தேவைக்குத் தகுந்தவாறு ஒன்றுக்கொன்று தொடர்புடைய உண்மைச் செய்திகளின் தரப்படுத்தப்பட்ட தொகுப்பே தரவு என்று முதல் பகுதியிலேயே கண்டோம். ஒன்றுக்கொன்று என்று போகின்ற போக்கில் கூறிவிட்டாலும், எந்த ஒன்றுடன் மற்றொன்று தொடர்புடையது? அது எது குறித்தது? எனும் கேள்வி எழாமலில்லை!
தரவுத் தொழில்நுட்பத்தில் இன்றளவும் கோலோச்சிக் கொண்டிருக்கும் உறவுநிலைத் தரவுத் தள மேலாண்மை (RDBMS) மட்டுமின்றி அதற்கு முந்தைய காலந் தொட்டே செய்திகளை எதன் அடிப்படையில் ஒன்றிணைத்து அல்லது கட்டமைக்க வேண்டும் என்று அறிந்திருந்தனர் கணினி வல்லுநர்கள். அந்த அடிப்படையான அமைப்பின் பெயர் தான் உருபொருளும் உறவுநிலையும்.
உருபொருள்: (Entity) தனித்துவமானதாவும் மற்றவைகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுமளவுக்கு பண்புகள்/தன்மைகள் கொண்டதாகவும் தனது இருப்பை உணர்த்துவதாகவும் இருக்கும் பொருளையே உருபொருள் என்று அழைக்கின்றோம். எடுத்துக்காட்டாக ஒரு பேனாவிலிருந்து இந்தப் பேரண்டம் வரை எதையெல்லாம் தனித்துவமாகக் கண்டு உணர முடிகின்றதோ அதையெல்லாம் உருபொருள் என்று அழைக்கின்றோம். பேனாவுடன் சேர்ந்திருக்கும் போது பேனா என்று அறியப்பட்டாலும், அதிலிருந்து கழற்றி விட்டால் பேனாவின் மூடி கூட ஒரு தனிப்பட்ட உருபொருள் என்று ஆகிவிடக் கூடும். தரவுகளைப் பொருத்தவரை உயிருள்ள, உயிரற்ற என்ற பாகுபாடுகள் கிடையாது. எனவே உயிருள்ள நீங்களும், நானும் கூட தரவு மேலாண்மையில் உருபொருள் என்றே அழைக்கப்படுவோம்!
பண்புகள்: (Attributes) மேற்கண்ட உருபொருட்களுக்கே உரித்தான பண்புண்மைகளை உருபொருளின் பண்புகள் என்று அழைக்கின்றோம். இப்பண்புகள் தான் நாம் உருபொருளுடன் கோந்து போல் இணைத்து சேர்த்துக் கட்டி வைக்கும் உருபொருளைப் பற்றிய செய்திகள் என்று உணர்ந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். ஆங்கிலத்தில் சொல்வதானால், (Everything uniquely identifiable is called entity. Every entity has its own attributes. These attributes are nothing but the facts about the entity itself.)
ஆக, ஒவ்வொரு உருபொருளும் அதனதன் பண்புகளைச் சுற்றிலும் வைத்துக் கொண்டு தாமே நடுநாயகமாக விளங்குகின்றது.
இவ்வாறு உருபொருட்களையும் அவற்றின் பண்புகளையும் கொண்டு தரவு மென்பொருள் நிர்வாகிகள் மற்றும் படைப்பாளிகள் யாவருக்கும் புரியும் வண்ணம் ஒரு வரைபடத்தைத் தயாரிக்கின்றார்கள். அதற்கு உருபொருள் உறவுநிலை வரைபடம் (உ.உ.வரைபடம்) (Entity Relationship Diagram – Shortly ER Diagram) என்று பெயர்.
சில அடிப்படை வடிவங்களை மட்டுமே பயன்படுத்தி இந்த உ.உ. வரைபடங்கள் தயாரிக்கப்படுகின்றன.
செவ்வகம் – உருபொருள்
நீள்வட்டம் – பண்புகள்
வைரம் – உறவு
கீழ்க்காணும் உருபொருள் வரைபடத்தைப் பார்த்தவுடன் இது ஒரு மாணவரின் தரவுப் பட்டியலில் இருக்கும் அவரது தனித்தன்மையான பண்புகள் என்று புரிகின்றது அல்லவா?
எந்த ஒரு நிறுவனத்தின் தரவுகளையும் நாம் பகுப்பாய்வு செய்ய முற்படும் போது அந்த நிறுவனத்தின் ஒட்டு மொத்த உருபொருள் உறவுநிலை வரைபடத்தைக் கண்டுணர்தல் அவசியமாகும். அவ்வாறு ஒரு வரைபடம் இதுவரை இல்லையாயின் நாமே உருவாக்குதல் நலம் பயக்கும்.
நாம் அடுத்துக் காண்பது ஒரு மருத்துவமனையின் மாதிரி உ.உ. வரைபடம் ஆகும். (நன்றி: https://practice.geeksforgeeks.org/problems/er-diagram-of-hospital-management-system) இதன் மூலம் எவ்வாறு மருத்துவர், நோயாளி, செவிலியர், அறைகள், மருந்து, மருத்துவம் பார்த்த சீட்டுகள், பட்டிகள், வேலையாட்கள், ஆவணங்கள் என்று மருத்துவமனை தொடர்பான அனைத்து உருபொருட்களும், அவற்றின் பண்புகளும், எவ்வாறு ஒரு உருபொருள் மற்றொரு உருபொருளுடன் உறவு கொள்கின்றது என்றும் அதன் மூலம் எவ்வாறு அனைத்து உருபொருட்களும் ஒட்டு மொத்த நிறுவனத்தில் இணைந்து செயலாற்றுகின்றன என்றும் உணர்ந்து கொள்ள முடியும்.