பார்த்'தீ'பனும் வடி'வேலை'யும்!

பார்த்திபன் முதலாளி. வடிவேலு வேலை கேட்டு வருகின்றார்.

பார்த்திபன்: கருப்புக் காக்கா மாதிரி இருக்க, வெள்ளையுஞ் சொள்ளையுமா வந்திருக்கியே உன்ன ஏற்கனவே இந்த மாதிரி டிரஸ்ஸில எங்கேயோ பார்த்திருக்கேனே?

வடிவேலு: (அடங்கொய்யா, துபாய் வேலை இவனுக்கும் தெரியும் போல இருக்கே. ஆனா அவன் வேற! அவன் இவன் இல்ல.). வணக்கம் சார். என்னய எங்க சார் பாத்திருக்கப் போறீக. நான் அப்படி இப்படி அங்கே இங்கே உலாத்திக்கிட்டுத் தான் இருப்பேன். அதப் பாத்திருப்பீக. உங்க கண்ணுல இருந்து யாரு தப்பிக்க முடியும்?

பா: அது சரி, ஒனக்கு என்னென்ன வேலை தெரியும்?

வ: இப்பக் கேட்டீக பாருங்க. இது கேள்வி. இது வரைக்கும் யாரும் இப்படி கேட்டிருக்க மாட்டாகள்ல!

பா: கேள்வி கேட்டா பதில் சொல்லுடா ங்கொய்யா! திருப்பி கேள்வி கேக்குற?

வ: அது வேறொன்னுமில்லண்ணே. பழக்க தோசம்.

பா: என்னது? அண்ணனா? நான் உனக்கு அண்ணனாடா?

வ: அய்யோ! கோவிச்சுக்காதீக ஐயா.

பா: என்ன? ஐயாவா? என்னைப் பாத்தா ராமதாசு மாதிரி தெரியுதா உனக்கு?

வ: எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லிருந்தா இவ்வளவும் நடக்குமா?

பா: என்ன முணுமுணுப்பு?

வ: இது வேற. ஆங்! என்ன வேலை தெரியுமுன்னு தானே கேட்டீக? எந்த வேலை தெரியாதுன்னு கேளுங்கப்பு!

பா: திரும்பவும் சொல்றேன். கேள்விய நான் தான் கேட்பேன்.

வ: என்ன திரும்பவும் சொல்றேன்?

பா: என்ன, ஏது, எப்போ, ஏன், எங்கே, யாரு ங்குற வார்த்தைய இனிமேல நீ பேசுனே மவனே!

வ: என்ன இப்படி திட்றீக?

பா: நீ தானடா சொன்ன ஐயான்னு. அதான் மவனேன்னு சொன்னேன். சரி சரி. உனக்கு கம்ப்யூட்டர் தெரியுமா?

வ: இதென்ன இப்படிக் கேட்டுப்புட்டீக. கம்ப்யூட்டரோட பிறந்து கம்ப்யூட்டரோட வளர்ந்து கம்ப்யூட்டரோடே வாழ்றவன்ல நானு. என்னப் போயி.

பா: அப்போ உங்கம்மா, உங்கப்பா, உங்க குடும்பம் எல்லாம் கம்ப்யூட்டர்னு சொல்றியா? உங்களுக்கெல்லாம் கரண்ட் ஷாக் கொடுக்கனும்டா.

வ: (சுற்றி முற்றும் பார்த்து விட்டு) இங்கே ஏசியே இல்லையே. பின்ன எதுக்கு கம்ப்யூட்டர் வேலை தெரியுமான்னு கேட்குறீக?

பா: ஓ! ஏ.சி. இருந்தாத் தான் நீங்க வேலை செய்வீகளோ? சரி. கம்ப்யூட்டர்ல ஒனக்கு என்னெலாம் தெரியும்?

வ: ஹும். இது சிம்பிள் கேள்வி. குட் கொஸ்டின். கம்ப்யூட்டர்ல மானிட்டர், சிபியு, கீபோர்டு, அப்புறம் அந்த வயரு வாலு மாதிரி தெரியுமே, ஆங், மவுசு எல்லாம் தான் தெரியும்.

