தரவுச் சுரங்கம் - 22

தரவுச் சுரங்கத்தின் ஒரு முக்கியமான அங்கமான தரவுக் கிட்டங்கியைப் பற்றிச் சற்று விளக்கமாகக் காண்கின்றோம். முந்தைய பகுதிகளில் தரவுக் கிட்டங்கியின் நன்மை தீமைகளைப் பட்டியலிட்டோம். ஒரு நிறுவனத்தின் அனைத்து வரலாற்றுத் தரவுகளின் ஒட்டு மொத்த மூலமாக விளங்கி அதைப் பயன்படுத்தும் அனைவருக்கும் வழங்கத் தயாராக இருக்க வேண்டும் அல்லவா? எனவே அதை உருவாக்கும் முறைகள் பற்றி இந்தப் பகுதியில் காணலாம்.

தரவுக் கிட்டங்கிகளை இரண்டு முறைகளில் உருவாக்கலாம். பில் இன்மானின் (Bill Inmon) மேலிருந்து கீழ் அணுகுமுறை மற்றும் ரால்ஃப் கிம்பாலின் (Ralph Kimball) கீழிருந்து மேல் அணுகுமுறை ஆகிய இரண்டு முறைகளையும் ஒவ்வொன்றாகக் காண்போம்.

பில் இன்மானின் (Bill Inmon) மேலிருந்து கீழ் அணுகுமுறை:

Data Warehouse Designஇந்த அணுகுமுறையின் படி, தரவுகளின் மூல வழங்கியிலிருந்து தரவுக் கிட்டங்கியின் வடிவமைப்பு ஆரம்பமாகின்றது. பல்வேறு தரவு மூலங்களிலிருந்தும் பிரித்தெடுத்தல், உருமாற்றம், ஏற்றுதல் ஆகிய மூன்று படிநிலைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஒட்டு மொத்த நிறுவனத்திற்கான தரவுக் கிட்டங்கி முதலில் வடிவாக்கம் செய்யப்படுகின்றது. பின்னர் அதிலிருந்து மீண்டும் தேவையான தரவு அங்காடிகள் (Data Marts) தமக்குத் தேவையான வகையில் மீண்டும் மேலே கண்ட பிரித்தெடுத்தல், உருமாற்றம், ஏற்றுதல் ஆகிய படிநிலைகளுக்கு உட்படுத்தப்பட்டு  நட்சத்திர திட்டங்களாக தரவு மாதிரியைப் (Data Models) பெற்றுக் கொள்கின்றன. இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் படத்தைப் பார்த்தால் எளிதாகப் புரியும். இந்த அணுகுமுறையின் படி ஒட்டு மொத்த தரவுக் கிட்டங்கியை உருவாக்கிய பின்னர் தேவையான தரவு அங்காடிகள் தமக்குத் தேவையான தரவுகளைப் பெற முடிகின்றது.

Data Warehouse Designரால்ஃப் கிம்பாலின் கீழிருந்து மேல் அணுகுமுறை:

இந்த அணுகுமுறையின் படி முதலில் தேவைக்குத் தகுந்தவாறு தரவு அங்காடிகள் உருவாக்கப்படுகின்றன. அவ்வாறு உருவாக்கப்படும் போதே தரவு மாதிரிகளும், பரிமாணங்களும், தேவையான செய்திகளும் நிர்ணயிக்கப்படுகின்றன. அதன் பின்னர், அந்தச் செய்திகளும் பரிமாணங்களும் எந்தத் தரவு மூலங்களில் இருக்கின்றன என்று கண்டறியப்பட்டு பின்னர் பிரித்தெடுத்தல், உருமாற்றம், ஏற்றுதல் ஆகிய படிநிலைகளுக்கு உட்படுத்தப்பட்டு தரவு அங்காடிகளால் பெறப்படுகின்றன. இந்த முறையில் ஒட்டு மொத்த தரவுக் கிட்டங்கி மேலே இல்லாமல் கீழிருந்து சிறு சிறு அங்காடிகளின் தொகுப்பாக அமைவதைக் காணலாம். கீழிருந்து மேலான இந்த அணுகுமுறையில் தரவுக் கிட்டங்கியின் அமைப்பு நடுவில் இல்லாமல் கீழே இருக்கின்றது.

