பழக்கத்தி

"என்னங்க சாப்பிட வாங்க!" அழைத்த மனைவி தனலட்சுமியைப் பார்த்து "இதோ வந்துட்டேன்" என்றார் குழந்தைவேலு.

சாப்பாட்டை எடுத்து வைத்துக் கொண்டே "இன்னைக்கு உங்க தலைவர் மதுரை போறார் போல? நியூஸ்ல சொன்னாங்க" என்றார் தனலட்சுமி.

"ஆமா, இப்போ என்ன அதுக்கு?" என்று கொஞ்சம் சலிப்புடன் வந்தது பதில் குழந்தைவேலிடம் இருந்து.

தனலட்சுமிக்கு ஆச்சரியமாய்ப் போய்விட்டது. எப்பவும் தலைவர் தலைவர்னு தூக்கி வைச்சிட்டு ஆடுவாரே, இப்போ இப்படிச் சொல்றாரே என்று நினைத்துக் கொண்டார். கேட்கவும் செய்தார். "என்னாச்சுங்க? தலைவர்னா கொண்டாடுவீங்களே, குடும்பத்துல புள்ள குட்டி இருக்குறது மறந்து போயிருமே. இப்போ என்னடான்னா சலிச்சிக்கிறீங்க?" என்றார்.

குழந்தை வேலு - இப்போது எதிர்க்கட்சியாய் இருக்கும் ஜனநாயக மக்கள் கட்சித் தலைவர் திங்கள்முகத்துக்கு நடுக்கை எனலாம். (எத்தனை நாள் தான் வலக்கை இடக்கைன்னு சொல்றது!?) குழந்தை வேலுவுக்கு வயது 50 ஆகிறது. திங்கள்முகத்துக்கு 55 வயது. பரம்பரைக் கோடீஸ்வரர். இருவரும் கிட்டத்தட்ட நண்பர்கள் என்று கூடச் சொல்லலாம். அரசியலுக்கு முன்பிருந்தே பழக்கம். குழந்தை வேலு ஆசிரியராய் இருக்கும் பள்ளிக்குத் தாளாளராய் சில ஆண்டுகள் இருந்ததில் பழகிவிட்டது. இருந்தாலும் தலைவர் என்றே அழைப்பார் கட்சித்தலைவரை. கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாவிட்டாலும், குழந்தை வேலுவிடம் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார் திங்கள்முகம்.

இது நாள் வரை திங்கள்முகம் ஊழல் செய்ததாகவோ, பணத்திற்காக ஆசைப்படுபவராகவோ நினைத்துக் கூடப் பார்த்ததில்லை குழந்தைவேலு. கடந்த பத்தாண்டுகளாய் அரசியலில் வேரூன்றி இன்று எதிர்க்கட்சியாக வளர்ந்திருக்கின்றது என்றால் திங்கள்முகத்தின் நியாயமான நடவடிக்கைகள் தான் காரணம் என்று நம்பிக்கொண்டிருந்தார் குழந்தைவேலு. ஆனால், இன்று அஸ்திவாரமே ஆட்டங்கண்டு விட்டதோ என்று எண்ணத் தோன்றியது.

ஆம், வரும் தேர்தலில் யாருக்குச் சீட்டுக் கொடுப்பது என்ற பேச்சு வந்த போது, குழந்தை வேலு சமூகசேவையிலும் எளிமையிலும் பெயர்பெற்ற ஜான்மைக்கேலை அவரது தொகுதியில் நிறுத்த சீட்டுக்கொடுக்கலாம் என்ற போது உடனடியாக முகம் சுழித்த தலைவர் "அதெல்லாம் முடியாது. வேண்டாம். இன்னொரு தடவை அவர் பெயரைச் சொல்லாதீங்க" என்று வெட்டி விட்டார் பேச்சை.

குழந்தைவேலுக்கு மிக்க வருத்தமாய் இருந்தது. எப்படிப்பட்ட தன்னலமற்ற சமூக சேவகர் ஜான்மைக்கேல்? அவருக்கு ஒரு சீட் ஏன் தரமாட்டேன் என்று சொல்ல வேண்டும்? ஒன்று நம்மை விட அவர் பெயர் வாங்கி தலைவர் ஆகிவிடுவார் என்றா? அல்லது ஊழலுக்குத் துணை போக மாட்டார் என்றா? பெருங்குழப்பத்தில் ஆழ்ந்து விட்டார் குழந்தைவேலு.