பா: (அவருக்கே உரிய பார்வையுடன்) சார், இங்க பாருங்க சார். நான் கேள்வி கேட்குறேன் சார். கேலி பேசினீங்கன்னா சார், அப்புறம் இந்த மாலை போட்டு சார், மஞ்சள் தண்ணி, …

வ: (வாயைப் பொத்திக் கொள்கின்றார்)

பா: இப்போ சொல்லு, கம்ப்யூட்டர்ல என்னெலாம் தெரியும்?

வ: ஆபீசு ஆபீசுன்னு ஒரு அண்டர்வேர் சாரி சாப்ட்வேர் தெரியும். எல்லாம் நம்ம பய பில் எழுதினது. நல்ல பய. நம்ம பிரண்டு தேன். நிறைய மயில் அனுப்பிருக்கேன்ல.

பா: என்னது? மயிலா?

வ: சாரி, டங் சிலிப் ஆயிருச்சி. மெயில் அனுப்பிருக்கேன்ல.

பா: ஓஹோ! பதில் ஏதும் வந்துச்சா ஒனக்கு?

வ: அது நிறைய வந்துச்சு. எனக்கு தான் படிக்க நேரமில்ல.

பா: சரி. அந்த ரூம்ல சிஸ்டத்துல போயி, யாஹூவுல "மண்ணாங்கட்டி" அப்படீன்னு தேடி முத வர்ற பக்கத்தை பிரிண்ட் அவுட் போட்டு எடுத்துட்டு வா. உன்னை வேலைக்கு சேர்த்துக்குறேன்.

வ: முணுமுணுத்துக் கொண்டே உள்ளே நுழைகின்றார். நான் தான் ஆபீஸே தெரியும்னு சொல்லிட்டேன்ல, அப்புறம் என்ன இவன் என்னை டெஸ்டு பண்ணிப் பாக்குறது? ஐயோ, இந்த யாஹூ எங்கே இருக்குன்னே தெரியலியே. நம்ம கால்குலேட்டரைக் கூட பாத்தது இல்லையே. இவனைப் பார்த்ததுமே நான் எஸ்கேப் ஆகியிருக்கணும். இன்னும் என்னென்ன நடக்கப் போவுதோ?

வடிவேலு: (உள்ளே நுழைந்து கொண்டே) என்னா வெக்கை … என்னா வெக்கை. இதுக்குத் தான் ஏசியில்லாத ஆபீசுல வேல செய்யாதேன்னு பழமொழியே வச்சான்.

பார்த்திபன்: (வெளியே உட்கார்ந்து கொண்டே) என்ன அங்கே சத்தம்?

வ: ஒன்னுமில்ல. இருட்டா இருக்கு அதான் லைட் எங்கேன்னு கேட்டேன்.

பா: பட்டப்பகல்லயே உனக்கு ஒன்னும் தெரியல. உனக்கு லைட் வேறயா? உனக்கு ரைட் சைட்ல இருக்குற சுவிட்ச் போர்ட்ல 3வது ரோல பீச்சாங்கைப்பக்கம் 2வது சுவிச்சு இருக்குல்ல அதைப் போடு. லைட் வரும். தெரியாத்தனமா ப்ளக்குல கையைக் கொடுத்து ஆபீஸ் பீசைப் புடுங்க வைச்சிடாத.

வ: (எனக்கு இது நல்லா வேணும். எனக்கென்னவோ இவன் கிட்டே வேலை பார்க்கலாம்னே தோணலியே. பேசாம பேக் அடிச்சு எஸ்கேப் ஆயிருவோமா?)

பா: என்ன இன்னும் லைட் எரியக் காணோம்?

வ: ஆஹா. இவன் வுடமாட்டான் போல இருக்கே. வசம்மா வந்து மாட்டிக்கிட்டோம் போல. பின்னால ஏதாச்சும் வழியிருக்கான்னு முதல்ல பார்க்கனும். (தடவித்தடவி லைட்டைப் போடுகின்றார்)

(உள்ளே வெளிச்சம் வருகின்றது. 4 கம்ப்யூட்டர்கள், ஒரு பிரிண்டர், ஒரு டிவி எல்லாம் இருக்கின்றது.)

சிறிது நேரத்தில் டமார் என்று சத்தம் கேக்கிறது. ஓடி வந்து பார்த்திபன் பார்க்கின்றார். கணினிக்கு முன் உட்காரும் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து வடிவேலு சறுக்கிப் பார்க்க, அது வேகமாகச் சென்று டிவி மேலே மோத, அவர் மேல் டிவி பெட்டி கிடக்கின்றது. அவருக்குக் கீழே சக்கர நாற்காலி கிடக்கின்றது.

