தரவுச் சுரங்கம் - 4

கணினி உலகின் வாயிலாக விஸ்வரூபம் எடுத்து நிற்கும் தரவின் பல பரிமாண அவதாரங்களைக் கண்ட நாம் இப்போது தரவின் பரிணாம வளர்ச்சியையும் காண்போம்.

கல்வெட்டிலும், பட்டயங்களிலும், ஓலைச்சுவடிகளிலும் இருந்த தகவல்கள் இயேசு கிறிஸ்து பிறப்புக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு காகிதம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் காகிதத்திற்கு மாறியது. அப்போதிருந்து கி.பி. 1725ம் ஆண்டில் தறி இயந்திரங்களில் அழகான ஆடை வடிவமைப்பைச் சேமித்து வைக்கும் துளை அட்டைகள் வரும் வரை காகிதத்தின் கைகளே ஓங்கியிருந்தன. அதன் பின் 1837ல் கணினி உலகின் தந்தை சார்லஸ் பாப்பேஜ்  1837ல் முதல் கணினியைக் கண்டறியும் போது துளை அட்டைகளே அதிகம் பயன்படுத்தப்பட்டன. 1980 வரையிலும் துளை அட்டைகளின் பயன்பாடு இருந்தது என்பது ஆச்சரியமான தகவல். 1960களில் காந்தத் தட்டுகள் பயன்பாடு ஆரம்பித்தது. காந்தத் தட்டுகளில் வன் தட்டு மென்தட்டு  என்று பலவகைகள் பல அளவுகளில் வர ஆரம்பித்தன. 20MB அளவிலான வன்தட்டுகளில் அனைத்து மென்பொருட்களையும் உள்ளடக்கி, பத்தாண்டுகளுக்கான தகவல்களை ஏற்றிய பின்னும் பாதி இடம் மீதி இருந்தது நினைவில் இருக்கின்றது. பின்னர் லேசர் ஒளி அலைகளின் மூலம் எழுதி வைக்கப்படும் முறையில் சிடி, டிவிடி, ப்ளூரே என்று பலவித தொழில்நுட்பங்கள் தகவலை எழுதி வைப்பதற்குப் பயன்பட்டன. பிளாஷ் எனப்படும் அதிவிரைவு நினைவகம் வந்த பின்னர் தற்போது SSD, NAND ஆகிய தொழில்நுட்பங்களைக் கொண்டு அதில் பதியப்பட்டு வருகின்றது.

மெய்நிகர் மற்றும் மேகக் கணிமை (Virtual and Cloud Computing) வந்த பின் இப்போது நமது தகவல் எங்கே பதியப்படுகின்றது எந்த வன்பொருளில் பதியப்படுகின்றது என்பதே தெரியாவிட்டாலும் கூட நம்மால் தகவலைப் பதிந்து கொண்டு எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடிகின்றது.

எத்தகைய தரவாக இருந்தாலும் அது (Binary Digit-Bit) இரும இலக்க எண்ணாக மாற்றப்பட்டு ஏதேனும் ஒரு கோப்பின் பெயரிலேயே கணினியில் சேமிக்கப்படுகின்றது என்பதை நாம் அறிவோம்.

இருப்பினும் மென்பொருளில் தரவுகளை மேலாண்மை செய்யப்படும் வரலாறையும் சற்று சுருக்கமாகக் காண்போம். கணினி கண்டறியப்பட்டு தொழில்முறை பயன்பாட்டுக்கு வந்த புதிதில் தரவு எடுப்பார் கைப்பிள்ளையென கணினி மொழி மற்றும் இயக்கக மென்பொருளின் அடிமையாகவே இருந்தது எனலாம்.

