தரவுச் சுரங்கம் - 11

சென்ற பகுதியில் ஒரு முக்கியமான சொற்றொடரைக் கண்டோம். அதுபற்றிய விளக்கமாகவே இந்தப் பகுதி அமைந்துள்ளது. தரவு பகுப்பாய்வில் மிகவும் பிரபலமானதும் அனைவரும் சரளமாகப் பயன்படுத்தப்படுவதும் இச்சொற்றொடரின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றும்.

ஆங்கிலத்தில் Online Analytical Processing என்று முழுமையாகவும் OLAP என்று சுருக்கமாகவும் அழைக்கப்படுகின்றது இச்சொற்றொடர். நிகழ்வுகளின் தரவை நடவடிக்கையின் அடிப்படையில் பார்க்காமல் அல்லது பார்த்து முடித்தவுடன் அதை மூட்டை கட்டி வைத்து விடாமல், அதைத் தரவுக் கிட்டங்கியில் தகுந்த முறையில் அடுக்கி வைத்துப் பின் அதைத் தொடர் பகுப்பாய்வுக்கு உட்படுத்துவதே இவ்வாறு அழைக்கப்படுகின்றது.

செய்தி எப்போது தரவாகின்றதோ அப்போதே அது மதிப்பு மிக்கதாகி விடுகின்றது என்று முன்பே கண்டோம். எப்போதைய தரவாக இருந்தாலும் அது எப்போதும் மதிப்பு மிக்கது தான். தினந்தோறும் நடவடிக்கைகள் நடைபெற்று முடிந்ததும் அதை உதாசீனப்படுத்தாமல் தொடர்ந்து பகுப்பாய்வு செய்வதன் மூலம் வியாபாரத்தில் பல அறிவார்ந்த முடிவுகள் எடுக்க முடியும் என்பது எந்த வித சந்தேகத்துக்கும் இடமின்றி நிரூபணமாகி இருக்கின்றது.

மாதந்தோறும் அல்லது குறிப்பிட்ட கால அடிப்படையில் வியாபார அறிக்கைகளைக் கண்காணித்து அதன்படி முடிவுகள் எடுக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வரும் காலம் மலையேறி வருகின்றது. குறிப்பிட்ட காலம் முடியும் வரை நாம் காத்திருக்க முடியாத அவசர அவசிய காலகட்டத்தில் இப்போது இருக்கின்றோம்.

ஒரு காரில் ஓட்டுநருக்கு வண்டி ஓட்டும் போதே முடிவெடுக்கத் தகுந்தவாறு  காரின் வேகம், உள் வெப்பநிலை, மின்கல மின்னளவு, எரிபொருள் அளவு என்று அனைத்தும் உடனுக்குடன் காட்டுகின்ற கட்டுப்பாட்டுப் பலகம் (Dashboard) இருக்கின்றது. அதே போல் தரவுலகிலும் நிகழ்நிலையில் பகுப்பாய்வு செய்து உடனுக்குடன் முடிவெடுக்கத் தகுந்தவாறு இயங்குவதால் இந்த நிகழ்தரவு பகுப்பாய்வு முறையின் முக்கிய கருவியும் அதே பெயருடனே கணினி உலகிலும் அவ்வாறே அழைக்கப்படுகின்றது .

உண்மையில் இந்த நிகழ்தரவு பகுப்பாய்வு முறையில் அப்படி என்ன தான் நடக்கின்றது என்று கேள்வி கேட்போம். இங்கு காலங்காலமாக சேர்ந்து கொண்டே இருக்கும் பெருந்தரவு அல்லது தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்தரவு இவற்றைப் பல்பரிமாண நோக்கில் ஆய்வு செய்தல் நடக்கின்றது என்பதே விடையாகக் கிடைக்கின்றது.

நாம் முதல் பகுதியில் கண்ட தரவைப் பல பரிமாணங்களில் காண முயற்சி செய்யும் கன தரவு (Data Cube) முறையும் இந்த ஆய்வில் தான் பிறக்கின்றது. ஆக, இந்த நிகழ்தரவு பகுப்பாய்வு முறை என்பது பாற்கடலைக் கடைந்து எடுப்பதைப் போல பல புதுமைகளையும் அமுதங்களையும் நமக்கு வாரி வாரி வழங்கிக் கொண்டே இருக்கின்றது.

இதன் முக்கியப் பயன்பாடுகளாக, நிகழ்நிலை அறிக்கை உருவாக்கம், எதிர்காலக் கணிப்பு, திட்டமிடல், தர ஒப்பீடு, ஒருங்கிணைத்தல் என அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

            நமது இந்தத் தொடர்கட்டுரையின் நோக்கமே இந்த நிகழ்தரவு பகுப்பாய்வு முறை பற்றி விளக்குவதாகும். இதில் பயன்படும் கருவிகள், செயலாக்கும் திட்டம், தரவு மாதிரி கொண்டு எவ்வாறு கனதரவு உருவாக்கப்படுகின்றது, பலபரிமாணங்களைக் கண்ணுறுவது எவ்வாறு? தகவல் வரைகலையைக் கொண்டும், பல்வேறு தரவுக் காட்சிகளையும் கொண்டு எவ்வாறு கட்டுப்பாட்டுப் பலகம் உருவாக்கப்படுகின்றது என்றும் அறிந்து கொண்டு அதன் மூலம் அனைத்துத் தொழில்முனைவோரும் பயனடைய வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டே நாம் இத்தொடர் கட்டுரையில் பயணிக்கின்றோம்.

            இனி அடுத்த பகுதியில் இந்த நிகழ்தரவு பகுப்பாய்வு முறையை உருவாக்கிப் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்வதற்கான படிநிலைகளை விரிவாகக் காண்போம்.


Author: ரத்தினகிரி

ரத்தினகிரி சுப்பையா

-பட்டயக் கணக்காளர் - ஆசிரியர் - தரவு பகுப்பாய்வு ஆர்வலர்