பா: டேய், என்ன காரியம் செஞ்சே. டிவி என்ன வில தெரியுமா உனக்கு?

வ: அட, இதெல்லாம் எனக்கு தூசி மாதிரி. கலைஞர் கிட்டே கேட்டா எத்தனை டிவி வேணாலும் கொடுக்கப் போறாரு.

பா: நான் எதுக்குடா கலைஞர் கிட்டே கேக்கனும். உன் கிட்ட தான் கேப்பேன். டிவி பொட்டிக்கு உண்டான காசு 10000 ரூவா கழியிற வரை என் கிட்டே நீ கொத்தடிமை வேலை பார்க்கனும். தெரிஞ்சதா?

வ: என்னது அடிமையா?

பா: ஆமா. இல்லைன்னா 10000 ரூவா எண்ணி எடுத்து வையி. உன்னை விட்டுட்றேன்.

வ: 10000 ரூவாயா? அத நான் நெனச்சது கூட இல்லப்பு. இந்த டப்பா பொட்டிக்கு அவ்ளோ விலையா?

பா: சரி. 10100 ஆக் கொடு.

வ: (ஆ. என்ன இது? வர வர அமௌண்டு கூடுதே!) மெல்ல தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, தனக்கே உண்டான பார்வையுடன், குரலை உறுதியாக்கிக் கொண்டு, "எத்தனை நாள் வேலை பார்க்கனும்?"

பா: என்னது நாளா? வருசம்னு கேளுடா ங்கொய்யா!

வ: என்னை எல்லாரும் நல்லவன்னு சொல்றாங்கய்யா. கொஞ்சம் தயவு பண்ணி சாப்பாடாவது போடு ராசா.

பா: அது! தினம் 2 வேளை முயற்சி பண்றேன். ஆனா, நீ வேல பார்க்கும் தெறமையைப் பொருத்து அது மூனாவோ அல்லது ஒன்னாவோ அல்லது இல்லாமப் போகவோ செய்யலாம். சரி பிரிண்ட் அவுட் கேட்டேனே என்னாச்சு?

பார்த்திபன்: பிரிண்ட் அவுட் எடுக்கச் சொன்னா எடுக்காம என் மூஞ்சைப் பாத்தா என்ன அர்த்தம்? இப்போ மட்டும் நீ கம்ப்யூட்டர் ஆபரேட் பண்ண எனக்குத் தெரியாதுன்னு சொன்னேன்னு வை…

வடிவேலு: (ஆர்வத்துடன் முகத்தில் கொஞ்சம் நப்பாசையோடு) என்னை விட்டுடுவே தானே?

பா: அதான் இல்ல. டிவி பொட்டி கடனைத் தீர்க்கிற வரை பாத்ரூம் கழுவனும்.

வ: அதெல்லாம் எனக்குத் தெரியாது.

பா: என்னாது? தெரியாதா? அப்போ துபாய்ல அந்த வேலை பாத்தது நீ இல்லையா?

வ: துபாயா? அது எந்தப் பக்கம் இருக்கு?

பா: இதோ இந்தக் கதவைத் திறந்தா….

வ: துபாய் போகலாமா?

பா: ஆமா, நல்லா பாத்ரூமைத் துடைச்சிக்கிட்டே யோசி, துபாய் வந்துரும்.

வ: இங்கே பாருப்பா, இதெல்லாம் நல்லால்ல. ரூம்ல உடையிற சாமான்லாம் மேலே வைச்சிட்டு, இங்கிட்டும் அங்கிட்டும் ஓடுற நாற்காலியை வைச்சிருந்தா இப்படித் தான் நடக்கும். என் மேலே தப்பே இல்ல. என்னை விடு நான் வர்றேன். (முகத்தைக் கூடப் பார்க்காமல் விடுக்கென்று கிளம்புகிறார்)

பா: (கொஞ்சம் கூட அதிர்ச்சியில்லாமல் வடிவேலு போவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.)