வழக்கம் போல் இந்த இரண்டு அணுகுமுறைகளிலும் நன்மை தீமைகளுண்டு. இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற கேள்விக்குப் பதிலாக, எந்த ஒரு நிறுவனம் பரிணாம வளர்ச்சியடைந்து முதிர்ச்சியடைந்து அதன் தரவுத் தேவைகளைப் பற்றி நன்கு அறிந்தும் தரவு அமைப்புகளைப் பூர்த்தியாகவும் வைத்திருக்கின்றதோ அவ்வகை நிறுவனத்திற்கு மேலிருந்து கீழ் அணுகுமுறை சிறப்பாக இருக்கும். (எ.கா. இரயில் போக்குவரத்து) அதே சமயத்தில் தற்போது பரிணாம வளர்ச்சி கண்டு வரும், அடிக்கடி மாறிக் கொண்டிருக்கும் தரவு அமைப்பைக் கொண்டிருக்கும் நிறுவனத்திற்கு கீழிருந்து மேலான அணுகுமுறை சிறப்பாக இருக்கும். (எ.கா. தொலைதொடர்பு மற்றும் கணினி) இவ்விரு அணுகுமுறைகளையும் ஒன்றிணைத்து கலப்பின அணுகுமுறைகளும் உருவாகின்றன. எனவே நமது நிறுவனத்திற்கு எது பொருத்தம் என்று உணர்ந்து அதைச் செயல்படுத்துவது நல்லது.

தரவுக் கிட்டங்கிகள் மற்றும் அங்காடிகளுக்கான சூழல் பின்வருவனவற்றை உள்ளடக்கியது. எனவே தரவுக் கிட்டங்கியை உருவாக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டும்.

  • கிட்டங்கி அல்லது அங்காடிக்குத் தரவை வழங்கும் மூல அமைப்புகள்;
  • தரவு ஒருங்கிணைப்பு தொழில்நுட்பம் மற்றும் பயன்பாட்டிற்குத் தரவைத் தயாரிக்கத் தேவையான செயல்முறைகள்;
  • ஒரு நிறுவனத்தின் தரவுக் கிட்டங்கி அல்லது தரவு அங்காடிகளில் தரவைச் சேமிப்பதற்கான பல்வேறு கட்டமைப்புகள்;
  • பல்வேறு பயனர்களுக்கான பல்வேறு கருவிகள் மற்றும் பயன்பாடுகள்;
  • கிட்டங்கி அல்லது அங்காடி அதன் நோக்கங்களைப் பூர்த்திசெய்கிறதா என்பதை உறுதிப்படுத்த, மீதரவு (Meta Data), தரவுத் தரம் மற்றும் நிர்வாகச் செயல்முறைகள் இருக்க வேண்டும்.

மீதரவு எனப்படுவது தரவு பற்றிய தரவு ஆகும். மேனிலைத்தரவு என்றும் அழைக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக ஒரு புகைப்படம் என்பது தரவு ஆனால், அது எந்தப் புகைப்படக் கருவி கொண்டு எடுக்கப்பட்டது என்பது மீதரவு ஆகும். ஒரு தரவுப் பட்டியலின் நெடுவரிசைத் தலைப்புகளை மேனிலைத் தரவு எனலாம்.

அடுத்த பகுதியில் தரவுக் கிட்டங்கியின் படிநிலைகளைக் காணலாம்.


Author: ரத்தினகிரி

ரத்தினகிரி சுப்பையா

-பட்டயக் கணக்காளர் - ஆசிரியர் - தரவு பகுப்பாய்வு ஆர்வலர்