தரவுச் சுரங்கம் – 23
தரவுக்கிட்டங்கி உருவாக்கலில் இருக்கும் வெவ்வேறு படிநிலைகளைக் காணவிருக்கின்றோம். பல இணைய தளங்களில் பல்வேறு பட்டியல்கள் தரப்பட்டிருந்தாலும், அவை அனைத்திலும் பல ஒற்றுமைகளைக் காணவியலும். எனவே முக்கியமான படிநிலைகளை இங்கே நாமும் பட்டியலிடுவோம்.
திட்டமிடல் மற்றும் தேவையறிதல்: நமது நிறுவனத்தில் நாம் உருவாக்க இருக்கும் தரவுக்கிட்டங்கியின் நோக்கம் மிகவும்முக்கியமானதாகும். வியாபாரத்தில் நாம் கண்டறிய விரும்பும் நிதிநிலை அளவுமானிகள், குறிப்பிட்ட துறைகளின் பகுப்பாய்வுத் தேவைகள், வியாபாரத்தில் நாம் அன்றாடம் சந்திக்கும் சவால்கள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்கான தீர்வுகளுக்கான தரவு ஆகியவற்றை முதலில் தீர்க்கமாக முடிவு செய்தல் வேண்டும். வள்ளுவர் குறிப்பிடுவது போல், எண்ணித் துணிக கருமம். இதில் நாம் தவறவிட்டால் மொத்த தரவுக் கிட்டங்கியும் பயனில்லாது போய்விடும்!
தரவு மூல மதிப்பீடு: நம்முடைய தரவுக்கிட்டங்கியின் தரம் அதன் தரவின் தரத்தைப் பொறுத்தது. ஆங்கிலத்தில் GIGO (Garbage In Garbage Out) என்று குறிப்பிடுவார்கள். தமிழில் எள் விதைத்த காட்டில் கொள் முளையாது என்று பழமொழி உள்ளது. தரவு மூலத்தை மதிப்பிடுகையில் நமது நிறுவனத்தில் உள்ளமைந்த அனைத்து தரவு மூலங்களையும் மதிப்பீடு செய்தல் அவசியமாகும். எடுத்துக்காட்டு ERP, CRM, SCM போன்றவை. மேலும் வெளித்தரவு மூலங்கள் குறித்தும் ஆராய்தல் நல்லது. எடுத்துக்காட்டு இணைய தளங்கள், வாடிக்கையாளர்கள், அரசு, வங்கிகள் மற்றும் வழங்குவோர் தரும் தரவுகளையும் கணக்கில் கொள்ளலாம். அதுபோல கட்டமை, பகுதி கட்டமை மற்றும் கட்டமைவில்லாத் தரவு என்றும் வகுத்து ஆராயவேண்டும். தரவின் தரம், அதன் கொள்ளளவு மற்றும் வெவ்வேறு தரவு மூலங்களுக்கிடையேயான தொடர்புகள், ஒன்றையொன்று சார்ந்திருக்கும் தன்மை ஆகியவைகளையும் ஆராயவேண்டும்.
கிட்டங்கி வடிவமைப்பு: ஒரு கட்டிட வரைபடத்தைப் போன்று நுணுக்கமான அனைத்துத் தேவையான தகவல்களையும் ஒன்று சேர வடிவமைப்பது அடுத்த நிலையாகும். கருத்து, முறைமை தரமாதிரிகளை உருவாக்குவதன் மூலம், பல பிரச்னைகளை கிட்டங்கி உருவாக்குவதற்கு முன்பே களைந்து விடலாம். எவ்வாறு தரவு தரவுக்கிட்டங்கியில் நிர்வகிக்கவும் சேமிக்கவும் படப் போகின்றது என்று தரவு மாதிரி வடிவமைப்பு செய்தல் வேண்டும். முன்பே குறிப்பிட்டது போல் பரிமாணங்கள், அளவைகள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நமக்கு நட்சத்திர வடிவமைப்பா, பனித்துகளா அல்லது உடுமண்டல வடிவமைப்பா என்பதை இங்கே முடிவு செய்யலாம். அதே போல் தரவு நமது நிறுவனக் கணினியில் இருக்குமா அல்லது மேகக் கணிமையா என்பதையும் முடிவு செய்யலாம். சரியாக வடிவமைக்கப்பட்ட தரவுமாதிரி தரவு சேமிப்பு, மீட்டெடுப்பு மற்றும் பகுப்பாய்வுத் தேவைகளை மிகக் கச்சிதமாகச் செய்ய வல்லதாக இருக்கும்.