வ: அப்பாடி! எப்படியோ தப்பிச்சு வந்துட்டோம். இவன் கிட்டே மனுசன் வேலை பாக்க முடியுமாய்யா? (மெல்லத் திரும்பிப் பார்க்கிறார்) என்ன ஆளையே காணோம். துரத்தி வருவான்னு நினைச்சேனே. வரலியே? அப்படி இருக்குமோ? ச்சேச்சே இருக்காது. என்னை ஒருத்தன் துரத்திப் பிடிச்சிர முடியுமா என்ன? எதுக்கும் கண்ணைப் பின்னால் வைச்சிக்கிட்டே நடக்கனும். நல்லவேளை அட்ரெஸைக் கொடுத்துத் தொலைக்கல. (என்ற படியே நடக்கின்றார்)

(வடிவேலு வீட்டுக்குத் திரும்புகின்றார். பூட்டு போட்டுப் பூட்டியிருந்த வீடு திறந்து கிடக்கின்றது)

வ: வேகமாக உள்ளே நுழைகின்றார். எவண்டா அவன், என் வீடுன்னு தெரிஞ்சும் உள்ளே நுழைஞ்சது? உள்ளே என்ன இருக்குன்னு நுழையிறீங்கடா? பூட்டாவது மிஞ்சிருக்குன்னு நினைச்சேன். இப்போ அதையும் உடைச்சிட்டீங்களாடா? இன்னும் உள்ளே என்னென்ன உடைச்சிருக்காய்ங்கன்னு பார்ப்போம்.

(உள்ளே நுழைந்ததும் அவர் பார்த்திபனின் அலுவலகத்தில் உடைத்த டிவி பெட்டி நடுக்கூடத்தில் கிடக்கின்றது. அப்போது அவர் முகத்தில் திகிலைப் பார்க்க வேண்டுமே?!)

வ: (மனதுள்: ஆகா! வந்துட்டான்யா! எப்படியோ என் வீட்டைக் கண்டுபிடிச்சிட்டான் போல இருக்கே? என் வீடுன்னு வெளியே ஏதாச்சும் எழுதி ஒட்டிருக்கா என்ன? பூட்டை உடைச்சது அவனாத் தான் இருக்குமோ?)

(வீடு முழுதும் தேடிப்பார்க்கிறார். பார்த்திபனைக் காணவில்லை. மெதுவாக வெளியே வருகின்றார். எதிர்வீட்டு சிறுவன் அவரையே பார்த்த வண்ணம் இருப்பதைப் பார்க்கிறார்)

வ: (இவன் கிட்டே கேப்போம். என்ன நடந்ததுன்னு பார்த்திருப்பான்ல, பார்த்திருப்பான்ல!) டேய் பையா! இங்கே வாடா!

பையன்: நான் எதுக்கு வரணும்? வேணும்னா நீ இங்கே வாய்யா?

வ: (ஆஹா! நம்மை ஒரு துரும்பும் மதிக்க மாட்டேங்குதே!) ஏண்டா, நான் வயசுல மூத்தவந் தானே? என்னை போய் நீ வான்னு சொல்லலாமா?

பை: அதான்யா வாடான்னு சொல்லாம விட்டேன்.

வ: சர்த்தான். வில்லங்க சர்டிபிகேட் கொடுக்குற ஆபீசரு பையனாச்சே. பொறக்கும் போதே வில்லங்கத்தோட பொறந்திருக்கே. சரீ. எதிர்த்தாப்புல இருக்குற என் வீட்டுப் பூட்டை யாரும் உடைச்சாங்களா?

பை: அது உன் வீடா?

வ: (கொஞ்சம் கூட விட மாட்டேங்குறாய்ங்களே! கிடைச்ச கேப்புலல்லாம் நுழையிறாய்ங்களே!) சரி. என் வீடில்ல. வாடகை வீடு தான். அந்தப் பூட்டை யாரும் உடைச்சத நீ பாத்தியா?

பை: இல்லியே. நான் பாத்துட்டே தான் இருந்தேன். யாரும் உடைக்கலியே.

வ: அப்புறம் எப்படித் திறந்திருக்கு? டேய் உண்மையைச் சொல்லு. உடைஞ்ச பூட்டைக் கூடக் காணோம் என்பவர் பையன் கையில் ஏதோ மறைப்பதைப் பார்க்கிறார். டேய் அதைக் கொண்டா ….(பிடுங்கினால், அவர் வீட்டுப் பூட்டு!) இந்த வயசுலேயே இப்படிப் பொய் சொல்றியேடா.

பை: யோவ். ஒழுங்கா யார்ட்ட பேசுறோம்னு பாத்துப் பேசு. நான் ஒன்னும் பொய் சொல்லல. வீணா வில்லங்கத்தை விலைக்கு வாங்காதே!

