தரவுச் சுரங்கம் - 3

ஒன்றுக்கொன்று தொடர்புடைய செய்திகளின் அல்லது நிகழ்வுகளின் தொகுப்பு மட்டுமே தரவு என்று முடித்து விடமுடியாது. தரவின் பல்பரிமாணங்களைத் தொடர்ந்து காண்போம்.

வணிகம் தொடர்பான நடவடிக்கைகள் என்றாலும் சரி, ஒரு தனிமனிதரின் சமர்த்துக் கடிகாரத்தில் சேர்த்து வைக்கப்படும் அவரது உடற்பயிற்சிக்கான தரவு என்றாலும் சரி ஏதோ ஒரு பட்டியலில் பின்னாளில் தேவைப்படும் என்று குறித்து வைக்கப்படுகின்றது. அவ்வாறு குறித்து வைக்கப்படும் செய்திகள் மூன்று வகைப்படும்.

  1. நடவடிக்கைகள் (Transactional Facts)

தினந்தோறும் நடந்து வரும் செயல்பாடுகளைக் கண்ணுற்று அவற்றில் தேவையானவை யாதென்று அறிந்து அவற்றைத் தொடர்ந்து குறித்து வைத்து வருவது நடவடிக்கைகள் ஆகும். பெரும்பாலும் அவை யார்? என்ன? எங்கே? எப்போது எவ்வளவு? (Who, What, Where, When, How much or How many) ஆகிய ஐந்து கேள்விகளுக்கான பதில்களாகத் தான் இருக்கும்.

வணிக நிறுவனங்களின் குறிப்பேடுகளை இந்த வகை தரவுக்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். இக்குறிப்பேடுகள் பின்னர் தேவைக்கேற்ப பேரேடுகளில் பதியப்பட்டு பின்னர் அவற்றின் மொத்தம் மற்றும் மீதம் ஆகியவை கணக்கிடப்பட்டு அறிக்கைகளாக உருப்பெற்றுப் பின்னர் நாம் வணிகம் சார்ந்து எதிர்காலத்தில் முடிவெடுக்க வசதியாகப் பின்பற்றப்படுகின்றன.

கணினி யுகம் வந்த பின்பு பெரும்பாலும் அனைத்து பெரும் மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்களின் மொத்த நடவடிக்கைக் குறிப்புகளும் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேல் பலருக்கும் தெரியாமல் தேக்கி வைக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றில் எத்தனை மாணிக்கங்களும் வைரங்களும் பதுங்கி இருக்கின்றனவோ!?

  • நேரப் படப்பதிகை: (Periodic Snapshots)

நடவடிக்கைகள் அனைத்தையும் குறிப்பெடுத்து வைத்து விட்டோமே? இன்னும் அப்படி என்ன சேர்த்து வைக்க இருக்கின்றது என்று நினைத்து விடவேண்டாம். சிறந்த முறையில் ஒரு வணிக நிறுவனம் நடத்துவதற்கு இவை மட்டுமே அனைத்து தகவல்களையும் தந்து விட முடியாது. அந்த நிகழ்வுகளால் ஏற்பட்ட விளைவுகளை அவ்வப்போது படம் பிடிப்பது போல் குறித்து வைத்திருப்பதும் தேவையாகின்றது.

எடுத்துக்காட்டாக ஒரு ஐந்து நட்சத்திர தங்கும் விடுதியில் தினந் தோறும் எத்தனை அறைகள் நிரம்பி இருக்கின்றன எத்தனை அறைகள் காலியாக இருந்தன என்ற விபரம் தொடர்ந்து பதியப்பட்டு வருவதைக் குறிப்பிடலாம். தினந்தோறும் உங்கள் பையில் பணம் எவ்வளவு இருந்தது என்று தொடர்ந்து கவனித்து வந்தாலே உங்கள் பணப்புழக்கம் பற்றி அறிந்து கொள்ள முடியும்.

கூகுள் வரைபடத்தில் 2000ம் ஆண்டு  ஒரு நிலப்பரப்பு எவ்வாறு இருந்தது என்றும் 2020ம் ஆண்டு அதே நிலப்பரப்பு எவ்வாறு இருந்தது என்றும் குறித்து வைத்திருந்தால் அதனால் அந்தப் பகுதியில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றது என்று அனுமானிக்க முடியும். அதுமட்டுமின்றி இன்னும் இருபது ஆண்டுகள் கழித்து எவ்வாறு இருக்கும் என்றும் கண்டறிய முடியும் அல்லவா?

