தரவுச் சுரங்கம் - 14

தரவை எவ்வாறு காட்சிப்படுத்தலின் மூலம் பகுப்பாய்வு செய்ய இயலும் என்பதையும் அது தரவு அறிவியலின் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதையும் சென்ற பகுதியில் பார்த்தோம். இப்போது தரவைக் காட்சிப்படுத்தும் கலை பற்றிக் காண்போம். சமீபகாலங்களில் இதற்கு ஒரு கலைச்சொல் உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. ஆங்கிலத்தில் infographics என்றழைக்கப்படும் “தகவல் வரைகலை” வருங்காலத்தில் தனிப்பட்ட ஒரு துறையாக மாறும் அளவுக்கு அதில் வல்லுநர்களும் புதிய உத்திகளும் உருவாகி வருகின்றது. தரவு காட்சிப்படுத்தல்  என்பது ஒரு வரைபடத்தில் எவ்வாறு தரவு காட்டப்படுகின்றது என்பதாம். ஆனால் அதுவே தகவல் வரைகலை என்பது வரைபடத்தை எவ்வாறு காண்பது என்ற தொழில்நுட்பம் அறியாத பாமர மக்களும் அறிந்துய்ந்துணரும் வண்ணம்  தகவலாக உருமாற்றம் அடைந்த தரவை எவ்வாறு குறைந்த சொற்களைக் கொண்டு வரைகலையில் கொண்டு வருவது எனும் கலையாம். இரண்டும் வெவ்வேறு என்றாலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது.

தரவு காட்சிப்படுத்தல்:

தரவு காட்சிப்படுத்தல் என்பது தரவுகளை விரைவாக பார்ப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு பயன்பாடு. இது ஒரு காகிதத்தில் அல்லது ஒரு பக்கத்தில் பார்க்க முடியாத பெருந்தரவையும் பார்க்க, விளக்க, வாசிக்க, மற்றும் செயல்படுத்த முடிவுகளை ஏற்படுத்துவதற்கு உபயோகிக்கப்படும். பலவகை தரவு காட்சிப்படுத்தல் மென்பொருள் இப்போது கிடைக்கின்றது. தகவல் காட்சிப்படுத்தல் துறை மனிதர்-கணினி ஊடாட்டம், கணினியியல், வரைகலை, காட்சி வடிவமைப்பு, உளவியல், வணிக மாதிர்கள் ஆகிய துறைகளின் ஆய்வுகளில் இருந்து உருவாகி உள்ளது. இத்துறை அறிவியல் ஆய்வு, எண்ணிம நூலகங்கள், தரவு அகழ்வு, நிதித் தரவு பகுப்பாய்வு, சந்தையியல், உற்பத்திச் செயலாக்கக் கட்டுப்பாடு, மருந்துக் கண்டுபிடிப்பு போன்ற துறைகளில் முதன்மையாகப் பயன்படுகிறது.

தரவு காட்சிப்படுத்தலின் முக்கிய நோக்கம் பயனாளர்களுக்கு தகவல்களை படக் காட்சி முறையில் காண்பிப்பது. தரவை காட்சிப்படுத்துதல், புள்ளியியல் வரைகலை முறையைப் பயன்படுத்துகிறது. இம்முறையில் எண்வகை தரவு, புள்ளி, கோடு அல்லது பட்டையைக் கொண்டு, குறியாக்கப்பட்டு, அளவைக்குரிய செய்திகளை காட்சிப்படுத்துவதன் மூலம் அறிவிக்கலாம். (நன்றி: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம்)

தரவு காட்சிப்படுத்தலின் வகைகள்

• வரைப்படங்கள் (Charts)

• அட்டவணைகள் (Tables)

• வரைகலை (Graphs)

• நிலப்படங்கள் (Maps)

• தகவல் வரைகலை (Infographics)

• முகப்பலகம் – கட்டுப்பாட்டகம் (Dashboards)

தரவு காட்சிப்படுத்தலின் பயன்கள்:

• தரவு காட்சிப்படுத்தல் பயனர்கள் தரவுகளை எளிதாக கூர்ந்து ஆய்வு செய்யவும், உட்பொருளை வெளிப்படுத்த உதவுகிறது.

• இது சிக்கலான தரவுகளை புரிந்துக் கொண்டு அவற்றை பயன்படுத்திக் கொள்ள வழி செய்கிறது.

• தரவு காட்சிப்படுத்தல் பல்வேறு வரைப்படங்களைக் கொண்டு தரவு மாறிகளுக்கு இடையே உள்ள உறவு நிலையை வெளிப்படுத்துகிறது.