வ: என்ன? என்ன? இப்போ தான் பூட்டை உடைக்கலைன்னுட்டு கையில் பூட்டையே வைச்சிருக்கியே. பொய் இல்லையா?

பை: (முணுக்கென்று சிரித்த படி) ஆமா, இது ஒரு பூட்டு. அதை உடைக்க வேற செய்யனுமாக்கும்? அந்த சாக்லேட் மாமா வந்து இழுத்ததுமே கையோட வந்துருச்சு. அதான் யாரும் உடைக்கலன்னு சொன்னேன்.

வ: யாரு? சாக்லேட் மாமாவா? எவன் அவன்?

(முதுகில் யாரோ கை வைக்க, கையை உதறி விடுகிறார் வடிவேலு. மீண்டும் கை வைக்க, மெல்ல சைட் லுக் விட்டால், குச்சி மிட்டாய் ஒன்றை வாயில் வைத்துக் கொண்டு பார்த்திபன் நிற்பதைப் பார்த்ததும் உடுக்கடிக்க ஆரம்பிக்கிறது அவருக்கு)

பா: குட்மார்னிங் சார்

வ: ஹிஹி. குட்மார்னிங். அது ஒன்னுமில்ல. எங்க வீட்ல இருக்குற டிவியைக் கொடுத்துட்டா டிவியை ஒடைச்சதுக்குச் சரியாயிடும்ல அதான் எடுத்துட்டுப் போகலாம்னு வந்தேன்.

பா: அப்படிங்களா சார்? பாத்திரத்தை நல்லாக் கழுவிட்டுக் கவுத்திப் பாத்தாக் கூட ஏதாச்சும் உள்ளே ஒட்டிருக்கும். ஆனா உங்க வீட்ல அப்படி எதுவும் இல்லாம சுத்தமா இருக்கே சார்.

வ: அதுவா? எல்லாம் சர்வீஸுக்குப் போயிருக்கு. வந்ததும் தந்துட்றேன்.

பா: இந்த வரும். ஆனா வராது வேலைல்லாம் எங்கிட்டே ஆவாது. இப்போ என் டிவியை உன் வீட்ல வந்து வைச்சதுக்கு 1000 ரூவா சேத்து 11100 வையி, ஒன்னை விட்டுட்றேன்.

வ: (மீட்டர் வட்டி கேள்விப்பட்டிருக்கேன். நிமிச வட்டி கூடக் கேள்விப்பட்டிருக்கேன். இது நேனோ வட்டியால்ல இருக்குது.) ஐயா சாமி, நான் எங்கேயும் போவல முதல்ல உன் கடனைக் கழிக்கிறது தான் என் வாழ்க்கை லட்சியம்.

பா: குட் டெசிசன். இப்போ என்ன பண்றே, உடுத்துன துணியோட அப்படியே என் ஆபீஸுக்கு வர்றே. இனி அங்கே தான் உனக்கு எல்லாமே.

வ: (என்னமோ காதலியைக் கூட்டிப் போறா மாதிரி உடுத்துன துணியோட வரச் சொல்றானே?)…அதான் வர்றேன்ல. (என்னை நீயா வேலையை விட்டுப் போன்னு சொல்ல வைக்கல, வைகைப் புயல் வடிவேலுன்ற என் பேரை சோதாப் பயல் வடிவேலுன்னு மாத்திக்கிறேன்)

பா: நீ என்ன நினைக்கிறேன்னு எனக்குத் தெரியும். நானா உன்னை வேலையை விட்டுப் போன்னு சொல்லவே மாட்டேன்.

வ: (என்ன சரவணன் இது? அவருக்கு மட்டும் தான் நான் நினைக்கிறது தெரியும்னு நினைச்சா, இவனுக்கும் தெரியுதே? சும்மா பொழுதப் போக்கக் காலேஜு படிச்சிட்டு, இருக்குற அம்பது பட்டன நொச் நொச்சுன்னு தட்டிட்டு ஆயிரக்கணக்கா சம்பாதிக்கிற உங்களுக்கெல்லாம் வேர்வை சிந்தி வேல பாக்குற எங்க கஷ்டம்லாம் எப்படித் தெரியும்?)