இரண்டு நாட்களாய் திங்கள்முகத்தையும் காணப் போகவில்லை.

திடீரென்று தொலைபேசி திங்கள்முகத்திடமிருந்து. "என்ன வேலு ஆளைக் காணோம்?" என்றார். சரி இன்று நேருக்கு நேர் கேட்டு விட வேண்டியது தான் என்ற முடிவுடன் கிளம்பினார் குழந்தை வேலு.

திங்கள்முகத்தின் அலுவலகமும் வீடும் ஒரே கட்டிடம் தான். அலுவலகம் பெரும்பரபரப்பில் இயங்கிக் கொண்டிருந்தது தேர்தல் காரணமாக. நேராக வீட்டுக்குள் சென்றார் குழந்தைவேலு. பத்து நிமிடங்கள் ஓடியிருக்கும். அலுவலகத்தில் இருந்து வீட்டுக்குத் திரும்பிய திங்கள்முகம், "அடடே, இங்கேயா இருக்கீங்க? எப்போ வந்தீங்க வேலு? மதுரை போய்ட்டு வந்தேனா, அப்படியே வேலை ஜாஸ்தியாகிப் போச்சு." என்ற படி எதிரே அமர்ந்தார் திங்கள்முகம்.

தயக்கத்துடனேயே ஆரம்பித்த குழந்தைவேலு, "நீங்கள் ஜான்மைக்கேலை வேண்டாம்னு சொன்னது ஏன்னே எனக்குத் தெரியல" என்று நேரடியாகக் கேட்டு விட்டார்.

"ஓ. அதுவா?" என்று சிரித்துக் கொண்டே திங்கள்முகம், "அது வேறொன்னுமில்ல வேலு, உங்களுக்குத் தெரியாததில்ல. சேவைன்றது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமச் செய்றது. ஜான்மைக்கேலைப் பற்றி எனக்கு நல்லாத் தெரியும். இளகிய மனசுக்காரர். அவரால் முடிஞ்ச நல்ல உதவிகளைச் செய்துட்டு வர்றார். அவர் பதவிக்கு வந்தால் இன்னும் நல்லாச் செய்ய முடியும்னு நீங்க நினைக்கிறீங்க. அப்படித் தானே?" என்று நிறுத்தினார் தலைவர்.

"ஆமாம்" என்று ஆவலுடன் தலையசைத்தார் வேலு.

"அதான் இல்லை. நிர்வாகம் என்பது அப்படியில்லை. இதில் நெளிவு சுழிவு வேணும். எல்லாரும் ஒரே மாதிரி இருப்பாங்கன்னு சொல்ல முடியாது. நல்லவனையும் கெட்டவனையும் சேர்த்து மேய்க்கனும். ஒரு பக்கம் பொறுப்பில்லா அதிகாரிங்க, மறுபக்கம் பணமே குறிக்கோளா இருக்கும் முதலாளிங்க, இன்னொரு பக்கம் அரசே எல்லாம் செய்யனும்னு எதிர்பார்ப்பில் இருக்குற பொதுமக்கள்னு பலமுனைத் தாக்குதலச் சந்திக்கனும்.

இதெல்லாம் ஜான்மைக்கேலால முடியாதுன்னு நான் சொல்ல வரல. ஆனால் அவரை அரசியலுக்கு அழைத்து வந்து பதவி தருவதால் பாதிக்கப்படப்போவது பொதுமக்களுக்கு அவர் தரும் அன்பான சேவை தான். அதை வேறு யாராலும் தரமுடியாது அவரைத் தவிர.

ஒரு உறைக்குள் எந்தக் கத்தி வேண்டுமானாலும் இருக்கலாம் வேலு. ஆனால் பழக்கத்தியை வைத்து பழம் தான் வெட்ட வேண்டும். அதை எடுத்துக் கொண்டு சண்டைக்குப் போகப் போகின்றேன் என்றால் கத்தி பிடித்தவருக்கே அது ஆபத்தாய் முடிந்து விடும்.