  • கூட்டுப் படப்பதிகை (Cumulative/Accumulating Snapshots)

ஒரே நிகழ்வு அல்லது நடவடிக்கையின் சங்கிலித் தொடரைக் காலக்கிரமத்துடன் அவற்றின் முந்தைய குறிப்புகளுடனே சேர்த்து வைத்து வருவதை கூட்டுப்பதிவு எனலாம். இவை நடவடிக்கைப் பதிவுகளாக ஒருபுறம் இருந்தாலும் நமது வசதிக்காகவும், மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாகவும் ஒரே இடத்தில் சேர்த்துப் பதிந்து கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக, அமேசான் நிறுவனத்தின் தகவல் முறையைக் கண்ணுறலாம். ஒருவர் இந்தப் பொருள் பிடிக்கின்றது என்று குறித்து வைத்துக் கொண்டால், அவருக்கு அதை அவ்வப்போது ஞாபகப்படுத்தி அதை வாங்கும் வரை தொடர்ந்து பின்னர் அவர் வாங்க முடிவெடுத்து அவரிடம் பணத்தை வாங்கி சரக்கைக் கொண்டு போய் சேர்ப்பது என்று அனைத்தும் நடவடிக்கைகள் தான் என்றாலும் ஏதோ ஒரு முடிச்சில் அனைத்தும் ஒன்றாகச் சேர்த்து வைத்துப் பார்த்தால் மட்டுமே சிறந்த முடிவுகள் எடுக்க முடியும்.

அவ்வளவு பெரிய நிறுவனத்தில் தினம் நடைபெறும் கோடிக்கணக்கான நடவடிக்கைகளை இவ்வாறு தொகுப்பது என்று மனிதர்களால் ஆகாது என்றாலும் கணினிகளால் அது முடிகின்றது.

அடுத்ததாக மேகக் கணிமையில் தரவு எவ்வாறு சேமிக்கப்படுகின்றது என்பதையும் பெருந்தரவு குறித்தும் காணலாம்.

தரவுச் சுரங்கம் - 1

“சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்

                தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!”

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

                தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்”

எனும் பாரதியின் கனவு மெய்ப்பட வேண்டும்.

                முட்டையிலிருந்து கோழி வந்ததா அல்லது கோழியிலிருந்து முட்டை வந்ததா எனும் கேள்வியை நாம் கேள்விப்பட்டிருப்போம். இதே போன்ற ஒரு கேள்வி எனக்குள்ளும் எழுவதுண்டு! நாம் கற்றதால் பகிர்கின்றோமா அல்லது பகிர்வதால் கற்கின்றோமா? மேற்கண்ட கேள்வியின் பதிலைத் தேடும் போது, உண்மையில் இரண்டுமே நடக்கின்றது என்பதே நான் உணர்ந்தது. எனவே கற்றதைப் பகிரவும், பகிர்ந்து கொண்டு கற்கவும் முயற்சிக்கும் ஒரு தொடராக இதை எழுத முனைகின்றேன். அறிவார்ந்த சமூகத்தின் ஆதரவும், வழிகாட்டுதலும் எப்போதும் போல வழங்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கின்றேன்.

                மனிதன் குகையில் வாழ்ந்த காலத்தே தகவல் தொழில்நுட்பம் பிறந்தாலும், மனிதன் கணினியைக் கண்டுபிடித்ததன் பின்னர் அசுர வளர்ச்சியுற்று இருக்கின்றது என்பதை அனைவரும் அனுபவபூர்வமாக உணர்கின்றோம். இணையம் செயல்பாட்டுக்கு வந்து இணையம் 1.0, 2.0, 3.0, 4.0 என்று புதிய பதிப்புகள் அரங்கேறும் போதெல்லாம் தகவல் தொழில்நுட்பமும் தாவித்தாவிச் சிகரத்தை எட்டியிருக்கின்றது. எனினும் மனிதனின் ஐம்புலன்களில் இரு அவயங்களை மட்டுமே பயன்படுத்த முடிந்துள்ளது! அதிலும் முழுமை பெற்றிருக்கின்றோமா என்றால் இல்லை என்றே பதில் வருகின்றது. இன்னும் தகவல் தொழில்நுட்பம் வளர வேண்டிய எல்லை வானத்தை முட்டி நிற்கின்றது. இருப்பினும் இதற்கே நமக்கு மூச்சு முட்டி நிற்கின்றது.