வரைபட வகைகள்

வரைபடங்களில் பல்வேறு வகைகள் உள்ளன. குறிப்பிட்ட வகைத் தரவுக்கு குறிப்பிட்ட வகை வரைபடமே ஏற்றதாக இருக்கும். ஏராளமான வரைபட வகைகள் இருக்கின்றன. அவற்றுள் மிகப் பரவலாகப் பயன்படுத்தக் கூடிய முக்கியமான சிலவற்றைப் பார்ப்போம்:

பட்டை வரைபடம் (Bar Chart):

காலம், இடம் அல்லது வகைப்பாட்டு வாரியான மதிப்புகளை ஒப்பிட ஏற்றது. மாத வாரியான விற்பனை, மாவட்ட வாரியான மழை, மாத வாரியாக வரவு செலவுக்கான ஒப்பீடு போன்ற புள்ளி விவரங்களுக்குப் பயன்படுத்தலாம். அளவீட்டுப் பட்டைகள் செங்குத்தாகவோ கிடைமட்டமாகவோ அமையலாம். பட்டைகள் செங்குத்தாக அமையும் வரைபடத்தை ‘நெடுக்கை வரைபடம்’ (Column Chart) என்று கூறுவதுமுண்டு.

அடுக்குப் பட்டை வரைபடம் (Stacked Bar Chart):

காலம், இடம் அல்லது வகைப்பாட்டு வாரியாக ஒன்றுக்கு மேற்பட்ட கூறுகளின் கூட்டு மதிப்பை ஒப்பிட ஏற்றது. மாத வாரியாக இரண்டு மூன்று பொருள்களின் மொத்த விற்பனை போன்ற ஒப்பீடுகளுக்குப் பயன்படுத்தலாம்.

வட்ட வரைபடம் (Pie Chart):

முழுமை மதிப்பில் ஒவ்வொரு கூறுகளும் எவ்வளவு பங்கு என்பதைத் தெளிவுபடுத்த ஏற்றது. வரவு-செலவுத் திட்டத்தில் மொத்த வருமானத்தில் பல்வேறு பணிகளுக்கான செலவு மதிப்பீடு, மக்கள் தொகையில் வெவ்வேறு மதங்களைச் சார்ந்தோரின் விழுக்காடு, நாடாளுமன்றத் தில் பல்வேறு கட்சிகள் வகிக்கும் இடங்கள் - இதுபோன்ற விவரங்களை வெளியிட மிகவும் உகந்தது.

கோட்டு வரைபடம் (Line Chart):

ஏற்றம் இறக்கம் கொண்ட ஒரு நிகழ்வின் தொடர்ச்சியான போக்கினைச் சுட்டிக்காட்ட ஏற்றது. மாதந்தோறும் விலைவாசிப் புள்ளி உயர்வு, பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறியீட்டின் ஏற்ற இறக்கம், கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒவ்வோர் ஓவரிலும் எடுத்த ரன்கள் - இத்தகைய விவரங்களுக்கு உகந்தது.

வரைபடம் உருவாக்கும்போது, தரவுக்கு ஏற்ற வரைபட வகையை நாம்தான் முடிவுசெய்ய வேண்டும். வகையை முடிவு செய்துவிட்டால் வரைபடத்தை எளிதில் உருவாக்கி விடலாம். (நன்றி: தமிழ் மெய்நிகர் பல்கலைக்கழகம்)

அப்படியே தகவல் வரைகலை பற்றியும் காணலாம். தகவல் வரைகலை நாம் ஏற்கனவே கண்டது போல் தகவலையும் சொற்களையும் படங்களையும் கொண்டு நேர்த்தியான புதுமையான வரைகலையையும் சேர்த்து அதை யாவரும் உணரும் வண்ணம் உருவாக்கும் கலையாகும். எடுத்துக்காட்டாக, கொரொனா பெருந்தொற்றின் போது நமது அரசாங்கம் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் கைகளை எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என்று படத்தொகுப்பின் மூலம் தெரிவித்தது அல்லவா? அதைக் குறிப்பிடலாம்.

தகவல் வரைகலை குறைந்தபட்சம் எட்டு வகைப்படும்.

பட்டியல் தகவல் வரைகலை List infographics.

புள்ளியியல் தகவல் வரைகலை Statistical infographics.

வழிமுறை தகவல்வரைகலை How-to infographics.

காலவரிசை தகவல் வரைகலை Timeline infographics.

ஒப்பீடு தகவல் வரைகலை Comparison infographics.

வரைபடம் மற்றும் இடம் சார்ந்த தகவல் வரைகலை Map and location infographics.

பாய்வுப்பட தகவல் வரைகலை Flowchart infographics.

செயல் வழிமுறை தகவல் வரைகலை Process description infographics.

தரவு காட்சிப்படுத்தலும் தகவல் வரைகலையும் இவ்வளவு தான் என்று வரையறைப்படுத்த முடியாத அளவுக்கு நூதனமான பல அமைப்புகளைக் கொண்டு திகழ்கின்றது. தினமும் புதுமைகளைக் கொண்டு வந்து சேர்க்கின்றது. இதனால் வியாபார உலகிற்குக் கிடைக்கும் நன்மைகள் சொல்லிலடங்கா! அடுத்த பகுதியில் தரவுக்காட்சிப்படுத்தலுக்கும், தகவல் வரைகலைக்கும், முகப்பலகத்திற்கும் பயன்படுத்தப்படும் பல மென்பொருட்கள் பற்றி விரிவாகக் காணலாம்.


Author: ரத்தினகிரி

ரத்தினகிரி சுப்பையா

-பட்டயக் கணக்காளர் - ஆசிரியர் - தரவு பகுப்பாய்வு ஆர்வலர்