தரவுத்தள இயல்பாக்கம் பற்றிய விளக்கத்தினை சென்ற பகுதியில் கண்டோம். தரவுத்தள இயல்பாக்கம் மூலம் தரவொழுங்கு உறுதி செய்யப்படுகின்றது. மேலும் தரவுகளை அறிவியல்பூர்வமாக மிகக் குறைந்த நினைவகச் சேமிப்பை மட்டுமே பயன்படுத்தி சேமிக்கவும், மீண்டும் தரவு தேவைப்படும் போது விரைவாக மீட்டெடுக்கவும் இத்தரவுத்தள இயல்பாக்கம் உதவுகின்றது. ஏற்கனவே குறிப்பிட்டது போல் முதல் மூன்று வகை தரவுத்தள இயல்பாக்கம் குறித்தும் இப்போது எடுத்துக்காட்டுடன் காண்போம்.
- முதல் இயல்புப் படிவம் – First Normal Form
இப்படிவத்தின் விதிப்படி, தரவுத்தளப்பட்டியலின் ஒரு அறையில் ஒன்றுக்கும் மேற்பட்ட நிரல்களுக்குண்டான தகவல்கள் இருக்குமானால் அவற்றை மற்றொரு தரவுப் பட்டியலில் சேமிக்க முற்படவேண்டும். அதாவது ஒரே மாதிரியான தகவல் ஒன்றுக்கு மேற்பட்ட நிரல்களில் சேமிக்க வேண்டியிருந்தாலோ அல்லது ஒரே அறையில் ஒன்றுக்கு மேற்பட்ட தகவல்களிருந்தாலோ அவற்றைத் தனியாகப் பிரித்து இன்னொரு பட்டியலில் சேமிக்கவேண்டும். இவ்விரு பட்டியல்களையும் இணைப்பது முதன்மை மற்றும் அந்நியத் திறவியாக இருக்கும்.
இப்போது ஒரு எடுத்துக்காட்டைக் காண்போம்:
வரிசை எண் | பெயர் | அலைபேசிஎண் |
1 | குமார் | 9123456789, 9234567890 |
2 | ரவி | 9421541251 |
3 | வேலவன் |
என்றொரு பட்டியல் இருப்பதாய்க் கொள்வோம். மேற்கண்ட பட்டியலில் குமாருக்கு மட்டும் இரண்டு அலைபேசி எண்கள் இருக்கின்றன. வேலவனுக்கு அலைபேசி எண் இல்லை. தரவுத்தள மேலாண்மையில் மிக முக்கியமானதாக் கருதப்படும் ககாட் அவர்களின் 13 விதிகளில் ஒன்று வெற்றிடத்தை அறிவியல்பூர்வமாக நிர்வகிக்க வேண்டும் என்பதாகும். கூடுமானவரை வெற்றறையைத் தவிர்க்க வேண்டும்.
முதல் இயல்புப் படிவத்தின் விதிப்படி ஒரு அறையில் ஒரு தகவல் தான் இருக்க வேண்டும். இரண்டு அலைபேசி எண்களை வைப்பது சரியல்ல. எனவே மேற்கண்ட பட்டியலை இரண்டாகப் பிரித்து கீழ்க்கண்டவாறு அமைப்பது முதல் படிவ இயல்பாக்கம் என்றழைக்கப்படுகின்றது.
வரிசை எண் | பெயர் |
1 | குமார் |
2 | ரவி |
3 | வேலவன் |
வரிசை எண் | அலைபேசி எண் |
1 | 9123456789 |
1 | 9234567890 |
2 | 9421541251 |
இப்போது வெற்றிடமே இல்லை என்பதையும், ஒரு அறையில் ஒரு தகவல் மட்டும் இருப்பதையும் காணலாம். வரிசை எண் முதல் அட்டவணையில் முதன்மைத் திறவியாகவும், இரண்டாம் அட்டவணையில் அந்நியத் திறவியாகவும் செயல்படுகின்றது.
கீழ்க்கண்ட பட்டியலிலும் முதல் படிவ இயல்பாக்கம் செய்ய இயலும்.
எடுத்துக்காட்டாக நமது கடையில் மொத்தம் மூன்று பொருட்கள் இருப்பதாகவும் அதற்கான விற்பனைப் பட்டியலில் மேற்கண்ட தகவல்களிருப்பதாகவும் கொண்டால் அதை ஒரே பட்டியலில் சேமிக்கும் போது எத்தனை வெற்றிடங்கள் காணக்கிடைக்கின்றன என்று பாருங்கள்? அனைவரும் மூன்று பொருட்களும் வாங்க முடியாது தானே? இதுவே நூற்றுக்கு மேற்பட்ட பொருட்கள் கொண்டிருக்கும் ஒரு கடையென்றால் அதன் நிலை என்ன? அதுவே முதல் படிவ இயல்பாக்கம் செய்யும் போது எளிதாகின்றது.
