தரவுச் சுரங்கம் - 6

உறவுமுறை தகவல் தரவுத்தள மேலாண்மையில் மட்டுமின்றிப் பொதுவாகவே தரவு மேலாண்மையில் தரவுகளின் இடையே இருக்கும் உறவைப் பற்றியே முந்தைய பகுதியிலிருந்து தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு உருபொருளும் அதனதன் பண்புகளைத் தன்னகத்தே கொண்டு மற்றொரு உருபொருளுடன் இருக்கும் தொடர்பை எவ்வாறு ஏற்படுத்திக் கொள்கின்றது என்பதில் மொத்தம் நான்கு வகையான உறவுமுறைகள் இருக்கின்றன. அவற்றுள் இரண்டு அடிப்படையான உறவுமுறைகள் ஆகும். மற்ற இரண்டு உறவுமுறைகள் மேற்கண்ட அடிப்படை உறவுமுறைகளைக் கொண்டே அமைகின்றன.

உருபொருட்களுக்கிடையேயான உறவு அவற்றின் எண்ணிக்கையைப் பொருத்தே அமைகின்றது. ஒரு உருபொருளுடன் பல உருபொருட்கள் ஒரே நேரத்தில் இணைந்திருக்க வேண்டியிருந்தால் அதனை ஒன்றுடன் – பல உறவுமுறை (One to Many Relationship) என்று அழைக்கின்றோம். எடுத்துக்காட்டாக, ஒரே நுழைவுச்சீட்டில் பலர் உள்ளே நுழைவதையும், ஒரு குறிப்பிட்ட எண் கொண்ட ரயிலில் (எடுத்துகாட்டாக 12661 – பொதிகை விரைவு வண்டி) பல பெட்டிகள் இருப்பதையும் குறிப்பிடலாம்.

ஒரு உருபொருளுடன் ஒரே ஒரு உருபொருள் மட்டுமே இணைந்திருக்க முடியுமாயின் அதை ஒன்றுடன் – ஒன்று உறவுமுறை (One to One) என்று அழைக்கின்றோம். எடுத்துக்காட்டாக, ஒரு நாற்காலி உருபொருளில் ஒரு மனிதர் மட்டுமே அமரலாம் என்பதையும், ஒரு பேருந்தை ஒரு ஓட்டுநர் மட்டுமே ஓட்டலாம் என்பதையும் குறிப்பிடலாம்.

ஆக, ஒரு பேருந்தில் ஒரு நடத்துநரும், ஒரு ஓட்டுநரும் இருப்பது ஒன்றுடன் ஒன்று எனவும், அதில் பல பயணிகள் ஒரே நேரத்தில் பயணிப்பது ஒன்றுடன் பல எனவும் கணினித் தரவில் குறிப்பிடப்படும். அதே போல் பல பேருந்துகள் ஒரு வழித்தடத்தில் செல்லுமானால் ஒன்றுடன் பல என்று குறிப்பிடப்படும். ஆக ஒட்டுமொத்த தரவுகளையும் இது போன்று உருபொருட்களாகவும், அவற்றின் பண்புகளாகவும் பிரித்துப் பின்னர் உருபொருட்களுக்கிடையேயான உறவுமுறைகளைக் கொண்டு சேர்த்து ஒரு ஒட்டுமொத்தமான தரவுத்தளமாகக் காண்பது தான் தரவுத்தளமேலாண்மையின் அடிப்படையாகும்.

மேற்கண்ட இரு உறவுமுறைகள் தவிர பலவற்றுடன் – ஒன்று (Many to one) , பலவற்றுடன் – பல (Many to Many) ஆகிய இரண்டு உறவுமுறைகளும் உண்டு என்றாலும், அவை மேற்கண்ட அடிப்படை உறவுமுறைகளின் சேர்க்கை அல்லது மாறுபட்ட பார்வையே ஆகும். எடுத்துக்காட்டாக, பல மாணவர்கள், பல வகுப்புகளில் சேர்ந்திருக்கின்றார்கள் என்று கூறினாலும், ஒவ்வொரு மாணவரும் பல வகுப்புகளில் சேர்ந்திருக்கின்றார்கள் என்றும், ஒரு வகுப்பில் பல மாணவர்கள் இருக்கின்றார்கள் என்றும் கொள்ளப்பட்டு, இரண்டு ஒன்றுடன் – பல உறவுமுறைகளாகப் பிரிக்கலாம்.

மேற்கண்ட படத்தில் காட்டியிருப்பதைப் போல் இரண்டு ஒன்றுடன் - பல உறவுமுறைகள் இணையும் போது பலவற்றுடன் – பல எனும் உறவுமுறையாக உண்டாகின்றது.

இதே போல் ஒன்றுடன் – பல உறவுமுறையை இடமிருந்து வலமாகக் காணாமல்  வலமிருந்து இடமாகப் பார்த்தால் அது பலவற்றுடன் – ஒன்று ஆகிய உறவுமுறை ஆகின்றது. எடுத்துக்காட்டாக நம்முடைய கடையில் இன்று வாங்கிய வாடிக்கையாளரின் பட்டியலைத் தயார் செய்ய முனைந்தால், ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரும், அவர் பல முறை நம் கடைக்கு இன்று வந்தாலும், ஒருமுறை மட்டுமே பட்டியலில் இடம் பெறும் அல்லவா? இது பலவற்றுடன் – ஒன்று எனும் உறவுமுறையாகும். உறவுமுறை ஒன்று தான் என்றாலும் கேட்கும் கேள்வியின் காரணமாக உறவுமுறையானது மாறுபட்ட கோணத்திலிருந்து காணப்படுகின்றது.

இவ்வாறு உருபொருட்களிடையே காணப்படும் நான்கு வகையான உறவுமுறைகளையும் வகைப்படுத்திய நாம் அடுத்ததாக அவற்றின் குணங்களின் அடிப்படையில் எவ்வாறு பிரிக்கப்படுகின்றது என்பதைக் காணலாம்.


Author: ரத்தினகிரி

ரத்தினகிரி சுப்பையா

-பட்டயக் கணக்காளர் - ஆசிரியர் - தரவு பகுப்பாய்வு ஆர்வலர்