பா: அட! போனா போகட்டும்னு கொஞ்சம் யோசிக்க விட்டா என்னல்லாம் யோசிக்கிறே நீ? இனி என்னைக் கேட்டுத் தான் நீ எதுன்னாலும் யோசிக்கவே செய்யனும். என்னவோ கம்ப்யூட்டர் வேல பாக்குறவன்லாம் லாட்டரில சீட்டு விழுந்தவன்னு உன்ன மாதிரி பல பேரு நினைக்கிறானுங்க. கேப்மாரி, மொள்ள மாரி, முடிச்சவுக்கி, ரவுடி, பிச்சைக்காரன், பொறம்போக்கு…

வ: யப்பா யப்பா யப்பா நிறுத்து. ரோட்ல போறவன்லாம் என்னைத் திட்றதா நினைச்சு முறைக்கிறானுங்க. என்ன சொல்ல வர்றே அதச் சொல்லு …

பா: ம்ம்ம். இவனுங்களை எல்லாம் விடக் கேவலமான உன் கிட்டே கூட வேலை வாங்குறது ஈசி தான். ஆனா இந்தப் பாழாப் போன கம்ப்யூட்டர் வேல இருக்கே அது இத விடக் கஷ்டம் தெரியுமா?

வ: ஆ! குளு குளு ஏசியில, அரைமணிக்கு ஒரு கூல்ட்ரிங்க்ஸு, தினமும் பார்ட்டின்னு சுத்துறானுங்க. அது கஷ்டமான வேலையா?

பா: ஆமாடா டுபுக்கு. ஆமா, கம்ப்யூட்டர் தெரியும்னு சொன்னியே அதுல்லாம் நிசம்மாவே பொய்யா?

வ: (பார்த்திபனின் லுக்கைப் பாத்ததும் மெல்ல ஆமாம் என்று தலையாட்டுகின்றார்…)

பா: ம்ம். உனக்கு அந்தக் கஷ்டம்னா என்னன்னு புரியவைக்கனுமே? என்ன செய்யலாம்? ம்ம்ம். இப்படி வைச்சிக்குவோம். கொஞ்ச நேரத்துக்கு நான் தான் வேலைக்காரன். நீ தான் முதலாளி.

வ: ஆஹா! இது நல்லாருக்கே! இது நல்லாருக்கே!

பா: இருடா. என்னை மாதிரி சொல்றதை அப்படியே செய்ற ஒரு வேலைக்காரனை நீ பாத்திருக்கவே முடியாது. இப்போ என்னை ஒரு கதை சொல்ல வைக்கனும்.

வ: அப்படியா? ஆஹா. ஆஹா. ரொம்ப ஈசியாச்சே. பச்சப் புள்ளட்டக் கேட்டாக் கூடச் சொல்லிடுமே?

பா: சரி ரெடியா?

வ: எப்பவோ ரெடில்ல.

பா: இதுக்கு ஒன்னும் குறைச்சலில்ல.

வ: சரி சரி. விஷயத்துக்கு வருவோம். நான் அப்படி உக்கார்ந்துக்கிறேன்.

பா: (பக்கத்தில் உட்கார வருகின்றார்)

வ: முதலாளி பக்கத்துல வேலைக்காரன் உக்காரலாமா? நீ நில்லு.

பா: (ம். உனக்கு இன்னிக்கு நேரம் சரியில்ல. வைச்சிக்கிறேண்டா)

வ: சரி. ஒரு கதை சொல்லு.

பா: சரி. ஒரு கதை.

வ: அட. ஒரு கதை சொல்லுன்னா.

பா: அட. ஒரு கதை.

வ: என்ன இது சின்னப் புள்ளத் தனமா இருக்கு. எடக்கு மடக்காவே பதில் சொல்லிட்டிருக்கே. ஏதாச்சும் ஒரு கதை சொல்லு.

பா: ஏதாச்சும் ஒரு கதை.

வ: ஏம்ப்பா இந்தக் குரங்கு, தொப்பிக்காரன் கதை தெரியாதா என்ன? அதையாவது சொல்லு.

பா: அதையாவது.

வ: அய்யோ! சொல்லேம்ப்பா.

பா: அய்யோ!

வ: (படாரென்று எழுந்த படி) போதும்ப்பா போதும்.

பா: இப்போ தெரியுதாடா? ஏதும் தெரியாத கம்ப்யூட்டர வேல வாங்குறது எவ்ளோ கஷ்டம்னு?