியமான இரண்டு செயல்பாடுகளைக் குறித்து விளக்கமாகக் காண்போம். வானத்தில் நட்சத்திரக் கூட்டங்களைக் காண்பதற்கு தொலைநோக்கியும், அணு அளவில் நுணுக்கமாகக் காண்பதற்கு நுண்ணோக்கியும் கருவிகளாகக் கொண்டு அறிவியலாளர்கள் பல விஷயங்களைக் கண்டறிந்திருக்கின்றார்கள். அதையே இப்போது நாமும் கனத்தரவில் பார்க்கவுள்ளோம்.

4. துளையிடல் (Drilling Down)

ஒரு கனத்தரவு என்பது பல பரிமாணங்களைக் கொண்டதும் பல படிநிலைகளைக் கொண்டதுமாக இருக்கும் என்று கண்டோம் அல்லவா? அதற்குள் பயணம் செய்து பார்த்தால் தானே உண்மை நிலையைக் கண்டு முடிவெடுக்க ஏதுவாக இருக்கும். தரவுச் சுரங்கம் என்ற இத்தொடரின் தலைப்பிற்கேற்றவாறு துளையிட்டு கனத்தரவுக்குள் செல்வதை இது குறிக்கின்றது. கனத்தரவின் வெளிப்புறத்தில் நாம் அத்தனை படிநிலைகளின் உச்சாணிக்கிளையில் அமர்ந்து மொத்த எண்ணையே காண்கின்றோம். (எடுத்துக்காட்டு: நாடு, மாநிலம், மாவட்டம், நகரம், தெரு போன்ற இடம் எனும் பரிமாணத்தினைக் கண்ணுற்றால் பல நாடுகளில் ஒட்டு மொத்த விற்பனை என்று காண்பதைக் குறிக்கலாம். இந்த நிலையில் ஒரு பகுப்பாய்வாளர் ஒரு நாட்டையும் இன்னொரு நாட்டையும் ஒப்பீடு செய்து எந்த நாட்டில் அதிக வியாபாரம் ஆகியுள்ளது என்பதைக் காண முடியும். ஏதோ ஒரு நாட்டின் விற்பனை குறைவாக உள்ளது என்று வைத்துக் கொண்டால், அது குறித்த மேலதிகத் தகவல் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், எந்த மாநிலத்தில் சென்ற ஆண்டைக் காட்டிலும் குறைவாக விற்பனை நடந்துள்ளது என்று அறிய நினைக்கலாம். அதற்கான கருவியே இத்துளையிடல் ஆகும். இதை இரண்டு முறைகளில் செய்ய முடியும்.

  1. ஒரே பரிமாணத்தின் ஏதேனும் ஒரு மேற்படிநிலையில் இருந்து ஏதேனும் ஒரு கீழ்ப்படிநிலைக்குச் செல்வதன் மூலம் (எடுத்துக்காட்டு: நாடுகளிலிருந்து நம் பார்வையை ஒரு நாடு அல்லது பல நாடுகளின் மாநிலங்கள் படிநிலைக்குச் செல்லும் போது மேலதிகத் தகவல்கள் காணலாம். ) இங்கு பரிமாணங்களின் எண்ணிக்கை அதிகமாவது இல்லை.

  2. ஏற்கனவே இரண்டு பரிமாணங்களில் கண்ணுறும் ஒரு அறிக்கையில் மூன்றாவது பரிமாணத்தைச் சேர்ப்பதன் மூலம் (எடுத்துக்காட்டு: ஏற்கனவே நாடுகள் மற்றும் மாதங்களின் விற்பனையைக் காணும் ஒரு அறிக்கையில் மூன்றாவதாக பொருட்கள் பரிமாணத்தைச் சேர்ப்பதன் மூலம்). நாடு → மாநிலம் → மாவட்டம் → கிளை → வாடிக்கையாளர் → தனி விற்பனைப் பரிவர்த்தனை அளவு வரை துளையிடலாம்.

5. உருட்டுதல் / சுருக்குதல் (Rolling up) இது மேலே கண்ட துளையிடல் செயல்பாட்டுக்கு நேரெதிர் செயல்பாடு ஆகும். அதிக எண்களைக் கண்ணுறும் போது நம்மால் எதைக் காண்பது என்றே தெரியாமல் போகவும் வாய்ப்புள்ளது! ஒரு அறிக்கையில் அதிக விவரங்கள் இருந்தால் முக்கியமான போக்கு மறைந்து போகலாம்! எனவே கனத்தரவைச் சற்றே தள்ளி வைத்து ஒட்டுமொத்தமாகக் காண்பது தான் இந்தச் செயல்பாடு. தரையில் நன்றாக விரிக்கப்பட்ட ஒரு தடித்த தரைவிரிப்பை உருட்டுவதன் மூலம் சிறிய இடத்திற்குள் அடைக்க முடிகின்றது அல்லவா? எனவே தான் இந்தச் செயல்பாட்டுக்கு உருட்டுதல் எனும் பெயர் வந்ததோ?! மேலே கூறிய எடுத்துக்காட்டிலேயே பல மாவட்டங்களின் அளவில் விற்பனையைக் காணும் ஒரு பகுப்பாய்வாளர் மாநிலங்களின் அளவில் விற்பனையைக் காண நினைத்தால் இந்தச் செயல்பாட்டைச் செய்தால் போதுமானது! பின்னர் நாடுகளின் அளவிலும் செல்ல இயலும். முக்கியமாக இந்த இரு செயல்பாடுகளுக்காகவுமே நாம் படிநிலைகளை ஏற்கனவே கனத்தரவில் ஒவ்வொரு பரிமாணத்திற்கும் கவனமாக உருவாக்க வேண்டும். உருட்டுதலையும் இரண்டு முறைகளின் மூலம் செய்ய இயலும்.

  1. ஒரே பரிமாணத்தின் ஏதேனும் ஒரு கீழ்ப்படிநிலையிலிருந்து மேற்படிநிலைக்குச் செல்வதன் மூலம் . இங்கு ஏற்கனவே இருக்கும் பரிமாணங்களின் எண்ணிக்கை குறைவதில்லை.

  2. ஏற்கனவே மூன்று பரிமாணங்களில் கண்ணுறும் ஒரு அறிக்கையிலிருந்து ஒரு பரிமாணத்தை நீக்குவதன் மூலம். இதில் பரிமாணங்களின் எண்ணிக்கை குறையும். தனி விற்பனைப் பரிவர்த்தனை அளவிலிருந்து கிளை, மாவட்டம், மாநிலம் எனச் சுருக்கிப் பார்க்கலாம்.

கனத்தரவு செயல்பாடுகள்

இவ்வாறு ஐந்து முக்கியச் செயல்பாடுகளின் மூலமும் கனத்தரவின் பல பரிமாணங்களையும் படிநிலைகளையும் உலவிவருவதன் மூலம் எந்த ஒரு கேள்விக்கும் நமக்குப் பதில் கிடைக்கின்றது. இவையனைத்தும் நொடியில் கிடைக்க வகை செய்வது தான் இன்றைய பகுப்பாய்வு மென்பொருட்கள் என்பதால் நாம் அனைவரும் இதைப் பயன்படுத்தக் கற்றுக் கொள்தல் அவசியம் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இனி அடுத்த பகுதியில் மேலும் சில செயல்பாடுகளையும் காண்போம்.


Related posts

Published by

ரத்தினகிரி

ரத்தினகிரி

ரத்தினகிரி சுப்பையா

-பட்டயக் கணக்காளர் - ஆசிரியர் - தரவு பகுப்பாய்வு ஆர்வலர்