இன்றைய தகவல் தொழில்நுட்பச் சந்தையில் வியாபார நுண்ணறிவு தொடர்பான மென்பொருளின் பங்கு மிக அதிகமாகவே உள்ளதைக் காண்கின்றோம். சென்ற பகுதியில் நாம் கண்ட தகவல் வரைகலை மற்றும் தரவு காட்சிப்படுத்தலின் தொடர்ச்சியாக, அதற்கு உதவிகரமாக இருக்கும் சில மென்பொருட்களின், சேவைகளின் பட்டியலைத் தற்போது காண்போம். இவற்றில் பல மென்பொருட்கள்/வசதிகள் இலவசமாகக் கிடைக்கின்றன என்பது வியாபாரத் துறைக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கொள்ளலாம்.
இந்த மென்பொருட்களின் பட்டியல் என்பது ஒரு முடிவான ஒன்று அல்ல. அது ஒரு மிகப் பெரிய பட்டியலாகும். இந்த மென்பொருட்களைப் பட்டியலிடும் போது சில விஷயங்களைக் கருத்தில் கொள்ளலாம்.
தரவு காட்சியமைப்பு மென்பொருட்கள் அனைத்துமே அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் எளிமையாக உருவாக்கப்பட்டுள்ளன. அனைவருமே செயற்கை நுண்ணறிவையும், இயந்திரவழிக் கற்றலையும் எவ்வாறு இதில் புகுத்தலாம் என்பதில் மிகுந்த முனைப்புடன் இருக்கின்றார்கள் என்பதும் தெரிகின்றது.
இந்தத் துறையில் இருப்பவர்கள் இவற்றைக் குறைந்த நேரம் செலவிட்டுக் கற்றுக் கொள்ளவியலும். மேலும் ஒன்றைப் போலவே மற்ற மென்பொருட்கள் இருப்பதாலும் ஒன்றுக் கொன்று அதிக வித்தியாசமில்லாத வசதிகளைக் கொண்டிருப்பதாலும் ஒரு மென்பொருளைக் கற்றுக் கொண்டாலே மற்றவற்றைக் கற்றுக் கொள்ளத் தேவையில்லை என்பதையும் உணரலாம். மேலும் ஒன்றை ஒன்று மாறுபடுத்தும் வசதிகளே அவற்றை நோக்கி அவற்றின் வாடிக்கையாளர்கள் செல்வதற்கான காரணமாக அமைகின்றது. எது எப்படியிருப்பினும் எப்பேர்ப்பட்ட பெருந்தரவையும் உள்வாங்கி அதைப் பகுப்பாய்வு செய்வதை இம்மென்பொருட்கள் அனைத்துமே அடிப்படை வசதியாகக் கொண்டுள்ளன.
பகுதி இலவசமாகவும், முக்கிய வசதிகளைச் செயல்படுத்த வேண்டியிருக்கும் போது அதிக விலையும் கொண்ட மென்பொருட்களையும் காண்கின்றோம். அப்படியான மென்பொருட்களில் பெரும்பாலும் ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை எனும் பழமொழிக்கேற்ப இலவச வசதிகளை மட்டுமே பயன்படுத்தி திருப்தியடையும் பலரையும் காணமுடிகின்றது.
இப்போது சில மென்பொருட்களின் பட்டியலைக் காணலாம்:
- Tableau
- Power BI
- Zoho Reports
- Google Charts
- Visual.ly
- IBM Watsom
- Plotly
- Fusioncharts
- Qlikview
- Infogram
- ChartBlocks
- Chart.js
- KNIME
- Grafana
- Data Wrapper
- JupyteR
மேற்கண்ட பட்டியலைக் காண்பவர்கள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின்விரிதாள் மென்பொருளான எக்செல் இந்தப் பட்டியலில் இடம் பெறாதா என்று கேட்பது வழக்கம். அடுத்த பகுதியில் இதற்கான விடையையும், எவ்வாறு எக்செல் அல்லது எந்த ஒரு மின்விரிதாள் மென்பொருளைப் பயன்படுத்தியும் தகவல் வரைகலையையும் தரவு காட்சிப்படுத்தலையும் செய்யலாம் என்பதைக் காணலாம்.
மேலே குறிப்பிட்ட மென்பொருட்களில் சிலவற்றைப் பயன்படுத்திப் பார்க்கவும்.