                அதிலும் கடந்த பத்தாண்டுகளில் இத்துறை பெற்றிருக்கும் வளர்ச்சி பல்வேறு துறைகளையும் உலுப்பி எடுத்து வருகின்றது என்றால் அது மிகையாகாது. “எழுமின்! விழிமின்!” என்பது எதற்குப் பொருந்துமோ இல்லையோ இன்றைய தொழில் முனைவோர் அனைவருக்கும் இது பொருந்தும். இன்று எவரும் கணினித் தொழில்நுட்பம் நமது தொழிலை என்ன செய்து விடப் போகின்றது என்று வாளாயிருந்துவிட முடியாது. எத்தொழில் புரிவோரும் தமது தொழில் முன்னால் E என்னும் ஆங்கில எழுத்தினைச் சேர்த்துக் கொள்வதைக் கண்ணுறுகின்றோம். அந்த அளவிற்கு ஒவ்வொருவரின் தொழிலும் தகவல் தொழில்நுட்பம் கோலோச்சியிருக்கின்றது.

                தரவுச்சுரங்கம் எனும் இத்தொடரின் மூலம் “தரவு” பற்றி அடியேன் கற்றுணர்ந்ததைப் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன். முதலில் தரவு என்றால் என்ன என்று பார்க்கலாம். தரவு பற்றிப் பார்க்க வேண்டுமாயின் நாம் தரவின் படிநிலைகளை உணர்ந்திருக்க வேண்டும்.

                நடப்பு (Transaction) + பதித்தல் (Recording) -> உண்மை (Fact)

                உண்மை (Fact) + தொகுத்தல் (Collection) -> தரவு (Data)

                தரவு (Data) + பதப்படுத்தல் (Processing) -> தகவல் (Information)

                தகவல் (Information) + ஆய்வு (Analyzing) -> அறிவு (Knowledge)

                அறிவு (Knowledge) + அனுபவம் (Experience) -> ஞானம் (Wisdom)

                செய்தி அல்லது உண்மை எனும் படிநிலையினின்று ஞானம் எனும் படிநிலைக்கு மனிதர்களை மட்டுமின்றி தகவல் தொழில்நுட்பத்தையும் கணினியையும் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்பதே இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகின் தேவையாய் இருக்கின்றது.

                இன்றைய தொழில்முனைவோரின் தலைக்கு மேல் நான்கு கத்திகள் தொங்கிக் கொண்டு இருக்கின்றன. அதை ஆங்கிலத்தில் VUCA என்று அழைக்கின்றார்கள். நிலையின்மை, நிச்சயமின்மை, சிக்கல், குழப்பம் (Volatility, Uncertainty, Complexity, Ambiguity) ஆகியவை தான் அந்த நான்கு கத்திகள், இந்த நான்கு கத்திகளினின்று நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நாம் மூன்று விதமான உத்திகளையும், கவசங்களையும், ஆயுதங்களையும் கையாள வேண்டியிருக்கின்றது.

                EEE, DDD, AAA என்று ஆங்கிலத்தில் இப்போது குறிப்பின்றார்கள்!

                EEE- உத்தி – சிக்கனம், திறமை, பயன்பாடு (Economy, Efficiency, Effectiveness) – நமது தொழிலைச் சிக்கனமாகவும், திறமையாகவும், மற்றவர்களுக்குப் பயனுள்ளதாகவும் ஆக்கிக் கொள்ள வேண்டியது இன்றைய தொழில் முனைவோருக்கு இன்றியமையாததாகின்றது.

                DDD - கவசம் – தரவு சார்ந்த முடிவெடுத்தல் (Data Driven Decision making)

                AAA - ஆயுதங்கள் – பகுப்பாய்வு, செயற்கை நுண்ணறிவு, தானியக்கம் (Analytics, Artificial Intelligence, Automation) ஆகியவை நாம் அறிந்துணர்ந்து பயன்படுத்தி முன்னேறிச் சென்று வெல்ல ஆயுதங்களாகப் பயன்படுகின்றன.