ஜான்மைக்கேல் ஒரு பழக்கத்தி. அவர் அப்படியே இருந்து பொதுமக்களுக்கு இனிய பழங்களைத் தந்து கொண்டிருக்கட்டும் என்ற ஒரு நல்லெண்ணத்தினால் தான் அவரை அரசியலுக்கு வரவேண்டாம் என்று நினைக்கிறேன்.

ஆட்சிக்கு வந்தால் அவர் போன்ற நல்ல மனிதர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவுவதன் மூலம் அவர்களின் வேலையை எளிதாக்கலாம் என்று நினைக்கிறேன்" என்றார்.

குழந்தைவேலுவுக்கு தலைவர் மேல் இருந்த அபிப்ராயம் உச்சத்தில் இருந்தது என்று சொல்லவும் வேண்டுமோ?!

மாலைமாற்று

மாலை மாற்று என்பது ஒரு பாடலை மேலிருந்து கீழோ அல்லது கீழிருந்து மேலோ எப்படிப் படித்தாலும் ஒரே பாடலாக, ஒரே பொருளைத் தருவதாக இருப்பதாகும்.

மேலதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்குங்கள்.

நானும் அதே போல் எழுதிப்பார்த்தால் என்ன என்ற எண்ணத்தில் வந்த சில பாடல்கள் இவை.

வைகை நாயக சலச மிருத

மாய மாலவர் தூயடிகொள்

கொடிய தூர்வல மாயமா

தருமி சலச கயநா கைவை

இனி கருத்தைக் காண்போம்.

வைகை நாயக - வைகை ஓடும் மதுரைக்கு நாயகரே

சலச மிருத மாய மாலவர் தூயடிகொள் - கடலினுள் இருந்து அமிருதத்தைக் கொண்டு வர உதவிய மாய மாலவருக்கும் தூய அடியைக் காட்டியவரே

கொடிய தூர்வலமாய - பாண்டியன் பரிசை எப்படியாயினும் பெற வேண்டும் என்ற ஆர்வக் கொடியதை ஊர்வலமாய்க் கொண்டு வந்த

மாதருமி சலச கய - மா மைந்தன் தருமியின் கண்ணீரைப் போக்குமாறு சகயமாக

நா கைவை - நாவிலிருந்து ஏட்டிற்குப் பாடலாய்க் கைவைத்தவரே!

2.

தீத்தம ராதீ யசெய்போ துவாடி

தேக நோய் மென்று யிகமா

கயிறுன் மெய்நோ கதேடி

வாது போய்செய தீரா மதத்தீ

இதன் பொருள்:

தீயவரையே தமராய்க் (வேண்டியவர்களாய்) கொண்டு தீயனவற்றை செய்கின்ற போது வாடி, தேகத்தினை நோய் மென்றிட, இகத்தினைக் கட்டியிருக்கும் பெரிய கயிறான உன் மெய்யது நோக, மற்றவரைத் தேடிப் போய் வாது செய, தீராது மதத்தீ.

3.

துருவி தேவர் சேனை வால்கொள்

ஆகாத வகைபட வேடநாயகர்

கயநாட வேட பகைவ தகா

ஆள்கொல் வானை சேர்வதே விருது

துருவி தேவர்களின் சேனையின் வால் முதற்கொண்டு கொண்ட ஆகாத சூரனின் வம்சமே பட்டொழிய, வேட்டுவர்களின் நாயகனாம் முருகன், கயமை உணர்வு அவனை நாட, வேலும் மயிலுமாய் வேடம் புனைந்தவனும் பகைவனும் தகாத ஆளானவனுமாகிய சூரனைக் கொல்வானைச் சேர்வதே வாழ்வில் சிறந்த விருது ஆகும்!

4.

கருவறை பிணிபோக ஏழை பேதை

கோன்கா மன்வறு தலைவ சம்மத

தமம்ச வலைதறு வன்மகான் கோதை

பேழை ஏகபோ ணிபிறை வருக

தாயின் கருவறையில் தங்கும் பிணியாகிய பிறவி போக, ஏழையும் பேதையுமான எனது அரசரும், காமனை வறுத்த தலைவருமான சிவபெருமானின் மைத்துனரே (சம்மதர் - மைத்துனர்), தமமாகிய அகங்காரத்தையும், சவலையெனும் மன அழுக்கையும் உற்ற சமயத்தில் நீக்கும் பெரியவரே, கோதை நாச்சியாரின் பெரும் பேழையே, ஒருமுதலே (போணி - முதல்) சந்திரன் போல் தண்மையாய் வருக.