தொழில்நுட்பம் மற்றும் கருவிகள் தேர்வு: தரவுக் கிட்டங்கி திறம்படச் செயல்புரியத் தகுந்த தொழில்நுட்பம் மற்றும் கருவிகளைத் தேர்வு செய்தல் அடுத்த படிநிலையாகும். சந்தையில் பல விதமான கருவிகள் புழக்கத்தில் உள்ளன. அவைபற்றி விரிவாக ஏற்கனவே பட்டியலிட்டிருக்கின்றோம்.
தரவு ஒருங்கமைவு மற்றும் சேகரி, உருமாற்று, ஏற்று: தரவு ஒருங்கமைவு மற்றும் சேகரி, உருமாற்று, ஏற்று (Extract, Transform, Load ETL) எனும் மிகவும் பிரபலமான படிநிலையை வடிவமைத்தல் அடுத்த படிநிலையாகும். இதைப் பற்றி மற்றுமொரு சமயம் விரிவாகக் காணுமளவுக்கு முக்கியாமானதாகும்!
தரவுத் தர உறுதி செய்தல் மற்றும் சரிபார்த்தல்: தரவுத் தரத்தினைப் பராமரித்தல் ஒட்டுமொத்த தரவுக்கிட்டங்கியின் தரத்தினையும் மேம்படுத்தும். இந்தப் படிநிலையில் தரவின் துல்லியம், நிலைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படுகின்றது. நமது நிறுவனத்தின் விதிகளுக்குட்பட்டு தரவு இருக்கின்றதா என்பதில் ஆரம்பித்து, அனைத்து தரவு நிபந்தனைகளுக்கும் உட்பட்டு தரவு கிடைக்கின்றதா என்று சரிபார்த்தல் அவசியமாகும்.
தரவுக் கிட்டங்கி உருவாக்கம் மற்றும் சோதனை: இந்தப் படிநிலையில் தான் நாம் மேலே திட்டமிட்ட அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப் படுகின்றது. பலவிதமான மிகவும் கடினமான சோதனைகளுக்கு தரவுக்கிட்டங்கியினை உட்படுத்துவதன் மூலம் எவ்வித தரவு கொள்ளளவையும் தாங்கி தேவைக்குத் தகுந்த வாறு செயல்படுகின்றதா என்று கண்டறிய வேண்டும். ஏனெனில் தரவுக் கிட்டங்கி ஏதோ ஓராண்டுத் தகவலை மட்டும் வைத்து செயல்படுவதில்லை, ஒட்டுமொத்த நிறுவனத்தகவல்களையும் ஆதி முதல் அந்தம் வரை கொண்டு செயல்படப் போகின்றது!
செயல்படுத்தல் மற்றும் பயனர் பயிற்சி: மேலே உருவாக்கிய கிட்டங்கியைச் செயல்படுத்தத் துவங்குவதும் அதைப் பயன்படுத்தப் போகும் பயனர்களுக்குத் தேவையான பயிற்சியை அளிப்பதும் இங்கு நடக்கும். ஏனெனில் பயனர்கள் தகுந்த தொழில்நுட்பம் அறியாதவர்களாக இருக்கக் கூடும். தரவுக் கிட்டங்கியின் வெற்றி அதைப் பயன்படுத்துபவர்களின் கையில் தான் உள்ளது.
தரவு ஒருங்கமைவு மற்றும் சேகரி, உருமாற்று, ஏற்று: தரவுக் கிட்டங்கியை வடிவமைத்து அதைச் செயல்படுத்திய பின்பு அதை முறையே பராமரிக்கவும், கண்காணிக்கவும், சிறந்த முறைகளைக் கண்டறிந்து அதை நிறைவாக்குவதும் முக்கியமாகும். மேலே கண்ட படிநிலைகள் யாவும் ஒரே ஒருமுறை செய்யப்படுவதல்ல. சுழற்சி முறையில் தேவைக்குத் தகுந்தவாறு அவ்வப்போது செய்ய வேண்டியது ஆகும் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை! இனி அடுத்த பாகத்தில் தரவுக் கிட்டங்கியின் பல்வேறு அங்கங்களைக் குறித்துக் காணலாம்.