கீழ்க்கண்ட இரு பட்டியல்களைப் பாருங்கள். எங்கும் வெற்றிடம் இல்லை. எத்தனை பொருட்கள் இருந்தாலும் கவலையில்லை என்பது புரியும்.
மேற்கண்ட பட்டியல்களிலும் எண் முதன்மை மற்றும் அந்நியத் திறவியாகப் பயன்படுகின்றது.
- இரண்டாம் இயல்புப் படிவம் (Second Normal Form)
இப்படிவத்தின் படி நிரைகளில் திரும்ப வரும் வாய்ப்பிருக்கும் தகவல்களைத் தனியாகப் பிரித்து அவைகளை தனிப்பட்டியலில் சேமிக்கச் செய்ய வேண்டும். முதல் படிவத்தில் நிரல்களில் திரும்ப வரும் தகவல்களைப் பிரித்தோம். இதில் நிரைகள்/வரிகளில் மீண்டும் வரும் தகவல்களைத் தனியே பிரிக்கின்றோம். இதன் மூலம் ஒரு உருபொருளின் எந்த ஒரு தகவலும் ஒட்டு மொத்தத் தரவுத் தளத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே சேமிக்கப்படும். திறவிகள் மட்டுமே மீண்டும் வரும். எடுத்துக்காட்டாக மேலே குறிப்பிட்ட வாடிக்கையாளர்களில் குமார் திரும்பவும் வருகின்றார். அரிசி, கோதுமை, சர்க்கரை என்ற பொருட்களும் திரும்பவும் வருகின்றன. மேலும் வாடிக்கையாளரின் தகவல் வாடிக்கையாளர் உருபொருளுக்கு உடையது. நாள், எண் ஆகியவை பட்டியின் உருபொருளுக்கு உடையது. அரிசி, கோதுமை போன்றவை மற்றுமொரு உருபொருளாகும். எனவே அவற்றைக் கீழ்க்கண்டவாறு பிரிக்க வேண்டும். இதன் மூலம், எந்த ஒரு உருபொருளின் தகவலும் மீண்டும் வரவில்லை என்பதைக் காணவும்.
எடுத்துக்காட்டில் மஞ்சள் நிறத்திலிருப்பவை முதன்மைத் திறவிகள். பச்சை நிறத்திலிருப்பவை அந்நியத் திறவிகள்.
இதனால் கிடைக்கும் மற்றுமொரு நன்மை, பொருளே வாங்காமல் வாடிக்கையாளர் தகவலை மட்டும் சேமிக்க முடியும், பொருளை விற்பனைப் பட்டியலில் சேர்க்காமலே நான்காவதாக ஒரு பொருளைச் சேமித்து வைக்க முடியும்.
- மூன்றாம் இயல்புப் படிவம் (Third Normal Form)
மேற்கண்ட இரண்டு இயல்பாக்கங்களிலேயே தரவுகள் ஓரளவுக்கு நேர்த்தியாகச் சேமிக்கப்படும் என்றாலும், நமது அறிக்கைகளின் நேர்த்திக்காகவும் மேலும் தகவல்களை அறிவியல்பூர்வமாகச் சேமித்து வைக்கவும் இந்தப் படிவம் உதவிகரமாக இருக்கின்றது. இப்படிவத்தின் படி, முதன்மைத்திறவி குறிக்கும் உருபொருளை முதன்மையாகவும் முழுமையாகவும் கொண்டிராத தகவல்களை மற்றுமொரு பட்டியலுக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
எடுத்துக்காட்டாக கீழ்க்கண்ட வாடிக்கையாளர் பட்டியலைப் பாருங்கள்.
இதில் வாடிக்கையாளரின் ஊர் அவருக்கு மட்டுமே உரியதில்லை தானே? அவரது பெயருக்கு அவர் உரிமை கொண்டாடலாம். ஆனால் ஊருக்கே அவர் உரிமை கொண்டாட முடியாது அல்லவா? ஒரே ஊரில் பலரும் இருக்கலாம் தானே? எனவே அதையும் கீழ்க்கண்டவாறு மற்றுமொரு பட்டியலாகப் பிரிப்பதையே மூன்றாம் இயல்புப் படிவம் என்கின்றோம்.
இவ்வாறு மூன்று இயல்புப் படிவங்கள் கொண்டு தரவுகளைத் தரம் பிரித்து வைத்தால் மிக எளிதாகச் சேமிக்கவும், மீட்டெடுக்கவும் வசதியாக இருக்கும். ஏற்கனவே குறிப்பிட்டது போல் இன்னும் சில மேம்பட்ட அபூர்வமான இயல்பாக்கங்கள் இருக்கின்றன. நமது தொடரின் ஓட்டத்தைக் கருத்தில் கொண்டு அவற்றை விளக்குவதை விடுத்து அடுத்ததாக இப்போது வலையுலக தரவுத்தளங்கள் சிலவற்றையும் அவற்றின் தகவல் தொழில்நுட்பத்தையும் காணலாம்.