5.

மேகமே தகதக வானன் பிடிமூள

கோதி மழை கருத வேக

மாகவேதரு கழைமதி கோள

மூடி பின்னவா கதகத மேகமே

எந்த மேகம் குளிரான மழையைத் தருகின்றதோ, அதே மேகத்தையே போர்த்த வருமாறு அழைக்கும் குறும்பு மாலை மாற்று இது.

மேகமே! தக தக என ஜொலிக்கும் வானம் அன்பினால் இடி கொண்டு மூள, சீப்பை வைத்துக் கோதுவது போல மழையை அனைவரும் கருத வேகமாக அனைத்தையும் தரும் நிலையான (கழை) அழகைக் கொண்ட பூமிக் கோளத்தைக் குளிருமென்று மூடி, அதைப் பின்ன வா கதகதவென மேகமே!

6.

மாதவா! தாரு கலைநிந்தன் வயிறதனோடே

பாவை கோலபாரி அதுபோற் தயவிலா

துலாவிய தற்போதுஅரி பாலகோவை பாடே

னோதற யிவன் தந்நிலை கருதா வாதமா?

மாதவனே! மரத்தில் (தாரு) உன்னை வளைந்த உன் வயிறோடு தாய் யசோதை அழகான கயிறெடுத்துக் (பாரி) கட்டியது போல பக்தியால் நான் உன்னைக் கட்டாது, எந்தத் தயவுமிலாது, உலாவிய வேளையில் அரியின் அம்சமாகி பாலனாய் வடிவெடுத்த எந்தன் கோவைப் பாடாமலும், நீ சொன்ன கீதையை ஓதுவதை விடுத்தும் (ஓதற - ஓது + அற) இருக்கின்றேன். ஆயினும் ஏனிவன் என்னைக் கண்டு கொள்ள வில்லை என்று வாதமும் புரிகின்றேன். என்னே என் மடமை?!

சிலேடை வெண்பாக்கள்

இலக்கியத்தில் சிலேடை நயம் என்பது மிகவும் சிறப்பானதொன்றாகும். மொழியின் இனிமையையும், கவிஞனின் கற்பனையையும், ரசிப்போருக்கு ஆச்சரியத்தையும் காட்ட வல்லது சிலேடை என்றால் அது மிகையாகாது.

அதிலும் ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத இரு விஷயங்களைத் தொடர்பு படுத்தி சிலேடை வெண்பாப் புனைவது என்பது ஒரு பெரிய கலை.

தமிழ்த்தாயின் பாதம் பரவி, முதன்முதல் தலைப்பாக,

கண்ணாடி மற்றும் செருப்பு இவற்றிற்கிடையே ஒரு சிலேடையுடன் ஆரம்பிப்போம்.

பாதரசம் பூசி வருமுச்சி காட்டும்நல்

மாதரசி கண்காண் பதவிபெறும் - மாதம்

பலவாய் வெளிக்காணச் சீரழியு மாடித்

தலங்காண் செருப்பும்நேர் காண்.

கண்ணாடி:

கண்ணாடியின் பின்னால் பாதரசம் பூசி வரும். வகிடெடுக்க உதவி செய்யும். தலைவியின் கண்களைத் தினம் காணும் புண்ணியம் பெறும். மாதம் பலவாக வெளிச்சம் பட்டிருந்தால் கண்ணாடி ரசம் போய்ச் சீரழிந்து விடும்.

செருப்பு:

செருப்பை அணிந்தால் பாதம் அழகாக மாறி விடும். மலைப் பயணத்தில் உச்சியை எளிதில் சென்றடைய உதவி செய்யும். தலைவி நகக்கண்ணைக் காணும் புண்ணியம் பெறும். மாதங்கள் பலவாக வெளியே சென்று வர தேய்ந்து விடும்.

இவ்வாறாக, கண்ணாடியும், ஊர்கள் பல காணும் செருப்பும் ஒன்றாகும்.