எடுத்துக்காட்டாக கோபால் எனும் மொழி பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். கோபால் மொழியில் எழுதப்பட்ட மென்பொருளைக் கொண்டு உருவாக்கப்பட்ட தரவுகளை கோபால் மொழி கொண்டு மட்டுமே வாசிக்க முடியும். மற்ற மொழிகளைக் கொண்டு அதை வாசிக்க முடியாது. அதே போல் டாஸ் இயங்குதளத்தில் ஒரு மென்பொருள் இருக்குமானால் அதில் இருக்கும் தரவை ஒரு யுனிக்ஸ் இயங்குதளத்தில் இருக்கும் மற்றொரு மென்பொருள் கொண்டு காண முடியாது. ஒரு கருவியிலிருந்து மற்றொரு கருவிக்கு தகவல்களை மாற்றம் செய்வதும் வலைப்பின்னல் இல்லாத காலங்களில் சாத்தியமில்லாமல் இருந்தது.

எனவே முதலில் தனிக் கோப்புகளில் மட்டுமே தரவுகள் சேமிக்கப்பட்டு வந்தன. அவற்றைத் தட்டை கோப்பு முறை (Flat File System) என்றே அழைத்து வந்தனர். அதன்பின்னர் தகவல்களுக்கிடையே இருக்கும் உறவுமுறைகளைக் குறித்து வைக்க ஏதுவாக அடுக்கு முறை தரவு மேலாண்மை (Hierarchial Database Management) சிலகாலம் இருந்தது. அதன்பின்னர் இன்னும் சிலகாலம் வலைமுறை தரவு மேலாண்மையும் பயன்பாட்டில் இருந்தது. இந்தச் சூழ்நிலையில் தான் 1970களில் தரவின் அடிமைச் சங்கிலியைத் தகர்த்தெறிந்து அதன் சுதந்திரத்திற்கு வழிவகுத்த எட்கர் காட் (Edgar F. Codd) உறவுநிலைத் தரவுத் தளமேலாண்மை முறையைக் கண்டறிந்து அறிமுகப்படுத்தினார்.

அவரது வழிகாட்டுதல்களான மிகவும் பெயர்பெற்ற காட் 12 (Codd's 12 rules) விதிகளுக்குட்பட்டு ரேய்மண்ட் பாய்ஸ் (Raymond F. Boyce) உருவாக்கிய SQL எனும் தரவுத்தள வினவல் மொழி தினந்தோறும் மாறிக் கொண்டிருக்கும் கணினி உலகில் ஐம்பதாண்டுகளுக்குப் பின்னர் இன்றளவும் நடைமுறையில் இருக்கின்றது என்றால் அதன் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

வியாபாரக் கணக்குகளைக் குறித்து வைப்பதற்கும் முறைசார் தரவுகளைக் குறித்து வைப்பதற்கும் இந்த உறவுநிலைத் தரவுத்தள மேலாண்மை முறை மிகவும் கனகச்சிதமாகப் பொருந்துவதால் என்ன தான் பொருள் நோக்கு தரவுத்தள மேலாண்மை (Object Oriented Database) மற்றும் மட்டற்ற மட்டுமல்லா SQL (NoSQL) என்று பலவித தொழில்நுட்பங்கள் வந்தாலும் இன்னும் இந்த உறவுநிலைத்தரவுத் தள மேலாண்மையின் இடத்தைப் பிடிக்க யாரும் வரவில்லை என்றே சொல்லலாம்!

இன்றைய பெருந்தரவு காலத்திலும் மேகக்கணிமைத் தொழில்நுட்பத்திலும் கூட இந்தத் தரவு மேலாண்மையின் தாக்கத்தை நம்மால் காணமுடியும். தரவுத் தொழில்நுட்பத்தின் வரலாற்றைச் சுருக்கமாகக் கண்டோம். இனி தரவுத்தள மேலாண்மையின் அடிப்படையை அடுத்த பகுதியில்  சற்று விளக்கமாகக் காண்போம்.


Author: ரத்தினகிரி

ரத்தினகிரி சுப்பையா

-பட்டயக் கணக்காளர் - ஆசிரியர் - தரவு பகுப்பாய்வு ஆர்வலர்